ஏமாறாதீங்க… இது உங்க பணம்!

nose ring

எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்:

நம் பணத்தை எப்படி ஏமாற்றுகிறார்கள் மக்களே இத படிங்க!

 

 

நண்பர்களே! படித்து பகிர்ந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் – அதிர்ச்சி தகவல் நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது.

 

அவர் சொன்னது இதுதான்.

 

 

வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றிவிசாரித்ததோடு “சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித்தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது” என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்!

 

இதனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்கக்கூடாது என்றுமுழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!

 

நண்பரின் ஆதங்கம் இதுதான். ‘சேதாரம் என்ற பெயரில் நகைக்கடைகளில் பெருங்கொள்ளையடிப்பதை நம்மவர்யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை?’ என்பதே அவரது நியாயமான கேள்வி.

 

16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய்வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள்.

 

இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ.48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில்“ஒன்பதாயிரம் ரூபாய்” தண்டம் அழ வேண்டும்.

 

 

ஏறக் குறைய 16 சதவீதம்? “எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?” எந்தஅதி மேதாவியும் இதுவரை கேள்வி கேட்டதில்லை.

 

அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித் தான் அவர்களாக சில நூறுரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை ‘கூல்’ பண்ணுவார்கள்.

 

 

இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது…சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு… உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்றுஇருக்கும்.

 

என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும் தானே வாங்க வேண்டும்? செய்கூலி கேட்பது நியாயம் தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்?

 

இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை?

 

பல சரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக்கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை?

 

எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? அவர்களிடம் வழிப்பறி செய்வதைவிட மோசமான செயலல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக்கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக்கடை திறக்க மாட்டான்?

 

மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில்.

 

கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற்கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப்படவேண்டும்.

 

விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்…! அதுவும் உங்களால் தான் முடியும்…! இந்த செய்தியை அவரவர்கள் அவர்களூடைய எல்லா தொடர்புகளுக்கும் தொடர்ந்து அனுப்புங்கள், தயவுசெய்து……nose ring

 

எனது கதாநாயகன்

vivekanandar - firstbook

எனது முதல் புத்தகத்தின் கதாநாயகன் விவேகானந்தர் பிறந்தநாள் இன்று. எனது புத்தகத்தின் கடைசி அத்தியாயம் இங்கே:

 

தன்னிகரற்ற குரு

 

சுவாமி விவேகானந்தருக்கு முன்னால் நம் நாட்டில் மகான்கள் யாருமே பிறக்கவில்லையா? மக்களை வழி நடத்தவில்லையா? ஆன்மீக நாடான இந்தியாவில் துறவிகளுக்கோ, மதத்தலைவர்களுக்கோ, சொற்பொழிவாளருக்கோ என்றுமே குறைவில்லை. அப்படியிருக்கும்போது, சுவாமி விவேகானந்தர் எப்படி மற்றவர்களிலிருந்து வேறுபட்டு இருந்தார்? அவர் வாழ்ந்தது 39 வருடங்களும் சில மாதங்களும். அதற்குள் அவர் சாதித்தது மனித சக்திக்கு அப்பாற்பட்டு நிற்கிறது. இந்த சாதனைகளுக்கு எந்த ஆற்றல் அவருக்குத் துணை நின்றது?

இந்தியா என்றால் வறுமையும், பஞ்சமும், பெண் குழந்தைகளைக் கொல்லுவதும், பெண்கள் கொடுமைக்கு உள்ளாவதும் மட்டுமே என்று நினைத்திருந்த மேலைநாடுகளின் எண்ணத்தை மாற்றி, ஆன்மீகச் செல்வம் செழிக்கும் நாடு இந்தியா என்ற கருத்தை நிலைநாட்ட தன்னந்தனியாக மேலைநாடுகளுக்குச் சென்றாரே, அவருடன் கூடப் போனது யார்? எந்த இந்து சமய அமைப்பின் சார்பில் அவர் மேலைநாடுகளுக்குச் சென்றார்? சர்வமத மகாசபையில் எல்லோரும் முன்கூட்டியே தயார் செய்துகொண்டு வந்து பேசியபோது, முன்தயாரிப்பு எதுவும் இல்லாமல், ‘அமெரிக்க சகோதர சகோதரிகளே’ என்று பேச ஆரம்பித்து அனைவரையும் ஸ்தம்பிக்கச் செய்தாரே, அவரை வழி நடத்திய அற்புத ஆற்றல் எது? 150 ஆண்டுகளுக்குப் பின்னும் நாம் அவரை தெய்வத் திருமகனாக நினைக்கக் காரணம் என்ன?

 

மனித ஆற்றல், இறைவனின் வழிகாட்டுதல், நல்ல குருவை அடைந்து அவரது சொற்படி நடத்தல் என்ற மூன்றும் கலந்த ஒரு அற்புத கலவை இந்த ஆற்றல் என்று சொல்லலாம். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வாழ்ந்ததன் பலனாக சுவாமிஜிக்குக்  கிடைத்த மாபெரும்  ஆற்றல் என்றும் சொல்லலாம். ஸ்ரீராமகிருஷ்ணரால் ‘நீயே நரநாராயணனாக அவதரித்தவன்’ என்று சொல்லப்பட்டிருந்தாலும்,  அவரை சிவபெருமானின் அவதாரம், புத்தரின் அவதாரம் என்று பலர் சொன்னாலும், தமது மன ஆற்றலை மட்டுமே துணையாகக் கொண்டு மகத்தான காரியங்களை சாதித்திருக்கிறார் சுவாமிஜி.

 

முதன்முதலாக ஏழை மக்களுக்காக உருகிய தீர்க்கதரிசி இவர்தான். இந்த பண்புதான் அவரை அவருக்கு முன் இருந்த மகான்களிலிருந்து வேறுபடுத்தியது. இந்தியப் பயணத்தின் போது அவர் கண்ட ஏழை இந்தியா அவரை வருத்தியது. ‘என் தாய்நாட்டு மக்களுக்கு நான் என்ன செய்யமுடியும்?’ என்ற இடைவிடாச் சிந்தனை அவரது ஆற்றலுக்கு பின்னணியாக இருந்தது. எந்த ஒரு விஷயத்தையும் யாரோ சொன்னார்கள் என்பதற்காக நம்பாமல், தானே சோதித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை அவரது ஆற்றலை வழி நடத்தியது.

 

கன்னியாகுமரியில், அவரிடம் பணம் இல்லாததால் படகோட்டிகள் அவரை ஸ்ரீபாத பாறைக்கு அழைத்துச் செல்ல மறுத்த போது சற்றும் தயங்காமல் அலைகடலில் குதித்து நீந்தியே அந்தப் பாறையை சென்று சேர்ந்தாரே, எதற்கு? ‘என்னால் முடியும்’ என்று மார்தட்டவா? இல்லை; ‘என் தாய் திருநாட்டு மக்களே, என்னால் முடிந்தால் உங்களாலும் முடியும். உங்களுக்குள் இருக்கும் தெய்வீக ஆற்றலை உணருங்கள். உங்கள் அறியாமைத் துயிலிலிருந்து எழுந்திருங்கள்; எப்போதும் விழித்திருங்கள்; உங்கள் லட்சியத்தை அடையும் வரை ஓயாதீர்கள்’ என்ற எழுச்சி மந்திரத்தை உபதேசிக்க.

சுவாமிஜி மனிதர்களிடம் கொண்டிருந்த அளவற்ற அக்கறை அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியது. மனிதனிடம் உள்ள எல்லையற்ற திறமைகளையும் ஆற்றலையும் வெளிக்கொணர உதவுவதே தன் முக்கியப்பணி என்று  எண்ணினார். கோவிலில் இருக்கும் கடவுளிடம் பற்று வைக்கும் மனிதர்களைப் பார்த்து உங்கள் சக மனிதனிடம் பற்று வையுங்கள் என்றார். கடவுள் என்பவர் எங்கோ உட்கார்ந்துகொண்டு மனிதர்களை ‘விதி’ என்னும் நூலினால் ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பவர் அல்ல; மனிதர்களின் உள்ளே ஆன்மாவாக நிறைந்திருக்கிறார். தன்னுள்ளே இருக்கும் தெய்வீகத்தை ஒவ்வொரு மனிதனும் உணருவதால் அவனது ஆற்றல் பெருகி, வெற்றிகரமான வாழ்க்கை வாழமுடியும் என்ற நம்பிக்கையை விதைத்தார்.

சுவாமிஜியின் இன்னொரு பண்பும் நம்மைக் கவருகிறது. அது அவரது வெளிப்படையான பேச்சு. சிங்கத்தின் குகைக்குள்ளே போய் அதனுடன் போரிடுவது போல ‘எங்கள் மதமே உலகத்தில் சிறந்தது’ என்றெண்ணி இருந்தவர்களை, அவர்களின் நாட்டிலேயே ‘எல்லா மதங்களும் இறைவனை உணர வழிகாட்டும் பாதைகள். எல்லா மதங்களையும் நாங்கள் மதிக்கிறோம்’ என்ற தமது வாதத்தின் மூலம் வாயடைக்கச் செய்தார். ‘மதத்தின் பெயரால் சண்டை வேண்டாம். மனித இதயங்களைத் திறக்கவும், மனிதனை பொருளாதார ரீதியில் மேம்படவும் செய்வதே மதம். மதமாற்றத்தின் மூலம் சமுதாயத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. பசித்தவனுக்கு மதம் தேவையில்லை; அவனது தேவை பசித்தபோது உணவு. அந்த உணவை பெற, அவர்கள்  தங்கள் சொந்தக் காலில் நிற்க, கல்வியைக் கொடுங்கள். அந்தக் கல்வி ஏட்டுச்சுரைக்காயாய் இல்லாமல் மதத்திலிருந்து அவனை விலகாமல், அவனை உருவாக்கும் கல்வியாக இருக்கட்டும்’ என்றார்.

இறைவனைத் தேடுபவர்களுக்கு மட்டுமே இருந்த ஆன்மத் தேடலை சாதாரண மனிதர்களுக்கும் உரிமை ஆக்கினார். இந்த ஆன்மத் தேடலுக்கு உதவும் கல்வியை மனிதனை உருவாக்கும் கல்வி என்று குறிப்பிட்டார். ஆன்மிகம், இறையனுபூதி என்று பேசினாலும், சமயச் சடங்குகள், சமயச் சின்னங்கள் மனிதனுக்கு அவனை அறிய உதவவில்லை என்றால் இவற்றால் எந்தப் பலனும் இல்லை என்று வெளிப்படையாகப் பேசினார். யாரும் பாவிகள் இல்லை. பாவமும் புண்ணியமும் சேர்ந்ததே மனித வாழ்வு. எல்லோரும் தெய்வத்தின் குழந்தைகள். மதவாதிகள் மனிதனை மறந்துவிட்டு இறைவனைப் பார்த்தார்கள். ஆனால் சுவாமிஜி மனிதர்களிலே இறைவனைப் பார்க்கச் சொன்னார்.

சாஸ்த்திரங்களில் சொல்லப்பட்டிருந்த கருத்துக்களை சாதாரண மக்களுக்கும் பொதுவாக்கினார். வறட்டு வேதாந்தத்தை செயல்முறை வேதாந்தமாக மாற்றினார். ஏழை மக்களிடம் நாராயணனைக் கண்டார். தந்தை கொடுத்த கட்டுடலை கொண்டு தரித்திர நாராயண சேவையை கடைசி வரை அந்த உடல் நலிந்தபோதும் செய்தார். தாய் சொன்னபடி அகத்தூய்மை, புறத்தூய்மை இரண்டையும் கடைசி நிமிடம் வரை காத்தார். குரு சொன்னது போல தனது அமானுஷ்ய ஆற்றல்களை ஒருபோதும் தன் சொந்தப் பலனுக்காக உபயோகிக்கவில்லை.

இறைவனை நம்பி இறைவன் காட்டிய வழியிலேயே தன் வாழ்க்கையை நடத்தினார். மக்களுக்கு மட்டுமல்ல, மன்னர்களுக்கும் அவர்களது நிலையை எடுத்துரைத்து, கடமைகளை நினைவுறுத்தினார். சர்வமத மகாசபையில் அவர் மூலம் வெளிப்பட்டது இந்தியாவின் மத உணர்வு. பழமையான கீழ்த்திசை, நவீன மேல்திசை இவை இரண்டின் சிந்தனைகளும் கலந்து சங்கமிக்கின்ற இடமாக சுவாமிஜி காட்சியளித்தார். ஆன்மிகம் என்பதற்கு மனிதன் தன்னுள்ளே இருக்கும் ஆன்மாவை உணருவதே என்ற புதிய கருத்தை சொன்னார்.

மனிதனைப்பற்றிய புதிய கண்ணோட்டம், மதம் பற்றிய புதிய கருத்துக்கள், கடவுள் பற்றிய  புதிய சிந்தனை இவற்றுடன், நல்லொழுக்கத்துடன் கூடிய புதிய சமுதாயம் என்று மனித குலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் தனது செய்தியாக சுவாமிஜி இந்த உலகிற்குக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.

மிகக்குறைந்த வயதில் மிகப்பெரிய சாதனை செய்து நம் மனங்களில் மறக்கவொண்ணாத தாக்கத்தையும் ஏற்படுத்திச் சென்ற அந்த மாமனிதரை அவர் சொல்லிச் சென்ற செய்திகளை பின்பற்றுவதன் மூலம் பெருமைபடுத்துவோம். அவரே சொன்னதுபோல நம்முள் அவர் உருவமற்ற குரலாக இருந்து நம்மை வழி நடத்துவார் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

மகாகவி பாரதியாரின் வார்த்தைகளுடன் ஆரம்பித்து ரவீந்திரநாத் தாகூரின் இந்த வார்த்தைகளுடன் சுவாமிஜியின் வாழ்க்கை வரலாற்றை நிறைவு செய்வோம்.

அனைத்துப் பரிமாணங்களிலும் மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சியே விவேகானந்தரின் செய்தி – ரவீந்தரநாத் தாகூர்.

மதிப்புரை.காம் தளத்தில் வந்த இந்தப் புத்தகத்தின் மதிப்புரை இங்கே:

அதே தளத்தில் வந்த இன்னொரு மதிப்புரை இங்கே:

 

தொடர்புடைய பதிவுகள்

வந்தார் விவேகானந்தர்

யாரு ஸார் இவரு?

 

‘நல்லாத்தான் செஞ்சிருக்காரு கண் ஆபரேஷன்…!’

well_done

 

குமுதம்மா என்ற பெயர் எப்படி மாறியது?

போனபதிவில் இந்தக் கேள்வி கேட்டிருந்தேன்.

குமுதம்மா – குண்டம்மாவாக மாறியிருந்தார்! அந்த பெண்மணி கொஞ்சம் அகலமாகவே இருப்பார். ஆனாலும் இப்படிக் கூப்பிட்டவுடன் அவருக்கு பொல்லாத கோவம் வந்து மருத்துவரைப் பார்க்காமலேயே வந்துவிட்டார். ஏரி மேலே கோவப்பட்டவன் கதை ஆயிற்று குண்டம்மாவின் ஸாரி ஸாரி குமுதம்மாவின் கதை.

 

போகட்டும். அதே மருத்துவமனையில் இன்னொரு விஷயமும் நடந்தது. அதையும் இங்கு நான் எழுதியே ஆகவேண்டும். காடராக்ட் அறுவை சிகிச்சை முடிந்து என் கணவரை முதல் செக்கப்பிற்காக அழைத்துச் சென்றிருந்தேன். வழக்கம்போல மருத்துவர் எங்கள் பொறுமையை சோதித்துக்கொண்டிருந்தார். உள்ளே ஒரு வயதான தம்பதி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ‘இந்த வயசாளிங்க உள்ளே போனாலே இப்படித்தான். பேசிகிட்டே இருப்பாங்க. நோய்நொடிய பத்தி மட்டும் பேசமாட்டாங்க. தங்களோட கஷ்டநஷ்டத்தையும் டாக்டர் கிட்ட சொல்லணும். வெளில நாமெல்லாம் உட்கார்ந்திருக்கிறது கண்ணுலேயே படாது!’ என்று எங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த இளம் பெண் அலுத்துக்கொண்டாள். அவளும் ஒன்றைக் கண்ணால் அங்கு ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு அவ்வப்போது ‘ச்..’ கொட்டிக் கொண்டிருந்தாள்.

 

ஒருவழியாக தாத்தாவும் பாட்டியும் வெளியில் வந்தனர். எங்களுக்கு முன்னாலேயே நிறைய பேர்கள் காத்திருந்தனர். அதனால் எங்களுக்கு கடைசி இருக்கையில் தான் இடம் கிடைத்தது. பாட்டி வரும்போதே என்னைப் பார்த்துக் கொண்டே வந்தார். சுமார் தூரத்தில் வரும்போதே சட்டென்று என்னைப் பார்த்து ‘நீவு நளினி தாயி தானே?’ (நீங்கள் நளினியோட அம்மா தானே?) என்று கன்னடாவில் கேட்டார். எனக்கு கொஞ்சம் ஷாக். யார் இவர்? என் தோழியா? பெயர் நினைவிற்கு வரவில்லையே! யார் இவர் என்று எனது மூளையின் ஞாபக அடுக்குகளில் தேட ஆரம்பித்தபடியே சட்டென்று என்னையும் அறியாமல் எழுந்து அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு ‘ஹவுது. சென்னாகிதீரா?’ என்றேன். யாருன்னு சீக்கிரம் தேடு, தேடு என்று என் மனதிற்குக் கட்டளையிட்டேன்.

 

என் பெண்ணைப் பற்றிப் பேசுகிறார். அதனால் அவள் புக்ககத்து உறவாக இருக்கலாம். சடசடவென அவள் புக்ககத்து மனிதர்களை நினைவிற்குக் கொண்டு வந்தேன். ஊஹூம், எனக்குத் தெரிந்த எந்த மாமியின் முகத்துடனும் இந்த மாமியின் முகம் மேட்ச் ஆகவில்லை. தும்கூரில் என் பெண்ணிற்கு தெரிந்தவரா? மறுபடி மூளையில் ஒரு CD ஓடியது. தும்கூர் ஹோய்சள கர்நாடக குடும்பத்து மாமிகள் ஒவ்வொருவராக வந்து போனார்கள். இந்த மாமிக்கு பக்கத்தில் கூட யாரும் வரவில்லை. அடக் கடவுளே! இவர் யாரென்று தெரியவில்லையே! என்னை நன்றாக அடையாளம் சொல்லுகிறார். எனக்கு இவர் யாரென்று தெரியவில்லையே! மூளையின் இண்டு இடுக்கெல்லாம் தேடிவிட்டேன். ஊஹூம், ஊஹூம், ஊஹூம்!

 

பரிதாபமாக என் கணவரைத் திரும்பிப் பார்த்தேன். உதவுவாரோ என்று பார்த்தால்…. அவர் ரொம்பவும் சந்தோஷமாக என் திண்டாட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தார். எங்கள் வீட்டில் எப்போதும் அவர்தான் மனிதர்களின் பெயர்களை மறந்து விடுவார். நான் நினைவு படுத்துவேன். பழிக்குப் பழி!

 

என் ஞாபக சக்தி என் காலைவாரி விட்டுவிட்ட, வேறு வழியில்லாமல் ‘தாவு?’ (தாங்கள்?) என்று கேட்டேன். ‘அனிதன் அம்மா…!’ (அனிதாவின் அம்மா) என்றார். மறுபடி யோசிக்க ஆரம்பித்தேன். யாரு அனிதா? அப்போதுதான் மூளையின் திரையில் எல்லோரும் வந்து போயிருந்ததால் சட்டென்று அனிதா எதிரில்…. ஸாரி மனதில் வந்து சிரித்தாள். அப்பாடி! ஒரு பெருமூச்சு விட்டபடியே (கொஞ்சம் அசடும் வழிந்தது!) ‘ஓ! இப்போ நினைவு வந்துவிட்டது….!’ என்றேன்.

 

நினைவு வந்துவிட்ட சந்தோஷத்தில் என் கணவரிடம் அவரை அறிமுகம் செய்தேன். ‘நளினியோட நாத்தனார் உஷாவோட ஓர்ப்படி அனிதாவோட அம்மா….!’ (மாரத்தான் ஓடி வந்தது போல மூச்சிரைத்தது!) எத்தனை நெருங்கிய உறவு! பரஸ்பர குசலம் விசாரித்தபின் அந்தப் பெண்மணி கூறினார். ‘ரொம்ப நல்ல டாக்டர்…. தங்கமான மனிதர். எனக்கு வேற ஒரு டாக்டர் காடராக்ட்  ஆபரேஷன் செய்தார். காடராக்ட் – ஐ எடுக்காமலேயே லென்ஸ் வைத்துவிட்டார். இந்த டாக்டர் தான் சரி செய்தார். இப்போ கண்ணு நன்னா தெரியறது’ என்றார்.

 

‘ஆமா, ஆமா, டாக்டர் ரொம்ப நன்றாகவே அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்…’ என்று நானும் சிலாகித்தேன்… காரணம் உங்களுக்கும் தெரியுமே!

 

 

இதேபோல இன்னொருவரிடமும் நான் மாட்டிக்கொண்டேன். அதையும் சொல்லிவிடுகிறேன்.

ஒரு மாதத்திற்கு முன் ஒரு சதாபிஷேகத்திற்குப் போயிருந்தேன். அக்கா வழி உறவினர் அவர். என் அக்காவின் புக்ககத்து உறவினர்களை எல்லாம் பல வருடங்கள் கழித்துப் பார்க்கிறேன் அங்கு. பலரையும் அடையாளம் கண்டு கொண்டேன். சிலர் என்னை அடையாளம் கண்டுகொண்டு குசலம் விசாரித்தனர். சிலர் அவர்களாகவே வந்து ‘நான்தான் குஞ்சம்மா, தெரிகிறதா?’ ‘நான் உங்க அக்கா வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தேனே’ என்று சமர்த்தாக அடையாளம் சொல்லிவிட்டு விசாரித்துவிட்டுப் போனார்கள்.

 

அப்புறம் ஒரு பெண்மணி வந்தார். மிகவும் உரிமையுடன் என் தோளில் கை வைத்து, ‘யார் தெரியறதா?’ ஆஹா! என்னே எனக்கு வந்த சோதனை! சுத்தமாகச் தெரியவில்லை. திரு திருவென்று முழித்துக் கொண்டு என் அக்காவைப் பார்த்தேன். அவளோ ‘தெரியாம என்ன? உன்னைப் போய் மறப்பாளா?’ என்கிறாள். அந்த பெண்மணி எனக்கு அவரைத் தெரிந்ததா தெரியவில்லையா என்பதைப் பற்றிக் கவலையே படாமல் ‘பொண்ணா? பிள்ளையா?’ என்றார். மறுபடி திரு திரு. யாரைக் கேட்கிறார்? என்னையா? ‘யாருக்கு? என் பெண்ணிற்கா, என் பிள்ளைக்கா?’ என்றேன். ‘உனக்குத்தான்….!’ என்றார். எனக்கா? எனக்கு இரண்டு பேர் பிறந்து பேரன்களும் எடுத்தாயிற்றே! சாவகாசமாக இப்போது எனக்கு பெண்ணா பிள்ளையா என்கிறாரே! ‘நான் உன்ன உன் கல்யாணத்தன்று பார்த்தது…!’ என்று இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டார். அடக் கஷ்டமே! இப்போது நான் நாற்பது வருடக் கதையைச் சொல்லவேண்டுமா? என்னை மேலே யோசிக்கவிடாமல், ‘எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பிள்ளை. பொண்ணு அங்க உக்காந்திருக்கா பாரு…!’ என்று அறையின் ஒரு கோடியில் உட்கார்ந்திருந்த ஒரு இளம் பெண்ணைக் காட்டினார். ‘அவளுக்குத்தான் கல்யாணத்திற்கு பார்த்துக் கொண்டிருக்கிறேன். யாராவது பிள்ளை இருந்தால் சொல்லு…!’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். அப்பாடி என்று பெருமூச்சு விட்டேன். மெதுவாக என் அக்காவிடம் கேட்டேன். ‘யாரு இது?’

‘என்னடி தெரியலையா? ராதிகா!’

‘எந்த ராதிகா?’

‘என்னடி இது? அதான்… எங்க பெரிய மாமியாரோட…..(மறுபடி ஒரு மேரத்தான்!)

 

படங்கள் நன்றி: கூகிள்

‘இங்க த்ரிஷா யாரு?’

 

 

கண் மருத்துவ மனையில் உட்கார்ந்திருந்தோம். பொதுவாக மற்ற மருத்துவமனைகள் போல கண் மருத்துவமனை இருக்காது. வந்திருப்பவர்கள் கண்ணை மூடிக் கொண்டு அல்லது ஒரு கண்ணை மட்டும் அவ்வப்போது திறந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். கூட வந்திருப்பவர்களும், கண்ணைக் காண்பித்துக் கொள்ள வந்திருப்பவர்களும்  எப்போது மருத்துவர் கூப்பிடுவார், எப்போது இந்த ஒற்றைக்கண் தரிசனம் முடியும்  என்று காத்திருப்பார்கள்.

 

அன்றும் அப்படித்தான் அந்த மருத்துவமனை சத்தமே இல்லாமல் இருந்தது. எங்களுக்கு முன் வரிசையில் ஒரு அப்பா, அம்மா இரண்டு சிறுமிகள் – ரொம்பவும் சின்னவர்கள் பத்து அல்லது பதினோரு வயது இருக்கலாம் – கூட ஒரு ஆண்ட்டி. கிசுகிசு என்று சன்னக்குரலில் அந்தப் பெண்கள் பேசிக்கொண்டே இருந்தனர். கூடவே சிரிப்பு வேறு. எனக்கு பார்க்கவே ரொம்பவும் பிடித்திருந்தது. மருத்துவ மனையின் சூழலையே அவர்களது சன்னக் குரல் பேச்சும் சிரிப்பும் மாற்றிக் கொண்டிருந்தது. முதலில் அவர்களது அம்மா மருத்துவரின் அறைக்குள் சென்றார். கூடவே இந்தப் பெண்களும் போனார்கள். ஐந்து நிமிடங்களில் திரும்பி வந்து தங்கள் தந்தையிடம் ‘அம்மாவிற்கு கடைசி வரி தெரியலை, அப்பா!’ என்று கொஞ்சம் கவலை நிறைய சிரிப்புடன் கூறினர். அடுத்து சிறுமிகளின் அப்பா உள்ளே போனார். இது முதல் சுற்று செக்-அப் தான். சிறுமிகள் தங்கள் அப்பாவின் கண்பார்வை பற்றி வெளியே வந்து பேசிச் சிரித்தனர்.

 

தங்களுக்குள் என்னவோ பேசிக்கொண்டு துளிக்கூட தங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் அந்தச் சிறுமிகள் சிரித்துக் கொண்டிருந்தது பார்க்கவே பரவசமாக இருந்தது. என்ன ஒரு அழகான பருவம்! எனது கடந்த காலத்தை நினைத்துக் கொண்டேனோ என்னவோ, அவர்கள் அறியாமல் அவர்களை நான் கவனித்துக் கொண்டிருந்தேன்.

 

சற்று நேரத்தில் நர்ஸ் வந்தார். ;த்ரிஷா…!  த்ரிஷா…!’ என்று கூப்பிட்டுக் கொண்டே சுற்றிவரப் பார்த்தார். யாரும் எழுந்திருக்கவில்லை. நர்ஸ் உள்ளே போய்விட்டார். இந்த பெண்களுக்கு சிரிப்பு இன்னும் அதிகமாகியது. ‘ஏய்! யாரோ த்ரிஷாவாம்…..! யாரோ தெரியலையே….!என்று அங்கு உட்கார்ந்திருப்பவர்களை திரும்பிப் பார்த்து  கிளுகிளுத்தனர். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு மறுபடி அந்த நர்ஸ் வந்தார்: ‘இங்க யாரு   த்ரிஷா….?’ இந்த முறையும் யாரும் நான் தான் த்ரிஷா என்று முன்வரவில்லை. அதனால் உள்ளே போய் கையில் ஒரு ஃபைலுடன் திரும்ப வந்தார். ‘குமாரஸ்வாமி லேஅவுட்…..’ என்று விலாசத்தைப் படிக்க ஆரம்பித்தார். அடுத்த நொடி! இந்தச் சிறுமிகளின் ‘குபீர்’ சிரிப்பு அந்த ஹாலை நிறைத்தது. ‘ஹேய்….நம்ம ஆண்ட்டி! ஆண்ட்டி உங்கள அந்த நர்ஸ்ம்மா த்ரிஷா ஆக்கிட்டாங்க… ஹே……ஹே……..ஹி……ஹி…..ஹோ….!’ அவர்கள் இருவருக்கும் சிரிப்பு தாங்கவில்லை.

 

அந்த ஆண்ட்டி பொங்கி வரும் சிரிப்பை (புடவைத் தலைப்பால் வாயைப் பொத்தி) அடக்கிக் கொண்டு எழுந்து உள்ளே போனார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் சிரிப்பு தாங்கவில்லை. எனக்கு ஒரு சந்தேகம். மெல்ல எழுந்து அந்த சிறுமிகளின் அருகில் போனேன். ‘உங்க ஆண்ட்டி பேரென்ன?’ என்றேன். ‘தெரேசா’ என்றனர் சிரிப்பு அடங்காமலேயே அந்தச் சிறுமிகள். அன்னை தெரேசா த்ரிஷாவான விந்தையை எண்ணி எண்ணி சிரித்துக்கொண்டே வந்து என்னிடத்தில் உட்கார்ந்தேன்.

 

நேற்று மறுபடி அதே கண் மருத்துவ மனை. அந்தச் சிறுமிகள் இல்லை. ஆனால் அன்றைக்கு நடந்த அதே சம்பவம் சற்று மாறுதலுடன் நடந்தது. இந்த நர்ஸ் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தார். கூப்பிட வரும்போதே ஃபைலைக் கொண்டுவந்துவிட்டார்! ‘ பேரு என்ன?  ராஜாமணியா, ரோஜாமணியா…?’ என்று கேட்டுவிட்டு சரியான பெயரை நிச்சயப்படுத்திக் கொண்டு பிறகு ‘ராஜாமணி’ என்று அந்தப் பெண்மணியை கூப்பிட்டார்!

 

இந்த சம்பவங்கள் எனக்கு இன்னொரு சம்பவத்தை நினைவிற்கு கொண்டு வந்தது. கிட்டத்தட்ட இதே போல. உங்களுடன் அதையும் இங்கே பகிர்ந்து கொள்ளுகிறேன். அப்படியே உங்களுக்கு ஒரு சின்ன கேள்வி!

 

எங்கள் உறவினர் ஒரு பெண்மணி இதே போல ஒரு மருத்துவமனைக்கு போயிருக்கிறார். அவரது பெயர் குமுதா. அவரை எப்படி நர்ஸ் கூப்பிட்டிருப்பார் என்று ஒரு guess அடியுங்களேன்!

 

ஒரு சின்ன க்ளூ: இந்தப் பெயருடன் ‘அம்மா’ சேர்த்துக் கொள்ளுங்கள்.

 

நீங்கள் சிரித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இன்னொரு சந்தோஷச் செய்தியையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

 

எனது வலைத்தளம் மூன்று வருடங்களை முடித்து நான்காம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. இந்தப் பதிவு எனது ஐநூறாவது பதிவு.

 

தவறாமல் வந்து கருத்துரை கொடுக்கும்  சக பதிவாளர்கள், என்னைப் பின்தொடர்பவர்கள், வாசகர்கள் எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி.

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் – ஒரு அலசல்

வலைத்தமிழ் இணைய தளத்தில் தொடராக வந்த திரு ஜோதிஜியின் ‘ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்’ பற்றிய மதிப்புரை

வலைத்தமிழில் படிக்க இங்கே 

 

புகைப்படம் நன்றி: தேவியர் இல்லம்

ஜோதிஜியின் திருப்பூர் பற்றிய மற்றுமொரு தொடர். இரண்டு தொழிற்சாலைகளில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கு தனது பாணியில் வழங்கியிருக்கிறார்.

 

எழுத்து என்பதை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டிருப்பவர் திரு ஜோதிஜி என்பது அவரது எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதனால் அவரது எழுத்துக்களை வாசிக்க வரும்போது அவரது எழுத்துக்களை உள்வாங்கிக் கொள்ள தயாராக வர வேண்டும். மேலோட்டமாக வாசிப்பது என்பது இங்கு நடக்காத விஷயம். கவனச் சிதறல் இங்கு மன்னிக்க முடியாத ஒன்று.

 

இவரது முதல் அச்சுப் புத்தகம் டாலர் நகரம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த புத்தகத்தைப் படித்த போது நாம் உடுத்தும் ஒவ்வொரு ஆடையின் பின்னாலும் எத்தனை சோகக்கதைகள்! அங்கு நாம் ஊகித்த கதைகளின் உண்மை மாந்தர்களை இந்த தொடரில் தோலுரித்துக் காட்டுகிறார், ஜோதிஜி.

 

‘ஒரு தொழிற்சாலையின் குறிப்புகளு’க்குள் நுழைவோம், வாருங்கள்.

 

‘நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் நீங்கள் விரும்புவது பிராண்ட் வகையான ஆடைகள் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடைகள் உருவாக்கத்திற்குப் பின்னாலும் ஓராயிரம் விசும்பல் மொழி மறைந்துள்ளது என்பதை உணர்ந்து இருப்பீர்களா? வெள்ளை ஆடைகள் என்றாலும், நீங்கள் விரும்பம் வண்ணம் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடை உருவாக்கத்திற்குப் பின்னாலும் வடியும் இரத்தக் கறையை நாம் பார்க்கப் போகின்றோம்’

 

முதல் அத்தியாயத்திலேயே இவ்விதம் எழுதி திருப்பூரின் ஆடைத்தொழிற்சாலையின் உள்ளே வாழும் மனிதர்களிடையே நடக்கும் ஒரு நிழல் யுத்தத்திற்கு நம்மை தயார் செய்வதுடன், இந்த குறிப்புகளில் நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்று ஒரு ‘டீசர்’ கொடுத்து விடுகிறார் ஜோதிஜி. அதனால் நாம் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு அடுத்தடுத்த அத்தியாயங்களை வாசிக்கத் தயாராகிறோம். ஜோதிஜியின் எழுத்துக்களை படிக்க நீங்கள் மனதளவில் தயாராவது மிகவும் முக்கியம். இந்தக் குறிப்புகளில் அவரே நம்மை முதலிலேயே இப்படித் தயார் செய்துவிடுகிறார். ஒவ்வொரு துறையிலும் நடக்கும் கண்ணுக்குத் தெரியாத இந்த நிழல் யுத்தத்தில் பங்குபெறும் மாந்தர்களின் நடவடிக்கைகளில் ஒன்றிப் போய்விடுகிறோம்.  வெள்ளைத் துணிகளில் மட்டுமா சாயம் ஏற்றப்படுகிறது, இங்கே? மனிதர்களும் சமயத்திற்குத் தகுந்தாற்போல நிறம் மாறுவதை இந்தக் குறிப்புகளில் பார்க்க முடிகிறது.

 

முதலில் தனது முதலாளிகளாகிய ‘பஞ்ச பாண்டவர்களையும், அவர்களை தான் கையாண்ட விதத்தையும் சொல்லும் வேளையில், இந்த நிறுவனத்துக்குள் தாம் அடியெடுத்து வைத்த நிகழ்வையும் சொல்லுகிறார். அந்த நிறுவனத்தின் நிலைமையையும் சொல்லி, தான் அவற்றை மாற்ற எடுத்த முயற்சிகளையும் சொல்ல ஆரம்பிக்கிறார். அதற்கு அவர் பட்டபாடு எதிர்கொண்ட எதிர்ப்புகள் எல்லாமே விறுவிறுப்பான ஒரு நாவல் படிக்கும் அனுபவத்தை நமக்குக் கொடுக்கின்றன.

 

இங்கு நமக்கு ஒரு புதிய ஜோதிஜி அறிமுகமாகிறார். டாலர் நகரத்தில் நாம் சந்தித்த அந்த ‘ஒன்றும் தெரியாத அப்பாவி’ ஜோதிஜி இங்கு இல்லை என்பது இந்தக் குறிப்புகளைப் படிக்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது. இந்தத் தொழிலில் நீண்ட நாட்கள் பட்ட அனுபவத்தில் புடம் போடப்பட்ட ஜோதிஜியை சந்திக்கிறோம்.

 

 

தனது அனுபவம் பற்றி ஜோதிஜியின் வார்த்தைகளில்:

தன் சுய விருப்பு வெறுப்புக்காக நிறுவனங்களை கவிழ்த்தவர்கள்குறுகிய காலத்திற்குள் நிறுவன வளர்ச்சியை விட தங்களது பொருளாதார வளர்ச்சியை பெருக்கிக் கொண்டவர்கள், உண்மையான உழைப்பாளிகளை உதாசீனப்படுத்தியவர்கள்,  தங்களது பலவீனங்களுக்காக வளர்ந்து கொண்டிருந்த நிறுவனத்தை வேரோடு வெட்டி சாய்த்தவர்கள் என்று பலவற்றையும் பார்த்த காரணத்தால் எல்லா நிகழ்வுகளுமே இயல்பான தொழில் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எனக்குத் தெரிய தொடங்கியது.

 

அவர் கற்றது மட்டுமல்ல நமக்கும் பலவற்றையும் சொல்லிக் கொண்டு போகிறார். அந்தத் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் பல்வேறு விதமான மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் மாடசாமியிலிருந்து தொடங்கி ராஜா வரை. ‘அவள் பெயர் ரம்யா’ என்ற தலைப்பில் ஜோதிஜி எழுதிய ஒவ்வொன்றும் மணிமணியானவை. ஒருவரிடம் இருக்கும் திறமையை எப்படி அவரை பயிற்று வைப்பதன் மூலம் வெளிக்கொணரலாம் என்று இங்கு சொல்லுகிறார். ஆனால் அதுவே அவரை இக்கட்டில் மாட்டி வைத்ததையும் சொல்லிப் போகிறார். சுவாரஸ்யமான அத்தியாயம்.

 

ஒவ்வொரு அத்தியாயத்திலும் தான் கண்டது, கேட்டது அனுபவித்தது என்று தனது ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்கிற எழுத்துப்பாணியில் விவரிக்கிறார். நீங்கள் திருப்பூரிலோ அல்லது வேறு ஏதாவது ஆடைகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்பவராக இருந்தால் தான் இந்த ‘ஒரு தொழிற்சாலையின் குறிப்பு’களை ரசிக்க முடியும் என்றில்லை. யாராக இருந்தாலும், என்னைபோன்ற இல்லத்தரசி ஆனாலும் ரசிக்கலாம். அதேபோல ஜோதிஜி இங்கு சொல்லியிருக்கும் மனிதர்களைப் போல நாம் வெளியிலும் பலரைப் பார்க்கிறோமே. அதனால் மனிதர்களை எடை போடவும் இந்தக் குறிப்புகள் நிச்சயம் உதவும்.

 

 

ஒரு சின்ன குறை: ஒவ்வொரு அத்தியாயமும் மிகவும் நீண்டுகொண்டே போகிறது. சிலசமயம் வேண்டுமென்றே வளர்க்கிறாரோ என்று கூடத் தோன்றுகிறது. அத்தியாயங்களின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். அல்லது இன்னும் இரண்டு மூன்று அத்தியாங்களாக கூட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

 

‘ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்’ என்பதை ‘வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களைப் பற்றிய குறிப்புகள்’ என்று கூடக் கொள்ளலாம்.

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் முழுமையாகப் படிக்க இங்கே