புத்தி யோகம்

 

மே பதிமூன்று எனது 67 வது பிறந்தநாள். 66  வயது முடிந்து 67 தொடங்கியது. பிறந்தது ஸ்ரீரங்கம் என்றாலும் படித்தது, திருமணம் ஆனது எல்லாம் சிங்காரச் சென்னையில்தான். பெங்களூர் வந்து 32 வருடங்கள் ஆகிறது. வாழ்க்கைப் பாடங்கள் பல இங்கு வந்துதான் கற்றேன். அதைத் தவிர சங்கீதம்,  வீணை கற்றேன். கன்னடம் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டேன். கல்லூரிக்குச் செல்லவில்லை; பட்டதாரி ஆகவில்லை என்ற என் குறையை இங்கு வந்து M.A., படித்துப் போக்கிக் கொண்டேன்.

 

என் கணவரின் வேலைக்காக  தும்கூரில் இரண்டு வருடங்கள் இருந்தபோது அங்கு TVS பள்ளியில் பாட்டு டீச்சர் ஆக வேலைக்குச் சேர்ந்த சமயம்,  இரண்டாம் வகுப்புக் குழந்தைகளுக்கு கன்னடம் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதனால் கன்னட மொழியை நன்கு கற்கும் பேறு பெற்றேன்.

 

எனக்கு எல்லாமே late take-off தான். திருமணத்திற்கு முன் ஸ்டெனோ டைப்பிஸ்ட் ஆக வேலை பார்த்தேன். திருமணத்திற்குப் பின் விட்டுவிட்டேன். 25 வருடங்கள் (2000 ஆம் வருடம் ஏப்ரல் மாதம்) கழித்து தீடீரென ஒரு வேலை வாய்ப்பு! Spoken English Trainer ஆனேன். அப்போது எனக்கு 47 வயது! மூன்று மல்டி-நேஷனல் நிறுவனங்களின் கார்ப்பரேட் ட்ரெயினர் ஆகவும் இருந்தேன். ஒரு அமெரிக்க நிறுவனத்தில் அவர்களது கான்பரன்ஸ் அறையில் என் வகுப்புகளை நடத்தச் சொன்னார்கள். அந்த அறைக்குள் நுழைந்தவுடன் வியப்பில் என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. சிவப்புக் கம்பளம் போடப்பட்ட குளிரூட்டப்பட்ட அறை. ஒரு கரும்பலகை அளவிலான கணினித் திரை. நான் பாடங்களை கணினியில் (என் பிள்ளையின் உதவியுடன்) அனுப்பிவிடுவேன். அறைக்குள் நுழைந்தவுடன் பட்டனைத் தட்டினால் அந்தப் பெரிய திரையில் எனது பாடங்கள் வரும். அப்படியே சொல்லிக் கொடுத்து விடலாம். அடுக்கடுக்காக அமைக்கப்பட்ட உட்காரும் வசதி. மறக்க முடியாத அனுபவம்!

 

அடிப்படை ஆங்கிலத்தில் ஆரம்பித்து நேர்முகப்பேட்டியை எப்படி எதிர்கொள்வது, ஆளுமையை வளர்த்துக் கொள்ளும் விதம் என்று பலவிதங்களிலும் அந்த நிறுவன ஊழியர்களை தயார் செய்தேன். கடைசி நாளன்று ஆங்கிலத்தில் ஒரு நாடகம் தயாரித்து என் மாணவர்களை நடிக்க வைத்தேன். கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியாளராக மிகவும் பிஸியாக வேலை பார்த்தேன். ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் அங்கு ஊழியம் செய்து வந்த வடஇந்தியர்களுக்கு கன்னடம் கற்றுக் கொடுக்கச் சொன்னார்கள். அதையும் திறம்படச் செய்தேன். எனது மாணவர்களில் பல வெளிநாட்டு மாணவர்களும் அடக்கம்.

 

அதே சமயம் பத்திரிகைகளில் கதை, கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன். எனது முதல் கதை 2000 வது ஆண்டு மங்கையர் மலரில் வெளிவந்தது. அவள் விகடனிலும் எழுத ஆரம்பித்தேன். என் பிள்ளை இரண்டு வருடங்கள் அமெரிக்காவில் இருந்தபோது கணணி முன் உட்கார ஆரம்பித்து (அவனுடன் தினம் பேச வேண்டுமே!) கணனியில் நிறையக் கற்றுக் கொண்டேன். எனக்காக அங்கிருந்து ஒரு லேப்டாப் கணணி வாங்கி வந்தான். அன்றிலிருந்து அதுதான் என் ஒரே பொழுதுபோக்கு!  ஆன்லைனில் எழுதும் வேலை ஏதாவது கிடைக்குமா என்று தேடியதில் ஒரு இணையதளம் என் எழுத்துக்களை கை நீட்டி வரவேற்றது. அதில் எழுதி வெளியானதை எல்லாம் வோர்ட்பிரஸ்.காமில் வலைத்தளம் ஆரம்பித்து பதியத் தொடங்கினேன். அதைப் படித்து விட்டு கனடா நாட்டிலிருந்து ஒருவர் அவர் நடத்தும் ஆன்லைன் தமிழ் பத்திரிகைக்கு கட்டுரைகள் எழுதி கொடுக்குமாறு சொன்னார். ஆரம்பத்தில் நான் எழுதி அந்தப் பத்திரிகைக்கு அனுப்பி விடுவேன். அவர்கள் அதை வெளியிடுவார்கள். சில  மாதங்களில் எனக்கே ஒரு பயனர் பெயர், கடவுச் சொல் கொடுத்து என்னையே வெளியிடவும் சொல்லி விட்டார்கள். இதில் எனக்கு சொல்லமுடியாத ஆனந்தம்! இந்த வயதில் யாருக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கும்?

 

மொழிபெயர்ப்பில் நிறைய ஆர்வம் இருந்ததால் ஒரு நாள் கிழக்குப் பதிப்பகத்திற்கு தொலைபேசினேன். திரு மருதனிடம் என் ஆர்வத்தைச் சொன்னேன். அந்தப் பதிப்பகம் நடத்தி வந்த ‘ஆழம்’ பத்திரிகையில் எழுதச் சொன்னார். தொடர்ந்து எழுதினேன். 2014 ஆம் ஆண்டு எனது முதல் புத்தகம் ‘விவேகானந்தர் – இந்தியாவின் மறுமலர்ச்சி நாயகன்’ என்ற புத்தகம் வெளியானது. அடுத்த ஆண்டு மலாலா – ஆயுத எழுத்து என்ற புத்தகம் வெளியானது. இந்த ஆண்டு ‘ஜோன் ஆப் ஆர்க்’ புத்தகம் வெளியானது. மூன்றுமே கிழக்குப் பதிப்பக வெளியீடு.

 

குங்குமம் தோழியாக அறிமுகம் ஆனேன். பெண்களுக்கான கட்டுரைகள் குங்குமம் இதழில் தொடர்ந்து எழுதினேன். சமீபத்தில் தினமலர் திருச்சி இதழில் பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் என்ற கட்டுரை 25 வாரங்கள் எழுதி முடித்தேன். ஒரு இணையப் பத்திரிகையில் குழந்தை வளர்ப்பு பற்றி – ஒரு அம்மாவாக, ஒரு பாட்டியாக – செல்வ களஞ்சியமே என்ற தலைப்பில் 100 வாரங்கள் எழுதினேன். நல்ல வரவேற்பு இருந்தது. நோய்நாடி நோய் முதல்நாடி என்ற மருத்துவக் கட்டுரை அதே பத்திரிகையில் எழுத ஆரம்பித்தேன். ஏதோ காரணங்களால் அந்தப் பத்திரிகை கிட்டத்தட்ட நின்று போனது. என் கட்டுரையும் பாதியில் நின்று போனது.

 

என்னைப் பொறுத்தவரையில் நமக்குத் தகுதிகள் இருந்தால் நிச்சயம் நமக்கு வாய்ப்புகள் தேடி வரும். வயது ஒரு பொருட்டே அல்ல!

6 thoughts on “புத்தி யோகம்

  1. தன்னம்பிக்கைப் பதிவு. உங்கள் முயற்சிகளும் திறமைகளும் வியக்க வைக்கின்றன. வணங்குகிறேன்.

    1. நெல்லைத் தமிழன் சொல்வதுபோல வாய்ப்புகள் வந்தன. அவற்றை முடிந்த அளவு நன்றாகப் பயன்படுத்திக் கொண்டேன். நானாகவே வாய்ப்புகளைத் தேடித் போகவும் தயங்க மாட்டேன். அதாவது கேட்கவும் தயங்க மாட்டேன். கல்லடித்துப் பார்ப்பது விழுந்தால் மாங்கா. இல்லையென்றால் நஷ்டம் எதுவும் இல்லை என்பது போல.
      நன்றி ஸ்ரீராம்.

  2. தன்னம்பிக்கையோடு கூடிய பதிவு. அதற்கேற்ப வாய்ப்புகளும் உங்களைத் தேடிவந்திருக்கின்றன.

    ஆமாம்…கன்னடம் நன்கு எழுதப் படிக்கக் கற்க, (பேசவும்) நல்ல புத்தகம் ரெகமெண்ட் பண்ணுங்களேன்….. 7-8ம் வகுப்பில் நன்கு பேசத் தெரியும்…இப்போ சுத்தமாக ஒன்றும் நினைவில் இல்லை. எழுதப் படிக்கவும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்

    1. பேசுவதற்கு புத்தகம் வேண்டாம். நேரடியாகப் பேச ஆரம்பிக்க வேண்டியதுதான்.
      எழுதுவதற்கு இந்த லிங்க் பாருங்கள்:

  3. ஹப்பா ஒரு வழியாகப் பெட்டியைப் பிடித்துவிட்டேன் ரஞ்சனிக்கா.

    லேட்டாக வந்திருக்கிறேன். பிலேட்டட் பிறந்த நாள் வாழ்த்துகள்.

    உங்களின் தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சி உங்களின் அஸ்திவாரம் என்று தெரிகிறது. லேட்டாக வந்தன என்று சொல்றீங்க அக்கா ஆனால் லேட்டஸ்டாக வந்திருக்கீங்க. உங்களைக் கண்டு, உங்கள் திறமைகளைக் கண்டு மிகவும் வியக்கிறேன் அக்கா.. செம டேலன்டட் நீங்க. பொதுவாகச் சொல்லுவாங்க ஸ்ரீரங்கத்துக் காரர்கள்… அதாவது காவிரிக்கரைக்காரர்கள் எல்லாருமே மிகவும் அறிவுஜீவிகளாக ஷார்ப் ப்ரெய்ன் உள்ளவர்களாக இருப்பார்கள் என்று. அது மிகவுமே உண்மையாகிறது.

    நானும் இப்போதுதான் கன்னடம் கற்கத் தொடங்கியிருக்கிறேன். புத்தியில் ஏற மறுக்கிறது!!!

    உங்களின் வெற்றிகள் இன்னும் பெறப் போகும் வெற்றிகள் அனைத்திற்கும் வாழ்த்துகள்.

    கீதா

    1. என்னிடம் டீச்சர் ஆகும் திறமை இருக்கிறது என்பதே எனக்குத் தெரியாமல் இருந்தது. வந்த வாய்ப்புகளை முடிந்தவரையில் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டேன் என்று சொல்லலாம்.
      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி கீதா.

Leave a comment