யோகாசனச் சக்கரவர்த்தி

 

20.6.2015 அன்று தினமணி.காமில் வெளிவந்த எனது கட்டுரை 

 

 

Guruji_nov2012

‘வாழும்போது சந்தோஷமாக வாழுங்கள். கம்பீரமாக மரணத்தைத் தழுவுங்கள்’

யோகா குரு பி.கே.எஸ் ஐய்யங்கார்

 

குருஜி என்று இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள யோகா கற்றவர்களால் அன்புடனும், மரியாதையுடனும், அழைக்கப்பட்ட பெல்லூரு கிருஷ்ணமாச்சார் சுந்தரராஜ ஐய்யங்கார் –  பி.கே.எஸ். ஐய்யங்கார் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் (20.8.2014) தனது 95 வது வயதில் பூனாவில் இயற்கை எய்தினார் என்ற செய்தி வந்தபோது எனது மிகவும் நெருங்கிய ஒருவரை இழந்ததுபோல நான் மிகவும் வருத்தப்பட்டேன். காரணம் நான் இப்போது கற்றுவரும் யோகா அவர் வடிவமைத்துக் கொடுத்ததுதான். எனது ஆசிரியை  அவரது சிஷ்யை. எங்கள் வகுப்பில் அடிக்கடி தனது ‘குருஜி’யை அளவில்லா மரியாதையுடன் நினைவு கூர்வார். ஒவ்வொரு ஆசனத்தையும் மிக நிதானமாக மிக எளிதாக செய்யும்படி அவர் வடிவமைத்ததையும் சொல்லி சொல்லி வியப்பார்.

 

குருஜி இளம் வயதில் மிகவும் சீக்காளிக் குழந்தையாக இருந்தவர். இவர் பிறந்த 1918 ஆம் ஆண்டு உலகெங்கும் ஃப்ளூ தொற்று பரவியிருந்தது. இவரது பெற்றோருக்கு 11வது குழந்தை இவர். இளம் வயதில் மலேரியா, டைபாய்ட், காச நோய் இவற்றால் பாதிக்கப்பட்டு இவர் பிழைப்பாரா என்பதே பெரிய கேள்விக்குறியாக இருந்ததாம். பார்க்கவே பரிதாபமாக, எலும்பும் தோலுமாக இருப்பாராம். ‘அப்போது என்னைப் பார்த்திருந்தால் யாரும் என்னிடம் யோகா கற்றுக் கொள்ளவே வந்திருக்க மாட்டார்கள். ஒரு நாள் வெளியே விளையாடிவிட்டு வந்தால் 9 நாட்கள் படுக்கையில் விழுந்துவிடுவேன்’ என்று அந்த நாட்களைப் பற்றி வேடிக்கையாகக் குறிப்பிடுவார்.

 

இவரது அக்காவின் கணவரும், புகழ் பெற்ற யோகா ஆசிரியரும் ஆன  டி. கிருஷ்ணமாச்சார் (இவர் நவீன யோகாவின் தந்தை என்று பெயர் பெற்றவர்) மைசூரில் தாம் நடத்தி வந்த யோகா பாடசாலையில்  இவரை சேரும்படி யோசனை சொன்னதுதான் இவரது வாழ்வை திசை திருப்பியது.  இந்த யோகபாடசாலை அரச குடும்பத்தினருக்காக என்றே நடத்தப்பட்டு வந்தது. வெளியாட்கள் சேரமுடியாத இந்தப் பாடசாலையில் சேர்ந்து யோகப்பயிற்சி செய்யுமாறு கூற ஐயங்காரின் வாழ்க்கை மாற ஆரம்பித்தது.

 

தனது 14வது வயதில் யோகா கற்றுக்கொள்ள ஆரம்பித்து 18 வயதில் ஆசிரியர் ஆனார். ‘பத்து அல்லது பதினைந்து தினங்கள் கற்றுக் கொண்டேன். அந்த தினங்கள் தான் நான் இப்போதிருக்கும் நிலைமையை தீர்மானம் செய்தன’ என்று ஒரு பேட்டியில் கூறிஇருக்கிறார் ஐய்யங்கார். பூனாவிற்கு வந்து தனது சொந்த யோகபாடசாலையை ஆரம்பித்தார். அங்கு ஒரு யோகாச்சார்யராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள மிகவும் கஷ்டப்பட வேண்டி வந்தது.

 

ஐய்யங்கார் தன்னுடைய உடலையே சோதனைக் களமாகக் கொண்டு விடாமுயற்சியுடன், வைராக்ய மனத்துடன், இடைவிடாத பயிற்சி மூலம் ‘ஆரோக்கியத்திற்கு யோகா’ என்ற தனது கோட்பாடை நிறுவினார். அடுத்து அவருக்கு இன்னொரு எண்ணம் வந்தது. நாற்பது வயது வரை ஒருவர் இந்த ஆசனங்களை சிரமமின்றிச் செய்யமுடியும் அதற்குப் பிறகு? அறுபது வயதிற்கு மேல்பட்டவர்கள் என்ன செய்யமுடியும்? அவர்களுக்கு யோகா என்பதே கிடையாதா?  ஏற்கனவே இருந்த யோகா முறைகளை மிகுந்த கவனத்துடன் சீர்திருத்த ஆரம்பித்தார். ஹட யோகா என்பதில் இருக்கும் ஆசனங்களை எல்லா வயதினரும் செய்யும்படிக்கு மாற்றி அமைத்தார்.

 

உடல், புலன்கள், மனது, அறிவு, உள்ளுணர்வு இவைகளை வெற்றி கண்டுவிட்டால் ஒருவருக்கு நன்னெறியுடன் கூடிய முறைசார் மனநலம் கிடைக்கிறது என்பார் ஐய்யங்கார். இத்தகைய நிலைக்கு அப்பால் சென்றுவிட்டால் ஒருவருக்கு தெய்வீகத்துடன் கூடிய ஆரோக்கியம் அதாவது நோய்கள் இல்லாத ஆரோக்கியம் கிடைக்கிறது. இது உள்ளிருந்து வாழும் வாழ்க்கை.

 

வயலின் மேதை யாஹுதி மெனுஹின் அவர்களை 1952 ஆம் ஆண்டு சந்தித்தது ஐய்யங்கார் வாழ்க்கையில் மற்றுமொரு திருப்புமுனை. வயலின் மேதை இந்த ஆசனங்களின் சக்கரவர்த்தியை மேலைநாடுகளுக்கு அறிமுகம் செய்தார். ’50 வருடங்களுக்கு முன் நாங்கள் யோகா சொல்லிக் கொடுக்க ஆரம்பித்த போது யோகா என்பது பலருக்கு அறியாத ஒரு விஷயமாக இருந்தது. நான் யோகா சொல்லிக்கொடுக்கிறேன்’ என்று சொன்னால் நான் ஏதோ யோகர்ட் (yogurt) பற்றிப் பேசுகிறேன் என்று நினைத்துக் கொள்வார்கள். நான் எதைப் பற்றிப் பேசுகிறேன் என்றே புரியாது அவர்களுக்கு!’ என்று தனது மேலைநாட்டு ஆரம்ப அனுபவங்களை வேடிக்கையாகக் குறிப்பிடுவார்  ஐய்யங்கார்.

 

வெகு சீக்கிரமே ஐய்யங்கார் தனது யோகா வகுப்புகளை ஐரோப்பிய அமெரிக்க நகரங்களில் நடத்த ஆரம்பித்தார். இவரது மேலைநாட்டு பெருமையின் மூலமே இந்தியாவிற்கு மறுபடி யோகக்கலையின் அருமை தெரிய வந்தது. ‘ஜிட்டு’ கிருஷ்ணமூர்த்தி, ஜெயபிரகாஷ் நாராயணன் என்று பல விஐபி க்களுக்கு சொல்லிக்கொடுத்தவர் ஐய்யங்கார். புகழ் பெற்ற எழுத்தாளர் ஆல்டஸ் ஹக்ஸ்லி, நாகரீக உடை வடிவமைப்பாளர் டோனா கரன் ஆகியோர் ஐய்யங்காரிடம் யோகா பயிற்சி பெற்றவர்கள்.

 

இவரது பெயர் ஆக்ஸ்போர்ட் அகராதியில் இடம் பெற்றிருக்கிறது. டைம் பத்திரிக்கையின் பெரும் செல்வாக்கு படைத்த 100 பேர்களில் இவர் பெயரும் உண்டு. 1966 இல் இவர் எழுதிய ‘லைட் ஆன் யோகா’ என்ற புத்தகம் தான் யோகப்பயிற்சி செய்பவர்களின் பகவத்கீதை! இந்தப் புத்தகம் இதுவரை 17 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது.

 

நூறு வயது வரை வாழ்ந்த இவரது குருவிடமிருந்து இவர் கற்ற பாடம்: ‘அவரவருக்கு ஏற்ற வகையில் ஆசனங்களைக் கற்றுக்கொடு’ என்பதுதான். குருவின் சொல்படியே ஒருவரின் தேவைக்கேற்ப ஆசனங்களை வடிவமைத்தார். ‘யோகாசனங்களில் அலைன்மென்ட் என்று சொல்லப்படும் சீரமைப்பு அதாவது நேர்படுத்துதல் மிகவும் முக்கியம். அது இல்லாமல் போனால் மன அமைதி கிட்டாது’ என்பார் ஐய்யங்கார். பதஞ்சலி முனிவரின் யோகாசனங்களை சாதாரண மக்களும் சுலபமாகச் செய்யும் வகையில் எளிமைப்படுத்தினார்.

 

இவரது தாக்கம் சீன தேசத்தையும் எட்டியது. குருஜிக்கு அங்கும் ஏகப்பட்ட மாணவர்கள். இவரது பெருமையைக் குறிக்க எட்டு தபால்தலைகளை  வெளியிட்டது சீனா. ‘யோகா நம் இரு தேசங்களையும் ஒன்று சேர்க்கிறது. யோகா மூலம் நான் ஒரு நட்புணர்வை இருநாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்தியிருக்கிறேன். நீங்கள் யோகா பயிற்சி செய்தால் உங்கள் எண்ணங்களே வித்தியாசமாக இருக்கும். உங்கள் கால்களில் நீங்கள் நின்றால் உலகம் ஒன்று என்பதைப் பார்க்கமுடியும். நீங்கள் தலைகீழாக நின்றால் உலகமும் அப்படித்தான் தெரியும்’ என்று சீனத் தலைநகர் பீஜிங்-ல் பேசும்போது சொன்னார் குருஜி.

 

தனது பெயரில் ஐய்யங்கார் யோகா என்று யோகக்கலைக்கு பெயர் குத்தப்படுவதை இவர் விரும்பவே இல்லை. ‘யோகா என்பது தீடீர் காப்பி இல்லை. ஒரு பிராண்ட் பெயர் கொடுக்க. மனதையும் உடலையும் சிரத்தையுடன் பண்படுத்த வேண்டுமென்றால் அதற்கு முதலில் தேவை ஒழுங்கும், மன உறுதியும்’ என்பது அவரது கருத்து.

 

இவரது சாதனைப் பட்டியல் மிகவும் நீண்டது. கர்நாடக அரசு இவருக்கு ராஜ்யோத்சவ விருதும், இந்திய அரசு இவருக்கு பத்மபூஷண் விருதும் கொடுத்து கௌரவித்தன. அமெரிக்க பெடரல் ஸ்டார் ரெஜிஸ்ட்ரேஷன் அமைச்சரகம் வடபாதியில் இருக்கும் ஒரு நட்சத்திரத்திற்கு யோகாச்சார்யரான இவரது பெயரை சூட்டியிருக்கிறது. புண்ய பூஷண், பதஞ்சலி விருது, வசிஷ்ட விருது என்ற பல பட்டங்களும் விருதுகளும் இவரை நாடி வந்தன. இவரைப் பற்றி திரைப்படம் மற்றும் தொலைகாட்சி நிறுவனம் தயாரித்த 22 நிமிட ‘சமாதி’ என்கிற திரைப்படம் வெள்ளித் தாமரை விருது பெற்றது.

 

என்னைப்போல இந்த யோகப்பயிற்சியினால் பலன் அடைந்தவர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள்  உலகெங்கும் இருப்பார்கள். கற்றவர்கள் பலர் ஆசிரியர்களாகி, அவர்களின் மூலம் இன்னும் இன்னும் பல தலைமுறைகளுக்கு இந்த யோகப்பயிற்சி பரவும். இந்த உலகம் உள்ளவரை ஐய்யங்காரின் புகழும், யோகாவும் இணைந்து இருக்கும்.

 

ஒருவரின் ஆரோக்கியம் என்பது அந்த சமுதாயத்திற்கே நன்மை செய்யும். இத்தகைய சமுதாய நன்மைக்கு பெரும் தொண்டு செய்த ஐய்யங்காருக்கு இந்த சர்வதேச யோகா தினத்தில் என்னால் சொல்ல முடிவது இது தான்: ‘நன்றி குருஜி!’