ஆசிரியரின் பணி மகத்தானது. ஆசிரியரின் வயது காலம் செல்லச் செல்ல ஏறினாலும் அவரிடம் படிக்கும் மாணவர்களின் வயது மாறுவதில்லை – அவர்களின் முகங்கள் மட்டும் வருடந்தோறும் மாறும். அதனால் ஆசிரியர் எப்போதுமே இளைமையாகவே இருக்கிறார். இளைய சமுதாயத்தினருடன் பழகக் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, தனது கருத்துக்கள், வாழ்க்கையை பற்றிய தனது பார்வை ஆகியவற்றை மாறும் காலத்திற்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். இதனால் தலைமுறை இடைவெளி என்பதை ஒரு ஆசிரியர் வெகு சுலபமாக அணைகட்டி கடந்துவிடலாம்.
ஒரு ஆசிரியர் தனது உழைப்பின் பலனை கண்கூடாக தன் வகுப்பில் உணரலாம். புதிய விஷயம் ஒன்றை கற்றுக்கொண்ட மாணவனின் முகத்தில் உண்டாகும் ஒளி உடனடியாக அவருக்கு இதைத் தெரிவிக்கும். அதே வகுப்பில், இதற்கு நேர்மாறாக சொல்லித்தரப்படும் எந்த விஷயத்திலும் ஆர்வம் இல்லாத மாணவர்களும் இருப்பார்கள். ஒரு பட்டம் வாங்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அங்கு உட்கார்ந்திருக்கும் இந்த ஆர்வமற்றவர்களில் ஒருவரையாவது தனது கற்பிக்கும் திறமையால் ஆர்வமுள்ளவராகச் செய்வதுதான் ஒரு ஆசிரியரின் முன் இருக்கும் சவால். இந்த சவாலில் வெற்றி பெறும்போது ஏதோ சாதித்ததைப் போன்றும் தோற்கும் போது தோல்வி அடைந்த உணர்வு வருவதையும் மறுக்க முடியாது.
ஒவ்வொரு வருட முடிவிலும் அந்த வகுப்பு மாணவர்கள் அடுத்த வகுப்பிற்குச் செல்லும்போதும், படிப்பு முடிந்து கல்லூரியை விட்டு செல்லும்போதும் அந்தப் பிரிவு ஆசிரியரையும் பாதிக்கிறது. அறிந்தோ அறியாமலோ சில மாணவர்களுடன் பிரிக்க முடியாத பந்தம் ஏற்பட்டுவிடுகிறது ஒரு ஆசிரியருக்கு. அவர்கள் விடை பெறும்போது தனது ஒரு பகுதி தன்னைவிட்டுச் செல்வது போன்ற உணர்வு தவிர்க்க முடியாதது.
அதேபோல ஆசிரியருக்கு வயது ஏற ஏற மாணவர்கள் அவரது நண்பர்கள் என்ற நிலை மாறி அவரது குழந்தைகளாகிவிடுகிறார்கள். ஒருகால கட்டத்தில் பெற்ற குழந்தைகள் சிறகு முளைத்து கூட்டை விட்டுப் பறக்கும் போது பெற்றோர்கள் அனுபவிக்கும் துயரத்தை ஒரு ஆசிரியர் ஒவ்வொரு வருடமும் அனுபவிக்கிறார்.
இந்தத் துயரத்தின் ஊடே ஒரு மாணவன் ஆசிரியரிடம் வந்து, ’ஸார், நான் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருக்கும் ஆசிரியர்களில் நீங்களும் ஒருவர்’ என்று சொல்லும் போது ஏற்படும் பெருமிதம் வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று. சிலருடைய வாழ்க்கையை அவர் தொட்டு சில மாற்றங்களை உண்டு பண்ணியிருக்கிறார் என்று அந்தக் கணம் உணருகிறார். அதே சமயம் அவர்களிடமிருந்தும் அவர் புதிய பாடங்களைக் கற்கிறார் என்பதும் ஒவ்வொரு ஆசிரியரும் ஒப்புக்கொள்ளும் உண்மை. பல சமயங்களில் ஒரு மாணவன் கேட்ட கேள்விக்கு உடனடியாகப் பதில் சொல்லமுடியாமல் போகும். அதற்காகப் படித்துப் பிறகு அந்த மாணவனுக்கு அதைச் சொல்லும்போது ஏற்படும் நிறைவு ஒரு ஆசிரியர் மட்டுமே உணரமுடிந்த உணர்வு.
மொத்தத்தில் ஒரு ஆசிரியர் அவரது மாணாக்கர்களின் எண்ணங்களின் வழியே அழிவில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் அவர் இறப்பின்மையை அடைகிறார்.
பெற்றோர் ஆசிரியரின் உறவு மிக மிகப் புரிதலுடன் இருந்தால் தான் மாணவனுக்கு நன்மை அளிக்கும். இதற்குப் பெற்றோர்கள் செய்ய வேண்டியவை:
- உங்கள் பிள்ளைகள் சொல்லுவதை வைத்து ஆசிரியரை எடை போடாதீர்கள். ஒரு வகுப்பு என்று எடுத்துக் கொண்டீர்களானால் உங்கள் குழந்தையை மட்டுமல்ல எல்லாக் குழந்தைகளையும் கவனிக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர் ஆசிரியர். எல்லாக் குழந்தைகளின் கற்கும் திறனும் ஒரே அளவில் இருப்பதில்லை. எல்லோரையும் சமாளிக்க வேண்டும் அவர்.
- வீட்டுப்பாடங்கள் செய்வது, சரியான நேரத்தில் வகுப்பிற்குச் செல்வது, வகுப்புகளில் ஆசிரியர் சொல்வதை முறையாக எழுதிக் கொள்வது என்று உங்கள் குழந்தைகளை முறைப்படுத்துவது உங்கள் கடமை. இப்படிச் செய்வது ஆசிரியர்களுக்குப் பலவிதத்திலும் உதவும். உங்கள் குழந்தை தவறு செய்தது என்றால் ஒத்துக் கொள்ளுங்கள் – என் பிள்ளை ஒருநாளும் தவறு செய்யவே மாட்டான் என்று ஆசிரியருடன் சண்டை போடாதீர்கள்.
- உங்கள் பிள்ளைக்கு அதிக மதிப்பெண்கள் வரவேண்டும் என்றால் நீங்கள் வீட்டிலும் அவளை படிக்க வைக்க வேண்டும். ஆசிரியர் மதிப்பெண்கள் கொடுக்கவில்லை என்று சொல்லாதீர்கள். ஆசிரியர் வகுப்பில் மந்திரம் மாயம் செய்து உங்கள் பிள்ளைக்கு அதிக மதிப்பெண்கள் வரும்படி செய்ய முடியாது.
- ஆசிரியருடன் உங்களுக்குக் கருத்து வேறுபாடு இருந்தால் அவருடன் நேரடியாகப் பேசுங்கள். அது நீங்கள் நினைத்தபடி முடியவில்லை என்றால் பிறகு தலைமையாசிரியரிடம் பேசுங்கள். ஆசிரியரை மதிக்காமல் நேரடியாக தலைமையாசிரியரிடம் போகாதீர்கள்.
- பெற்றோர் ஆசிரியர் சந்திப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சில பெற்றோர்கள் இந்த சந்திப்புகளுக்கு போகவே மாட்டார்கள். ஒருநாள் கூட ஆசிரியரை நேரில் சந்தித்துப் பேச மாட்டார்கள். இன்னும் சில பெற்றோர்கள் இந்த சந்திப்புகளின் போது அவர்களே பேசிக்கொண்டிருப்பார்கள்; மற்றவர்களுக்கு நேரமே கொடுக்காமல். இரண்டுமே வகையான பெற்றோர்களுமே கண்டிக்கத் தக்கவர்கள்.
- ஆசிரியரின் வாட்ஸ்அப் செயலிக்கு விடாமல் செய்திகள் அனுப்பிக் கொண்டிருக்காதீர்கள். அவர் அதை வைத்திருப்பது முக்கியமான விஷயங்களை தனது மாணவர்களுக்குத் தெரிவிக்க. உங்களது கண்ட கண்ட செய்திகளுக்காக அல்ல.
- நீங்கள் மிகப்பெரிய வேலையில் இருக்கலாம். ஆனால் வகுப்பில் ஆசிரியர் தான் பாஸ். மறக்கவேண்டாம்.
- ஆசிரியரைக் குற்றம் சொல்வதில் குறியாக இருக்காதீர்கள். அவரும் தவறு செய்திருக்கலாம். அவரும் மனிதர்தான். பள்ளியில் நடந்த சிறிய விஷயத்தை ஊதிஊதி பெரிதுபடுத்தி ஊர் முழுக்க பேசாதீர்கள்.
ஆசிரியருடன் நீங்கள் முழுமனதுடன் ஒத்துழைத்தால் தான் உங்கள் பிள்ளை எதிர்காலத்தில் மிகப்பெரிய மனிதனாக வருவான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.