பனிக் காலத்தில் பாப்பாவின் பட்டு மேனிப் பராமரிப்பு:

பனிக்  காலத்தில்பாப்பாவின்பட்டுமேனிப்பராமரிப்பு:
குழந்தை பிறந்தவுடனே கொழு கொழு என்று இருக்கும். சிலநாட்களில் அதன் உடலில் இருக்கும் நீர் வற்றி சருமம் உலர்ந்து மெலிதாகிவிடும். இதனை “அரை வற்று” என்பார்கள். நாளாக ஆக, குழந்தை மெது மெதுவே உடல் தேறும். எல்லாக் குழந்தைகளுமே இந்த மாற்றத்திற்கு உள்ளானாலும் பனிக் காலத்தில் பிறக்கும் குழந்தைகளின் சருமப் பரமாரிப்பு என்பது சற்று கடினமானதுதான். புதுத் தாய்மார்களுக்கு பாப்பாவை பாதுகாக்க பல்வேறு குறிப்புகளைச் சொல்லவே இந்தக் கட்டுரை.

பிறந்த  குழந்தைகளின் இளம் சருமம் சிறிது வறண்டே காணப்படும். குளிர் காலத்தில் பாப்பாவின்  சருமம் வெகு சீக்கிரம் ஈரப்பதத்தை இழந்துவிடும். பனிக்  காலத்தில் சில்லென்ற காற்றும் அதில் இருக்கும் குறைந்த ஈரப் பதமும் சேர்ந்து சருமத்தை வறண்டு போகச் செய்யும். இதனால் குழந்தைகளின் சருமத்தில்  நீர் வறண்டு  தோல் உரியவும் ஆரம்பிக்கும். மேலும் தோல் சிவந்தும் காணப்படும்.

குழந்தையின்உடை:

குழந்தையை குளிர் தாக்காமலிருக்க ஸ்வெட்டர், குல்லா முதலியவற்றை போட்டே வைப்பதால், இளம் சருமத்தில் சின்ன சின்ன தடிப்புகள் (heat rashes) ஏற்படலாம். முதலில் பருத்தியால் ஆன உடையைப் போட்டுவிட்டு, பிறகு கம்பளி உடையைப் போடுங்கள். குழந்தையின் இளம் சருமத்திற்கு பருத்தி ஆடையே சிறந்தது. இதற்கு மேல் கம்பளி ஸ்வெட்டரைப் போடுவதால் குழந்தையின் சருமமும் பாதுகாப்பாக இருக்கும். குளிரும் தாக்காது.

குழந்தைகளின்நாப்கின்கள்:
நாப்கின்கள் போடுவதற்கு முன்மாய்ச்சரைசர் தடவவும். ஒவ்வொருமுறை நாப்கின் மாற்றும் போதும்  மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் ஒரு மிருதுவான துணியை நனைத்து பாப்பாவை நன்றாகத் துடைக்கவும். மாய்ச்சரைசர் தடவி பிறகு நாப்கின் கட்டவும். ஒரே நாப்கின்னை நீண்ட நேரத்திற்கு பயன்படுத்த வேண்டாம்.

குழந்தைக்குக்குளிப்பாட்டும்போது:

அதிக சூடான தண்ணீர் வேண்டாம். மிதமான சூட்டில் குழந்தையைக் குளிப்பாட்டவும். குழந்தைக்கு பயன்படுத்தும் சோப்பு, எண்ணெய் முதலியவை அதிக வாசனை இல்லாததாக இருக்கட்டும். சூடு நீர் குழந்தையின் இளம் சருமத்தை உலர்த்தி விடும்; அதிக வாசனைப் பொருட்கள் குழந்தையின் உடம்பில் ஊறும் எண்ணைப் பசையைப் போக்கிவிடும்.  பேபி ஆயிலை குளிப்பாட்டும் தண்ணீரில் சில துளிகள் கலந்து விடவும். குளிப்பாட்டிய பின் ஈரம் போக குழந்தையின் உடம்பைத் மிருதுவாகத் துடைக்கவும். மிக மிக மெல்லிய உறுத்தாத டவலை பயன் படுத்தவும்.  குழந்தையின் சருமத்திற்கு ஏற்ற லேசான வாசனையுள்ள சிறந்த மாய்ச்சரைசர் தடவவும். நான்கு அல்லது ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை  மாய்ச்சரைசர் தடவுவதால் சருமம் பொலிவாக இருக்கும். பாப்பாவின் பட்டு மேனி பாதுகாப்பாக இருக்கும்.

பெரியவர்களைப் போலவே சிறு குழந்தைகளுக்கும் பனிக் காலத்தில் உதடுகள் வெடிக்கும். உடம்பிற்குத் தடவும்  மாய்ச்சரைசர் உதட்டுக்கும் நல்லது. பாப்பாவின் பவள உதடுகளில் துளியே துளி மாய்ச்சரைசெர் தடவுங்கள். பாப்பா உதடுகள் மின்னச் சிரிக்கும் சிரிப்பிற்கு ஈடு இணை ஏது?

ஆயுர்வேதம் குழந்தைகளின் சருமப் பராமரிப்புக்கு பல விதமான மூலிகைகளை சிபாரிசு செய்கிறது. இவை தலை முறை தலைமுறையாக குழந்தைகளின் மேனிப் பராமரிப்புக்கு என்றே உபயோகப் படுத்தப் பட்டு வருகின்றன. ஆயுர்வேத புத்தகங்களிலும் இந்த மூலிகைகளைப் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.

  1. ஆலிவ் ஆயில்: வைட்டமின் ஈ நிரம்பிய இது, சருமத்தை பராமரித்து , போஷாக்களித்து பலவிதமான சரும நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இந்த ஆயில் நுண்ணுயிர் கொல்லியாகவும் (antimicrobial), சருமத்திற்கு இதமளிப்பதாகவும் இருப்பதால் பாப்பாவின் சருமம் ஆரோக்கியமாகவும், மெத்து மெத்தென்றும் இருப்பதற்கு உதவுகிறது. தினமும் குழந்தைக்கு ஆலிவ் ஆயில் தடவி குளிப்பாட்டுவதால் குழந்தையின் சருமம் மிக மிக மிருதுவாக இருக்கும்.
  2. பாதாம் ஆயில்: குழந்தையின் இளம் உடலை ஈரப் பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
  3. பாலா (country mallow) எனப்படும் மூலிகை பாப்பாவின் தளிர் மேனியை நோய் கிருமிகள் தாக்காமல் காக்கிறது.
  4. லிகோரைஸ் (Licorice) ஒரு வித வேர். இதன் சாற்றை உடம்பில் தடவினால் அரிப்பு, வீக்கம், தோல் சிவப்பாதல் முதலியவற்றை நீக்கும்.
  5. மெந்தியம்: குழந்தையின் சருமத்தில் இருக்கும் ஈரப்பசையை காக்கும் ஒரு அற்புதமான இயற்கையான மாய்ச்சரைசெர் மெந்தியம். இன்றைக்கும் பாட்டி வைத்தியத்தில் மெந்தியத்திற்கு ஸ்பெஷல் இடம் இருக்கிறது. பச்சைப் பயறு மற்றும் மெந்தியம் சேர்த்து அரைத்து சோப்பிற்கு பதிலாக அந்தக் காலத்தில் உபயோகப் படுத்தியதால் தான் இன்றைக்கும் பாட்டிமார்கள் அழகாக இருக்கிறார்கள்! பல வீடுகளில் இன்றைக்கும் குழந்தைக்கு குளிப்பாட்டும்போது பச்சைப் பயறு மாவையே பயன்படுத்துகிறார்கள்.
  6. ஆலோ வேரா எனப்படும் கற்றாழை சாறு: இது மிகப் பிரபலமான அழகு சாதனங்களிலும், பேபி கேர் பொருட்களிலும் உபயோகப் படுத்தப்படும் ஒரு மூலிகை. ஆயுர்வேதத்திலும் இதன் உபயோகம் அளவிடமுடியாதது. சரும நோய், தீக்காயங்கள், புண்கள் ஆகியவற்றிற்கு இது ஒரு சிறந்த நோய் நிவாரணியாக செயல் படுகிறது.  பாப்பாவின் பட்டு மேனியை நோய் கிருமிகள் அண்டா வண்ணம் பாதுகாக்கும் இது.

குழந்தைக்கான பராமரிப்புப் பொருட்கள் வாங்கும்போது மேற்கண்ட பொருட்கள் அடங்கியுள்ள லோஷன், கிரீம் எனப் பார்த்து வாங்குங்கள். இந்தப் பனிக் காலத்திலும் உங்கள் கண்மணி வாடாமல் அன்று பூத்த புஷ்பம் போலே இருப்பாள். புது பாப்பாவுக்கும்,  புது தாய்மார்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

published in a2ztamilnadunews.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s