வலைச்சர ஆசிரியர்

வலைச்சரம் 

 

வணக்கம் பலமுறை சொன்னேன்

தமிழ் பதிவர்கள் முன்னே – வலைச்சரம் வழியே.

சுயதம்பட்டம்!

2012 அக்டோபர் மாதம் முதல் தடவை பதவி ஏற்பு. இதோ மறுபடியும் உங்கள் முன் மீண்டும் நான் என்கிற ரஞ்சனி நாராயணன். இந்த இரண்டு + வருடங்களில் எனது இணைய அறிவு கூடியிருக்கிறதா? எனது எழுத்தில் மெருகு ஏறியிருக்கிறதா? தினமும் ஆயிரக்கணக்கில் என் பதிவுகளைப் படிக்க உலகெங்கிலிருந்தும் மக்கள் போட்டிபோட்டுக் கொண்டு வருகிறார்களா? தமிழ் மணத்தில் எனது ரேங்க் முன்னேறியிருக்கிறதா? இல்லை, இல்லை, இல்லை. ஏன் இப்படி வேர்ட்ப்ரஸ்-ஐ கட்டிக் கொண்டு அழுகிறீர்கள்? ப்ளாக் ஸ்பாட்டிற்கு மாறுங்கள் என்று பலர் சொல்லியும் (சொல்ற பேச்ச கேட்கற வழக்கம் என்னிக்கு இருந்தது, இனிமேல் வர? ஐந்தில் வளையாதது ஐம்பதில் – மன்னிக்கவும் அறுபதில் வருமா?) தொடர்ந்து வே.க.அ.!

ஆனால் இந்த வருடங்களில் சில மாறுதல்கள் எனது எழுத்தில். இதுவரை எனது எழுத்தில் நகைச்சுவை அதிகமாக இருக்கும். இப்போதும் அப்படி எழுதவே விரும்புகிறேன். ஆனால் எனக்கு வந்த சில வாய்ப்புகள் என்னிடமிருந்து சீரியஸ்ஸான எழுத்துக்களை எதிர்பார்த்ததால் சற்று மாற வேண்டியிருந்தது. நடப்பவை எல்லாமே நல்லதிற்குத்தான், இல்லையா?

ஆழம் என்னும் மாத இதழில் சென்ற 2013 ஏப்ரல் மாதத்திலிருந்து எழுத ஆரம்பித்தேன். எல்லாமே அரசியல் செய்திகள். அவ்வப்போது நடப்பவை. நிறைய அரசியல் செய்திகளைப் படித்து தொகுத்து எழுத வேண்டி இருந்தது.  அதுமட்டுமல்ல. 2014 ஆம் ஆண்டு நான் எழுதிய விவேகானந்தர் பற்றிய புத்தகம் கிழக்குப் பதிப்பக வெளியீடாக வந்தது. டயல் ஃபார் புக்ஸ் மூலம் வாங்கலாம். 2015 இல் இரண்டாவது புத்தகம் மலாலா – ஆயுத எழுத்து வெளியானது. இதுவும் கிழக்குப் பதிப்பக வெளியீடு தான்.

மின்னூல்கள்

சாதாம்மிணியின் அலப்பறைகள்

அரியலூர் அடுக்கு தோசை இன்ன பிற……

இரண்டு வந்திருக்கின்றன. சொல்ல மறந்துவிட்டேனே! முதல் முறையாக ஒரு போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் பரிசும் பெற்றிருக்கிறேன். வல்லமை இதழில் திரு ஜோதிஜி எழுதிய டாலர் நகரம் புத்தகத்தைப் பற்றி எழுதிய புத்தக மதிப்புரைக்கு மூன்றாம் பரிசு கிடைத்திருக்கிறது. இதைவிடப் பெரிய பரிசு இந்தப் போட்டிக்கு நடுவராக இருந்த பத்திரிக்கையாளர் திரு வெங்கட் சாமிநாதன் அவர்களின் பாராட்டுரை.

மெல்ல மெல்ல எனது எழுத்துக்களின் எல்லைகளை விரிவுபடுத்த ஆரம்பித்தேன்.

http://www.4tamilmedia.com/

என்ற இணைய தளத்தில் எழுத ஆரம்பித்தேன். என் எழுத்தும் மாறியது. அரசியல் அதிகம் பேசுவது இல்லை நான். ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்கிற மனநிலைதான். ஆனால் அடுத்தடுத்து வந்த மோசடிகள், ஊழல்கள், அண்ணா ஹசாரே அவர்களின் தலைமையில் ஊழலுக்கு எதிராக இந்தியாவே திரண்ட போது நானும் விழித்துக் கொண்டேன். அந்தப் போராட்டத்தின் மையமாக இருந்த திரு அர்விந்த் கெஜ்ரிவால் பேசிய பேச்சுக்களில் புதிய நம்பிக்கை ஏற்பட, அரசியல் நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.

அவர் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியவுடன் ஒரு புதிய நம்பிக்கை. இந்தியாவிற்கு ஒரு புது வெளிச்சம் வருமென்று. அவர் மேல் இருந்த நம்பிக்கை எத்தனையோ பேர் எத்தனையோ சொல்லியும் குறையவில்லை. அந்த நம்பிக்கையில் கெஜ்ரிவாலுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.

நாளை டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. இந்தத் தேர்தல் பற்றிய அலசலும் எழுதினேன்.

ஷேக்ஸ்பியரின் 450 வது பிறந்தநாளைக்கு வாழ்த்துச் சொன்னேன்.

ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஷேக்ஸ்பியர்!

குஷ்வந்த் சிங்கின் மரணம் என்பது என்ன என்ற கட்டுரையை மொழிபெயர்த்து எழுதினேன் அவர் மறைந்த போது.

கடிதம் எழுதுவது என்பது வழக்கத்திலிருந்து மறைந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் வல்லமையில் கடிதம் எழுதும் போட்டி வைத்தார்கள். மூன்றாம் பரிசு பெற்றது  எனது கடிதம்: மணிமொழியாகிற என் அன்பு அம்மாவே…!

நான்குபெண்கள் என்னும் தளத்தில் குழந்தை வளர்ப்பு பற்றிய தொடர் ஆரம்பித்தேன். 80 வாரங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. நடுவில் சில காரணங்களால் எழுத முடியாமல் போயிற்று. அந்த தளத்தின் சொந்தக்காரர் மிகவும் புரிதலுடன் நான் மீண்டு வர நேரம் கொடுத்தார். இப்போது தொடர்ந்து எழுதுகிறேன். இந்த தளத்திலேயே நோய்நாடி நோய்முதல் நாடி என்ற உடல்நலம் பற்றிய தொடர் கட்டுரையும் வந்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் அதையும் மீண்டும் தொடர எண்ணியிருக்கிறேன்.

வெப்துனியா வில் கட்டுரைகள் எழுதினேன்.

தினமணியில் ஒரு கட்டுரை வெளியானது.

அமெரிக்காவிலிருந்து வரும் ‘தென்றல்’ மார்ச் இதழில் எனது வலைப்பூ அறிமுகம் செய்யப்பட்டது. வலையுலகின் வளைக்கரங்கள் என்ற பகுதியில் என்னைப்பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். நான் எழுதும் குழந்தைகள் வளர்ப்பு தொடர், அறிவியல் கட்டுரைகள் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

சுய தம்பட்டம் போதும் என்று நினைக்கிறேன்.

நாளை…

சங்கடமான சமையலை விட்டு……..என்ன செய்யப்போகிறேன்? பொறுத்திருந்து பாருங்கள்.