ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்!
இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில், மங்கல வாழ்த்துப்பாடலில் வரும் வரிகள் இவை. சந்திரன், சூரியன், மழை முதலான இயற்கை வளங்களை துதித்து விட்டு பிறகு சிலப்பதிகாரக் கதை சொல்லுகிறார் அடிகள். இயற்கை வளங்கள் நமக்கு இறைவன் தந்த வரப் பிரசாதங்கள். இவற்றின் மூலம் கிடைக்கும் சக்தி மனித குலத்திற்கே ஒரு மிகப் பெரிய பொக்கிஷம் என்றும் சொல்லலாம். இந்த உண்மையை நன்கு உணர்ந்தே இளங்கோவடிகள் முதலில் இவற்றை வணங்கிவிட்டு தன் காப்பியத்தை ஆரம்பித்தாரோ?
இயற்கை தனக்குள் என்றும் வற்றாத பல வளங்களை வைத்துக் கொண்டிருக்கிறது. சூரியன், நீர் மற்றும் காற்று முதலியவைகளிலிருந்து நமக்குத் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்வது இப்போது பல நாடுகளிலும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா ஒரு வெப்ப மண்டல நாடாகையாலே சூரிய சக்தியை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தலாம். நம் நாட்டில் பல இடங்களிலும் மின்சார தடை அமலில் இருக்கிறது. பல தொழில்கள் இந்த மின்சாரத் தடையை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. வரும் காலங்களில் மின்சாரப் பற்றாக்குறை அதிகமாகும் என்றே தோன்றுகிறது. இதற்கு ஒரே தீர்வு சூரிய சக்தி மூலம் மின்சாரம் எடுப்பதுதான்.
நம் நாட்டில் சுமார் 300 நாட்கள் சூரிய ஒளி கிடைக்கிறது. இப்படிக் கிடைக்கும் அபரிமிதமான சூரிய சக்தியைக் கொண்டு ஆண்டு முழுவதும் தடை இல்லாமல் மின்சாரம் கிடைக்கும்படி செய்யலாம். ஆனால் நம் நாட்டில் ஒரு சதவிகிதம் சூரிய சக்தியைத்தான் இது வரை உபயோகிக்கிறோம். உண்மையில் இந்த சூரிய சக்தியைக்கொண்டு நாம் மிகப் பெரிய அளவில் மின்சாரம் தயாரிக்கலாம். நாட்டிற்கும் வீட்டிற்கும் தேவையான மின்சாரம் மிகச் சுலபமாக கிடைக்கும்படி செய்யலாம். வீடுகளில் சிறிய கருவிகளைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.
இவ்வளவு இருந்தும், மக்களிடையே சூரிய சக்தி மூலம் மின்சாரம் எடுப்பது பற்றிய போதுமான விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. வீட்டில் சோலார் தகடுகளை (solar panels) அமைத்து மின் விசிறி, கணணி, மின் விளக்குகள், வாஷிங் மெஷின், ஏ. சி. முதலியவற்றை இயக்கலாம். சோலார் சாதனங்களை அமைக்க ஆரம்ப செலவு அதிகம் என்றாலும், நாளடைவில் நாம் உபயோகிக்கும் மின்சாரக் கட்டணத்தை விட செலவு குறைவு தான்.
தற்சமயம், பல தனியார் நிறுவனங்களும் அரசுடன் சேர்ந்து மக்களிடையே இந்த சூரிய சக்தியை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. அதன் பயனாக பல கிராமங்களும் மின் ஒளியைப் பெற்றுவருகின்றன. சூரிய ஒளி கொண்டு கிடைக்கும் மின் சக்தி பம்ப் செட்டுகளில் இருந்து தண்ணீர் இறைக்கவும் வீடுகளுக்கு மின் ஒளி கொடுக்கவும் பயன் படுகிறது.
சோலார் பெனல்களை அமைப்பது எப்படி?
முதலில் இப்போது நீங்கள் உபயோகிக்கும் மின்சாரத்தின் அளவில் எத்தனை பங்கு சூரிய சக்தி மூலம் பெற விரும்புகிறீர்கள் என்று தீர்மானியுங்கள். மின் விளக்கு, மின் விசிறி இவற்றுக்கு மட்டும் போதுமா? அல்லது முழு வீட்டுக்கும் சூரிய சக்தியினால் மின்சார சக்தி வேண்டுமா? உங்களது தேவையின் அளவைப் பொறுத்து சோலார் பெனல்களை அமைக்க வேண்டும். இந்த சோலார் தகடுகள் சூரிய சக்தியை இழுத்து அதை DC மின்சாரமாக மாற்றுகிறது. இதை AC மின்சாரமாக மாற்ற ஒரு இன்வர்டர் (inverter ) வேண்டும். வீடுகளில் சோலார் தகடுகளை அமைக்க அரசு மான்யம் 50 சதவிகிதம் கிடைக்கிறது.
வீடுகளின் மேல் மாடியில் இந்த சோலார் தகடுகள் அமைக்கப்படுகின்றன. சூரிய சக்தியானது சோலார் தகடுகளில் உள்ள பாட்டரிகளில் சேமிக்கப் படுகிறது. சுமார் 65 சதுர அடி இடம் இருந்தால் போதும். இந்த சோலார் தகடுகளைப் பராமரிப்பதும் எளிது. அவ்வப்போது சுத்தமாகத் துடைத்தால் போதும். சோலார் தகடுகளில் போடோவோல்டிக் (Photovoltaic) பாட்டரிகள் வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும். சோலார் தகடுகள் சூரிய ஒளியை நேரடியாக இழுத்து நவீன தொழில் நுட்ப முறையில் மின் சக்தியாக மாற்றி பாட்டரிகளில் சேமித்து வைக்கின்றன. வீடுகளில் மின்தடை ஏற்படும்போது பயன் படுத்தப் படும் இன்வர்டர் 3 மணி நேரம் மட்டுமே மின்சக்தியைக் கொடுக்கும். ஆனால் சோலார் சாதனங்களை நமக்குத் தேவையான அளவில் அமைப்பதன் மூலம் அதிக நேரம் மின்சக்தியைப் பெறலாம்.
சோலார் சக்தியின் நிறைகள்:
- சூரிய ஒளியால் பெறப்படும் மின்சக்தியால் விண்கலங்களும் எரிசக்தி பெறுகின்றன. இதை ஒரு மிகப் பெரிய சாதனை என்று சொல்லலாம். மின்தந்திகளை அமைத்து வழங்கப்படும் மின்சக்தியை விட இந்த முறை மிகவும் குறைந்த செலவில் செய்யப்படுகிறது.
- சோலார் மின் சக்தித் துறையில் தற்போது ஏற்பட்டிருக்கும் புதிய தொழில் நுட்பம் மூலமாக மழைக்காலங்களிலும் மின் சக்தி கிடைக்க வழி செய்யப்படுகிறது.
- சுற்றுச் சூழலுக்கு ஏற்றது.
- வீட்டின் மேல் புறம் சோலார் தகடுகளை அமைப்பதால், இவற்றிற்கென்று தனியாக இடம் தேவை இல்லை.
- காற்றாலை அல்லது மற்ற இடங்களில் மின்சாரம் தயாரிக்கப்படும் போது ஏற்படும் இரைச்சல் இதில் இல்லை.
சோலார் சக்தியின் குறைகள்:
- ஆரம்பகட்டச் செலவுகளுக்கு அதிக முதல் தேவை.
- சூரிய சக்தி தேவை என்பதால் பகல் பொழுது மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகிறது.
- வானிலை மாறுதல்கள் சோலார் தகடுகளை பாதிக்கலாம்.
- நகரங்களில் அமைக்கப்படும் சோலார் தகடுகள் சுற்றுப்புற மாசுகளினால் பாதிக்கப்படலாம்.
சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றும் இந்த மனித சாதனையால் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுகின்றன; சுற்றுச் சுழலுக்கு மாசு ஏற்படாத பசுமையான எரிசக்தி கிடைக்கிறது. இந்த அறிய கண்டுபிடிப்புக்காக மனிதனையும், அதற்குத் தேவையான வெப்பத்தைக் கொடுத்துக் காக்கும் சூரியனையும் வாழ்த்துவோம்!
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்!
published in a2ztamilnadunews.com