சங்கடமான சமையல விட்டு……?

வலைச்சரம் இரண்டாம் நாள்

இன்னிக்கு காலையிலிருந்தே இந்தப் பாட்டு மனசுக்குள்ள ஓடிக் கொண்டே இருக்கிறது. எப்போ இந்த சங்கடமான சமையல விடப் போறேன்னு தெரியலை. தினமும் காலைல எழுந்ததுலேருந்து டிபன் என்ன, மத்தியானம் லஞ்ச் என்ன, சாயங்காலம் கொறிக்க என்ன ‘நொறுக்’, இரவு டின்னர் என்ன அப்படின்னு யோசிச்சு யோசிச்சு தலையே குழம்பிப் போயிடும் போல இருக்கு. யாராவது மென்யூ கொடுத்தால் தேவலை என்று நினைத்து என்ன செய்யலாம் என்று கேட்டால் மென்யூவைக்  கொடுத்துவிட்டு பருப்பை ரொம்ப வறுக்காதே, மெந்தியம் ரொம்பப் போடாதே, துகையலை சட்னி மாதிரி அரைச்சுட்ட என்று ‘லொள்ளு’  வேற! நாப்பது வருஷ அனுபவத்துல  (சமையல் கட்டு அனுபவம் தான்) இதெல்லாம் சகஜம்னு விட்டுட வேண்டியதுதான்.

 

இங்கு ஒரு விஷயத்தை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். எனக்கு சமையலில் அதீத ஆர்வமோ, சுவாரஸ்யமோ இருந்ததில்லை, எப்போதுமே. இதைச் சொன்னால், என் பெண் சொல்லுகிறாள்: ஒரு காலத்தில் நானும் விதம்விதமாக செய்து போட்டிருக்கிறேனாம்; புதுப்புது ரெசிபி எழுதி வைத்துக் கொண்டு செய்து கொடுத்திருக்கிறேனாம். அதெல்லாம் எப்பவோ. இப்ப சங்கடமான சமையல் தான்.

 

பசிக்கு சாப்பிட சமையல் செய்ய வேண்டும். பண்டங்களை வீணடிக்கக் கூடாது. உப்பு புளி சரியாக இருக்க வேண்டும். சமையல் செய்யும் போது தினமும் இப்படித்தான் நினைத்துக் கொள்வேன். மொத்தத்தில் வாயில் வைக்கும்படி செய்வேன். ஒவ்வொரு நாளும் தளிகை பெருமாளுக்கு கண்டருளப் பண்ண வேண்டும். அதனால் தளிகை செய்யும்போதே வாயில் போட்டு பார்ப்பது கிடையாது. செய்து முடித்து அவரவர்கள் தட்டில் சாதிக்கும்போது அவரவரே ருசி பார்த்து கொள்ள வேண்டியதுதான். அதற்கு முன் எப்படி இருக்கிறது நான் என்று பார்க்கவே மாட்டேன். பெருமாளின் திருவுள்ளம் என் தளிகை. அதனாலேயோ என்னவோ தினமுமே நன்றாக அமைந்துவிடும். இன்றுவரை இப்படித்தான்.

 

அப்படியும் ஒவ்வொரு நாள் என்ன செய்வது என்றே தெரியாமல் குழம்பி போய்விடுவேன். மார்கழி மாதம் என்றால் பொங்கல், தொட்டுக்கொள்ள கொத்சு, குழம்பு ஏதாவது பண்ணி சமாளிக்கலாம். பிள்ளை இருந்தால் அவனுக்குப் பிடித்ததாகப் பண்ண வேண்டும். அவனுக்கு அலுவலகம் இருக்கும் நாட்களில் நான் செய்வதுதான் தளிகை. அவனுக்கு கையில் கொடுத்து அனுப்ப ஒரு குழம்பு ஒரு கறியமுது தான் சரிப்பட்டு வரும். சிலநாட்களில் ‘சித்ரான்னம்’ செய்துவிடுவேன். அதுவே எங்களுக்கு மதிய சாப்பாடாகிவிடும். பிள்ளைக்கு பாதி கறிகாய்கள் பிடிக்காது. கூட்டு என்றால் பெங்களூர் கத்திரிக்காய் கூட்டு மட்டுமே பிடிக்கும். கறியமுது என்றால் ஆலு ஃப்ரை –யை மட்டுமே ஒப்புக்கொள்ளுவான். தினமும் ஆலூ ஃப்ரை சாத்தியமா? அதனால் சில நாட்கள் கத்திரிக்காய் பொடி, வாழைக்காய் பொடிமாஸ், சேனைக்கிழங்கு பொடிமாஸ் என்று செய்து சொல்லாமல் கொள்ளாமல் டிபன் பாக்ஸில் வைத்துவிடுவேன். அவனும் சமர்த்தாக சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவான்.

 

திடீரென்று ஒரு நாள்…….என்னவாயிற்று? சஸ்பென்ஸ்……நாளை!

 

மேலே தொடரும் முன் இன்றைய வலைச்சரத்தை அலங்கரிக்கப் போகும் பதிவர்  (ஒருவர் மட்டுமே) யார் என்று பார்த்துவிடலாம்.

 

திருமதி சுபாஷிணி ட்ரெம்மல்

 

இவரைப்பற்றிப் படிக்க : இங்கே

 

வலைச்சரம் முதல் நாள் 

14 thoughts on “சங்கடமான சமையல விட்டு……?

  1. //பெருமாளின் திருவுள்ளம் என் தளிகை. // உண்மை.

    எனக்குகூட அதிக விருப்பம் கிடையாது சமைப்பதில்.

    ஆனால் என் கணவர் “மனுஷளுக்கு பண்ணவில்லை பெருமாளுக்கு பண்ணுகிறாய் என்று நினைத்துக்கொண்டு செய்” என்று சொல்லுவார்.

    1. வாங்க ரமா!
      என் அக்காவின் பெயரும் ரமாதான். ஆனால் அவள் எனக்கு நேர் எதிர். ஆசை ஆசையாக சமைப்பாள். நீங்கள் என் கட்சி என்று அறிய ரொம்பவும் சந்தோஷம்/

      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  2. எனக்கும் சமைக்கும்போதே ருசி பார்க்கும் பழக்கமெல்லாம் கிடையாது. பெருமாளுக்கு எப்பவும் மஹாநைவேத்யம்தான் துளி நெய்விட்டு:-) அவருக்கே போரடிச்சுப் போயிருக்கும்.

    தட்டில் பரிமாறிக்கொண்ட பிறகு , கேசவா நாராயணா கோவிந்தா சொல்லி சாப்பிட ஆரம்பிப்பேன். எப்படி இருக்கோ அப்படி….

    நாப்பது வருசமா வெவ்வேற ஊர்களில்/நாடுகளில் வெவ்வேற அடுப்புகளில்…ஒரே மாதிரி சமைச்சு போதுண்டா சாமின்னு இருக்கு இப்ப:-)))

    1. வாங்க துளசி!
      எனக்கும் இப்போதுதான் அலுத்து விட்டது. ஆனால் சமைக்கும்போது திருப்பாவை செவித்துக்கொண்டே செய்வதால் நன்றாக அமைந்துவிடும்.

      வருகைக்கும், உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

  3. அழகிய நடை அருமையான அறிமுகம் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

    உங்களின் மலாலா புத்தகம் சென்னையிலிருந்து வந்து விட்டது படிக்க ஆரம்பிக்க வேண்டும்

    1. வாங்க விஜயா!
      உங்கள் சமையலைப் பற்றி சொல்லவேயில்லையே!
      சீக்கிரம் என் புத்தகத்தைப் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை எழுதுங்கள், ப்ளீஸ்!

  4. தமிழுக்கு பெருமை சேர்த்து கொண்டிருக்கும் திருமதி.சுபாஷினி டிரெம்மல் பற்றி முதல் முறையாக தெரிந்து கொண்டேன்! நன்றி !

    1. வாங்க எழில்!
      என் சங்கடமான சமையல் உங்கள் பசியை தூண்டி விட்டதா? வீட்டிற்கு வாருங்கள். பிரமாதமான விருந்து செய்து பரிமாறுகிறேன்.
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

Leave a reply to ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் Cancel reply