இரண்டாவது மொழி  

வலம் மார்ச் 2019 இதழில் வெளியான கட்டுரை

ஒரு அம்மா பூனையும், குட்டிப் பூனையும் ஒரு நாள் மதியம் நல்ல வெய்யிலில் நட்ட நடுச் சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தன. அப்போது எங்கிருந்தோ ஒரு நாய் பாய்ந்து வந்து இந்தப் பூனைகளைத் துரத்த ஆரம்பித்தது. சும்மா இல்லை; ‘பௌ பௌ’, ‘பௌ பௌ’ என்று குலைத்தபடியே. பூனைகள் இரண்டும் பயந்து ஓட ஆரம்பித்தன. ஓடின; ஓடின; ஓடின; வாழ்க்கையின் விளிம்பிற்கே ஓடின. ஒரு கட்டத்தில் தாய்ப்பூனை சிந்திக்க ஆரம்பித்தது. காரணமேயில்லாமல் இந்த நாய் நம்மைத் துரத்துகிறது; நாமும் பயந்து போய் ஓடிக்கொண்டிருக்கிறோமே. என்ன அநியாயம் இது என்று நினைத்து ஒரு கணம் சட்டென்று நின்றது. காலை பலமாக ஊன்றிக் கொண்டு அந்த நாயின் கண்களைப் பார்த்து ‘பௌ பௌ’ என்று கத்தியது. நாய் விதிர்விதிர்த்துப் போய்விட்டது. என்னடாது பூனை ‘மியாவ்’ என்றல்லவா கத்த வேண்டும். இந்தப் பூனை என்ன இப்படி நம்மைப் போலக் குலைக்கிறதே! அதற்கு இப்போது பயம் வந்துவிட்டது. தலை தெறிக்க ஓட ஆரம்பித்தது. தாய்ப்பூனை தன் குட்டியிடம் சொல்லிற்று: ‘பார்த்தாயா? இரண்டாவது மொழியின் ஆற்றலை?’ என்று.

ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகப் படிக்க வேண்டியதன் அவசியத்தை பேராசிரியர் திருமதி ஜெயந்தஸ்ரீ பாலக்ருஷ்ணன் இந்தக் கதை மூலம் மிக அழகாகச் சொல்லுவார்.

எனக்கு இரண்டாவது மொழியின் ஆற்றல் புரிந்தது என் பாட்டியும் அதாவது என் அம்மாவின் மாமியாரும் நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரரான கோதாவரி அம்மாவும் தெலுங்கு பாஷையில் பேசும்போது தான். தமிழ் தெரிந்த இருவரும் திடீரென்று தெலுங்கில் பேச ஆரம்பிப்பார்கள். என் பாட்டியிடமிருந்து அனாவசியமாக முன் குறிப்பாக அல்லது பின்குறிப்பாக ஒரு வாக்கியம் வரும்: ‘கமலம், நாங்க உன்னைப்பத்திப் பேசல!’ என்று.

என் அம்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். ‘என்னைப்பத்தித்தான் பேசுங்களேன். சூரியனைப் பார்த்து நாய் குலைக்கிறது –  நாயெல்லாம் குலைக்கிறது – என்று நினைச்சுக்கறேன்!’ என்று பதிலடி கொடுப்பாள். அவ்வளவுதான் தெலுங்கு மொழி அப்போதே அங்கேயே செத்து விழுந்து விடும்.

கையில் எட்டாவது வகுப்புப் பாடப்புத்தகத்துடன் இந்தக் கூத்தை வேடிக்கைப் பார்க்கும் எனக்கு அந்த இரண்டாவது மொழி மேல் ஒரு காதல் வந்துவிட்டது. எப்படியாவது வேறு ஒரு மொழியைக் கற்றுக் கொண்டு யாருக்கும் புரியாமல் பேச வேண்டும் என்று ஒரு தீராத வேட்கை வந்துவிட்டது.

சென்னை புரசைவாக்கத்தில் இருந்த கோதாவரி அம்மாவின் வீடு ‘ஸ்டோர் வீடு’ அதாவது பொதுவான ஒரு வாசல், உள்ளே நுழைந்தால் பல வீடுகள். எல்லா வீடுகளுக்கும் பொதுவான  நீளமான மித்தம் அல்லது முற்றம் வாசலிலிருந்து ஆரம்பித்து கடைசி வீடு வரை இருக்கும். முற்றத்தில் தான் குழாய், தண்ணீர் தொட்டி, தோய்க்கிற கல் எல்லாம் இருக்கும். நான்கு வீடுகளுக்கு இரண்டு குளியலறை; இரண்டு கழிப்பறை. எங்களைத் தவிர இன்னும் மூன்று குடித்தனங்கள் அங்கிருந்தன. கடைசி வீடு வீட்டுக்காரம்மாவினுடையது. பிள்ளை, மாட்டுப்பெண் பேரன் பேத்திகளுடன் அந்த அம்மா அங்கே கோலோச்சிக் கொண்டிருந்தார்.

கோதாவரி அம்மாள் வீட்டில் எல்லோரும் தெலுங்கு பேசினாலும் எங்களுடன் தமிழில்தான் பேசுவார்கள். அந்தக் குழந்தைகளும் எங்கள் பள்ளியில் தமிழ் வழியிலேயே படித்துக் கொண்டிருந்ததால் எனக்கு தெலுங்கு கற்றுக் கொள்ள ஆர்வம் வரவில்லை. மேலும் என் தாய்க்குப் பிடிக்காத மொழி அது. அதைப் போய்க் கற்பானேன் என்று கூடத் தோன்றியிருக்கலாம்.

இந்த சமயத்தில் தான் காலியாக இருந்த நடு போர்ஷனுக்கு ஒரு குடும்பம் குடியேறியது. மங்களூர் ராவ் குடும்பம். குடும்பத்தலைவர் தங்கநகை செய்பவர். பெரிய குடும்பம். வரிசையாக குழந்தைகள். பெரிய பிள்ளை சந்துருவில் ஆரம்பித்து பிரதிபா, ஷோபா, விக்ரம், காயத்ரி, காஞ்சனா என்று இன்னும் இரண்டு மூன்று குழந்தைகள். இவர்களில் பிரதிபா என் வயதுப் பெண். பெரிய குடும்பம்; சிறிய வருமானம். அவர்கள் துளு என்ற மொழி பேசுபவர்கள். எப்படியாவது அந்த மொழியைக் கற்றுக்கொண்டு விடவேண்டும் என்று நான் அவளுடன் ரொம்பவும் நட்பாக இருந்தேன். அவள் என்னை விட வேகமாக தமிழைக் கற்றுக் கொண்டு பேச ஆரம்பிக்கவே எனக்கு அந்த மொழியை சொல்லிக் கொடுப்பதில் அவள் அக்கறை காட்டவில்லை. இன்றைக்கு எனக்கு நினைவு இருக்கும் ஒரே ஒரு வாக்கியம்: ‘ஜோவான் ஜல்லே?’ இதன் அர்த்தம் சாப்பாடு ஆயிற்றா? என்று நினைக்கிறேன்.

பள்ளிக்கூடத்தில் 9ஆம் வகுப்பில் ஹிந்தி மொழியை விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டேன். இந்த முறை ஹிந்தியை நான் விரும்பும் இரண்டாவது மொழியாகக் கற்றுக் கொண்டு விடுவேன் என்ற எனது நம்பிக்கையில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் வந்து மண்ணை அள்ளிப் போட்டது. ஹிந்தி ஓரளவுக்கு எழுத படிக்கக் கற்றுக்கொண்டதுடன் நின்று போயிற்று. ஹிந்தி இருந்த இடத்தில் சமஸ்கிருதம் வந்தது. ‘ராம: ராமௌ ராமா:’ சப்தம் படுத்திய பாட்டில் அந்த மொழி மேல் அவ்வளவாகக் காதல் வரவில்லை. இப்படியாக பல வருடங்கள் தமிழைத் தவிர வேறு எந்த இந்திய மொழியும் தெரியாதவளாகவே இருந்தேன்.

திருமணம் ஆகி கூட்டுக் குடும்பத்தில் இருந்து தனிக்குடித்தனம் போனோம். அண்ணா நகரில் வீடு. பக்கத்து வீட்டில் ஒரு மலையாளக் குடும்பம். அவர்களது குழந்தைகளும் என்னுடைய குழந்தைகளும் ஒரே வயது. குழந்தைகள் மாலைவேளைகளில் விளையாடும்போது குழந்தைகளின் அம்மாவும் வருவாள். ஒருநாள் அவளாகவே, ‘எனக்குத் தமிழ் சொல்லித் தருகிறீர்களா?’ என்று கேட்டு என் வலையில் விழுந்தாள். எனக்கு அவள் மலையாளம் சொல்லித் தருவதாக டீல்! படு சந்தோஷத்துடன் நினைத்துக்கொண்டேன்: நான் கற்க வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருந்த அந்த இரண்டாம் மொழி மலையாளமோ? யார் காண்டது? அன்றிலிருந்து நான் தமிழில் பேச, அவள் மலையாளத்தில் சம்சாரித்தாள். நானே ஒரு நாள் கேட்டேன்: ‘எனக்கு மலையாளம் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுக்கிறீர்களா?’ என்று. நான் அவளுக்குத் தமிழ் எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்தேன். அவள் எனக்கு மலையாளம் எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்தாள். மிகவும் தீவிரமாக உட்கார்ந்து மதியவேளையில் எழுதி எழுதிப் பயிற்சி செய்வேன். அப்படி இப்படியென்று மலையாள மனோரமாவில் வரும் விளம்பரங்களை எழுத்துக் கூட்டிக்கூட்டி வாசிக்க ஆரம்பித்தேன். மலையாளப் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன்.

ஒருநாள் கணவர் ‘பெங்களூரில் ஆரம்பித்திருக்கும் புது நிறுவனத்திற்கு என்னை மாற்றி விட்டார்கள்’ என்ற செய்தியுடன் வந்தார். என் தோழி ஜெயா சொன்னாள்: ’நீ இனிமேல் சாக்கு, பேக்கு என்று கன்னடம் பேசலாம்’ என்று. இரண்டாம் மொழி கேட்டவளுக்கு மூன்றாவது மொழியையும் அருளிய கடவுளுக்கு எப்படி நன்றி சொல்லுவது என்று எண்ணியபடியே பெங்களூருக்கு மூட்டை முடிச்சுடன் வந்து சேர்ந்தேன். வெகு சீக்கிரமே கன்னடம் பேசக்கற்றுக் கொண்டு விட்டேன். என் குழந்தைகளுடன் சேர்ந்து எழுதப்படிக்கவும் கற்றுக்கொண்டேன்.

பிறகு ஒரு சுபயோக சுபமுஹூர்த்தத்தில் ஸ்போக்கன் இங்க்லீஷ் பயிற்சியாளர் ஆனேன். அங்கு வரும் மாணவர்களில் பெரும்பாலோர் ஹிந்தி பேசுபவர்கள். ஆங்கிலம் கற்க வந்திருந்தாலும் டீச்சர் ஹிந்தியில் பேச வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். அவர்களது சந்தேகங்களுக்கு ஹிந்தியில் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுவேன். ஒரு மாணவர் கேட்டார்: ‘அது எப்படி மேடம் உங்களுக்கு நமது நாட்டின் தேசிய மொழி (ஹிந்தி) – நேஷனல் லாங்குவேஜ் தெரியவில்லை?’ என்று.

‘ஐ நோ இன்டர்நேஷனல் லாங்குவேஜ்’ என்று அப்போதைக்கு சமாளித்தாலும் ஹிந்தி தெரியாதது கையொடிந்தாற் போலத்தான் இருந்தது. வீட்டில் என் மகள், மகன் இருவரும்  ஹிந்தி நன்றாகப் பேசுவார்கள். எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றால் சிரிப்பார்கள். மகள் சொன்னாள்: ‘ஹிந்தி சீரியல் பாரு. எஸ்.வி. சேகர் (வண்ணக் கோலங்கள்) ஜோக்கெல்லாம் நினைச்சுண்டே பார்க்காதே!. சீரியஸ்ஸாக கண், காது எல்லாவற்றையும் திறந்து வைத்துக்கொண்டு ஃபோகஸ் பண்ணி பாரு. ஹிந்தி வரும்’ என்று. எத்தனை சீரியஸ்ஸாக பார்த்தாலும் ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை. அதைவிட தமாஷ் ஒன்று நடந்தது. சீரியல்கள் ஆரம்பிப்பதற்கு முன்

‘தோபஹர் (दोपहर) ………

3 மணிக்கு ………. (சீரியல் பெயர்)

3.30 மணிக்கு …… (சீரியல் பெயர்)

என்று வரும். நான் அதை சீரியஸ்ஸாக படித்துப் பார்த்துவிட்டு என் பெண்ணிடம்  ‘அந்த தோபஹர் எப்போ வரும்?’ என்று கேட்டேன்!

என்னை ஒருநிமிடம் கண்கொட்டாமல் பார்த்துவிட்டு, ‘அம்மா! இது கொஞ்சம் ஓவர்! தோபஹர் என்றால் மத்தியானம்’ என்றாள். ஓ!

இன்னொரு நாள்: நான் சீரியஸ்ஸா முகத்தை வைத்துக்கொண்டு டீவியை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மகன் அப்போதுதான் வெளியில் போய்விட்டு வந்தான். என்னையும் டீவியையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு ‘அம்மா! இது காமெடி சீரியல்மா. கொஞ்சம் சிரி’ என்றான். நான் திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன். எப்போதெல்லாம் டீவியில் சிரிப்பு ஒலி வந்ததோ அப்போதெல்லாம் நானும் ‘கெக்கே கெக்கே’ என்று சிரிக்க ஆரம்பித்தேன்.

என் மகன் கடுப்பாகிவிட்டான். அக்காவிடம் சொன்னான்: ‘இந்த அம்மாவை ஒண்ணுமே பண்ணமுடியாது. என்ன படுத்தறா, பாரு! நாம ரெண்டுபேரும் இந்த விளையாட்டுலேருந்து விலகிடலாம்’ என்று என்னைத் தண்ணி தெளித்து விட்டுவிட்டார்கள். மறுபடியும் நான் ஹெல்ப்லஸ் ஆகிவிட்டேன்.

அப்போதுதான் எனது பக்கத்துவீட்டில் புது கல்யாணம் ஆன ஜோடி ஒன்று புது குடித்தனம்  வந்தது. பால் காய்ச்ச வேண்டும் என்று எங்கள் வீட்டில் வந்து அடுப்பு, பால், சர்க்கரை பாத்திரம் எல்லாம் வாங்கிக்கொண்டு போனார்கள். எங்கள் வீட்டுப்பாலை, எங்கள் வீட்டுப் பாத்திரத்தில் ஊற்றி, எங்கள் வீட்டு அடுப்பில் காய்ச்சி, எங்கள் வீட்டு சர்க்கரையை போட்டு  சாப்பிட்டுவிட்டு பிறகு ஒரு நல்லநாளில் குடியேறினார்கள். டெல்லியைச் சேர்ந்தவர்கள். கணவன் பெயர் வினோத் மிஸ்ரா. மனைவி (ரொம்பவும் சின்னப்பெண்) பெயர் ருசி.

‘அந்தப் பெண்ணுடன் ஹிந்தியில் பேசு. உனக்கு ஹிந்தி வரும்; இந்த வாய்ப்பையும் விட்டுவிட்டால் உனக்கு ஹிந்தி எந்த ஜன்மத்துக்கும் வராது என்று ‘பிடி சாபம்’ கொடுத்தான் என் பிள்ளை.

ஒரு நாள் மிஸ்ரா என்னிடம் வந்து ‘ஆண்டிஜி! ருசி நோ நோ கன்னடா. ஹெல்ப் ப்ளீஸ்!’ என்று சொல்லிவிட்டுப் போனான். அவளிடம் போய் ஒரு டீல் போட்டேன். ‘நீ எனக்கு ஹிந்தி சொல்லிக்கொடு. நான் உனக்கு கன்னடா சொல்லித் தரேன்’ என்று. அவள் ‘நோ கன்னடா. ஒன்லி இங்கிலீஷ்’ என்றாள். ஆங்கிலம் தான் நமக்கு தண்ணீர் பட்ட பாடாச்சே என்று ஆரம்பித்தேன். ‘வாட் இஸ் யுவர் நேம்?’

‘மை நேம் இஸ் ருசி’

‘வாட் இஸ் யுவர் ஹஸ்பெண்ட்ஸ் நேம்?’ என்று கேட்டு முடிப்பதற்குள்

‘ஆண்டிஜி! ஐ ….. முஜே…….ஒன்லி ஒன் …. ஏக் ஹஸ்பெண்ட்….. ஒன்லி. ஆப் க்யூ(ன்) ஹஸ்பெண்ட்ஸ்……..?’ சந்தேகமாக என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வை ‘உங்களுக்கு இங்க்லீஷ் தெரியுமா? என்று கேட்பது போல இருந்தது. ‘லுக், ருசி! என்று ஆரம்பித்து ஃபாதர்ஸ் நேம், மதர்ஸ் நேம் என்றெல்லாம் அரைமணி நேரம் மூச்சுவிடாமல் விளக்கினேன்.

அடுத்த நாள் ருசியைக் காணவில்லை. நேற்றைக்கு அபாஸ்ட்ரஃபியை பற்றி ரொம்பவும் ஓவராகச் சொல்லிக் கொ(கெ)டுத்துவிட்டேனோ?  கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஓடிவிட்டன. ருசி வரவேயில்லை. ருசிக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதை விட நான் ஹிந்தி கற்றுக் கொள்வது நின்றுவிட்டதே என்று இருந்தது. அடுத்த சில நாட்கள் என் கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே வீட்டிற்கும், மருத்துவ மனைக்கும் அலைந்து கொண்டிருந்ததில் ருசியை பார்க்கவில்லை. இரண்டு மூன்று மாதங்கள் ஆகியிருக்கும்.

‘அந்த ருசிப் பொண்ணு அடிக்கடி ஆஸ்பத்திரி போய்விட்டு வருதும்மா’ என்று எங்கள் வீட்டுப் பணிப்பெண் வந்து ஒருநாள் சொன்னாள். ‘என்ன ஆச்சாம்?’ ‘அதென்னவோ அந்தப் பெண்ணுக்கு தலை ரொம்ப அரிக்கிதாம். எப்போ பார்த்தாலும் தலையை சொறிஞ்சிகிட்டே இருக்கும்மா. நேத்திக்கு மயக்கம் போட்டு விழுந்திடிச்சி!’ என்றாள்.

என்னவாக இருக்கும் என்று எனக்கும் மனதிற்குள் அரித்தது. என்னவோ சரியில்லை என்று மட்டும் உள்ளுணர்வு சொல்லியது. அவளுக்கு உதவியாக அவளது அம்மா, அவள் மாமியார் வந்திருந்தனர். அவர்களிடம் என் ஹிந்தி அறிவை காண்பிக்காமல் சற்று ஒதுங்கியே இருந்தேன். ருசியை பார்த்துவிட்டு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேயிருந்தேன். கணவரின் உடல்நிலையில் திரும்பத்திரும்ப ஏதோ ஒரு சிக்கல். அவரை கவனித்துக் கொள்ளும் மும்முரத்தில் ருசியை மறந்தே போனேன்.

ஒருநாள் காலை எதிர்வீட்டுப் பெண்மணி வந்து ‘ருசி ரொம்ப சீரியஸ்ஸா இருக்காளாம். ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கிறார்கள்’ என்று ஒரு குண்டை வீசிவிட்டுச் சென்றார். ரொம்பவும் பதறிவிட்டேன். அன்று முழுக்க வேலையே ஓடவில்லை. இரவு ருசியின் உடலை வீட்டிற்குக் கொண்டு வந்துவிட்டார்கள். அவளுக்கு மூளையில் கட்டி இருந்திருக்கிறது. அதனால் தான் அந்த அரிப்பு. ஏதோ தலைமுடியில் பிரச்னை என்று நினைத்து இந்த எண்ணெய் தடவு; அந்த எண்ணெய் தடவு என்று காலத்தைக் கடத்தியிருக்கிறார்கள். அது என்னவென்று தெரிந்து வைத்தியம் பார்ப்பதற்குள் அவளது முடிவு நெருங்கிவிட்டது. காலன் காலத்தைக் கடத்தாமல் வந்து அந்தச் சின்னப்பெண்ணை அழைத்துக் கொண்டு போய்விட்டான். இரக்கமில்லாதவன்.

இரண்டாவது மொழி தானே கேட்டாய்; மூன்றாவதாக எதற்கு இன்னொரு மொழி என்று கடவுள் நினைத்துவிட்டார் போலிருக்கிறது. இன்று வரை ஹிந்தியைக் கற்றுக்கொள்ளவில்லை. ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் ருசி தான் நினைவிற்கு வருகிறாள். என்ன செய்ய?

 

 

 

 

 

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர்

 

முதல் பகுதி – அறிமுகம்

IMG-20180709-WA0003IMG-20180709-WA0004IMG-20180709-WA0002

எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது என்றால் மிகையாகாது. நாம் எல்லோருமே ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த மூன்று பாத்திரங்களையும் ஏற்றிருக்கிறோம்.

ஒரு சமுதாயம் என்பது பலவிதப்பட்ட தனி மனிதர்களால் ஆனது. பலவிதப்பட்ட மனிதர்கள் என்று சொல்லும்போதே ஏற்றத்தாழ்வுகளும் அந்த சமுதாயத்தின் ஒரு அங்கம், இல்லையா? இந்த ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வது கல்வி என்று நாம் எல்லோருமே உணர்ந்திருக்கிறோம். நம் குழந்தைகளின் கல்விக்கு பெற்றோர் ஆகிய நாமும் பொறுப்பு என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. ஒரு குழந்தை தனது கற்கும் அனுபவத்தை ஆரம்பிப்பதே வீட்டிலிருந்துதான். அதுவும் தனது பெற்றோரிடமிருந்து தான் தனது முதல் பாடத்தைக் கற்றுக் கொள்ளுகிறது. வீட்டில் கற்பதை வைத்துக் கொண்டே வெளியுலகத்தைப் பார்க்கிறது.

ஒருகாலத்தில் குருகுலம் என்ற அமைப்பு கல்வியை போதிக்கும் இடமாக இருந்து வந்தது. காலம் மாற மாற இந்த அமைப்பும் மாறி தற்போது குளிரூட்டப்பட்ட அறைகள் கொண்ட கல்விச்சாலைகளாக உருமாறியிருகின்றது. கல்விச்சாலைகள் மாறிவிட்டன. ஆனால் அங்கு கற்பிக்கப்படும் பாடங்கள் மாறினவா? குரு என்று அழைக்கப்பட்டவர்கள் இப்போது ஆசிரியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அந்தக் கால குருவிற்கும் இந்தக் கால ஆசிரியர்களுக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் மேம்பட்டவர்களா? இவர்கள் மேம்பட்டவர்களா?

அந்தக் காலப் பெற்றோர்களுக்கும், இந்தக் கால பெற்றோர்களுக்கும் என்ன வித்தியாசம்?  அந்தக் கால மாணவர்களுக்கும், இந்தக் கால மாணவர்களுக்கும் என்ன வித்தியாசம்? எல்லா அமைப்புகளும் மாறியிருப்பது போலவே இவர்களும் மாறித்தான் இருக்கிறார்கள். இந்த மாற்றம் சரியானபடி நடந்திருக்கிறதா? இந்தக் கேள்விக்கு விடை அளிப்பது சற்று கடினம் தான்.

பெற்றோர், ஆசிரியர்கள் சேர்ந்து ஒரு மாணவனை உருவாக்குகிறார்கள். வீட்டில் குழந்தையாக இருப்பவர்கள் வெளியில் கல்விச்சாலைக்குச் சென்று வெளி உலகத்தைக் காண்கிறார்கள். முதலில் பெற்றோர்களின் கண்களின் வழியே உலகத்தைப் பார்ப்பவர்கள் பிறகு ஆசிரியர் என்னுமொரு வழிகாட்டியுடன் வாழ்வியலைத் தொடங்குகிறார்கள்.

பெற்றோர், ஆசிரியர் இருவரின் மேற்பார்வையில் வளரும் குழந்தையின் கடமை என்ன? எத்தனை காலம் பெற்றோர், மற்றும் ஆசிரியரைச் சார்ந்திருக்க முடியும்? தான் கற்கும் கல்வியிலிருந்து நல்லவை கெட்டவை பிரித்து அறிந்து தனது வாழ்க்கையின் பாதையை தீர்மானிப்பது தான் ஒரு மாணவனின் கடமை.

ஒரு குழந்தை மாணவனாகி, வாழ்வியலைக் கற்கத் தொடங்கும் இடமே கல்விச்சாலை. இங்கும் ஒரு கேள்வி கேட்கலாம். கல்விச்சாலைகள் தேவையா? கல்வி மற்றும் கல்வி கற்பித்தல் இவற்றின் பயன் என்ன? இந்த இரண்டிற்கும் யார் பொறுப்பேற்க வேண்டும்? இந்த விஷயங்களை பொதுவில் அவ்வளவாக யாரும் விவாதிப்பதில்லை. இவை பற்றி அறியாமல் நாமும் நம் குழந்தைகளை கல்விச்சாலைகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம்; அவர்களும் கற்று வருகிறார்கள். அங்கு என்ன கற்கிறார்கள் என்பதும் கேள்விக்குறி தான்.

குழந்தைகளை கல்விச்சாலைகளுக்கு அனுப்புவதுடன் பெற்றோரின் கடமை முடிந்துவிடுகிறதா? பெற்றோர்களுக்கும், கல்விச்சாலைகளுக்கும் வேறு எந்தவிதமான சம்மந்தமும் இல்லையா? வருடாவருடம் பணம் கட்டுவதுடன் அவர்களது கடமை முடிந்துவிடுகிறதா? கல்விச்சாலைகளின் வாசலில் குழந்தைகளை விட்டுவிட்டு வருவது மட்டுமே அவர்களின் தினசரி கடமையா? கல்விச்சாலைகளில் நடக்கும் எந்த விஷயத்திலும் அவர்கள் பங்கு பெற முடியாதா? குழந்தைகளிடம் ‘நன்றாகப்படி, நல்லவேலை கிடைக்கும்’ அல்லது ‘நன்றாகப்படித்து அமெரிக்கா போய் நிறைய சம்பாதி’ போன்ற அறிவுரைகளை கொடுப்பது மட்டுமே அவர்களது கடமையா?

குழந்தைகளின் கடமை என்ன? தினமும் சீருடை அணிந்துகொண்டு கல்விச்சாலைக்குப் போய், அவர்கள் கொடுக்கும் புத்தகங்களை மனப்பாடம் செய்து, தேர்வு எழுதி, தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று வருவதா? நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவன் புத்திசாலி. ஒரு மாணவனின் புத்திசாலித்தனம் அவனது மதிப்பெண்ணை வைத்து தீர்மானிக்கப்படுவதா? ஒரு மதிப்பெண் குறைந்தால் கூட ஏதோ வாழ்க்கையே முடிந்துவிட்டது போல அழும் குழந்தைகளைப் பற்றி என்ன சொல்வது? தேர்வில்  தோல்வி என்றவுடன் வாழ்வை முடித்துக் கொள்ளும் மாணவர்கள்!

தற்சமயம் கல்விச்சாலைகளில் நடப்பதாக நாம் கேள்விப்படும் சம்பவங்கள் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கின்றன. ஆசிரியரை மாணவன் கொலை செய்கிறான். பேராசிரியை ஒருவர் மாணவிகளை மதிப்பெண்களுக்காக உயர் அதிகாரிகளுடன் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்ளச் சொல்லுகிறார். அதுவும் வெளிப்படையாக. என்ன நடக்கிறது இங்கு? கல்வி கற்பிக்கும் இடம் இதுபோன்ற அழிக்கமுடியாத களங்கத்தை அடையக் காரணம் என்ன? எங்கு தவறு நேருகிறது? யார் செய்யும் தவறு இது? இந்தத் தவறுகளுக்கு யார் பொறுப்பு? பெற்றோரா? ஆசிரியரா? அல்லது மாணவர்களா? அல்லது கல்விச்சாலைகள் கொடுக்கும் கல்வியா?

கேள்விகள், கேள்விகள். நமது கல்விமுறை, கல்விச்சாலைகள் பற்றி இதுபோல நிறைய கேள்விகள். தொடர்ந்து பேசலாம்.

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

5.9.2017happy-teachers-day-animated

 

இன்றைக்கு ஆசிரியர் தினம். வருடாவருடம் வருவது தான் என்றாலும் என்னைப் போன்ற ஆசிரியர்களுக்கு இது ஒரு உற்சாகம் தரும் நாள். எங்களை நினைவில் வைத்துக் கொண்டு எப்போதோ எங்களிடம் படித்த மாணவர்கள் எங்களுக்கு போனிலோ, குறும் செய்தியிலோ ‘ஹேப்பி டீச்சர்ஸ் டே’ என்று சொல்லும்போது மனதில் உற்சாகம் கரை புரண்டு ஓடும். இதற்காகவே இத்தனை நாளும் காத்திருந்ததுபோல ஒரு உணர்வு தோன்றும். மனதில் ஒரு நிறைவு தோன்றும்.

 

உண்மையில் நான் ஆசிரியப் பயிற்சி மேற்கொண்டவள் இல்லை. சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பு வந்தபோது அதை ஏற்றுக் கொண்டு முடிந்த அளவிற்கு நன்றாகச் செய்தவள். எனக்கே இத்தகைய நிறைவு ஏற்படும் என்றால் வாழ்நாள் முழுவதும் ஆசிரியப் பணி செய்து வந்த ஒருவரின் மனநிலை எப்படி இருக்கும்? டெக்கன் ஹெரால்ட் செய்தித்தாளில் நான் படித்த, ஒரு பேராசிரியரால் எழுதப்பட்ட  ஒரு கட்டுரையை கீழே தமிழாக்கம் செய்திருக்கிறேன்.

 

‘வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்து வந்த நான் இந்த ஆசிரியர்கள் தினத்தன்று எனது வாழ்க்கையை சற்றுத் திரும்பிப் பார்த்து அதன் ஏற்றத்தாழ்வுகள், லாப நஷ்டங்களை ஆராய விரும்புகிறேன்’ என்கிறார். படித்துப் பாருங்கள்:

 

 

இந்தக் கட்டுரையை எழுதியவர்: திரு அலோக் ரே, முன்னாள் பொருளாதார பேராசிரியர், ஐஐஎம் கொல்கத்தா.

 

வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்து வந்த நான் இந்த ஆசிரியர்கள் தினத்தன்று எனது வாழ்க்கையை சற்றுத் திரும்பிப் பார்த்து அதன் ஏற்றத்தாழ்வுகள், லாப நஷ்டங்களை ஆராய விரும்புகிறேன். ஐம்பது வருடங்களுக்கு முன் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் எனது ஆசிரிய பயணம் ஆரம்பித்தது. நீண்ட இந்த பயணம் இன்னும் முடியவில்லை.

 

நான் ஆசிரியப் பணியில் சேர்ந்த போது நான் ஒரு பொருளாதாரப் முதுகலைப் பட்டதாரி. அவ்வளவே. (பிறகு நான் அமெரிக்காவில் பிஎச்.டி. செய்தேன்) அப்போது எனக்கு இன்னொரு துறையை – அதாவது ஐ.ஏ.எஸ். ஐ தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் இருந்தது. நன்றாகப் படிக்கும் ஒரு மாணவன் எம்.பி.ஏ படிப்பதோ தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேருவதோ அந்தக் காலத்தில் நாகரிகமாகக் கருதப்படவில்லை. என்னுடைய பேராசிரியர் – (மிகவும் அறிவுள்ளவர்; நடைமுறைக்கு ஒத்தக் கருத்துக்களை பேசுபவர். பிற்காலத்தில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணை முதல்வர் ஆனவர்) எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிச் சொன்னார்.

 

ஆசிரியரும் அரசாங்க அதிகாரியும்:

 

எனது ஆரம்ப வருமானம் – ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளராக நானூறு ரூபாய் (அறுபதுகளின் நடுவில்) ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வருமானமும் ஏறக்குறைய அதே அளவுதான் – அவருக்குக் கிடைக்கும் கார், பங்களா போன்றவை வசதிகளை சேர்க்காமல். அவரது வருமானம் ஒரு பல்கலைக்கழக ஆசிரியரை விட வெகு வேகமாக உயரும். ஆனால் அவரது வேலை முதலில் மாவட்டங்களில் ஆரம்பிக்கும். கொல்கத்தா, அல்லது டெல்லி போன்ற மாநிலங்களில் அதிகாரியாக நியமிக்கப்பட நீண்ட காலம் ஆகும்.

 

ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் வெளிநாடுகளில் கற்பிக்க வாய்ப்புக்கள் கிடைப்பதன் மூலம் டாலர்களில் சம்பாதிக்கலாம். ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியால் அது இயலாத காரியம். அந்த வகையில் ஒரு ஆசிரியரின் வாழ்நாள் சம்பாத்தியம் என்பது ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் வாழ்நாள்  வருமானத்தை விட அதிகம். வருமான விஷயத்தில் எனது ஆசிரியரின் கணிப்பு மிகச் சரியாக இருந்தது!

 

வருடங்கள் செல்லச் செல்ல ஒரு பல்கலைக்கழக பேராசிரியரின் வருமானம் குறிப்பிடத் தக்க வகையில் அதிகரிக்கிறது. அதேசமயம் எங்கள் மாணவர்கள் பலர் – பெரும்பாலானவர்கள் என்று சொல்லமுடியாத போதிலும் – ஆரம்பப் பள்ளிகள் ஆகட்டும், ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். இவற்றிலாகட்டும் எங்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள். இவற்றைத் தவிர என் பேராசிரியர் சொல்லாத வேறு சில விஷயங்கள்  எனது நீண்ட கால ஆசிரியப் பணி அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்தவையும் மிகவும் முக்கியமானவை.

 

 

பேச்சு சுதந்திரம்:

முதலாவது ஒரு கல்வியாளர் அரசு அதிகாரி போலல்லாது, இந்த உலகத்தில் இருக்கும் எதைப் பற்றி வேண்டுமானாலும் தனது கருத்துக்களை சுதந்திரமாகச் சொல்லலாம். உண்மை தேடுபவராக இருக்கலாம். அதற்காக எந்த அதிகாரிக்கும் அவர் பதில் சொல்லவேண்டியதில்லை.  நம் நாட்டில் கொள்கை செயல்படுத்துதலில் அரசியல் தலையீடு என்பது பல வகையிலும் இருக்கும் சூழலில் தொழில் ரீதியாக ஒரு அரசு அதிகாரி பல சமரசங்களைச் செய்துகொள்ள வேண்டியிருக்கும். அதிகாரங்களுக்கு அடிபணியாது போனால் அரசு அதிகாரி அவமானப்படுத்தப்பட்டு, வேறு ஊர்களுக்கு மாற்றப்படுவார் அல்லது இடைக்கால நீக்கம் செய்யப்படுவார்.

 

தலைமுறை இடைவெளி

 

இரண்டாவதாக ஒரு ஆசிரியரின் வயது காலம் செல்லச் செல்ல ஏறினாலும் அவரிடம் படிக்கும் மாணவர்களின் வயது மாறுவதில்லை – அவர்களின் முகங்கள் மட்டும் வருடந்தோறும் அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாறும். அதனால் ஆசிரியர் எப்போதுமே இளைமையாகவே  இருக்கிறார். இளைய சமுதாயத்தினருடன் பழகக் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, தனது கருத்துக்கள், வாழ்க்கையை பற்றிய தனது பார்வை ஆகியவற்றை மாறும் காலத்திற்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். இதனால் தலைமுறை இடைவெளி என்பதை ஒரு ஆசிரியர் வெகு சுலபமாக அணைகட்டி கடந்துவிடலாம்.

 

ஒரு அரசு அதிகாரி, அல்லது தனியார் நிறுவனத்தில் உயர்பதவியில் இருப்பவர் தனது பதவிப் படிகளில் ஏற ஏற, தன் அந்தஸ்துக்கு ஒத்தவருடனேயே பழக நேரிடும். அதுதான் தனது இப்போதைய மாறுபட்ட மனோபாவத்திற்கு ஏற்றது என்று நினைக்கக்கூடும். தனக்குக் கீழ் உள்ளவர்களுடன் பேசுவது தனது உயர் பதவிக்கு அழகல்ல என்று கூட நினைக்கத் தோன்றும். இதிலும் சில விதிவிலக்குகளும் உண்டு.

 

உழைப்பின் பலன் கண் முன்னே:

மூன்றாவதாக ஒரு ஆசிரியர் தனது உழைப்பின் பலனை கண்கூடாக தன் வகுப்பில் உணரலாம். புதிய விஷயம் ஒன்றை கற்றுக்கொண்ட  மாணவனின் முகத்தில் உண்டாகும் ஒளி உடனடியாக அவருக்கு இதைத் தெரிவிக்கும். இதற்கு நேர்மாறாக அதே வகுப்பில், சொல்லித்தரப்படும் எந்த விஷயத்திலும் ஆர்வம் இல்லாத மாணவர்களும் இருப்பார்கள். ஒரு பட்டம் வாங்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அங்கு உட்கார்ந்திருக்கும் இந்த ஆர்வமற்றவர்களில் ஒருவரையாவது தனது கற்பிக்கும் திறமையால் ஆர்வமுள்ளவராகச் செய்வதுதான் ஒரு ஆசிரியரின் முன் இருக்கும் சவால். இந்த சவாலில் வெற்றி பெறும்போது ஏதோ சாதித்ததைப் போன்றும் தோற்கும் போது தோல்வி அடைந்த உணர்வு வருவதையும் மறுக்க முடியாது.

 

துயரங்களும் உண்டு

ஒவ்வொரு வருட முடிவிலும் அந்த வகுப்பு மாணவர்கள் அடுத்த வகுப்பிற்குச் செல்லும்போதும், படிப்பு முடிந்து கல்லூரியை விட்டு  செல்லும்போதும் அந்தப் பிரிவு ஆசிரியரையும் பாதிக்கிறது. அறிந்தோ அறியாமலோ சில மாணவர்களுடன் பிரிக்க முடியாத பந்தம் ஏற்பட்டுவிடுகிறது ஒரு ஆசிரியருக்கு. அவர்கள் விடை பெறும்போது தனது ஒரு பகுதி தன்னைவிட்டுச் செல்வது போன்ற உணர்வு தவிர்க்க முடியாதது.

 

அதேபோல ஆசிரியருக்கு வயது ஏற ஏற மாணவர்கள் அவரது நண்பர்கள் என்ற நிலை மாறி அவரது குழந்தைகளாகிவிடுகிறார்கள். ஒருகால கட்டத்தில் பெற்ற குழந்தைகள் சிறகு முளைத்து கூட்டை விட்டுப் பறக்கும் போது பெற்றோர்கள் அனுபவிக்கும் துயரத்தை ஒரு ஆசிரியர் ஒவ்வொரு வருடமும் அனுபவிக்கிறார்.

 

துன்பத்தில் இன்பம்

 

இந்தத் துயரத்தின் ஊடே ஒரு மாணவன் ஆசிரியரிடம் வந்து, ’ஸார், நான் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருக்கும் ஆசிரியர்களில் நீங்களும் ஒருவர்’ என்று சொல்லும் போது ஏற்படும் பெருமிதம் வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று. சிலருடைய வாழ்க்கையை நான்  தொட்டு சில மாற்றங்களை உண்டு பண்ணியிருக்கிறேன் என்று அந்தக் கணம் உணருகிறேன். அதே சமயம் அவர்களிடமிருந்து நான் கற்ற புதிய பாடங்களுக்காக நான் அவர்களுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். பல சமயங்களில் ஒரு மாணவன் கேட்ட கேள்விக்கு உடனடியாகப் பதில் சொல்லமுடியாமல் போயிருக்கிறது. அதற்காக நான் படித்து, யோசனை செய்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறேன்.

 

ஆசிரியர்கள் சாகாவரம் பெற்றவர்கள்

எனது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் போது நான் சரியான முடிவையே எடுத்திருப்பதாக தோன்றுகிறது. இந்த பணிக்கு பதிலாக வேறெந்த தொழிலையும் நான் தேர்ந்தெடுத்திருக்க மாட்டேன். ஒரு ஆசிரியர் அவரது மாணாக்கர்களின் எண்ணங்களின் வழியே அழிவில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் அவர் இறப்பின்மையை அடைகிறார்.

 

நன்றி: டெக்கன் ஹெரால்ட் தினசரி/திரு அலோக் ரே

 

இந்தப் பேராசிரியர் சொல்லியிருக்கும் அத்தனை விஷயங்களையும் நானும் எனது வகுப்புகளில் உணர்ந்திருக்கிறேன்.  அதனாலேயே இந்தக் கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் அத்தனை ஆசிரியப் பெருமக்களுக்கும்!

மின்தமிழ் இலக்கியப் போட்டி முடிவுகள்!

போட்டி முடிவுகள்

வகை (1) கணினியில் தமிழ் மற்றும் அறிவியல் போலும் பிறதுறை வளர்ச்சி குறித்த கட்டுரைகள்

முதல் இடம்
திருமிகு முனைவர் துரை.மணிகண்டன் – மாயனூர், கரூர் மாவட்டம்
26. →தமிழ்-இணையத்தின் வளர்ச்சி

இரண்டாம் இடம் (இருவர்)
திருமிகு முனைவர் த.சத்தியராஜ் – கோயம்புத்தூர்
14. →கணித்தமிழ் வளர்ச்சியில் வலைப்பூ

திருமிகு P.S.D.பிரசாத் – சென்னை
16. →கன்னித் தமிழ்வளர்ப்போம் கணினியிலே

மூன்றாம் இடம்
திருமிகு வி.கிரேஸ் பிரதிபா – அமெரிக்கா
18. →கணினி முதல் மேகப் பயன்பாட்டியல் வரை


வகை(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த கட்டுரைகள்
முதல் இடம்
திருமிகு எஸ்.பி.செந்தில் குமார் – மதுரை
13. →இருட்டு நல்லது..!

இரண்டாம் இடம் (இருவர்)
திருமிகு பி.தமிழ் முகில் – கனடா
03. →நெகிழி பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்
திருமிகு கீதா மதிவாணன் – ஆஸ்திரேலியா
05. →கான் ஊடுருவும் கயமை

மூன்றாம் இடம்
திருமிகு கோபி சரபோஜி – சிங்கை
10. →கண்ணை விற்றா சித்திரம் வாங்குவது?


வகை(3) பெண்கள் முன்னேற்றம் குறித்த கட்டுரைகள்
முதல் இடம்
திருமிகு காயத்ரிதேவி – கன்னியாகுமரி
10. →இதுவும் தப்பில்லை

இரண்டாம் இடம்
திருமிகு ரஞ்சனி நாராயணன் – பெங்களூரு
   39. →புறஅழகு உன் முன்னேற்றத்திற்குத் தடையில்லை! முன்னேறு! பெண்ணே, முன்னேறு!

மூன்றாம் இடம்
திருமிகு இரா. பார்கவி – அமெரிக்கா
04. →உன்தடம் மாற்றிடு தாயே!


வகை(4) புதுக்கவிதைப் போட்டிக்கு வந்த படைப்புகள்
முதல் இடம்
திருமிகு மீரா செல்வகுமார் – புதுக்கோட்டை
40. →சின்னவள் சிரிக்கிறாள்

இரண்டாம் இடம்
திருமிகு இரா.பூபாலன் – கோயம்புத்தூர்
69. →பதுங்கு குழியில் துளிர்க்கும் செடி

மூன்றாம் இடம்
திருமிகு வைகறை – புதுக்கோட்டை
27. →உதிர்ந்து கிடக்கும் சாம்பல்


வகை(5) மரபுக்கவிதைப் போட்டிக்கு வந்த படைப்புகள்
முதல் இடம்
திருமிகு ஜோசப் விஜூ – திருச்சிராப்பள்ளி
20. →புறப்படு வரிப்புலியே

இரண்டாம் இடம்
திருமிகு மகா.சுந்தர் – புதுக்கோட்டை
25. →விரைந்து பாயும் விண்கலம் நீ!

மூன்றாம் இடம்
திருமிகு கருமலைத் தமிழாழன் – கிருஷ்ணகிரி
02. →கனவுகளும் நனவாகும்


விமரிசனப் போட்டி
முதல் இடம்
யாருமில்லை

இரண்டாம் இடம்
திருமிகு கலையரசி ஞா – புதுச்சேரி

மூன்றாம் இடம்
திருமிகு துரை. தியாகராஜ் திருச்சிராப்பள்ளி
வகை(4) புதுக்கவிதைப் போட்டிக்கு வந்த படைப்

செல்வ களஞ்சியமே 100

twins 1

சமீபத்தில் புனே சென்றிருந்தபோது உறவினர் வீட்டில் ஒரு இரண்டு வயது, இல்லை இன்னும் கொஞ்சம் பெரியதாகவோ ஒரு  குழந்தை. ஒவ்வொரு வேளை சாப்பாட்டிற்கும் அது படுத்திய பாடு! பாவம் அந்தக் குழந்தையின் பின்னால் ஆறு பேர்கள்! குழந்தையின் அப்பா, அம்மா, அம்மாவின் அப்பா, அம்மா, அப்பாவின் அம்மா அப்பா! ‘சாப்பிடு! சாப்பிடு!’ என்று சாப்பாட்டு வேளையை வியர்த்து வழிய வழிய ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தார்கள். சாப்பிடவே மாட்டேனென்கிறான்’ என்று எல்லோரிடமும் தாத்தா பாட்டிகள் புகார் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

‘அப்பளாம், அப்பளாம்’ என்றால் வாயைத் திறக்கும். அப்பளத்தை குழந்தையின் கண்ணில் படும்படியாக வைத்துக் கொண்டு கீழே சாதத்தை மறைத்து ஊட்டுவாள் அந்தப் பெண். இரண்டு முறை அப்படி சாப்பிட்ட அந்தக் குழந்தை மூன்றாவது முறை உஷாராகிவிட்டது. சாப்பிட மறுத்துவிட்டது. இப்போது அதற்கு வேறு ஏதாவது காண்பிக்க வேண்டும். குழந்தை வளர்ப்பு என்பது எத்தனை பெரிய மனஅழுத்தம் கொடுக்கும் விஷயமாகிவிட்டது என்று எனக்குத் தோன்றியது. அந்த பெண் வேலைக்குப் போகிறவள். அவளுக்கு அலுவலக நாட்களில் சீக்கிரம் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு அதை ப்ளே ஸ்கூலில் விட்டுவிட்டுப் போகவேண்டிய கட்டாயம். இப்போது லீவு தானே நிதானமாக வேலைகளைச் செய்யலாம் என்றால் குழந்தையின் சாப்பாட்டு வேளை நாள் முழுவதும் அவளை உட்காரவிடாமல் செய்கிறது, என்ன செய்ய? இந்தச் சின்னக் குழந்தையை கையாள பெரியவர்களால் முடியவில்லையா?

 

baby creeping

தட்டு நிறைய சாதத்தை வைத்துக்கொண்டு குழந்தையின் பின்னால் ஓடிக் கொண்டிருந்த அவளைக் கூப்பிட்டேன். ‘இதோ பாரும்மா! முதலில் நீ இத்தனை சாதத்தைக் கொண்டு வராதே. நாலே நாலு ஸ்பூன் கொண்டுவா. குழந்தை அதை சாப்பிட்டு முடித்தவுடன் இன்னும் நாலு ஸ்பூன் கொண்டுவா. முதல் நாலு ஸ்பூன் குழந்தையின் வயிற்றினுள் போனாலே உனக்கு சந்தோஷமாக இருக்கும். நீ கொண்டு வந்ததை குழந்தை சாப்பிட்டுவிட்டது என்று சந்தோஷம் கிடைக்கும். நீ இத்தனை சாதத்தை ஒரேயடியாகக் கொண்டு வந்தால் குழந்தையின் வயிற்றில் எத்தனை போயிற்று என்று தெரியாது. தட்டில் இருக்கும் சாதத்தைப் பார்த்து குழந்தை சாப்பிடாததுபோல உனக்குத் தோன்றும்’ என்றேன். நான் சொன்னது அந்தப் பெண்ணுக்கு ரசிக்கவில்லை. ‘எத்தனை முறை மாமி திரும்பத் திரும்ப சாதம் கலப்பது?’ என்று அலுத்துக் கொண்டாள். அவள் அம்மாவிற்கு நான் சொன்னது ரொம்பவும் பிடித்துவிட்டது. ‘சாப்பிடலை சாப்பிடலை என்று நொந்து கொள்வதைவிட நாலு ஸ்பூன் உள்ள போச்சே என்று சந்தோஷப்படலாம் அது அவளுக்குப் புரியவில்லை, பாருங்கோ’ என்றார் என்னிடம்.

 

‘ரயில் பயணங்கள்’ பாதியில் நிற்கிறது; ஸ்ரீரங்கத்து வீட்டுப் புழக்கடையில் நின்று கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் விட்டுவிட்டு இப்போ என்ன குழந்தைக்கு சாதம் ஊட்டுவது பற்றி பேச்சு?

 

நான் நான்குபெண்கள் தளத்தில் எழுதிவந்த செல்வ களஞ்சியமே நூறாவது வாரத்துடன் நிறைவடைந்திருக்கிறது.  என்னை குழந்தைகள் வளர்ப்புப் பற்றி எழுதச் சொன்னபோது, எனக்கு என்ன தெரியும் குழந்தை வளர்ப்புப் பற்றி என்று ரொம்பவும் யோசித்தேன். உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் என்றவுடன் உற்சாகமாக ஆரம்பித்தேன். என்னுடன் கூட டாக்டர் பெஞ்சமின் ஸ்பாக் சேர்ந்து கொண்டார். படிக்கும் செய்திகள், புத்தகங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டேன்.

 

சமீபத்தில் ஒரு வாசகி இந்தத் தொடர் புத்தகமாக வந்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். திருமதி ஆதி வெங்கட் ஸ்ரீரங்கத்தில் பார்த்த போது அதையே சொன்னார். முதல் வேலையாக மின்னூல் ஆக்கலாம் என்றிருக்கிறேன். இரண்டு பாகமாக வரும். இந்தத் தொடரைப் படித்து பயனுள்ள கருத்துரைகள் கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

 

எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து, நான் எழுதுவதை அப்படியே பிரசுரம் செய்த நான்குபெண்கள் ஆசிரியை திருமதி மு.வி. நந்தினிக்கு சொல்லில் அடங்காத நன்றி. நடுவில் என்னால் எழுத முடியாமல் போனபோது மிகுந்த பொறுமையுடன் நான் திரும்பி வரக் காத்திருந்தது மிகப்பெரிய விஷயம்.

உடல் நலக் கட்டுரை ‘நோய்நாடி நோய்முதல் நாடி’ அடுத்த இதழிலிருந்து தொடரும்.

எனது இந்த சாதனையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் வேறு யாருடன் பகிர்ந்து கொள்ள முடியும்? இந்தக் கட்டுரையைப் படித்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி, உங்களது தொடர்ந்த ஆதரவை நாடுகிறேன்.

 

இன்னொரு சந்தோஷச் செய்தியையும் இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அதீதம் இணைய இதழில் எனது தொடர் ‘எமக்குத் தொழில் அசைபோடுதல்’ நாளையிலிருந்து ஆரம்பமாகிறது. எல்லோரும் படித்து இன்புற்று கருத்துரை இடுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.

வருகலாமோ? மே ஐ கமின்?

வலைச்சரம் ஐந்தாம் நாள்

நாங்கள் சென்னை அண்ணா நகரில் இருந்தபோது பக்கத்து வீட்டில் ஒரு தம்பதி. சித்ரா, தாசரதி என்று. சித்ரா நன்றாகப் பாடுவாள். (அவளே சொல்லிக்கொள்ளுவாள்!) அதனாலேயே தாசரதி பாடுபவர்களைக் கிண்டல் அடிப்பார். ரொம்பவும் உற்சாகமான தம்பதி அவர்கள்.  இருவரும் ஒருவரையொருவர் சீண்டி கொள்வது ரசிக்கும்படி இருக்கும். ஒருமுறை  அப்போது மிகவும் பிரபலமாக இருந்த – அவ்வப்போது சினிமாவிலும் பாடிக்கொண்டிருந்த பாடகரின் கச்சேரி தூரதர்ஷனில் ஒளிபரப்பானது. சித்ரா அவரது விசிறி. அவர்கள் வீட்டில் அப்போது தொலைக்காட்சி வந்திருக்கவில்லை. அதனால் நான் சித்ராவை எங்கள் வீட்டிற்கு வந்து கேட்குமாறு அழைத்திருந்தேன். தாசரதியும் கூடவே வந்தார்.

 

கச்சேரி ஆரம்பித்தது. அந்த காலத்தில் அவரது கச்சேரி கேட்டிருப்பவர்களுக்கு அவர் பாடும்போது செய்யும் சேட்டைகள் நன்றாகவே தெரியும். பின்னால் தம்பூரா போடும் பெண்ணைப் பார்த்து வழி…ஸாரி…சிரிப்பார். அவர் கூடவே வரும் அவரது மனைவியும் மேடையில் அமர்ந்திருப்பார். அவரைப் பார்த்து சிரிப்பார். அவரது பாட்டை விட இதெல்லாம் சுவாரஸ்யமாக இருக்கும். சித்ராவின் பிள்ளை சுதர்சன் ரொம்பவும் சின்னவன் – கேள்வி கேட்பதில் மன்னன். கேள்வி கேட்டு நம்மைத் துளைத்து விடுவான். கச்சேரி ஆரம்பித்தவுடன் இவனது கேள்விக் கணைகளும் பறக்க ஆரம்பித்தன.

 

‘ஏன் இந்த மாமா இப்படி திரும்பித் திரும்பிப் பார்க்கறா?’

 

சித்ரா அவனை சமாளிக்க தயாராகவே வந்திருந்தாள். ‘அந்தப் பொண்ணு சரியா தம்பூரி போடறாளா இல்லையானு பார்க்கத்தான்….’

‘எதுக்கு சிரிக்கணும்?’

‘ப்ரெண்ட்லியா சிரிக்கறா…’

தூரதர்ஷன் காமிராமேனுக்கு அன்று செம மூடு போலிருக்கு. பாடகரையும் அந்த தம்பூரா பெண்ணையும் மாற்றி மாற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தார். பாடகரின் மனைவியையும் அவ்வப்போது காண்பிக்கத் தவறவில்லை. கச்சேரியை விட இது தாசரதிக்கு பிடித்திருந்தது.

சுதர்சன் விடாமல் கேட்டான்: ‘அந்த மாமா மூஞ்சி ஏன் இப்படி இருக்கு? வாய ஏன் இப்படி கோணிக்கறார்?’

சித்ரா பதில் சொல்வதற்குள் குறுக்கே பாய்ந்தார் தாசரதி. ‘பாடறவா மூஞ்சியெல்லாம் இப்படித்தான் இருக்கும்! பாடும்போது இப்படித்தான் வாய கோணிப்பா…!’

எங்களுக்கு சிரிப்புத் தாங்கவில்லை.

 

உண்மையிலேயே பாடகரின் மூஞ்சி சிரிக்கறாரா அழறாரா என்றே தெரியவில்லை. ‘ழ……ழ……’ என்று வேறு வார்த்தைகளை முழுங்கிக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் ‘சுப்புடு’ தான் சங்கீத கச்சேரிகளுக்கு விமரிசனம் எழுதுவார். விமரிசனம் என்றால் அப்படி இப்படி இல்லை. கிழித்து தோரணம் கட்டிவிடுவார். இந்த பாடகர் சுப்புடு வாயால் நிறைய குட்டு வாங்கியவர். இருவருக்கும் பத்திரிகைகளில் வாக்குவாதமும் நடக்கும்.

 

சுப்புடு சங்கீதம் மட்டுமில்லை நாட்டியக் கச்சேரிகளைப் பார்த்தும் விமரிசிப்பார். நம்மூரில் பிறந்து ஹிந்தி சினிமாவில் கொடி நாட்டிய தாரகை ஒருவரின் நாட்டியத்திற்கு சுப்புடு எழுதியிருந்தார்: ‘நந்தனாரின் ‘வருகலாமோ?’ பாட்டிற்கு இந்தப் பெண் செய்த அபிநயம் ‘காலிங் பெல்லை அழுத்தி ‘மே ஐ கமின்?’ என்று கேட்பதுபோல இருந்தது’ என்று.

 

நிற்க. அன்றைக்கு சித்ராவால் கச்சேரியை அதிகம் ரசிக்க முடியவில்லை.

‘சங்கடமான சங்கீதத்தை விட்டு சமையலைப் பார்க்கப் போறேன்’ என்று வீட்டிற்குப் போய்விட்டாள், பாவம்!

 

இன்றைய வலைச்சரத்தை அலங்கரிக்கும் பதிவர்கள்

 

முனைவர் இரா. குணசீலன் அவர்களின் குணாதமிழ்  வலைத்தளம்.

 

கணிதப் பெண்ணுக்கு வந்த காதல் கடிதம். இதைப்பற்றி முனைவர் கூறுவது

கணிதமேதை இராமனுசம் அவர்களின் பிறந்தநாளன்று மாணவர்கள், இராமானுசம் அவர்களின் பணியை நினைவுகொள்ளும் விதமாக கவிதை கட்டுரை பட்டிமன்றம் ஆகிய நிகழ்வுகளில் பங்குபெற்று தம் திறமையை வெளிப்படுத்தினார்கள்.

இன்றைய மாணவர்கள் கணிதத்தை மனப்பாடம் செய்துதான் படிக்கிறார்கள்! இல்லை இல்லை புரிந்துதான் படிக்கிறார்கள் என்ற தலைப்புகளை முன்வைத்து விவாதகளமும் நடந்தது. இவர்களுக்கு நடுவராக இருக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. ஒவ்வொரு மாணவர்களின் முயற்சியும் பாராட்டுதலுக்குரியது என்றாலும் கங்கா என்ற மாணவர் எழுதிய கவிதை பலரது பாராட்டுதலையும் பெற்றதாக அமைந்தது.

 

தமிழில் பிள்ளைத்தமிழ் போன்ற இலக்கியங்களில் கடவுளையோ, அரசரையோ, வள்ளல்களையோ குழந்தையாகப் பாவித்து பாடுவது மரபாகும். அதுபோல இந்த மாணவர் கணிதத்தைப் பெண்ணாகப் பாவித்து பாடிய கவிதை,  கணிதம் என்ற பாடத்தின் மீது இவருக்கு எந்த அளவுக்கு ஆர்வம் உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது. தொடர்ந்து படிக்க மேலே உள்ள சுட்டியை சொடக்கவும்.

 

 

காட்சி என்னும் தளத்தில் இந்தப் பதிவு.

எழுதியது யமுனா ராகவன்  மதிப்பிற்குரிய ஆண்களே இதைப்படிப்பீராக!

 

 

 

சதீஷ் செல்லத்துரை தமிழ்மொட்டு என்ற வலைத்தளத்தில் எழுதி வருகிறார். நக்கீரன் பத்திரிகையில் வந்த ஒரு கடிதத்தைப் பகிர்கிறார்.

அதிர வைக்கும் ஒரு சிப்பாயின் திறந்த மடல்

‘ஒரு சக சிப்பாயாக இதனை பகிர்கிறேன்.எமக்கான குரலை இங்கு நாங்கள் எடுத்து வைத்ததே மிகப்பெரிய விடயமாகும்.சங்கங்கள் இல்லாது சட்டங்கள் தெரியாது தவிக்கும் சிப்பாய் ஜாதியை மனித உரிமை குழுக்கள்,ஊடகங்கள் மட்டுமே வெளியுலகுக்கு எடுத்து சொல்லி காப்பாற்ற முடியும்.பூனைக்கு எலிதான் மணி கட்டணும்னு இல்லையே… ஏனெனில் நீங்கள் எலிகள் அல்லவே… ‘ என்கிறார்.

******************

 

https://todayandme.wordpress.com/

‘ஜன கண மன’ தெரிந்தவர்களுக்கு மட்டும்…

தேசப்பற்று என்பது தானாகவே, இரத்தத்திலேயே, கலந்து வருவதில்லையா ?

நாட்டுப்பற்றை யாரும் வந்து ஊட்டவேண்டுமா? இங்கு ‘யாரும்’ என்பது அரசியல்வியாதிகளையும் அதிகாரத்தில் இருப்பவர்களையும் குறிக்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக சிறுவயதிலிருந்தே அப்படித்தான் பழக்கவேண்டும் என்றால், ஏன் அதைச் செய்யாமல் வேறுவித பழக்கங்களுக்கு அடுத்ததலைமுறையை அடிமையாக்குகிறார்கள் ?

 

ஆல் போல் தளைத்து அருகு போல் வேரோடி – நட்பு எப்படி இருக்க வேண்டும் என்று படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

****************

சீனுகுரு என்ற வலைத்தளத்தில் எழுதும்  ஸ்ரீநிவாசன் என்கிற சீனு.

டயனா கிழவி பற்றி சொல்லுவதைப் படியுங்கள். நீங்களும் உங்கள் பள்ளிப் பிராயத்திற்குப் போய்விடுவீர்கள்.

குறும்பட நாயகனாகவும் மாறியிருக்கும் சீனுவிற்கு வாழ்த்துக்கள்.

தனது நண்பர் ஆவிக்கு இவர் எழுதியிருக்கும் பிறந்தநாள் வாழ்த்து மடல் இங்கே

***********************

கோவைஆவி சமீபத்தில் காதல் போயின் காதல் என்ற குறும்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும்  ஆனந்த ராஜா விஜயராகவன் எனும் ஆவி.

அஜித்தை எனக்குப் பிடிக்காது என்கிறார். ஏன் என்று படித்துப் பாருங்களேன்.

நான் அடிமை இல்லை..! இவரைப் போலவே நாமும் ஒருநாள் இருந்து பார்க்கலாமே என்று தோன்றும் இந்தப் பதிவைப் படித்தபின்.

 

http://www.kovaiaavee.com/2014/02/aavippaa-book-release.html

ஆவிப்பா புத்தகம் வெளியாகியிருக்கிறது.

இரண்டாம் ப்ளாகர் திருவிழாவில் பாட்டு எழுதி பாடியவர்.

சிறந்த திரைப்பட இயக்குனர் ஆக வர வாழ்த்துக்கள்.

****************

தளிர் என்ற வலைத்தளத்தில் எழுதும்  சுரேஷ் வேலூர் அருகில் இருக்கும் ஸ்ரீபுரம் போய்விட்டு வந்து

பேசாமல் சாமியார் ஆகி விடலாமா?  என்று கேட்கிறார்.

சிறுவர் பகுதி, ஜோக்ஸ், கவிதை, சிறுகதை, புகைப்பட ஹைக்கூ, எளிய இலக்கணம் இனிய இலக்கியம், தித்திக்கும் தமிழ், ஆன்மிகம் என்று பலவற்றையும் எழுதுகிறார்

 

மூங்கில் காற்று என்ற வலைத்தளத்தில் எழுதும்  டி.என். முரளிதரன்

பிரபல விஞ்ஞானிகளின் வில்லத்தனங்கள்

திரு ஜோதிஜியின் தொழிற்சாலை குறிப்புகளுக்கு இவர் எழுதிய மதிப்புரை இங்கே

 

எனது எண்ணங்கள்   தமிழ் இளங்கோ

ரத்தக்கண்ணீர் வசன புத்தகம் வாங்கப் போனவர் வாங்கி வந்த புத்தகம் நவீன ஒப்பாரி கோர்வை.

ஒப்பாரிப் பாடல்கள் ஒப்பாரி இலக்கியம் பற்றி சுவாரஸ்யமாகப் பேசுகிறார்.

‘ஙப்போல் வளை’ என்பதற்கு பொருள் தெரியுமா? இங்கு படியுங்கள்.

 

 

 ஸ்கூல் பையன்

இத்தனை நாட்களாக ஸ்பை யாக இருந்த  கார்த்திக் சரவணன்.

எலெக்ட்ரானிக் அடிமைகள் இவரும் ஆவியும் ஒரே விஷயத்தைத் தான் வேறு வேறு கோணங்களில் பேசியிருக்கிறார்கள்.

ஸ்கூல் பையன் என்னும் நான்

 

 

 பின்னோக்கியான்  என்ற பெயரில் சற்குணம் எழுதும் வலைப்பதிவு இது. பல வித்தியாசமான கட்டுரைகளை கொண்டிருக்கிறது. விகடனில் வந்த செய்திகளும், பேட்டிகளும் நிறைய இருக்கின்றன.

கடவுள் துகள் கண்டுபிடிக்கப்பட்டது http://pinnokiyan.blogspot.in/2012/11/blog-post_6.html

 

மகாத்மா காந்தி முதல் மன்மோகன் வரை என்று பல பகுதிகள் எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள். பெரியாரின் பேட்டி மிகவும் சுவாரஸ்யம்.

 

கரந்தை ஜெயகுமார்

16 வயது தலைமையாசிரியர்

‘நண்பர்களே, வாருங்கள். பள்ளி செல்ல இயலவில்லையே, படிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இனியும் வேண்டாம். வாருங்கள், எழுதவும், படிக்கவும் நான் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். வாருங்கள், நண்பர்களே வாருங்கள்’ என்று அழைத்து தன் கிராமத்து சிறுவர் சிறுமியர்களுக்கு கல்வி கற்பிக்கும் சிறுவன் பாபர் அலி பற்றிய பதிவு இது.

இசை மேதை பீத்தோவன் பற்றிய பதிவு இதோ

 

நாளை பார்க்கலாம் இன்னொரு சங்கீத பதிவுடன் …….

 

வலைச்சரம் முதல்நாள் 

வலைச்சரம் இரண்டாம் நாள் 

வலைச்சரம்  மூன்றாம் நாள்

வலைச்சரம் நான்காம் நாள்

 

ஸ்காட்லாந்து தனி நாடாகுமா?

ஸ்காட்லாந்து தனி நாடாகுமா?

இன்று 18.9.2014 ஸ்காட்லாந்து மக்கள் ஒரு மிகப்பெரிய முடிவை எடுக்கப்போகிறார்கள். இங்கிலாந்திலிருந்து பிரிந்து ஸ்காட்லாந்து தனி சுதந்திர நாடாக இருக்க விழைகிறதா? அல்லது இங்கிலாந்துடன் இணைந்து இருக்கவே விரும்புகிறதா? இதைப்பற்றி வாக்கெடுப்பு இன்று அங்கு நடைபெற இருக்கிறது.

 

இத்தனை வருடங்களாக இல்லாமல் ஏன் இப்போது இந்த விஷயம் தலை தூக்கியிருக்கிறது?

 

1999 ஆம் ஆண்டு சில அதிகாரங்களை ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு ஐயர்லாந்திற்கு மாற்றியது லண்டன் தலைமை. இதற்கு அடுத்த அடியாக ஸ்காட்லாந்து பாராளுகன்றம் 2009 இல் சுதந்திரம் வேண்டுமென்ற கருத்தை முன் வைத்தது. இரண்டு வருடங்களுக்கு முன் இங்கிலாந்தின் பிரதம மநிதிரி திரு டேவிட் காமெரூன் பொதுஜன வாக்கெடுப்பிற்கு சம்மதம் கொடுத்தார். ஏனெனில் அப்போது சுதந்திரம் வேண்டுமென்ற குரல் சற்று பலவீனமாகவே ஒலித்தது.

 

ஸ்காட்லாந்து சுதந்திர நாடானால் இங்கிலாந்து தன்னுடைய நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கையும், தனது ஜனத் தொகையில் எட்டு சதவிகிதத்தையும் இழக்கும். சுதந்திர ஸ்காட்லாந்து ஆதரவாளர்கள் தங்கள் விவகாரங்களில் நேரடி கட்டுப்பாடுகளைப் பெற விரும்புகிறார்கள். மேலும் இவர்கள் இடது சாரிகள். இங்கிலாந்தின் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் கொள்கைகளில் இவர்களுக்கு சம்மதம் இல்லாமல் இருக்கிறது. ஸ்காட்டிஷ் நேஷனல் கட்சி தலைவர் அலெக்ஸ் சால்மோன்ட் ‘சுதந்திர ஸ்காட்லாந்து உலகின் 20 செல்வ செழிப்பு மிக்க நாடுகளில் ஒன்றாக இருக்கும்’ என்கிறார். ‘ ‘இந்த அரிய வாய்ப்பினை கை நழுவ விட வேண்டாம்; நம்மால் முடியாது என்று அவர்கள் சொல்லவேண்டாம். நாம் எல்லோரும் சேர்ந்து செய்வோம். வெள்ளிக்கிழமை காலை ஒரு புதிய, சிறந்த, சுதந்திர நாட்டில் கண் விழிப்போம், வாருங்கள்’ என்று அறைகூவல் விடுக்கிறார்.

 

 

இங்கிலாந்துடன் சேர்ந்த ஸ்காட்லாந்து இருக்க வேண்டும் என்று சொல்பவர்களின் கருத்துக்கள் என்ன?

ஐக்கிய அரசுடன் கூட இருப்பதால் உலகின் நிகழ்வுகளில் ஸ்காட்லாந்தின் குரல் எடுபடும். அதிக வேலைவாய்ப்புகள், அதிகப் பணப் புழக்கம் இவை லாபங்கள். கூடுதலாக இங்கிலாந்தின் பவுண்ட் நாணயம் இவர்களுக்கும் கிடைக்கும். 3 நூற்றாண்டுகளாக இருந்து வந்த பழமை வாய்ந்த உறவு நீடிக்கும்.

 

வாக்கெடுப்பிற்கு முந்தைய நாளான புதன் அன்று நடந்த கருத்துக் கணிப்பில் இங்கிலாந்துடன் சேர்ந்து இருக்க விரும்புபவர்கள் எண்ணிக்கை 52 சதவிகிதமாகவும், சுதந்திரம் வேண்டும் என்பவர்கள் எண்ணிக்கை 48 சதவிகிதமாகவும் இருந்தது. எது வேண்டும் என்று தீர்மானிக்கமுடியாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை 8-14 சதவிகிதம் அதாவது 4.3 மில்லியன் வாக்காளர்கள்.

 

வியாழக்கிழமை அன்று எடுக்கும் வாக்கெடுப்பில் சுதந்திரம் வேண்டும் என்று சொல்பவர்களின் எண்ணிக்கை அதிகமானால் 307 வருட இங்கிலாந்து நாட்டுடன் ஆன பந்தம் விலகும்; அதுமட்டுமில்லாமல் இத்தனை நாட்கள் ஐக்கிய அரசாக இருந்த இங்கிலாந்து  இரண்டாக உடையும். பொருளாதார நெருக்கடியும் ஏற்படக்கூடும்.

 

இங்கிலாந்து நாட்டு அரசியல் தலைவர்கள் ஸ்காட்லாந்து ஐக்கிய அரசில் நீடிக்கும் பட்சத்தில் அதற்கு அதிக தன்னாட்சி அதிகாரங்கள் கொடுப்பதாக கூறுகிறார்கள். ஆனால் சுதந்திர ஸ்காட்லாந்து வேண்டுபவர்கள், லண்டன் உயர் மக்களின் ஆட்சி வேண்டாம் நாங்களே எங்கள் முடிவுகளை எடுத்துக் கொள்வோம் என்கிறார்கள்.

 

இங்கிலாந்து பிரதம மந்திரி காமெரூன் கூறுகிறார்: ‘நாம் ஒரு குடியரசில் இருக்கிறோம். வாக்கெடுப்பு மூலம் தங்கள் கருத்துக்களை கூறும் மக்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும்’. சென்ற இரண்டு வாரங்களில் இவர் இரு முறை ஸ்காட்லாந்து போய் வந்தார். ஆனால் அங்கு அவருக்கு அத்தனை நல்ல பெயர் இல்லை. ஒரு மேல்தட்டு ஆங்கிலேயர் என்றே அவர் கருதப்படுகிறார்.

 

உலகத்தின் நிலை:

ஸ்காட்லாந்து, தொடர்ந்து இங்கிலாந்து நாட்டுடன் சேர்ந்த்திருப்பதையே விரும்பும் என்று உலகின் மற்றைய நாடுகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. வல்லரசுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் இங்கிலாந்து உடையக் கூடாது என்றே பிரார்த்தனை செய்கின்றன. நாடுகள் உடைவதற்கு இங்கிலாந்து ஒரு மோசமான உதாரணமாக இருந்துவிடக்கூடாது என்று இந்நாடுகள் எதிர்பார்க்கின்றன.

 

சில பொதுக்கருத்துகள்:

  • சுதந்திர ஸ்காட்லாந்தின் நாணயம் என்னாவாக இருக்கும்? இங்கிலாந்தின் பவுண்ட் தொடருமா? அல்லது ஐரோப்பாவின் யூரோவை தேர்ந்தெடுக்குமா? பவுண்ட் தொடர்வதுதான் இரு நாடுகளுக்கும் நல்லது. இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய சந்தை ஸ்காட்லாந்து. பவுண்ட் பறிக்கப்பட்டால் இந்த சந்தை குலையும்.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.8% உயரும். ஸ்காட்லாந்து நிச்சயம் சிறப்பாக முன்னேறும்.
  • 1970 ஆம் ஆண்டிலிருந்து வடக்கு கடலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூலம் 300 பில்லியன் ஸ்டெர்லிங் வரி வருமானம் வந்து கொண்டிருக்கிறது. இனி இந்த தொகை ஸ்காட்லாந்திற்கு கிடைக்கும்.
  • அடுத்த 15 வருடங்களில் ஸ்காட்லாந்தின் முன்னேற்றம் நிச்சயம்.
  • 2012 ஆம் ஆண்டு ஒவ்வொரு ஸ்காட்லாந்து குடிமகனும் 10,700 ஸ்டெர்லிங் இங்கிலாந்து கருவூலத்திற்குக் கொடுக்க வேண்டியிருந்தது. மொத்த இங்கிலாந்திலும் இது 9,000 பவுண்டுகள் தான். தேசியவாதிகள் விமான பயணக் கட்டணத்தையும், நிறுவன வரிகளையும் குறைப்பதாகக் கூறுகிறார்கள்.

 

ஐக்கிய அரசுடன் இருப்பதால் என்ன நன்மை?

  • பவுண்ட் நாணயம் ஸ்காட்லாந்துடன் இருக்கும். வேறு என்ன நாணயம் பயன்படுத்துவது என்ற குழப்பம் இருக்காது.
  • 2008 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் வங்கிகள் மூழ்கும் நிலைக்கு வந்தபோது கைகொடுத்து உதவியது இங்கிலாந்துதான். இங்கிலாந்துடன் கூட சேர்ந்து இருப்பது, எல்லைப் பிரச்னை இல்லாமல் வங்கிகளுக்கு எல்லா மக்களையும் சென்றடைய உதவும்.
  • எண்ணெய்வளம் அளவிற்கு அதிகமாக பேசப்படுகிறது. நாம் நினைக்கும் அளவிற்கு வருமானம் தராது. கடந்த 21 வருடங்களில் 20 வருடங்களாகப் பற்றாக்குறைதான்.
  • ஜனத்தொகையில் வயதானவர்கள் அதிகம் உள்ள நாடு. உயர்ந்த கடன் செலவுகள், சரியும் எண்ணெய் வருமானம் இவற்றைப் பார்க்கும்போது இங்கிலாந்துடன் சேர்ந்திருப்பதே உத்தமம். பிரிவதால் ஒவ்வொரு ஸ்காட்லாந்துக்காரர் தலையிலும் 1,400 ஸ்டெர்லிங் கடன் ஏறும்.
  • அடிப்படை வரி 1000 ஸ்டெர்லிங் உயரும். வாக்கெடுப்பு எப்படி இருந்தாலும் வரியைக் குறைப்பதாக இங்கிலாந்து அரசு கூறியிருக்கிறது.

 

ஸ்காட்லாந்து பிரியுமா பிரியாதா என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நவீன உலகத்திற்கு ஸ்காட்லாந்தின் கொடை என்னவென்று பார்ப்போமா?

 

ஸ்காட்லாந்து பிரிந்து தனிநாடானால் பல கண்டுபிடிப்புகளுக்கு மார்தட்டிக் கொள்ளலாம். கோல்ஃப் – இலிருந்து தொலைக்காட்சி வரை, டாலி ஆட்டுக்குட்டி முதல் கிராண்ட் தெப்ஃட் ஆட்டோ என்ற விடீயோ கேம் வரை பல கண்டுபிடிப்புகள் இங்கு நிகழ்ந்துள்ளன. நவீன உலகின் வாழ்க்கையை மேம்படுத்தும் பல கண்டுபிடிப்புகள் அறுவை சிகிச்சையின் போது கொடுக்கப்படும் மயக்க மருந்து, பெனிசிலின் ஊசி, தொலைபேசி, நவீன கழிப்பறைகள் என்று பட்டியல் நீளுகிறது.

 

  • நகல் இயந்திரம் – ஜேம்ஸ் வாட்டால் ஜெராக்ஸ் இயந்திரத்தின் ஆரம்பகால பதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
  • ஜேம்ஸ் சால்மேர்ஸ் என்ற புத்தக வியாபாரியால் பசையுடன் கூடிய தபால் தலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • அலெக்ஸ்சாண்டர் க்யும்மிங் – நவீன ஃப்ளஷ் கழிப்பறையின் காப்புரிமையைப் பெற்றவர்.
  • தொழிற்புரட்சிக்கு வித்திட்ட நீராவி என்ஜின் ஜேம்ஸ் வாட்டால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் ஜேம்ஸ் யங் சிம்சன் மயக்க மருந்தைக் கண்டுபிடித்தார்.
  • தோலினுள் போடப்படும் ஊசியை அலெக்ஸ்சாண்டர் வுட் என்ற மருத்துவர் கண்டுபிடித்தார்.
  • அலெக்ஸ்சாண்டர் ஃப்ளெமிங் – பெனிசிலின் கண்டுபிடித்தார்.
  • ஜான் லோகி பார்ட் தொலைக்காட்சியை கண்டுபிடித்தார்.
  • தொலைபேசியின் காப்புரிமையை அலெக்ஸ்சாண்டர் பெல் பெற்றுக் கொண்டார்.
  • உலகின் முதல் க்ளோனிங் செய்யப்பட்ட டாலி என்னும் ஆடு எடின்பர்க்கின் ரோஸ்லின் இன்ஸ்டிடியூட் – இல் 1996 ஆண்டு உருவாக்கப்பட்டது.
  • இருசக்கர சைக்கிளுக்கு பெடல் வடிவமைத்தவர் கிர்க்பாட்ரிக் மாக்மில்லன் என்ற இரும்புக் கொல்லர். இது நடந்தது 1830 ஆம் ஆண்டு.
  • கிராண்ட் தெப்ஃட் ஆட்டோ என்ற விடீயோ கேம் எடின்பர்க்கின் ராக்ஸ்டார் நார்த் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.

 

இந்தியாவிலிருக்கும் ஸ்காட்லாந்துக்காரர்களும் இதில் இரு வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள்.

 

 

‘ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற எல்லாத் தகுதிகளையும் கொண்டது. செழிப்பான பொருளாதாரத் திறன், இயற்கை வளங்கள், உள்கட்டமைப்புகள் கல்வி, செழிப்பான கலாச்சாரம், வளர்ந்து வரும் சுற்றுலாத்துறை, ஆரோக்கியத்துறை, ஆரோக்கியமான ஜனத்தொகை, ஆரோக்கியமான சமூக வாழ்வு என்று எல்லாவிதத்திலும் ஸ்காட்லாந்து உலகின் எந்த நாட்டிற்கும் குறைந்தது இல்லை. அதனால் இங்கிலாந்திலிருந்து பிரிவதே சரி’ என்று சிலர் கருத்து சொன்னாலும் வேறு சிலர் வித்தியாசமான கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.

 

‘பவுண்ட் என்ற நாணயத்தின் சக்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது இல்லாமல் ஸ்காட்லாந்தால் தாக்குப் பிடிக்க முடியாது. தனி நாடு என்றால் தனியாக பாஸ்போர்ட், வேண்டும். ஐரோப்பிய ஐக்கியத்திர்லிருந்து பிரிவது ஸ்காட்லாந்து போன்ற சின்ன நாட்டிற்கு மிகவும் கடினம்’ என்று சொல்லுகிறார்கள்.

 

இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும் ஸ்காட்லாந்து தனி சுதந்திர நாடா, அல்லது இங்கிலாந்தின் ஒரு பகுதியா என்று. காத்திருந்து பார்ப்போம்.

 

Published on 18.9.2014 in 4tamilmedia.com

 

 

 

 

இந்திய தேசிய இயக்கத்தின் கொடை

R day

வல்லமை இதழில் வெளியான சுதந்திர தின சிறப்பு கட்டுரை 

நமது சுதந்திரப் போராட்டத்தை பற்றி நாம் எல்லோரும் அறிவோம். இந்தப் போராட்டம் வெறும் சுதந்திரம் கிடைக்க வேண்டும்; அந்நியர்களை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக மட்டும் நடத்தப்பட்ட போராட்டம் இல்லை. சுதந்திரத்திற்காக போராடிய அதேவேளையில் சுதந்திர இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்ற வரைபடமும் இந்தக் காலத்தில் வரையப்பட்டது; இப்போது நாம் காணும் சுதந்திர இந்தியாவின் ஒவ்வொரு செயலும் இந்தப் போராட்டத்தின் போது உருவாகிய இந்திய தேசிய இயக்கத்தினால் வழி நடத்தப்பட்டது. சுதந்திரம் கிடைத்தபின் இந்தியா சந்தித்த சவால்கள் என்னென்ன, தலைவர்களின் முன்னே எழுந்த கேள்விகள் என்னென்ன இவற்றையெல்லாம் இந்திய மக்களும், இந்தியத் தலைவர்களும் எப்படி எதிர்கொண்டனர் என்பதைப் பற்றிய கட்டுரை இது.

 

தில்லி அம்பேத்கர் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு சலில் மிஸ்ரா எழுதிய ‘Legacy of the Struggle’ என்னும் கட்டுரையின் மொழியாக்கம் இது. இந்தக் கட்டுரை டெக்கன் ஹெரால்ட் செய்தித்தாளில் 10.8.2014 அன்று வெளியானது. சுதந்திரப் போராட்டம் பற்றியும், இன்றைய இந்தியாவின் நிலை பற்றியும் புதுவிதக் கோணத்தில் இந்தக்கட்டுரை பேசுகிறது. சமீபத்தில் படித்த கட்டுரைகளில் என்னை மிகவும் கவர்ந்த கட்டுரையை வல்லமை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

——————————————————————————————————————————————-

 

இந்திய தேசிய இயக்கம் மூன்று வகையில் சுதந்திர இந்தியாவுடன் தொடர்பு உடையது. முதலில் நவீன இந்தியா எப்படி அமையவேண்டும் என்ற வரைபடம் இந்த இயக்கத்தின் கருவில் உதித்ததுதான். இரண்டாவதாக இந்திய சமுதாயத்தில் ஒரு ஆழமான, மரபுவழி தடத்தை இந்த இயக்கம் விட்டுச் சென்றது. மூன்றாவதாக இந்த இயக்கத்தின் வழி நடைபெற்ற போராட்டங்களுக்கும், சுதந்திர இந்தியாவின் கையாளப்பட்ட அரசியல் பொருளாதார நெறிகளுக்கும் இடையே வியக்கத்தக்க ஒற்றுமைகள் உண்டு. இவைமட்டுமல்லாமல் இந்த இயக்கத்திற்கு ஒரு உலகப்பின்னணியும் உண்டு. இவை எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கும்போது நமக்கு ஒரு சுவாரஸ்யமான கதை கிடைக்கிறது.

 

19ஆம் நூற்றாண்டின் முடிவில் ஏகாதிபத்தியம் என்பது நன்றாக வேரூன்றி இருந்தது. சில ஐரோப்பிய நாடுகளின் ஆத்திகம் நிலைபெற்றிருந்தது. இந்த நிலை இப்படியே நீடிக்கும்; இதுவே இயற்கையானது என்றும் சில நாடுகள் நம்பத்தொடங்கின. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல சக்தி வாய்ந்த இயக்கங்கள் பிறந்து ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் நிலவி வந்த இந்த ஏகாதிபத்திய முறைக்கு சவால் விடுத்தன. இரண்டாம் உலகப்போருக்குப் பின் 1945 – 1960 ஆண்டுகளின் நடுவே சுமார் 120 நாடுகள் வெளிநாட்டினரின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றன.

 

இப்படி விடுதலை பெற்ற நாடுகளின் முன் சில கேள்விகள் எழுந்தன: விடுதலை மற்றும் நாட்டின் வளம் இவை இரண்டும் இந்த நாடுகளின் குறிக்கோள் ஆக இருந்த நேரத்தில் அடிமைத்தளை நீங்கிய முன்னேற்றம் என்பது சாத்தியமா? சுதந்திரத்துடன் கூடிய வளமை என்பது எப்போது கிடைக்கும்? என்ற கேள்விகள் எழுந்தன. இவற்றை அடைய பல தடைகள் இருந்தன. ஏகாதிபத்தியம் என்பது ஒரு தடையே ஆனாலும் அது ஒன்று மட்டுமே தடையாக இல்லை. தொழில்துறை முன்னேற்றம் என்பது இந்த ஏகாதிபத்தியத்தினால் தள்ளிக் கொண்டே போயிற்று. சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்படத் துவங்கிய பின்னும், அரசியல் குழப்பங்கள், நவீன கருத்துக்களைக் கொண்ட நிறுவனங்கள் இல்லாமை, பொருளாதார உள்கட்டமைப்புகள் இல்லாமை ஆகியவற்றால் இந்த மாற்றங்கள் ஏற்படுவது கடினமாகவும் கைகெட்டாமலும் போயின. உலகப் போருக்கு பின் உலகின் வடக்கு பாகங்கள் சுதந்திரமாகவும், வளமாகவும், தெற்கு பாகங்கள் சுதந்திரம், செல்வச் செழுமை என்ற இரண்டிலும் பின்தங்கியும் இருந்தன. இந்த சுதந்திரம், செல்வச் செழுமை இரண்டுமே ஐரோப்பிய நாடுகளின் சொத்து என்ற எண்ணம் கூட நிலவி வந்தது இந்த காலகட்டத்தில்.

 

சுதந்திர இந்தியா இந்த நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள தீவிரமாக முயன்று வந்தது. இந்தியத் தலைவர்கள் சுதந்திரம் செல்வச் செழுமை இரண்டையுமே தங்கள் குறிக்கோளாகக் கொண்டு நாட்டை முன்னேற்ற விரும்பியதால் இரண்டின் முன்னேற்றமும் மிகவும் மெதுவாகவும், சரிசமமான முன்னேற்றம் இல்லாமலும், அங்கங்கே முன்னேற்றங்கள் என்ற நிலையிலும்  இருந்தன. பிரமாதமான முன்னேற்றம் என்று நாம் மார்தட்டிக்கொள்ள முடியாவிட்டாலும், ஒட்டுமொத்த முன்னேற்றம் என்பது நாம் வெட்கப்பட்டும் வகையில் நிச்சயம் இல்லை.

 

இந்திய மக்களின் ஆயுட்காலம் சுதந்திரத்திற்கு முன் 32 வருடங்கள்.  கற்றவர்களின் சதவிகிதம் 14%. உணவுப் பற்றாக்குறை மிகவும் அதிகம். பட்டினிச் சாவுகள் அதிசயமல்ல. இன்று சூழ்நிலை மிகவும் மாறியிருக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில் இந்தத் துறைகளில் முன்னேற்றம் கண்டு வருகிறோம். இந்த முன்னேற்றங்களை நாடாளுமன்ற ஜனநாயகக் கட்டமைப்பில் பெற்றிருக்கிறோம் என்பது பெருமைக்குரியது.

 

இந்திய சுதந்திரப்போராட்டம் என்பது வெள்ளையர்களை வெளியேற்றுவது என்பதுடன் நிற்கவில்லை; எல்லாவற்றிற்கும் மேலாக நவீன இந்தியாவின் கட்டுமானப் பணிக்கான அஸ்திவாரம்தான் இந்தப் போராட்டம். நவீன இந்தியாவை உருவாக்குவதில் ஒரு பகுதி தான் சுதந்திரப் போராட்டம். சுதந்திர இந்தியாவில் ஏற்படப்போகும் மிக முக்கிய முன்னேற்றங்களுக்கு இந்திய தேசிய இயக்கம் ஒரு ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்திய தேசிய இயக்கத்தின் நிலைபாடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 1947 க்குப் பிறகு நிகழ்ந்த அரசியல் பொருளாதார முன்னேற்றங்களை அறிய முடியாது.  சுதந்திர இந்தியாவின் பிரஜைகளுக்கு இந்திய தேசிய இயக்கம் தனது விலையுயர்ந்த சொத்தாக பல உயர்ந்த எண்ணங்களையும், நடைமுறைகளையும், நம்பிக்கைகளையும், விழைவுகளையும் விட்டுச் சென்றுள்ளது. இவையெல்லாம் நமது அரசியல் சாசனத்தில் நெறிமுறைப்படுத்தப் பட்டுள்ளன. நமது அரசியல் சாசனம் இந்திய தேசிய இயக்கத்தின் தயாரிப்புதான்.

 

நிர்வாக இயந்திரம் என்பது இங்கிலாந்தின் காலனித்துவ அடிப்படையில் அமைந்திருந்தாலும் சுதந்திர இந்தியாவின் சிந்தனைப் போக்கு முழுவதும் இந்திய தேசிய இயக்கத்தாலேயே உருப்பெற்றிருக்கிறது. இந்திய மக்களின் பொதுவான நம்பிக்கைகளையும், அபிலாஷைகளையும் பிரதிபலிக்கும் ஒரு இந்தியா உருவானது இந்த இயக்கத்தின் விளைவுதான். இந்திய தேசத்தின் பிரதிநிதியாக மட்டுமில்லாமல் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்குவதும் இந்த இயக்கத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியாக இருந்தது. ஏனெனில் சில ஆங்கில அறிஞர்களும், இனவரைவியலாளர்களும் (ethnographers) இந்திய தேசியம் என்பதை உருவாக்குவது மிகவும் கடினம் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். இந்தியாவின் பரப்பளவு, மதம், மொழி, கலாச்சாரம் இவைகளால் நிலவும் வேற்றுமைகள் காரணமாக ஒருங்கிணைந்த இந்தியா என்பது தூரத்துப் பச்சை; உண்மையில் இத்தனை பன்முகத்தன்மையுடன் கூடிய தேசத்து மக்கள் தம்மை ஒரு தேசத்தவர் என்று அடையாளம் காட்டிக் கொள்வது நடைமுறை சாத்தியமில்லை என்றனர். ஆனால் தேசிய தலைவர் சுரேந்திரநாத் பானர்ஜி இதை வலுவாக மறுத்தார். ‘இந்திய நாட்டின் மக்கள் இப்போது தங்களுக்கான ஒருங்கிணைந்த தேசத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். அவர்களது வேற்றுமைகள் இந்த ஒருங்கிணைந்த தேசத்தை உருவாக்கும் பணிக்கு இடையூறு விளைவிக்காது’ என்றார். காந்தி சொன்னார்: ‘இந்தியா வேற்றுமைகள் நிறைந்த பெரிய, மிகப்பெரிய நாடு. ஒவ்வொரு மதமும், கலாச்சாரமும், மொழியும் ஒன்றுக்கொன்று இணையாக, ஒன்று அடுத்ததற்கு உதவுவதாக இருக்கும். எதிராக செயல்படாது. இந்தநிலை உருவாக பல வருடங்கள் ஆகலாம். ஒருநாள் இந்நிலை ஏற்படும் என்ற நம்பிக்கையில் நான் இறக்க விரும்புகிறேன்’ என்றார். ஜவஹர்லால் நேரு இதனையே ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று விவரித்தார். இந்த ‘வேற்றுமைகள் எங்களது பலவீனம் அல்ல; எங்கள் பலம்’ என்றார் அவர். வேற்றுமைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த இந்தியாவாக இந்நாடு இருக்கும் என்ற நம்பிக்கையை தெரிவித்தனர் சுதந்திர இந்தியாவின் தலைவர்கள்.

 

தொழில் முன்னேற்றம் என்பது நமது நாட்டை வளமாக்கும் என்றாலும் இந்த மாறுதலுக்காக நாம் கொடுக்கும் விலையும் அதிகம்தான். மக்கள் வேறிடங்களுக்குக் குடிபெயர்தல், இருப்பிடங்கள் தொழிற்சாலைகளாக மாறுவது இவையெல்லாம் ஒரு சமூகத்தைப் பெரிதும் பாதிக்கும். இந்தப் பாதிப்பிலிருந்து மக்களை மீட்பதுவும் இந்த தேசிய உணர்வுதான்.

 

ஜனநாயக அரசியல் என்பதுவும் நமக்கு தேசிய இயக்கம் கொடுத்த கொடைதான். ஜனநாயகமாக்குதல் என்பது மக்கள் பெருமளவில் அரசியலில் பங்கு கொள்வது மற்றும் குடியுரிமைகளை ஊக்குவிப்பது என்ற இரு பிரிவுகளைக் கொண்டது. உலக சரித்திரத்திலேயே மிகப்பெரிய இயக்கம் இந்திய தேசிய இயக்கம் தான் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. முதலில் நடுத்தர வர்க்கத்தினர் பெருமளவில் பங்கு கொண்டாலும், போகப்போக எளிய மக்களும் இந்த இயக்கத்தில் பங்கு கொண்டனர். பெண்கள் அதிக அளவில் பங்கு கொண்ட இயக்கமும் இதுவே. சிறுபான்மையினரும் தங்கள் தேவைகளுக்காக போராடுவது – வேறு யாருடைய தலையீடும் இல்லாமல் – என்பது ஜனநாயக அமைப்பு  இவர்களுக்குக் கொடுத்த நம்பிக்கை என்று சொல்லலாம். முழுமை பெற்றதாக இல்லாமல் போனாலும் இந்தியாவின் ஜனநாயகம் உயிர்ப்புடன் முன்னே சென்றுகொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

 

வாக்குரிமை என்பது படிப்பறிவு அதிகம் இல்லாத இந்தியாவிற்கு நல்லதல்ல என்ற கருத்து வெளியானபோது நமது தலைவர்கள் சொன்ன பதில் இது: படிப்பறிவு அதிகம் இல்லாதபோதும் சுதந்திரம் வேண்டுமென்று ஒன்றாகக் கூடி போராடிய மக்களுக்கு, தங்களுக்கு வேண்டிய தலைவர்களைத் தாமே தேர்ந்தெடுப்பதற்கும், சொந்தமாக அரசியல் முடிவுகளை எடுப்பதற்கும் வேண்டிய முதிர்ச்சியும் இருக்கும்’.

 

இந்திய தேசிய இயக்கம் இந்த உலகிற்கு அளித்த செய்தி இதுதான்: ‘இந்திய நாடு தனது மரபுகளை மீறாமல், நவீனத்துவத்தையும் இயல்பாக ஏற்றுக்கொள்ளும்’.

 

1958 ஆண்டு நமது பிரதமர் நேரு தனது உரையில் கூறினார்: ‘

‘நவீன பொருளாதார முன்னேற்றத்திற்காக நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்குமா? அதற்காக நமது பழமையை மறக்காமல் கடைபிடிக்க முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு என்னிடம் விடை இல்லை. வேறு யாரிடமும் விடை இருப்பதாகவும் தெரியவில்லை.விஞ்ஞான, தொழில்நுட்ப முன்னேற்றங்களை நாம் வீரியத்துடனும், உள்ளார்வத்துடனும் வரவேற்க வேண்டிய அதே நேரத்தில் மனித வாழ்வின் மற்ற முக்கிய தேவைகளை நாம் மறக்கக் கூடாது. இதனால் நாம் இந்தியாவிற்கு மட்டுமல்ல ஏனைய நாடுகளுக்கும் தேவையானவற்றை செய்து தர இயலும். பொறாமையும், வன்முறையும், மன அழுத்தங்களும் நிறைந்த இந்த உலகில் இந்தியாவின் நட்பு நிறைந்த குரல் இந்த அழுத்தங்களைக் குறைக்க நாங்கள் இருக்கிறோம் என்ற செய்தியை ஒலிக்கும்’.

 

எல்லோருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!

 

நன்றி: டெக்கன் ஹெரல்ட் செய்தித்தாள்