பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 23

 

மாணவமணிகளுக்கு,,

 

நாளை பள்ளிக்கூடம்/கல்லூரி திறக்கிறது என்றால் எத்தனை தயார் செய்து கொள்ளுகிறோம்: புது உடை/சீருடை, புது காலணி, புது புத்தகங்கள் எல்லாமே புதிதுதான். எல்லாம் சரியே. இங்கு ஒரு விஷயத்தை மறந்து விடுகிறோம். மனதளவில் தயாராகிறோமா?

 

மனதளவில் எப்படித் தயாராவது?

நல்ல தூக்கம்:

பள்ளித் திறப்பதற்கு ஒருவாரம் முன்னாலிருந்தே இரவில் நன்றாகத் தூங்கி உடலுக்கும், மனதிற்கும் ஓய்வு கொடுங்கள். விடுமுறை நாட்கள் என்றால் இரவு பகல் பாராமல் அலுப்பு தெரியாமல் விளையாடி இருப்பீர்கள். நல்ல தூக்கம் உங்களது நினைவுத் திறனை மேம்படுத்தும். விளையாட மட்டுமல்ல; படிப்பதற்கும் சக்தி தேவை. கல்வி கற்கவும் உழைப்பு தேவை. நல்ல தூக்கம் இந்த உழைப்பிற்குத் தேவையான சக்தியை கொடுக்கும்.

 

நல்ல உணவு:

விடுமுறையில் தூக்கத்தைப் போலவே உணவையும் மறந்திருப்பீர்கள். இழந்த சக்தியை மீண்டும் பெற்றால் தான் பள்ளிப்பாடங்களை கவனத்துடன் படிக்க முடியும். ஆகவே நல்ல உணவு தேவை. உப்பு, சர்க்கரை நிறைய இருக்கும் உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, சமைக்கப்பட்ட உணவு இவை தூக்கத்தை வரவழைக்கும். இவற்றைத் தவிர்த்து விடுங்கள்.  சில உணவுகள் உடனடி சக்தியைக் கொடுக்கும். முழு தானியங்கள், உலர் பழங்கள் எனப்படும் பாதம் போன்றவை, காய்கறிகள் உங்கள் சக்தியை அதிகரிக்கச் செய்வதுடன், உங்களை விழிப்பாகவும் வைத்திருக்கும். இவற்றை நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள்.

 

கற்கும் முறைகள்:

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் கற்கிறோம். எந்த முறை நம்முடையது என்று தெரிந்து வைத்துக் கொண்டால் புது வருடத்திலும் அதையே நடைமுறைப்படுத்தலாம். சிலருக்குக் காட்சிப்படுத்திப் படித்தால் நன்றாக புரியும். காணொளியாகப் பார்த்தால் அப்படியே நினைவில் வைத்துக் கொள்வார்கள். இவர்கள் வரைபடங்கள், ஒளி அட்டைகள், வண்ண உருவகங்கள் என்று தயார் செய்து கொள்ளலாம்.

சிலருக்குக் காதால் கேட்க வேண்டும். மறுபடியும் மறுபடியும் கேட்பதன் மூலம் கற்பார்கள் இவர்கள்.

சிலருக்கு அலைந்து கொண்டே படித்தால் தான் மனதில் படியும். இவர்கள் நிற்கும் போதும், நடக்கும்போதும் பாடங்களைச் வாய்விட்டுச் சொல்லிக் கொண்டு கற்கலாம்.

சிலர் பாட்டு கேட்டுக்கொண்டே படிப்பார்கள். எதுவாகயிருந்தாலும் விடுமுறையில் மங்கிப்போயிருந்த உங்கள் கற்கும் பழக்கங்களை மீட்டு வாருங்கள்.

ஆந்தைகளா? வானம்பாடிகளா?

இரவு நெடுநேரம் விழித்திருந்து படிப்பவர்களை ஆந்தைகள் எனவும், காலையில் சீக்கிரம் எழுந்து படிப்பவர்களை வானம்பாடிகள் எனவும் சொல்வதுண்டு. எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நல்ல தூக்கம் அவசியம்.

 

கல்வி கற்கும் சூழ்நிலை:

பழைய பள்ளிக்கே மறுபடி சென்றாலும் புது ஆசிரியர்கள் வரக்கூடும். புது நண்பர்கள் இருப்பார்கள். முதல் நாள் எப்போதுமே எத்தனை தைரியசாலி ஆனாலும் மனதில் ஒரு சின்ன அச்சம் இருக்கும். பழைய நண்பர்களுடன் ஒரு குழு அமைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தால் இந்த அச்சத்தை வெகுவாகக் குறைக்கலாம்.

இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்று நீங்களாகவே நினைத்துக் குழம்பாமல், எந்தச் சூழ்நிலையிலும் என்னால் கற்கமுடியும் என்ற திடமாக நம்பினால் நிச்சயம் கவலைப்பட அவசியம் இல்லாமல் எல்லாம் நல்லவிதமாக அமையும்.

 

மனப்பதட்டதைக் குறைக்க:           

மூச்சை இழுத்து வெளியே விடுங்கள். உதடுகளை இறுக மூடுங்கள். உங்கள் மூச்சு நிதானப்படும். பிராணாயாமம் தினமும் பழகினால் பதட்டம் குறையும்.

புதிய சவால்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்; சமாளிக்க முடியும்; மு என்று மனதிற்குள் சொல்லிக்கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் ஏன் தோன்றுகின்றன என்று யோசியுங்கள். காரணம் தெரிந்தால் அவற்றை நீக்கலாம். மனம் முழுக்க நேர்மறை எண்ணங்கள் நிரம்பியிருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களது பலவீனங்களை உங்களது பலமாக மாற்ற என்ன செய்யப் போகிறீர்கள் என்று எழுதுங்கள். எழுதியதை உடனடியாக செயல்பாட்டிற்குக் கொண்டு வாருங்கள்..

புதிய ஆசிரியர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்:

மேல்வகுப்பிற்குச் சென்றிருக்கும் மாணவர்களைக் கேட்டால் ஆசிரியர் பற்றிச் சொல்லுவார்கள். புதிய பாடங்களை ஒருமுறை படித்துக் கொள்வதால் சந்தேகங்களை அவரிடம் கேட்டுத் தெளிவு பெறலாம்.

உங்களுக்குப் பிடிக்காத பாடத்திற்கு வரும் ஆசிரியருடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்வதன் மூலம் பாடம் பிடிக்கவில்லை என்றாலும் ஆசிரியருக்காகப் படிப்பது அந்தப் பாடத்தின் மேல் உள்ள வெறுப்பை வெகுவாகக் குறைக்கும்.

புதிய நண்பர்கள்:

பழைய நண்பர்களுடன் ஒவ்வொரு வகுப்பிலும் புதிய நண்பர்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள். வகுப்பில் எல்லோருடனும் நல்ல நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். நல்ல நட்பு மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

ஆசிரியர் சொல்லிக்கொடுப்பதை நண்பர்களுடன் விவாதிப்பதன் மூலம் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். புரியாததை புரிந்து கொள்ளலாம். வகுப்பில் ஆசிரியருக்கும், பிற மாணவர்களுக்கும் எப்போதும் உதவி செய்யத் தயாராக இருங்கள். பள்ளியில் பாடங்களுடன் கூட வாழ்க்கையையும் சேர்ந்து கற்றுக்கொள்ளுங்கள். இளம் பருவத்தில் சில விஷயங்கள் பசுமரத்தாணி போல மனதில் பதியும். இவை பிற்காலத்தில் ஏதாவது ஒரு சமயத்தில் உதவும்.

 

‘தேர்வுகள் வேண்டாம்; மதிப்பெண்கள் வேண்டாம்; பள்ளிக்கூடம் வருவதே தேவையில்லை; நேரம் வீணாகிறது; இந்தக் கல்விமுறையில் பல குறைகள் இருக்கின்றன’ என்றெல்லாம் பேசிக்கொண்டு காலத்தை விரயம் செய்யாமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள்.

இன்றைக்குத் திரு சுந்தர் பிச்சை மிகப்பெரிய பதவியில் இருக்கலாம். அவரும் நம்மூர் பள்ளியில் இதே கல்விமுறையில் படித்தவர்தான். தேர்வுகள் எழுதி, மதிப்பெண்கள் பெற்றுத்தான் இந்த நிலையை அடைந்திருக்கிறார். நாளைய பொழுது நல்லதாக அமைய இன்று உழைக்க வேண்டும். கடின உழைப்பு ஒன்று மட்டுமே உங்களை பல்லாயிரக்கணக்கானவர்களின் நடுவில் உயர்த்திக் காட்டும் என்பதை மறக்கவேண்டாம்.