மீண்டும் வசந்தம்

கொரானாவிற்கு முன்பு

காலை 8 மணி

‘எல்லாம் எடுத்துண்டயா?ஐடி, சாப்பாடு, வீட்டு சாவி…..?’

‘உம்….உம்….’ ஒவ்வொன்றாக சரி பார்த்துவிட்டு ஆபீஸிற்குப் பறப்பாள் என் மருமகள்.

‘அம்மாவுக்கு டாட்டா சொல்லு….’

பாதி தூக்கக் கலக்கத்தில் ‘தா…..த்தா……..’ என்பாள் என் பேத்தி.

‘ம்மா எங்க?….’ ‘அம்மா ஆபீஸ் போயிருக்கா. சீக்கிரமா வந்துடுவா. சரியா?

அப்போதுதான் எழுந்து வரும் அவளை இடுப்பில் வைத்துக்கொண்டு மருமகளை அனுப்பி வைப்பேன்.

குழந்தைக்கு பால் கொடுக்க அவளை சோபாவின் மேல் உட்கார வைத்து பேபி டீவியை போடுவேன்.

பேபி பட்டர்ஃப்ளை, லேடி எலிஃபண்ட், ஸர் ஹிப்போ பொடாமஸ், ஷீப் படா பீப் என்ற பேபி டீவி பாத்திரங்களுடன் நானும் என் பேத்தியும் கலந்து ஒன்றிவிடுவோம்.

‘யானை பாரு! ஓம் ஓம் நு யோகா பண்ணறது பாரு!’

ஹை! சூப்பீஸ்……. பாரு அந்த மின்மினிப் பூச்சி நிலாவோட சேர்ந்து புஸ்தகம் படிக்கறது…..சிரிக்கறது பாரு….!’

இப்படியாக பால் கொடுக்கும் படலம் அரை மணி நேரத்தில் முடியும்.

பிள்ளைக்கு டிபன் செய்து கொடுத்து மத்தியான சாப்பாடு கட்டி……. நான் இந்த வேலைகளை முடிப்பதற்குள் பிள்ளை குழந்தைக்குப் பல் தேய்த்து, குளிப்பாட்டி டிரஸ் பண்ணி முடிப்பான்.

பத்தரை மணிக்குப் பேத்திக்கு டிபன் ஊட்டும் படலம். இந்தமுறை யூடியூப். கண்மணி கண்மணி….. செல்லக்குட்டி கண்மணி…

பதினொரு மணிக்கு பணிப்பெண் வருவாள். உலர்ந்த துணிகளை மடித்து வைத்து காய்கறி நறுக்கி மேடையைத் துடைத்து பாத்திரங்களை அடுக்கி என்று அவள் பணிகளை முடிக்கவும் இன்னொரு பணிப்பெண் சிங்க்க்கில் இருக்கும் பாத்திரங்களைத் தேய்த்து வாஷிங் மெஷினில் இருக்கும் துணிகளை எடுத்து உலர்த்துவாள்.

இருவரும் கிளம்பவும் என் பிள்ளை ரெடியாகி ஆபீஸிற்குப் புறப்படுவான். ‘பாட்டி தாத்தாவை பத்திரமா பாத்துக்கோ’ என்பான். குழந்தையும் ரொம்பவும் புரிந்தது போல தலையை ஆட்டுவாள்.

அவனுக்கும் என் இடுப்பில் உட்கார்ந்தபடியே டாட்டா சொல்லுவாள் குழந்தை.

அப்பாடா! எல்லோரும் கிளம்பியாயிற்று. இனி நானும் என் பேத்தியும் மட்டும் தான். இனி எங்களுக்கே எங்களுக்கான நேரம் ஆரம்பம். அவளுடன் விளையாடி பாட்டுப்பாடி, சிரித்து, புத்தகங்கள் படித்து, கதை சொல்லி, மதியம் சாதம் ஊட்டி அவள் கண் சொக்கும்போது படுக்கையில் கொண்டு விட்டு கூடவே அவளைக் கட்டிக் கொண்டு சின்னதாக ஒரு தூக்கம் போட்டு எழுந்திருப்பேன். அதற்குள் காப்பி நேரம் வந்திருக்கும். கணவருக்கும் எனக்கும் காப்பி கலந்து கொண்டு வருவேன். அவளும் ‘அம்மா’என்று கூப்பிட்டுக் கொண்டு எழுந்து வருவாள். அவளுக்கு பழம் அல்லது பால் கொடுத்து காலையில் போட்ட உடையை கழற்றி முகம் துடைத்து அழகாக அலங்காரம் செய்து வேறு உடை அணிவித்து அம்மா வரும்போது குழந்தை அன்றலர்ந்த பூவாக இருப்பாள். என் மருமகள் எப்போதும் இரண்டு முறை காலிங் பெல் ஆடிப்பாள். உடனே குழந்தைக்குத் தெரிந்துவிடும் அம்மா வந்துவிட்டாள் என்று. ஓடிப்போய் சோபாவின் பின்னால் ஒளிந்து கொள்வாள். அம்மா வந்து அவளைத் தேட வேண்டும். தினமும் நடக்கும் இந்த விளையாட்டு.

இப்போது அம்மா அப்பா இருவரும் வீட்டில் இருப்பதால் என்னை அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை அவள். அம்மா அப்பா பின்னாலேயே போய்க் கொண்டிருக்கிறாள். இருவருக்கும் மீட்டிங் ஏதாவது இருந்தால் அவளை அழ அழ அழைத்துக் கொண்டு வருவேன். இல்லையென்றால் அவளும் அவர்களுடன் அதே அறையில் இருப்பாள்.

எனக்கும் எல்லோரும் வீட்டில் இருப்பதால் தளிகை செய்து பாத்திரம் தேய்த்து துணிகளை உலர்த்தி, மடித்து அப்பாடா என்று ஓய்ந்து போகிறது.

எப்போது எல்லாம் நல்லபடியாக முடிந்து அவரவர்கள் வழக்கம் போல ஆபீஸ் போய் நானும் பேத்தியும் எங்களுக்கென்று இருந்த சொர்க்கத்தை மறுபடியும் அனுபவிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. அந்த வசந்தத்தைத்தான் இப்போது வா வா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

10 thoughts on “மீண்டும் வசந்தம்

  1. கொடுத்து வைச்சிருக்கீங்கனு பொறாமைப் பட நினைச்சால், “அந்த நாளும் வந்திடாதோ!”னு சோகப்பாட்டுப் பாடி இருக்கீங்க. விரைவில் எல்லாமும் சரியாகட்டும்! இறைவனைப் பிரார்த்திப்போம்.

    1. உண்மையில் கொடுத்துதான் வைத்திருக்கிறேன் கீதா. பேத்தி இருப்பதனால் தான் நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். என்ன ஒன்று, எனக்கும் குழந்தைக்குமான நேரம் குறைந்துவிட்டது. அவ்வளவு தான். நன்றி கீதா.

  2. விரைவில் எல்லாம் சரியாகட்டும். இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம் மா…

    1. ஆமாம் வெங்கட். அந்த நம்பிக்கையில் தான் இருக்கிறேன். முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  3. விரைவில் அனைத்தும் சரியாகும் மா …
    எங்கும் வசந்தம் வீசி நம் மனதை குளிர்விக்கும் ….

Leave a comment