டெல்லி யாருக்கு? பாகம் 2

kejriwal

ஆம்ஆத்மி கட்சி : விரைவான எழுச்சி

ஆம்ஆத்மி கட்சி டெல்லி தேர்தலுக்குத் தயாரானபோது கட்சியே மிகவும் மோசமான நிலையில் இருந்தது. மக்களவைத் தேர்தலில் கட்சியின் பெரிய தலைவர்கள் எல்லொரும் தோல்வியை தழுவியிருந்தனர். உட்பூசல் மலிந்திருந்தது. கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர் என்று கருதப்பட்ட ஷாசியா இல்மி ஆம்ஆத்மி கட்சியின் தலைவரைச் சுற்றி ஒரு குழு செயல்பட்டு வருவதாகச் சொல்லி கட்சியை விட்டு வெளியேறியிருந்தார். தொண்டர்கள் உள்ளம் தளர்ந்து போய் கட்சி பிளவுபட்டு இருந்த நிலையில் அர்விந்த் கெஜ்ரிவால் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். மிகவும் கடினமான வேலைதான். ஆனால் கடந்த சிலமாதங்களாக இந்தக் கட்சி இரவுபகலாக முனைப்புடன் செயல்பட்டு வருவதை குறிப்பிட்டே ஆகவேண்டும். கெஜ்ரிவாலின் ராஜினாமா செய்த சேதாரத்தை பூசி மெழுகும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

கெஜ்ரிவால் தான் ‘சுத்தமான மனிதர்’ என்பதை முன் வைத்தாலும், சென்ற தேர்தலின் போது இந்திய அரசியலில் ஒரு மாற்றம் கொண்டு வருவார், தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்ற மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றாமல் போனது இவருக்கு எதிராக வேலை செய்கிறது. எங்கே போனாலும் முதலமைச்சர் பதவியை ஏன் விட்டுவிட்டீர்கள் என்று மக்கள் கேட்கின்றனர். மக்களுடைய மனதில் இருந்த ஆழமான கோபத்தை உணர்ந்த கெஜ்ரிவால் தன் பேச்சை மன்னிப்புடனே ஆரம்பிக்கிறார். மக்களிடம் கேட்காமல் தான் ராஜினாமா செய்தது தவறுதான் என்று ஒப்புக்கொள்ளுகிறார். தான் மறுபடி அந்தத் தவறை செய்யமாட்டேன் என்கிற உறுதியையும் அளிக்கிறார்ர். இந்த முறை ‘ஐந்து வருடம்’ என்கிற கோஷத்தை அவரது ஆதரவாளர்கள் முழங்குகிறார்கள். தான் செய்தது குற்றம் இல்லை; தவறான கணிப்பு என்கிறார். இதன் விளைவாக அவருக்கு இன்னொருமுறை வாய்ப்புக் கொடுக்கவும் டெல்லிவாசிகள் தயாராகிவிட்டனர் என்ற ஒரு கருத்து பரவலாக நிலவுகிறது.  நிலைமை இப்படியிருக்க, இவரது ராஜினாமாவை வைத்துக்கொண்டே இன்னமும் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

சென்றமுறை பிரதமமந்திரி வேட்பாளராக இருந்த மோதி இப்போது பிரதம மந்திரியாகிவிட்டார். அவரைப் பிரதம மந்திரி ஆக்கிய மத்தியதர வகுப்பினர் அவரை தங்களை காப்பாற்ற வந்த, தங்கள் கனவுகளை நனவாக்க வந்த தேவதூதராகவே  நினைத்திருக்கிறார்கள். இந்த மாறுபட்ட சூழ்நிலையில் கெஜ்ரிவால் தன் அரசியல் வியூகத்தை வகுக்க வேண்டியிருந்தது. பிரசாரத்தின் ஆரம்பத்தில் மோதி பிரதம மந்திரி; ஆனால் டெல்லியில் நடக்கும் தேர்தல் முதல்மந்திரிக்கானது என்று பேசிய கெஜ்ரிவால், மோதி இந்தத் தேர்தலை தனது செல்வாக்கை மீண்டும் மக்களிடையே நிரூபிக்க வந்திருக்கும் வாய்ப்பாக நினைக்கிறார் என்பதை வெகு சீக்கிரம் புரிந்து கொண்டார். அதற்குத் தகுந்தாற்போல தனது பிரசார திட்டத்தை மாற்றி அமைத்தார்.

தேர்தல் ஆரம்பிக்கும் முன்பே தனது பிரசாரத்தை ஆரம்பித்து பாஜகவை திணற அடித்தார் கெஜ்ரிவால். டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாயாவிற்கும் டெல்லி மின்வாரியத்திற்கும் இடையே இருப்பதாகச் சொல்லப்படும் தொடர்பும் கெஜ்ரிவாலிற்கு சாதகமாக அமைந்துவிட்டது. கெஜ்ரிவாலின் குறைந்த கால ஆட்சியின் போது மின்சாரம், குடிநீர் கட்டணங்கள் இவை குறைக்கப் பட்டதை இன்னுமும் டெல்லிவாசிகள் பெரும்பாலோர் நினைவில் வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு அரசு அலுவகத்திற்குச் சென்று லஞ்சம் கொடுக்காமல் ஒரு காரியத்தை முடித்துக்கொண்டு வருவது எத்தனை சுலபமாக இருந்தது என்று கெஜ்ரிவாலின் மிகக்குறைந்த நல்லாட்சிக் காலத்தை எண்ணி பெருமூச்சு விடுகிறார் ஒரு எளியவர். கெஜ்ரிவால் நீர், மின்சாரம், ஊழல் இல்லாத ஆட்சி  என்ற அடிப்படையில் தனது பிரச்சாரத்தை அமைத்திருக்கிறார். தனது 49 நாட்கள் ஆட்சியை சுட்டிக் காட்டுகிறார். மிகவும் பலம் வாய்ந்த பிரச்சாரமாக இருக்கிறது ஆம்ஆத்மி கட்சியின் தேர்தல் பிரச்சாரம். கெஜ்ரிவாலின் ஆளுமை இன்னும் அதிகரித்திருக்கிறது. இவரது இந்த சக்தி வாய்ந்த, ஆளுமை நிறைந்த பிரச்சாரத்தை முறியடிக்கவே அமித் ஷா, ஆர்எஸ்எஸ், ஒரு பெரிய அமைச்சர்கள் கூட்டம் என்று எல்லோரையும் களத்தில் இறக்கியிருக்கிறது பாஜக.

இதன் காரணமாகவே பாஜக தனது கட்சிக்குள் கிரண்பேடியை அழைத்துவர வேண்டி வந்தது. பாஜகவின் இந்த முடிவு தேவையில்லாத ஒன்று; கெஜ்ரிவாலைக் கண்டு பயந்துவிட்டது பாஜக என்கிறார்கள் சில அரசியல் ஆர்வலர்கள். மோதி ராம்லீலா மைதானத்தில் நடத்திய கூட்டத்தில் எதிர்பார்த்த அளவு மக்கள் அணிதிரளவில்லை. சிலவருடங்களுக்கு முன் இதே இடத்தில் அன்னா ஹசாரே தலைமையில் கெஜ்ரிவால், கிரண்பேடி இருவரும் ஊழலுக்கு எதிராக நடத்திய போராட்டம் மக்கள் மனதில் இன்னும் இருக்கிறது. கிரண்பேடியை நிறுத்தியது கெஜ்ரிவாலின் ஆளுமைக்கு எதிராக என்று அரசியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். எனவே இந்தத் தேர்தல் ஆளுமை அடிப்படையில் நடத்தப்படும் போட்டி என்பது தெளிவாகிறது. இன்னொரு கருத்து இந்த தேர்தல் ஆம்ஆத்மி கட்சிக்கும், ஆம்ஆத்மி கட்சிக்கும் நடுவில் நடக்கும் தேர்தல் என்கிறது. ஆம், கெஜ்ரிவால், கிரண்பேடி இருவரும் ஒரு மாற்று அரசியலையும், லஞ்சம் அற்ற ஆட்சியையும் பற்றிப் பேசியவர்கள் அல்லவா? அன்னா ஹசாரே நடத்திய போராட்டம் முடிந்திருக்கலாம் ஆனால் பாதிப்புகள் இன்னும் மக்களின் நினைவில் இருக்கின்றன. அவர்களது அரசியல் அறிவும் அதிகரித்து இருக்கிறது இந்தப் போராட்டத்தினால். இனி எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் அது தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்; மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்கிற அளவிற்கு மக்களுக்கு அரசியல் பற்றிய விழிப்புணர்வு வந்திருக்கிறது என்றால் அதற்கு அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்திற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

தேர்தல் பிரசாரங்கள் விவாதங்களாக மாறி சூடேறிக் கொண்டிருக்கும் இந்த  வேளையில் கெஜ்ரிவால் கூறுகிறார்: ‘எங்களுக்கு மத்திய அரசுடன் நல்லவிதமான உறவை வளர்க்கவே விருப்பம். மோதலை நாங்கள் விரும்பவில்லை. ஒரு நல்ல மக்களாட்சியில் கலந்துரையாடல், விவாதம், கருத்து வேறுபாடுகள், மறியல் போராட்டங்கள் எல்லாம் இருக்க வேண்டும். எங்கள் கட்சியும், நாங்களும் பக்குவப்பட்டிருக்கிறோம். இந்த முறை எங்களது கடைசி ஆயுதமாக மறியல் போராட்டம் இருக்கும்’.

தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வில் பாஜக பிரபலமான கட்சியாக இருந்த போதும், அவர்களிடத்தில் கெஜ்ரிவாலின் ஆளுமைக்கு எதிராக நிறுத்தக் கூடிய தலைவர் இல்லை என்றும், கெஜ்ரிவால் மிகவும் பிரபலமான முதலமைச்சர் வேட்பாளர் என்று தெரிய வந்திருக்கிறது. தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட ஐந்து கருத்து ஆய்வுகளில் மூன்று ஆம்ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கும் என்று சொல்லுகின்றன. இன்னும் இரண்டு ஆய்வுகள் ஆம்ஆத்மி பாதிக்கு மேல்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்கின்றன.

இந்த இரண்டு கட்சிகள் போடும் கூச்சலில் காங்கிரஸ் கட்சி இருக்குமிடமே தெரியவில்லை. காங்கிரஸ் கட்சி இன்னும் தனது பழைய புகழிலேயே வெயில் காய்ந்து கொண்டிருக்கிறது. தங்களது 15 வருட ஆட்சி தங்களது சாதனையைப் பேசும் என்கிறார்கள். தங்களது முன்னேற்ற திட்டங்களையெல்லாம் கெஜ்ரிவாலும், அவரது ஆட்சியைத் தொடர்ந்து வந்த ஜனாதிபதி ஆட்சிமுறையும் கெடுத்துவிட்டதாக கூறுகிறார்கள்.

இந்திய அரசியலின் போக்கை திருப்பிபோடும் என்று எதிர்பார்க்கப்படும் டெல்லி தேர்தலின் முடிவு என்னவாக இருக்கும்? ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்குமா? அது பாஜகவா? ஆம்ஆத்மியா? காங்கிரஸ் கட்சி என்னாவாகும்? எல்லோரும் பயப்படுவது சென்ற முறை போல தொங்கு நிலை ஏற்பட்டுவிடுமோ என்றுதான். டெல்லிவாசிகளின் கையில்தான் எல்லாம் இருக்கிறது. இன்னும் 6 நாட்களில் தெரிந்து விடும். பொறுத்திருப்போம்.

யார் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், இந்தத் தேர்தலின் நாயகன் சந்தேகமின்றி கெஜ்ரிவால்தான்.

பாகம் 1 

டெல்லி யாருக்கு ? பாகம் 1

நான்காம்தமிழ் ஊடகம் இணைய இதழில் (4.2.2015) வந்திருக்கும் எனது கட்டுரை

எந்த மாநிலத்திலும் இதுவரை தான் செய்யாத ஒரு செயலை டெல்லி தேர்தலுக்காக செய்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி: புதிதாக ஒரு நபரை இறக்குமதி செய்ததுடன் அவரை முதல்மந்திரி வேட்பாளராகவும் அறிவித்திருக்கிறது. அதுமட்டுமல்ல சுமார் 120 நாடாளுமன்ற அங்கத்தினர்கள், மூத்த மத்திய அமைச்சர்கள் எல்லோரும் டெல்லி தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய முடுக்கி விடப்பட்டுள்ளார்கள். இத்தனைக்கும் டெல்லி முழுமையான மாநில அந்தஸ்து பெறாத, வெறும் 70 இடங்களை மட்டுமே கொண்ட ஒரு சிறிய தொகுதி.

பதினைந்து நாட்களுக்கு முன் பாஜக, புகழ் பெற்ற காவல்துறை அதிகாரி கிரண் பேடியை கட்சிக்குள் சேர்த்துக்கொண்டு அவரை தனது கட்சியின் தலைவராக  அறிவித்தபோது, இரண்டு விஷயங்கள் வெளிப்பட்டன. முதலாவது, ஆம் ஆத்மி கட்சியின் – மரபு சாரா அரசியலை செய்யத் தயாரா என்ற – சவாலை பாஜக ஏற்றுக்கொண்டது. இரண்டாவது 2013 ஆம் ஆண்டு ஹர்ஷவர்தன் தலைமையில் டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் தான் கற்ற பாடத்தை – அதாவது டெல்லியில் கெஜ்ரிவாலை அவரது குகைக்குள்ளேயே சந்திக்க வேண்டும் – என்பதை பாஜக இன்னும் மறக்கவில்லை. சென்றமுறை ஹர்ஷ்வர்தனின் சுத்தமான இமேஜ், மற்றும் மோதியை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்டபோதும் தனிப்பெரும் கட்சியாக வெல்லமுடியவில்லை. இந்த முறை இவற்றைத் தாண்டி ஏதாவது செய்தால்தான் பெரும்பான்மை வாக்குகளுடன் வெல்லமுடியும் என்ற நிலை பாஜகவிற்கு.

இந்த இரண்டு கட்சிகளின் அரசியல் வியூகத்தைப் பார்க்கலாம்.

பாரதீய ஜனதா கட்சி

பாஜகவின் தலைவர் அமித் ஷாவிற்கு மோதி அரசின் ஏழு மாத சாதனைகள், மோதியின் புகழ் இவை பக்கபலம். கிரண் பேடியும் அரவிந்த் கெஜ்ரிவாலும் அண்ணா ஹசாரேவின் பாசறையிலிருந்து வந்தவர்கள். இருவரும் எல்லா தகுதிகளிலும் சமமானவர்களே. ஆனால் அர்விந்த்திடம் இருக்கும் அராஜகம் பேடியிடம் இல்லை என்று பாஜக கூறுகிறது.

‘டெல்லிவாசிகளிடம் நேர்மறையான எண்ணங்களை வளர்த்தவர் கிரண்பேடி. ஒருவேலையை எடுத்தால் அதை முழு ஈடுபாட்டுடன் கச்சிதமாக முடிப்பவர் என்று பெயர் எடுத்தவர். எங்களுக்கும் இவர் மாதிரியான ஒருவர் தேவையாயிருந்தது’ என்கிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. ஆம் ஆத்மி கட்சி முன்வைக்கும் குறையான ‘பாஜக கட்சிக்கு தனியாக ஒரு தலைவர் இல்லை; எல்லாவிடங்களிலும் பிரதம மந்திரியே வர வேண்டியிருக்கிறது’ என்ற புகாருக்கு கிரண்பேடியை முன்னிலைப் படுத்தியதன் மூலம் பதிலளித்துவிட்டதாக பாஜக நினைக்கிறது. முதலில் ஜகதீஷ் முகியை பாஜக டெல்லி தேர்தலுக்கு முன்னிறுத்திய போது கெஜ்ரிவாலுக்கு சமமாக நிற்க வைக்க ஒரு தலைவர் கூட பாஜகவில் இல்லை கிண்டல் அடித்தது ஆம்ஆத்மி கட்சி. கிரண்பேடி கெஜ்ரிவாலுக்கு இணையானவர் என்பதுடன் அவரது பிராபல்யம் பெண்கள் மற்றும் சீக்கியர்களின் வாக்குகளைப் பெற்றுத் தரும் என்றும் பாஜக நம்புகிறது. கிரண்பேடியின் வருகை பாஜகவிற்கு பலத்தைக் கூட்டினாலும், இந்த டெல்லி தேர்தல் மோதியும் அமித்ஷாவும் எதிர்கொள்ளும் கடினமான களமாக இருக்கும். கூடவே மோதி அலையின் வேகம் குறைந்திருப்பத்தையும் குறிப்பிட வேண்டும்.

இந்த தேர்தல் எப்படி இருக்கும்?

  • இருதரப்பிலும் போட்டி மிகக் கடுமையாக இருக்கும்.
  • தேர்தல் களத்தை சமாளிக்க பாஜக அரசு தனது மத்திய அமைச்சர்களையும், மாநிலங்களிலிருந்து நூற்றுக்கும் அதிகமான தனது கட்சித் தலைவர்களையும் டெல்லியில் இறக்கியுள்ளது இந்தப் போட்டியின் தீவிரத்தை காட்டுகிறது.
  • தனது கட்சியின் உட்பூசலை கொஞ்சநாள் அடக்கி வாசிக்கவும் தயாராகிறது பாஜக.
  • கிரண்பேடியின் பேச்சாற்றல் எல்லோருக்கும் தெரிந்தது என்றாலும் ஒரு அரசியல்வாதியாக எப்படி பேசவேண்டும் என்று அவருக்கு கடுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது. தேர்தல் அரசியலுக்கு அவர் புதியவர் அல்லவா? சில ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டி அவருக்கு இன்னும் கொஞ்சம் பயிற்சி தேவை என்பதை உறுதி செய்கிறது.
  • மொத்தத்தில் இந்தத் தேர்தல் ஆம்ஆத்மி கட்சிக்கும், பாஜகவிற்கும் நடக்கும் இடையேயான ஒரு நேரடி மோதல்.

ஏன் டெல்லித் தேர்தல் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது என்பதற்கு அரசியல் அறிஞர் திருமதி நீரஜா சௌத்ரி காரணங்களைக் கூறுகிறார்:

‘கடந்த எட்டு மாதங்களாக நாம் பார்த்து வரும் பாஜகவின் தொடர் வெற்றிகள்   தொடருமா என்பதை இந்தத் தேர்தல் நிர்ணயிக்கும். ஒருவேளை தொடரவில்லையென்றால் பாஜகவின் எதிரிகளுக்கு பெரும் கொண்டாட்டமாக போய்விடும். பாஜகவின் தோல்வி, வரப் போகும் இரண்டாண்டுகளில் பல மாநிலங்களில் நடக்கப் போகும் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை உண்டாக்கி புதிய புதிய கூட்டணிகளை உருவாக்கலாம். இந்தத் தேர்தலில் மிகவும் வியப்பான ஒரு விஷயம் ஆம்ஆத்மி கட்சியின் எழுச்சி. சென்றமுறை கிடைத்த மாபெரும் வெற்றிக்குப்பின், முதலமைச்சர் பதவியை கெஜ்ரிவால் உதறித் தள்ளியதால் செல்வாக்கு இழந்த இந்த கட்சி இப்போது மிகத் தீவிரமான போட்டிக்கு தயாராகி இருக்கிறது. இதுவே டெல்லி தேர்தலில் ஒரு சுவாரஸ்யமான விஷயமாகி இருக்கிறது. இந்தியா முழுவதும், குறிப்பாக டெல்லிவாசிகள் இந்த தேர்தலை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்’.

பாஜகவிற்கும் ஆம்ஆத்மி கட்சிக்கும் தான் நேரடி மோதல் என்பது தெளிவாகிவிட்டது. இல்லையென்றால், பிப்ரவரியில் தனது பட்ஜெட்டை சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் நிதியமைச்சர் தினமும் இந்த தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு மணிநேரம் செலவழிப்பாரா? உள்ளூர் தலைவர்களை நம்பாமல், பாஜகவை வளர்த்த பல தலைவர்களை புறம்தள்ளிவிட்டு  புதிய முகமாக கிரண்பேடியை – பல தலைவர்களின் விருப்பமின்மையுடன் கொண்டு வருவார்களா? பேடியின் வரவு டெல்லியின் மத்திய வகுப்பினரின் வாக்குகளை பாஜகவிற்கு  – மோதிக்குக் கொடுத்தது போலவே – அள்ளித் தரும் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் மத்திய வகுப்பினரில் ஒரு சிலரின் பார்வை கெஜ்ரிவால் மேல் இருக்கிறது என்பதையும் பாஜக உணர்ந்தே இருக்கிறது.

ஆம்ஆத்மி கட்சியின் நிலை என்ன? பாகம் – 2

கொஞ்சம் பெரிய கட்டுரையாதலால் இங்கு இரண்டு பாகமாக போடுகிறேன்.