கையால் சாப்பிட வாங்க!

eating with hand

திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களின் ‘சினேகிதி’ ஜூலை இதழில் வெளியான கட்டுரை.

 

இப்போது நாம் பின்பற்றும் மேற்கத்திய நாகரீகத்தில் கையால் சாப்பிடுவது பத்தாம்பசலித்தனம், பழங்கால வழக்கம், ஆரோக்கிய குறைச்சல், நாகரீகமில்லாத செயல் என்று கருதப் படுகிறது.

 

ஆனால் கையால் சாப்பிடும் பழக்கம் நம் உடலுக்கு மட்டுமில்லாமல் உள்ளத்திற்கும், ஆன்மாவிற்கும் வலுவூட்டும் என்கிறது ஒரு பழைய சொல்வழக்கு.

 

 

இப்போது பல வீடுகளில் கையால் சாப்பிடுவதைத் தவிர்த்து ஸ்பூனால் சாப்பிடுகிறார்கள்.

 

ஏன் நம் முந்தைய தலைமுறை கையால் சாப்பிட்டு வந்தார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆயுர்வேதத்திலிருந்து இந்தப் பழக்கம் ஆரம்பித்தது. வேத காலத்து மக்களுக்கு நம் கைகளில் இருக்கும் வல்லமை தெரிந்திருந்தது.

 

கைகளினால் பல்வேறு முத்திரைகள் காண்பிக்கும் பழக்கம் பரத நாட்டியத்தில் உண்டு. அதேபோல தியானம் செய்யும்போதும் விரல்களை மடக்கியும், நீட்டியும் வேறு வேறு விதமான முத்திரைகளுடன் அமருவது வழக்கம். இது போன்ற முத்திரைகளினால், அவற்றில் இருக்கும் நன்மைகளை கருத்தில் கொண்டு நம் முன்னோர்கள் கையினால் சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கலாம்.

 

நமது செயல்களுக்கு கைகள் தான் மிகச்சிறந்த உறுப்பு. வேதத்தில் வரும் ஒரு இறைவணக்கம் இதை சொல்லுகிறது. காலையில் எழுந்தவுடன் ‘கர தரிசனம்’ செய்ய வேண்டும். அப்போது கீழ்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும்.

 

‘கராக்ரே வசதே லக்ஷ்மி; கர மூலே சரஸ்வதி; கர மத்யே து கோவிந்த: ப்ரபாதே கர தர்சனம்’

 

‘நமது கைகளில் லக்ஷ்மி வாசம் செய்கிறாள். கைகளின் மூலையில்  சரஸ்வதி தேவி; கைகளின் நடுவில் கோவிந்தன் இருக்கிறான். இதை ஒவ்வொருவரும் காலையில் எழுந்தவுடன் நமது உள்ளங்கைகளைப் பார்த்துக் கொண்டே சொல்ல வேண்டும்.

 

அன்றைய நாள் நல்லபடியாக இருக்கும் என்ற நம்பிக்கையை இந்த ஸ்லோகம் தருகிறது.

 

நம் கைகள், கால்களின் வழியாகத்தான் பஞ்சபூதங்களும் நம் உடம்பில் நுழைகின்றனவாம். ஒவ்வொரு விரலும் இந்த ஐம்பூதங்களின் நீட்சிகள் என்று ஆயுர்வேதம் சொல்லுகிறது.

 

நமது கட்டை விரல் அக்னி. சின்னக் குழந்தைகள் விரல் சூப்புவதைப் பார்த்திருப்பீர்கள். அவர்களால் உடல்ரீதியான செயல்கள் செய்ய முடியாத போது, உண்ட உணவு செரிக்க இயற்கை கட்டை விரலை சூப்புவதன் மூலம் அவர்களின் செரிமானத்திற்கு இப்படி உதவுகிறது.

 

ஆட்காட்டி விரல் வாயு. நடுவிரல் ஆகாசம். (இதையே ஈதர் என்கிறார்கள். அதாவது மனித உடலில் உள்ள செல்களின் நடுவில் இருக்கும் வெற்றிடங்கள்.) மோதிர விரல் ப்ருத்வி (பூமி). சுண்டு விரல் நீர்.

 

ஆக ஒவ்வொரு விரலும் நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்ய உதவுகிறது. விரல்களிலேயே செரிமானம் ஆரம்பம் ஆகிவிடுகிறது. கையால் உணவை அள்ளி எடுக்கும்போது ஐம்பூதங்களின் ஆற்றலும் தூண்டப் படுகிறது. அக்னி செரிமான நொதிகளை சுரக்க உதவுகிறது.  செரிமானம் தூண்டப் படுவதுடன், உண்ணும் உணவின் சுவை, தன்மை, வாசனை முதலிய அம்சங்களும் அதிகரித்து  உணவை நன்கு அனுபவித்து ருசித்து உண்ணமுடிகிறது.

 

நம் வீட்டில் அந்தக் காலத்துப் பெரியவர்கள்  உணவுப் பொருட்களை அளக்க ஆழாக்கு, கரண்டி அல்லது ஸ்பூன் பயன்படுத்த மாட்டார்கள். ‘ஒரு பிடி அரிசி, ஒரு சிட்டிகை உப்பு,  சின்ன கோலி அளவு புளி’ என்று கை விரல்களாலேயே அளவு காண்பிப்பார்கள். புட்டு மாவிற்கு பதம் சொல்லும்போது கையால் பிடித்தல் பிடிபடவேண்டும். உதிர்த்தால் உதிர வேண்டும் என்பார்கள். வெல்லப்பாகுப் பதமும் இரண்டு விரல்களால் கரைந்த வெல்லத்தைத் தொட்டுப் பார்த்து ஒரு கம்பிப் பதம், இரண்டு கம்பிப் பதம் என்பார்கள்.

 

கெட்டியான உணவுப் பொருளோ, அல்லது திரவப் பொருட்களோ அவற்றை அளக்க, 6 விதமான கையளவுகள் இருக்கின்றன.

 

சின்ன வயதில் அம்மா கையால் கலந்து நம் கையில் சாதம் போடுவாள். அதில் சின்னதாக ஒரு குழி செய்து அதற்குள் குழம்பு விட்டுக் கொண்டு சாப்பிடுவோமே, அந்த ருசி இன்னும் நாவில் இனிப்பதற்குக் காரணம் அம்மாவின் கை ருசி தானே?

 

கோடை விடுமுறையில் பாட்டி வீட்டில் சாப்பிடுவோமே, நினைவிருக்கிறதா? கல்சட்டியில்  இரவு நீர் ஊற்றப்பட்ட சாதத்தில்  காலையில் உப்பு, மிளகாய், துளி பெருங்காயம்  நுணுக்கிப் போட்டு  நீர் மோர் ஊற்றி பாட்டி தரும் ஆரோக்கிய பானம் சாதேர்த்தம் (சாதமும் நீரும் கலந்த திரவம்) அது நமது உடலுக்கு மட்டுமில்லாமல் மனதையும் குளிரப் பண்ணுமே, அதற்குக் காரணம் உப்பு மிளகாய் பெருங்காயம் மட்டுமா? இல்லையே, பாட்டியின் கை மணமும் அதில் சேர்ந்திருப்பதால் தானே?

 

 

இட்லிக்கு அரைத்து வைக்கும்போது என்னதான் அரவை இயந்திரம் அரைத்தாலும் கடைசியில் நம் கைகளால் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து கலந்து வைக்கிறோம், இல்லையா? அடுத்தநாள் காலையில் பொங்கி இருக்கும் மாவைப் பார்த்து நம் மனமும் பொங்கி, இன்றைக்கு மல்லிகைப் பூ போல இட்லி என்று பூரிக்கிறோமே!

 

சப்பாத்திக்கு மாவு பிசையும்போது நீரை சிறிது சிறிதாக கொட்டி, மாவை கைகளால் நன்றாக அளைந்து, உருட்டி  பிசையுங்கள். நீங்கள் அதிக  நேரம் பிசையப் பிசைய மிக மிக மிருதுவான சப்பாத்திகள் வரும். முக்கியமாக ஃபூல்கா சப்பாத்திக்கு கையால்தான் கலக்க வேண்டும். அப்போதுதான் நெருப்பில் நேரிடையாக சப்பாத்திகளைப் போடும்போது அவை உப்பும்.

 

பழைய விஷயங்கள் என்றாலே ஒரு மாதிரி பார்த்து ‘இப்போ இப்போ நிகழ்காலத்துக்கு வாங்க, யாராவது கைகளை பயன்படுத்தி ஏதாவது செய்கிறார்களா சொல்லுங்க’ என்பவர்களுக்கு:

 

6 விதமான கையளவுகள் பற்றி ஏதாவது குறிப்பு கிடைக்கிறதா என்று இணையத்தில் தேடியபோது ஒரு காணொளி கிடைத்தது.

 

அதில் அரிசோனா மாநில பல்கலைகழக ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து துறையில் பணி புரியும்  திருமதி சிமின் லேவின்சன் என்ற பெண்மணி நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை ஒருவேளைக்கு எந்த அளவில் சாப்பிடுவது என்பதை நமது உள்ளங்கைகளை வைத்துக் கொண்டு விளக்கினார். ரொம்பவும் வியப்பாக இருந்தது.

 

மாவுப்பொருள்கள் எவ்வளவு சாப்பிட வேண்டும்? கை விரல்களை மடக்கிக் காட்டுகிறார்: ஒரு கைப்பிடி;

பழங்கள்: கையை விரித்து ஒரு கையளவு;

பச்சை காய்கறி, கீரைவகைகள் இரண்டு கைகளையும் விரித்து சேர்த்து வைத்து இரண்டு கையளவு;

கொழுப்பு: (வெண்ணை, நெய், எண்ணெய்) கட்டை விரலின் நுனியிலிருந்து கட்டைவிரலின் பாதி வரை;

சீஸ்: முழு கட்டைவிரலின் அளவு – ப்ரோடீன் இருப்பதால்.

திரவங்கள்: ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் விரித்து ஒரு டம்ளர் அளவு என்கிறார்.

 

காணொளி இணைப்பு: http://usatoday30.usatoday.com/video/measuring-food-with-the-palm-of-your-hand/2308102638001

 

பாருங்கள், இந்த விஷயங்களை நம் முன்னோர்கள் என்றைக்கோ செயல் படுத்தி இருக்கிறார்கள்.

 

பழைய விஷயங்கள் இவற்றில் என்ன இருக்கின்றன என நாம் ஒதுக்கும் பலவற்றில் நிறைய விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள் மறைந்து இருக்கின்றன. இவற்றை அறிந்து கொண்டு நம் வாழ்வை சீராக அமைத்துக் கொள்வோம்.

 

இந்த காணொளியையும் காணுங்கள்.

இந்திய உணவை எப்படி கையால் எடுத்து சாப்பிடுவது என்று விளக்குகிறார்கள்!

புதிய தொடர் ஆரம்பம்

health image

 

போன மாதம் தும்கூர் போயிருந்தேன். கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. மருத்துவரிடம் போனேன். கூட்டமோ கூட்டம். உட்காரக் கூட இடம் இல்லை. எனக்குக் கிடைத்த டோக்கன் எண் 21. ‘இப்போதுதான் 9 ஆம் டோக்கன் உள்ளே போயிருக்கு’ என்றார் அங்கே காத்திருந்த ஒரு பெண்மணி. மருத்துவ மணிக்குள்ளேயே இருந்த  மருந்துக் கடைக்காரர் என்னைப் பார்த்துவிட்டு, ‘இங்க வாங்கம்மா’ என்று சொல்லி ஒரு சின்ன ஸ்டூலைப் போட்டு உட்காரச் சொன்னார். வயதானால் இது ஒரு சௌகரியம்!

9 ஆம் நம்பர் வெளியே வந்தார். மிகவும் சிறிய வயது. காலில் ஏதோ அடி. மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்து வகைகள் ஒவ்வொன்றிலும் 5 கொடுங்கள் போதும் என்று வாங்கிக் கொண்டார். வசதி இல்லாதவர், அதிகம் படிக்காதவர் என்று அவரது நடை உடை பாவனைகளிலிருந்தே தெரிந்தது. பாவம் என்ன உடம்போ என்று நினைத்துக் கொண்டேன்.

ஒவ்வொருவராக மருத்துவரின் அறையிலிருந்து வெளியே வந்து, மருந்துக் கடைக்காரரிடம் மருத்துவர் சொன்ன மருந்துகளில் பாதி அளவே வாங்கிக் கொண்டு போனார்கள். எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. சில மருந்துகள் மருத்துவர்கள் சொல்லும் அளவிற்கு கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் – குறிப்பாக anti- biotic மருந்துகள்.

இவர்களுக்கெல்லாம் யார் சொல்வது இதை என்று ஆயாசம் ஏற்பட்டது.

 

நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் அவசியம் தேவை. என்னால் முடிந்தது நான் படிக்கும் மருத்துவக் கட்டுரைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வது.

நான்கு பெண்கள் தளத்தில் வரும் புதன்கிழமையிலிருந்து மருத்துவம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும், செய்திகளையும் எழுத இருக்கிறேன்.

இந்தக் கட்டுரைக்கான முன்னுரையை கீழே இணைப்பில் படிக்கலாம்.

நோய்நாடி நோய்முதல் நாடி

கோதுமை மாவில் பரோட்டா!

நேற்று எனது தளத்தில் பரோட்டா பிரியர்களுக்கு ஒரு எச்சரிக்கைஎன்று ஒரு பதிவு வெளியிட்டிருந்தேன். அதற்கு இப்படி ஒரு வரவேற்பு இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை.

எனக்கும் இந்த பரோட்டாவுக்கும் ரொம்ப ரொம்ப தூரம். இதுவரை செய்ததுமில்லை; சாப்பிட்டதுமில்லை. ஆனால் என் கணவர் நிறைய சொல்லியிருக்கிறார் இது பற்றி.

நாங்கள் சென்னை மேற்கு அண்ணா நகர் பேருந்து நிலையம் எதிரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தபோது, மாலை வேளைகளில் ஒரு கூட்டத்தைப் பார்த்திருக்கிறேன். இந்த கூட்டம் பேருந்து நிலையத்தின் வாசலில் இருந்த ஒரு புரோட்டா கடையில் புரோட்டா சாப்பிட என்று தெரிய வந்தது. எங்கள் எதிர்வீட்டுப் பெண்மணி ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு ‘புரோட்டா செய்ய ஆரம்பிச்சுட்டாங்க…ஜன்னல் வழியா பாருங்க…ரொம்ப interesting ஆக இருக்கும்’ என்றார். அன்றிலிருந்து சில தினங்களுக்கு மிகவும் சிரத்தையுடன் (!) பார்க்க ஆரம்பித்தேன்.

மேல் சட்டை போடாத ஒருவர், கிட்டத்தட்ட ஒரு அண்டா நிறைய மாவு எடுத்து தன் முன்னால் இருந்த பெரிய மேஜையின் மேல் கொட்டி அதில் ஒரு பெரிய குழி செய்து, அதில் நீரைக் கொட்டி கலந்து, பிறகு அதில் ஏதோ சேர்த்துக் கலந்து,  கலந்து, …….மணிக்கணக்கில் இந்த ‘கலத்தல்’ நடந்தது. ஒரு கட்டத்தில் மாவை கையால் தூக்கித் தூக்கி அடித்து அடித்து கலந்தார் அந்த மனிதர்.

பிறகு கணிசமான அளவு மாவு எடுத்து அதை நீளமாக உருட்டி அதை வட்டமாக சுருட்டி வைத்தார். இதேபோல எல்லா மாவையும் செய்து, ஒரு அழுக்குத் துணியால் மூடினார்.

இரவு ஆகஆகத் தான் பரோட்டா வியாபாரம்  சூடு பிடிக்கிறது.

நேற்று எனக்கு வந்த ஒரு பின்னூட்டத்தில் ஒருவர் நீங்கள் எவ்வளவு சொன்னாலும் பரோட்டா சாப்பிடுவதை விட மாட்டேன் என்று சபதம் செய்திருக்கிறார்!

‘வீட்டில் செய்து சாப்பிடுங்கள். வெளியில் வேண்டாம்’ என்று பதில் எழுதினேன் அவருக்கு.

எனது பதிவு உலகத் தோழி திருமதி கீதா சாம்பசிவம் தனது பின்னூட்டத்தில்

//நல்ல பரோட்டா சாப்பிடணும்னா வட மாநிலங்களிலே குறிப்பா உ.பி. பஞ்சாப், ராஜஸ்தானிலே சாப்பிடணும். டெல்லியிலேயும் நல்லா இருக்கும்.  அங்கே எல்லாம் ஹோட்டல்களில் கூட வெண்ணை என்றால் நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா வெண்ணை தான் சேர்ப்பாங்க.

வெண்ணை தான் போடுவாங்க. சுத்தமான வெண்ணெயா இருக்கும்// என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இன்று அவரது சாப்பிடலாம் வாங்க, தளத்தில் கோதுமையில் பரோட்டா செய்வது பற்றி படங்களுடன் போட்டிருக்கிறார்.

இதோ இணைப்பு:

டிங்கடிங்க டிங்க டிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க் பரோட்டா ரெடீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

பரோட்டா பிரியர்களுக்கு சின்ன வேண்டுகோள்: வீட்டில் செய்து சாப்பிடுங்கள். வெளியில் வேண்டாம், ப்ளீஸ்!

அன்புள்ள கீதா நன்றிகளுடன் 

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை

Inline images 1
தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?

 இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகின்றன,  பரோட்டா கடைகள்.  அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை, அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு!

விருதுநகர் பரோட்டா, தூத்துக்குடி பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா   என்று சொல்லும்போதே நாவில் நீர் ஊறுமே!

பரோட்டாவின் கதை:

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது.

இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.

இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சினை தொடங்குகிறது.

பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது,  நாம் பிறந்த நாள் கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிக்கப்படுகிறது..?

நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும்.  அதை பென்சாயல் பெராக்சைட் (benzoyl peroxide ) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள். அதுவே மைதா .

Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் ‘டை’ யில் உள்ள ரசாயனம்.

இந்த ராசாயனம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நீரிழிவுக்கு காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் ராசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccharine , Ajino motto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகிறது. இவை மைதாவை அபாயகரமாக்குகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரிழிவு நோய் உண்டு பண்ணப்  பயன்படுகிறது. ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும்  நீரிழிவு வர காரணமாகிறது.

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல. மைதாவில் நார் சத்து கிடையாது.  நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் .

இதில் சத்துகள் எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழந்தைகளை மைதாவினால் செய்த bakery பண்டங்களை உண்பதை தவிர்ப்பது நல்லது.

Europe union, UK, China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .

மைதாவை  நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல் , இருதய கோளாறு , நீரிழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர் .

மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .

இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு கொள்ளசெய்யுங்கள்.

நன்றி: திரு ஆர். கே. ஷர்மா (rk1s@yahoo.com) (எனக்கு இந்த கட்டுரையை அனுப்பியவர்.)

Original letter from Sri Ananthanarayanan Ramasamy <a.narayanan.1960@gmail.com  –

மேலதிக விவரங்களுக்கு: http://en.wikipedia.org/wiki/Maida_flour

கோதுமை மாவில் பரோட்டா!

ஆண்களே! வாய் விட்டு அழுங்கள் …….. !

 

இது ஆண்களுக்கான கட்டுரை. ஓர் ஆண் வாய் விட்டு அழுவது நல்லது என்று சொல்லப் போகும் கட்டுரை. நம் ஊரில் ஒரு ஆண் அழுதால் அதை அவனது பலவீனம் என்றும், ‘பொட்டச்சி போல அழாதே’ என்றும் சொல்லி அடக்கி விடுகிறோம். ஆனால் உலகின் புகழ் பெற்ற ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை பொதுவிடத்தில் காட்டிக்கொள்ளத் தயங்குவதே இல்லை.

 

டென்னிஸ் விளையாட்டுச் வீரர்  திரு. ஃபெடரர் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் அழுது விடுவார். இதற்கு அவர் சொல்லும் காரணம்: “விளையாட்டு வீரர்கள் உணர்ச்சி வசப்பட்டு அழுவதை அவர்களது விசிறிகளால் புரிந்து கொள்ள முடியும். அழுகை என்பது நல்ல உரையாடலை விட பலமடங்கு சிறந்தது. வெற்றியோ, தோல்வியோ, இரண்டும் எங்களைப் பாதிக்கின்றன. இரண்டைப் பற்றியும் நாங்கள் சிந்திக்கிறோம். மனது உடைந்து அழுவது, மன பாரத்தை வெளியில் கொட்டுவது எல்லாமே சரிதான்;  நாங்களும் மனிதர்கள் தான் என்பதை எங்கள் அழுகை காண்பிக்கிறது. அழுவது ஆண்களின் இயல்பான குணம்!”

 

இவரைப் போலவே, திரு அமீர்கான், தனது ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சிகளின் இடையிலும், சில சமயம் முடிவிலும் தன் கண்களில் இருந்து வரும் கண்ணீரைத் துடைக்காமலேயே உட்கார்ந்திருப்பார். பார்வையாளர்களும் அந்நிகழ்ச்சியில் பங்குபெறுவோர்களின் துன்பங்களையும் அதிலிருந்து மீண்டு வந்ததையும் கேட்டு கண்ணீர் மல்க உட்கார்ந்திருப்பார்கள்.

 

அழுகை நம் மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை லேசாக்குகிறது. அழுகை என்பது நல்லியல்பு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

 

கண்ணீர் என்பது நம் கண்களில் அமைந்துள்ள கண்ணீர் சுரப்பிகளிலிருந்து உண்டாகிறது. கண்ணீரில் மூன்று விதம் உண்டு.

 

அடிப்படை கண்ணீர்: (Basal tears) இது நமது கண்களை ஈரப்பசையுடன் வைக்கவும், தூசியை அகற்றவும் உதவுகிறது.

 

எதிர்வினைக் கண்ணீர்: (Reflex tears) கண்களில் ஏதாவது விழுந்து விட்டாலோ, அதிக நெடியினால் கண்கள் பாதிக்கப் பட்டாலோ, அல்லது இருமும்போதும், தும்மும்போதும், வெங்காயம் நறுக்கும்போதும்  வருவது இந்தவகைக் கண்ணீர்.

 

கடைசி வகையும் முக்கியமானதும் தான் உணர்வுசார் கண்ணீர்: (emotional tears) பலமான உணர்ச்சிக் கொந்தளிப்பு, கோபம், பயம், மன அழுத்தம், துக்கம், சில சமயம் மித மிஞ்சிய சந்தோஷம் இவை இந்த வகைக் கண்ணீருக்குக் காரணம்.

 

மின்னசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சிகள் உணர்வுசார் கண்ணீரின் பயன்களை பேசுகிறது.

 

 • உணர்வுசார் கண்ணீர் நம் உடலில் மன அழுத்தத்தாலும், கவலையினாலும் சேர்ந்து இருக்கும் வேண்டாத நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.
 • ஆண்களை விட பெண்கள் 4 மடங்கு அதிகம் அழுகிறார்கள். பெண்கள் உணர்வுகளில் வாழ்கிறார்கள். ஆண்களோ எல்லாவற்றையும் வெளிக்காட்டாமல் உள்ளேயே அடக்கிக் கொள்ளுகிறார்கள்.
 • ஆண்களைப்போல் குழந்தைகளும் பிறந்த மூன்று மாதத்திற்கு கண்ணீர் வடிப்பதில்லை.
 • ஆண்கள் ஒரு வருடத்தில் சிலமுறை அழுகிறார்கள். ஆனால் பெண்கள் மாதத்தில் ஒருமுறையாவது அழுகிறார்கள்.

 

உணர்வு சார் கண்ணீர் பலசமயங்களில் மன அழுத்தத்தை குறைக்க பயன்படும். அதனால்தான் சிலர் தனிமையில் அழுகிறார்கள். அழுதபின் நம் மனது புத்துணர்வு பெருகிறதும் இதனால்தான். உணர்வு சார் கண்ணீரில், மற்ற இரண்டு கண்ணீர்களில் இல்லாத மாறுபட்ட இரசாயனப் பொருட்கள் இருக்கின்றன; இவை நமக்கு ஓர் இயற்கையான வலி நிவாரணியாக செயல் படுகிறது. அதன் காரணமாகவே நம் மன அழுத்தம் குறைகிறது.

 

உணர்வுசார் கண்ணீர் வருவதற்கு மிகப் பலமான, உணர்வு பூர்வமான தூண்டுதல் இருக்க வேண்டும். யாரும் சும்மா அழுவதுபோல ‘பாவ்லா’ செய்யமுடியாது. அழுகையோ, சிரிப்போ உணர்வு பூர்வமான சூழலை மூளை உணர வேண்டும். அதனால் ஒருவர் அழும்போது மூளையின் பல பகுதிகள் வேலை செய்கின்றன. இதன் காரணமாக, உடல்ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அழுகையோ, சிரிப்போ முகத்தின் தசைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இதயத் துடிப்பு, மூச்சுவிடும் அளவு இவை அதிகரிக்கின்றன. குரலும் மாறுகிறது.

 

ஆனால் சிலர் அதிகம் அழுவதற்கு என்ன காரணம் என்று இதுவரை கண்டுபிடிக்கவில்லை.  சமூகத் தாக்கம், சூழ்நிலைகளைக் காரணம் காட்டலாம். பெண்களை விட ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப் படுத்திக்கொள்ள முடியும் என்று நம்புவதால், அவர்கள் அழுவதை சமூகம் என்றுக் கொள்ளுவதில்லை. இதனாலேயே ஆண்கள் தங்களது மன அழுத்தத்தை சரி செய்ய நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளுகிறார்கள்.

 

நமக்குப் பிடித்தவர்களின் அருகாமையில், அண்மையில் அழுது, நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது நேர்மறையான விளைவுகளை கொடுக்கும்.

 

ஒருவர் அதீதமான மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது இதயத் துடிப்பு அதிகமாகிறது; வியர்வை பெருகுகிறது.  அழுவது இதயத் துடிப்பை நிதானப் படுத்தி, அமைதியைக் கொடுக்கிறது.

 

மிக நெருங்கியவர்களின் மரணம், காதல் தோல்வி முதலியன ஆண்களை அழவைக்கின்றன.

 

ஆண்கள் அழுவதைப் பற்றி ஆண்கள் என்ன சொல்லுகிறார்கள்?

 

ஆண்கள் உணர்வுபூர்வமானவர்கள் என்பதைக் காண்பிப்பதாக 32% ஆண்கள் கூறுகிறார்கள்.

 

அழும் ஆண் உண்மையானவன் என்று 29% கூறுகிறார்கள்.

 

ஆண் அழுவதை ஏற்றுக் கொள்ளுவதாகவும்  அழுவதால் தங்களது ஆண்மைக்கு இழுக்கு இல்லை என்றும் 20% கூறுகிறார்கள்.

 

அழுவது தங்களது பலவீனத்தைக் காட்டுகிறது என்று 19% சொல்லுகிறார்கள்.

 

கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியுமா? தேவை இல்லை என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். உணர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து பின் அழுகையாக மாறுகிறது. அதனால் அழுகையை அடக்குவது சரியான செயல் அல்ல என்கிறார்கள்.

 

அழுவது நல்லது என்றாலும், நீண்ட நேரம் அல்லது நீண்ட நாட்கள் அழுவது நல்லதல்ல. இது மனச் சோர்வின் அறிகுறி.

 

அவ்வப்போது கண்ணீர் விடுவது நம் கண்களை கழுவி நமது வாழ்க்கையை நல்ல முறையில் பார்க்க உதவும்.

 

அதனால் ……….(தலைப்பைப் படிக்கவும்)!

 

published in Thozhil Kalam.com

வலி நிவாரணிகள்: எச்சரிக்கை!

வலி நிவாரணிகள்: எச்சரிக்கை!

இந்தியாவில் உள்ள பார்சி சமூகத்தினரிடையே  ஒரு பழக்கம். யாராவது இறைவனடி சேர்ந்து விட்டால் உடலை எரிக்கவோ புதைக்கவோ மாட்டார்கள். ஒரு பெரிய  வட்ட வடிவில் இருக்கும் ராட்சதக் கிணற்றில்  (Tower of Silence ) பூத உடலைப் போட்டுவிடுவார்கள். இறந்த உடல்களை உண்ணும் கழுகு, வல்லூறு போன்ற பறவைகளுக்கு இரையாகட்டும் என்று இந்த ஏற்பாடு. இதனால் வாழ்வின் சுழற்சி பூர்த்தியாகிறது என்று நம்புகிறார்கள்.

சுமார் 10 வருடங்களுக்கு முன் இறந்த உடலை உண்ணும் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து போனது. ஏன் என்று ஆராய்ந்த போது இப்பறவைகள் இறந்து போகின்றன என்று தெரிய வந்தது. இதனால் இறந்த உடல்களை அப்புறப்படுத்த வேறு வழி கண்டறியும் நிலை ஏற்பட்டது.  ஆனால் பல நூறு ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த வழக்கத்தை ஏன் மாற்ற வேண்டும்? எதனால் பறவைகள் இறக்கின்றன என்று ஆராய தொடங்கினர்.

இறந்த பறவைகளின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டன. பறவைகள் இறப்பதற்கு முக்கியக் காரணம் வலி நிவாரணிகள் அதாவது (paracetamol – panadol) என்று கண்டுபிடிக்கப்பட்டது.

சமீப காலமாக பொதுவாக எல்லோருமே தலைவலியைக் குறைக்க வலி நிவாரணிகள் எடுப்பது அதிகமாகி வருகின்றது. இந்த வலி நிவாரணிகள் நமது கல்லீரலில் வெகு காலத்துக்கு தங்கி விடுகின்றன. இந்த உறுப்புகளை சாப்பிடும் பறவைகளின் உடலிலும் இந்த வலி நிவாரணிகளின் மிச்சங்கள் போய்ச் சேருவதால் அவைகள் மோசமாக பாதிக்கப்பட்டு இறந்து விடுகின்றன என்று தெரிய வந்தது.

இன்னொரு சம்பவம்:

விமான பணிப்பெண் ஒருவர் நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை பார்ப்பதாலும், அலுவல் காரணமாக வரும் மன அழுத்தத்தாலும்  உண்டாகும் தலைவலியைப் போக்க இந்த பெனடால் வலி நிவாரணி மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக் கொள்ளுவாராம். 30வது வயதின் ஆரம்ப நிலையில் இருக்கும் இவர்  தற்போது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிஸிஸ் எடுத்துக் கொண்டு வருகிறார்.

வலி நிவாரணிகள் நமக்கு உண்டாக்கும் தீமைகளுக்கு இவை உதாரணங்கள்.

நம் உடலைப் பற்றிய சில விஷயங்கள் நமக்கு தெரிவதே இல்லை. தலைவலியோ, ஜலதோஷமோ, ஜுரமோ, வயிற்றுப் போக்கோ எதுவானாலும்  நம் உடலே அவற்றை சரி செய்து கொண்டு விடும். நோயை குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் நம் உடலுக்கு இயற்கையிலேயே உண்டு. வயிற்றுப்போக்கினை நிறுத்தும் மாத்திரைகள் மலச்சிக்கலை உண்டாக்கும்

வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்ளுவதால் நம் உடல் அதனுடைய நோய் எதிர்ப்பு சக்தியையும், வலி தாங்கும் ஆற்றலையும் மெல்ல மெல்ல இழக்கிறது. இதன் விளைவாக, நாம் நோய்வாய் படுவதும் அதிகரிக்கிறது.

ஒரு காலகட்டத்தில் எத்தனை வலி நிவாரணிகளை விழுங்கினாலும் வலி குறைவதே இல்லை என்னும் நிலையும் ஏற்பட்டுவிடுகிறது.

இந்த வலி நிவாரணிகளின் இன்னொரு பக்க விளைவு: இதை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு எப்போதாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தால், வழக்கமாக கொடுக்கும் மயக்க மருந்தின் அளவை விட அதிகம் கொடுக்க வேண்டி வரும்.

இந்த பெனடால் மாத்திரைகள் இந்தியாவில் க்ரோசின், மெடாசின் என்ற பெயர்களில் கிடைக்கின்றன.

தலைவலியை குறைக்க நீர் அதிகம் குடிக்கலாம்;

இன்னொரு முறை: சுடுநீரில் பாதங்கள்  இரண்டும் மூழ்கும்படி சிறிது நேரம் உட்காரலாம்.

உழைப்பு எத்தனை முக்கியமோ, அதே போல உடலுக்கு ஓய்வும் மிகமிக அவசியம். வலி நிவாரணிகளுக்கு பதில் தேவையான ஓய்வு கொடுங்கள். ஓய்வுக்குப்பின் உங்கள் உடல் இன்னும் உற்சாகத்துடன் உழைக்கும்

எதெற்கெடுத்தாலும் மருந்து மாத்திரைகள் என்று போக வேண்டாம். அது நல்லதல்ல.

இறைவன் கொடுத்த இந்த உடலை இயற்கை முறையில் காப்போம்; செயற்கை மருந்துகளை தேவையன்றி பயன்படுத்த வேண்டாம்.

இந்த தகவலை உங்கள் நண்பர்களிடமும், உற்றார் உறவினரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள், ப்ளீஸ்!

 

 

 

குட்டித்தூக்கம் நல்லது!

 

“நேற்று என்ன பண்ணினீங்க?”

“ஓ! அதை ஏன் கேட்கறீங்க? தூக்கமோ தூக்கம்! மத்தியானம் நல்லா தூங்கினேன்; மறுபடி ராத்திரியும் நல்ல தூக்கம்! Sleepy Sunday!……”  என்று சொல்லிவிட்டு சிரித்தேன்.

“ஸ்லீப் டெட் (Sleep Debt) நிறைய சேர்த்து வைத்து இருப்பீங்க….. அதான் அவ்வளவு தூக்கம்” என்று சிரித்தார் என்னுடன் வேலை செய்யும் அர்ச்சனா.

“அதென்ன ஸ்லீப் டெட்? புதுசா இருக்கு?”

“ரொம்ப நாளா சரியா தூங்கலன்னா, அல்லது தூக்கம் வரும்போது தூங்காம தள்ளி போட்டீங்கன்னா நீங்க தூங்கவேண்டிய தூக்கம் சேர்ந்து சேர்ந்து ‘ஸ்லீப் டெட்’ ஆயிடும்….. கொஞ்ச நாள் கழித்து உங்கள் உடல் அந்தக் கடனை தூங்கித் தூங்கி சரி பண்ணிக்கும்…”

தமாஷ் செய்கிறாரோ என்று பார்த்தால் “நிஜம் மேடம், நம்புங்க..” என்றார்.

அன்றிலிருந்து எப்போது அதிகப்படியாக தூங்கினாலும் ‘சரி தூக்கக்கடனை அடைக்கிறேன்’ என்று நினைத்து என் குற்ற உணர்ச்சியை குறைத்துக் கொள்ளுவேன்.

எனக்கு நேர் எதிர் என் கணவர். இரவு மிகக்குறைந்த அளவே தூங்குவார். நடுவில் எழுந்து விடுவார். ‘ரெண்டு மணிக்கு எழுந்துட்டேன்; திருப்பி மூன்று மணிக்குத்தான் தூங்கினேன்’ என்பார். தினமும் இப்படித்தான். என்ன இவர் ‘இரவு எல்லோரும் தூங்கும் சமயத்தில் தூக்கம் வரவில்லை என்கிறாரே?’ என்று நினைத்துக் கொள்ளுவேன்.

இன்று ஒரு கட்டுரை படித்தேன். அதில் மேற்கண்ட என் கேள்விக்கு விடை கிடைத்தது. இதோ உங்களுக்கும் சில செய்திகள்:

குட்டிக்குட்டியாகத் தூங்குவது நல்லது. தினமும் இரவு 8 மணி நேரத் தூக்கம் என்பது கட்டுக்கதை. கொஞ்சநேரம் தூங்கிவிட்டு எழுந்து கொண்டு பிறகு மறுபடி தூங்குவது இயல்பான ஒன்று.

பல நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது தொழில்மயமாக்கலுக்கு முன் தூங்கும் நேரம் என்பது ஒருமுறை தூங்கி பின் சிறிது நேரம் விழித்துக் கொண்டு மறுபடியும் தூங்க செல்லுவது என்பது தான். அதாவது ஒரேயடியாகத் தூங்காமல் முதல் முறை இரண்டாம் முறை என்று ‘பிரித்துத் தூங்குவது’ (Segmented Sleep).

“முதல், இரண்டாம் தூக்கம் என்பது ஹோமர், விர்ஜில் ஆகியோரின் புத்தகங்களிலும் இடைக்கால கிறிஸ்தவ இலக்கியங்களிலும் விளக்கப்பட்டுள்ளது” என்று தனது ‘ஈவினிங் எம்பயர்: எ ஹிஸ்டரி ஆப் த நைட் இன் யர்லி மாடர்ன் யூரோப்’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் திரு கொச்லோப்ச்கி.

செயற்கை விளக்குகள் வருவதற்கு முன் இரவில் விழித்துக் கொள்வது இயல்பான ஒன்றாக இருந்தது. செயற்கை விளக்குகளைத் தொடர்ந்து காப்பி முதலிய பானங்கள் குடிக்கும் வழக்கம் ஏற்பட்டது. அதனால் மாலைவேளை என்பது காபி குடித்துக்கொண்டு அரட்டை அடிக்கும் நேரமாக மாறிப்போனது. தூங்கும் நேரமும் ஒத்திப்போடப் பட்டது. 8 மணிநேரத் தூக்கம் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

1800 ஆண்டு வரை மேற்கத்திய ஐரோப்பியர்கள் இரண்டு பிரதான தூக்க நிலையை – நடுவில் ஒரு மணிநேரம் அல்லது சற்று அதிகப்படியான நேரம் விழிப்பு நிலை – அனுபவித்து வந்தனர். இந்த இடைவெளியை ‘watch’ அல்லது ‘watching’ என்று குறிப்பிட்டனர்.

அப்படியானால் இரண்டு நிலையில் தூங்குவதுதான் சரியா? பரிணாம வளர்ச்சி நமக்கு இரண்டு தூக்கத்தை 4 – 4 மணிநேரம் என்றுதான் வடிவமைத்ததா? எது சரி? நீண்ட நேரத் தூக்கம் என்பது கிடையாதா?

“இது ஒரு நியாயமான கேட்கப்படவேண்டிய கேள்வி” என்கிறார் தூக்கமும், மனிதனின் செயல்பாடுகளும் என்ற மையத்தின் மருத்துவ இயக்குனர் திரு சார்லஸ் சாமுவேல்.

1990 களில் உளவியலாளர் திரு தாமஸ் வேர் ஒரு ஆய்வு நடத்தினார். பரிசோதனைக்கு உட்படுத்தபட்ட நபர்கள் ஒரு மாதத்திற்கு ஒவ்வொரு இரவும் 14 மணிநேரம் ஆழ்ந்த இருட்டில் வைக்கப்பட்டனர். நாளடைவில் அவர்கள் ‘பிரிக்கப்பட்ட தூக்கத்திற்கு’ ஆளானார்கள்.

“ஆனால் இப்போது 2012 ஆண்டில் இது சாத்தியமா? உலகம் அப்போதுபோல இப்போது இயங்கவில்லை. அப்போது அவர்கள் அப்படித் தூங்கினார்கள் என்று நாமும் அதேபோல் செய்யமுடியுமா? காலையில் வேலைக்குப் போவது, மாலையில் வீடு திரும்புவது என்று வாழ்க்கை அமைந்திருக்கும் போது நமக்கு வேறு வழிகள் இல்லை – இரவு முழுக்கத் தூங்குவதை தவிர” என்கிறார் திரு சாமுவேல்.

முதலில் தூங்கிவிட்டு நடுவில் விழித்துக்கொண்டு மறுபடி தூக்கம் வராமல் தவிப்பவர்கள் என்ன செய்ய? பிரித்துத் தூங்கலாமா? முதலில் 4 மணிநேரம் தூங்கிவிட்டு சிறிது நேரம் கழித்து மறுபடி தூக்கம் வரும்போது ‘இரண்டாம் முறை’ தூக்கம் போடலாமா?

இப்படித் தூங்குவதில் தவறில்லை; முன்னொரு காலத்தில் இப்படித்தான் என் கொள்ளு தாத்தா, எள்ளு தாத்தா குட்டித்தூக்கம் போடுவாராம் என்று நினைத்துக்கொண்டு நிம்மதிப்பெருமூச்சு சாரி, சாரி,  நிம்மதித் தூக்கம் போடலாம் இல்லையா?

இப்போது இன்னொரு வகைத் தூக்கம் பற்றியும் சொல்லுகிறார்கள் – அதாவது ‘Power Nap’ என்று. இதை ‘கோழித் தூக்கம்’ என்றும் சொல்லுவார்கள். ஒரு ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ – தூக்கம் கண்ணை சுற்றும்போது தூங்கி விடுவது. அசந்திருக்கும் உடல் சட்டென்று ஒரு புத்துணர்ச்சி பெறும். பேருந்தில் பயணம் செய்யும்போது பலதடவை இதை நான் அனுபவித்திருக்கிறேன்.

தூக்கத்தைப் பற்றி எழுதி நல்லா தூக்கம் வந்துவிட்டது, ஆ……….வ்…….!

வயதானவர்களுக்கு உடற்பயிற்சி

வலி என்பது இரண்டு வகை: ‘நல்ல வலி’, ‘கெட்ட வலி’

என்ன வலியில் கூட நல்ல, கெட்ட உண்டா என்கிறீர்களா? நிச்சயம் உண்டு.

“உடற்பயிற்சி செய்துட்டு வந்தா கால்கை எல்லாம் வலி”

“ஒண்ணும் செய்யாமலே எனக்கு உடம்பு வலி…..!”

முதல் வகை வலி ‘நல்ல வலி’. ஏனென்றால் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது ஏற்படும் வலி பழகப்பழக சரியாகிவிடும். அத்துடன் உடலை வலுவடையச் செய்யும்.

‘சும்மா’ இருப்பதால் வரும் வலி இன்னும் உங்களை நலிவடையச் செய்யும். அதனால் அது கெட்ட வலி.

பொதுவாகவே ‘குண்டாக இருப்பவர்கள் தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும்; அல்லது ஏதாவது நோய் வந்த பிறகு (உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி) மருத்துவர் சொன்னால் உடற்பயிற்சி செய்யலாம்’ என்று பலர் நினைக்கிறார்கள்.

அதேபோல இளைஞர்கள், சின்ன வயதுக்காரர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்; வயதானவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்லை – மேற்கூறிய ஏதாவது நோய் இருந்தாலொழிய என்று பலர் நினைக்கிறார்கள்.

இல்ல அண்ணாச்சி…அப்படி இல்ல…

சின்ன வயதிலிருந்தே உடற்பயிற்சி செய்பவர்கள் பொதுவாக நோய் நொடிக்கு அவ்வளவாக ஆளாவதில்லை. ஆளானாலும் வெகு சீக்கிரம் குணமடைந்து பழைய நிலைக்கு வந்துவிடுகிறார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன் என் உறவுக்கார இளைஞன் திடீரென பக்கவாதத்தால் பாதிக்கப்பட பதறி விட்டோம் எல்லோரும்; மிகவும் சின்ன வயது; அவன் தவறாமல் ‘ஜிம்’ போவது வழக்கம் ஆதலால், மருத்துவர்கள்  எதிர்பார்த்ததைவிட வெகு விரைவில் பழைய நிலைக்குத் திரும்பி விட்டான். எப்படி நாம் சின்ன வயதில் படித்த ‘ரைம்ஸ்’ (திருப்பித்திருப்பி சொல்லுவதால்) நமக்கு மறப்பதில்லையோ, நாம் ஏற்கனவே செய்துவந்த வேலைகளையும் நம் உடல் நினைவில் வைத்துக் கொள்ளும். நம் உடலின் இந்த அற்புதமான சக்தியை நாம் மறந்து விடுகிறோம். அதே போல இன்னொன்று: உடல் உறுப்புக்களை பயன்படுத்தப் பயன்படுத்த அவை நமக்கு நல்லதைச் செய்யும். ‘Use it or lose it’ இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் தான் நம் உடல் வேலை செய்கிறது.

வயதாக ஆக உடலுழைப்பு நமது அயர்ச்சியைப் போக்கும்; வலிகளை குறைக்கும்; நமது வாழ்க்கைத் தரம் உயரும் அதாவது ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

வயதானவர்களுக்கு கடுமையான நோய்களின்பாதிப்பால் வலிகள், தள்ளாமை, சில உறுப்புகள் சரியாக வேலை செய்யாமல் போவது போன்றவை வழக்கமாக ஏற்படுவதுதான். இதனால் சுதந்திரமாக நடமாட முடியாமல் வாழ்க்கை முடங்கிப் போகும். இவற்றிலிருந்து விடுபட அல்லது இவற்றின் தீவிரத்தைக் குறைக்க உடல் செயல்பாடு மிக மிக அவசியம்.

உடற்பயிற்சி உடலுக்கும் மனதுக்கும் செய்யும் நன்மைகள்:

 • பலவிதமான புற்றுநோய்கள் வராமல் காக்கிறது. இருதய நோய், சர்க்கரை நோய், அளவுக்கு அதிகமான உடற்பருமன் ஆகியவற்றிலிருந்து காக்கிறது.
 • பசியைத் தூண்டி, நல்ல உறக்கத்தைக் கொடுக்கிறது.
 • உடற்பயிற்சி செய்வதால் என்டார்பின் (endorphin) என்ற  ‘feel good’ ஹார்மோன் சுரப்பது நன்கு தூண்டப்படுவதால் நாள் முழுவதும் உங்கள் மனநிலை நல்ல நிலையில் இருக்கிறது. இதுவே உங்களை நோய்கள் அண்டாமல் காக்கும் அருமருந்து.
 • தசைகளும் எலும்புகளும் பலவீனமடைவதைத் தடுக்கிறது.
 • உடல் வலுவடைந்து இளமைத் தோற்றத்துடன் இருக்கிறது. இதுவே உங்களுக்கு தன்னம்பிக்கையையும், மனதில் உற்சாகத்தையும் கொடுக்கும்.
 • எலும்பு மெலிவு அல்லது இழப்பு ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது. தொடர்ந்த உடற்பயிற்சியும், கால்சியம் மாத்திரைகளும் உங்கள் எலும்புகளை பாதுகாக்கும்.
 • ‘வயதாகிவிட்டது, கீழே உட்கார முடிவதில்லை; கால் கைகளை மடக்கி நீட்ட முடிவதில்லை’ என்று பல வயதானவர்கள் சொல்லுவார்கள். இதற்குக் காரணம் தசைகள் நெகிழ்வுத்தன்மையை இழந்து விடுவதுதான். வயதாக ஆக இதெல்லாம் சகஜம் என்றாலும், இந்த நிலைமையை உடற்பயிற்சி மூலம் ஒத்திப்போடலாம்.

உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை, தவறான உணவுப் பழக்கங்கள் இவற்றால் தசைநார்கள் வெகு விரைவில் வலுவிழந்து போகின்றன. இதனால் தசைப்பிடிப்பு, அழற்சி, கீழே விழுதல் ஆகியவற்றுடன் எதிர்பாராத காயங்களும் ஏற்படுகின்றன.

உடற்பயிற்சி உங்கள்  உடலை பலமாக்குவதுடன் நடமாட்டத்தையும் சீர் செய்கிறது.

விளையாடும்போது மட்டையைப் பிடித்து பந்தை அடித்தல், எட்டிப் பிடித்தல், பௌல் செய்தல் ஆகிய செய்கைகளுக்கு நரம்பு-தசை ஒருங்கிணைப்பு (neuromuscular co-ordination) மிக மிக அவசியம். வயது ஏற ஏற இது  குறைகிறது. சரியான உடற்பயிற்சி மூலம் இதனை சரி செய்யலாம்.

25 வயது முதல் 50 வயது வரை நம் எடை அதிகரிக்கும். இதனால் தசைகளின் நிறையும் அதிகரிக்கும். ஆனால், வயது ஆக ஆக, உடலமைப்பு மாறுகிறது. தசைகள் அடர்த்தி குறைந்து கொழுப்பு சேர்கிறது. இது நமது வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது.

50 வயது ஆனவர்கள் எல்லோரும்  அவரவர்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை தினமும் செய்வது அவசியம். இதனால் நேர்மறையான எண்ணங்கள் அதிகரித்து, வயதானால் தோன்றும் அலுப்பு, ஆர்வமின்மை முதலிய எதிர்மறை எண்ணங்கள் மறையும்.

கடைசியாக – மிக முக்கியமான ஒன்று:

நம் எல்லோருக்குமே ‘கடைசிக் காலத்துல படுக்கையில் விழாமல், இருக்கும்வரை நம் கை கால்களுடன், பிறர் கையை எதிர்பார்க்காமல் இறைவனடி சேர வேண்டும்’ என எண்ணுகிறோம். இல்லையா?

நாம் செய்யும் உடற்பயிற்சி நம் எண்ணத்தை கட்டாயம் நிறைவேற்றும்.

என்னங்க, உடற்பயிற்சி செய்யக் கிளம்பிட்டீங்களா? மிக மிக நன்று! குட்லக்!

 

காரா பூந்தியா? பர்கரா?

பூவா, தலையா? பணமா, பாசமா? என்று கேட்பது போல ‘காராபூந்தியா? பர்கரா? என்று என்ன கேள்வி இது?
இன்றைய செய்தித் தாளில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளி வந்திருக்கிறது நமது சுவை மிகுந்த காரா பூந்தி பற்றி. அதாவது ஒரு பர்கரை விட ஒரு கைப்பிடி காரா பூந்தி அதிக கொழுப்புள்ளது என்று. கொழுப்புப் பட்டியலில் பர்கரை தாண்டி பல படிகள் முன்னே இருக்கிறது நமக்குப் பிடித்த காரா பூந்தி. ஆமாம். எது அதிகக் கொழுப்பு என்ற போட்டியில் பர்கரைத் தோற்கடித்து விட்டது நம் காரா பூந்தி. சீஸ் உடனும், மயோனைஸ் உடனும் வறுத்த முட்டையுடனும் வாயில் நீரை ஊறவைக்கும் பர்கர் ஓர் கைப்பிடி காரா பூந்தி இடம் தோற்றுவிட்டது. பர்கர் சாப்பிடும் நவீன யுவ யுவதிகளை விட காரா பூந்தி சாப்பிடுபவர்கள் அதிக அபாயத்தில் உள்ளார்கள் – அதாவது கொழுப்பு அதிகம் உடலில் சேரும் – அபாயத்தில் உள்ளார்கள் என்று கன்ஸ்யுமர்ஸ்  அசோசியஷன் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.
எப்படி என்றால்:
‘ ஜங்க்’  உணவு வகையாக இருந்தாலும் அவற்றிலுள்ள போஷாக்கு சத்துக்களைப் பற்றி குறிப்பிட வேண்டும். ஆனால் இந்திய சிற்றுண்டி  வகைகளான தட்டை, போளி, நேந்திரங்காய் சிப்ஸ் போன்றவற்றில் எத்தனை சதவிகிதம் கொழுப்பு இருக்கிறது, இவற்றை சாப்பிடுவதால் நம் உடலுக்கு எத்தனை கலோரி கிடைக்கிறது என்பதைப் பற்றி மூச்சு பேச்சு இல்லை.
நாம் ஆரோக்கியமான சிற்றுண்டி என நினைத்திருக்கும்  மைசூர்பா, அல்வா,அதிரசம் பெயரிடப்படாமல் கிடைக்கும் உருளைக் கிழங்கு சிப்ஸ் போன்றவைகள் எத்தனை தூரம் ஆரோக்கியமானவை என்று கண்டு பிடிக்க  நடந்த ஆய்வின் முடிவுதான் மேலே சொன்னவை. இந்த ஆய்விலிருந்துதான் காரா பூந்தி எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி நம்மை ‘கொழுக்க’ வைப்பதில் முதலிடம் வகிப்பது தெரிய வந்திருக்கிறது.
உப்பும் உரைப்புமாக இருக்கும் கா.பூந்தியில் ஒவ்வொரு 100 கிராமிலும் மொத்தக் கொழுப்பு 48.33%; இதைத் தவிர சாச்சுரேடட் கொழுப்பு 13.5%.
“காரா பூந்தி சில்லறையாகவும், மொத்தமாகவும் கிடைக்கிறது. மக்கள் அதனை கிலோ கணக்கில் வாங்குகிறார்கள். ஆனால் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று யாருக்கும் தெரிவதில்லை. ஒரு கைப்பிடி என்ற அளவில் சாப்பிடுவதால் எத்தனை சாப்பிட்டோம் என்று கணக்கு வைத்துக் கொள்வதும் கடினம்.” என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கொழுப்பு சத்துள்ள உணவுப் பட்டியலில் 42.5% கொழுப்புடன்  இரண்டாவது இடத்தைப் பிடிப்பது நம் அருமை உருளைக் கிழங்கு சிப்ஸ்! நெய்யில் செய்யப்படும் மைசூர்பா 36.3% கொழுப்புடன் மூன்றாவது இடம். ஒ! சிப்சை விட மைசூர்பா குறைந்த கொழுப்பா? என்றால் இல்லையாம்; அதில் இருக்கும் சர்க்கரை 41.3% !
சர்க்கரை நோய், அதிகமான பருமன், இருதய நோய் என்று பலவித நோய்களுக்கும் இருப்பிடமாகத் திகழும் நம் நாட்டில், மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் : என்ன சாப்பிடுகிறோம், அதில் எத்தனை சதவிகிதம் கொழுப்பு, எத்தனை கலோரி என்பது தான். அதனால் தங்கள் உடலுக்கு அவர்கள் எத்தனை நல்லது அல்லது கெடுதல் செய்து கொள்ளுகிறார்கள் என்பது தெரிய வரும்.
சுவையான தின்பண்டங்களைப் பற்றி சில கசப்பான உண்மைகள்:
காராபூந்தியில் இருக்கும் கொழுப்பு: 141.65%
இருக்க வேண்டிய அதிக பட்ச கொழுப்பின் அளவு: 20%
மைசூர்பா/ நேந்திரம் வறுவல்: நிஜத்தில் இருக்கும் சாச்சுரேடட் கொழுப்பு : 400% அதிகம்
இருக்க வேண்டிய அதிக பட்ச கொழுப்பின் அளவு: 20%
தட்டை/ உருளை வறுவல் :இருக்கும் உயர்ந்த பட்ச கொழுப்பு 6.4% / 7%
மைசூர்பா மற்றும் வீதியோரக் கடைகளில் விற்கப் படும் ஹல்வாக்களில் இருக்கும் கொழுப்பின்  அளவு 175.3%
அதைத்தவிர உயர்ந்த பட்ச சர்க்கரையின் அளவை (15%) விட 90% கூடுதல் சர்க்கரை இருக்கிறது.
எனவே சகோதர சகோதரிகளே! வெளியில்  சாப்பிடும்போது கவனம் தேவை.
‘நாக்கில் இனிக்கும் பண்டங்கள் வயிற்றுக்கு கெடுதல் என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொனார்கள்?