காதல் பேச்சு

 

காதல் பேச்சு –

எழுதியவர் அந்தக் காலத்து எழுத்தாளர் எஸ்.வி.வி.

 

காதல் பேச்சு காதுக்குக் காது வைத்த மாதிரி இருக்கும். வேறு ஒருவர் காதிலும் படும்படியாக இராது.

கோபப்பேச்சோ அதற்கு நேர் எதிரிடையாக இருக்கும். புருஷன் பெண்ஜாதிகளுக்குள் இருந்தாலும் ஊரைக் கூட்டும். மாம்பலத்தில் பேசினால் மயிலாப்பூர் அதிரும்.அது அந்தப் பேச்சின் இயல்பு. பரீட்சார்த்தமாக ‘உனக்கு புத்தி இருக்கிறதா? இல்லையா? உப்புப் போட்டுத் தின்கிறாயா? இல்லையா? என்று மெள்ளச் சொல்லிப் பாருங்களேன், சுவாரஸ்யப் படுகிறதா என்று! படாது. அது மேல் ஸ்தாயியில் இருக்க வேண்டிய பேச்சு. அதனால் என்ன ஊர் கூடட்ட்டும், அது அப்படித்தான் கிளம்பும்.

 

உலகத்தில் கோடான கோடி ஜனங்களும் காதலர்களும் இருக்கிறார்களே! இதுவரையில் எங்கேயாவது காதலர்கள் என்ன பேசிக்கொள்ளுகிறார்கள், எப்படிப் பேசிக் கொள்கிறார்கள் என்று யாராவது கேட்டிருப்பார்களே? இருக்கவே மாட்டார்கள்.

 

ஜனங்கள் நிறைந்த பனகல் பார்க்கைப் போன்ற இடமாகவே இருக்கட்டும். இருவர்களும் ஒரு சிமிட்டி பெஞ்சின் மேல் போய் உட்கார்ந்தார்களானால் இந்த உலகத்தையே மறந்துவிடுவார்கள். யார் வருகிறார்கள், யார் போகிறார்கள், என்ன நடக்கிறது, ரேடியோவில் வீணையா, வாய்ப்பாட்டா என்று அவர்களுக்கு ஏதாவது தெரியுமா? தெரியாது. பெண்ணின் பேச்சிலும் முக உல்லாசத்திலும் ஆண் அழுந்திக் கிடப்பான். ஆணின் பேச்சிலும் அவன் அசடு தட்டும் மூஞ்சியிலும் பெண் லயித்து நிற்பாள். எப்பொழுதும் பெண்தான் கெட்டிக்காரி. இம்மாதிரி சந்தர்ப்பங்களில் ஆண் மூஞ்சி அசடு வழியும். பெண் எல்லா உணர்ச்சிகளையும் அமுக்கி வைத்துக்கொண்டு ஆட்டம் காட்டிக் கொண்டிருப்பாள்.

 

இப்படி உலகத்தையே மறந்து இருவர்களும் சல்லாபமாய்ப் பேசிக் கொள்ளுகிறார்களே! குறுக்கும் நெடுக்கும் யதேச்சையாய் எத்தனை பேர்கள் போகிறவர்கள்? இவர்கள் நிலைமையைப் பார்த்து என்ன பேசிக் கொள்ளுகிறார்கள் என்று காதில் வாங்க வேண்டுமென்றே குறுக்கும்  நெடுக்கும் போகிறவர்கள் எத்தனை பேர்கள்? இவர்கள் காதில் அரைக்கால் பேச்சாவது விழுமோ? துளிக்கூட விழாது. அதுதான் காதல் பேச்சின் இயல்பு.

குஷி கிளம்பும் காலத்தில், புருஷன் பெண்ஜாதியை ‘என் கண்ணே! என் மூக்கே! தேனே, பாலே, சர்க்கரைக் கட்டியே, என் கட்டெறும்பே!’ என்று இம்மாதிரி கொஞ்சுகிறானா என்று யாராவது கண்டதுண்டோ? யார் தெரிந்து கொள்ள முடியும் அவரவர்கள் கொஞ்சல் அவரவர்களோடு பிறந்து காற்றில் பறந்து போகிறது. நாடகத்திலும் சினிமாவிலும் அவைகளை நாம் கேட்கிறோம்.

அதைத் தவிர நிஜ உலகத்தில் அவைகளை நாம் கேட்க முடியுமோ?

‘என் கட்டெறும்பே?’ என்று நான் சொன்னதைப் பார்த்துச் சிலர் சிரிக்கலாம். ‘அப்படி ஒரு கொஞ்சலா?’ என்று பலர் நகைக்கலாம். ஆனால், ‘இவருக்கு எப்படித் தெரிந்தது? நம்மா வீட்டுக்காரர் இவரிடத்தில் போய் ‘அசட்டுப் பிசட்டென்று சொல்லிக் கொள்கிறார் என்ன?’ என்று நினைக்கிறவர்களும் அநேகம் பேர் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

அது போகட்டும். ‘என் கட்டெறும்பே!’ என்பது கொஞ்சலில் சேர்த்தியில்லையோ?

கமலா என்று ஒரு பெண் பாவாடை கட்டிக்கொள்ளத் தெரியாமல் மூக்கு ஒழுகிக் கொண்டிருந்த காலம் முதல் அவளை எனக்குத் தெரியும். நான் அவளை எப்பொழுதும் பரிகாசம் செய்து கொண்டிருப்பேன்.

‘கமலா, உனக்கு அறுபது வயதில் சிறு பிள்ளையாய் ஒரு புருஷனைப் பார்த்து வைத்திருக்கிறேன். ரொம்ப அழகாயிருப்பான். தடியை ஊன்றிக் கொண்டு கூனிக் கூனி இடுப்பைப் பிடித்துக்கொண்டு நடப்பான்…..’

‘போங்க மாமா! நீங்கள் எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான்’.

‘அய்யோ, நான் போய் சொல்லுகிறேன் என்றா நினைக்கிறாய்? நிச்சயமாய்ப் பார்த்து வைத்திருக்கிறேன், குழந்தை மாதிரி வாயில் ஒரு பல் இராது…’

 

‘அய்யய்யோ! அய்யோ! போங்க மாமா! நீங்கள் இப்படியெல்லாம் பேசினால் எனக்குக் கெட்ட கோவம் வரும். நான் போய்விடுவேன். இங்கு இருக்க மாட்டேன்’.

‘நிஜமாய்த் தான் சொல்லுகிறேன், கமலா. உனக்கு வைரத்தோடு, வைர லோலாக்கு, ஸ்வஸ்திக் வளையல் எல்லாம் போடுவான். கமலா கமலா என்று தடியை ஊன்றிக்கொண்டே கையால் இடுப்பைப் பிடித்துக் கொண்டு நொண்டி, நொண்டி, உன் பின்னாலே ஓடுவந்து கொண்டிருப்பான்…..’

‘அய்யய்யோ, போதுமே, மூடுங்களேன் வாயை!’ என்று சொல்லிக்கொண்டே மேலே சொல்லவொட்டாமல் என் வாயை அழுத்திப் பொத்துவாள்.

கமலாவுக்கு பதினாறு வயதாகி, சமீபத்தில் கல்யாணம் நடந்தது. புருஷன் சின்னஞ்சிறு பிள்ளை. நன்றாய்ப் படித்தவன். சம்பாதிக்கிறான். ரொம்பவும் அழகாயிருப்பான். அப்பேர்ப்பட்ட புருஷன் கிடைத்தானே என்று கமலாவுக்கு ரொம்பப் பெருமை.

கல்யாணமாகி ஆறேழு மாதங்களாகியும் இப்பொழுதுதான் அவளைப் பார்த்தேன். எனக்கு நமஸ்காரம் செய்தாள்.

புதுக் கல்யாணப் பெண்ணின் முகத்தில் தாண்டவமாடும் பிரசன்னமும் ஆனந்தமும் அவள் முகத்தில் பிரதிபலித்தன. சந்தோஷகரமான முகத்தைப் பார்க்கவேண்டுமென்றால் புது மஞ்சள் பூச்சு அழியாத திருமங்கல்யத்துடன் விளங்கும் பெண்ணையும், பரீக்ஷை தேறிக் காலேஜுக்குப் போகும் பெருமையில் இருக்கும் பிள்ளையையும் பார்க்க வேண்டும். எனக்கு ஆனந்தத்தைத் தரக்கூடிய காட்சி, அவைகளுக்கு மானமாய் மற்றொன்றில்லை.

‘கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டாயா கமலா?’ என்றேன்.

ஒரு பதிலும் பேசாமல் வெட்கத்தோடு தலை குனிந்து நின்றாள்.

‘நான் உனக்குப் பார்த்து வைத்திருந்த அறுபது வயது பிள்ளைக்கு ‘டும்கி’ கொடுத்துவிட்டு கல்யாணம் செய்து கொண்டு விட்டாயே?’

‘உட்காரு கமலா’ என்றேன். அவள் தயங்கினாள்.

‘அய்யோ, என்ன இப்படி வெட்கப்படுகிறாயே? உட்காரு’ என்றேன். தலையைத் தொங்கவிட்டுக் கொண்டே நாற்காலியின் நுனியில் உட்கார்ந்தாள்.

சாதாரணக் கேள்விகளைக் கேட்டு அவள் வெட்கத்தைப் போக்கி முன்போல் சகஜமாய்ப் பேசும்படியான நிலைமையை ஏற்படுத்த வேண்டுமென்று அவளுடைய மாமானார், மாமியார் மைத்துனன்மார்கள் இவர்களைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தேன்.

‘உன் புருஷனுக்கு இப்போது என்ன சம்பளம்?’

‘அதெல்லாம் எனக்கென்ன தெரியும், மாமா?’

‘புருஷனுக்கு என்ன சம்பளம் என்று தெரியாமல் கூடவா இருக்கிறாய்?’

‘தெரியாது, மாமா!’

‘சரியாய் பத்து மணிக்க்கு ஆபீஸுக்குப் போய்விடுவான் போலிருக்கிறது?’

‘ஒன்பது மணிக்கே புறப்பட்டுப் போய்டுவார்’

‘அப்புறம் சாயந்திரம் ஐந்து மணிக்குத்தான் வருவான்?’

‘ஐந்துக்கு வரமாட்டார். ஆறுக்கும்தான் வருவா, சில நாள் எட்டு மணி கூட ஆய்விடும்’.

‘அதுவரைக்கும் நீ ‘எப்போ வருவாரோ எந்தன் கலிதீர’ என்று அவனையே நினைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாய்?’

‘போங்க மாமா’

என்னை எங்கேப் போகச் சொல்லுகிறாய்?’

‘பின்னே நீங்க இப்படியெல்லாம் பேசுகிறீர்களே!’

‘எப்படியெல்லாம் பேசுகிறேன்? உள்ளதைச் சொன்னேன். நீ அவனையே நினைத்துக் கொண்டே உட்கார்த்திருக்கிறதில்லே?’

‘இல்லை’

‘நிச்சயமாய்?’

‘நிச்சயமாய்”

‘புளுகு’

‘புளுகில்லை, நிஜம் நிஜம், நிஜம்!’

எங்களுக்குள் முன்னிருந்த சிரிப்பு விளையாட்டு, சிநேகம் ஏற்பட்டு விட்டது.

‘உன் முகத்தைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே’

‘உங்களுக்குத் தெரியும்! நீங்கள்தான் மாமியை எப்பொழுது பார்த்தாலும் நினைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருகிறீர்கள் போலிருக்கிறது!’

‘ஆமாம். உன்னைப்போல் இல்லை என்கிறேனா? நினைத்துக் கொண்டுதான் உட்கார்ந்திருக்கிறேன். உன் புருஷன் என்ன கோபக்காரனா? சாதாரணமாய்ச் சிரித்து விளையாடிக் கொண்டு குஷியா இருக்கிறவனா?’

‘அதெல்லாம் தெரியாது மாமா’

‘எதைக்கேட்டாலும் தெரியாது என்கிறாயே, உனக்கு என்னதான் தெரியும்?’

‘எனக்கு ஒன்றுமே தெரியாது மாமா! நான் போய்வருகிறேன்’

‘உட்காரு, சொல்லுகிறேன். ஒன்றும் சொல்லாமல் போகிறேன் என்கிறாய். உன் புருஷனுக்குச் சங்கீதம் தெரியுமா?

‘அது என்ன தெரியுமோ? எனக்கென்ன தெரியும், மாமா?

‘தெரியுமா என்று கேட்கிறதுதானே!’

‘நான் போய்வருகிறேன், மாமா.’

‘உட்காரு. உட்காரு. சங்கீதம் தெரிந்தவனாயிருந்தால் வலிப்பு வந்தவன் மாதிரி மூஞ்சியைக் கோண அடித்துக் கொண்டு, எப்போது பார்த்தாலும் கொய் கொய் என்று இழுத்துக் கொண்டிருப்பானே? அது கூடவா காதில் விழுந்திராது?’

‘எனக்கு அதெல்லாம் தெரியாது, மாமா’

‘அகமுடையானைத் தெரியுமோ, இல்லையோ?’

‘அது கூடத் தெரியாது’

‘அவனை நீ பார்த்ததே இல்லே?’

‘இல்லை’

‘யாரோ இப்போது ஒன்பது மணிக்கெல்லாம் ஆபீஸுக்குப் போய்விடுவா, ராத்திரி எட்டு மணிக்குத்தான் வருவா, என்றாயே, அது யார்?’

‘அது யாரோ, தெரியாது’

கல்யாணமான புதிதில் பெண்களிடத்தில் புருஷனைப் பற்றிப் பேசினால் அவர்கள் இப்படித்தான் ‘கோணா மாணா’ என்று பதில் சொல்லிக் கொண்டிருப்பார்கள். முகத்தில் மாத்திரம் அடங்காத சந்தோஷம் விளங்கிக் கொண்டிருக்கும்.

‘புருஷன் பேரை எடுத்தாலே உனக்கு வாயெல்லாம் பல்லாய் போய்விடுகிறதே!’

‘மாமி பேச்சை எடுத்தால் உங்களுக்கு அப்படிப் போல் இருக்கிறது’.

‘ஆமாம் உன்னைப் போல் இல்லை என்கிறேனா? உன் புருஷன் உன்னை என்னவென்று கூப்பிடுகிறது?

‘நீங்கள் மாமியை என்னவென்று கூப்பிடுகிறது?’

‘பேரைச் சொல்லித்தான் கூப்பிடுகிறது’.

‘மற்றப் பேர்களும் அப்படித்தான் கூப்பிடுவா’

‘அதைக் கேட்கவில்லை. கமலா கமலா என்று சாதாரணமாய் கூப்பிடுகிறதுதான் இருக்கிறதே. அந்தரங்கமாய்க் கூப்பிடுகிற பேர் ஒன்று இருக்குமே?’

‘நீங்கள் மாமியை என்னவென்று கூப்பிடுகிறது?’

‘ஏ சைத்தான்!’ என்பேன்’

‘ஹோ! ஹோ! ஹோ!’ என்று இடி இடி என்று சிரித்தாள்.

‘என்னைக் கேட்டால் நான் சொன்னேனே, நீ இப்பொழுது சொல்ல வேண்டுமோ இல்லையோ?’

‘எனக்கு செல்லப்பேரு ஒன்றுமில்லை’

‘நீ சொன்னா நான் நம்புவேனா? இல்லாமல் இருக்குமா?’ எப்படிக் கூப்பிடுகிறான் சொல்லு?’

‘இல்லை மாமா’, ‘போங்க மாமா’, ‘என்னை ஒன்றும் கேட்காதீர்கள் மாமா’ என்று எவ்வளவோ சாகசங்களும், பிகுவும் பண்ணிக் கடைசியில் ‘தேள் குட்டி’ என்று கூப்பிடுகிறது’ என்று சொல்லிக் கையால் முகத்தை மூடிக் கொண்டு பிடித்தாள் ஓட்டம்.

‘ஏ தேள் குட்டி! இங்கே வா’ என்று சிரித்துக் கொண்டே அவள் பின் கத்தினேன். போனவள் போனவள் தான்.

‘கட்டெறும்புக்கு’ த் தேள் குட்டி எப்படியிருக்கிறது?

எத்தனை தரம் கமலாவென்று கூப்பிட்டாலும் ஒரு தரம் தேள்குட்டி என்று கூப்பிடுகிற சந்தோஷத்தை அவளுக்குக் கொடுக்குமா? ஆனால் வேறொருவர் அதைக் கேட்க முடியுமோ?

காதல் பேச்சுக்களே விநோதம்! வாழ்க்கையின் இனிப்புப் பூராவும் அல்லவா சிருஷ்டியில், காதலில் திணிக்கப்பட்டிருக்கிறது!

*********************

2015 புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய எஸ்.வி.வி எழுதிய   ‘ஹாஸ்யக் கதைகள்’ என்ற புத்தகத்திலிருந்து. அல்லயன்ஸ் வெளியீடு.