புத்தி யோகம்

 

மே பதிமூன்று எனது 67 வது பிறந்தநாள். 66  வயது முடிந்து 67 தொடங்கியது. பிறந்தது ஸ்ரீரங்கம் என்றாலும் படித்தது, திருமணம் ஆனது எல்லாம் சிங்காரச் சென்னையில்தான். பெங்களூர் வந்து 32 வருடங்கள் ஆகிறது. வாழ்க்கைப் பாடங்கள் பல இங்கு வந்துதான் கற்றேன். அதைத் தவிர சங்கீதம்,  வீணை கற்றேன். கன்னடம் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டேன். கல்லூரிக்குச் செல்லவில்லை; பட்டதாரி ஆகவில்லை என்ற என் குறையை இங்கு வந்து M.A., படித்துப் போக்கிக் கொண்டேன்.

 

என் கணவரின் வேலைக்காக  தும்கூரில் இரண்டு வருடங்கள் இருந்தபோது அங்கு TVS பள்ளியில் பாட்டு டீச்சர் ஆக வேலைக்குச் சேர்ந்த சமயம்,  இரண்டாம் வகுப்புக் குழந்தைகளுக்கு கன்னடம் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதனால் கன்னட மொழியை நன்கு கற்கும் பேறு பெற்றேன்.

 

எனக்கு எல்லாமே late take-off தான். திருமணத்திற்கு முன் ஸ்டெனோ டைப்பிஸ்ட் ஆக வேலை பார்த்தேன். திருமணத்திற்குப் பின் விட்டுவிட்டேன். 25 வருடங்கள் (2000 ஆம் வருடம் ஏப்ரல் மாதம்) கழித்து தீடீரென ஒரு வேலை வாய்ப்பு! Spoken English Trainer ஆனேன். அப்போது எனக்கு 47 வயது! மூன்று மல்டி-நேஷனல் நிறுவனங்களின் கார்ப்பரேட் ட்ரெயினர் ஆகவும் இருந்தேன். ஒரு அமெரிக்க நிறுவனத்தில் அவர்களது கான்பரன்ஸ் அறையில் என் வகுப்புகளை நடத்தச் சொன்னார்கள். அந்த அறைக்குள் நுழைந்தவுடன் வியப்பில் என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. சிவப்புக் கம்பளம் போடப்பட்ட குளிரூட்டப்பட்ட அறை. ஒரு கரும்பலகை அளவிலான கணினித் திரை. நான் பாடங்களை கணினியில் (என் பிள்ளையின் உதவியுடன்) அனுப்பிவிடுவேன். அறைக்குள் நுழைந்தவுடன் பட்டனைத் தட்டினால் அந்தப் பெரிய திரையில் எனது பாடங்கள் வரும். அப்படியே சொல்லிக் கொடுத்து விடலாம். அடுக்கடுக்காக அமைக்கப்பட்ட உட்காரும் வசதி. மறக்க முடியாத அனுபவம்!

 

அடிப்படை ஆங்கிலத்தில் ஆரம்பித்து நேர்முகப்பேட்டியை எப்படி எதிர்கொள்வது, ஆளுமையை வளர்த்துக் கொள்ளும் விதம் என்று பலவிதங்களிலும் அந்த நிறுவன ஊழியர்களை தயார் செய்தேன். கடைசி நாளன்று ஆங்கிலத்தில் ஒரு நாடகம் தயாரித்து என் மாணவர்களை நடிக்க வைத்தேன். கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியாளராக மிகவும் பிஸியாக வேலை பார்த்தேன். ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் அங்கு ஊழியம் செய்து வந்த வடஇந்தியர்களுக்கு கன்னடம் கற்றுக் கொடுக்கச் சொன்னார்கள். அதையும் திறம்படச் செய்தேன். எனது மாணவர்களில் பல வெளிநாட்டு மாணவர்களும் அடக்கம்.

 

அதே சமயம் பத்திரிகைகளில் கதை, கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன். எனது முதல் கதை 2000 வது ஆண்டு மங்கையர் மலரில் வெளிவந்தது. அவள் விகடனிலும் எழுத ஆரம்பித்தேன். என் பிள்ளை இரண்டு வருடங்கள் அமெரிக்காவில் இருந்தபோது கணணி முன் உட்கார ஆரம்பித்து (அவனுடன் தினம் பேச வேண்டுமே!) கணனியில் நிறையக் கற்றுக் கொண்டேன். எனக்காக அங்கிருந்து ஒரு லேப்டாப் கணணி வாங்கி வந்தான். அன்றிலிருந்து அதுதான் என் ஒரே பொழுதுபோக்கு!  ஆன்லைனில் எழுதும் வேலை ஏதாவது கிடைக்குமா என்று தேடியதில் ஒரு இணையதளம் என் எழுத்துக்களை கை நீட்டி வரவேற்றது. அதில் எழுதி வெளியானதை எல்லாம் வோர்ட்பிரஸ்.காமில் வலைத்தளம் ஆரம்பித்து பதியத் தொடங்கினேன். அதைப் படித்து விட்டு கனடா நாட்டிலிருந்து ஒருவர் அவர் நடத்தும் ஆன்லைன் தமிழ் பத்திரிகைக்கு கட்டுரைகள் எழுதி கொடுக்குமாறு சொன்னார். ஆரம்பத்தில் நான் எழுதி அந்தப் பத்திரிகைக்கு அனுப்பி விடுவேன். அவர்கள் அதை வெளியிடுவார்கள். சில  மாதங்களில் எனக்கே ஒரு பயனர் பெயர், கடவுச் சொல் கொடுத்து என்னையே வெளியிடவும் சொல்லி விட்டார்கள். இதில் எனக்கு சொல்லமுடியாத ஆனந்தம்! இந்த வயதில் யாருக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கும்?

 

மொழிபெயர்ப்பில் நிறைய ஆர்வம் இருந்ததால் ஒரு நாள் கிழக்குப் பதிப்பகத்திற்கு தொலைபேசினேன். திரு மருதனிடம் என் ஆர்வத்தைச் சொன்னேன். அந்தப் பதிப்பகம் நடத்தி வந்த ‘ஆழம்’ பத்திரிகையில் எழுதச் சொன்னார். தொடர்ந்து எழுதினேன். 2014 ஆம் ஆண்டு எனது முதல் புத்தகம் ‘விவேகானந்தர் – இந்தியாவின் மறுமலர்ச்சி நாயகன்’ என்ற புத்தகம் வெளியானது. அடுத்த ஆண்டு மலாலா – ஆயுத எழுத்து என்ற புத்தகம் வெளியானது. இந்த ஆண்டு ‘ஜோன் ஆப் ஆர்க்’ புத்தகம் வெளியானது. மூன்றுமே கிழக்குப் பதிப்பக வெளியீடு.

 

குங்குமம் தோழியாக அறிமுகம் ஆனேன். பெண்களுக்கான கட்டுரைகள் குங்குமம் இதழில் தொடர்ந்து எழுதினேன். சமீபத்தில் தினமலர் திருச்சி இதழில் பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் என்ற கட்டுரை 25 வாரங்கள் எழுதி முடித்தேன். ஒரு இணையப் பத்திரிகையில் குழந்தை வளர்ப்பு பற்றி – ஒரு அம்மாவாக, ஒரு பாட்டியாக – செல்வ களஞ்சியமே என்ற தலைப்பில் 100 வாரங்கள் எழுதினேன். நல்ல வரவேற்பு இருந்தது. நோய்நாடி நோய் முதல்நாடி என்ற மருத்துவக் கட்டுரை அதே பத்திரிகையில் எழுத ஆரம்பித்தேன். ஏதோ காரணங்களால் அந்தப் பத்திரிகை கிட்டத்தட்ட நின்று போனது. என் கட்டுரையும் பாதியில் நின்று போனது.

 

என்னைப் பொறுத்தவரையில் நமக்குத் தகுதிகள் இருந்தால் நிச்சயம் நமக்கு வாய்ப்புகள் தேடி வரும். வயது ஒரு பொருட்டே அல்ல!

கோபல்ல கிராமம்

இன்று இயற்கை எய்திய திரு கி.ரா அவர்களுக்கு எனது காணிக்கை இந்தக் கட்டுரை.

ranjani narayanan

வல்லமை இதழில் புத்தக மதிப்புரைக்காக எழுதியது.

gopalla gramam

எழுதியவர்: கி. ராஜநாராயணன்

பதிப்பகம்: காலச்சுவடு

விலை: ரூ. 150

பக்கங்கள் : 199

வெளியான ஆண்டு: 1976

ஆசிரியர் குறிப்பு:

ஆசிரியர் திரு கி.ரா என்கிற கி. ராஜநாராயணனைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கரிசல் காட்டின் வளமையை தமிழ் எழுத்துலகிற்குக் கொண்டு வந்தவர். கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தில் பிறந்தவரின் கதைகளில் கரிசல் பூமியும் அங்கு வாழ்ந்த மக்களும்தான் கதைக் களம், கதை மாந்தர்கள். இவரது கதைகளுக்கு பின்புலம் தனது தந்தையாரிடத்தில் இவர் கேட்ட கதைகள் தாம்.

எனது பணிவான வேண்டுகோள்

சாகித்ய அகாதெமி விருது பெற்ற இந்த மூத்த எழுத்தாளரை விமரிசிக்கும் அளவிற்கு எனக்கு தகுதியில்லை. அதனால் நான் இங்கு பகிர்ந்து இருப்பது நான் படித்து ரசித்த ‘கோபல்ல கிராமம்’ புத்தகத்தில் இருந்து சில துளிகள். என்னைக் கவர்ந்த பாத்திரங்கள், வியக்க வைத்த நிகழ்வுகள் அவ்வளவே. இதைப் படித்துவிட்டு சிலராவது இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தால் எனது ஜென்மம் சாபல்யம் பெறும். ஏற்கனவே படித்தவர்கள் என்னுடன் கூட இன்னொருமுறை கோபல்ல கிராமத்திற்குப் போய்வரலாம்.

கோபல்ல கிராமம்

ஒரு கிராமத்தின் விடியலுடன் தொடங்குகிறது கதை. ஒரு ஜீவ இயக்கத்துடன் கிராமம் பூரணமாக விழித்துச் செயல்பட ஆரம்பிப்பதை படிக்கத் துவங்கும்போது நமக்குள் தோன்றும் நவரசமான உணர்வுகள் புத்தகத்தை முடிக்கும்வரை நீடிக்கிறது.  கோட்டையார் வீடு, அதன் வாரிசுகள் என்று கொஞ்சம் கொஞ்சமாக நம் கண்…

View original post 473 more words

மாலை மயங்குகின்ற நேரம்

எங்கள் ப்ளாக் வாட்ஸப் குழுவில் சில நாட்களுக்கு முன் மேற்கண்ட பாட்டைப் பற்றிய ஓர் கலந்துரையாடல் நடந்தது. இந்தப் பாட்டைக் கேட்டவுடன் எனக்கு என் அக்காவின் நினைவு தான் வந்தது. அவளது சங்கீத ஞானம் இதைப் போன்ற பாடல்களை கேட்கும்போது அதிகம் தெரியவரும். அக்கா நன்றாகப் பாடுவாள். குரல் மெலிதாக இருக்கும். ரொம்பவும் ரசித்துப் பாடுவாள் – அது ஆனந்தப் பாட்டாக இருந்தாலும், சோகப் பாட்டாக இருந்தாலும். சோகப் பாட்டுகளைப் பாடும்போது, அந்தப் பாடல்களை பாடும் பாடகர்களை மட்டுமல்லாமல் அந்தக் காட்சிகளில் நடித்திருக்கும் நடிக நடிகளையும் நினைவு கூர்வாள். அதுதான் அவளது சிறப்பு. கூடவே அந்த திரைப்படங்களின் கதைகளையும் சொல்லுவாள். ஆனந்தப் பாடல்களை விட சோகப்பாடல்களைத் தான் அவள் அதிகம் விரும்பினாள் என்பது நிஜம். அவற்றைத்தான் பாடவும் செய்தாள். பாலும் பழமும் படத்தில் ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ என்ற பாடலை விட ‘என்னை யாரென்று எண்ணி எண்ணி’ பாடல் அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும். ‘என்ன கஷ்டம் பாரு! தனது கணவன் எதிரிலேயே அவளுக்கு நடிக்க வேண்டியிருக்கிறது! பெண்டாட்டி எங்கே போனாள் என்று தெரியாமல் அவனும் அவளை நினைத்து உருகி உருகி பாடுகிறான்!’ என்று கண்கள் கசியச் சொல்லுவாள். நான் சிரிப்பேன். ‘சே! என்னடி, இதெல்லாம் சினிமா. அதைப்போய் நிஜம் என்று நினைத்துப் பேசுகிறாய்’ என்றால் ரொம்பவும் கோபித்துக் கொள்வாள். ‘நிஜ வாழ்க்கையிலும் இப்படியெல்லாம் நடக்கும், தெரியுமா?’ என்று என்னுடன் சண்டைக்கு வருவாள். நிறைய சினிமா பார்த்துப் பார்த்து இப்படி ஆகிவிட்டாள் என்று கூட சிலசமயம் எனக்குத் தோன்றும்.

கர்நாடக சங்கீதத்தைத் தழுவி இசையமைக்கப்படும் பாடல்களும் அவளது விருப்பத்திற்குரியவை. கேட்ட உடனே இன்ன ராகம் என்று சொல்லுவாள். கொஞ்சம் சந்தேகம் இருந்தால் அடுத்தவாரம் இலங்கை வானொலியில் மயில்வாகனன் சொல்வார், கேட்க வேண்டும் என்பாள். மறக்காமல் கேட்பாள். ‘பாரு, நான் சொன்ன ராகம் சரி’ என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வாள். பேத்தியை மடியில் போட்டுக் கொண்டு ‘நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே’ என்று ஆரம்பிப்பாள். ‘என்ன பாட்டு பாடுகிறாய் குழந்தைக்கு? வேறே பாடேன்’ என்றால் ‘எத்தனை நல்ல பாட்டு தெரியுமா? சிம்மேந்திர மத்யமத்தை ஜி. ராமநாதன் பிழிந்து கொடுத்திருக்கிறார்’ என்பாள். அடுத்தபடி ‘பொன்னான வாழ்வு மண்ணாகிப் போச்சே!’ என்று ஆரம்பிப்பாள். நான் ஆயாசத்துடன் எழுந்து போய்விடுவேன். இல்லை ஏதாவது புத்தகத்தைப் பார்க்க ஆரம்பித்துவிடுவேன். அவள் பாடிய சந்தோஷமான பாட்டு என்றால் ‘சின்னச்சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ’ பாடல் மட்டுமே. அதிலும் இரண்டாவது சரணம் வரும்போது நான் சொல்லுவேன் ‘குழந்தைக்கு இதைப் பாடாதே’ என்று. அவள் விடாமல் ‘பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா…..! பொல்லாத கண்களாடா புன்னகையும் வேஷமடா நன்றி கேட்ட மாந்தரடா, நானறிந்த பாடமடா…’ என்று முகமெல்லாம் சோகம் இழையோடப் பாடுவாள். மடியில் படுத்திருக்கும் குழந்தை ஒன்றும் புரியாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும்.

அக்காவின் நினைவு வருவதற்கு மாலை மயங்குகின்ற நேரம் பாடல் மட்டுமல்ல காரணம்.  ஆர். சூடாமணி எழுதிய ‘அந்நியர்கள்’ என்ற கதையைப் படித்ததிலிருந்து அவள் நினைவுதான். அதுவும் அவளும் நானும் எத்தனை எதிரெதிர் துருவங்களாக இருந்தோம்  என்பதைப் பற்றிய மலரும் நினைவுகள். அவளுடைய அந்திமக் காலத்தில் அவளுடன் மருத்துவமனையில் நான் தங்கியிருந்த போது நிறைய பேசினாள். அப்போது கேட்டேன்: ‘உன் கஷ்டங்களைப் பற்றியே பேசுகிறாயே? நீ சந்தோஷமாக இருந்ததேயில்லையா? எத்தனை திவ்ய தேசங்களை சேவித்திருக்கிறாய்? எத்தனை முறை அமெரிக்கா போய் வந்திருக்கிறாய்? ஏன் அதைப்பற்றியெல்லாம் பேசமாட்டேன்னென்கிறாய்?’ நீண்ட நேரம் மௌனமாகவே இருந்தாள். இரண்டு நாட்கள் கழித்து சொன்னாள்: ‘எனக்கு உன்ன மாதிரி இருக்கத் தெரியலை. கொஞ்சம் மாற்றிக் கொள்ளப் பார்க்கிறேன். எனக்கு உடம்பு சரியானவுடன் உன்னுடன் பெங்களூருக்கு வருகிறேன். உன்னுடன் நிறைய பேச வேண்டும் போலிருக்கு’  என்றாள்.

அவள் பரமபதித்த போது என் உறவினர் ஒருவர் சொன்னார்: அக்கா நன்றாக வாழ்ந்துவிட்டுத்தான் போயிருக்கிறாள். என்ன ஒண்ணு உங்க அம்மா இருக்கிறாள் அது தான் வருத்தமான விஷயம்’. நிஜம் தான். ஆனால் தன் வாழ்க்கை கஷ்டங்கள் நிரம்பியது என்று மனதில் அந்தக் கஷ்டங்களையே நினைத்து வருந்தியவளுக்கு உடலாலும் பலவித கஷ்டங்களைக் கொடுத்த கடவுள் அவளுக்குத் தன்னை மாற்றிக் கொள்ள கொஞ்சம் அவகாசம் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

கதை நிஜமானது

கதை நிஜமானது!

பொதுவாகவே ஓர் கதை என்பது பாதி கற்பனை மீதி நிஜம் என்று இருக்கும். எழுதுபவர்கள் தங்கள் அனுபவங்களை சற்று கற்பனை கலந்து எழுதுவார்கள். சிலசமயம் கதை என்று எழுதி சில வருடங்கள் கழித்து அது நிஜமாகவும் ஆகலாம். The Negotiator என்று ஓர் கதை Frederick Forsyth எழுதியது.

ராஜீவ் காந்தி கொலை நடந்த பிறகு பலர் அவரை இந்தக் கொலையில் சம்மந்தப்படுத்தி பேசினார்கள். காரணம் அவரது இந்தக் கதையில் கடத்திக் கொண்டு போகப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியின் மகனை திருப்பி அனுப்பும்போது அவன் வழியில் குண்டு வெடித்து இறந்துவிடுவான்.   அவனது இடுப்புப் பட்டையில் குண்டுகள் கட்டி வைக்கப்பட்டிருக்கும். ராஜீவின் கொலையாளியும் அதே உத்தியை கடைபிடித்தாள்.

இப்போது இதை நான் சொல்லக் காரணம் 20 வருடங்களுக்கு முன் நான் எழுதிய கதை சமீபத்தில் நிஜமாயிற்று. ஸ்டாப்! ஸ்டாப்!

யாரை உங்கள் கதையில் கொன்றீர்கள்? நிஜத்தில் யார் யாரைக் கொன்றார்கள்? என்றெல்லாம் உங்கள் கற்பனைக் கேள்விக் கணைகள் வந்து என்மேல் பாயும் முன் சஸ்பென்ஸை உடைத்து விடுகிறேன். பத்து நாட்களுக்கு முன் என் மருமகள் ராகி முத்தை செய்திருந்தாள். அதை சாப்பிடும் போதுதான் என் மூளையில் ஒரு மின்னல் வெட்டு. ஆஹா! 20 வருடங்களுக்கு முன்னால் இந்த ராகி முத்தையை வைத்து நான் ஒரு கதை – எனது முதல் கதை – எழுதினேன். அதில் என் பிள்ளை கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டு நான் அவர்கள் வீட்டிற்குப் போகும் போது என் மருமகள் எனக்கு ராகி முத்தை செய்து போட்டு அதை சாப்பிடத் தெரியாமல் நானும் என் கணவரும் விழிப்பது போல எழுதியிருந்தேன். அது நினைவிற்கு வந்தவுடன் என் மருமகளைக் கூப்பிட்டு  என் கதையை நீ இன்று நிஜமாக்கி விட்டாய் என்று சொன்னேன். ஆனால் இந்த தடவை நன்றாகச்  சாப்பிட்டோம்! அது ஒன்று தான் கதையிலிருந்து மாறுபட்டது.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். இந்தக் கதையை நான் எழுதிய போது என் பிள்ளை ரொம்பவும் சின்னவன். பிறகு அவனுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆனவுடன் என் அம்மா கேட்டாள்: ‘என்னடி பெண்ணின் பெயர் வேறு என்னவோ சொல்லுகிறாயே? ஷீதல் எங்கே?’ என்று. என் முதல் கதையில் கதையின் நாயகி ஷீதல்! முதல் கதை முதல் நாயகி எப்படி மறக்க முடியும்?

ஆங்கிலக் கட்டுரையாளர் JB Priestly அன்று மிகவும் உற்சாகத்துடன் டிராம் வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவரது முதல் கட்டுரை லண்டனின் பிரபல இதழ் ஒன்றில் அன்று பிரசுரம் ஆகியிருந்தது. அதுமட்டுமல்ல அவரது உற்சாகத்திற்குக் காரணம். அங்கு அவருடன் கூட பயணம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்மணியின் கையில் அவரது கட்டுரை வந்த அதே இதழ்! ‘அந்தப் பெண்ணுக்குத் தெரியுமா அந்த இதழில் எழுதிய பல அறிஞர்களில் ஒருவர் தனக்கு மிகச் சமீபத்தில் உட்கார்ந்திருக்கிறார் என்று?’ என்று அவர் நினைத்துக் கொண்டாராம்!

எனது முதல் கதை வெளிவந்த போது நான் கூட இப்படித்தான் நினைத்துக் கொண்டேன்: உலகமே மங்கையர் மலர் புத்தகத்தை வாங்கி என் கதையைத் தான் படித்துக் கொண்டிருக்கிறது என்று!

ஒரு கதை வெளிவந்துவிட்டால் எல்லா எழுத்தாளர்களுமே தொடர்ந்து எழுதத் தொடங்கி விடுவார்கள். நானும் அப்படித்தான். ஆனால் Franz Kafka என்கிற ஐரோப்பிய இலக்கிய கர்த்தா அதிகம் எழுதவில்லை. மூன்று நாவல்கள், சில சிறுகதைகள் சில கடிதங்கள் அவ்வளவுதான் அவரது படைப்புகள். தனது இறப்பிற்குப் பின் தனது படைப்புகளும் மறைந்துவிட வேண்டும் என்று நினைத்து தனது நண்பர் Max Brod என்பவரிடம் தனது படைப்புகளைத் தீக்கிரையாக்கும்படி கேட்டுக் கொண்டாராம். ஆனால் அவரது நண்பர் அப்படிச் செய்யவில்லை.

சமீபத்தில் டெக்கன் ஹெரால்ட் செய்தித்தாளில் ‘Right in the middle’ பகுதியில் திரு சி.வி. சுகுமாரன் என்பவர் தனது முதல் படைப்பைப் பற்றி எழுதும் போது மேற்கண்ட இரு கட்டுரையாளர்களை குறிப்பிட்டு எழுதியிருந்தார். சுவாரஸ்யமாக இருந்ததால் நீங்களும் படிக்க அதை எழுதினேன்.

இப்படியாக எனது முதல் கதை வெளிவந்த 20வது வருடத்தை ராகி முத்தை செய்து சாப்பிட்டுக் கொண்டாடிவிட்டேன்.

எனது முதல் கதையைப் படிக்காதவர்களுக்காக இதோ இணைப்பு:

அத்தையும் ராகி முத்தையும்

படித்து ரசியுங்கள்!

மீண்டும் வசந்தம்

கொரானாவிற்கு முன்பு

காலை 8 மணி

‘எல்லாம் எடுத்துண்டயா?ஐடி, சாப்பாடு, வீட்டு சாவி…..?’

‘உம்….உம்….’ ஒவ்வொன்றாக சரி பார்த்துவிட்டு ஆபீஸிற்குப் பறப்பாள் என் மருமகள்.

‘அம்மாவுக்கு டாட்டா சொல்லு….’

பாதி தூக்கக் கலக்கத்தில் ‘தா…..த்தா……..’ என்பாள் என் பேத்தி.

‘ம்மா எங்க?….’ ‘அம்மா ஆபீஸ் போயிருக்கா. சீக்கிரமா வந்துடுவா. சரியா?

அப்போதுதான் எழுந்து வரும் அவளை இடுப்பில் வைத்துக்கொண்டு மருமகளை அனுப்பி வைப்பேன்.

குழந்தைக்கு பால் கொடுக்க அவளை சோபாவின் மேல் உட்கார வைத்து பேபி டீவியை போடுவேன்.

பேபி பட்டர்ஃப்ளை, லேடி எலிஃபண்ட், ஸர் ஹிப்போ பொடாமஸ், ஷீப் படா பீப் என்ற பேபி டீவி பாத்திரங்களுடன் நானும் என் பேத்தியும் கலந்து ஒன்றிவிடுவோம்.

‘யானை பாரு! ஓம் ஓம் நு யோகா பண்ணறது பாரு!’

ஹை! சூப்பீஸ்……. பாரு அந்த மின்மினிப் பூச்சி நிலாவோட சேர்ந்து புஸ்தகம் படிக்கறது…..சிரிக்கறது பாரு….!’

இப்படியாக பால் கொடுக்கும் படலம் அரை மணி நேரத்தில் முடியும்.

பிள்ளைக்கு டிபன் செய்து கொடுத்து மத்தியான சாப்பாடு கட்டி……. நான் இந்த வேலைகளை முடிப்பதற்குள் பிள்ளை குழந்தைக்குப் பல் தேய்த்து, குளிப்பாட்டி டிரஸ் பண்ணி முடிப்பான்.

பத்தரை மணிக்குப் பேத்திக்கு டிபன் ஊட்டும் படலம். இந்தமுறை யூடியூப். கண்மணி கண்மணி….. செல்லக்குட்டி கண்மணி…

பதினொரு மணிக்கு பணிப்பெண் வருவாள். உலர்ந்த துணிகளை மடித்து வைத்து காய்கறி நறுக்கி மேடையைத் துடைத்து பாத்திரங்களை அடுக்கி என்று அவள் பணிகளை முடிக்கவும் இன்னொரு பணிப்பெண் சிங்க்க்கில் இருக்கும் பாத்திரங்களைத் தேய்த்து வாஷிங் மெஷினில் இருக்கும் துணிகளை எடுத்து உலர்த்துவாள்.

இருவரும் கிளம்பவும் என் பிள்ளை ரெடியாகி ஆபீஸிற்குப் புறப்படுவான். ‘பாட்டி தாத்தாவை பத்திரமா பாத்துக்கோ’ என்பான். குழந்தையும் ரொம்பவும் புரிந்தது போல தலையை ஆட்டுவாள்.

அவனுக்கும் என் இடுப்பில் உட்கார்ந்தபடியே டாட்டா சொல்லுவாள் குழந்தை.

அப்பாடா! எல்லோரும் கிளம்பியாயிற்று. இனி நானும் என் பேத்தியும் மட்டும் தான். இனி எங்களுக்கே எங்களுக்கான நேரம் ஆரம்பம். அவளுடன் விளையாடி பாட்டுப்பாடி, சிரித்து, புத்தகங்கள் படித்து, கதை சொல்லி, மதியம் சாதம் ஊட்டி அவள் கண் சொக்கும்போது படுக்கையில் கொண்டு விட்டு கூடவே அவளைக் கட்டிக் கொண்டு சின்னதாக ஒரு தூக்கம் போட்டு எழுந்திருப்பேன். அதற்குள் காப்பி நேரம் வந்திருக்கும். கணவருக்கும் எனக்கும் காப்பி கலந்து கொண்டு வருவேன். அவளும் ‘அம்மா’என்று கூப்பிட்டுக் கொண்டு எழுந்து வருவாள். அவளுக்கு பழம் அல்லது பால் கொடுத்து காலையில் போட்ட உடையை கழற்றி முகம் துடைத்து அழகாக அலங்காரம் செய்து வேறு உடை அணிவித்து அம்மா வரும்போது குழந்தை அன்றலர்ந்த பூவாக இருப்பாள். என் மருமகள் எப்போதும் இரண்டு முறை காலிங் பெல் ஆடிப்பாள். உடனே குழந்தைக்குத் தெரிந்துவிடும் அம்மா வந்துவிட்டாள் என்று. ஓடிப்போய் சோபாவின் பின்னால் ஒளிந்து கொள்வாள். அம்மா வந்து அவளைத் தேட வேண்டும். தினமும் நடக்கும் இந்த விளையாட்டு.

இப்போது அம்மா அப்பா இருவரும் வீட்டில் இருப்பதால் என்னை அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை அவள். அம்மா அப்பா பின்னாலேயே போய்க் கொண்டிருக்கிறாள். இருவருக்கும் மீட்டிங் ஏதாவது இருந்தால் அவளை அழ அழ அழைத்துக் கொண்டு வருவேன். இல்லையென்றால் அவளும் அவர்களுடன் அதே அறையில் இருப்பாள்.

எனக்கும் எல்லோரும் வீட்டில் இருப்பதால் தளிகை செய்து பாத்திரம் தேய்த்து துணிகளை உலர்த்தி, மடித்து அப்பாடா என்று ஓய்ந்து போகிறது.

எப்போது எல்லாம் நல்லபடியாக முடிந்து அவரவர்கள் வழக்கம் போல ஆபீஸ் போய் நானும் பேத்தியும் எங்களுக்கென்று இருந்த சொர்க்கத்தை மறுபடியும் அனுபவிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. அந்த வசந்தத்தைத்தான் இப்போது வா வா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

16 வயதினிலே……

 

 

இந்தப் பதினாறு வயதிற்கு ஒரு தனி பெருமை உண்டு.

பதிமூன்று வயதில் காலெடுத்து வைக்கும்போது இருக்கும் அந்தக் குழந்தைத்தனம் மாறியிருக்கும். அதே சமயம் முழு பக்குவமும் வந்திருக்காது. பக்குவத்தை நோக்கி நடை போட ஆரம்பித்திருப்போம். எதிர்காலம் இப்படி இருக்க வேண்டும். நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்றெல்லாம் யோசனைகள் முளைவிடும் நேரம் அது. மருத்துவர் ஆக வேண்டும். ஆசிரியை ஆக வேண்டும் என்றெல்லாம் நமக்கென்று  சில எண்ணங்கள், குறிக்கோள்கள் தோன்ற ஆரம்பித்திருக்கும். அந்த சமயத்தில் நாம் கற்பனை செய்து வைத்திருப்பது போலவே, நமது மனத்தைக் கொள்ளை கொள்ளும்படி ஒருவரைப் பார்த்துவிட்டால்? சரி இங்கு கொஞ்சம் நிற்போம்.

 

இந்த வயதில் நாங்கள் புரசைவாக்கம் லேடி முத்தையா செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பில் (1969 ஆம் ஆண்டு) படித்துக் கொண்டிருந்தோம். ஆசிரியைகள் எல்லோருமே சற்று வயதானவர்கள். தலைமையாசிரியை திருமதி ஷாந்தா, விஞ்ஞானம் சொல்லித் தரும் திருமதி ஆண்டாள் சுந்தரம், சமூகப் பாடம் நடத்தும் குமாரி லீலாவதி (திருமணம் ஆகாதவர் என்றாலும் முதிர் கன்னி), திருமதி மீனாட்சிஎல்லோருமே எங்களிடம் கறாரும் கண்டிப்புமாகத்தான் இருப்பார்கள். பெண்கள் படிக்கும், பெண் ஆசிரியைகளைக் கொண்ட பெண்கள் பள்ளி. தமிழ் வாத்தியார் சர்மா ஸார், சமஸ்கிருத வாத்தியார் தேசிகாச்சாரியார் இவர்களைத் தவிர பள்ளியைக் காவல் காக்கும் கூர்க்கா. மற்றபடி ஆண் வாசனையே கிடையாது.

 

இப்படி இருந்த நேரத்தில் தான் தென்றலாக வந்தார் லலிதா டீச்சர். இளம் வயது. தேவதை போல அழகு. நாங்கள் கனவு கண்டுகொண்டிருந்ததெல்லாம் நிஜத்தில் நடந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தார் லலிதா டீச்சர். அவர் பள்ளியின் வாசலில் வரும்போதே (வகுப்பிற்குள் வருவதற்கு முன்பே) அவர் என்ன புடவை கட்டிக் கொண்டு வந்திருக்கிறார், என்ன பூ வைத்துக் கொண்டிருக்கிறார் என்ற செய்திகள் வந்துவிடும். அவர் பள்ளிக்குள் நுழையும்போதே அவரைப் பார்த்து இந்தச் செய்திகளை சேகரித்து எல்லா வகுப்புகளுக்கும் அனுப்ப ஒரு படையே வாசலில் நின்று கொண்டிருக்கும்.

 

இப்போது இந்தக் கதை எதற்கு என்கிறீர்களா? பதினாறு வயதில் பார்த்துப் பரவசப்பட்ட தேவதையை ஐம்பது வருடங்களுக்குப் பிறகு பார்த்தால் எப்படி இருக்கும்? இதெல்லாம் நடக்குமா என்று சந்தேகம் கூட உங்களுக்கு வரலாம். ஆனால் எங்கள் சந்திப்பு நடந்தது. பேஸ்புக் மூலம் ஜெயா ரங்கராஜன், சுந்தரி ஹரன் இருவரும் சல்லடை போட்டுத் தேடி பல தோழிகளைக் கண்டுபிடித்தனர். அதில் நானும் ஒருத்தி. பிறகு எங்கள் ஆசிரியை யாரையாவது கண்டுபிடிக்க முடியுமா என்று மறுபடி சல்லடையை எடுக்க அகப்பட்டார் எங்கள் தேவதை லலிதா டீச்சர். ஆஹா! உடனே சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள் ஜெயாவும், சுந்தரியும். புரசைவாக்கம் உள்ளூர் செய்தித்தாளில் லேடி எம்.ஸி.டி. எம் பள்ளியின் 1969 ஆம் வருட மாணவிகள் சந்திக்க இருப்பதாக அறிவிப்பு கொடுக்க இன்னும் நிறைய பேர்கள் சந்திக்க ஆவலைத் தெரிவித்தனர். எங்களுக்கு முன்னும் பின்னும் அந்தப் பள்ளியில் படித்த பல மாணவிகள் லலிதா டீச்சரைப் பார்க்க விருப்பம் தெரிவித்தனர். அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்குத் தகவல் கொடுத்து வரச் சொன்னார்கள். அப்படி இப்படியென்று ஒரு நாற்பது பேர் சேர்ந்துவிட்டோம். தானாகச் சேர்ந்த கூட்டமுங்கோ இது. லலிதா டீச்சரைப் பார்க்க சேர்ந்த கூட்டம்! இந்தக் கூட்டத்தில் ஒரு விஐபி யும் உண்டு. அவர்தான் லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் திருமதி கிரிஜா ராகவன். எங்களுக்கு ஒருவருட ஜூனியர் அவர்.

 

நான் பெங்களூரிலிருந்து போக வர பயணச்சீட்டு வாங்கினேன். இது ஒன்றுதான் நான் செய்தது. மற்ற ஏற்பாடுகள் எல்லாம் சென்னையிலிருந்த ஜெயாவும் மும்பையிலிருந்த சுந்தரியும் செய்தனர். அவர்களிடமிருந்து வந்த கட்டளைகளை நிறைவேற்றுவதில் நாராயணி, கெளரி, பானு இவர்கள் முக்கியப் பங்காற்றினார்கள். லலிதா டீச்சரை கூட்டிக் கொண்டு வந்து சந்திப்பு முடிந்தவுடன் திருப்பிக் கொண்டு விடுவதை சுந்தரி தன் தலையாய கடமையாகச் செய்தாள். எத்தனை பெரிய பாக்கியம்!

 

எல்லோரும் கூடினோம். ஐம்பது வருடங்கள் எங்களையெல்லாம் நிறைய மாற்றியிருந்தது. எங்களுக்குள் டாக்டர்களும், அரசு ஊழியர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்களும் இருந்தனர். வாழ்க்கையில் மாமியார்களாகவும் பாட்டிகளாகவும் ஆகியிருந்தோம். ஆனாலும் அன்று அத்தனை பேர்களும் பதினாறு வயதுப் பெண்களாகவே மாறியிருந்தோம். ஒவ்வொருவருக்கும் பேசி மாளவில்லை. ஒவ்வொருவராக அறிமுகம் செய்துகொண்டோம். எங்கள் அன்பிற்குரிய லலிதா டீச்சருடன் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளை ஒருவர் விடாமல் நினைவு கூர்ந்தோம்

 

எங்கள் நாட்டியத் தாரகை நாராயணி, பாடும் நிலா பானு (நகுமோமு புகழ்!) என்று பலரும் தங்கள் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். லலிதா டீச்சரைத் தவிர பள்ளி அலுவலகத்தில் பணி புரிந்த திருமதி முத்துலட்சுமி, திருமதி மங்கை ஆகியோரும் இந்தக் சந்திப்பிற்கு வந்திருந்தனர்.

 

டீச்சரும் எங்கள் ஒவ்வொருவரையும் நினைவில் கொண்டு வந்து எங்களுடன் பேசினார். அதுதான் அதிசயம். அவருக்கு ஆயிரம் ஆயிரம் மாணவிகள். அப்படியும் நாங்கள் சம்மந்தப்பட்ட சில சிறப்பு நிகழ்வுகளை அவர் நினைவில் வைத்துக்கொண்டு பேசியது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், இந்தப் பிறவி எடுத்ததன் பலன் கிடைத்தாற்போலவும் இருந்தது என்றால் மிகையில்லை.

1969 ஆம் வருட மாணவிகள் அவரை அழைத்துக்கொண்டு மதிய உணவிற்குச் சென்றோம். பிறகு அவரை அவருடைய இல்லத்திற்கு கொண்டு போய் விட்டுவிட்டு கிளம்பும்போது அவரது காலில் விழுந்து வணங்கினோம். எங்கள் கண்கள் மட்டுமல்ல, டீச்சரின் கண்களும் கலங்கிவிட்டன.

இந்த ஆசிரியர் தின நன்னாளில் எங்களுக்கு கல்வி அறிவைத் தந்த அத்துணை ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது நமஸ்காரங்கள்.

அகநக நட்பு

அகநக நட்பு பாகம் 2

அகநக நட்பு  பாகம் 1

 

என்ன நாடகம் போடலாம் என்று எங்களுக்குள் பலத்த வாக்குவாதம். கடைசியில் ஏகமனதாக சிலப்பதிகாரம் போடலாம் என்று முடிவு செய்தோம். இந்த முடிவுக்கு வர மிகப்பெரிய காரணம் பத்தாம் வகுப்புப் புத்தகத்தில் இந்த நாடகம் இருந்தது தான். புதிதாக நாடகம் எழுதுவது என்பது எங்கள் யாருக்குமே கை வராத கலை! என் அக்காவும், அம்முடுவின் அக்கா லல்லு என்கிற லலிதாவும் அப்போது நேஷனல் கேர்ள்ஸ் ஹைஸ்கூலில் பத்தாவது படித்துக் கொண்டிருந்தனர். அதனால் அந்த நாடகத்தைத் தேர்ந்தெடுத்தோம். பாண்டியன் அரசவையில் கண்ணகி நீதி கேட்கும் காட்சி மட்டும் இருந்தது பாடப்புத்தகத்தில்.

 

யார் யார் என்ன என்ன பாத்திரத்தில் நடிப்பது என்பதும் பெரிய சண்டையுடன் முடிவு செய்யப்பட்டது. எனக்கு கண்ணகியாக நடிக்க வேண்டும் என்று ஆசை. நான் இதைச் சொன்னவுடன் எல்லோரும் சிரித்தனர். நான் அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ‘ச்சே! நீ ரொம்ப சின்னவடி….!’ என்று ஒருமனதாக எல்லோராலும் ஒதுக்கப்பட்டேன். எனக்கு ஒரே கோவம். என் அண்ணா என்னை சமாதானப்படுத்தினான். ‘நீ பாண்டிய ராணியாக நடி. ராணின்னா கிரீடம் வைச்சுக்கலாம்; கால்ல சிலம்பு போட்டுக்கலாம். அம்மாவோட பட்டுப்புடவையைக் கட்டிக்கலாம். கண்ணகி பாரு தலையை விரிச்சுப் போட்டுண்டு வரணும். நீ அழகா ராணியா நடி. சூப்பரா இருக்கும்’ என்றான். அந்த சமாதானத்தை என்னால் ஏற்கமுடியவில்லை என்றாலும் அம்முடுவிடமிருந்து கண்ணகி பாத்திரத்தை வாங்க முடியாது என்று தெரிந்தது. கிடைத்த வேஷத்தை ஒத்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். அன்றிலிருந்து அம்முடுவைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். பேசுவதையும் நிறுத்தினேன். அந்தக் கோபதாபங்களை இப்போது நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. பாண்டிய ராஜாவாக அம்முடுவின் தம்பி குமார்.

 

எல்லோரும் வசனங்களை நெட்டுரு போடத்துவங்கினோம். புத்தகத்தைப் பார்த்து அவரவர் பகுதிகளை எழுதிக்கொண்டோம். அம்முடு என்னிடத்தில் வந்து ‘உன் கையெழுத்து நன்றாக இருக்குடி. எனக்கு என் வசனங்களை எழுதிக்கொடுடி’ என்று சமாதானக்கொடி காண்பித்தாள். நானும் என் கோபத்தை மறந்து அவளுக்காக இன்னும் அழகாக எழுதிக் கொடுத்தேன்.

 

என் அம்மா தான் இயக்குனர். எல்லோரும் வசனங்களை நெட்டுரு பண்ண ஒருவாரம் ஆயிற்று. அதிலும் அம்முடுவின் வசனங்கள் தான் மிகவும் கடினமாக இருந்தது. அவள் பேசுவதைப் பார்த்த போது அப்பாடி, நான் தப்பித்தேன் என்று நினைத்துக் கொள்வேன். என் அம்மாவிடம் எல்லோரும் வசனங்களை ஒப்பித்துக் காண்பித்தோம். எங்கள் எல்லோருக்கும் எல்லா வசனங்களும் மனப்பாடம் ஆகிவிட்டிருந்தது. நடிப்பு தான் வரவில்லை. அதுவும் முகத்தில் கோபம் வரவேண்டும்; கையை இப்படி நீட்டிப் பேசவேண்டும். தலையை திருப்பி அவ்வப்போது பார்வையாளர்களைப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் அம்மா எங்களுக்குப் பயிற்சி கொடுத்த வண்ணம் இருந்தாள். முகத்தில் பாவம் வந்தால் வசனம் தடைப்பட்டுப் போகும். பள்ளிப்பாடங்களை மனப்பாடம் செய்து செய்து பழகியதால், வசனங்களை மடமடவென்று சொல்லிக்கொண்டே போவது எல்லோருக்குமே எளிதாக இருந்தது பாவங்களுடன் பேசுவது கடினமாக இருந்தது.

 

எங்களில் அம்முடுவுக்குத்தான் கடுமையான ஒத்திகை. வாயில் நுழையாத  வசனங்களை முகத்தில் பாவத்துடன் பேசுவதற்கு மறுபடி மறுபடி பயிற்சி செய்ய வேண்டியிருந்தது. ஒரு கையில் சிலம்பை ஏந்தியிருப்பது போல கையை வைத்துக்கொண்டு பேசும்படி எங்கள் அம்மா சொன்னாள். கடைசி காட்சியில் சிலம்பை ஓங்கி தரையில் அடிக்க வேண்டும். ஒருநாள் அழுது கொண்டே ‘எனக்கு கண்ணகி பாத்திரம் வேண்டாம்……!’ என்று பின்வாங்கினாள். என் அம்மாவும், அவளது அம்மாவும் சேர்ந்து சமாதானப்படுத்தி, தைரியமூட்டி மறுபடியும் அவளைத் தயார் செய்தனர். வசனங்களைப் பேசிப்பேசி அம்முடுவிற்கு தொண்டை கட்டிக்கொண்டு விட்டது. சுக்குக் கஷாயம், அதைத்தவிர டாக்டரிடம் போய் மருந்து என்று வாங்கி வந்து வேளாவேளைக்கு மருந்துகளைக் கொடுத்து அவளைச் சரி செய்தார்கள் அம்மாவும் விமலா மாமியும். அவளுக்கு இரண்டு நாட்கள் முழு ஓய்வும் கொடுக்கப்பட்டது.

 

ஒருவழியாக அந்த நல்ல நாளும் வந்தது. எங்கள் வீட்டுக் கூடம் தான் அரங்கு. சதாசிவம் மாமா தலைமை வகித்தார். ஊரிலிருந்து வந்திருந்த என் மாமா அழகாக ஒரு மேடையைத் தயாரித்தார். எங்களுக்கு ஒப்பனையும் செய்துவிட்டார். கிரீடம், சிலம்பு, ராஜாவின் உடைவாள் எல்லாம்  மாமாவின் கைத்திறமையால் வெகு சிறப்பாகத் தயாரிக்கப்பட்டன. எந்தவிதத் தடங்கல்களும் இல்லாமல் எல்லோருமே அவரவர் பங்கைச் சரியாகச் செய்தோம். பாண்டிய ராஜா தான் நடுநடுவில் வசனங்களை மறந்து போனார். எனக்கும் அந்த வசனங்கள் தெரியுமாதலால் நான் அவ்வப்போது எடுத்துக் கொடுத்தேன். ராஜா சமாளித்தார்.

 

கண்ணகியாகவே மாறியிருந்தாள் அம்முடு. அபாரமாக நடித்தாள். கடைசி காட்சியில் அம்முடு நிஜமாகவே உணர்ச்சி வசப்பட்டு அழுதே விட்டாள். அனைவரின் கைத்தட்டலும் அவளை நிஜ உலகிற்குக் கொண்டு வந்தது. பாண்டிய மன்னன் நீதி தவறிவிட்டேன் என்று சொல்லி கீழே விழுந்து உயிரை விட, ராணியும் அழுது கொண்டே உயிரை விட நாடகம் சுபமாக முடிந்தது.

 

இந்த நாடகத்தினால் இன்னொரு பலனும் கிடைத்தது. அத்தனை நாட்கள் ஒருவருடன் ஒருவர் ஏதோ ஒரு விஷயத்திற்கு சண்டை போட்டுக்கொண்டிருந்த நானும் அம்முடுவும் மிகவும் நெருக்கமானவர்கள் ஆனோம். எங்களுக்கிடையே  புதுவிதப் புரிதல் ஏற்பட்டிருந்தது. நாடகத்திற்காக உதவி செய்ததை அதன் பிறகும் தொடர்ந்தோம். அடுத்த ஆண்டு என்ன நாடகம் போடலாம் என்று கூட யோசிக்க ஆரம்பித்திருந்தோம். ஆனால் நாங்கள் எங்கள் வீட்டை புரசைவாக்கத்திற்கு மாற்றிக் கொண்டு வந்துவிடவே, எங்கள் நட்பு திருவல்லிக்கேணியுடன் முடிந்துவிட்டது.

 

எத்தனை நேரம் இப்படியே பழைய நினைவுகளுடன் உட்கார்ந்திருந்தேனோ, வாசலில் மணி அடிக்கவே எழுந்து போய்க் கதவைத் திறந்தேன். கூரியர் வந்திருந்தது. வாங்கி வைத்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தேன். மறுபடியும் அம்முடு மனதில் வந்து நின்றாள்.

 

அசோக்நகரில் அவளை எங்காவது பார்ப்பேன் என்ற என் எண்ணம் பலித்தே விட்டது. ஒருநாள் 11 வது அவென்யூவில் இருக்கும் பழமுதிர்சோலைக்கு கணவருடன் சென்றிருந்தேன். காய்கறிகள் வாங்கிக்கொண்டு திரும்பும்போது எங்கள் எதிரில் இரண்டு பெண்மணிகள் வந்து கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட என் வயது இருந்த பெண்ணைப் பார்த்ததும் மனதில் ஒரு மின்னல். அவளும் என்னைப் பார்த்தாள். நான் சட்டென்று, ‘ஏய்! நீ அம்முடு தானே?’ என்று கேட்ட அதே நொடி அவளும், ‘நீ ரஞ்சனி தானே?’ என்றாள்.

 

என் மனம் முழுக்க மகிழ்ச்சி பொங்க அவள் கைகளைப் பிடித்தேன். ‘எப்படி இருக்கே? எவ்வளவு வருஷம் ஆச்சு உன்னைப் பார்த்து? நீ இங்கதான் இருக்கேன்னு என் அக்கா ரமா சொன்னாள். என்னிக்காவது உன்னைப் பார்ப்பேன்னு நினைத்தேன். அதேபோல இப்போது பார்த்துவிட்டேன்’. பேசிக்கொண்டே போன என்னை ஏறஇறங்கப் பார்த்தாள். ‘என்ன நீ இப்படி குண்டாயிட்டே?’ என்றாள் முகத்தை சுளித்தபடியே. ஒரு கணம் மனம் சட்டென்று வாடியது. அம்முடு தன் பக்கத்தில் இருந்த பெண்மணியைப் பார்த்து, ‘சித்தி! இவ ரஞ்சனி. திருவல்லிக்கேணி கானாபாக் லேனில் எங்களுடன் குடியிருந்தாளே கமலம் மாமி, நினைவிருக்கா? அந்த மாமியின் பெண்’.

 

அப்போதுதான் எனக்கு நினைவிற்கு வந்தது, அது விமலா மாமியின் தங்கை மாதவி  என்று. ‘அட! மாதவி சித்தியா? அம்முடுவைப் பார்த்த சந்தோஷத்தில் உங்களை கவனிக்கவே இல்லை. நீங்களும் அசோக் நகரில் தான் இருக்கிறீர்களா?’ என்றேன். அம்முடு என்னைப் பேசவிடாமல், ‘பாருங்களேன், எப்படிப் பெருத்துப் போயிருக்கிறாள்! சே! என்ன இப்படி ஆயிட்ட?’ என்றாள் மறுபடியும்.

 

‘அதைவிடு, நீ எப்படி இருக்கிறாய்? அம்மா சௌக்கியமா? அதையெல்லாம் சொல்லு’ என்றேன். அவளது பேச்சில் மனம் புண்பட்டிருந்ததை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சகஜமாக இருக்க முயன்றேன். கண்களில் எட்டிப் பார்த்த கண்ணீரை வெளியே வந்துவிடாமல் சமாளித்தேன்.

 

‘அதெல்லாம் அப்புறம் சொல்றேன். நீ ஏன் இப்படி ஆயிட்ட? என்னால நம்பவே முடியல……அதுவும் இத்தனை குண்டா……!’

 

பக்கத்தில் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த என் கணவர் என் கையைப் பிடித்தார். ‘பேசுவதற்கு வேறு விஷயமில்லை என்றால் கிளம்பலாம், வா!’ அப்போதுதான் அவர் என்னுடன் இருந்ததே நினைவில் வந்தது. பேச்சை மாற்ற அம்முடுவை அவருக்கு அறிமுகப்படுத்த ஆரம்பித்தேன்.

 

‘இவ…….இவ…….தான் என் சின்ன வயதுத் தோழி அம்முடு. நான் சொல்வேனே திருவல்லிக்கேணியில் நாடகம் எல்லாம் போடுவோம்னு…….’ என்றவளை மேலே பேசவிடாமல் தரதரவென்று கையைப் பிடித்து அழைத்துச் செல்லத் தொடங்கினார்.

 

அம்முடு என்னைக் கூப்பிடுவாள் என்று அந்த நிலையிலும் ஒரு சின்ன ஆசை என் மனதில் தோன்றியதை இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

 

வீடு வரும் வரை இருவரும் மௌனமாகவே வந்தோம். இந்தச் சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. பலநாட்கள் நினைத்து நினைத்து வருந்திக் கொண்டிருந்தேன். மிகுந்த  ஆவலுடன், எத்தனை விஷயங்கள் அவளுடன் பேச வேண்டும் என்று இந்த சந்திப்பிற்காகக் காத்திருந்தேன்! அவளுக்கு என்னைப் போன்ற ஆவலாதிகள் இருந்திருக்காதோ?

 

ஏன் அவள் என் உருவத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாள்? நான் பெருத்துவிட்டது உண்மைதான். ஆனால் நட்பு என்பது இதையெல்லாம் கடந்தது இல்லையோ? ஜெயாவும், ஜெயந்தியும் என் உடல் பருமன் பற்றி பேசுவார்கள்.. ஆனால் உற்ற தோழிகளாக என் நலத்தின் மேல் அக்கறை உள்ளவர்களாக அறிவுரை கூறுவார்கள். சென்ற தடவை ஜெயந்தி சென்னை வந்திருந்த போது எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பூங்காவிற்குப் போய் ஒருமணி நேரம் நடந்துவிட்டு வந்தோம். ‘தினமும் இதுபோல நடைப்பயிற்சி செய். உடம்பிற்கு நல்லது’ என்று சொன்னாளே தவிர என் உருவத்தை பற்றி ஒருநாளும் என் மனம் புண்படப் பேசியதில்லை.

 

ஒருவரது உருவத்தைக் கேலிசெய்வது தவறு என்று அறியாதவளா அம்முடு? அதுவும் பல வருடங்கள் கழித்து சந்திக்கும்போது இப்படிப் பேசுவார்களா? எனக்கு நினைக்க நினைக்க இன்றும் கூட மனம் ஆறவில்லை. சிலர் மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவேன் என்று சொல்லுவார்கள். அம்முடுவும் பட்பட்டென்று பேசுபவள் தான். இருக்கட்டுமே. என்னுடன் சுமுகமாக இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு, பிறகு இப்படியாகி விட்டாயே என்று கேட்டிருக்கலாம்.

 

பலவருடங்கள் கழித்து சந்திக்கும்போது என் உருவம் தான் அவள் கண்ணுக்குத்  தெரிந்ததோ? எங்களிடையே உண்மையான நட்பு இருப்பதாக நான் தான் நினைத்துக் கொண்டிருந்தேனோ? எங்களிடையே அகநக நட்பு என்றைக்குமே இருக்கவில்லையோ? வெறும் முகநக நட்பு தான் நிலவி வந்ததோ?

 

என் அலைபேசி மணி என் நினைவுகளைக் கலைத்தது. என் பேரன் தேஜஸ் தான் கூப்பிடுகிறான். அவனக்கும் கரண் பரத்வாஜுக்கும் இடையேயான நட்பு எப்படிப் பட்டதாக இருக்கிறதோ, தெரியவில்லை. பாவம் மிகவும் சின்னவன். இருவரது நட்பும் அகநக நட்பாகவே இருக்கட்டும் என்ற பிரார்த்தனையுடன் அலைபேசியை எடுத்தேன்.

அகநக நட்பு

 

 

 

 

friends

 

அகநக நட்பு பாகம் 1

‘நான் சென்னைக்கு வந்ததே என் சிநேகிதன் கரண் பரத்வாஜை பார்க்கத்தான், பாட்டி!’

பெங்களூரிலிருந்து வந்திருந்த என் பேரன் தேஜஸ் குரலில் இருந்த உற்சாகம் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. இருந்தாலும் அவனை சீண்டும் குரலில் கேட்டேன்:

‘ஏண்டா! என்னைப் பார்க்க வரவில்லையா?’

‘அதில்லை பாட்டி! உன்னைப் பார்ப்பதில், உன் கை சமையலை ருசிப்பதில் எனக்கு எப்பவும் ஆர்வம் உண்டு. இந்த தடவை இவையெல்லாவற்றையும் விட சந்தோஷமான விஷயம் கரண் சென்னையில் இருக்கிறான் என்பது தான். உனக்குக் கரண் தெரியுமில்லையா?’

 

‘ஓ! நன்றாகத் தெரியும். உன்னோட கூடப் படித்தவன் தானே? இருவரும் எல்கேஜியிலிருந்து தோழர்கள் ஆயிற்றே!’

 

‘ஆமாம் பாட்டி! பத்தாம் வகுப்பு வரை நானும் அவனும் ஒரே பள்ளிக்கூடம் தான். ப்ளஸ் ஒன் படிக்கும்போது நானும் அவனும் வேறு வேறு  ஸ்கூலில் சேர்ந்துவிட்டோம். நடுவில் ஒரே ஒரு முறை அவனை ஒரு வினாடி வினா நிகழ்ச்சியில் பார்த்தேன். பிறகு அவனுடன் தொடர்பு விட்டே போய்விட்டது. இப்போது சமூக வலைத்தளம் மூலம் அவன் சென்னையில் இருப்பது தெரிய வந்தது.  வாட்ஸ்அப்பில் அரட்டை அடித்தாலும், நேரில் பார்க்கும் சந்தோஷம் வருமா?’

 

அவனுடைய இந்த வயதில் நட்பு என்பது மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடிய ஒன்றுதான். நானும் இந்த வயதினை தாண்டி வந்தவள் ஆகையால் எனக்கும் அவனது உற்சாகம் புரிந்தது. எனக்கும் பள்ளிப்பருவத்தில் நிறைய தோழிகள் உண்டு. ‘இவளைச் சுற்றி எப்பவும் பத்துபேர்! பைத்தியத்தை சுற்றி பத்துப்பேர் என்பார்களே, அதுபோல..!’ என்று என் அக்கா என் அம்மாவிடம் என்னைப் பற்றிப் புகார் கூறும் அளவிற்கு பள்ளியில் தோழிகள். எல்லாம் பள்ளிவரை தான். என்னுடன் படித்தவர்கள் எல்லாம் கல்லூரிக்குப் போக நான் மட்டும் கையில் வெள்ளைப் பேப்பரைச் சுற்றிக் கொண்டு புரசைவாக்கம் ‘மீனா இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ்’ போனேன் – டைப் ரைட்டிங், ஷார்ட்ஹேண்ட் கற்றுக் கொள்ள. அந்தக் காலத்தில் எஸ்எஸ்எல்ஸி மற்றும் டைப்பிங், ஷார்ட்ஹாண்ட் தகுதி இருந்தால் ஸ்டெனோக்ராபர் வேலை எளிதாகக் கிடைத்துவிடும். எனக்கும் கிடைத்தது. பள்ளித் தோழிகள் எல்லாம் காலப்போக்கில் நினைவிலிருந்தும் மறைந்தே போனார்கள்.

 

என்னுடைய பதின்மவயதுத் தோழிகள் என்று இன்றும் என்னுடன் தொடர்பில் இருப்பவர்கள் இரண்டு பேர்கள்தான். ஜெயா மற்றும் ஜெயந்தி. ஜெயா உடனான நட்பு மறைந்ததே இல்லை. இருவரும் ஒரே பள்ளி. என்னுடன் அவளும் மீ.இ.கா –விற்கு கையில் வெள்ளைப் பேப்பருடன் வந்தவள். எங்கள் இருவருக்கும் ஒரே அலுவலகத்தில் வேலை. அதனால் எங்கள் இருவருக்கும் திருமணம் ஆன பிறகும் நட்பு தொடர்ந்தது. எனக்கும் அவளுக்கும் இடையே இருந்த ஆழமான புரிதலினால் இருவரும் அடிக்கடி பேசிக் கொள்வதில்லை என்றாலும் கூட மனதிற்குள் ஒரு நெருக்கம் இருந்தது. பல மாதங்கள் பேச மாட்டோம்; சந்தித்துக் கொள்ள மாட்டோம்.  ஆனாலும் எப்போது தொலைபேசியில் பேசினாலும், ஏதோ நேற்றுத்தான் பேசி முடித்தது போல இயல்பாக தொடரும் எங்கள் பேச்சு. ஒருவரையொருவர் குற்றம் சொல்லவே மாட்டோம். அவரவர் வீட்டு விசேஷங்களில் இருவரும் நிச்சயம் சந்தித்து கொள்வோம்.

 

ஜெயந்தி எனது பேருந்துத் தோழி. அவளது அலுவலகத்தைத் தாண்டி என் அலுவலகம். காலையில் நான் சீக்கிரம் அலுவலகத்திற்கு வந்துவிடுவேன். மாலை வேளைகளில் மட்டும் இருவரும் ஒரே பஸ்ஸில் வருவோம். இருவருக்குமே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அலுவலகம். நான் எந்த பேருந்தில் வருகிறேன் என்று பார்த்துவிட்டு அதில் ஏறுவாள் அவள். அவள் ஏறும் நொடியிலிருந்து பேச ஆரம்பிப்போம். புரசைவாக்கம் தாசப்ரகாஷ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இருவரும் தொடர்ந்து பேசிக்கொண்டே அவரவர் இல்லங்களுக்குச் செல்வோம். முதலில் எங்கள் வீடு வரும். எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்போம். விடுமுறை நாட்களில் இருவரும் கங்காதரேச்வரர் கோவில், புரசைவாக்கம் டேங்க் என்று சுற்றிக் கொண்டே பேசுவோம்; பேசிக்கொண்டே சுற்றுவோம். எனது திருமணத்திற்குப் பிறகு நான் புரசைவாக்கத்திலிருந்து அசோக் நகர் போய்விட்டதால் ஜெயந்தியுடனான என் நட்பு புரசைவாக்கத்திலேயே தங்கி விட்டது.

 

ஆனால் என்ன அதிசயம் எங்கள் நட்பில் என்றால் 33 வருடங்களுக்குப் பிறகு எனது எழுத்தின் மூலம் அவளை மறுபடியும் சந்தித்தேன். எனது வலைத்தளத்திற்கு யதேச்சையாக வந்து படித்துவிட்டு, ‘புரசைவாக்கம் ரஞ்சனி தானே நீ?’ என்று கேட்டு எழுதியிருந்தாள். விட்டுப் போன நட்பை தொலைபேசி மூலம் தொடர்ந்தோம். நேரிலும் சந்தித்தோம்.

 

நாங்கள் இருவரும் மீண்டும் சந்தித்த அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அவள் அப்போது பெங்களூரில் இருந்தாள். அவளுக்கு சென்னை புதிதல்ல என்றாலும் அவள் என் வீடு வரும் வரை எனக்குப் பொறுமையில்லை. அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் சென்ட்ரல் ஸ்டேஷனுக்குச் சென்றேன். அவள் வரும் சதாப்தி ரயில் சென்ட்ரலில் நுழைந்ததுமே என் பரபரப்பு அதிகமானது. அவள் இறங்கும் வரை காத்திருக்காமல் அவள் சொல்லியிருந்த கம்பார்ட்மெண்டில் நானே ஏறிப் போய்ப் பார்த்தேன். அவள் இல்லை. கடைசி நிமிடத்தில் பிரயாணத்தை ரத்து செய்துவிட்டாளோ, இல்லை வேறு ஏதாவது காரணத்தால் வரமுடியாமல் போய்விட்டதோ என்று மனது அலைபாயத் தொடங்கியது.

 

ரயிலில் அவளைக் காணாமல் ஏமாற்றத்துடன் இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தபோது அவள் அடுத்த கம்பார்ட்மெண்டிலிருந்து இறங்குவது தெரிந்தது. ‘ஜெயந்தி!’ என்று கூவியவாறே ஓடிப்போய் அவளை அணைத்துக்கொண்டேன். அப்பா! அவளைப் பார்த்துவிட்டேன்! என்ன ஒரு ஆசுவாசம்! எங்களது 33 வருடப் பிரிவையும் அந்த ஒரே அணைப்பில் தீர்த்துக் கொள்ளப் பார்ப்பது போல இருவரும் அந்த அணைப்பின் இறுக்கத்தில் நெகிழ்ந்து போயிருந்தோம்.

 

‘என்ன பாட்டி! பழைய நினைவுகளா?’ பேரனின் குரலில் நிஜ உலகிற்கு வந்தேன். குளித்துவிட்டு வெளியில் கிளம்பத் தயாரான நிலையில் இருந்தான்.

சிரித்துக் கொண்டே, ‘ஆமாம்டா!’ என்றேன்.

‘கரணை அழைத்துக் கொண்டு மெரீனா பீச் போகவேண்டும்; கன்னிமாரா போக வேண்டும். அவனும் என்னை மாதிரி தான் நிறைய புத்தகங்கள் படிப்பான்……!’

என்னைப்போலவே பேரனும் தனது தோழனின் நினைவிலேயே திளைத்துக் கொண்டிருப்பது புரிந்தது.

‘டிபன் சாப்பிட வா முதலில். எப்போது அவனைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருக்கிறாய்?’

‘அவன் அசோக் நகரில் இருக்கிறான். நான் மதிய உணவிற்கு அவனை சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறேன்….’

‘அசோக் நகரிலா?’

‘ஆமாம் பாட்டி? அசோக் நகர் பில்லர் அருகில் தான் அவனது அலுவலகம் இருக்கிறது……..’

நான் யோசனையுடன், ‘ஓ!……….’ என்றேன்.

‘என்ன பாட்டி! அசோக் நகரில் உன் தோழிகள் யாராவது இருக்கிறார்களா? மறுபடியும் பழைய நினைவுகளுக்குள் போய்விட்டாயா? சரி, சாயங்காலம் நான் வரும்வரை மலரும் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிரு. நான் என் சிநேகிதனைப் பார்த்துவிட்டு வருகிறேன்…’ என் பதிலுக்குக் கூட காத்திருக்காமல் உற்சாகத்துடன் வெளியேறினான் தேஜஸ்.

 

திருமணம் ஆகி நான் வந்து சேர்ந்த இடம் அசோக் நகர். அங்கு எதிர்பாராதவிதமாக அம்முடுவை சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. என் அக்காவின் மூலம் தான் விமலா மாமி, சதாசிவம் மாமா குடும்பம் அசோக்நகரில் இருப்பது எனக்குத் தெரிய வந்தது. மாமா இல்லை. மாமி மட்டும் அம்முடுவுடன் இருக்கிறாள் என்று என் அக்கா சொன்னாள். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று சரியாக அக்காவிற்கும் தெரியவில்லை.

 

கணவருடன் வெளியே போகும்போதெல்லாம் என் கண்கள் என் பால்யகால சிநேகிதியைத் தேடும். திருமணத்திற்குப் பிறகு நான் நிறைய மாறிவிட்டேன். அது போலவே அவளும் மாறியிருக்கலாம், இல்லையா? இத்தனை வருடங்களுக்குப் பின் பார்த்தால் அடையாளம் தெரியுமா? நிச்சயம் தெரியும் என்று எனக்குள் ஒரு அசையாத நம்பிக்கை!

 

விமலா மாமியின் இரண்டாவது பெண் தான் அம்முடு என்கிற கல்யாணி. நாங்களும் அவர்களும் திருவல்லிக்கேணியில் ஒரே வீட்டில் பக்கத்துப் பக்கத்து போர்ஷனில் பல வருடங்கள் இருந்தோம். அவர்கள் வீட்டில் நான்கு குழந்தைகள் – மூன்று பெண்கள் ஒரு பிள்ளை; நாங்களும் நால்வர் –  இரண்டு பிள்ளைகள்; இரண்டு பெண்கள். நாங்கள் எல்லோருமே பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம். பள்ளி முடிந்து மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் நாங்கள் எட்டு பேரும் அடித்த லூட்டிகள் இப்போது நினைத்தாலும் இனிப்பவை.

 

அதுவும் அம்முடுவை யாராலும் மறக்க முடியாது. பிற்காலத்தில் சரிதாவின் திரைப்படங்களைப் பார்க்கும்போது எனக்கு அம்முடு நினைவுதான் வரும். பெரிய கண்கள். குண்டுக் கன்னங்கள். படபடவென்று வாய் ஓயாத பேச்சு. சரிதா போலவே சற்று இரட்டைநாடி அம்முடுவும். சுருட்டைத் தலைமுடி. சுருட்டைத் தலைமுடி என்றால் பொதுவாக குட்டையாகத்தான் இருக்கும். ஆனால் அம்முடுவிற்கு முழங்காலுக்குக் கீழ் தொங்கும். அவளுக்குத் தலைவாரிப் பின்னுவது என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. அதுவும் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வந்தால் என் அம்மா மணிக்கணக்கில் அவளது கூந்தலை நிதானமாக இழைய இழைய வாரி, வாரி சிக்கெடுத்து மணிமணியாகப் பின்னி விடுவாள்.

 

அந்தக் கூந்தலுக்காகவே சிலப்பதிகாரம் நாடகத்தில் அவள் கண்ணகியாக நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். ஆ! இந்த நாடகம் நாங்கள் போட்டது மறக்க முடியாத ஒரு நிகழ்வு. வருடாவருடம் கோடை விடுமுறையில் எங்களைக் கட்டி மேய்ப்பது எங்கள் பெற்றோர்களுக்குப் பெரும் சவால். அதுமாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில் ஒருமுறை சதாசிவம் மாமா வீட்டில் இருந்த சமயம். நாங்கள் போடும் சத்தம் அவரை சற்றுக்கூட ஓய்வு எடுக்கமுடியாமல் செய்துவிட்டது. வந்து ஒரு சத்தம் போட்டார் பாருங்கள். நாங்கள் எல்லோரும் சகல நாடியும் அடங்கி உட்கார்ந்துவிட்டோம். சற்று நேரம் கழித்து அவரே எங்களை அழைத்தார். ‘இப்படி நேரத்தை வீணாக்கலாமா? ஏதாவது உருப்படியாகப் பண்ணுங்களேன்’ என்றார். நாங்கள் எல்லோரும் அவரே ஒரு ஐடியா கொடுக்கட்டும் என்று பேசாமல் அவர் முன்னே நின்று கொண்டிருந்தோம். இந்தக் காலம் போல சம்மர் கேம்ப், பாட்டு வகுப்பு, நடன வகுப்பு என்பதெல்லாம் அப்போது அபூர்வம். வீட்டிற்குள்ளேயே ரகளை செய்துகொண்டிருப்போம். மாமா சற்று நேர யோசனைக்குப் பிறகு ஏதாவது நாடகம் போடுங்கள் என்று சொன்னார். மாமாவே கலைத்துறையைச் சார்ந்தவர் தான். அதுவும் திரைப்படத்துறை கலைஞர்களுடன் நெருங்கிப் பழகுபவர். அவர் நாடகம் போடுங்களேன் என்று சொன்னதுதான் தாமதம் ‘ஓ’ என்று சந்தோஷக் கூச்சலிட்டோம்.

 

அடுத்த பகுதி நாளை……

 

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 25

 

 

மாணவர்கள் தான் நமது எதிர்காலம். அவர்களை உருவாக்குவதில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் சமபங்கு வகிக்கிறார்கள். பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் நல்லதொரு உறவு நிலவுவதால் மாணவர்கள் பெரும் பயன் அடைகிறார்கள்.

இரு சாராரும் இந்த உறவை வளர்க்க முன்வர வேண்டும்.

ஆசிரியர்களுக்குச் சில யோசனைகள்:

  • விடுமுறை முடிந்து பள்ளி திறந்தவுடன் புதிய மாணவர்களின் பெற்றோர்களைச் சந்தியுங்கள். ஏற்கனவே அறிமுகம் ஆன பழைய மாணவர்களின் பெற்றோர்களை பொதுவான சந்திப்பில் பார்த்துப் பேசலாம்.
  • உங்களை எப்படி எந்த நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என்று தெளிவாகச் சொல்லுங்கள்.
  • சுற்றி வளைத்துப் பேசாமல் சொல்லவந்ததை நேரடியாகப் பேசுங்கள்.
  • சந்திப்பின் போது முதலில் நல்லவற்றைப் பாராட்டுங்கள். பிறகு குறைகளைச் சொல்லுங்கள்.
  • மாணவர்களின் சின்னச்சின்ன நல்ல செயல்களை வகுப்பிலேயே மனமாரப் பாராட்டுங்கள். அவர்கள் மற்ற மாணவர்களுக்கு உதவும் போது, நல்ல மதிப்பெண்கள் வாங்கும்போது, வீட்டுப்பாடங்களை தவறாமல் செய்து கொண்டு வரும்போது உடனே பாராட்டுங்கள். அவற்றைப் பெற்றோர்களுக்குத் தெரிவியுங்கள். தொழில்நுட்பம் பெருகியுள்ள இந்த நாட்களில் இவையெல்லாம் சுலபமாகச் செய்யக் கூடியவையே. இவை பெற்றோர் ஆசிரியர் சந்திப்பின் போது உங்கள் வேலையை சுலபமாக்கும்.
  • பெற்றோரிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை முதல் சந்திப்பிலேயே சொல்லிவிடுங்கள்.
  • என்னென்ன பேசவேண்டும் என்பதை முன்கூட்டியே தயார் செய்து கொள்ளுங்கள். பெற்றோர் ஆசிரியர் சந்திப்பை நேர்மறை சிந்தனையுடன் ஆரம்பித்து நேர்மறையான முடிவுகளுடன் நிறைவு செய்ய இந்தத் தயார் நிலை உதவும்.
  • உங்கள் பிள்ளை நன்றாகப் படிக்க வேண்டும் என்று பொதுவாகச் சொல்லுவதை விட அவனது குறை எங்கிருக்கிறது என்று உதாரணங்களுடன் சொல்வது பெற்றோருக்கு உதவும்.
  • ஒவ்வொரு மாணவரும் தங்களது படிப்பு பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களையே எழுதச் சொல்லுங்கள். முதல் தேர்வை விட அடுத்த தேர்வில் மதிப்பெண்கள் அதிகம் அல்லது குறைந்து போக என்ன காரணம் என்று அவர்களே எழுதுவது பெற்றோருக்கும் தங்களது பிள்ளைகளைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தும். பெற்றோர் ஆசிரியர் சந்திப்பின் போது மாணவர்கள் எழுதியதை பெற்றோர்க்குக் காட்டுங்கள். இப்படிச் செய்வது ஆசிரியர் மாணவர்களைக் குறை கூறுகிறார் என்ற அவச்சொல்லை நீக்கும்.

 

 

பெற்றோர்களுக்குச் சில யோசனைகள்:

 

  • பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெறுவது உங்கள் கைகளில் இருக்கிறது.
  • நீங்களும் உங்களைத் தயார் செய்துகொண்டு போவது இந்த சந்திப்பை இனிமையானதாக ஆக்கும்.
  • ஆசிரியரைப் பற்றிய நல்ல விஷயங்களை முதலில் பேசிவிட்டு பின் உங்கள் குறைகளைப் பட்டியலிடுங்கள்.
  • உங்கள் பிள்ளையின் படிப்பு பற்றிய உங்கள் அக்கறையை, அவனது படிப்பில் உங்களுக்கு இருக்கும் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.
  • நேர்மறையான வாதங்களை முன் வையுங்கள். ஆசிரியரைக் குறை கூறுவதற்காக இந்த சந்திப்புகள் இல்லை என்பதை புரிந்து கொண்டு பேசுங்கள்.

 

 

 

பொதுவாகவே பெற்றோர்கள் ஆசிரியர்களுக்குப் பலவிதங்களில் உதவலாம்.

 

 

  • வீட்டுப்பாடங்களை சரிவர முடித்துக் கொண்டு போவது, அன்றைய பாடங்களை அன்றைக்கே படிக்கச் சொல்வது, பள்ளிக்கு நேரத்திற்குச் செல்வது என்று குழந்தைகளுக்கு தினமும் உதவலாம்.
  • பள்ளிகளில் விழாக்கள் வரும்போது அதாவது பெற்றோர்கள் தினம், குழந்தைகள் தினம், குடியரசு, சுதந்திர தினம் உங்கள் குழந்தைகளை அவற்றில் பங்குபெறச் செய்யுங்கள். குழந்தைகளுக்கு ஆடல் பாடல் சொல்லித் தருவது, ஒப்பனை செய்வது என்று உங்கள் பங்களிப்பும் இருக்கட்டும்.
  • உங்கள் குழந்தையின் படிப்பில் மட்டுமல்லாமல் மற்ற விஷயங்களிலும் நீங்கள் அக்கறை எடுத்துக் கொள்ளுகிறீர்கள் என்பதை இவை காட்டும்.
  • உங்கள் குழந்தைக்கு மட்டுமில்லாமல், மற்ற குழந்தைகளுக்கும் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.
  • பெற்றோர் ஆசிரியர் சந்திப்பிற்குத் தவறாமல் செல்லுங்கள். ஏதோ கடமைக்குப் போகாமல் உண்மையான அக்கறையைக் காண்பியுங்கள்.
  • உங்கள் குழந்தை படிக்கும் அதே வகுப்பில் படிக்கும் மற்ற குழந்தைகளின் பெற்றோர்களை அவ்வப்போது சந்தியுங்கள்.
  • உங்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் விடுமுறை எடுக்கும்போது இவர்களுடன் பேசி பள்ளியில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளலாம்.
  • பள்ளியில் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை எல்லோருமாக எடுத்துச் சொல்லலாம். இப்படிக் குழுவாக செயல்படுவதால் பள்ளி நிர்வாகிகளுக்கு பிரச்னையின் தீவிரம் புரியும். சட்டென்று தீர்வும் கிடைக்கும்.
  • ஒய்வு நேரங்களில் பள்ளிப் பிள்ளைகளுக்கு நல்ல கதைகளைச் சொல்லலாம். நல்ல புத்தகங்காய்ப் படித்துக் காட்டலாம். பள்ளியுடன் ஆன உங்கள் தொடர்பை இதுபோல நல்ல விஷயங்கள் மூலம் தொடருங்கள்.

கடைசியாக ஆசிரியர்களுக்கு ஒரு வார்த்தை: குழந்தைகளை கொடூரமாகத் தண்டிக்காதீர்கள், ப்ளீஸ்! ஒருநாள் செய்த தவறுக்காக அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்காதீர்கள், ப்ளீஸ்! உங்கள் குழந்தையாக இருந்தால் இப்படிச் செய்வீர்களா? உங்கள் குழந்தையை வேறு ஒருவர் இப்படி தண்டித்தால் உங்களால் தாங்கிக் கொள்ள முடியுமா? நீங்கள் கொடுக்கும் தண்டனையை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

தங்களது எதிர்காலத்தை உங்களிடம் ஒப்படைக்கும் மாணவர்களை கருணையுடன் நடத்துங்கள். எத்தனை மாணவர்கள் நம்மிடம் படிக்க வந்தாலும் ஓரிருவர் நம் மனதிற்குப் பிடித்தவராக இருப்பார்கள். அவருடன் நம் உறவு ஆசிரியர்-மாணவர் என்பதைத் தாண்டி வளரும்.

ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். அவர்களது சிந்தனைகளும் மாறிக்கொண்டே இருக்கும். அவர்களிடமிருந்தும் நாம் நிறையக் கற்கலாம்.

பெற்றோரும் ஆசிரியரும் இணைந்து உருவாக்கும் மாணவ சமுதாயம் நமது நாட்டை உயர்த்தும் எதிர்காலச் சந்ததியினர்.

பேசுவதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. கூடிய விரைவில் இன்னொரு கட்டுரைத் தொடர் மூலம் மறுபடியும் உங்களுடன் பேசுகிறேன்.

வணக்கம்.