ரயில் பயணங்களில்………. ஒரு சாகசப் பயணம்!

இந்தமுறை பயணம் ஆரம்பிக்கும்போதே சாகசப் பயணமாக அமைந்தது. சாகசம் என்றவுடன் ஓடும் ரயிலில் பாய்ந்து ஏறினேன் என்றோ, வேகமாக வரும் ரயிலை ஒற்றைக்கையால் நிறுத்தினேன் என்றோ நீங்கள் கற்பனை செய்து கொண்டால் நான் பொறுப்பு இல்லை!

வீட்டிலிருந்து கிளம்பி சற்று தூரம் போனவுடன் கேட்டேன்: ‘இன்சுலின் எடுத்துக் கொண்டீர்’களா?’ (வீட்டிலேயே கேட்டிருக்கலாம் தான். அவரவர் பொருட்களை அவரவர் எடுத்துக் கொள்வது தான் எப்போதுமே பழக்கம். அதனால் மருந்துகளை எடுத்து வைத்துக் கொண்டவுடன் இன்சுலினையும் எடுத்து வைத்துக் கொண்டிருப்பார் என்று நினைத்துக் கொண்டேன்.) திடீரென வண்டியில் போகும்போது நினைவிற்கு வருவானேன்? அதைத்தான் விதி என்பார்களோ? ‘இன்சுலின் எடுத்துக்கொள்ளவில்லை’ என்றவுடன் பதறிப்போய்விட்டேன். திரும்பப் போய் எடுத்துக் கொள்ளலாம் என்றேன். ‘அதெல்லாம் வேண்டாம். நான்கு நாட்கள் தானே சமாளித்துக் கொள்ளலாம். இல்லைன்னா அங்கேயே வாங்கிக் கொள்ளலாம். என்னிடம் இருக்கும் மருந்துகளை ‘அட்ஜஸ்ட்’ பண்ணி சாப்பிடுகிறேன்’ என்ற ரீதியில் பதில் சொல்லி என் வாயை மூடியாகி விட்டது.

எனக்கு ஊருக்குப் போகும் மனநிலையே போய்விட்டது. காலில் வேறு காயம். இப்படி செய்கிறாரே என்று பதட்டம் ஆரம்பமாகியது. மறுபடி சொன்னேன். ‘வீட்டிற்குப் போய் எடுத்துக் கொண்டு வரலாம்’. கோபத்துடன் பதில் வரவே சும்மா இருந்தேன். இன்றைக்கு போட்டுக் கொண்டாகிவிட்டது. இனி நாளைக் காலையில் தான்  இன்சுலின். அதற்குள் டாக்டரிடம் போன் செய்து கேட்டுக் கொள்ளலாம் என்று தீர்மானம் செய்தேன். வெளியில் சொல்லவில்லை. சொன்னால் அதற்குத் தனியாக வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்.

வண்டி வந்தது. எங்கள் பெட்டிக்கு அருகில் போய் பெயர் இருக்கிறதா என்று பார்த்து ஏறி…… ஒரு படியில் காலை வைத்து ஏறி இன்னொரு படியில் காலை வைக்கப் போனேன்… செருப்பு நழுவி கீழே பள்ளத்தில் விழுந்துவிட்டது! அடக்கடவுளே! இது என்ன இப்படி சோதனை மேல் சோதனை! பின்னால் ஏறியவரிடம் எப்படிச் சொல்வது?  சொல்லாமலும் இருக்க முடியாதே! நான் தயங்கித் தயங்கி நிற்பதைப் பார்த்தவரிடம் சொன்னேன்: ‘செருப்பு கீழே விழுந்துடுத்து!’ ‘என்னம்மா, நீ? பார்த்து ஏறக் கூடாதா?’ என்ன பதில் சொல்ல? ஆடு திருடின கள்வன் போல முழித்தேன்.

அங்கிருந்த இரண்டு மூன்று பேரிடம் உதவி கேட்டேன்.  செருப்பு எங்கே என்றே தெரியவில்லையே எப்படி எடுப்பது என்றனர். இப்போதுதான் இரண்டு மாதங்களுக்கு முன் வாங்கிய செருப்பு. செருப்பு இல்லாமலேயே இந்தமுறை பயணம் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ஒரு டீ விற்கிறவர் வந்தார். நானும் இவரும் குனிந்து குனிந்து பார்ப்பதைப் பார்த்து ‘ஏனாயித்து ஸார்?’ என்றார். ‘செப்பலி கேளகே பித்துபிட்டிதே!’ என்றேன். ‘நோட்தினி’ என்றவாறே பார்த்தவரின் கண்களில் செருப்பு அகப்பட்டது. நிதானமாக ரயில் மேடையில் உட்கார்ந்த வாறே தன் ஒரு காலை விட்டுத்  துழாவித் துழாவி எடுத்துக் கொடுத்துவிட்டார்!

அப்பாடா!  இன்சுலின் கதை நாளைக்கு!