ஸ்ரீரங்கத்து வீடு – மண் அடுப்பு

இத்தனை அமர்க்களம் செய்து அந்த விளக்கெண்ணெய் மஹோத்சவம் தேவையா என்று இப்போது தோன்றுகிறது. வருடத்திற்கு ஒரு தடவை வயிற்றை சுத்தம் செய்வது நல்லதுதான். எங்கள் தலைமுறைக்குப் பிறகு இந்த வைபவம் நடந்ததா என்றும் எனக்குத் தெரியவில்லை.

 

இந்த விளக்கெண்ணெய் குடித்தலில் அதிகம் பாதிக்கபடுபவள் நான்தான். இரண்டுமுறை பின்னால் போய்விட்டு வந்தால் அசந்து போய் படுத்துக்கொண்டு விடுவேன். பாட்டியே என்னைப் பார்த்துப் பரிதாபப்படும் அளவிற்கு ஆகிவிடும் நிலைமை. ‘அடுத்த வருடத்திலிருந்து இதுக்குக் குடுக்க வேணாம். பாவம் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது’ என்று சொல்வாள் பாட்டி. ஆனால் ஒவ்வொரு வருடமும் மறக்காமல் – தான் சொன்னதை மறந்து கொடுத்து விடுவாள். அத்தனை அமர்க்களம் செய்த என் சகோதரன் ஜாலியாக விளையாடிக் கொண்டிருப்பான். ‘இவன் இப்படி அக்குல ஏறி, தொக்குல பாய்ஞ்சா, அந்த விளக்கெண்ணெய் எங்க வேலை செய்யும்? அது எப்பவோ ஜீரணம் ஆகியிருக்கும்’ என்பாள் பாட்டி. ‘அடுத்த வருடம் நாலு ஸ்பூனா கொடுக்கணும்!’ ‘அடுத்த வருடம் உன் கைல அகப்பட்டாதானே?’ என்று அவன் பாட்டிக்கு சவால் விடுவான்!

 

நாம் ஸ்ரீரங்கத்து வீட்டின் கூடத்தில் ஊஞ்சல் அருகிலேயே நிற்கிறோம், இல்லையா? அதற்குள் வி.எண்ணைய் விழா வந்து கட்டுரை திசை மாறிப் போய்விட்டது. சரி வாருங்கள் ஸ்ரீரங்கத்து அகத்தின் உள்ளே போகலாம். தலை பத்திரம்! மிகவும் தாழ்ந்த நிலைப்படிகள். சிறிது அசந்தால் தலையைப் பதம் பார்த்துவிடும். யாராக இருந்தாலும், சிரம் தாழ்த்தித் தான் உள்ளே வரவேண்டும். கூடத்திலிருந்து இரண்டாகப் பிரியும் வீடு. ஒரு வழி அரங்கு என்ற அறைக்குள் போய் தளிகை உள்ளில் முடியும். இன்னொரு வழி பின்பக்கத்து  ரேழி வழியாக புழக்கடையில் முடியும். தளிகை உள்ளிற்கு இப்படியும் போகலாம். புழக்கடை வழியாகவும் மாடிக்குச் செல்லலாம். அங்கும் ஒரு மரப்படி இருக்கும்.

 

இந்த உள்ளிற்கு அரங்கு என்று ஏன் பெயர் வந்தது என்று தெரியாது. பெருமாள் எழுந்தருளியிருப்பதால், அரங்கன் கோயில் கொண்டுள்ள இடம் என்று அரங்கு என்ற பெயர் வந்ததோ, என்னவோ. இந்த ‘அரங்கு’ என்னும் அறைக்கும் எங்களுக்கும் தொப்புள்கொடி உறவு. ஆமாம், நாங்கள் எல்லோரும் இந்த அறையில்தான் பிறந்தோம். அதனாலோ என்னவோ இன்றைக்கும் இந்த அறைக்குள் நுழையும்போதே மனதில் இனம் தெரியாத ஒரு உணர்வு ஏற்படும். இந்த உள்ளில் தான் எங்கள் தாத்தா காலத்துப் பெருமாளும் நாச்சிமார்களுடன் எழுந்தருளி இருக்கிறார். தினமும் பாட்டி தளிகை செய்து பெருமாளுக்கு கண்டருளப் பண்ணிவிட்டுத் தான் எங்களுக்கு சாதம் போடுவாள். எந்தப் பழத்தைக் கையில் கொடுத்தாலும் கண்களை மூடிக்கொண்டு ‘கிருஷ்ணார்ப்பணம்’ என்று சொல்லிவிட்டு சாப்பிடும் பழக்கமும் ஸ்ரீரங்கத்தில் தான் கற்றோம்.

 

அரங்கின் ஒரு மூலையில் ஒரு குழி இருக்கும். எதற்கு என்று தெரியாது. எல்லா குழந்தைகளும் தவழ்ந்து போய் அதில் உட்கார்ந்து கொள்ளும்! அரங்கிலிருந்து தளிகை உள்ளிற்குப் போக இரண்டு படி ஏற வேண்டும். தளிகை உள் பெரியது. நுழைந்தவுடன் வலது பக்கத்தில் பெரிய பெரிய மரப்பெட்டிகள் இருக்கும். அதில் பலசரக்குகள் இருக்கும். ஒரு டப்பியில் அச்சு வெல்லம் இருக்கும். பாட்டி மத்தியானம் தூங்கும் போது நானும் என் சகோதரனுமாக (அப்போது மட்டும் கூட்டு சேருவோம்) இந்தப் பெட்டியைத் திறந்து வெல்லம் திருடி சாப்பிடுவோம். மற்ற நேரங்களில் இருவருக்கும் சண்டை தான்!

 

தளிகை உள்ளில் ஒரு பெரிய அமுது பாறை இருக்கும். கருங்கல்லால் ஆன மேடை. ரொம்பப் பெரியது. அந்தக் காலத்தில் அதில் சாதத்தைக் கொட்டிக் கலப்பார்களாம் – புளியோதரை போன்ற சாதங்களாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதிலேயே அம்மி, உரல் இரண்டும் போட்டிருப்பார்கள். இட்லி, தோசைக்கு அரைக்கும்போது அம்மா அல்லது பெரியம்மா அந்த  அமுது பாறையின் மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு அரைப்பார்கள். அதை ஒட்டியே தொட்டி மித்தம். பாத்திரங்கள் அலம்புமிடம். அதன் பக்கத்தில் பெரிய சிமெண்டு தொட்டி. கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து இதில் நிரப்பி வைத்துக் கொள்வோம். பாத்திரங்கள் அலம்ப இந்த நீர் பயன்படும். கிணற்றிலிருந்து இதற்கு நீர் வர கல்லில் அரை வட்ட வடிவில் ஒரு பிறை (திறப்பு) கிணற்றின் அருகில் இருக்கும். கிணற்றிலிருந்து நீர் இறைத்து இந்தப் பிறையில் கொட்டினால் இந்த சிமென்ட் தொட்டியில்  நீர் விழும். ஸ்ரீரங்கத்தில் எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு  இது. ‘பாட்டி! சிமென்ட் தொட்டியில தண்ணீர் நிரப்பட்டுமா?’ என்று கேட்டு கேட்டு நீர் நிரப்பிக் கொடுப்பேன். தளிகைக்கு பாட்டி கிணற்றிலிருந்து குடங்களில் நீர் கொண்டு வந்து வைத்துக் கொள்வாள். நாங்கள் சின்னவர்களாக இருந்த போது மண் அடுப்புதான். விறகு அடுப்பு அது. மண் அடுப்பை பாட்டி மெழுகுவதைப் பார்ப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். மெழுகி மெழுகி அடுப்பு மழுமழுவென்று இருக்கும். ராத்திரி படுக்கப் போகும் முன் அதை நன்றாகத் துடைத்து கோலமிட்டு விட்டு வருவாள் பாட்டி. அழகு மிளிரும். அதில் விறகு வைத்து தளிகை பண்ணுவாள் பாட்டி. காவிரித் தண்ணீர், விறகு அடுப்பு என்று பாட்டியின் தளிகை கமகமக்கும்.

தளிகை உள்ளில் இன்னொரு பிறை இருக்கும். அதற்குப் பெயர் பழையத்துப் பிறை. அங்குதான் பழைய சாதம் வைக்கப்படும்.

 

தொடரும் ………..

படங்கள் கூகிள் உபயம்

26 thoughts on “ஸ்ரீரங்கத்து வீடு – மண் அடுப்பு

  1. தெரியாமல் வெல்லம் தின்பது பலருக்கும் வழக்கமாக இருந்திருக்கிறது….. நானும் அப்படி வெல்லம் தின்பது உண்டு! 🙂

    அதற்காகவே ”வெல்லம் திருடி வெங்கட்ராமா” என்று பெயர் பெற்ற்தும் உண்டு! 🙂

    மண் அடுப்பு – இப்போது பெரும்பாலான கிராமங்களில் கூட காஸ் அடுப்பு வந்துவிட்டது!

    1. வாங்க வெங்கட்!
      உங்கள் செல்லப் பெயர் நன்றாக இருக்கிறது. பாட்டியின் வீட்டில் மட்டுமே அப்போது அச்சு வெல்லம் கிடைக்கும். பெங்களூரு வந்தபிறகு இங்கு அச்சு வெல்லத்தைப் பார்த்ததும் ஸ்ரீரங்கத்தில் திருடித் தின்ற அச்சு வெல்லம் நினைவிற்கு வந்தது.
      நான் எழுதியிருப்பது ஐம்பது வருடத்திற்கு முன்.
      வருகைக்கும், சுவாரஸ்யமான கருத்துரைக்கும் நன்றி!

  2. ஆஹா.. கிணற்றில் இருந்து பிறைவடிவ திறப்பு வழியே சமையலறை தொட்டியில் நீர் நிரப்புவது எனக்கும் மிகப் பிடித்த செயல்.. ரேழி.. முற்றம்.. மண்அடுப்பு, பெருமாளுக்கு நிவேதனம் செய்த பிறகு சாப்பிடுதல்.. என் பாட்டியை ஞாபகப்படுத்தி விட்டது உங்கள் பதிவு.. 😦

    1. வாங்க ராகவன்!
      உண்மை. எனக்கும் என் பாட்டியின் நினைவு இப்போதெல்லாம் அதிகம் வருகிறது. என் பேரன், பேத்திகள் என்னை இப்படி நினைவு கூர்வார்களா? சந்தேகம் தான்!
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

    1. வாங்க தனபாலன்!
      எல்லோருமே இந்த மாதிரியான திருட்டைப் பண்ணியிருக்கிறோம் போலிருக்கு!
      வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி!

    1. வாங்க ரூபன்!
      உங்களுக்கும் இந்தப் பதிவு மலரும் நினைவுகளை மீட்டுத் தந்ததா? மகிழ்ச்சி!
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  3. முதல்லே அடுப்பைப் பத்தின நினைவுகள். இந்த அடுப்பில் நானும் சமைத்திருக்கிறேன். அவ்வளவு ஏன்? அடுப்பைக் களிமண்ணால் போனது வந்தது செல்லாம் செப்பனிட்டிருக்கிறேன். சமையல் முடிந்ததும், அடுப்பைச் சுத்தம் செய்து சாணியைக் குழைத்துப் பூசி சுத்திகரித்துக் கோலம் போட்டு மறுநாள் சமையலுக்குத் தயார் செய்திருக்கேன். எல்லாம் புக்ககத்தில். என் அம்மாவிடமும் இதைப்போல் அடுப்பு இருந்தாலும் மண் இல்லை அது. பானை செய்வது போல் செய்த அடுப்பு. விலைக்கு வாங்குவார்கள். குடி இருந்த வீடு என்பதால் அடுப்பெல்லாம் போடக் கூடாது. காலி பண்ணும்போது அடுப்பையும் சேர்த்து எடுத்து வருவாங்க. அதிலும் கொடி அடுப்பு உண்டு. மத்தபடி சுத்தம் செய்வதெல்லாம் மேற்சொன்ன மாதிரித் தான். இப்போப் பதிவைப் படிச்சுட்டு வரேன்.:)

    1. வாங்க கீதா!
      நானும் என் மாமியார் வீட்டில் இதுபோல அடுப்பில் சமைத்து இருக்கிறேன். மண் அடுப்பு இல்லை. இரும்பில் இருக்கும். அப்போதும் பாட்டி நினைவு வரும். என் பாட்டியிடம் சொன்னபோது, ‘இந்தக் காலத்துலயும் விறகு அடுப்பா?’ என்று அதிசயப் பட்டாள்!
      அடுத்த பின்னூட்டத்தைப் பார்க்க போறேன்.

  4. அந்தக் காலத்தில் அதில் சாதத்தைக் கொட்டிக் கலப்பார்களாம் – //

    ஆமாம், மதுரையில் அழகர் ஆத்தில் இறங்கும்போது நடைபெறும் மண்டகப்படிகளில் இப்படி ஒன்று இருக்கும். அங்கே சாதத்தைக் கொட்டிக் கலப்பதை நேரிலேயே பார்த்திருக்கிறேன். சுற்றி நான்கைந்து பேராக நின்று கொண்டு பெரிய பெரிய மரத்துடுப்புக்களால் சாதத்தைக் கிளறி விடுவார்கள்.

    //கிணற்றிலிருந்து இதற்கு நீர் வர கல்லில் அரை வட்ட வடிவில் ஒரு பிறை (திறப்பு) கிணற்றின் அருகில் இருக்கும். கிணற்றிலிருந்து நீர் இறைத்து இந்தப் பிறையில் கொட்டினால் இந்த சிமென்ட் தொட்டியில் நீர் விழும். //

    இந்தப் பிறையும் தொட்டியும் மாமியார் வீட்டில் மாட்டுக்கொட்டிலுக்கு மாடுகளுக்கு நீர் காட்டவிருக்கும் தொட்டிக்காக ஏற்படுத்தி இருந்தது. கிணற்றில் நீர் இறைத்து அந்தப் பிறையில் விடுவோம். நேரே மாட்டுக் கொட்டாய்த் தொட்டிக்குப் போகும். இப்படியே மீந்த சாதம், குழம்பு, கறி வகைகள், கழுநீர் எல்லாவற்றையும் கொட்டி விட்டுத் தண்ணீரை இறைத்து ஊற்றினால் மாட்டுக்கொட்டாய்த் தொட்டிக்குப் போய்விடும்.

    1. // மீந்த சாதம், குழம்பு, கறி வகைகள், கழுநீர் எல்லாவற்றையும் கொட்டி விட்டுத் தண்ணீரை இறைத்து ஊற்றினால் மாட்டுக்கொட்டாய்த் தொட்டிக்குப் போய்விடும்.// நல்ல ஐடியா!
      ஸ்ரீரங்கத்து வீட்டில் இந்த அமுது பாறை மேல் பாத்திரங்கள் அடுக்கப்பட்டிருக்கும்!

  5. பழயதுப் பிறை அம்பத்தூரில் நாங்க கட்டிய வீட்டில் கூட தனியாக ஏற்படுத்தினேன். 🙂

    1. சூப்பர்!
      எங்கள் அம்மா அகத்தில் பழயத்து மூலை என்றிருக்கும். பிறை இல்லை.
      வருகைக்கும், சுவாரஸ்யமான பின்னூட்டங்களை போட்டதற்கும் நன்றி!

  6. மிக அருமையாக வீட்டை விளக்கியிருக்கிறீர்கள் ரஞ்சனி பாராட்டுக்கள்
    மலரும் நினைவுகள் தொடரட்டும் படித்து ரசிக்க நாங்களும் தயாராக இருக்கிறோம்.

    1. வாங்க விஜயா!
      வருகைக்கும், ரசிக்கத் தயாராக இருப்பதற்கும் நன்றி!

    1. வாங்க துரை!
      உண்மை. இந்த மாதிரியான சொற்கள் இப்போது யாருக்குத் தெரியும்? அதற்காகவே நான் இவற்றை பதிய விரும்புகிறேன்.
      வருகைக்கும், அழகிய சொல்லை ரசித்ததற்கும் நன்றி!

  7. என்ன கூத்து இது. ஒரு கதை அடுப்பைப் பற்றி எழுதியது எழுதினால்அ,ப்படியே ஸ்வாஹா ஆகிவிட்டது. அடுப்பை களிமண்ணால் கல் இல்லாமல் மண்ணைப்பிசைந்தே போடுவோம். ஒத்தையடுப்பு,கொடியடுப்பு,கும்மிட்டி, பலவிதம் உண்டு.அடுப்பைப் போட்டு மண்ணைக்குழைத்து மழமழ வென்று நகாசு வேலை செய்து நல்ல நாள் பார்த்தே உபயோகிக்கத் துவக்குவோம். தைமாதம்தான் மிகவும் உகதது. இதுவும் போய்விடப்போகிறது. தொடருகிறேன். அன்புடன்

    1. வாங்கோ காமாக்ஷிமா!
      அடுப்பு போடுவதில் என் அம்மா மிகுந்த திறமைசாலி. ஒரு கைதேர்ந்த சிற்பியைப் போலச் செய்வாள். கூகிளில் படம் சரியாகக் கிடைக்கவில்லை. அந்தக் காலத்திலேயே இவற்றைப் படம் பிடித்து வைத்திருக்க வேண்டும்.
      அடுத்த பின்னூட்டம் படிக்கிறேன்.

  8. அடுப்பை மெழுகிக் கோலம் போடுவதென்பது ஒரு கலை. யார் ரஸிக்கிறீர்களோ இல்லையோ? அந்தப்பெண் அடுப்பை பச்சென்று பிசிறு இல்லாத மொழுகி முத்தாட்டம் ்அரிசி மாவில் கோலம் போட்டிருக்கும் பார் காரியம் அவ்வளவு விதரணை. என்று ஸர்டிபிகேட் கிடைக்கும். மற்ற சேர்மானம் அந்த ஸர்டிபி கேட்டில் காரியங்களும் . அடுப்பு மெழுகும் துணிக்குச் சாணிச் சுருணை என்று
    எழுதபெயர்.
    சாதம் கலக்க திருவண்ணாமலையில் முன்பெல்லாம் ஒரு பெரிய இடம் கட்டி வைத்திருப்பதாகச் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். வீட்டிலேயே கோட்டையடுப்பு கட்டுவது போல அமுதுப்பாறை பேறே அமிருதமாக இருக்கிறது. வைஷ்ணவ சம்ரதாய வார்த்தைகள் அழகாக இருக்கிரது. தொடரும்

    1. நீங்கள் சொல்லும் அத்தனை அழகும் அம்மா போடும் அடுப்பில் இருக்கும். சாணிச்சுருணையும் வந்துவிட்டதே!
      இந்த வார்த்தைகள் எல்லாம் மறைந்தே விட்டன. யாராவது பல வருடங்கள் கழித்து இந்தப் பதிவைப் படிக்கும்போது தெரிந்து கொள்வார்கள், இல்லையா?

  9. சவுக்கு விறகு,புளிய விற குஎன்று சுலபமாக பத்த வைக்கும் விறகுகள், அடுப்பு மூட்டத் தெரியுமா? கூடத்தில் நெல் சேகரித்து வைக்கும் குதிர்கள் எங்களூரில் உரை என்போம். வரட்டி சாம்பலும்,புளியும் போட்டு பாத்திரம் தேய்க்கும் வைபவம், பாத்திரத்திள் கறி பிடிக்காதிருக்க அரிசிமாவையோ,மண்ணையோ குழைத்து பாத்திரத்தின் அடியில் பூசுதல், எல்லா வற்றையும் விட அடுப்புத் தணல் எல்லாம் எடுத்து விட்டு காலி அடுப்பில் மணிலாக் கொட்டையைப்போட்டு கலந்து வைத்து விட்டால் சுட்ட மணிலாக்கொட்டை ரெடி. இப்படி எவ்வளவோ. இனி அலுத்துவிடும் சொன்னால் அன்புடன்

    1. உங்களது பின்னூட்டங்கள் தகவல் களஞ்சியங்கள். மணிலாக் கொட்டை வறுக்க இப்படியொரு வழியா? நன்றாக இருக்கிறதே! அடுப்பு சாம்பலே பாத்திரம் தேய்க்க உதவும். இந்தத் தகவல்கள் அலுக்கவே அலுக்காது. இன்னும் சொல்லுங்கள். அல்லது உங்கள் வலைத்தளத்தில் எழுதுங்கள்.
      வருகைக்கும், மலரும் நினைவுகளுடன் சுவாரஸ்யமான பின்னூட்டங்களுக்கும் நன்றி!

  10. அலுக்காது காமாட்சி அம்மா, இன்னும் பகிருங்கள். சுவையாக இருக்கிறது.

    1. காமாக்ஷிமாவின் பின்னூட்டம் உங்களை மீண்டும் இந்தப் பக்கம் அழைத்துவந்து விட்டதா? வருக, வருக!

Leave a reply to ranjani135 Cancel reply