அகநக நட்பு

 

 

 

 

friends

 

அகநக நட்பு பாகம் 1

‘நான் சென்னைக்கு வந்ததே என் சிநேகிதன் கரண் பரத்வாஜை பார்க்கத்தான், பாட்டி!’

பெங்களூரிலிருந்து வந்திருந்த என் பேரன் தேஜஸ் குரலில் இருந்த உற்சாகம் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. இருந்தாலும் அவனை சீண்டும் குரலில் கேட்டேன்:

‘ஏண்டா! என்னைப் பார்க்க வரவில்லையா?’

‘அதில்லை பாட்டி! உன்னைப் பார்ப்பதில், உன் கை சமையலை ருசிப்பதில் எனக்கு எப்பவும் ஆர்வம் உண்டு. இந்த தடவை இவையெல்லாவற்றையும் விட சந்தோஷமான விஷயம் கரண் சென்னையில் இருக்கிறான் என்பது தான். உனக்குக் கரண் தெரியுமில்லையா?’

 

‘ஓ! நன்றாகத் தெரியும். உன்னோட கூடப் படித்தவன் தானே? இருவரும் எல்கேஜியிலிருந்து தோழர்கள் ஆயிற்றே!’

 

‘ஆமாம் பாட்டி! பத்தாம் வகுப்பு வரை நானும் அவனும் ஒரே பள்ளிக்கூடம் தான். ப்ளஸ் ஒன் படிக்கும்போது நானும் அவனும் வேறு வேறு  ஸ்கூலில் சேர்ந்துவிட்டோம். நடுவில் ஒரே ஒரு முறை அவனை ஒரு வினாடி வினா நிகழ்ச்சியில் பார்த்தேன். பிறகு அவனுடன் தொடர்பு விட்டே போய்விட்டது. இப்போது சமூக வலைத்தளம் மூலம் அவன் சென்னையில் இருப்பது தெரிய வந்தது.  வாட்ஸ்அப்பில் அரட்டை அடித்தாலும், நேரில் பார்க்கும் சந்தோஷம் வருமா?’

 

அவனுடைய இந்த வயதில் நட்பு என்பது மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடிய ஒன்றுதான். நானும் இந்த வயதினை தாண்டி வந்தவள் ஆகையால் எனக்கும் அவனது உற்சாகம் புரிந்தது. எனக்கும் பள்ளிப்பருவத்தில் நிறைய தோழிகள் உண்டு. ‘இவளைச் சுற்றி எப்பவும் பத்துபேர்! பைத்தியத்தை சுற்றி பத்துப்பேர் என்பார்களே, அதுபோல..!’ என்று என் அக்கா என் அம்மாவிடம் என்னைப் பற்றிப் புகார் கூறும் அளவிற்கு பள்ளியில் தோழிகள். எல்லாம் பள்ளிவரை தான். என்னுடன் படித்தவர்கள் எல்லாம் கல்லூரிக்குப் போக நான் மட்டும் கையில் வெள்ளைப் பேப்பரைச் சுற்றிக் கொண்டு புரசைவாக்கம் ‘மீனா இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ்’ போனேன் – டைப் ரைட்டிங், ஷார்ட்ஹேண்ட் கற்றுக் கொள்ள. அந்தக் காலத்தில் எஸ்எஸ்எல்ஸி மற்றும் டைப்பிங், ஷார்ட்ஹாண்ட் தகுதி இருந்தால் ஸ்டெனோக்ராபர் வேலை எளிதாகக் கிடைத்துவிடும். எனக்கும் கிடைத்தது. பள்ளித் தோழிகள் எல்லாம் காலப்போக்கில் நினைவிலிருந்தும் மறைந்தே போனார்கள்.

 

என்னுடைய பதின்மவயதுத் தோழிகள் என்று இன்றும் என்னுடன் தொடர்பில் இருப்பவர்கள் இரண்டு பேர்கள்தான். ஜெயா மற்றும் ஜெயந்தி. ஜெயா உடனான நட்பு மறைந்ததே இல்லை. இருவரும் ஒரே பள்ளி. என்னுடன் அவளும் மீ.இ.கா –விற்கு கையில் வெள்ளைப் பேப்பருடன் வந்தவள். எங்கள் இருவருக்கும் ஒரே அலுவலகத்தில் வேலை. அதனால் எங்கள் இருவருக்கும் திருமணம் ஆன பிறகும் நட்பு தொடர்ந்தது. எனக்கும் அவளுக்கும் இடையே இருந்த ஆழமான புரிதலினால் இருவரும் அடிக்கடி பேசிக் கொள்வதில்லை என்றாலும் கூட மனதிற்குள் ஒரு நெருக்கம் இருந்தது. பல மாதங்கள் பேச மாட்டோம்; சந்தித்துக் கொள்ள மாட்டோம்.  ஆனாலும் எப்போது தொலைபேசியில் பேசினாலும், ஏதோ நேற்றுத்தான் பேசி முடித்தது போல இயல்பாக தொடரும் எங்கள் பேச்சு. ஒருவரையொருவர் குற்றம் சொல்லவே மாட்டோம். அவரவர் வீட்டு விசேஷங்களில் இருவரும் நிச்சயம் சந்தித்து கொள்வோம்.

 

ஜெயந்தி எனது பேருந்துத் தோழி. அவளது அலுவலகத்தைத் தாண்டி என் அலுவலகம். காலையில் நான் சீக்கிரம் அலுவலகத்திற்கு வந்துவிடுவேன். மாலை வேளைகளில் மட்டும் இருவரும் ஒரே பஸ்ஸில் வருவோம். இருவருக்குமே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அலுவலகம். நான் எந்த பேருந்தில் வருகிறேன் என்று பார்த்துவிட்டு அதில் ஏறுவாள் அவள். அவள் ஏறும் நொடியிலிருந்து பேச ஆரம்பிப்போம். புரசைவாக்கம் தாசப்ரகாஷ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இருவரும் தொடர்ந்து பேசிக்கொண்டே அவரவர் இல்லங்களுக்குச் செல்வோம். முதலில் எங்கள் வீடு வரும். எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்போம். விடுமுறை நாட்களில் இருவரும் கங்காதரேச்வரர் கோவில், புரசைவாக்கம் டேங்க் என்று சுற்றிக் கொண்டே பேசுவோம்; பேசிக்கொண்டே சுற்றுவோம். எனது திருமணத்திற்குப் பிறகு நான் புரசைவாக்கத்திலிருந்து அசோக் நகர் போய்விட்டதால் ஜெயந்தியுடனான என் நட்பு புரசைவாக்கத்திலேயே தங்கி விட்டது.

 

ஆனால் என்ன அதிசயம் எங்கள் நட்பில் என்றால் 33 வருடங்களுக்குப் பிறகு எனது எழுத்தின் மூலம் அவளை மறுபடியும் சந்தித்தேன். எனது வலைத்தளத்திற்கு யதேச்சையாக வந்து படித்துவிட்டு, ‘புரசைவாக்கம் ரஞ்சனி தானே நீ?’ என்று கேட்டு எழுதியிருந்தாள். விட்டுப் போன நட்பை தொலைபேசி மூலம் தொடர்ந்தோம். நேரிலும் சந்தித்தோம்.

 

நாங்கள் இருவரும் மீண்டும் சந்தித்த அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அவள் அப்போது பெங்களூரில் இருந்தாள். அவளுக்கு சென்னை புதிதல்ல என்றாலும் அவள் என் வீடு வரும் வரை எனக்குப் பொறுமையில்லை. அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் சென்ட்ரல் ஸ்டேஷனுக்குச் சென்றேன். அவள் வரும் சதாப்தி ரயில் சென்ட்ரலில் நுழைந்ததுமே என் பரபரப்பு அதிகமானது. அவள் இறங்கும் வரை காத்திருக்காமல் அவள் சொல்லியிருந்த கம்பார்ட்மெண்டில் நானே ஏறிப் போய்ப் பார்த்தேன். அவள் இல்லை. கடைசி நிமிடத்தில் பிரயாணத்தை ரத்து செய்துவிட்டாளோ, இல்லை வேறு ஏதாவது காரணத்தால் வரமுடியாமல் போய்விட்டதோ என்று மனது அலைபாயத் தொடங்கியது.

 

ரயிலில் அவளைக் காணாமல் ஏமாற்றத்துடன் இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தபோது அவள் அடுத்த கம்பார்ட்மெண்டிலிருந்து இறங்குவது தெரிந்தது. ‘ஜெயந்தி!’ என்று கூவியவாறே ஓடிப்போய் அவளை அணைத்துக்கொண்டேன். அப்பா! அவளைப் பார்த்துவிட்டேன்! என்ன ஒரு ஆசுவாசம்! எங்களது 33 வருடப் பிரிவையும் அந்த ஒரே அணைப்பில் தீர்த்துக் கொள்ளப் பார்ப்பது போல இருவரும் அந்த அணைப்பின் இறுக்கத்தில் நெகிழ்ந்து போயிருந்தோம்.

 

‘என்ன பாட்டி! பழைய நினைவுகளா?’ பேரனின் குரலில் நிஜ உலகிற்கு வந்தேன். குளித்துவிட்டு வெளியில் கிளம்பத் தயாரான நிலையில் இருந்தான்.

சிரித்துக் கொண்டே, ‘ஆமாம்டா!’ என்றேன்.

‘கரணை அழைத்துக் கொண்டு மெரீனா பீச் போகவேண்டும்; கன்னிமாரா போக வேண்டும். அவனும் என்னை மாதிரி தான் நிறைய புத்தகங்கள் படிப்பான்……!’

என்னைப்போலவே பேரனும் தனது தோழனின் நினைவிலேயே திளைத்துக் கொண்டிருப்பது புரிந்தது.

‘டிபன் சாப்பிட வா முதலில். எப்போது அவனைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருக்கிறாய்?’

‘அவன் அசோக் நகரில் இருக்கிறான். நான் மதிய உணவிற்கு அவனை சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறேன்….’

‘அசோக் நகரிலா?’

‘ஆமாம் பாட்டி? அசோக் நகர் பில்லர் அருகில் தான் அவனது அலுவலகம் இருக்கிறது……..’

நான் யோசனையுடன், ‘ஓ!……….’ என்றேன்.

‘என்ன பாட்டி! அசோக் நகரில் உன் தோழிகள் யாராவது இருக்கிறார்களா? மறுபடியும் பழைய நினைவுகளுக்குள் போய்விட்டாயா? சரி, சாயங்காலம் நான் வரும்வரை மலரும் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிரு. நான் என் சிநேகிதனைப் பார்த்துவிட்டு வருகிறேன்…’ என் பதிலுக்குக் கூட காத்திருக்காமல் உற்சாகத்துடன் வெளியேறினான் தேஜஸ்.

 

திருமணம் ஆகி நான் வந்து சேர்ந்த இடம் அசோக் நகர். அங்கு எதிர்பாராதவிதமாக அம்முடுவை சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. என் அக்காவின் மூலம் தான் விமலா மாமி, சதாசிவம் மாமா குடும்பம் அசோக்நகரில் இருப்பது எனக்குத் தெரிய வந்தது. மாமா இல்லை. மாமி மட்டும் அம்முடுவுடன் இருக்கிறாள் என்று என் அக்கா சொன்னாள். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று சரியாக அக்காவிற்கும் தெரியவில்லை.

 

கணவருடன் வெளியே போகும்போதெல்லாம் என் கண்கள் என் பால்யகால சிநேகிதியைத் தேடும். திருமணத்திற்குப் பிறகு நான் நிறைய மாறிவிட்டேன். அது போலவே அவளும் மாறியிருக்கலாம், இல்லையா? இத்தனை வருடங்களுக்குப் பின் பார்த்தால் அடையாளம் தெரியுமா? நிச்சயம் தெரியும் என்று எனக்குள் ஒரு அசையாத நம்பிக்கை!

 

விமலா மாமியின் இரண்டாவது பெண் தான் அம்முடு என்கிற கல்யாணி. நாங்களும் அவர்களும் திருவல்லிக்கேணியில் ஒரே வீட்டில் பக்கத்துப் பக்கத்து போர்ஷனில் பல வருடங்கள் இருந்தோம். அவர்கள் வீட்டில் நான்கு குழந்தைகள் – மூன்று பெண்கள் ஒரு பிள்ளை; நாங்களும் நால்வர் –  இரண்டு பிள்ளைகள்; இரண்டு பெண்கள். நாங்கள் எல்லோருமே பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம். பள்ளி முடிந்து மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் நாங்கள் எட்டு பேரும் அடித்த லூட்டிகள் இப்போது நினைத்தாலும் இனிப்பவை.

 

அதுவும் அம்முடுவை யாராலும் மறக்க முடியாது. பிற்காலத்தில் சரிதாவின் திரைப்படங்களைப் பார்க்கும்போது எனக்கு அம்முடு நினைவுதான் வரும். பெரிய கண்கள். குண்டுக் கன்னங்கள். படபடவென்று வாய் ஓயாத பேச்சு. சரிதா போலவே சற்று இரட்டைநாடி அம்முடுவும். சுருட்டைத் தலைமுடி. சுருட்டைத் தலைமுடி என்றால் பொதுவாக குட்டையாகத்தான் இருக்கும். ஆனால் அம்முடுவிற்கு முழங்காலுக்குக் கீழ் தொங்கும். அவளுக்குத் தலைவாரிப் பின்னுவது என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. அதுவும் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வந்தால் என் அம்மா மணிக்கணக்கில் அவளது கூந்தலை நிதானமாக இழைய இழைய வாரி, வாரி சிக்கெடுத்து மணிமணியாகப் பின்னி விடுவாள்.

 

அந்தக் கூந்தலுக்காகவே சிலப்பதிகாரம் நாடகத்தில் அவள் கண்ணகியாக நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். ஆ! இந்த நாடகம் நாங்கள் போட்டது மறக்க முடியாத ஒரு நிகழ்வு. வருடாவருடம் கோடை விடுமுறையில் எங்களைக் கட்டி மேய்ப்பது எங்கள் பெற்றோர்களுக்குப் பெரும் சவால். அதுமாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில் ஒருமுறை சதாசிவம் மாமா வீட்டில் இருந்த சமயம். நாங்கள் போடும் சத்தம் அவரை சற்றுக்கூட ஓய்வு எடுக்கமுடியாமல் செய்துவிட்டது. வந்து ஒரு சத்தம் போட்டார் பாருங்கள். நாங்கள் எல்லோரும் சகல நாடியும் அடங்கி உட்கார்ந்துவிட்டோம். சற்று நேரம் கழித்து அவரே எங்களை அழைத்தார். ‘இப்படி நேரத்தை வீணாக்கலாமா? ஏதாவது உருப்படியாகப் பண்ணுங்களேன்’ என்றார். நாங்கள் எல்லோரும் அவரே ஒரு ஐடியா கொடுக்கட்டும் என்று பேசாமல் அவர் முன்னே நின்று கொண்டிருந்தோம். இந்தக் காலம் போல சம்மர் கேம்ப், பாட்டு வகுப்பு, நடன வகுப்பு என்பதெல்லாம் அப்போது அபூர்வம். வீட்டிற்குள்ளேயே ரகளை செய்துகொண்டிருப்போம். மாமா சற்று நேர யோசனைக்குப் பிறகு ஏதாவது நாடகம் போடுங்கள் என்று சொன்னார். மாமாவே கலைத்துறையைச் சார்ந்தவர் தான். அதுவும் திரைப்படத்துறை கலைஞர்களுடன் நெருங்கிப் பழகுபவர். அவர் நாடகம் போடுங்களேன் என்று சொன்னதுதான் தாமதம் ‘ஓ’ என்று சந்தோஷக் கூச்சலிட்டோம்.

 

அடுத்த பகுதி நாளை……

 

One thought on “அகநக நட்பு

Leave a comment