வாழி எதிராசன்!

நன்றி: கூகிள்

இன்றைக்கு சித்திரை மாதம் திருவாதிரைத் திருநாள். எம்பெருமானார் என்று உலகம் முழுவதும் உள்ளார்ந்த பக்தியுடன்அழைக்கப்படும் ஸ்ரீமத் ராமானுஜரின் 999 வது திருநட்சத்திரம் இன்று பூர்த்தியாகி 1000 வது வருடம் தொடங்குகிறது. எம்பெருமானாரின் ஆயிரமாவது ஆண்டு உத்சவங்கள் எல்லா திருக்கோவில்களிலும் ஆரம்பமாகியிருக்கின்றன.

 

ஸ்வாமி எம்பெருமானாரைப் பற்றி எழுத பெரும் ஆசை மனதில் எழுகிறது. தினந்தோறும் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் என்று திவ்ய பிரபந்தம் சேவிக்கத் தொடங்குவதைத் தவிர ஸ்வாமி பற்றி எழுத என்ன தகுதி இருக்கிறது என்று மனம் பரிதவிக்கிறது.

 

ஒருமுறை பிருந்தாவனம் போயிருந்தோம் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமியின் யாத்திரை கோஷ்டியுடன். அங்கு ஆண்டாளுக்கு என மிகப்பெரிய திருக்கோவில் – ரங்க்ஜி மந்திர் – இருக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் போலவே இங்கும் ஆண்டாள்-ரங்கமன்னார்-பெரியாழ்வார் மூவரும் ஒரே பீடத்தில் எழுந்தருளியிருக்கிறார்கள். வடமாநிலத்தில் நம் ஆண்டாளுக்கு என்று ஒரு திருக்கோவில் என்பதே மிகவும் பரவசத்தைக் கொடுக்கும் விஷயம். இதற்கு முன்னாலும் ஒருதடவை இந்தத் திருக்கோவிலுக்குப் போயிருக்கிறேன்.

 

முதல்நாள் பெரிய கூட்டமாக எல்லோரும் சென்றிருந்தோம். நாங்கள் போன சமயம் திருகாப்பு நீக்கியிருக்கவில்லை. நீண்டநேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. இங்கே காத்துக்கொண்டிருந்தால் அங்கே ஸ்வாமியின் பாகவத சப்தாகம் கேட்கமுடியாமல் போய்விடும். என்ன செய்வது என்று யோசித்தபடி நின்று கொண்டிருந்தோம். சற்று நேரம் ஆனவுடன் திருகாப்பு நீக்கி எங்களை உள்ளே விட்டார்கள். கூட்டமான கூட்டம். மிகவும் அவசரம் அவசரமாக வெளியில் இருந்தபடியே சேவித்துவிட்டு பாகவதம் கேட்க சென்றோம். நாளை இன்னும் சீக்கிரமாக வந்து கியூவில் முன்னால் நின்று கொள்ளலாம் என்று தீர்மானித்தோம்.

 

எங்களுடன் கூட ஒரு ‘குடுகுடுப்பை’ மாமி – நீங்கள் நினைப்பது போல குடுகுடுப்பைக்காரரின் மனைவி இல்லை இவர். எல்லாவற்றிலும் அவசரம் இவருக்கு. பேருந்துவில் ஏறுவதிலிருந்து தான் தான் என்று முந்திக் கொள்ளும் சுபாவம் அந்த மாமிக்கு. இந்த மாமியைப் பற்றியே இரண்டு மூன்று பதிவுகள் எழுதலாம். கோவிலுக்குள் நுழைவதற்கும் முந்துவார். கோவிலுக்குள் நுழைந்தவுடன் விறுவிறுவென்று பிரதட்சணம் செய்ய ஆரம்பித்துவிடுவார். நிதானமாக சந்நிதியில் நின்று பெருமாளை சேவிக்கலாம் என்பதெல்லாம் கிடையவே கிடையாது. ஒருமுறை பெங்களூரு வரும்போது எல்லோருக்கும் முன்னால் இறங்கி விடவேண்டும் என்ற பரபரப்பில் சிட்டி நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர் அவசரம் அவசரமாக கண்டோன்மெண்டில் இறங்கி சரித்திரம் படைத்தவர் இவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

 

இரண்டாம் நாள் நாங்கள் நால்வர் (குடுகுடுப்பை மாமியுடன் சேர்த்து) ஒரு ஆட்டோ பிடித்து ரங்கஜி மந்திர் வந்தோம். வழக்கம்போல கு.மாமி முன்னால் போய் நின்றார். கோவிலின் திருக்காப்பு நீக்க பட்டாச்சார் ஸ்வாமி வருவதைப் பார்த்தவுடன் இந்த மாமி பெரிய குரலில், ‘மாமா! மாமா! நாங்க கோமளா மாமிக்குத் தெரிந்தவர்கள். கோமளா மாமி உங்க கிட்ட சொல்லச் சொன்னாள். எங்களை கொஞ்சம் முன்னால உள்ள விடுங்கோ’ என்று இரைந்தார். கதவைத் திறக்கப் போனவர் கொஞ்சம் நின்று நம் குடுகுடு மாமியைப் பார்த்தார். பிறகு ஒன்றும் சொல்லாமல் சந்நிதிக்குள் நுழைந்துவிட்டார். சிறிது நேரத்தில் நாங்களும் உள்ளே சென்றோம். எங்களுக்கு சடாரி தீர்த்தம் கொடுத்த பட்டாச்சார் ஸ்வாமி எங்களைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். குடுகுடு மாமி ‘கிர்’ரென்று எல்லா சந்நிதிகளையும் சேவித்துவிட்டு நாலே எட்டில் வெளியே போய்விட்டார். அவர் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த பட்டாச்சார் ஸ்வாமி சொன்னார்: ‘கோமளா மாமிக்கு தெரிந்திருக்கிறதோ இல்லையோ, நம் எல்லோரையும் ஸ்வாமி இராமானுஜருக்குத் தெரிந்திருக்க வேண்டும். நாமெல்லாம் இராமானுஜ சம்பந்திகள் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அவர் தான் நமக்கு வழிகாட்டி. நாம் நமது வர்த்தமான (நிகழ்கால) ஆச்சார்யன் மூலம் சேவிப்பது எம்மிராமானுசனைத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கோமளா மாமிக்குத் தெரியும் என்று சொல்வதைவிட ‘அடியேன் இராமானுஜ தாசன் என்று சொல்லுங்கள். பெருமாளுக்கு அதுதான் உகப்பாக இருக்கும். எத்தனை கூட்டமாக இருந்தாலும் ‘அடியேன் இராமானுஜ தாசன் வந்திருக்கிறேன்’ என்று சொல்லுங்கள். பெருமாள் சேவை கிடைத்துவிடும். தினமும் 108 தடவை ‘ராமானுஜா, ராமானுஜா’ என்று சொல்லுங்கள். உங்களின் பாபங்கள், துக்கங்கள், நோய்கள், எல்லாம் போய்விடும்’ என்று மனமுருகக் கூறினார்.

 

எத்தனை பெரிய உபதேசம், ஒரு எளிய மனிதரிடமிருந்து என்று மெய் சிலிர்த்து நின்றோம் நாங்கள் மூவரும். குடுகுடு மாமிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. அன்றிலிருந்து தினமும் எப்போதெல்லாம் ரங்க்ஜி மந்திர் ஸ்வாமி கூறியது நினைவிற்கு வருகிறதோ அப்போதெல்லாம் ஸ்வாமியின் திருநாமத்தை சேவித்துக் கொண்டிருக்கிறேன்.

 

ஸ்வாமியின் ஆயிரமாவது திருநட்சத்திரத்தை கொண்டாடும் இந்த வேளையில் இந்த பூமியில் நாம் இருப்பது எத்தனை பெரிய அதிர்ஷ்டம்!

 

பற்பமெனத் திகழ் பைங்குழலும் தண்பல்லவமே விரலும்

பாவனமாகிய பைந்துவராடை பதித்த மருங்கழகும்

முப்புரிநூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்

முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்

கற்பகமே விழிகருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்

காரிசுதன் கழல் சூடிய முடியும் கனநற்சிகை முடியும்

எப்பொழுதும் எதிராசன் வடிவழகென் இதயத்துளதால்

இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே!

 

இந்தப் பாடலைப் பாடும்போதே நம் கண் முன் ஸ்வாமியின் வடிவழகு தோன்றும். ஸ்வாமியின் திருத்தம்பி எம்பார் என்கிற கோவிந்தபட்டரால் இயற்றப்பட்ட பாடல் இது.

 

ஸ்வாமியை நினைத்தவர்களுக்கு எது எதிர்? வாழி எதிராசன்!

 

 

 

 

 

 

ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்கள் அவர் எழுதியவை அல்ல!!!

 

 

 

 

 

உலக மகாகவிஞன் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் மறைந்ததும் ஏப்ரலில் தான்.இவர் பிறந்த  ஏப்ரல் 23 ஆம் தேதி உலகப் புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது.

 

என்ன இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறீர்கள், என்று கேட்கிறீர்களா? நான் இப்படிச் சொல்லவில்லை. அவரது காலத்திலேயே அவரது விமரிசகர்கள் அவரைப் பற்றி சொன்ன வார்த்தைகள் இவை.

 

மேலே எழுதுவதற்கு முன் ஒரு கேள்வி: ஷேக்ஸ்பியர் காபி பிரியரா? டீ பிரியரா? விடை இந்த கட்டுரையின் இறுதியில்.

 

இப்போது நாம் பாயிண்டுக்கு வருவோம்: ஷேக்ஸ்பியர் பிறந்தது ஸ்ட்ராட்போர்ட் என்னும் ஒரு சிறிய யாரும் அறியாத தூங்குமூஞ்சி ஊர். லண்டன் நகரிலிருந்து நூறு மைல் தள்ளி இருக்கும் ஒரு வியாபார இடம். என்ன வியாபாரம்?  கசாப்பு வியாபாரம் – செம்மறியாடுகளை வளர்த்து அவற்றை வெட்டி விற்கும் வியாபாரம்.

 

ஷேக்ஸ்பியரை வெறுக்கும் ஒரு கூட்டம் அப்போதும், இப்போதும் உண்டு. அவர்களுக்கு இந்த ஸ்ட்ராட்போர்டு ஊரையும் பிடிக்காது; இந்த ஊரில் பிறந்த உலகப் புகழ் பெற்ற இந்த மகா கவிஞனையும் பிடிக்காது. அதுமட்டுமல்ல; இவர் எழுதியதாகச் சொல்லப்படும் இலக்கியங்கள் எதுவுமே இவர் எழுதியது அல்ல என்று அடித்துச் சொல்லுகிறார்கள். காரணங்களைப் பார்ப்போமா?

 

 • ஸ்ட்ராட்போர்ட் துளிக்கூட வளர்ச்சி அடையாத, பின்தங்கிய ஊர். அங்கு கல்வி கற்கும் வசதிகளோ, கலாச்சார மையங்களோ கிடையாது. இப்படி இருக்கும் ஒரு ஊரில் எந்த அறிவுஜீவி பிறக்க முடியும்? பிறந்தாலும் தனது புத்திகூர்மையை எப்படி வளர்த்துக் கொள்ள முடியும்?
 • இங்கு ஷேக்ஸ்பியர் படித்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. இங்கு பள்ளிகளோ, கல்லூரிகளோ இருந்தால்தானே அதில் ஷேக்ஸ்பியர் படித்தார் என்று வருகைப்பதிவேட்டைக் காண்பிக்க முடியும்? அவரது ஆசிரியர்களைப் பற்றியோ, கூடப் படித்த மாணவர்களைப் பற்றியோ எந்த குறிப்பும் இல்லை. இதிலிருந்து தெரியவில்லையா, அவர் ஒரு படிப்பறிவு இல்லாதவர் என்று?
 • படிப்பறிவு இல்லாத, உழைத்துப் பிழைக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு, மேட்டுக்குடி மக்களின் வாழ்க்கை பற்றியும், அரச பரம்பரையினரின் பழக்கவழக்கங்கள் பற்றியும், ஐரோப்பிய நகரங்களைப் பற்றியும் என்ன தெரியும்? எப்படி அவரால் ஒரு அரசரைப் பற்றியும், அரசியல் பற்றியும், வெளிதேசத்து கலாச்சாரம் பற்றியும் எழுத முடியும்?

 

சரி, இவர் எழுதவில்லையென்றால் வேறு யார் எழுதியிருப்பார்கள்? நன்றாகப் படித்த மேட்டுக்குடி மகனார் ஒருவரால் தான் எழுதப்பட்டிருக்கும். ஏதோ சொல்லமுடியாத காரணங்களால் அவர் அனாமதேயமாக இருந்து கொண்டு பெயர், புகழ் எல்லாவற்றையும் ஷேக்ஸ்பியருக்குக் கொடுத்துவிட்டார். ஷேக்ஸ்பியருக்கு பதிலாக இவர்கள் எழுதியிருக்கக்கூடும் என்று இந்த ஷேக்ஸ்பியர்-எதிரிகள் சுமார் 80 பேர்களைப் பட்டியலிடுகிறார்கள். இதில் பிரான்சிஸ் பேகான், கிறிஸ்டோபர் மார்லோ, ஆக்ஸ்போர்டின் 17வது பிரபு எட்வர்ட் டி வேர் இவர்களும் அடக்கம். ஷேக்ஸ்பியர் என்று ஒருவர் இல்லவேயில்லை என்று கூட ஒரு தரப்பினர் சொல்லுகிறார்கள்.

 

ஷேக்ஸ்பியரது 450 வது பிறந்த நாள் உலகெங்கும் 2014 ஆம்  வருடம் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக இவரது பிறந்த ஊரான ஸ்டார்ட்போர்டில் இருக்கும் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவரது பிறந்த வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இவர் இந்த வீட்டில்தான் பிறந்து, வளர்ந்து விளையாடி, படித்து, எதிர்காலத்தைப் பற்றிக் கனவு கண்டது. திருமணம் முடிந்து தனது மனைவி அன்னா ஹாத்வேயுடன் ஐந்து வருடங்கள் வாழ்ந்ததும் இங்கேதான்.

 

பிறந்த நாள் என்றால் கேக் இல்லாமலா? ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளை ஒட்டி கேக்ஸ்பியர் கேக் என்ற போட்டியும் நடந்தது. ஒரு போட்டியாளர் ஷேக்ஸ்பியர் தனது மேஜையின் முன் உட்கார்ந்து தனது நாடகங்களின் கையெழுத்துப் பிரதியை கையில் வைத்திருப்பது போல கேக் செய்து வந்திருந்தார். இன்னொருவர் இவரது மூன்றாம் ரிச்சர்ட் நாடகத்திலிருந்து சில காட்சிகளை கேக்கில் செய்து வந்திருந்தார்.

 

இவரைப் பற்றிய சில வியப்பான தகவல்கள்:

 • நிறைய வார்த்தைகள் தெரிந்தவர். இவரது நாடகங்களிலும், கவிதைகளிலும் சுமார் 30,000 வேறு வேறுவிதமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
 • 38 நாடகங்கள், 154 சானட்ஸ் (14 வரிகள் கொண்ட பாடல்கள்), மற்றும் பல பல்சுவை பாடல்களையும் எழுதியிருக்கிறார்.
 • இவரைப்பற்றிய கூகிள் பக்கங்கள் 157 மில்லியன்.
 • இவரது நாடகங்களில் தற்கொலை 13 தடவை நடந்திருக்கிறது.
 • வெளி உலகிற்கு மிகப்பெரிய நாடக ஆசிரியர் என்று அறியப்பட்டிருந்தாலும், அவரது ஊரில் மதிப்பிற்குரிய தொழிலதிபராகவும், சொத்துக்களின் அதிபதியாகவும் அறியப்பட்டிருந்தார்.
 • அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஷேக்ஸ்பியரின் மிகப்பெரிய விசிறி. நண்பர்களுடன் பேசும்போது அடிக்கடி ஷேக்ஸ்பியரது நாடக வசனங்களைப் பேசிக் காண்பிப்பாராம்.
 • இவரது நாடகங்கள் மேடையில் நடிப்பதற்காக அவசரம் அவசரமாக எழுதப்பட்டதினால், அவர் எழுதிய அசல் கையெழுத்துப் பிரதிகள் எதுவும் இப்போது இல்லை.
 • அடித்தல் திருத்தல் இல்லாமல் வேகமாகவும், தங்குதடங்கல் இல்லாமலும் எழுதுவார்.
 • தமது 18 வயதில் தன்னை விட 8 வயது மூத்த பெண்மணியை மணந்து கொண்டார்.
 • ஆங்கில மொழிக்கு இவர் கொடுத்த வார்த்தைகள் கணக்கிலடங்காதவை. பேச்சு வழக்கில் இருந்த பல வார்த்தைகள் எழுத்துருவில் இவரது நாடகங்களில் இடம் பிடித்தன. பல சொலவடைகளை பிரபலப்படுத்தவும் செய்தார்.
 • அந்தக்காலத்தில் 30, 40 வயது வாழ்வது என்பதே பெரிய விஷயமாக இருந்தபோது ஷேக்ஸ்பியர் 52 வயது வரை வாழ்ந்து, 1616, ஏப்ரல் 23 ஆம் தேதி மறைந்தார். ஸ்ட்ராட்போர்ட் சர்ச்சில் இருக்கும் இவரது கல்லறையின் மேல் எழுதப்பட்ட வார்த்தைகள்: ‘என்னை இங்கிருந்து நகர்த்துபவன் சபிக்கப்படுவானாக’.

 

 

கடைசியாக புதிருக்கு விடை: ஷேக்ஸ்பியர் காலத்திற்குப் பிறகுதான் காபி, டீ இவை பிரிட்டனுக்குள் வந்தன. அதனால் ஷேக்ஸ்பியர் காபி பிரியரும் அல்ல; டீ பிரியரும் அல்ல!

 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், மகாராணி!

இங்கிலாந்து நாட்டின் அரசியாக  நீண்ட நாட்கள் அரியணையில் அமர்ந்தவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் இரண்டாம் எலிசபெத் ராணிக்கு 90 வயது நிறைவடைந்திருக்கிறது. 1926 ஆம் ஆண்டில் பிறந்த இவருக்கு இந்த மாதம் 21 ஆம் தேதி 90 வயது நிறைவடைந்தது.

 

 

யார்க் கோமகன் என்றும் பிற்காலத்தில் ஆறாம் ஜியார்ஜ் என்றும் அழைக்கப்பட்ட ஆல்பெர்ட் இளவரசருக்கும், அவரது மனைவி முதலாம் எலிசபெத் ராணிக்கும் லண்டனில் ஏப்ரல் மாதம் 21 ஆம் நாள் 1926 ஆம் ஆண்டில் பிறந்தவர் இந்த இரண்டாம் எலிசபெத் ராணி. இவரது முழு  பெயர் எலிசபெத் அலெக்சாண்ட்ரா மேரி. அவரது தாயாரின் பெயரான எலிசபெத், ஐந்தாம் ஜியார்ஜின் (அப்பா வழி தாத்தா) தாயார் பெயரான அலெக்சாண்ட்ரா, தந்தையைப் பெற்ற அம்மாவின் பெயரான மேரி ஆகிய மூன்று பெயர்களையும் சேர்த்து இவருக்கு பெயர் சூட்டப்பட்டது. இங்கிலாந்து, கனடா, ஆஸ்ட்ரேலியா, நியூசிலாந்து முதலிய நாடுகளின் ராணியாகவும், காமன்வெல்த் நாடுகளின் தலைவராகவும் 1952 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். பிற்காலத்தில் சுதந்திரம் பெற்ற 12 நாடுகளுக்கும் அவர் ராணியாக இருந்தார்.

 

இவர் வீட்டிலேயே கல்வி கற்றவர். இவர் பிறந்த சமயத்தில் இவரது அப்பாவைப் பெற்ற தாத்தா ஐந்தாம் ஜியார்ஜ் அரசராக இருந்தார்.

 

இரண்டாம் எலிசபெத்திற்கு பட்டத்திற்கு வரும் வாய்ப்பே இருக்கவில்லை. இவருக்கு முன்னால் இவரது பெரியப்பா எட்டாவது எட்வர்ட் கோமகன், இவரது தந்தை இருவரும் வாரிசுகளாக அறியப்பட்டு இருந்தனர். ஆனால் எட்டாவது எட்வர்ட் அரச குடும்பத்திற்கு ஏற்காத வகையில் வாலிஸ் சிம்ஸன் என்ற விதவையை மணந்து பட்டத்தைத் துறந்தார். (இந்தக் காதல் அந்தக் காலத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பிற்காலத்தில் நம்ம ஊர் ஆனந்த விகடனில் ‘கோமகனின் காதல்’ என்ற பெயரில் தொடராகவும் வந்தது.) அதனால் எலிசபெத்தின் அப்பா பட்டத்தை ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆண் வாரிசுகள் இல்லாததால் எலிசபெத் அவரது வாரிசாக அறிவிக்கப்பட்டார்.

 

இவரது சிறுவயதில் இவரைப் பார்த்துக்கொண்ட மரியன் கிராபோர்ட் எழுதிய ‘தி லிட்டில் பிரின்சஸ்’ என்ற புத்தகத்தில் சிறுவயதில் இவருக்கு குதிரை, மற்றும் நாய் இவற்றின் மீது பெரும் ஆசை இருந்ததாக சொல்லியிருக்கிறார். சிறிய வயதிலேயே மிகவும் ஒழுங்கு நிறைந்தவராகவும், பொறுப்பு மிக்கவராகவும் இருந்தார் என்றும் எழுதியிருக்கிறார். பிற்காலத்தில் ஒரு அரசியாக வருவதற்குரிய தோரணைகள் அப்போதே காணப்பட்டன போலிருக்கிறது!

 

1947 ஆம் ஆண்டு எடின்பர்க் கோமகன் பிலிப்பை மணந்தார் இரண்டாம் எலிசபெத்.  இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள் – சார்ல்ஸ், ஆன், ஆண்ட்ரு, எட்வர்ட் என்று.  இரண்டாம் எலிசபெத் ராணியை மணந்த பிலிப், ராணியின் கணவர் என்றே குறிப்பிடப்படுகிறார். ராஜா என்று அழைக்கப்படுவது இல்லை. ஏனெனில் அவருக்கென்று ராஜ்ஜியம் இல்லை.

 

இவரைப்பற்றிய சில வியக்கத்தக்க விஷயங்கள்:

 • நீண்டகாலம் அரியணையில் இருந்த அரசி இவர். இதுவரை இவரது எள்ளுப்பாட்டியான விக்டோரியா ராணிதான் இந்த சாதனைப் புரிந்திருந்தார். அவரை விட இவர் இப்போது அதிக நாட்கள் அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்து அவரது சாதனையை முறித்திருக்கிறார்.
 • பல உலகநாடுகளுக்கு – சுமார் 116 நாடுகளுக்கு – சுற்றுப்பயணம் செய்திருக்கும் இவரிடம் பாஸ்போர்ட் கிடையாது. வியப்பாக இருக்கிறது, இல்லையா? இங்கிலாந்து நாட்டில் ராணியின் பெயரில்தான் பாஸ்போர்ட் வழங்கப்படும். அதனால் இவருக்கு பாஸ்போர்ட் கிடையாது. பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் முழுக்க சுற்றிவரும் சிறப்பு இவருக்கு மட்டும் தான். இவரது வாரிசுகளுக்கும், கணவருக்கும் இந்தச் சிறப்பு இல்லை! அவர்களுக்கு கட்டாயம் பாஸ்போர்ட் வேண்டும். பாஸ்போர்ட் இல்லாத காரணத்தால் இவர் எந்த ஆண்டு எந்த நாட்டிற்கு சென்று வந்தார் என்கிற தகவல்கள் அரசாங்க ரீதியாகப் பதியப்படவில்லை!
 • மேலும் தனது தோட்டங்களை தனது ரேஞ்ஜர் ரோவரில் பயணம் செய்து சுற்றிப் பார்ப்பது இவருக்குப் பிடித்த பொழுபோக்கு. ஆனால் இவரிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை!
 • இவருக்கு இரண்டு பிறந்தநாட்கள். ஏப்ரல் 21 ஆம் தேதி இவர் பிறந்திருந்தாலும் ஒவ்வொரு காமன்வெல்த் நாடும் மே அல்லது ஜூன் மாதத்தில் இவரது பிறந்த நாளைக் கொண்டாடும்.
 • தனது தந்தையிடம் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி பெற்று தனது 18வது வயதில் பெண்கள் துணைபிராந்திய சேவையில் சேர்ந்து இரண்டாவது உலகப்போரில் பணி புரிந்தார். சீருடை அணிந்து மெக்கானிக் ஆகவும் ட்ரக் ஓட்டுனராகவும் பயிற்சி பெற்றார். இரண்டாம் உலகப்போரில் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரே ராணி என்ற பெருமையும் இவருக்கு மட்டுமே உண்டு.
 • இவரது திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளிலிருந்து நாடு கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த நேரம். சிக்கன நடவடிக்கைகள் அமலிலிருந்த காரணங்களால் ராணி தனது ரேஷன் கூப்பன்களை சேமித்து வைத்து அந்தப் பணத்தில் தந்தக்கலரில் 10,000 வெண்முத்துக்கள் வைத்துத் தைக்கப்பட்டிருந்த தனது திருமண உடையை வாங்கினார்.
 • 1976 இல் முதன்முதலில் மின்னஞ்சல் அனுப்பிய ராணி இவர்தான்.
 • 13 வயதிலேயே தனது எதிர்காலக் கணவரை சந்தித்தவர். 1947 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் நடந்தது. 68 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வரும் ராணி தம்பதிக்கு நம் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.
 • தனது செல்ல நாய்களான வில்லி, ஹோல்லி இரண்டிற்கும் தன் கையால் தானே உணவளிப்பார். முடிந்தபோது அவைகளுடன் நடப்பார்.
 • இவரது 90வது பிறந்தநாளை ஒட்டி இவரும், இவரது பிள்ளை, பேரன், கொள்ளுப்பேரன் நால்வரும் இருக்கும் தபால்தலை ஒன்று வெளியிடப்பட்டது.

இளவரசர் சார்ல்ஸ்,  இரண்டாம் எலிசபெத் ராணி, இளவரசர் வில்லியம்ஸ், குட்டி இளவரசர் ஜியார்ஜ்.

நான்குபேர்களும் ஒன்றாக இருப்பது போல இருந்தாலும் நான்கு தனித்தனி தபால்தலைகள் இவை. முதல் முறையாக குட்டி இளவரசர் தபால்தலையில் இடம்பெறுகிறார். ‘Born with a silver spoon’ என்பார்கள். இவர் வெள்ளிக்கூஜாவுடன் பிறந்தவர்!:) குட்டி இளவரசர் இந்தப் படத்தில் தனது அப்பா, தாத்தா, கொள்ளுப்பாட்டியுடன் காட்சியளிக்கிறார்.

இங்கிலாந்து நாட்டின் நீண்ட நாள் அரசியான இவர் நூறு வருடங்கள் வாழ்ந்து அதிலும் ஒரு சரித்திரம் படைக்கட்டும்!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், மகாராணி!

 

பின்குறிப்பு: எனக்கும் ராணிக்கும் ஒரு ஒற்றுமை.

அவர் இருப்பது விண்ட்ஸர் அரண்மனையில்.

நான் இருப்பது விண்ட்ஸர் அம்பிகா அடுக்குக் குடியிருப்பில்!

 

நீங்கள் அடிக்க வருவதற்கு முன் ஜூட்!

விண்டுதான் வாயில போடணுமா?

செவ்வாழைப் பழத்தை உரித்து ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டுக்கொண்ட நான் கேள்வி வந்த திசையைப் பார்த்து அடக்கமுடியாமல் சிரித்துவிட்டேன்.

 

எனது தோழியின் மகள் வீட்டில் உட்கார்ந்திருந்தேன். காலையில் சிற்றுண்டிக்கு முன் என்னிடம் ஒரு செவ்வாழை பழத்தைக் கொடுத்தார் தோழியின் மகள். எனக்கு அடுத்து சாப்பாட்டு மேஜையின் அந்தப் பக்கத்தில் என் தோழியின் மாப்பிள்ளை அமர்ந்திருந்தார். அவரிடமிருந்தான் இந்தக் கேள்வி வந்தது. அவரது கையிலும் உரித்த செவ்வாழைப் பழம். அவர் அதைக் கடித்துத் தின்பதா? அல்லது என்னைப் போல விண்டு வாயில் போட்டுக் கொள்வதா என்ற குழப்பத்தில் இருந்தார்!

 

சிரித்துக்கொண்டே சொன்னேன்: ‘இது உங்கள் வீடு நீங்கள் இங்கு எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்….! எனக்கு இப்படித்தான் பழக்கம்’ என்றேன்.

 

‘இதற்கு முன்னால் ஒரு வீட்டில் குடித்தனம் இருந்தோம். முன்பக்கத்தில் ஒரு மாமி இருந்தார். அவர்கள் வீட்டில் ஏதோ விசேஷம் என்று கூப்பிட்டார் ஒருநாள். நான் போனேன். என் கையில் காப்பி டம்ப்ளரைக் கொடுத்துவிட்டு ‘தூக்கி சாப்பிடு சுதா!’ என்றார் அந்த மாமி’ என்று தோழியின் மகள் கூறினார்.

 

‘இப்போது நீங்கள் வாழைப்பழத்தை கடித்து சாப்பிடாமல் விண்டு வாயில் போட்டுக் கொள்வதைப் பார்த்தவுடன் எனக்கு அந்த மாமியின் நினைவு வந்துவிட்டது!’ என்று தொடர்ந்தார் என் தோழியின் மாப்பிள்ளை. ‘அதுதான் கேட்டேன், ஒருவேளை விண்டுதான் வாயில போட்டுக்கணுமோ என்று!’

 

அதென்னமோ தெரியவில்லை சின்ன வயசிலிருந்து இப்படியே பழகிவிட்டது. என் அம்மா ரொம்பவும் கண்டிப்பு. வாழைப்பழத்தை விண்டு வாயில் போட்டுக் கொள், அப்பளாத்தை உடைத்து வாயில் போட்டுக் கொள் என்று கட்டளைகள் வந்தவண்ணம் இருக்கும். எந்த சாப்பாட்டுப் பொருளையும் அப்படியே வாயில் வைத்துக் கடித்து சாப்பிட்டதே இல்லை. இந்த வழக்கம் நல்லதுதான் என்றாலும் சிலவேளைகளில் இதுபோல மற்றவர்களுக்கு சங்கடம் உருவாகக் காரணம் ஆகிவிடுகிறது.

 

ஒருசமயம் என்னுடன் பயிற்சியாளர் ஆக வேலை பார்த்துவந்த இளைஞருக்கு இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டது. எல்லோரும் அவரிடத்தில் ‘ட்ரீட்’ கேட்டார்கள். சரி என்று அவரும் எல்லோருக்குமாக பிட்ஸா ஆர்டர் செய்தார். பிட்ஸா வந்தவுடன் ஒவ்வொரும் ஒரு பீஸ் எடுத்துக் கொண்டனர். மீதமிருந்த எனக்கான ஒரு துண்டை அந்த அட்டைப் பெட்டியினுள்ளேயே வைத்துக் கொண்டு தோசை சாப்பிடுவதுபோல சின்னச்சின்ன துண்டுகளாக எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன். நிறைய சீஸ் இருந்ததனால் சரியாக வரவில்லை. நான் படும் அவஸ்தையைப் பார்த்துவிட்டு அந்த இளைஞர் சொன்னார்: ‘மேடம்! நீங்கள் பிட்ஸாவை இப்படி தோசை போலச் சாப்பிடுவதை இத்தாலிக்காரன் பார்த்தால் தூக்கில் தொங்கிவிடுவான்! ப்ளீஸ் எங்களைப் போல கடித்து சாப்பிடுங்கள். பிட்ஸாவை இப்படி அவமானப்படுத்தாதீர்கள்!’ (எங்களையும் அவமானப்படுத்தாதீர்கள் என்று அவர் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்!) ரொம்பவும் சங்கடமாக இருந்தது. சே! ஏன் இப்படி இருக்கிறோம் என்று. ரொம்பவும் கஷ்டப்பட்டு கடித்து சாப்பிட்டேன். பிட்ஸா ரசிக்கவில்லை!

 

இன்னொருமுறை பிட்ஸா வெளியில் சாப்பிடும் வாய்ப்பு வந்தது.

என் உறவினர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து பெங்களூரு வந்திருந்தார். அவரைப் பார்க்க  நாங்கள் அவர் தங்கியிருந்த ஒரு ஐந்து நட்சத்திர ஹோடேலுக்குச் சென்றோம். அவரது நண்பர்கள் சிலரும் அவரைப் பார்க்க வந்திருந்தனர். பேசிக்கொண்டிருக்கும்போது எங்கள் உறவினர் அந்த ஹோடேலின் மென்யூ கார்டை என்னிடம் கொடுத்து ‘ஏதாவது ஆர்டர் செய்யுங்கள் அக்கா’ என்றார். எனக்கு அதைப் பிரித்தால் கிரீக், லாடின் போல இருந்தது. ஏதாவது தெரிந்த பெயர் இருந்தால் தானே? என் உறவினரின் நண்பர் எனக்கு உதவ முன்வந்தார். பொடி இட்லி என்று ஒரு உணவு போட்டிருந்தது. அவர் அதை இரண்டு ப்ளேட் என்று ஆர்டர் செய்தார். வந்தது பாருங்கள்…அட… அட…..  இட்லி எங்கே என்று தேட வேண்டியிருந்தது. நம்மூரில் தீபாவளி சமயத்தில் கேப் வெடிப்போமே அந்த சைசில் இட்லி! நான் அதிகப்படுத்திச் சொல்லவில்லை, மக்களே! உண்மையைச் சொல்லுகிறேன். மெலிசு மெலிசாக இத்துனூண்டு இத்துனூண்டு இட்லிகள்! மினி இட்லியில் பாதி அளவு கூட இல்லை! வெள்ளைவெளேரென்று ஒரு பீங்கான் தட்டில் மூன்று குழிகள் அந்த மூன்றிலும் இந்த கேப் சைஸ் இட்லிகள் 6 உட்கார்ந்திருந்தன. யார் அது? இட்லி சூடா இருந்ததா என்று கேட்பது? மூச்! இது ஐந்து நட்சத்திர ஹோடேல்! வாயைத் திறந்தால் போச்! நல்லவேளை அவர் இரண்டு ப்ளேட் சொன்னாரோ, பிழைத்தோம்! ஆளுக்கு ஏதோ அவல்பொரி சாப்பிடுவது போல இரண்டு இரண்டு எடுத்து வாயில் போட்டுக் கொண்டோம்.

 

அடுத்தாற்போல பிட்ஸா ஆளுக்கு ஒன்று. நான் ஏதோ சொல்ல ஆரம்பிக்கும்போது ‘பொறுங்கள். மிகவும் மெலிதாக இருக்கும் (thin crust)’ என்று விளக்கினார் நண்பர். நாங்கள் அதிகம் எதிர்பார்க்கவில்லை. நம்மூரு இட்லியே நம்மை ஏய்த்துவிட்டதே! அதுவும் எங்களை ஏமாற்றாமல் மஸ்லின் துணி போல வந்தது. எல்லோரும் வழக்கம்போல ஒரு துண்டு எடுத்துக் கடிக்க ஆரம்பித்தனர். என் பிள்ளை சங்கடத்துடன் என்னைப் பார்த்தான். நண்பருக்குப் புரிந்துவிட்டது. அங்கிருந்த ஸ்டூவர்ட் (சாதாரண ஓட்டல்களில் தான் சர்வர்! இது ஐந்து நட்சத்திர ஹோடேல் இல்லையா? அதனால் ஸ்டூவர்ட்!) கூப்பிட்டு பிட்ஸாவை கட் பண்ணச் சொன்னார். அவர் பிட்ஸா கட்டரை எடுத்துக் கொண்டு வந்தார். நண்பரே அதை வாங்கி எனக்காக பிட்ஸாவை துண்டுகள் போட்டுக் கொடுத்தார்.!

 

‘ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்!’ என்றேன். அவர் சிரித்துக்கொண்டே எங்கம்மாவும் உங்களை மாதிரிதான்,,,!’ என்றார்!

 

பிட்ஸாவை தோசை மாதிரி பிட்டு பிட்டு வாயில் போட்டுக் கொள்ளுபவள் நான் ஒருத்தி மட்டுமல்ல என்று தெரிந்து சந்தோஷமாக இருந்தது.

 

 

 

 

 

 

இனிய துர்முகி தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

 

ஒரு பிரபல எழுத்தாளர் தனது படிக்கும் அறையில் அமர்ந்திருந்தார். ஏதோ தோன்றவே தனது எழுதுகோலை எடுத்து எழுத ஆரம்பித்தார்:

 • சென்ற வருடம் எனது கல்லீரல் அகற்றப்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சைக்குப் பின் நான் பல நாட்கள், மாதங்கள் படுக்கையிலேயே இருக்கநேரிட்டது. என்ன கொடுமையான நாட்கள்!
 • சென்ற வருடம் எனக்கு 60 வயது பூர்த்தியாயிற்று. அதனால் எனது மனதிற்குப் பிடித்த, 30 வருடங்கள் வேலை பார்த்த பதிப்பகத்திலிருந்து  கட்டாய ஓய்வு பெற வேண்டி வந்தது.
 • சென்ற வருடம் எனது தந்தையின் மறைவு எனக்கு மிகுந்த துக்கத்தைக் கொடுத்தது.
 • சென்ற வருடம் எனது மகன் ஒரு கார் விபத்தில் அகப்பட்டுக் கொண்டதால் அவன் மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெறவில்லை. மருத்துவமனையில் உடல் முழுக்கக் கட்டுக்களுடன் நீண்டநாட்கள் இருக்க நேர்ந்தது. எனது கார் அந்த விபத்தில் முழுவதும் சேதமடைந்தது இன்னொரு வருத்தமான செய்தி.

 

கடைசியில் எழுதினர்: மொத்தத்தில் சென்ற வருடம் ஒரு மோசமான வருடம்.

சற்று நேரத்தில் எழுத்தாளரின் மனைவி அந்த அறையினுள் வந்தார். தன் கணவர் ஏதோ நினைவில் ஆழ்ந்து, முகம் மிகவும் வாடிப்போய் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார். கணவரின் அருகில் வந்தவர் அவர் கையில் இருந்த காகிதத்தை வாங்கிப் படித்தார். ஒன்றும் பேசாமல் அந்த அறையை விட்டு வெளியேறியவர் சிறிது நேரத்தில் கையில் இன்னொரு காகிதத்துடன் வந்தார். தன் கணவர் எழுதி வைத்திருந்த காகிதத்தின் அருகில் தான் கொண்டு வந்த காகிதத்தையும் வைத்தார்.

எழுத்தாளர் அந்தத் தாளில் தனது பெயர் எழுத்தப்பட்டிருப்பதைக் கண்டார். கையில் எடுத்துப் படிக்க ஆரம்பித்தார்.

அதில் எழுதியிருந்தது:

 • சென்ற வருடம் எனது கல்லீரல் அகற்றப்பட்டது. பல வருடங்களாக நான் பட்டுக் கொண்டிருந்த சொல்லமுடியாத வலியிலிருந்து எனக்கு ஒருவழியாக விடுதலை கிடைத்தது.
 • சென்ற வருடம் நல்ல ஆரோக்கியத்தில் இருக்கும்போதே வேலை ஓய்வு பெற்றேன். இனி இன்னும் நிறைய எழுதலாம். எனது எழுத்துக்களில் அதிக கவனம் செலுத்தலாம். எனது நேரம் இனி எனக்கே.
 • சென்ற வருடம் என் தந்தை தனது 95 வது வயதில் யாரையும் சார்ந்து இருக்காமல், எந்தவிதமான நோய்க்கும் ஆளாகாமல் அமைதியாக இறைவனடி சேர்ந்தார்.
 • சென்ற வருடம் எனது காரை ஓட்டிச் சென்ற எனது மகன் ஒரு விபத்தில் அகப்பட்டுக் கொண்டான். கார் முழுமையாக சேதமடைந்த போதிலும், எனது மகன்  எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் உயிர் பிழைத்தான். இப்போது அவனுக்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைத்திருக்கிறது. கடவுள் மிகவும் கருணை உள்ளவர்.

கடவுளின் அருளால் சென்ற வருடம் நல்லபடியாகச் சென்றது.

இதைப்படித்த எழுத்தாளர் மனம் மகிழ்ந்து போனார். வருத்தத்தைக் கொடுக்கும் நிகழ்வுகளிலும் நல்லவற்றைக் காணும் தன் மனைவியைப் பாராட்டினார்.

********                                          ***************                                    **************

அந்த எழுத்தாளரின் மனைவி போல நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களிலும் நல்லதைப் பார்க்கும் மனப்பக்குவத்தை கடவுள் எல்லோருக்கும் கொடுக்கட்டும்.

இனிய துர்முகி தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது…..

நன்றி: கூகிள்

 

இப்போதெல்லாம் தொலைக்காட்சி பார்க்கும்போது மறக்காமல் ரிமோட்டை கையில் வைத்துக்கொள்ளுகிறேன். இடைவேளையின்போது சானல் சானலாக அலைவதற்கா? நாங்களும் அதைச் செய்கிறோமே, என்கிறீர்களா? நான் அதைச் சொல்லவில்லை. நான் அதைச் செய்யவும் மாட்டேன். நான் ஸ்ரீராமன் மாதிரி அவருக்கு ஒக பாணம், ஒக வார்த்தை, ஒக மனைவி. எனக்கு ஒக சானல் ஒக நிகழ்ச்சி. பார்த்து முடித்துவிட்டுத்தான் அடுத்த சானல். சரி, ரிமோட்டை வைத்துக்கொண்டு என்ன செய்வேன்? விளம்பரம் வரும்போது mute செய்துவிடுவேன். உடனே என் காது ‘அப்பாடி’ என்று நன்றி சொல்லும். அப்பப்பா! இந்த விளம்பரங்கள் படுத்தும்பாடு, சொல்லி மாளாது. விளம்பரங்களைப் பற்றி இன்னொரு பதிவில் சொல்லுகிறேன்.

 

விளம்பரச் சத்தத்தை சில நிமிடங்களாவது நிறுத்துவது போல வேறு சில விஷயங்களையும் செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். அழகான நீர்வீழ்ச்சியின் அருகில் சகிக்காத உடையுடன் ஆடும் கதாநாயகி கதாநாயகனை அப்படியே அந்த நீர்வீழ்ச்சியில் தள்ளிவிட முடிந்தால்?  கதாநாயகனை விட கூடுதல் பெர்சனாலிட்டியுடன் கதாநாயகனின் பின்னால் ஆடும் அந்த இளைஞனை க்ளோசப்பில் பார்க்க முடிந்தால்? ஆடுகிறேன் பேர்வழி என்று சாணி மிதிக்கும் நாயக நாயகியரை அப்படியே freeze செய்ய முடிந்தால்? வெள்ளை உடையுடன் வரும் அழகிகளை அப்படியே புகைபோல மறையச் செய்தால்? இப்படி எனக்குள் நிறைய தோன்றும். முக்கியமாக ‘மலரே…மௌனமா….?’ பாடல் காட்சியில் ஒரே ஒருமுறையாவது ரஞ்சிதாவையும், அர்ஜுனையும் ‘காக்கா உஷ்’ செய்துவிட்டு அந்த இயற்கை அழகை ரசிக்க ஆசை!

 

கொஞ்சம் பின்னால் போகலாம். தொலைக்காட்சி வராத காலம். வானொலியில் மட்டுமே சில பாடல்களை கேட்டு ரசித்துக் கொண்டிருப்பேன். நாளை நமதே படம் வெளிவந்த ‘75 ஆம் ஆண்டின் பிற்பகுதி. அந்தப் படத்தில் வரும் ‘நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது….’ பாடல் மிகவும் பிரபலம். வானொலியில் மட்டுமல்ல; அன்றைய தினத்தில் மேடைப்பாடகர்களில் பிரபலமாக இருந்த திரு ஏ.வி. ரமணன், திருமதி உமா ரமணன் இருவரும் இந்தப் பாடலை மேடைதோறும் பாடுவார்கள். என் கணவருக்கு இவர்கள் இருவரும் பாடும் நிகழ்ச்சி மிகவும் பிடிக்கும். எங்கு இவர்கள் கச்சேரி என்றாலும் போய்விடுவார். திருமணத்திற்கு முன் தனியாக. திருமணம் ஆனவுடன் என்னையும் அழைத்துக்கொண்டு.

 

காதல் டூயட்கள் பாடுவதில் இவர்கள் இருவரையும் அடித்துக்கொள்ள இன்றுவரை வேறு மேடைப்பாடகர்கள் இல்லை. போர்த்திய தலைப்புடன் துளிக்கூட ஆடாமல் அசையாமல் உமா பாடுவதைக் காண மிகவும் வியப்பாக இருக்கும். அவரது குரல் தேன், அமிர்தம் இன்னும் என்னென்னவோ! பாடல்களில் வரும் அத்தனை நெளிவு, சுளிவுகள், குழைவுகள் எல்லாவற்றையும் அப்படியே கொடுப்பார் உமா.

 

நாளை நமதே படம் நான் பார்த்ததில்லை இன்று வரை. ஒவ்வொருமுறை உமா ‘நீலநயனங்களில்……’ என்று ஆரம்பிக்கும்போது கூடியிருக்கும் கூட்டம் மகுடி கேட்ட நாகமாக மயங்கும். இந்தப் பாடலுக்காகவாவது இந்தப்படத்தைப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசை. அந்த ஆசை சமீபத்தில் தான் நிறைவேறியது. ஏன் நிறைவேறியது என்று நான் நொந்துவிட்டேன். பார்க்காமலேயே இருந்திருக்கலாமே என்று இன்றுவரை வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு நல்ல பாட்டைக் கெடுக்கமுடியுமா? நிச்சயம் கெடுக்கலாம் மோசமான படப்பிடிப்பால் என்று இந்தப்பாட்டைக் கேட்டவுடன் – ஸாரி பார்த்தவுடன் புரிந்தது.

 

மோசமான உடைகள், மோசமான காட்சியமைப்பு, மோசமான உடல் அசைவுகள் மோசமான, மோசமான, மோசமான என்று எத்தனை மோசமான என்று எழுதினாலும் வார்த்தைகளால் சொல்லமுடியாத அளவிற்கு மோசமோ மோசம். இனி இந்தப்பாட்டை காதால் மட்டுமே கேட்கவேண்டும் கண்ணால் காண்பது கூடாது என்று முடிவு செய்தேன். ஒருவேளை நான் தொலைக்காட்சி எதிரே உட்கார்ந்திருக்கும்போது இந்தப்பாட்டு வந்தால் உடனடியாக இடத்தைக் காலி செய்துவிடுகிறேன்.

 

அதேபோல இன்னொரு பாட்டு: உமா ரமணன், ஜேசுதாஸ் பாடும் ‘ஆகாய வெண்ணிலாவே….’ உமா+தாஸ்யேட்டனின் தேன் குரலைக் கேட்டும் அந்த நடன அமைப்பாளருக்கு எப்படி பிரபுவையும், ரேவதியையும் கோமாளி மாதிரி ஆட வைக்க முடிந்தது என்பது இன்று வரை எனக்குப்புரியாத புதிர். இன்னொரு பாட்டு ‘வெண்ணிலவே, வெண்ணிலவே….’. கண்ணை மூடிக்கொண்டு அனுபவித்துக் கேட்க வேண்டிய பாடல் இது. கண்ணை தப்பித்தவறி திறந்து வைத்துக்கொண்டு பார்த்துவிட்டால் ‘பெண்ணே…..பெண்ணே….’ என்று பிரபுதேவா வாயைப்பிளக்கும்போது ‘பட்’டென்று கன்னத்தில் ஒன்று போட்டு இளையராஜா கேட்டது போல ‘அறிவிருக்கா?’ என்று கேட்கத்தோன்றும்.

 

கண்களை மூடிக்கொண்டு கேட்கவேண்டிய பாடல்களின் லிஸ்ட் கொடுக்கலாம் என்றால் ரொம்ப ரொம்ப நீளமானது அது. நான் பார்க்க ஆசைப்பட்டு நொந்து போன பாடல் காட்சிகளில் இன்னொன்று ‘பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை என்றே பேராகும்’ பாடல். இந்தப் பாடலின் நினைவு வந்தவுடன் கே.ஆர். விஜயாவின் நினைவு நிச்சயம் வரும். ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று இவர் வாயை அசைக்கும் பாடல் காட்சியைப் பார்த்துவிட்டு என் பிள்ளை (அப்போது அவன் மிகவும் சின்னவன்) கேட்டான்: ‘இந்த மாமி ஏன் வாயைக் கோணிண்டு அழகு காட்டறா?’ என்று.

 

நம்மை விட குழந்தைகள் உள்ளதை அப்படியே சொல்லுபவை, இல்லையா?

 

 

 

ஸ்ரீரங்க நாச்சியாரும் பங்குனி உத்திரமும்

ஸ்ரீவைஷ்ணவர்கள் கட்டாயம் சேவிக்க வேண்டிய உத்சவங்கள் மூன்று:

 1. பங்குனி உத்திரம் ஸ்ரீரங்கம் திவ்ய தம்பதிகளின் சேர்த்தி சேவை.
 2. திருநாராயணபுரம் வைரமுடி சேவை
 3. திருவாலி-திருநகரி வேடுபறி சேவை

மூன்றையுமே சேவித்திருக்கிறேன் என்பதில் ஒரு நிறைவு.

 

WP_20160322_17_56_25_Pro.jpg

மேலே எங்கள் அகத்தில் இருக்கும் பெருமாளும் நப்பின்னையும்.

நாளை (23.3.2016) ஸ்ரீரங்கத்தில் பங்குனி உத்திரம் சேர்த்தி சேவை. ஸ்ரீரங்கத்தில் பிறந்திருந்தாலும் சில வருடங்களுக்கு முன்தான் இந்த சேர்த்தி சேவையை சேவிக்கும் பாக்கியம் கிடைத்தது. பிள்ளைக்குக் கல்யாணம் ஆனவுடன் மாட்டுப்பெண்ணையும் கூட்டிக்கொண்டு போயிருந்தோம். சாயங்காலமே (ரொம்ப சீக்கிரம் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம் – அங்கு போனபின்தான் எங்களுக்கு முன்னால் ஒரு நீண்ட வரிசை நிற்பது  தெரிய வந்தது.) ஒரேயொரு சந்தோஷம் என்னவென்றால் தாயார் சந்நிதி எதிரே இருக்கும் கம்பராமாயணம் அரங்கேறிய மண்டபம் வரை க்யூ இல்லாமல் போய்விட்டோம். சரி, சீக்கிரம் சேவை கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டோம்.

 

நாங்கள் நின்றிருந்த இடத்தில் கருங்கல் தரை. மார்ச் மாத வெயிலில் கால்கள் பொரிந்துவிட்டன. காலை மாற்றி மாற்றி வைத்து நின்று கொண்டோம். பிள்ளையின் முகத்தைப் பார்க்காமல் வேறு எங்கோ பராக்கு பார்த்தபடி நின்றிருந்தேன். காலில் பட்ட சூடு அவன் கண்களில் நெருப்பாக வெளிவந்து என்னை எரித்துக்கொண்டிருந்தது. நல்லகாலம், சீக்கிரமே வரிசை சற்று முன்னேறி மண்டபத்திற்குள் போய்விட்டோம். இப்போது பிள்ளையைப் பார்த்து கூலாக சிரித்தேன். ‘பெங்களூருக்கு வா, உன்னைப் பார்த்துக் கொள்ளுகிறேன்’ என்றான்.

 

ஒரு வழியாக முன்னேறி பெருமாள் தாயார் சேர்த்தி மண்டபத்திற்குள் ஏறினோம். தாயாரும் பெருமாளும் வெள்ளைவெளேரென்ற பட்டு வஸ்த்திரத்தில் ஜொலித்தனர். ஒரு நிமிடம் அப்படியே மெய் சிலிர்த்தது. என்ன கம்பீரம்! அன்றுதான் பிறந்த பயன் கிடைத்தது போல ஒரு நெகிழ்ச்சி. என்னவொரு ஜோடிப்பொருத்தம்! திவ்யதம்பதிகள் என்று இதனால்தான் சொல்லுகிறார்களோ என்று கூடத் தோன்றியது.

 

இவர்களின் சேர்த்தி அழகை சேவித்துதானே ஸ்ரீ ராமானுஜர் கத்யத்ரயம் சாதித்தார்! நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்காகவும் அன்றே அவர் இந்த திவ்யதம்பதிகளை சரணடைந்தார்! (கத்யம் என்பது வடமொழி ஸ்லோகங்களில் ஒருவகை. சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுண்ட கத்யம் என்று மூன்று கத்யங்களை சாதித்ததால் கத்யத்ரயம் (த்ரயம் என்றால் மூன்று) என்ற பெயர் வந்தது).

 

மறுபடி இன்னொருமுறை சேவிக்க ஆசை. ஆனால் வெளியே நின்றிருந்த வரிசையைப் பார்த்து (கூடவே என் பிள்ளையையும் நினைத்து!) பேசாமல் வீட்டிற்கு வந்துவிட்டேன். எப்படியாவது இரவில் நடக்கும் கத்யத்ரய சேவைக்குப் போக வேண்டும் என்று நான், என் அக்கா, என் சம்பந்தி மூவரும் ரகசிய ஆலோசனைக் கூட்டம் போட்டு முடிவு செய்தோம். என் கணவர் வரவில்லை என்று சொல்லிவிட்டார். நாங்கள் மூவர் மட்டுமே.  ‘நீ ஏதாவது இப்படிச் செய்வாய் என்று தெரியும்’ என்று என்னை கோபித்தவாறே என் பிள்ளை எங்கள் மூவரையும் தாயார் சந்நிதி வரையில் காரில் கொண்டுவந்து விடுவதாக மனமிரங்கினான். ‘ஆஹா! பெருமாளின் கருணையே கருணை’ என்ற என் அக்காவைப் பார்த்து ஒன்றும் சொல்லமுடியாமல் அசட்டுச் சிரிப்புச் சிரித்தேன்.

 

தாயார் சந்நிதிக்குள் நுழையவே முடியவில்லை. சேர்த்தி சேவை முடியும் வரையில் இருந்த வரிசை ஒழுங்கெல்லாம் போயே போச்! எல்லோரும் அடித்துப்பிடித்து தள்ளுமுள்ளு பண்ணிக்கொண்டு உள்ளே போய்க்கொண்டிருந்தனர். எங்களால் அந்தக் கூட்டத்தில் உள்ளே நுழையவே முடியவில்லை. ஒருமணிநேரம் அப்படி இப்படி சுற்றிச்சுற்றி வந்தோம். ஊஹூம். எங்கள் பாச்சா எதுவும் பலிக்கவில்லை. அவரவர்கள் அடித்துப்பிடித்து நுழைந்து கொண்டிருந்தார்களே எங்கள் மூவரையும் அழைத்துப்போக யாரும் முன்வரவில்லை. எங்களுக்கும் அந்த நெரிசலில் உள்ளே நுழைய பயமாக இருந்தது. சரி வீட்டிற்குப் போகலாம் என்று பிள்ளைக்குப் போன் செய்து வர சொன்னேன். தாயார் சந்நிதி வாசலில் வந்து நின்றுகொண்டோம். கார் வந்ததும் நான் வாயைத் திறக்கவில்லை. பேசாமல் ஏறிக்கொண்டேன். என் அக்கா என் பிள்ளையிடம், ‘அம்மாவைக் கோவிச்சுக்காதே!’ என்றாள். ‘அம்மாவைப் பற்றித் தெரியும் பெரியம்மா!’ என்பதுடன் நிறுத்திவிட்டான். அப்பாடி! இனி பெங்களூரு போய் பார்த்துக் கொள்ளலாம் என்று நானும் சும்மா இருந்துவிட்டேன்.

 

மனதிற்குள் ஒரு குறை இருந்துகொண்டே இருந்தது. கிடைத்த வாய்ப்பை விட்டுவிட்டோமே என்று. இது நடந்து சில வருடங்களுக்குப் பிறகு ‘திருவாலி-திருநகரி வேடுபறி சேவித்துவிட்டு அப்படியே ஸ்ரீரங்கம் பங்குனி உத்திர சேர்த்தி சேவை வருகிறீர்களா?’ என்று என் உறவினர் ஒருவர் கேட்க, இரண்டாம்முறை பங்குனி உத்திர சேவை! சென்னைக்குப் போய் அங்கிருந்து  திருவாலி-திருநகரி. அங்கு வேடுபறி சேவித்துக் கொண்டு நாங்கள் ஸ்ரீரங்கம் போய்ச்சேர்ந்த போதே இருட்டிவிட்டது. க்யூ வரிசை வெள்ளைக்கோபுரம் தாண்டி நின்றுகொண்டிருந்தது. எங்களுடன் கூட வந்தவர்கள் 300 ரூ டிக்கட் வாங்கிவிடலாம் என்று சொல்ல, தாயார் சந்நிதி வரை அப்படியே போய்விட்டோம். அங்கு டிக்கட் வாங்கிக்கொண்டு க்யூவில் சேர்ந்து கொண்டோம். சேர்த்தி சேவித்துவிட்டு அப்படியே கத்யத்ரய சேவையில் உட்கார்ந்துவிடுவது என்று முதலிலேயே தீர்மானம் செய்து விட்டோம்.

 

சேர்த்தி சேவையை முடித்தக்கொண்டு வசந்த மண்டபத்தில் வந்து உட்கார்ந்து கொண்டோம். இன்னும் சிறிது நேரத்தில் வரிசைக்காகக் கட்டியிருக்கும் மூங்கில்கழிகளை எடுத்துவிடுவார்கள். அதனால் எந்தவித சிரமமும் இல்லாமல் பங்குனி உத்திர மண்டபத்திற்கு வந்துவிடலாம் என்று நினைத்தோம். ஆனால் அன்றைய தினம் கூட்டமோ கூட்டம். சேர்த்தி சேவைக்காக டிக்கட் வாங்கியவர்கள் இன்னும் வரிசையில் வந்து கொண்டிருந்தனர். நேரம் போய்க்கொண்டே இருந்தது. கூட்டம் குறைந்தபாடில்லை. அப்படியே கத்யத்ரயம் சேவிக்க ஆரம்பித்துவிட்டனர். எங்களுக்கு என்ன பிரச்னை என்றால் இத்தனை மூங்கில் கழிகளைத் தாண்டி எப்படி பங்குனி உத்திர மண்டபம் செல்வது என்பதுதான். க்யூவில் நின்றிருந்தவர்களிடம் அந்தப்பக்கம் போவதாகச் சொல்லிவிட்டு வழியை ஏற்படுத்திக் கொண்டோம். கடைசியாக ஒரு மூங்கில்கழி. எப்படித் தாண்டி அந்தப்பக்கம் போவது? எங்களுடன் வந்திருந்த இளம் வயதுக்காரர்கள் அந்த மூங்கில்கழி மீது காலைவைத்து அந்தப் பக்கம் குதித்தனர்.  நான் என்ன செய்வது? சட்டென்று ஒரு யோசனை. கீழே உட்கார்ந்தேன். பின் அப்படியே நிலத்தில் படுத்துக்கொண்டு மூங்கில் கழிகளின் கீழே நீந்தி அந்தப்பக்கம் போய்விட்டேன்.

 

உட்கார இடம் கிடைத்தவுடன் கையுடன் எடுத்துப் போயிருந்த கத்யத்ரய புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு சேவிக்க ஆரம்பித்தேன். அன்று பெருமாளுக்கு 18 முறை கைலி மாற்றி திருமஞ்சனம். நேரம் ஆக ஆக தூக்கம் கண்ணைச் சுற்றியது. முதல்நாள் காலையிலிருந்து பேருந்துப்பயணம். பின்பு வேடுபறி விடிய விடிய சேவித்தாயிற்று. இரவு தூக்கமும் இல்லை. உட்கார்ந்துகொண்டே அவ்வப்போது ஆடி ஆடி விழுந்துகொண்டு, கண் விழித்த போதெல்லாம்   பெருமாளையும் சேவித்துக் கொண்டு… நான் கண் விழித்த போதெல்லாம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ரஞ்சனிகுமாரி?’ என்று பெருமாள் கேட்பது போல இருந்தது. மறக்கமுடியாத அனுபவம்.

 

இந்தப் பங்குனி உத்திரம் ஸ்ரீரங்க நாச்சியாரின் திருநக்ஷத்திரம். வருடத்திற்கு ஒருமுறை ஒரேஒரு நாள் அன்று நம்பெருமாளுடன் சேர்ந்து அடியவர்களுக்கு சேவை கொடுப்பாள்.

 

அவளைப் போலவே எனக்கும் இது ரொம்பவும் முக்கியமான நாள். ஏன் தெரியுமா? என் அகத்துக்காரரின் பிறந்தநாள். அவரது நல்வாழ்விற்கு ஸ்ரீரங்கம் திவ்யதம்பதிகளைப் பிரார்த்தித்து  நிற்கிறேன்.