இரண்டாவது மொழி  

வலம் மார்ச் 2019 இதழில் வெளியான கட்டுரை

ஒரு அம்மா பூனையும், குட்டிப் பூனையும் ஒரு நாள் மதியம் நல்ல வெய்யிலில் நட்ட நடுச் சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தன. அப்போது எங்கிருந்தோ ஒரு நாய் பாய்ந்து வந்து இந்தப் பூனைகளைத் துரத்த ஆரம்பித்தது. சும்மா இல்லை; ‘பௌ பௌ’, ‘பௌ பௌ’ என்று குலைத்தபடியே. பூனைகள் இரண்டும் பயந்து ஓட ஆரம்பித்தன. ஓடின; ஓடின; ஓடின; வாழ்க்கையின் விளிம்பிற்கே ஓடின. ஒரு கட்டத்தில் தாய்ப்பூனை சிந்திக்க ஆரம்பித்தது. காரணமேயில்லாமல் இந்த நாய் நம்மைத் துரத்துகிறது; நாமும் பயந்து போய் ஓடிக்கொண்டிருக்கிறோமே. என்ன அநியாயம் இது என்று நினைத்து ஒரு கணம் சட்டென்று நின்றது. காலை பலமாக ஊன்றிக் கொண்டு அந்த நாயின் கண்களைப் பார்த்து ‘பௌ பௌ’ என்று கத்தியது. நாய் விதிர்விதிர்த்துப் போய்விட்டது. என்னடாது பூனை ‘மியாவ்’ என்றல்லவா கத்த வேண்டும். இந்தப் பூனை என்ன இப்படி நம்மைப் போலக் குலைக்கிறதே! அதற்கு இப்போது பயம் வந்துவிட்டது. தலை தெறிக்க ஓட ஆரம்பித்தது. தாய்ப்பூனை தன் குட்டியிடம் சொல்லிற்று: ‘பார்த்தாயா? இரண்டாவது மொழியின் ஆற்றலை?’ என்று.

ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகப் படிக்க வேண்டியதன் அவசியத்தை பேராசிரியர் திருமதி ஜெயந்தஸ்ரீ பாலக்ருஷ்ணன் இந்தக் கதை மூலம் மிக அழகாகச் சொல்லுவார்.

எனக்கு இரண்டாவது மொழியின் ஆற்றல் புரிந்தது என் பாட்டியும் அதாவது என் அம்மாவின் மாமியாரும் நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரரான கோதாவரி அம்மாவும் தெலுங்கு பாஷையில் பேசும்போது தான். தமிழ் தெரிந்த இருவரும் திடீரென்று தெலுங்கில் பேச ஆரம்பிப்பார்கள். என் பாட்டியிடமிருந்து அனாவசியமாக முன் குறிப்பாக அல்லது பின்குறிப்பாக ஒரு வாக்கியம் வரும்: ‘கமலம், நாங்க உன்னைப்பத்திப் பேசல!’ என்று.

என் அம்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். ‘என்னைப்பத்தித்தான் பேசுங்களேன். சூரியனைப் பார்த்து நாய் குலைக்கிறது –  நாயெல்லாம் குலைக்கிறது – என்று நினைச்சுக்கறேன்!’ என்று பதிலடி கொடுப்பாள். அவ்வளவுதான் தெலுங்கு மொழி அப்போதே அங்கேயே செத்து விழுந்து விடும்.

கையில் எட்டாவது வகுப்புப் பாடப்புத்தகத்துடன் இந்தக் கூத்தை வேடிக்கைப் பார்க்கும் எனக்கு அந்த இரண்டாவது மொழி மேல் ஒரு காதல் வந்துவிட்டது. எப்படியாவது வேறு ஒரு மொழியைக் கற்றுக் கொண்டு யாருக்கும் புரியாமல் பேச வேண்டும் என்று ஒரு தீராத வேட்கை வந்துவிட்டது.

சென்னை புரசைவாக்கத்தில் இருந்த கோதாவரி அம்மாவின் வீடு ‘ஸ்டோர் வீடு’ அதாவது பொதுவான ஒரு வாசல், உள்ளே நுழைந்தால் பல வீடுகள். எல்லா வீடுகளுக்கும் பொதுவான  நீளமான மித்தம் அல்லது முற்றம் வாசலிலிருந்து ஆரம்பித்து கடைசி வீடு வரை இருக்கும். முற்றத்தில் தான் குழாய், தண்ணீர் தொட்டி, தோய்க்கிற கல் எல்லாம் இருக்கும். நான்கு வீடுகளுக்கு இரண்டு குளியலறை; இரண்டு கழிப்பறை. எங்களைத் தவிர இன்னும் மூன்று குடித்தனங்கள் அங்கிருந்தன. கடைசி வீடு வீட்டுக்காரம்மாவினுடையது. பிள்ளை, மாட்டுப்பெண் பேரன் பேத்திகளுடன் அந்த அம்மா அங்கே கோலோச்சிக் கொண்டிருந்தார்.

கோதாவரி அம்மாள் வீட்டில் எல்லோரும் தெலுங்கு பேசினாலும் எங்களுடன் தமிழில்தான் பேசுவார்கள். அந்தக் குழந்தைகளும் எங்கள் பள்ளியில் தமிழ் வழியிலேயே படித்துக் கொண்டிருந்ததால் எனக்கு தெலுங்கு கற்றுக் கொள்ள ஆர்வம் வரவில்லை. மேலும் என் தாய்க்குப் பிடிக்காத மொழி அது. அதைப் போய்க் கற்பானேன் என்று கூடத் தோன்றியிருக்கலாம்.

இந்த சமயத்தில் தான் காலியாக இருந்த நடு போர்ஷனுக்கு ஒரு குடும்பம் குடியேறியது. மங்களூர் ராவ் குடும்பம். குடும்பத்தலைவர் தங்கநகை செய்பவர். பெரிய குடும்பம். வரிசையாக குழந்தைகள். பெரிய பிள்ளை சந்துருவில் ஆரம்பித்து பிரதிபா, ஷோபா, விக்ரம், காயத்ரி, காஞ்சனா என்று இன்னும் இரண்டு மூன்று குழந்தைகள். இவர்களில் பிரதிபா என் வயதுப் பெண். பெரிய குடும்பம்; சிறிய வருமானம். அவர்கள் துளு என்ற மொழி பேசுபவர்கள். எப்படியாவது அந்த மொழியைக் கற்றுக்கொண்டு விடவேண்டும் என்று நான் அவளுடன் ரொம்பவும் நட்பாக இருந்தேன். அவள் என்னை விட வேகமாக தமிழைக் கற்றுக் கொண்டு பேச ஆரம்பிக்கவே எனக்கு அந்த மொழியை சொல்லிக் கொடுப்பதில் அவள் அக்கறை காட்டவில்லை. இன்றைக்கு எனக்கு நினைவு இருக்கும் ஒரே ஒரு வாக்கியம்: ‘ஜோவான் ஜல்லே?’ இதன் அர்த்தம் சாப்பாடு ஆயிற்றா? என்று நினைக்கிறேன்.

பள்ளிக்கூடத்தில் 9ஆம் வகுப்பில் ஹிந்தி மொழியை விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டேன். இந்த முறை ஹிந்தியை நான் விரும்பும் இரண்டாவது மொழியாகக் கற்றுக் கொண்டு விடுவேன் என்ற எனது நம்பிக்கையில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் வந்து மண்ணை அள்ளிப் போட்டது. ஹிந்தி ஓரளவுக்கு எழுத படிக்கக் கற்றுக்கொண்டதுடன் நின்று போயிற்று. ஹிந்தி இருந்த இடத்தில் சமஸ்கிருதம் வந்தது. ‘ராம: ராமௌ ராமா:’ சப்தம் படுத்திய பாட்டில் அந்த மொழி மேல் அவ்வளவாகக் காதல் வரவில்லை. இப்படியாக பல வருடங்கள் தமிழைத் தவிர வேறு எந்த இந்திய மொழியும் தெரியாதவளாகவே இருந்தேன்.

திருமணம் ஆகி கூட்டுக் குடும்பத்தில் இருந்து தனிக்குடித்தனம் போனோம். அண்ணா நகரில் வீடு. பக்கத்து வீட்டில் ஒரு மலையாளக் குடும்பம். அவர்களது குழந்தைகளும் என்னுடைய குழந்தைகளும் ஒரே வயது. குழந்தைகள் மாலைவேளைகளில் விளையாடும்போது குழந்தைகளின் அம்மாவும் வருவாள். ஒருநாள் அவளாகவே, ‘எனக்குத் தமிழ் சொல்லித் தருகிறீர்களா?’ என்று கேட்டு என் வலையில் விழுந்தாள். எனக்கு அவள் மலையாளம் சொல்லித் தருவதாக டீல்! படு சந்தோஷத்துடன் நினைத்துக்கொண்டேன்: நான் கற்க வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருந்த அந்த இரண்டாம் மொழி மலையாளமோ? யார் காண்டது? அன்றிலிருந்து நான் தமிழில் பேச, அவள் மலையாளத்தில் சம்சாரித்தாள். நானே ஒரு நாள் கேட்டேன்: ‘எனக்கு மலையாளம் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுக்கிறீர்களா?’ என்று. நான் அவளுக்குத் தமிழ் எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்தேன். அவள் எனக்கு மலையாளம் எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்தாள். மிகவும் தீவிரமாக உட்கார்ந்து மதியவேளையில் எழுதி எழுதிப் பயிற்சி செய்வேன். அப்படி இப்படியென்று மலையாள மனோரமாவில் வரும் விளம்பரங்களை எழுத்துக் கூட்டிக்கூட்டி வாசிக்க ஆரம்பித்தேன். மலையாளப் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன்.

ஒருநாள் கணவர் ‘பெங்களூரில் ஆரம்பித்திருக்கும் புது நிறுவனத்திற்கு என்னை மாற்றி விட்டார்கள்’ என்ற செய்தியுடன் வந்தார். என் தோழி ஜெயா சொன்னாள்: ’நீ இனிமேல் சாக்கு, பேக்கு என்று கன்னடம் பேசலாம்’ என்று. இரண்டாம் மொழி கேட்டவளுக்கு மூன்றாவது மொழியையும் அருளிய கடவுளுக்கு எப்படி நன்றி சொல்லுவது என்று எண்ணியபடியே பெங்களூருக்கு மூட்டை முடிச்சுடன் வந்து சேர்ந்தேன். வெகு சீக்கிரமே கன்னடம் பேசக்கற்றுக் கொண்டு விட்டேன். என் குழந்தைகளுடன் சேர்ந்து எழுதப்படிக்கவும் கற்றுக்கொண்டேன்.

பிறகு ஒரு சுபயோக சுபமுஹூர்த்தத்தில் ஸ்போக்கன் இங்க்லீஷ் பயிற்சியாளர் ஆனேன். அங்கு வரும் மாணவர்களில் பெரும்பாலோர் ஹிந்தி பேசுபவர்கள். ஆங்கிலம் கற்க வந்திருந்தாலும் டீச்சர் ஹிந்தியில் பேச வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். அவர்களது சந்தேகங்களுக்கு ஹிந்தியில் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுவேன். ஒரு மாணவர் கேட்டார்: ‘அது எப்படி மேடம் உங்களுக்கு நமது நாட்டின் தேசிய மொழி (ஹிந்தி) – நேஷனல் லாங்குவேஜ் தெரியவில்லை?’ என்று.

‘ஐ நோ இன்டர்நேஷனல் லாங்குவேஜ்’ என்று அப்போதைக்கு சமாளித்தாலும் ஹிந்தி தெரியாதது கையொடிந்தாற் போலத்தான் இருந்தது. வீட்டில் என் மகள், மகன் இருவரும்  ஹிந்தி நன்றாகப் பேசுவார்கள். எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றால் சிரிப்பார்கள். மகள் சொன்னாள்: ‘ஹிந்தி சீரியல் பாரு. எஸ்.வி. சேகர் (வண்ணக் கோலங்கள்) ஜோக்கெல்லாம் நினைச்சுண்டே பார்க்காதே!. சீரியஸ்ஸாக கண், காது எல்லாவற்றையும் திறந்து வைத்துக்கொண்டு ஃபோகஸ் பண்ணி பாரு. ஹிந்தி வரும்’ என்று. எத்தனை சீரியஸ்ஸாக பார்த்தாலும் ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை. அதைவிட தமாஷ் ஒன்று நடந்தது. சீரியல்கள் ஆரம்பிப்பதற்கு முன்

‘தோபஹர் (दोपहर) ………

3 மணிக்கு ………. (சீரியல் பெயர்)

3.30 மணிக்கு …… (சீரியல் பெயர்)

என்று வரும். நான் அதை சீரியஸ்ஸாக படித்துப் பார்த்துவிட்டு என் பெண்ணிடம்  ‘அந்த தோபஹர் எப்போ வரும்?’ என்று கேட்டேன்!

என்னை ஒருநிமிடம் கண்கொட்டாமல் பார்த்துவிட்டு, ‘அம்மா! இது கொஞ்சம் ஓவர்! தோபஹர் என்றால் மத்தியானம்’ என்றாள். ஓ!

இன்னொரு நாள்: நான் சீரியஸ்ஸா முகத்தை வைத்துக்கொண்டு டீவியை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மகன் அப்போதுதான் வெளியில் போய்விட்டு வந்தான். என்னையும் டீவியையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு ‘அம்மா! இது காமெடி சீரியல்மா. கொஞ்சம் சிரி’ என்றான். நான் திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன். எப்போதெல்லாம் டீவியில் சிரிப்பு ஒலி வந்ததோ அப்போதெல்லாம் நானும் ‘கெக்கே கெக்கே’ என்று சிரிக்க ஆரம்பித்தேன்.

என் மகன் கடுப்பாகிவிட்டான். அக்காவிடம் சொன்னான்: ‘இந்த அம்மாவை ஒண்ணுமே பண்ணமுடியாது. என்ன படுத்தறா, பாரு! நாம ரெண்டுபேரும் இந்த விளையாட்டுலேருந்து விலகிடலாம்’ என்று என்னைத் தண்ணி தெளித்து விட்டுவிட்டார்கள். மறுபடியும் நான் ஹெல்ப்லஸ் ஆகிவிட்டேன்.

அப்போதுதான் எனது பக்கத்துவீட்டில் புது கல்யாணம் ஆன ஜோடி ஒன்று புது குடித்தனம்  வந்தது. பால் காய்ச்ச வேண்டும் என்று எங்கள் வீட்டில் வந்து அடுப்பு, பால், சர்க்கரை பாத்திரம் எல்லாம் வாங்கிக்கொண்டு போனார்கள். எங்கள் வீட்டுப்பாலை, எங்கள் வீட்டுப் பாத்திரத்தில் ஊற்றி, எங்கள் வீட்டு அடுப்பில் காய்ச்சி, எங்கள் வீட்டு சர்க்கரையை போட்டு  சாப்பிட்டுவிட்டு பிறகு ஒரு நல்லநாளில் குடியேறினார்கள். டெல்லியைச் சேர்ந்தவர்கள். கணவன் பெயர் வினோத் மிஸ்ரா. மனைவி (ரொம்பவும் சின்னப்பெண்) பெயர் ருசி.

‘அந்தப் பெண்ணுடன் ஹிந்தியில் பேசு. உனக்கு ஹிந்தி வரும்; இந்த வாய்ப்பையும் விட்டுவிட்டால் உனக்கு ஹிந்தி எந்த ஜன்மத்துக்கும் வராது என்று ‘பிடி சாபம்’ கொடுத்தான் என் பிள்ளை.

ஒரு நாள் மிஸ்ரா என்னிடம் வந்து ‘ஆண்டிஜி! ருசி நோ நோ கன்னடா. ஹெல்ப் ப்ளீஸ்!’ என்று சொல்லிவிட்டுப் போனான். அவளிடம் போய் ஒரு டீல் போட்டேன். ‘நீ எனக்கு ஹிந்தி சொல்லிக்கொடு. நான் உனக்கு கன்னடா சொல்லித் தரேன்’ என்று. அவள் ‘நோ கன்னடா. ஒன்லி இங்கிலீஷ்’ என்றாள். ஆங்கிலம் தான் நமக்கு தண்ணீர் பட்ட பாடாச்சே என்று ஆரம்பித்தேன். ‘வாட் இஸ் யுவர் நேம்?’

‘மை நேம் இஸ் ருசி’

‘வாட் இஸ் யுவர் ஹஸ்பெண்ட்ஸ் நேம்?’ என்று கேட்டு முடிப்பதற்குள்

‘ஆண்டிஜி! ஐ ….. முஜே…….ஒன்லி ஒன் …. ஏக் ஹஸ்பெண்ட்….. ஒன்லி. ஆப் க்யூ(ன்) ஹஸ்பெண்ட்ஸ்……..?’ சந்தேகமாக என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வை ‘உங்களுக்கு இங்க்லீஷ் தெரியுமா? என்று கேட்பது போல இருந்தது. ‘லுக், ருசி! என்று ஆரம்பித்து ஃபாதர்ஸ் நேம், மதர்ஸ் நேம் என்றெல்லாம் அரைமணி நேரம் மூச்சுவிடாமல் விளக்கினேன்.

அடுத்த நாள் ருசியைக் காணவில்லை. நேற்றைக்கு அபாஸ்ட்ரஃபியை பற்றி ரொம்பவும் ஓவராகச் சொல்லிக் கொ(கெ)டுத்துவிட்டேனோ?  கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஓடிவிட்டன. ருசி வரவேயில்லை. ருசிக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதை விட நான் ஹிந்தி கற்றுக் கொள்வது நின்றுவிட்டதே என்று இருந்தது. அடுத்த சில நாட்கள் என் கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே வீட்டிற்கும், மருத்துவ மனைக்கும் அலைந்து கொண்டிருந்ததில் ருசியை பார்க்கவில்லை. இரண்டு மூன்று மாதங்கள் ஆகியிருக்கும்.

‘அந்த ருசிப் பொண்ணு அடிக்கடி ஆஸ்பத்திரி போய்விட்டு வருதும்மா’ என்று எங்கள் வீட்டுப் பணிப்பெண் வந்து ஒருநாள் சொன்னாள். ‘என்ன ஆச்சாம்?’ ‘அதென்னவோ அந்தப் பெண்ணுக்கு தலை ரொம்ப அரிக்கிதாம். எப்போ பார்த்தாலும் தலையை சொறிஞ்சிகிட்டே இருக்கும்மா. நேத்திக்கு மயக்கம் போட்டு விழுந்திடிச்சி!’ என்றாள்.

என்னவாக இருக்கும் என்று எனக்கும் மனதிற்குள் அரித்தது. என்னவோ சரியில்லை என்று மட்டும் உள்ளுணர்வு சொல்லியது. அவளுக்கு உதவியாக அவளது அம்மா, அவள் மாமியார் வந்திருந்தனர். அவர்களிடம் என் ஹிந்தி அறிவை காண்பிக்காமல் சற்று ஒதுங்கியே இருந்தேன். ருசியை பார்த்துவிட்டு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேயிருந்தேன். கணவரின் உடல்நிலையில் திரும்பத்திரும்ப ஏதோ ஒரு சிக்கல். அவரை கவனித்துக் கொள்ளும் மும்முரத்தில் ருசியை மறந்தே போனேன்.

ஒருநாள் காலை எதிர்வீட்டுப் பெண்மணி வந்து ‘ருசி ரொம்ப சீரியஸ்ஸா இருக்காளாம். ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கிறார்கள்’ என்று ஒரு குண்டை வீசிவிட்டுச் சென்றார். ரொம்பவும் பதறிவிட்டேன். அன்று முழுக்க வேலையே ஓடவில்லை. இரவு ருசியின் உடலை வீட்டிற்குக் கொண்டு வந்துவிட்டார்கள். அவளுக்கு மூளையில் கட்டி இருந்திருக்கிறது. அதனால் தான் அந்த அரிப்பு. ஏதோ தலைமுடியில் பிரச்னை என்று நினைத்து இந்த எண்ணெய் தடவு; அந்த எண்ணெய் தடவு என்று காலத்தைக் கடத்தியிருக்கிறார்கள். அது என்னவென்று தெரிந்து வைத்தியம் பார்ப்பதற்குள் அவளது முடிவு நெருங்கிவிட்டது. காலன் காலத்தைக் கடத்தாமல் வந்து அந்தச் சின்னப்பெண்ணை அழைத்துக் கொண்டு போய்விட்டான். இரக்கமில்லாதவன்.

இரண்டாவது மொழி தானே கேட்டாய்; மூன்றாவதாக எதற்கு இன்னொரு மொழி என்று கடவுள் நினைத்துவிட்டார் போலிருக்கிறது. இன்று வரை ஹிந்தியைக் கற்றுக்கொள்ளவில்லை. ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் ருசி தான் நினைவிற்கு வருகிறாள். என்ன செய்ய?

 

 

 

 

 

Leave a comment