பிகே…..!

 

 

 

trailer thanks: Youtube

பிப்ரவரி 2015 ஆழம் இதழில் வெளியான கட்டுரை

பாலிவுட் திரைப்படங்கள் நாட்டிய அசைவுகளுக்கும், நாடகத்தனமான காட்சி அமைப்புகளுக்கும், பாடல்களுக்கும் பெயர் போனது என்று எல்லோருக்குமே தெரியும். அவற்றிலும் சில திரைப்படங்கள் சமூக விவாதங்களை கிளப்பும். அந்த மாதிரியான படம் தான் ஆமீர்கானின் பிகே படம்.

 

மத நம்பிக்கைகளில் ஆழ்ந்து போயிருக்கும் ஒரு நாட்டில் நிலவும் மூடநம்பிக்கைகளைக் கேள்வி கேட்கிறது இந்தப் படம். இதில் ஆமீர் கான் ஒரு வேற்றுகிரகவாசி. பூமிக்கு வந்தவுடனேயே அவரது ‘தொலைவியங்கி’ திருடப்படுகிறது. அதைத் திரும்பப் பெற அவர் மேற்கொள்ளும் பயணத்தில் அவர் நல்லவர்களையும், கெட்டவர்களையும் சந்திக்கிறார். பலவிடங்களுக்குப் போய் பலவற்றையும் கற்கிறார். அவரிடம் எல்லோரும் பேசும் ஒரு வசனம்: ‘கடவுள் மட்டுமே அவரது தொலைவியங்கியைக் கண்டுபிடித்துக் கொடுக்க முடியும்’ என்று. அந்தக் கடவுளை தேட ஆரம்பிக்கிறார் ஒவ்வொரு கோவிலிலும் மசூதியிலும், தேவாலயங்களிலும். அங்கிருக்கும், குருமார்களும், பாதிரிகளும் மதத்தலைவர்களும் சொல்வதை கேட்டு ஒவ்வொரு கடவுளையும் திருப்திப் படுத்த முயலுகிறார். மெதுமெதுவே கடவுள் பெயரில் அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுவதை உணருகிறார்.

 

உணர்ச்சிபூர்வமான விஷயத்தை ஒரு வியாபாரப் படத்தில் கொண்டுவந்ததற்கு முதலில் ஆமீர்கானையும், ராஜ்குமார் ஹிரானியையும் (தயாரிப்பாளர்) பாராட்ட வேண்டும் என்கிறார் திரைப்பட ஆய்வாளர் நம்ருதா ஜோஷி. ‘மதங்களை விமரிசித்து பல படங்கள் பல மொழிகளில் வந்திருந்த போதிலும் இந்தப் படத்தில் ஆமீர் கான் நடித்திருப்பது மிகப்பெரிய வித்தியாசத்தைக் காட்டுகிறது’.

 

மதமாற்றம் மிகப்பெரிய அளவில் நாடாளுமன்றத்தில் பேசப்பட்டு வரும் நேரத்தில், பிரபல மதகுருக்கள் கொலை கற்பழிப்பு ஆகிய குற்றங்களில் கைது செய்யப்பட்டு வரும் இந்த நேரத்தில் இப்படி ஒரு படம் வெளியாகி இருப்பது பலவித கருத்துக்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இப்படத்தின் முதல் சுவரொட்டி வெளிவந்தபோதே சலசலப்பு ஏற்பட்டது. படம் வெளிவந்தபின் ஹிந்துத்வா அமைப்புகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக கிளர்ச்சி செய்தனர். இந்தப் படத்தில் வரும் பல காட்சிகள் ஹிந்துக்களின் மத உணர்வுகளை வருத்தப்பட வைப்பதாக உள்ளது என்றனர்.

ஆனால் ஆமீர்கான் இந்த போராட்டங்களினால் பாதிப்படையவில்லை. ‘ஜனநாயக நாட்டில் தங்கள் கருத்துக்களைச் சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. நான் எல்லோருடைய கருத்துக்களையும் மதிக்கிறேன். உணர்வுபூர்வமான படமாக எடுக்க நினைத்தேனே தவிர, பரபரப்பான படமாக எடுக்க நினைக்கவில்லை’ என்கிறார்.

‘நாம் யாரும் ஹிந்து என்றோ, முஸ்லீம் என்றோ ஒரு முத்திரையுடன் பிறக்கவில்லை என்பதைச் சொல்வதே இந்தப் படத்தின் முக்கியச் செய்தி.   எப்படி ஒரு குழந்தை ஏற்கனவே கற்பிக்கப்பட்ட கருத்துடன் பிறப்பதில்லையோ இந்தப் படத்தில் வரும் வேற்றுகிரகவாசியான ஆமீர் கானும் அப்படியே வருகிறார்.

‘இந்த மாதிரியான பின்னடைவுகளை எதிர்பார்த்திருந்தேன்’ என்கிறார் ஆமீர் கான். ‘வாழ்க்கையில் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். ஆனால் கண்ணை மூடிக்கொண்டு ஒன்றை நம்புவது தவறு. இந்தக் கண்மூடித்தனமான நம்பிக்கை என்பதை வைத்துக் கொண்டு தேவை இருப்பவர்களும், ஏழைகளும் சுரண்டப்படுகிறார்கள்’. ட்விட்டரில் இரண்டுவிதமான கருத்துக்களும் – பிகே விற்கு ஆதரவு, பிகே விற்கு எதிர்ப்பு  – வலம் வந்துகொண்டிருக்கின்றன.

 

‘நாளுக்கு நாள் திரையரங்குகளில் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. மக்களுக்குப் படம் பிடிக்கவில்லை என்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டுமே. பிகே மூலமாக நாங்கள் சொல்ல வந்த செய்தியை கேட்கப் பிடிக்காதவர்கள் தான் இப்படி படத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்தபின் எங்கே மக்களுக்கு தங்களைப் பிடிக்காமல் போய்விடுமோ என்று பயப்படுகிறவர்களிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ என்ற எச்சரிக்கையுடன் விவாதத்தை முடிக்கிறார் ஆமீர் கான்.

 

தனக்குப் பிடிக்காத கருத்து ஒன்று வெளிவரும்போது ஒரு மனிதன் எப்படி நடந்து கொள்ளுகிறான் என்பதை வைத்தே அந்த மனிதன் நாகரிகமடைந்தவனா இல்லையா என்று சொல்லமுடியும். நமக்கு ஒவ்வாதது என்றால் ஒதுங்கிவிடுவதுதான் சரியா வழியாக இருக்க முடியும். மாறாக, படைப்பாளியின் கருத்துரிமையை அழிக்க நினைப்பது சர்வாதிகாரம்.