ஒரு இந்தியனாக நாம் செய்யக்கூடியது என்ன?

R day

 

69 சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த நாளில் நாம் செய்ய வேண்டியது என்ன என்று பட்டியல் போடுகிறார் கடைசிபெஞ்ச் திரு பாண்டியன். அவரது பதிவிலிருந்து எடுத்தது இது. இந்தியனாக பெருமை கொள்ளலாம் என்பதற்கு இவர் சொல்லும் காரணங்களையும் இந்தப் பதிவில் படியுங்கள். நான் படித்த சுதந்திர தினப் பதிவுகளில் மிகச் சிறந்த பதிவு இது.

சுதந்திரதின நிகழ்வுகள் – முழு பதிவும் படிக்க

அவரது முன் அனுமதியுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுகிறேன்.

 

Help yourself against paid agenda:

ஜாதி, இனப்பிரச்சினை இந்தியாவில் தீர்ந்துவிடக்கூடாது என்று பணத்தை வாரி இறைக்கும் கும்பல் இருக்கிறது. அவர்களிடமிருந்து காத்துக்கொள்ள குறைந்த பட்சம் நேர் மறை சிந்தனை கொண்டிருப்பது அவசியம்.

Help yourself against linguistic politics:

தமிழ்தான், இந்தி எதிர்ப்பு, ஆக்கிரமிப்பு என்கிற மிகை வாசகங்களைப் புறம் தள்ளுங்கள். உங்கள் நண்பர்களே ஆனாலும் புறக்கணியுங்கள். தமிழகம் விட்டு வெளியே வந்து வேலை செய்யும் எங்களுக்குத் தெரியும் ஒரு பொது மொழியின் அவசியம். அது இந்தியாக இருந்தாலும் சரியே. தமிழ் மொழி தவிர வேறு தெரியாது என்பதனால் வெளி நாடுகளில் தமிழர்கள் பிற இந்தியர்களுடன் கலக்க முடியாதிருக்கிறார்கள் என்பதை உணருங்கள். ஹிந்தியும் தெரியாது, தமிழும் தெரியாது என்கிற கேவல தமிழர் கூட்டத்தில் நீங்களோ உங்கள் குழந்தைகளோ தவறியும் சேராதீர்கள். இந்தி எதிர்ப்பு என்பது காவிரி அரசியல், இலங்கை அரசியல் மாதிரி ஒரு அரசியல் அஜெண்டா என்பதை உணருங்கள்.

Help yourself against social media:

சமூக வலை என்பது சீழ் பிடித்து நாறும் மனங்களின் மன்று கூடுகைகளாக மாறி வருகிறது. தள்ளி இருங்கள். அவசியமில்லாத ஒன்று கண்ணில் பட்டால் அதற்கெதிரான நடவடிக்கை எடுங்கள்.  பிறர் உங்களுக்குத் தரவேண்டிய மரியாதையை பிறருக்கும் அளியுங்கள். இனிய இணையம் என்பது ஒவ்வொருவரின் பங்களிப்பு.

Help yourself against negative publicity:

எதிர்மறை கருத்துகள் கூறி புகழ் பெற ஒரு கும்பல் துடிக்கிறது. இந்தியாவிற்கெதிரான எந்த உணர்வையும் வளர்த்துவிட இவை காத்திருக்கின்றன. இந்தியாவிற்கு எதிராக பணம் தரும் எவனாவது பிச்சை போடமாட்டானா என்று காத்திருக்கின்றன. பிச்சை கிடைத்துவிட்டால தன்னைச் சுற்றி ஒரு 10 பேரை மனம் மாற்ற, மதம் மாற்ற விளைகின்றன. துஷ்டனைக் கண்டால் தூரவிலகு.

Help yourself against anti-nationalists:

மன்மோகனைப் பிடிக்கும் பிடிக்காது. மோடியைப் பிடிக்கும் பிடிக்காது. யாருக்காகவும் தேசீயத்தை விட்டுக்கொடுக்கலாகாது. மதம் வேறு தேசியம் வேறு. அதைக் கலக்கி, கலகம் விளைவித்து, குளிர் காய காத்திருக்கும் வீணர்களிடம் சிக்காதீர்கள்.

Help your kids against evil minds:

பேசுங்கள். கதை பேசுங்கள். அவர்களுக்கு தங்கள் அடையாளத்தைக் கதையாகச் சொல்லிக் கொடுங்கள். டிவி டிவியாக இருக்கட்டும். உங்கள் குழந்தைகளின் செவிலி ஆக வேண்டாம்.

 

இவர் எழுதியிருக்கும் மற்ற விஷயங்கள்:

ஊடக தர்மமும், அதர்மமும்

இந்தியா – பங்களாதேஷ் நிலப்பங்கீடு

இந்திய பங்களாதேஷ் உறவு மேம்பாடு

வட கிழக்கு மாநிலங்கள்

வெளியுறவுகள்

 

பாராட்டுக்கள், பாண்டியன்.

என்ன ஊரு இது?

NATIONAL FLAG.jpg4

 

காலைல எழுந்தா தண்ணி வருமா? மின்சாரம் இருக்குமா? ரேஷன் கடைல இன்னிக்காவது சர்க்கரை வந்திருக்குமா? – அன்றாடம் காய்ச்சிகளின் பிரச்னை இது.

என்ன ஊரு இது! வேறெங்காவது பிறந்திருக்கலாம்!

 

குண்டும் குழியுமா இருக்கிற தெருக்களில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு போவது தினசரி சர்க்கஸ். நாம் சாலை விதிகளை கடைபிடித்தாலும், எதிர்பாராத தருணத்தில் சின்ன சந்திலிருந்து வரும் டெம்போ. அதை ஓட்டும் விடலைப் பையனுக்கு தான் பிஎம்டபிள்யு ஓட்டுவதாக நினைப்பு. தடாலென்று இடப்பக்கம் ஒடித்து அங்கு அன்னநடை பயிலும் பாட்டியை எமதர்மனிடமிருந்து அப்போதைக்குக் காப்பாற்றி அந்தப் பெருமிதத்தில் முழு வீச்சில் ஆக்சிலரேட்டரை அழுத்துகிறான். தினமும் நடக்கும் நிகழ்வு என்றாலும் ஒவ்வொருமுறையும் இதயம் அலறுகிறது.

 

தான் ஒரு சுதந்திரத் தியாகி என்று செப்புப்பட்டயத்தை வாங்க படாதபாடு பட்ட ஒருவரின் நிஜ அனுபவங்களை இன்றைக்கு செய்தித்தாளில் படித்தேன். 32 வருடங்களில் அவர் தட்டிய கதவுகள் 321. அவர் ஏறி இறங்கிய படிகள் 60,000. எழுதிய கடிதங்கள் 1043. நீதி மன்ற முறையீடுகள் 2300. இப்படியாவது செப்புப்பட்டயம் தேவையா என்று தோன்றுகிறது. ‘எனக்கு உதவித்தொகை வேண்டுமென்பதற்காக இதைச் செய்யவில்லை. எனக்கு ஒரு அங்கீகாரம், மற்றும் மரியாதை வேண்டும் என்பதற்காக இத்தனை அலைச்சல்கள்’ என்கிறார் 85 வயதான, மும்பையை சேர்ந்த கௌர் ஹரி தாஸ். இவரது இந்த தொடர் முயற்சி திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. திரு அனந்த் மகாதேவனின் இயக்கத்தில். கௌர் ஹரி தாஸ் ஆக திரு விஜய் பாதக் நடித்திருக்கிறார்.

 

இதைப்போல இன்னும் எத்தனை எத்தனை தியாகிகள் தங்கள் ஊண் உறக்கம் மறந்து சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார்களோ, தெரியாது. இவர்களைப் பற்றிய பெருமிதம் இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் இந்தத் தலைமுறைக்கு நமது சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார் என்று தெரியாத – இன்றைக்கு ஒரு ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் கேட்ட கேள்விக்கு வந்த பதில்கள் ஏற்படுத்திய – வெட்கக்கேடு ஒரு பக்கம்.

 

ஒவ்வொரு முறையும் என்ன ஊரு இது என்று சலித்துக் கொண்டாலும், வேற எங்கயாவது பிறந்திருக்கலாம் என்று அலுத்துக் கொண்டாலும் சுதந்திர தினம் என்றால் மனதில் ஒரு உற்சாகம் பிறக்கிறதே, பட்டொளி வீசிப் பறக்கும் மூவர்ணக் கொடியைப் பார்த்தால் அசாத்திய புத்துணர்வு உண்டாகிறதே, தேசிய கீதம் பாடும் போது கண்கள் பனிக்க எழுந்து நிற்க செய்கிறதே இதற்குப் பெயர் தான் தேசபக்தியோ?

 

குறைகளுக்கு அப்பாற்பட்டவள் நம் அம்மா என்றால் தாய் நாடும் அப்படித்தானே? எல்லா குறை நிறைகளுடன் நான் இந்தியன் என்கிற பெருமையுடன் என் நாட்டைப் போல வருமா என்ற பெருமிதத்துடன் சுதந்திர தின வாழ்த்துக்கள்!

ஸ்ரீரங்கத்து வீடு – கொள்ளுப்பாட்டியும், கொள்ளுத் தாத்தாவும்

ஸ்ரீரங்கத்து வீட்டை மேற்கொண்டு பார்ப்பதற்கு முன் இந்த வீட்டின் நாயகி ஸ்ரீரங்கம்மாவைப் பார்த்துவிடலாம். தாத்தா பெயர் திருமஞ்சனம் ராமானுஜம் ஸ்ரீனிவாச ஐய்யங்கார். திருமஞ்சனம் எனும் குடும்பப்பெயரானது உடையவரின் காலத்திலிருந்து வழக்கத்தில் இருக்கிறது. திருமஞ்சனம் என்பது ஸ்ரீரங்கம் கோவில் பெருமாளுக்கு செய்விக்கப்படும் புனித நீராடலைக் குறிக்கிறது. இந்தக் குடும்பத்தின் முன்னோர்களுள் ஒருவரான திருவரங்கவள்ளலார்  என்பவர் எம்பெருமானாரால் பெருமாளின் திருமஞ்சனக் கைங்கர்யம் செய்ய பணிக்கப் பட்டவர். திருக்கரகக்கையார் என்று இவரை கூப்பிடுவது வழக்கம். ஐய்யங்கார் என்பதற்கு ஐந்து அங்கம் கொண்ட ஸம்ஸ்காரம் செய்து கொண்டவர்கள் என்று பொருள்.

 

பாட்டி அவளது பெற்றோருக்கு ஒரே பெண். கூடப்பிறந்தவர்கள் யாரும் கிடையாது. என் அம்மா அடிக்கடி – இப்போது கூட சொல்லும் விஷயம் ஒன்று இங்கு நினைவிற்கு வருகிறது. சிறுவயதில் என் அம்மாவிற்கு ‘மாமா’ என்று ஒரு உறவு முறை இருப்பதே தெரியாதாம். மாமா மாமி எல்லாம் அயலகத்தவர்களை அழைக்கும் சொற்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தாளாம். ஒருமுறை அம்மாவின் சிறுவயதுத் தோழி தன வீட்டிற்கு தனது மாமா வந்திருப்பதாகக் கூறியதை அம்மாவால் புரிந்துகொள்ள முடியவில்லையாம். தன் அம்மாவிடம் வந்து கேட்டபோது தான் தாயின் கூடப் பிறந்தவர்கள் மாமாக்கள் என்று தெரிந்து கொண்டாளாம்.

 

ஸ்ரீரங்கத்து வீடு என் பாட்டிக்கு அவளது பெற்றோர்களால் சீதனமாகக் கொடுக்கப்பட்டது. பாட்டியின் குழந்தைகள் யாருமே இந்த வீட்டில் பிறக்கவில்லை. தாத்தாவிற்கு மாற்றல் வேலையாதலால் குழந்தைகள் வேறு வேறு ஊரில் பிறந்தவர்கள். ஆனால் நாங்கள் – பாட்டியின் பெண் வயிற்றுப் பேரன் பேத்திகள் – இந்த வீட்டில் பிறந்தவர்கள் என்பதில் எனக்குப் பெருமை அதிகம்.

 

என்னைவிட நன்றாக ஸ்ரீரங்கம் பற்றியும், எங்கள் பாட்டி பற்றியும் எழுதக் கூடிய பாட்டியின் மற்ற பேரன்கள், பேத்திகள் இருக்கிறார்கள். ஆனால் ஏனோ அவர்களுக்கெல்லாம் இந்த விஷயங்களைப் பற்றி எழுத முயற்சி இல்லை. எனக்கும் ஸ்ரீரங்கத்திற்குமான தொடர்பு கோடை விடுமுறையின் இரண்டு மாத காலம் மட்டுமே. அப்போது நான் பார்த்த நிகழ்வுகளை மட்டுமே இங்கு பதிவு செய்கிறேன். அவற்றைத் தவிர என் அம்மா அவ்வப்போது எங்களுக்குச் சொன்ன விஷயங்களையும் எழுதுகிறேன்.

 

பாட்டி ஒரே பெண்ணாக இருந்தும் பாட்டிக்கு மக்கள் செல்வத்திற்கு பெருமாள் எந்தக் குறைவும் வைக்கவில்லை. தாத்தாவைப் பற்றி அதிகம் தெரியாது. நிறையப் படித்தவர் – கல்லூரி படிப்பு என்பதைத் தாண்டி புத்தகங்களை நேசித்தவர். தாத்தா பஞ்சக்கச்சம் கட்டிக் கொண்டு கோட் போட்டுக்கொண்டு தலையில் தொப்பியுடன், கையில் வாக்கிங் ஸ்டிக்குடன் உட்கார்ந்திருக்கும் போட்டோ ஒன்று எங்கள் குடும்ப ஆல்பத்தில் இருக்கிறது. நெற்றியில் திருமண் ஸ்ரீசூர்ணம் துலங்கும் கம்பீரமான உருவம். நல்ல லட்சணமான முகம். அந்தக் கால வழக்கப்படி கையில் வாக்கிங் ஸ்டிக் வைத்திருப்பார்.  பெரியவர்கள் மட்டுமில்லாமல், குழந்தைகள் கூட அந்தக் காலத்தில் தொப்பி போட்டிருப்பார்கள். எங்கள் முன்னோர்கள் சிலரின் புகைப்படங்களில் அவர்கள் தொப்பி அணிந்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அந்த நாளைய Fashion Statement!

 

இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்ஸ் ஆகவும், மிகச் சிறந்த ஆசிரியராகவும் இருந்தவர் தாத்தா என்று அம்மா, மாமாக்கள் சொல்லுவார்கள். அருணாச்சல கவிராயரின் இராமநாடகப் பாடல்களை இராகத்துடன் தாத்தா பாடுவார் என்று என் அம்மா சொல்வாள். அம்மாவும் அந்தப் பாடல்கள் பலவற்றைப் பாடுவாள். திருமூலரின் திருமந்திரங்கள் புத்தகத்தையும் தாத்தா படித்ததற்கு அடையாளமாக அங்கங்கே கோடிட்டும், பக்கங்களில் எழுதியும் வைத்திருப்பாராம். ஆனால் தாத்தாவின் தொழிலான ஆசிரியர் தொழிலை அவரது பிள்ளைகள் யாரும் பார்க்கவில்லை. பல வருடங்கள் கழித்து நான் ஆங்கிலம் பேசச் சொல்லித் தரும் ஆசிரியை ஆனபோது என் அம்மா சொன்னாள்: ‘என் அப்பாவிற்குப் பிறகு நீதான் நம்மாத்தில் ஆசிரியை ஆகியிருக்கிறாய்’ என்று.

 

தாத்தாவிற்கு நேரம் கிடைக்கும்போது குழந்தைகளை அழைத்துக் கொண்டு நீள நடந்து போவாராம். நடந்து போகும்போது விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லிக் கொடுப்பாராம். தாத்தாவின் அம்மா (எங்கள் கொள்ளுப்பாட்டி) நெடுநாட்கள் நீண்ட ஆயுளுடன் எங்கள் பாட்டியுடன் இருந்திருக்கிறார். பளிச்சென்று இருப்பாராம் இந்தப் பாட்டி. ஆனால் இவருக்கு ஸ்ரீரங்கத்தில் கருப்பச்சிப் பாட்டி என்று பெயராம். இந்தப் பாட்டியிடமிருந்துதான் நறுவிசு தங்களுக்கு வந்திருப்பதாக அம்மா சொல்லுவாள். கொள்ளுப்பாட்டி ரொம்பவும் அப்பாவியாம். சூது வாது தெரியாதவர்; புடவையில் ஏதாவது மறைத்து எடுத்துக்கொண்டு போனால் கூட என்னவென்று கேட்க மாட்டார் என்று அம்மா நிறைய சொல்லுவாள். குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில் இந்தப் பாட்டிக்கு நிகர் யாருமில்லை என்று இன்னும் சொல்லிக் கொண்டிருப்பாள் அம்மா. என் அம்மா தன சிறு வயதில் கணவனை இழந்த எங்கள் பாட்டிக்கு ஒரு மிகப்பெரிய பலமாக இந்தப் பாட்டி இருந்திருக்கிறார். மிகச் சிறந்த மாமியாராக இருந்திருக்கிறார்.

 

குழந்தைகளை அப்படிப் பார்த்துக் கொள்வாராம் கொள்ளுப்பாட்டி. நிறைய பாடல்கள், கதைகள் சொல்லி விளையாட்டுக் காண்பிப்பாராம். குழந்தைகளுக்கு இரண்டு மூன்று வயதிற்குள் எண்ணுவதற்கு, கூட்டுவதற்கு, கழிப்பதற்கு எல்லாம் சொல்லிக் கொடுத்து விடுவாராம் பாட்டி. தமிழில் ‘அ, ஆ’ தொடங்கி, அ,ம்,மா=அம்மா என்று சொல்லிக் கொடுப்பாராம். அதேபோல க,ஞ, ச,ங வும் சொல்லிக் கொடுத்து விடுவாராம். இந்தப் பாட்டிக்கு இரண்டு பிள்ளைகள். எங்கள் தாத்தா, அவரது அண்ணா. கோர்ட்டில் ஜட்ஜ் ஆக இருந்ததால், கோர்ட் அண்ணா அவர். கணவனை இழந்து, இரண்டு பிள்ளைகளையும் இழந்து ரொம்பவும் துக்கப்பட்டிருக்கிறார் இந்தப் பாட்டி.

 

எங்கள் கொள்ளுத் தாத்தாவைப் பற்றிய ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் நாளை சொல்லுகிறேன்.

 

இரக்கமில்லாத நகரங்கள்!

ரயில்வே மட்டுமல்ல எந்தவித போக்குவரத்து சாதனங்களும் பயனீட்டாளர்களின் நண்பர்களாக இருப்பதில்லை. பேருந்துகளில் ஏறுவது கஷ்டம் என்றால் பேருந்து நிற்காமலே போவது இன்னும் கொடுமை. நாம் ஏறுவதற்குள் அவசரப்படுத்துவது இல்லையென்றால் ‘நீங்கள்ளாம் ஏம்மா வெளில வரீங்க? வீட்டுக்குள்ள உட்கார வேண்டியது தானே?’ என்று சத்தம் போடுவது. நாம் மட்டும் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தால் பேருந்தை நிறுத்தாமலே போவது என்று அராஜகம் தான்.

 

அன்று ஒரு நாள் இரவு சென்னையிலிருந்து திரும்பி வந்து ஒரு வாடகை வண்டி ஏற்பாடு செய்துகொண்டு வீட்டிற்கு வரும் வழியில் அந்த இளம் வயது ஓட்டுனர் வண்டியோட்டிய  வேகத்தைப் பார்த்து நாங்கள் இருவருமே பயந்துவிட்டோம். இரவு என்றால் ஒருவழிப்பாதையிலும் புகுந்து விடுவார்கள். ஓரிடத்தில் தெருவிளக்குகளும் சரியாக இல்லை. இருட்டில் சர்ரென்று வந்த வேகத்தைப் பார்த்து நான் சொன்னேன்: ‘நிதானமாகப் போங்கள். எங்களுக்கு அவசரமாக மேலே போக வேண்டாம்’ என்று. ‘என்னம்மா இப்படிப் பேசுகிறீர்கள்? நீங்கள் என் அப்பா அம்மா மாதிரி. உங்களை பத்திரமாக வீட்டில் கொண்டு போய் சேர்ப்பது என் பொறுப்பு. கவலைப்படாமல் வாருங்கள். நான் அத்தனை வேகமாகப் போகவில்லை. உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது’ என்றார் அந்த வண்டி ஓட்டுனர்.

 

பரவாயில்லை நான் சொன்னதை யதார்த்தமாக எடுத்துக் கொண்டிருக்கிறாரே என்று கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. நான் சொன்னேன்:’சின்ன வயது உங்களுக்கு. எங்களைப் போல அத்தனை பொறுமை இருக்காது. நாங்களும் ஒருகாலத்தில் இப்படி இருந்திருப்போமோ என்னவோ, இப்போது கொஞ்சம் வேகம் என்றாலும் பயம் வந்துவிடுகிறது’ என்றேன். மேலும் ‘எங்கள் வயது வரும்போது உங்களுக்கு புரியும்’ என்றேன்.உடனே அவர்,’ நாங்கள் உங்கள் வயதெல்லாம் இருக்க மாட்டோம்மா, உங்களைப் போன்ற ஆரோக்கியம் எங்களுக்கு இல்லை’ என்றார். நான் சொன்னேன்: ‘அப்படியில்லை. நிச்சயம் நீங்கள் நூறு வயது இருப்பீர்கள். நூறாவது பிறந்தநாளின் போது என்னை நினைத்துக் கொள்வீர்கள்!’ என்றேன்.

 

அவருக்கு ரொம்ப சந்தோஷம். ‘நிம்ம ஆஷீர்வாத நிஜவாகலி’ என்று மகிழ்ச்சியுடன் திரும்பத் திரும்ப சொன்னார். என்னுடைய ஆசீர்வாதம் அவரைக் கொஞ்சம் நிதானமாகப் போக வைத்தது. நாங்கள் வீட்டின் முன் இறங்கியவுடன் எங்கள் பெட்டிகளை லிப்ட் வரைக்கும் கொண்டு வந்து வைத்ததுடன் பேசிய தொகையை வாங்கிக் கொண்டு விடை பெற்றார்.

 

இந்தியாவில் 81 மில்லியன் வயதானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நமது நகரங்களின் கட்டமைப்பு முதியவர்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. நடைபாதை இருப்பது நாம் நடப்பதற்கே. ஆனால் சிக்னலில் நிற்க பொறுமையில்லாத இளம் வயதுக்காரர்கள் நடைபாதை மேலேயே அவர்கள் வாகனங்களுடன் வருகிறார்கள், என்ன செய்ய? ஏற்கனவே பள்ளம் மேடாக இருக்கும் நடைபாதையில் இருசக்கர வாகனங்களின் தொல்லை வேறு. வயதானவர்கள் மட்டுமல்ல; இளம் சிங்கங்களும் இது மேல் நடக்கத் திண்டாடுவார்கள்.

 

வெளிநாடுகளில் வயதானவர்களுக்கு மட்டுமில்லாமல் பாதசாரிகளுக்கும் மரியாதை உண்டு. ’நடந்து செல்ல உரிமை’ இருப்பதுடன் அவர்களும் கண்ட இடத்திலும் வீதியைத் தாண்ட மாட்டார்கள். வண்டிகள் போகும்வரை காத்திருந்து ஜீப்ரா கிராசிங்கில் மட்டுமே வீதியைக் கடப்பார்கள்.

 

பெங்களூரின் சிலபகுதிகளில் இருக்கும் நடை பாலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் படிகள் நம் முழங்காலைப் பதம் பார்ப்பனவாக இருக்கின்றன. ஆ! சொல்ல மறந்துவிட்டேனே! எங்களூரில் இருந்து சென்னை செல்லும் டபிள் டக்கர் ரயில் வண்டியைப் போல அசௌகரியமான ரயில் வண்டியை நீங்கள் எங்குமே பார்க்க முடியாது. மேலே இருக்கும் சீட்டுகளுக்குச் செல்ல ஏறமுடியாமல் ஏறிச் செல்லவேண்டும். கீழே இருக்கும் சீட்டுகளுக்குச் செல்ல இறங்க முடியாமல் இறங்கிச் செல்ல வேண்டும். படிகள் ஒவ்வொன்றும் முழ உயரம். இவற்றின் மேல் ஏறிஇறங்க நம் கையில் ஏணி கொண்டு செல்லவேண்டும். சரி நடுவில் உட்கார்ந்து கொண்டு செல்லலாம் என்றால் கதவைத் திறந்துகொண்டு செல்லும் பயணிகளுடைய அட்டகாசம் சொல்லொணாது. கதவின் மேல் slide என்று போட்டிருக்கும். இவர்கள் தங்கள் முழு சக்தியை பயன்படுத்தி அதை push அல்லது pull செய்யப்பார்ப்பார்கள். ஒருமுறை இந்த சீட்டில் இடம் கிடைத்து, கதவருகில் வருபவர்களுக்கு slide, slide என்று சொல்லியே நொந்து போனேன்.

 

அந்தக்காலத்தில் முன்பதிவு என்பதே கிடையாது. கிடைத்த ரயிலில் கைக்குழந்தைகளுடன் ஏறிக்கொண்டு சென்றோம். இப்போது நமக்கு சௌகரியங்கள் தேவைப்படுகின்றன. எல்லாம் முன்னேறியது போல ரயில்வே நிர்வாகமும் முன்னேற வேண்டும் இல்லையா?

 

தொடரும்…….

இக்கட்டான பயணம்

 

ஒரு பக்கம் மெட்ரோ ரயில்கள் எல்லாப் பெருநகரங்களிலும் ஓட ஆரம்பித்திருக்கின்றன. இதுவரை எங்களூரில் போய்ப் பார்க்கவில்லை. ஒருமுறை டெல்லியில் சும்மா இந்தப் பாயிண்டிலிருந்து அந்தப் பாயின்ட் வரை போய்விட்டு வந்தோம். அப்போது அதிசயமாக இருந்தது. ‘ஃபாரின் மாதிரி இருக்கு’ என்று வியந்தோம். கதவுகள் தாமாகவே திறப்பதும், மூடுவதும், அடுத்த ரயில் நிற்கும் இடம் பற்றிய அறிவிப்பும் குளுகுளு ரயில் கம்பார்ட்மெண்டுகளுமாக சீக்கிரம் நம்மூரில் வந்துவிடும் என்று சந்தோஷமாகப் பேசிக் கொண்டு வெளியே வந்தோம்.

 

ஆனால் நீண்ட தூரம் ஓடும் ரயில்களில் பிரயாணிகளின் தேவைக்கேற்ப வசதிகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். அவற்றைப் பற்றித்தான் இந்தப் பதிவு.

 

இப்போதெல்லாம் ரயில்கள் பொதுவாக சரியான நேரத்திற்கு ஓடிக் கொண்டிருக்கின்றன என்று தோன்றுகிறது. எங்கள் வண்டி சரியான நேரத்திற்குப் போய்விட்டது. வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் ரயில்கள் பரவாயில்லை என்று சொல்லலாம். போனமுறை சென்னையிலிருந்து திரும்பிய போது பயோ டாய்லட்டுகள் பொருத்தப்பட்ட வண்டி என்று போட்டிருந்தது. இந்த வகை டாய்லட்டுகள் எப்படி இயங்குகின்றன என்று சரியாகப் புரியவில்லை. வடமாநிலங்களுக்குப் போகும் ரயில்கள் இன்னும் அழுக்காக இருக்கின்றன என்று தோன்றுகிறது. இப்படி நினைத்துக் கொண்டே பிரயாணம் செய்யும்போது சில பெரிய ரயில் நிறுத்தங்களில் குளிரூட்டப்பட்ட கோச்களின் கண்ணாடி ஜன்னல்களை ஸ்ப்ரே போட்டு துடைத்துவிட்டு விட்டுப் போனார்கள். இத்தனை நேரம் பயணம் செய்யவேண்டிய ஒரு வண்டியில் Pantry வேன் இல்லை. டீ, காபி கூட வெளியிலிருந்துதான் வரவேண்டும். அந்தந்த ரயில் நிலையங்களில் விற்பவர்கள் வந்து விற்றுவிட்டு அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிடுகிறார்கள். சாப்பாடு சாப்பாடு என்ற ஆர்டர் வாங்கிக் கொண்டு அடுத்த சந்திப்பில் வாங்கி வந்து கொடுக்கிறார்கள். ஏதோ அதுவாவது கிடைக்கிறதே என்று சந்தோஷப்படலாம். டாய்லெட்டில் நீர் வருகிறதே என்று சந்தோஷப்படலாம்.

 

சீனியர் சிடிசன்களுக்கு டிக்கட்டில் கணிசமாக தள்ளுபடி கொடுக்கிறார்கள். அதற்கு மட்டும் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படலாம்.

 

இந்தமுறை சாப்பாடு கொண்டு போய்விட்டேன். டீ மட்டும் வாங்கிக் கொண்டோம். காஞ்சீபுரம் இட்லி, தக்காளித் தொக்கு, சப்பாத்தி ஊறுகாய், தயிர், அமுல் பால் என்று ரொம்பவே தயாராகச் சென்றோம். ஒவ்வொரு முறையும் யாராவது ஜெயின் குடும்பத்தவர் வருவார்களா?

 

ரயில் பெட்டிகளில் அடுக்கி வைத்திருக்கும் கம்பளிகள், போர்வைகள் பயன்படுத்தக் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருக்கிறது. எங்களுக்குக் கதவைத் திறந்தவுடன் இருக்கும் சைடு லோயர் சீட்டு. அங்கேயே அப்பர் பர்த். அப்பர் பர்த்தில் ஏறுவது பிரம்மப்பிரயத்தனம் தான். அதுவும் கதவைத் திறந்தவுடன் இருக்கும் அப்பர் பர்த்தில் ஏற படிகள் இல்லை. சீட்டுக்கருகில் ஒரு பிளைவுட் தடுப்பு போட்டிருக்கிறார்கள். அதில் ஒரு மெல்லிய கம்பி. அதில் காலை வைத்து ஏறவேண்டும். இவருக்குத்தான் அந்த சீட். எங்கள் பெட்டியில் இருந்த இளம் தம்பதி இவரை அடுத்தாற்போல இருந்த அவர்களது மிடில் சீட்டிற்குப் போக முடியுமா என்று கேட்டார்கள். சந்தோஷமாக விட்டுக் கொடுத்து விட்டோம். ஒவ்வொரு முறை அந்த இளைஞன் ஏறி இறங்கும்போதும் நாங்கள் பயந்துகொண்டே இருந்தோம். அந்த இளைஞரே ஏற ரொம்பவும் சிரமப்பட்டார். இறங்கும்போது தடாலெனக் குதித்தார். ரயில்வே மந்திரியை கூட்டிக் கொண்டு வந்து ஏறி இறங்கச் சொல்லவேண்டும்.

 

என்னுடைய சைடு லோயரில் இருந்த இன்னொரு பெண் தன் கணனியுடன் மேலே ஏறிவிட்டாள். தேவைப்பட்ட போது மட்டுமே கீழே இறங்கினால். அதனால் நாங்கள் இருவரும் காலை வேளையில் சைடு லோயர் சீட்டிலேயே உட்கார்ந்து வந்துவிட்டோம். என்ன ஒரு இக்கட்டான பயணம். இனி இதுபோல நீண்ட தூரப் பயணம் வரவே கூடாது என்று அங்கேயே தீர்மானம் போட்டோம். எத்தனை நாளைக்கு இந்தத் தீர்மானம் செல்லுபடியாகுமோ தெரியாது.

 

சந்தோஷமான செய்தி: இதுவரை அடுத்த பயணத்திற்கு டிக்கட் வாங்கவில்லை!

 

தொடரும்…..

செல்வ களஞ்சியமே 100

twins 1

சமீபத்தில் புனே சென்றிருந்தபோது உறவினர் வீட்டில் ஒரு இரண்டு வயது, இல்லை இன்னும் கொஞ்சம் பெரியதாகவோ ஒரு  குழந்தை. ஒவ்வொரு வேளை சாப்பாட்டிற்கும் அது படுத்திய பாடு! பாவம் அந்தக் குழந்தையின் பின்னால் ஆறு பேர்கள்! குழந்தையின் அப்பா, அம்மா, அம்மாவின் அப்பா, அம்மா, அப்பாவின் அம்மா அப்பா! ‘சாப்பிடு! சாப்பிடு!’ என்று சாப்பாட்டு வேளையை வியர்த்து வழிய வழிய ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தார்கள். சாப்பிடவே மாட்டேனென்கிறான்’ என்று எல்லோரிடமும் தாத்தா பாட்டிகள் புகார் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

‘அப்பளாம், அப்பளாம்’ என்றால் வாயைத் திறக்கும். அப்பளத்தை குழந்தையின் கண்ணில் படும்படியாக வைத்துக் கொண்டு கீழே சாதத்தை மறைத்து ஊட்டுவாள் அந்தப் பெண். இரண்டு முறை அப்படி சாப்பிட்ட அந்தக் குழந்தை மூன்றாவது முறை உஷாராகிவிட்டது. சாப்பிட மறுத்துவிட்டது. இப்போது அதற்கு வேறு ஏதாவது காண்பிக்க வேண்டும். குழந்தை வளர்ப்பு என்பது எத்தனை பெரிய மனஅழுத்தம் கொடுக்கும் விஷயமாகிவிட்டது என்று எனக்குத் தோன்றியது. அந்த பெண் வேலைக்குப் போகிறவள். அவளுக்கு அலுவலக நாட்களில் சீக்கிரம் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு அதை ப்ளே ஸ்கூலில் விட்டுவிட்டுப் போகவேண்டிய கட்டாயம். இப்போது லீவு தானே நிதானமாக வேலைகளைச் செய்யலாம் என்றால் குழந்தையின் சாப்பாட்டு வேளை நாள் முழுவதும் அவளை உட்காரவிடாமல் செய்கிறது, என்ன செய்ய? இந்தச் சின்னக் குழந்தையை கையாள பெரியவர்களால் முடியவில்லையா?

 

baby creeping

தட்டு நிறைய சாதத்தை வைத்துக்கொண்டு குழந்தையின் பின்னால் ஓடிக் கொண்டிருந்த அவளைக் கூப்பிட்டேன். ‘இதோ பாரும்மா! முதலில் நீ இத்தனை சாதத்தைக் கொண்டு வராதே. நாலே நாலு ஸ்பூன் கொண்டுவா. குழந்தை அதை சாப்பிட்டு முடித்தவுடன் இன்னும் நாலு ஸ்பூன் கொண்டுவா. முதல் நாலு ஸ்பூன் குழந்தையின் வயிற்றினுள் போனாலே உனக்கு சந்தோஷமாக இருக்கும். நீ கொண்டு வந்ததை குழந்தை சாப்பிட்டுவிட்டது என்று சந்தோஷம் கிடைக்கும். நீ இத்தனை சாதத்தை ஒரேயடியாகக் கொண்டு வந்தால் குழந்தையின் வயிற்றில் எத்தனை போயிற்று என்று தெரியாது. தட்டில் இருக்கும் சாதத்தைப் பார்த்து குழந்தை சாப்பிடாததுபோல உனக்குத் தோன்றும்’ என்றேன். நான் சொன்னது அந்தப் பெண்ணுக்கு ரசிக்கவில்லை. ‘எத்தனை முறை மாமி திரும்பத் திரும்ப சாதம் கலப்பது?’ என்று அலுத்துக் கொண்டாள். அவள் அம்மாவிற்கு நான் சொன்னது ரொம்பவும் பிடித்துவிட்டது. ‘சாப்பிடலை சாப்பிடலை என்று நொந்து கொள்வதைவிட நாலு ஸ்பூன் உள்ள போச்சே என்று சந்தோஷப்படலாம் அது அவளுக்குப் புரியவில்லை, பாருங்கோ’ என்றார் என்னிடம்.

 

‘ரயில் பயணங்கள்’ பாதியில் நிற்கிறது; ஸ்ரீரங்கத்து வீட்டுப் புழக்கடையில் நின்று கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் விட்டுவிட்டு இப்போ என்ன குழந்தைக்கு சாதம் ஊட்டுவது பற்றி பேச்சு?

 

நான் நான்குபெண்கள் தளத்தில் எழுதிவந்த செல்வ களஞ்சியமே நூறாவது வாரத்துடன் நிறைவடைந்திருக்கிறது.  என்னை குழந்தைகள் வளர்ப்புப் பற்றி எழுதச் சொன்னபோது, எனக்கு என்ன தெரியும் குழந்தை வளர்ப்புப் பற்றி என்று ரொம்பவும் யோசித்தேன். உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் என்றவுடன் உற்சாகமாக ஆரம்பித்தேன். என்னுடன் கூட டாக்டர் பெஞ்சமின் ஸ்பாக் சேர்ந்து கொண்டார். படிக்கும் செய்திகள், புத்தகங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டேன்.

 

சமீபத்தில் ஒரு வாசகி இந்தத் தொடர் புத்தகமாக வந்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். திருமதி ஆதி வெங்கட் ஸ்ரீரங்கத்தில் பார்த்த போது அதையே சொன்னார். முதல் வேலையாக மின்னூல் ஆக்கலாம் என்றிருக்கிறேன். இரண்டு பாகமாக வரும். இந்தத் தொடரைப் படித்து பயனுள்ள கருத்துரைகள் கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

 

எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து, நான் எழுதுவதை அப்படியே பிரசுரம் செய்த நான்குபெண்கள் ஆசிரியை திருமதி மு.வி. நந்தினிக்கு சொல்லில் அடங்காத நன்றி. நடுவில் என்னால் எழுத முடியாமல் போனபோது மிகுந்த பொறுமையுடன் நான் திரும்பி வரக் காத்திருந்தது மிகப்பெரிய விஷயம்.

உடல் நலக் கட்டுரை ‘நோய்நாடி நோய்முதல் நாடி’ அடுத்த இதழிலிருந்து தொடரும்.

எனது இந்த சாதனையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் வேறு யாருடன் பகிர்ந்து கொள்ள முடியும்? இந்தக் கட்டுரையைப் படித்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி, உங்களது தொடர்ந்த ஆதரவை நாடுகிறேன்.

 

இன்னொரு சந்தோஷச் செய்தியையும் இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அதீதம் இணைய இதழில் எனது தொடர் ‘எமக்குத் தொழில் அசைபோடுதல்’ நாளையிலிருந்து ஆரம்பமாகிறது. எல்லோரும் படித்து இன்புற்று கருத்துரை இடுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.