சீரழியும் பூங்கா நகரம்

              

 

 

ஆகஸ்ட் 2014 ஆழம் பத்திரிகையில் வந்திருக்கும்  எனது கட்டுரை

மண்டூர் மக்களுக்கு பெங்களூருவாசிகளின் மேல் தீராத கோபம். ‘உங்கள் நகரத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அங்கு சேரும் திடக்கழிவுகளை எங்கள் புழக்கடையில் கொண்டுவந்து கொட்டுவது எந்த விதத்தில் நியாயம்?’ என்று கேட்கிறார்கள். பெங்களூருவின் வெளிப்புற எல்லையில் இருக்கும் மண்டூர், தினந்தோறும் சுமார் 200 லாரி குப்பைகள்   கொட்டப்பட்டு பெங்களூரின் கழிவுத்தொட்டியாக மாறியிருக்கிறது.

 

கேள்வி கேட்பதுடன் நிற்கவில்லை மண்டூர் மக்கள். அங்கு வசிக்கும் திரு கோபால்ராவ் தலைமையில் ஒன்று சேர்ந்து தங்களுக்கு நேர்ந்திருக்கும் அநியாயத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள். கர்நாடக முதல்வரை ஒரு நாள் மண்டூர் வந்து அழுகும் குப்பைகளால் அங்கு வீசும் துர்நாற்றத்தை அனுபவிக்கும்படியும், இதன் காரணமாக பல்வேறு வியாதிகளுக்கு அவர்கள் ஆளாவதையும் நேரடியாகப் பார்த்து ஆவன செய்யும்படியும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல; வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்த மோசமான நிலைக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்ற இறுதி எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறார்கள்.

 

பூங்கா நகரம் என்றும் வயதானவர்களின் சொர்க்கம் என்றும் அழைக்கப்பட்ட பெங்களூரு, இந்தியாவின் சிலிக்கன் வாலியாக மாற்றப்பட்டதில் சந்திக்கும்  முக்கியப் பிரச்னைகளில் இந்தக் கழிவு அகற்றும் பிரச்னையும் ஒன்று. மேடு பள்ளமான தெருக்கள், அகலம் குறைந்து வரும் நடைபாதைகள், பலமுறை காலக்கெடு தாண்டியும் முடிக்கப்படாத மெட்ரோ ரயில் கட்டுமானங்கள், மின்சாரப் பற்றாக்குறை, போதிய நீர் கிடைக்காமை, வற்றிவரும் ஏரிகள், அழிந்துவரும் பசுமை, மக்கள் வாழும் சின்னச்சின்ன தெருக்களில் கூட நெரிசலான ஆமைவேக போக்குவரத்து இவையெல்லாம் பெங்களூருவின் அதிவேக, திட்டமிடாத வளர்ச்சியின் அடையாளங்கள்.

 

பெங்களூருவின் ஜனத்தொகை ஒரு கோடியைத் தாண்டிவிட்டது. கர்நாடகாவின் ஜனத்தொகையில் ஆறுபேர்களில் ஒருவர் பெங்களூருவில் இருக்கிறார்கள். 2011 மக்கள் ஜனத்தொகை கணெக்கெடுப்பின்படி கர்நாடகாவின் மொத்த ஜனத்தொகையான 6.11 கோடியில், பெங்களூரு நகரவாசிகளின் எண்ணிக்கை 96.21 லட்சங்கள். இந்தியாவின் பெருநகரங்களின் ஜனத்தொகை பெருக்கத்தில் பெங்களூரு முதலிடம் வகிக்கிறது. கர்நாடகாவின் 10 வருட ஜனத்தொகை பெருக்கம் 16 சதவிகிதம் என்றால் பெங்களூருவின் ஜனத்தொகை மட்டும் 47 சதவிகிதம் அதிகரித்துள்ளது –பத்து வருடங்களில்.  ஜனத்தொகை பெருக்கத்தில் இந்தியாவின் தலைநகர்  டெல்லி கூட 21 சதவிகித ஜனத்தொகையுடன் இரண்டாவது இடம் தான். பெங்களூரு நகரத்தில் ஒரு சதுர கிலோமீட்டரில் 4,300 பேர்களுக்கு மேல் வாழ்கிறார்கள்.

 

‘ப்ராண்ட் பெங்களூரு’ ஒருங்கிணைந்த உலகளாவிய பொருளாதார சேவைக்கு முன்னோடி நகரமாக பார்க்கப்பட்டது. ஏற்கனவே இங்கு திறமை வாய்ந்த நபர்கள் நிறைந்திருந்தனர். தொழில்நுட்பதுறையின் வளர்ச்சி நாட்டின் பல பக்கங்களிலிருந்தும் திறமைசாலிகளை பெங்களூருவிற்குள் வரவழைத்தது. இன்றைய தேதியில் சுமார் 10 லட்சம் நபர்கள் நேரடியாக தகவல் தொழில்நுட்பத் துறையிலும், அதைச் சார்ந்த துறைகளிலும் வேலை செய்கிறார்கள்.

 

இவர்களைத் தவிர ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனங்களில் வேலை செய்யும் இளம் பெண்கள் (விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அந்தக் குடும்பங்களில் இருந்து நகர வாழ்க்கைக்கு தள்ளப்படுபவர்கள்), பெருகி வரும் பல மாடிக் கட்டிடங்களில் வேலை செய்யும் கட்டிடப் பணியாளர்கள், வேலை தேடி வருபவர்கள், தங்கள் ஊர்களைவிட்டு புலம் பெயர்ந்து வருபவர்கள் என பெங்களூருவின் தொழிலாள ஜனத்தொகை பல்வேறு வகையினர்.

 

பெங்களூருவில் பங்களாக்களும், தனி வீடுகளும் பெருகி வந்தாலும் குடிசைகளுக்கும் குறைவில்லை. இரண்டாம் நிலை நகரங்கள் என்று சொல்லப்படும் அஹமதாபாத், கொச்சி, விசாகப்பட்டினம், கோயமுத்தூர் ஆகியவை அந்தந்த மாநிலங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும்  நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு மட்டுமே மொத்த மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, இரண்டாவது நிலை நகரங்கள் 26 இருந்தபோதிலும் பெங்களூருக்கு சரிசமமாக எந்த நகரமும் ஜனத்தொகை பெருக்கத்தை காட்டவில்லை. கர்நாடகாவின் இரண்டாவது பெரிய நகரமான ஹூப்ளி-தார்வாட்டின் கடந்த பத்து வருட ஜனத் தொகைப் பெருக்கம்  1.57 லட்சம் மட்டுமே.

 

கர்நாடகாவின்  முக்கியமான ஏற்றுமதி மென்பொருள். இதன் ஏற்றுமதி  பற்றிய புள்ளிவிவரங்கள் பெங்களூருவின் சரிசமநிலையற்ற வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு என்று சொல்லலாம். 2013-14 ஆண்டில் கர்நாடகாவின் தகவல் தொழில்நுட்ப பொருட்களின் ஏற்றுமதி 1.51 லட்சம் கோடி (அதாவது இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 37 சதவிகிதம்). இதில் 95 சதவிகிதம் பெங்களூருவிலிருந்து மட்டுமே. இரண்டாம் நிலை நகரங்களான மைசூரு, மங்களூரு, ஹூப்ளி-தார்வாட் பகுதியிலிருந்து ஏற்றுமதி ஆகியிருப்பது  சின்னஞ்சிறு அளவே.

 

 

பெங்களூருவை மட்டுமே இலக்காக கொண்டு பலரும் இங்கு வர ஆரம்பித்த பின்னர் நிலம், வீட்டுமனை, வீடு போன்ற அசையாச் சொத்துக்களின் விலை வானுயரத்திற்கு உயர்ந்தது. மும்பை, தில்லி நகரங்களுக்குப் பிறகு நிலம், வீடு வாங்க, சொத்து சேர்க்க பெங்களூரு என்ற நிலை உருவாயிற்று. இந்த சூழ்நிலையை சரியாக பயன்படுத்திக்கொண்ட நிலச்சுரண்டல்காரர்கள்  அரசியல் செல்வாக்குடன் மனைகளை வாங்கி விற்க ஆரம்பித்தனர்.  அடுக்குமாடிக் கட்டிடக் கலாச்சாரம் இங்கும் பரவ ஆரம்பித்தது. பசவனகுடி, சாம்ராஜ் பேட், நரசிம்ம ராஜா காலனி போன்ற பெங்களூருவின் பழைய இடங்களில் இருந்த பிரம்மாண்டமான தனி பங்களாக்கள் பலமாடிக் கட்டிடங்களாக மாறத் தொடங்கின. நான்கு சக்கர, இரண்டு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை பெருக,  தெருக்களை அகலப்படுத்தபடுவதற்காகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலங்களை கட்டவும், பல நூறுஆண்டுகளாக வளர்ந்து நிழல் கொடுத்த மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. வானிலை மாறியது. மழை குறைந்தது. வெயில் கொளுத்த ஆரம்பித்தது. காற்றின் தூய்மை குறைந்தது.

 

திரு ஏ.டி. ராமசுவாமி தலைமையில் கூட்டு சட்டமன்ற குழு ஒன்று நிலச் சுரண்டல்களை கண்டுபிடிக்கவும், முன்னாள் அதிகாரி திரு வி. பாலசுப்பிரமணியம் தலைமையில் செயல்குழு ஒன்று சுரண்டப்பட்ட நிலங்களை மீட்கவும் அமைக்கப்பட்டன. பெங்களூரிலும், அதைச்சுற்றி இருக்கும் முக்கியப் பகுதிகளில் உள்ள நிலங்களும், ஏரிக்கரைகளும் அரசியல் செல்வாக்குப் பெற்ற பெரிய தலைகளின் உதவியுடன் சூறையாடப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. 40,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 27,336 ஏக்கர் நிலம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று இந்த குழுக்கள் தகவல் தெரிவித்தன.

 

‘அழுகி நாற்றமடிக்கும் குப்பை மலைகளும், கூடிய விரைவில் தண்ணீர் பஞ்சம் வரப்போகிறது என்பதை காட்டும் குறைந்து கொண்டே வரும் நிலத்தடி நீரின் அளவும்  நமக்கு அடிக்கப்படும் எச்சரிக்கை மணிகள். இவை யாருக்குமே கேட்கவில்லையா? திடீரென வளர்ந்த பெங்களூரு நகரம் இப்போது எதிர்பாராத சரிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதைப்   பற்றி யாருமே கவலைப்படவில்லையே!’ என்று அங்கலாய்க்கிறார் திரு பாலசுப்பிரமணியம்.

 

ஆனால் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியும், மனித வள தலைமைப் பொறுப்பாளர் மற்றும் கர்நாடக தகவல் தொடர்பு தொழில்நுட்ப குழுவில் ஒருவருமான திரு மோகன் பை ‘பெங்களூரு நகரம் இந்தப் பிரச்னைகளிலிருந்து மீண்டு வரும்’ என்ற நம்பிக்கையை முன்  வைக்கிறார். ‘பெங்களூருவின் சவால் அதன் முன்னேற்றம்தான். கர்நாடகாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவிகிதமும், வரிகள் மூலம் வரும் வருமானத்தில் 65 சதவிகிதமும் பெங்களூரிலிருந்தே கிடைக்கிறது. அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகள் வேண்டுமென்றே பெங்களூருவின் உள்கட்டமைப்பில் போதிய கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டன’ என்கிறார்.

 

குருவியின் தலையில் பனங்காய் என்பதுபோல சிறிய நகரமான பெங்களூரு இந்த திடீர் அசுர வளர்ச்சியில் – சரியான உள்கட்டமைப்பு இல்லாத நிலையில் – திணறுகிறது. கர்நாடக தகவல் தொடர்பு தொழில்நுட்ப குழு சில பரிந்துரைகளை முன்வைக்கிறது.

 • பெங்களூரின் நகர வருமானம், மாநில வரிப் பணத்தில் ஒரு பங்கு, கடனுதவி இவைகளைக் கொண்டு அடுத்த 15 ஆண்டுகளில் 2,55,00 கோடி ரூபாய் பெங்களூரின் உள்கட்டமைப்பை மேம்படுத்த செலவழிக்க வேண்டும்.
 • பெங்களூரைத் தவிர்த்து கர்நாடகாவிலுள்ள புதிதாக வளர்ந்து வரும் 7 தகவல் தொழில் நுட்ப மையங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்.

 

தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தின் பேராசிரியர் திரு நரேந்தர் பணி சொல்கிறார்: ‘நகரத்தின் வரிவருமானத்தை நகரத்தின் வளர்ச்சிக்கே பயன்படுத்த வேண்டும் என்பது இயலாத காரியம். வருமானவரி, மக்களின் மற்ற நலன்களுக்காகவும் பயன்படுத்தப் பட வேண்டும். பெங்களூருவிலிருந்து வரும் அபரிமிதமான வரி, மற்ற நகரங்களின் பொருளாதார வருமானத்திறன் மேம்படுத்தப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. இதை முதலில் சரி செய்ய வேண்டும்’.

 

‘இந்தியாவின் நகரமயமாக்குதலில் சில குறிப்பிட்ட பாணிகள் தெளிவாக   காணக் கிடைக்கின்றன. கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் ஒரே ஒரு நகர வளர்ச்சியை மட்டுமே பார்க்கமுடியும். கடந்த பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் பெங்களூருவும் ஹைதராபாத்தும் அடைந்திருக்கும் வளர்ச்சி அந்த நகரங்களுக்கே பாதகமாக அமைந்திருக்கிறது. தெலுங்கானா மாநில உதயம் ஹைதராபாத்தை இந்த நிலையிலிருந்து வெளிக் கொண்டுவந்து விடும். பெங்களூருவை மையப்படுத்தி ஏற்படும் வளர்ச்சியிலிருந்து கர்நாடகா வெளிவர இன்னும் பல ஆண்டுகள் ஆகும்’ என்கிறார் நரேந்தர் பணி.

 

பெங்களூருவின் இன்னொரு பிரச்னை குற்றங்கள் பெருகி வருவது. எந்த வேலையானாலும் சரி, பெங்களூரு வந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்ற மனநிலையில் வரும் இளைஞர்கள் சிறிது காலத்தில் தாங்கள் நினைத்தபடி இங்கு வேலை கிடைப்பது சுலபமில்லை என்று புரிய சின்னச்சின்ன குற்றங்களில் ஈடுபட ஆரம்பிக்கின்றனர். இந்த சிறு குற்றங்கள் நாளடைவில் பெரிய குற்றங்களாக மாறுகின்றன. வீட்டில் தனியே இருக்கும் பெண்கள், முதியவர்கள் கொல்லப்படுவது, ஏடிஎம் கொள்ளைகள், பெருகி வரும் பாலியல் குற்றங்கள் என்று பெங்களூரு இன்று பாதுகாப்பு இல்லாத நகரமாகவும் மாறி வருகிறது.

 

பெங்களூரு பற்றிய சில புள்ளி விவரங்கள்: (2011 மக்கள் தொகைக் கணெக்கெடுப்பின்படி)

 • பெங்களூரு நகர கோட்டத்தின் ஜனத்தொகை: 9,621,551 (இப்போது ஒரு கோடியைத் தாண்டிவிட்டது).
 • பத்து வருட ஜனத்தொகை அதிகரிப்பு: 47.18 சதவிகிதம். (2001 லிருந்து 2011 வரை)
 • மக்கள் நெருக்கம்: ஒரு சதுர கி. மீ.க்கு 4,381 நபர்கள். (2001 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 2,985 ஆக இருந்தது.)
 • குழந்தைகள்: 1000 ஆண் குழந்தைகளுக்கு 944 பெண் குழந்தைகள். இந்த எண்ணிக்கை 2001 இல் 943 ஆக இருந்தது.
 • படித்தவர்களின் எண்ணிக்கை: 87.67 சதவிகிதம். பெண் படிப்பாளிகள் 96 சதவிகிதம்

 

‘ஒரு காலத்தில் இந்த நகரத்தில் நிலவும் பருவ நிலைக்காகவே பெயர் பெற்ற பெங்களூரு, இன்று அளவிற்கு அதிகமான போக்குவரத்தாலும், அவற்றால் ஏற்படும் புகை, தூசி முதலியவைகளாலும் பருவநிலை முற்றிலும் மாறிய நிலையில் மூச்சு விடமுடியாமல் திணறுகிறது’ என்கிறார் ஞானபீட பரிசு பெற்ற எழுத்தாளர் யு.ஆர். அனந்த மூர்த்தி. பெங்களூர் என்ற பெயரை பெங்களூரு என்று மாற்ற வேண்டும் என்ற யோசனையை முன் வைத்தவர் இவரே.

 

1990 வரை சிறிய நகரமாக குளுகுளு வானிலையுடன், இருபுறமும் மரங்கள் நிறைந்த தெருக்களும், வண்ண வண்ண ரோஜாப் பூக்கள் பூத்துக் குலுங்கும் வீடுகளும், நீர் நிறைந்த ஏரிகளும், பெரிய பெரிய பங்களாக்களும், அமைதியும் சாந்தமும் நிலவும் இடமாக இருந்த பெங்களூருவின் பழைய தலைமுறைகள் தங்கள் கண் முன்னாலேயே இந்த நகரம் அழிவதை பார்த்து நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லையா என்று குமுறுகிறார்கள். முன்னேற்றம் வேண்டும் அதற்காக ஒரு நகரம் தனது பழம் பெருமைகளை, எழிலை இழக்கலாமா என்பது இவர்களின் கேள்வி.

 

பெங்களூருவை எப்படிக் காப்பாற்றுவது என்ற விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் மண்டூர் மக்களுக்கு பெங்களூருவாசிகளின் பதில் என்ன என்பதும் விவாதத்திற்குரியது தான்.

ஸோரா சேகல் (Zohra Sehgal)

Zohra Sehgal: A Life Less Ordinary

 

திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களின் சினேகிதி ஆகஸ்ட் 2014 இதழில் வெளியான எனது கட்டுரை

 

கனவுத் தொழிற்சாலை எனப்படும் திரை வானில் நீண்ட நாட்கள் மின்னுவது என்பது சுலபமான விஷயம் அல்ல. அதுவும் நடிகைகளுக்கு இளமை இருக்கும் வரை மட்டுமே மதிப்பும், பெயரும், புகழும், கூடவே கதாநாயகி அந்தஸ்த்தும் கிடைக்கும். சற்று வயதாகிவிட்டால் அக்கா, அண்ணி பாத்திரம் ஏற்க வேண்டியதுதான்.  அதையும் ஒரு சிலர் மட்டுமே பெருந்தன்மையுடன் ஏற்று தங்கள் வாழ்க்கையை முன் நடத்திச் செல்லுகிறார்கள். தங்கள் வயதுக்கேற்ற பாத்திரம் ஏற்று திரைத் துறையிலும் எப்போதும் மின்னுபவர்கள் சிலர் நிச்சயம் இருப்பார்கள். அவர்களில் மறக்க முடியாதவர் திருமதி ஸோரா சேகல். சுமார் 80 ஆண்டுகள் கலைச்சேவையில் இருந்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர்.

 

கடந்த ஜூலை மாதம் தனது 102வது வயதில் இயற்கை எய்திய முதுபெரும் நாடகக் கலைஞர் ஸோரா சேகலின் முழு பெயர் சாஹிப்சதி ஸோரா பேகம் மும்தாஜ்-உல்லாகான். உத்திரப்பிரதேசத்தில் சுன்னி முஸ்லிம் பதான் குடும்பத்தில் 1912 ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி பிறந்தவர் திருமதி ஸோரா. இவரது பெற்றோருக்கு பிறந்த 7 குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்தவர் இவர்.

 

சிறு வயதிலேயே சற்று  வித்தியாசமாகத்தான் வளர்ந்து வந்தார் ஸோரா. தங்கள் குல வழக்கங்களை விடாப்பிடியாக கடைபிடிக்கும் குடும்பத்தில் பிறந்த போதிலும், இவரது வயதை ஒத்த மற்ற பெண் குழந்தைகளைப் போல பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடாமல் ஆண் பிள்ளைகளைப் போல மரம் ஏறுதல், வீட்டிற்கு வெளியே தெருவில் விளையாடுதல் இவருக்கு பிடித்தமான செயல்கள்.

 

இளம் வயதிலேயே தாயை இழந்த ஸோராவுக்கு பயணம் செய்வது மிகவும் பிடித்த ஒன்று. பலவிதமான கலாசாரங்களையும், பழக்கவழக்கங்களையும் அறியும் ஆசையும் சேர்ந்து கொள்ள, தனது மாமாவுடன், இந்தியா முழுக்க பிரயாணம் செய்தார். மேற்கு ஆசியா, ஐரோப்பா என்று பல இடங்களுக்கு அவருடன் சென்று வந்தார். தனது தாயின் விருப்பப்படி லாகூரிலுள்ள  க்வீன் மேரி கல்லூரியில் படித்தார்.

 

சிறுவயதில் இவர் பார்த்த நடனக் கலைஞர் உதயஷங்கர் அவர்களின் நடன அசைவுகள், நடிப்புத் திறமை ஆகியவை இவரது வாழ்க்கையின் முக்கியத் திருப்பமாக அமைந்தது. இளங்கலை முடித்தபின் உதயஷங்கரின் நடனக் குழுவில் சேர்ந்து நிறைய வெளிநாடுகளில் நடன நிகழ்ச்சிகளை அளித்தார். அந்த நடன குழுவிலேயே ஆசிரியை ஆகவும் சேர்ந்தார்.

 

அங்குதான் காமேஷ்வர் சேகலை சந்தித்தார். காமேஷ்வர் சேகல் இளம் விஞ்ஞானி; ஓவியராகவும் நடனக் கலைஞர் ஆகவும் இருந்தார். தன்னைவிட 8 வருடங்கள் இளையவரான சேகலை காதலித்து கைப்பிடித்தார் ஸோரா. முதலில் ஒப்புக்கொள்ள மறுத்த இரு குடும்பத்தினரும் பிறகு இவர்களை ஏற்றுக் கொண்டனர். சேகல் தம்பதியினருக்கு இரு குழந்தைகள்.

 

திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து இருவரும் உதயஷங்கர் குழுவில் ஆடி வந்தனர். இந்தக் குழு கலைக்கப்பட்டவுடன் இருவரும் லாகூர் வந்தனர். இந்தியா –பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இருவரும் பம்பாய் வந்தனர். திருமதி சேகல் பிரிதிவிராஜ் கபூரின் நாடகக் குழுவில் நடிக்கத் துவங்கினார். இந்தக் குழுவில் சுமார் 14 வருடங்கள் நடித்தார். முதன் முதலில் 1946 ஆண்டு தர்தி கே லால் என்ற வங்காளத்தில் நிலவிய பஞ்சத்தைப் பற்றிய படத்தில் தோன்றினார். நடனக் கலைஞராக இருந்த போதிலும், நடன அமைப்பாளராகவும் சில திரைப்படங்களில் பணியாற்றினார்.

 

நாடக ஸ்காலர்ஷிப் மூலம் 1962 இல் லண்டன் சென்ற இவர் அங்கு ‘தி ஜ்வல் இன் தி கிரௌன்’, ‘தந்தூரி நைட்ஸ்’ முதலிய தொலைக்காட்சி தொடர்களில்  நடித்தார்.

 

2012 ஆண்டு இவரது நூறாவது பிறந்த நாளன்று இவரது மகள் திருமதி கிரண் (பிரபல ஒடிசி நடனக் கலைஞர் இவர்) இவரது வாழ்க்கை வரலாற்றை Zohra Sehgal: Fatty என்ற பெயரில் எழுதி வெளியிட்டார்.

 

தான் எழுதிய புத்தகத்தைப் பற்றி திருமதி கிரண் சேகல் கூறுகிறார்: ‘என் அம்மாவின் வாழ்க்கை பயணத்தைப் பற்றிய இந்தப் புத்தகத்தில் அவர் ஏறிய உயரங்களும், இறங்கிய பள்ளங்களும் என எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறேன். எனக்கும் அம்மாவிற்கும் இடையே இருந்த உறவைப் பற்றி எழுதியிருக்கிறேன். அம்மாவிற்கு தனது எடை பற்றிய கவலை அதிகம். நானும் என் பெண்களும் அவரை வேடிக்கையாக fatty என்றே கூப்பிடுவோம். அதனாலேயே புத்தகத்திற்கு இந்தப் பெயர் வைத்தேன். ஆனால் என் அம்மாவை குறையில்லாத பெண்மணியாக நான் இந்தப் புத்தகத்தில் சித்தரிக்கவில்லை. சிறு வயதில் புரியாத சில விஷயங்கள் வளர்ந்ததும் புரிய ஆரம்பித்தன. இதன் காரணமாகவே அம்மியை (தன் அம்மாவை இவர் அப்படித்தான் குறிப்பிடுகிறார்) சரியாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அதனாலேயே என் பெற்றோரின் சண்டைகள் பற்றியும், சங்கடமான விஷயங்கள் பற்றியும் எழுத முடிந்தது’.

 

திருமதி சேகலின் மறைவுக்குப் பிறகு கிரண் கூறினார்: ‘நான் இப்போது ஒரு வித்தியாசமான மனநிலையில் இருக்கிறேன். அம்மி எப்போதும் உயிர்த் துடிப்புடன் இருப்பார். அவர்தான் எங்களின் ஆதர்ஷம். எப்படியும் அம்மி எங்களை விட்டுப் பிரிந்துவிடுவார் என்பது தெரிந்ததுதான். ஆனாலும் அது நிகழ்ந்தவுடன் மனம் கனத்துவிட்டது’.

 

திருமதி சேகலின் இத்தனை வருட வாழ்க்கையின் ரகசியம் என்ன? கட்டுப்பாடான வாழ்க்கைமுறைகள், எதையும் நகைச்சுவையுடன் பார்ப்பது இரண்டும் தான். சமீபத்தில் காது கேட்கும் கருவி ஒன்றிற்கு விளம்பரம் கொடுத்த போது இவர் வேடிக்கையாகச் சொன்னது: ‘இந்த வயதில் இதற்குத் தான் நான் விளம்பரம் செய்யமுடியும். என்னுடைய கோணல் வாயை வைத்துக் கொண்டு லிப்ஸ்டிக் விளம்பரம் செய்ய முடியுமா? இந்தக் கருவியை அணிந்து கொண்டால் நடிக்கும்போது திரைக்குப் பின்னாலிருந்து எனக்கு அவர்கள் வசனத்தை எடுத்துக் கொடுப்பது நன்றாகக் காதில் விழும்…..!’ சிரிக்கும்போது இவர் கண்களில் ஒளிரும் குறும்பு எல்லோரையும் கவரும்.

 

வாழ்க்கையின் மீது தீராத பற்றும், செய்யும் தொழிலில் நேர்மையும், அசாத்தியமான கடின உழைப்பும் தான் இவரை பாலிவுட்டின் மாபெரும் மூதாட்டியாக இத்தனை வருடங்கள் நிலைத்திருக்க வைத்திருந்தது.

 

மின்தமிழ் மேடைத் தொகுப்பிலும் இந்தக் கட்டுரை இடம் பெற்றிருக்கிறது.

இணைப்பு:http://mymintamil.blogspot.com/2014/08/blog-post_8.html

 

 

 

 

`நான் ஒரு பெண்; எனவே, நான் பாதுகாப்பாக இல்லை!’

image-12

 

 

ஜூலை 2014 ஆழம் இதழில் வெளியானா எனது கட்டுரை

ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களிலேயே சற்று  அச்சுறுத்தப்பட்டே வாழப் பழகிக்கொள்கிறாள்’

-இவா வைஸ்மன், தி கார்டியன் இதழ்

மேற்கண்ட வரிகளைப் படிக்கும்போது இந்த உலகத்தில் பெண்ணாகப் பிறப்பதே அபாயகரமானதோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு பெண்ணும் எப்போது என்ன நேருமோ என்ற பயத்திலேயே வாழ்கிறாளா? நிர்பயாவுக்கு நேர்ந்த கொடூரத்தைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் மக்கள் கொதித்து எழுந்தனர். பெண்கள் மீதான வன்முறைகளுக்கு ஒரு கட்டாய, நிரந்தரத் தீர்வு காணவேண்டுமென்று அரசாங்கத்தை வற்புறுத்தினர். ஆனால் நடப்பது என்ன? இன்னும் இன்னும் பல நிர்பயாக்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். சமீபத்திய உதாரணம், உத்தரப் பிரதேசத்தில் இரண்டு இளம் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, கொல்லப்பட்டு, மரத்தில் தொங்கவிடப்பட்ட சம்பவம்.

பாலியல் வன்புணர்ச்சி மட்டுமல்ல; அடி, உதை போன்ற வன்முறைகளும் பல பெண்களின் தினசரி வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது. உடலால் மட்டுமல்ல, மனரீதியிலும் துன்புறுத்தப்படுகிறார்கள். வீதியில் மட்டுமல்ல, இணையத்திலும்கூட ஒரு பெண்ணால் அச்சமின்றி உலாவமுடிவதில்லை. பலவாறான பாலியல் சீண்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் அவள் ஆளாகவேண்டியிருக்கிறது.

‘ஒவ்வொரு பெண்ணும் அந்நியர்களின் அடக்குமுறைக்கு ஆளாகிறாள்; ஒவ்வொரு பெண்ணும் ‘வேசி’, ‘வெட்கங்கெட்ட நாயே’, ‘தூய்மையற்றவளே’ என்று அழைக்கப்படுகிறாள்; பயமுறுத்தப்படுகிறாள்;  ‘உஸ்….உஸ்…’ என்று அழைக்கப்படுகிறாள்; அவளது காதுகளில் கீழ்த்தரமான வார்த்தைகள் கிசுகிசுக்கப்படுகின்றன; தெருவில் நடக்கும்போது, பேருந்துப் பயணத்தின் போது ஒரு ஆணால் வேண்டுமென்றே அழுத்தப்படுகிறாள், இடிக்கப்படுகிறாள். தேவையில்லாமல் தொடப்படுகிறாள்’ என்கிறார் தி கார்டியன் இதழில் பத்தி எழுதும் இவா வைஸ்மன்.

எத்தகைய பெண்கள் பலியாகிறார்கள்?

படிக்காத, வருமானம் இல்லாத, கணவனை அண்டி வாழும் பெண்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்தியாவில் அதிகம் படித்த, நிறைய சம்பாதிக்கும் பெண்களே அதிக வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்ற திடுக்கிடும் தகவலை ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வை மேற்கொண்ட நியூ யார்க் பல்கலைக்கழக மாணவி அபிகைல் வீட்ஸ்மன் கூறுகிறார்: ‘அதிகச் சம்பாத்தியம், அதிக படிப்பு பெண்களுக்கு உதவுவதில்லை. மாறாக கணவனின் வெறுப்பையும் கூடவே அடி உதையையும் பெற்றுத் தருகிறது’. இது குறித்து ஏற்கெனவே இரண்டு கருத்துகள் நிலவுகின்றன.

 • முதலாவது: நிறைய சம்பாதிக்கும் பெண் குறைவான வன்முறையை எதிர்கொள்வாள். ஏனெனில் தான் தவறாக நடந்து கொண்டால் எங்கே தன் மனைவிக்குப் பிடிக்காமல் போய்விடுமோ, அவள் தன்னை விட்டுவிட்டுப் போய்விடுவாளோ, அவள் சொத்துக்கள் தனக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்று ஆண் நினைப்பதால் அவளைப் பகைத்துக் கொள்ள விரும்பமாட்டான்.
 • இன்னொரு கருத்து: தன்னைவிட தன் மனைவி அதிகம் படித்திருப்பது, சம்பாதிப்பது அவள் முன் தன்னை சிறுமைப்படுத்தும்; அவளை தன் பிடியில் வைத்துக் கொள்வது கடினம். அதனால் வன்முறையால் மட்டுமே அவளை அடக்கமுடியும் என்று ஒரு ஆண் நினைக்கிறான்.

அபிகைல் செய்த ஆய்வு இந்த இரண்டாவது கருத்தை உறுதி செய்கிறது.

கணவனைவிட அதிகம் படித்த மனைவி, மற்ற மனைவியரைவிட 1.4 மடங்கு வன்முறையை அனுபவிக்கிறாள். பெண் மட்டுமே சம்பாதிக்கும் குடும்பத்தில் 2.44 மடங்கு வன்முறையை அனுபவிக்கிறாள். உலகளாவிய பெண்கள் முன்னேற்றம் என்று சொல்லும்போது பெண் கல்வி, பெண்ணின் பொருளாதார சுதந்தரம் இவை இரண்டும் முக்கிய இடம் பெறுகின்றன.  ஆனால் இந்தத் தகுதிகளே அவளை வன்முறைக்கு இரையாக்குகிறது என்பதை  இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

திருமணம் செய்துகொள்ள உரிமையில்லை

தங்கள் திருமணத்தைப் பற்றி கருத்து சொல்ல இந்தியாவில் பல பெண்களுக்கு உரிமை இல்லை என்று சமீபத்திய தி ஹிந்து ஆய்வு சொல்கிறது. அந்த ஆய்வின் சாராம்சம் இது:

 • இந்தியாவில் 40% பெண்களுக்கு அவர்களது விவாகத்தைப் பற்றி முன்கூட்டிச் சொல்லப்படுவதில்லை.
 • 18% பெண்கள் தான் கணவரைப் பற்றி முன்பே சற்று அறிந்திருந்தார்கள். இது பல காலமாக மாறாத துன்ப நிலை.
 • 80% பெண்கள், குடும்பத்தாரின் முன் சம்மதமின்றி மருத்துவ உதவியை நாட இயலாது.
 • 60% பெண்கள் தலையையும் மூடிக்கொள்கிறார்கள்.
 • சராசரி வரதட்சணை முப்பதாயிரம் ரூபாய்.
 • குழந்தை (18 வயதுக்குள்) திருமணம்  60 சதவிகிதத்திலிருந்து 48 ஆகக் குறைந்துள்ளது. மகப்பேறுகூட குறைந்து வருகிறது.
 • உறவுகளில் திருமணம் செய்வது ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் தொடர்ந்து நடைபெறுகிறது.
 • சொத்து சுதந்தரம் 10 சதவிகிதம்கூட இல்லை.
 • 80 சதவிகிதப் பெண்களுக்கு சொத்தில் சட்டப்படி பங்கில்லை.
 • 50 சதவிகிதப் பெண்கள் அனுமதி இல்லாமல் வெளியில் சென்றால், அடி வாங்குகிறார்கள்!

உலகெங்கும் இதே நிலை

இந்த வன்முறைகள் இந்தியாவில் மட்டுமல்ல; உலகெங்கிலும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. சூடான் நாட்டில் ஒரு பெண் கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் குழந்தை பெற்றுக்கொள்ளும்படி நிர்பந்திக்கப்பட்டிருக்கிறாள். குழந்தை பிறந்தவுடன் அப்படியே கிடந்து சாகவேண்டும் என்பது தண்டனை. காரணம் அவள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவள். பாகிஸ்தானில் குடும்பத்தாரின் அனுமதியின்றி காதலித்து கருவுற்ற ஒரு பெண்ணை லாகூர் நீதிமன்றம் எதிரில் அடித்தே கொன்றிருக்கிறார்கள். அவளது மரணத்துக்குப் பிறகு தெரிந்த இன்னொரு விஷயம். அவளை மணப்பதற்காக அவள் கணவன் தனது முதல் மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கிறான். சிரியா, தெற்கு சூடான், காங்கோ, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு போன்ற நாடுகளில் கூட்டம் கூட்டமாகப் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்படுகிறார்கள்.

போர்க்கால வன்முறைகள்

‘போராட்டங்கள் நடக்கும் இடத்தில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பது எப்படி? போராட்டங்கள் நாட்டின் வளங்களைக் காக்க அல்லது வறுமையை ஒழிக்க என்று எந்த வகையில் இருந்தாலும் பாலியல் வன்முறைகள் தினசரி நடைமுறையாகிவிட்டது எங்கள் நாட்டில்.  போராட்டங்களே இல்லாமல் செய்வது ஒன்றே இத்தகைய வன்முறைகளைக் கட்டுப்படுத்த ஒரேவழி’  என்கிறார் காங்கோ நாட்டைச் சேர்ந்த தெரசா மெமா மாபென்சி.

இவர் அந்த நாட்டில் புகாவு நகரில் நீதி மற்றும் அமைதி ஆணையத்தில் வேலை செய்கிறார். தினமும் ஒரு போராட்டம் நடக்கும் தனது நாட்டைப் பற்றிக் கூறுகிறார் இவர். ‘பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையிலிருந்து வயதான பெண்கள் வரை வன்புணர்ச்சிக்கு ஆளானவர்களை நான் சந்திக்கிறேன். எனது நாடான காங்கோ குடியரசில் நாங்கள் தினமும் அனுபவித்துவரும் பாலியல் வன்முறைகள் மனிதாபிமானமற்றவை என்பதுடன் எங்களுக்கு நீதியும் மறுக்கப்படுகிறது. எங்களை அவமானப்படுத்தியவர்கள், வன்முறைக்கு ஆளாக்கியவர்கள் எங்களின் முன்னிலையிலேயே சுதந்தரமாக உலா வருகிறார்கள். புரட்சியாளர் என்ற போர்வையில் குற்றம் இழைத்தவர்கள் படைவீரர்களாக நியமனம் பெறுகிறார்கள். தன்னைக் கற்பழித்தவனை ஒரு காவல்துறை அதிகாரியாக, ஒரு பாதுகாவலனாக ஒரு பெண் பார்க்க நேரும் கொடுமையை என்ன சொல்ல?’

அவர் தொடர்கிறார். ‘பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள் வாழ்நாள் முழுவதும் அதன் கொடுமையை அனுபவிக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல; அடுத்த தலைமுறையும் சேர்ந்து அனுபவிக்கிறது. இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் களங்கப்பட்டவர்களாக, புறக்கணிக்கப்பட்டவர்களாக நடத்தப்பட்டு, கல்வியும் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இந்தக் குழந்தைகளை அடையாளம் காண்பது கடினமான காரியம் அல்ல. பல பெண்கள் தங்கள் உறவினர்களின் கண்ணெதிரிலேயே வன்புணர்ச்சி செய்யப்படுகிறார்கள். இவர்களுக்குக் குழந்தை பிறக்கும்போது ‘இவன் வயிற்றில் உருவான அன்று என் மகனை, தந்தையை, பக்கத்து வீட்டுக்காரனை இவன் அப்பா கொன்றான்’ என்ற நினைவு அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு வருவதை தவிர்க்கமுடியாது. இந்தக் களங்கத்தைப் போக்க சர்வதேச உதவி தேவை. வன்புணர்ச்சிமூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு கல்வியும் இன்னபிற உதவிகளும் தேவை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீடித்த மருத்துவ உதவியும், உடல்நலக் கண்காணிப்பும் தேவை’.

கல்லூரி வளாகங்களும் தப்பவில்லை

இந்த வன்முறைக்கு கல்லூரிகள் கூட விலக்கு அல்ல. ஆக்ஸ்ஃபோர்ட், கேம்ப்ரிட்ஜ் போன்ற புகழ் பெற்ற கல்லூரி வளாகங்களிலும் கூட பாலியல் குற்றங்கள் நடந்து வருகின்றன. இக்கொடுமைக்கு எதிரான மாணவர் போராட்டம் ‘வெள்ளை ரிப்பன் போராட்டம்’ என்ற பெயரில் நடந்துவருகிறது. இந்தப் போராட்டத்துக்கான பிரசாரம் அங்கு படிக்கும் பெண்கள் குழுவினரால் நடத்தப்படுகிறது. இதில் பங்குகொள்ளும் மாணவர்கள் பரிட்சை எழுதும்போது தங்கள் மேலங்கியில் வெள்ளை ரிப்பனை அணிந்துகொண்டு வருகின்றனர்.

‘ரிப்பன் அணிவது ஒரு சிறு செயல் தான். ஆனால் அதன் எதிரொலி சக்தி வாய்ந்த செய்தியை உலகுக்குத் தெரிவிக்கும். நாங்கள் அணியும் மேலங்கி ஓர் ஆடம்பரமான குறியீடு.  இறுதியாண்டில் படிப்பவர்கள் முதல் ஆண்டில் முதல் தரவரிசையில் இடம் பெற்றிருந்தால் ‘ஸ்காலர் கவுன்’ அணிவார்கள். இரண்டாம் தரவரிசை அதற்குக் கீழ் இருப்பவர்கள் சாதாரண கோடுகள் போட்ட மேலங்கி அணிவார்கள். மாணவர்கள் தங்களது தகுதிக்கு ஏற்ப சிவப்பு, பிங்க், வெள்ளை கார்னேஷன் மலர்களை அணிவார்கள். எந்தவகை மேலங்கி அணிந்தாலும் இந்த வெள்ளை ரிப்பன் அணிவது பாலியல் வன்முறை என்ற தொற்றுநோய்க்கு எதிரான எங்கள் குரலை, எழுச்சியை, எதிர்ப்பை உலகுக்குச் சொல்லும். இப்படி மேலங்கி அணிவது இந்த பல்கலைக்கழகத்தின் தொன்மையான, விசித்திரமான கடந்த காலத்தையும், அதில் செருகப்பட்டிருக்கும் வெள்ளை ரிப்பன் இப்போது நடக்கும் உண்மையான, ஒப்புக்கொள்ள முடியாத நிகழ்வுகளையும் குறிக்கும்’ என்கிறார் அந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு மாணவி.

அமெரிக்காவில் டார்ட்மத் காலேஜில் வன்முறைக்கு ஆளான ஒரு மாணவியின் அறைகூவல் 50,000 தன்னார்வலர்களை ஒன்றுகூட்டியது. அப்போது வெளியே வந்த விஷயம்: அந்த காலேஜில் மாணவர் தளம் ஒன்றில் ‘வன்முறை கையேடு’ இருக்கிறது. அல்ட்ரா வயலெட் என்ற பெண்ணிய குழு விண்ணப்பம் ஒன்றை காலேஜுக்கு ‘குற்றம் புரிந்தவனை வெளியில் அனுப்பு’  என்ற கோரிக்கையுடன் கல்லூரி நிர்வாகத்துக்கு அனுப்பி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ‘வன்முறையும், பாலின தாக்குதல்களும் அந்த டார்ட்மத் காலேஜில் பலப்பல ஆண்டுகளாக இருக்கிறது. ‘தாங்கொண்ணா நிலைக்கு வந்துவிட்டோம், இணையத்தளத்தில் வந்து எங்கள் உரிமைக்குப் போராடுவோம்’ என்கிறார்கள், இந்தக் கல்லூரி மாணவிகள்.

சமூகத்தின் நிலை என்ன?

இந்த வன்முறைகள் யாரால் நடத்தப்படுகின்றன? இவை எந்தவித ஆதாரமுமில்லாமல் நடுவானத்தில் நடப்பவை அல்ல என்கிறார் இவா. ஆண்களின் நலத்துக்குக் குரல் கொடுப்பவர்கள், பெண்ணியம் என்ற சொல்லை எதிரியாக நினைப்பவர்கள், பெண்களைக் கவரும் திறமையுள்ள ஆண்கள், கொடுமைப்படுத்தப்பட்ட ஆண்கள் இப்படிப் பலவிதமானவர்கள் பெண்கள்மீது வன்முறையை ஏவிவிடுகிறார்கள். இத்தகைய குழுமங்களில் மிகவும் வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் ஒரு குழு, Reddit’s Red Pill. இதில் சுமார் 53,000 அங்கத்தினர்கள் இருக்கின்றனர். இவர்கள் எல்லோருமே பெண் என்பவள் போகப்பொருள், வீட்டில் சமைப்பவள் என்று நினைப்பவர்கள். ‘பெண்கள் அமைப்புகள் வாழ்க்கை வட்டத்தை உடைப்பவை; எங்கள் மனிதத்தன்மையையும் பாதிப்பவை’ என்று சொல்பவர்கள்.

சென்ற மாதம் கலிபோர்னியா, இஸ்லா விஸ்டாவில் நடந்த படுகொலைகள் ஒரு விஷயத்தை உறுதிப்படுத்துகின்றன: பெண் வெறுப்பாளர்கள் கொலை செய்கிறார்கள். இந்தக் கொலைகளை செய்தவர் ஆண்கள் உரிமை போராட்டக்குழுவினருடன் நேரடித் தொடர்பில் இருந்தவர். தனது காணொளிகளை இணையத்தளத்தில் போடும்போது ‘என்னை ஒதுக்கிய வேசியை வெட்டிக் கொலை செய்வேன்’ என்று சூளுரைத்திருக்கிறான் ஒருவன். இந்த நிகழ்ச்சி தொடர்பாக ட்விட்டரில் சில ஆண்கள் ‘துப்பாக்கியைக் குறை சொல்லவேண்டாம். பெண்களைக் குறைசொல்லுங்கள்’, ‘பெண்களே! இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு உங்கள் செயல்களை நிறுத்துங்கள்’ என்று ‘ட்வீட்’ செய்திருக்கிறார்கள். கொலையாளியின் வாக்குமூலமும் வன்முறையும், வெறுப்பும் நிறைந்ததாகவே இருக்கிறது.

‘இதைப்போல இணையத்தில் பெண்களை பரிகசிப்பவர்கள். ரயில்களில் பெண்ணைத் தொட்டுத் தடவுபவர்கள், பெண்களைக் கொல்லுபவர்கள் எல்லோரும் பெண்கள் மீதான வன்முறையை நியாயப்படுத்தும், பெருமைப்படுத்தும் கலாசாரங்களால் உருவானவர்கள். ஆண் என்பவன் உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவன். பெண்கள் அவனுக்குக் கடமைப்பட்டவர்கள். இந்தப் பின்னணியில் வாழும் பெண் இவற்றை தடுத்து நிறுத்தக் கற்கிறாள். வாழ்வின் ஆரம்ப நிலையிலேயே அச்சுறுத்தல்களுடன் வாழப் பழகுகிறாள். இனிமேலும் நம்மால் இந்த மின்னஞ்சல்களை, பயமுறுத்தல்களை, கருத்துக்களை ஒதுக்கித் தள்ளமுடியுமா? இனிமேலாவது இவற்றைப் பார்த்துச் சிரிப்பதை நிறுத்துவோமா?’ என்று கேட்கிறார் இவா.

ஒரு முயற்சி

போராட்டங்கள்/போர்கள் நடக்கும் நாடுகளில் பாலியல் வன்முறைக்கு முடிவு கட்டும் முயற்சியில் முதல்படியாக லண்டனில் சர்வதேச உச்சி மாநாடு கடந்த மாதம் 10&13 தேதிகளில் நடந்து முடிந்தது. இந்த மாநாட்டுக்கு பிரிட்டனின் வெளியுறவுத் துறை செயலர் வில்லியம் ஹாக், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பின் சிறப்புத் தூதர் ஏஞ்சலினா ஜோலி இருவரும் தலைமை தாங்கினர்.

இந்த உச்சி மாநாட்டின் குறிக்கோள்கள்:

 • குற்றம் செய்துவிட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்கிற மனப்பான்மையை வலுவான உள்நாட்டு சட்டங்கள் மூலம் உடைத்துத் தள்ளுவது.
 • உலகம் முழுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகளை நடைமுறைக்கு ஏற்றவகையில் குறைப்பது. பாலியல் கொடுமைகளின் கொடூரத்தை உணர்ந்து அதைத் தவிர்க்குமாறும், மக்களைக் காப்பாற்றுவதை அவர்கள் கடமையாக மேற்கொள்ளுமாறும் போர்வீரர்களுக்கும், அமைதிப்படையினருக்கும் அறைகூவல் விடுப்பது.
 • பாலியல் கொடுமைக்கு ஆளானவர்களுக்குப் போதுமான ஆதரவு கொடுப்பது. இவர்களுக்குக் குரல் கொடுப்பவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது.
 • இந்தக் குற்றங்களைப் பார்க்கும் மக்களின் மனநிலையை மாற்ற முயற்சி செய்வது. போர்க்காலங்களில் இந்த மாதிரியான குற்றங்கள் சகஜம் என்ற மனநிலை மாறவேண்டும். ஆண்களும் பெண்களும் அரசுகளும், மதத் தலைவர்களும் இந்த வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து தங்களால் முடிந்த அளவுக்கு இக்குற்றங்கள் மேலும் வளராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பின் தலைவி (Phumzile Mlambo-Ngcuka) இந்த மாநாட்டில் பாதிக்கப்பட்ட பெண்கள் நஷ்ட ஈடு பெறவேண்டும் என்பதற்கான புதிய சட்டதிட்டங்களை முன்வைத்தார்.

‘போர்கள் பெண்களை பலவிதங்களிலும் பாதிக்கிறது. உடல், உள்ளம், பொருளாதாரம் என்று பல தளங்களில் பெண்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள். போர் முடிந்தவுடன் அவர்களுக்கு எந்தவிதமான இழப்பீடும் கிடைப்பதில்லை. உடலளவிலும், மனதளவிலும் நொறுங்கிப் போகும் இவர்கள், தங்கள் நிலை பற்றிய தகவல் தெரிந்தால் குடும்பத்தாரால் ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்கிற பயத்தால் எந்தவிதமான நஷ்ட ஈட்டையும் பெறத் தயாராகயில்லை. இவர்கள் நிலை பற்றிய மனிதாபிமானமற்ற, பொறுப்பில்லாத அதிகாரிகளாலும், ஏமாற்றும் ஆதரவு மையங்களாலும் நஷ்ட ஈடு இவர்களுக்குக் கிடைப்பதில்லை. கொலையாளிகள் ஆதரவு பெறுகிறார்கள். ஆனால் இவர்களால் வாழ்வைத் தொலைத்தவர்கள் கைவிடப்படுகிறார்கள். குற்றம் இழைத்தவர்கள் சிறைக்குப் போவதால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எந்த லாபமும் இல்லை. இவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். வேலை வாய்ப்புகள் கிடைக்கவேண்டும். பொருளாதாரச் சுதந்தரம் இருந்தால் தங்களுக்கு துரோகமிழைத்த கணவர்களை விட்டுவிட்டு வெளியே வந்து, குழந்தைகளைப் படிக்க வைப்பார்கள். இந்தப் பெண்களுக்கு பொருளாதார உதவியும், மனநல உதவியுடன், சமூகம் சார்ந்த உதவியும் தேவை’ என்கிறார் இவர்.

நம்மால் பாலியல் வன்முறைக்கு முடிவு கட்டமுடிந்தால்; கடந்த காலத்தில் ஏற்பட்ட புண்ணுக்கு மருந்து போட முடிந்தால்; நீதியையும், அமைதியையும்  இணைக்க முடிந்தால் நம்பிக்கையுடன் கூடிய ஒரு எதிர்காலத்தை பெண்கள் அமைத்துக் கொள்ளலாம். நடக்குமா?
 

இந்த வார வல்லமையாளர்!

வல்லமை இதழில் வாரம்தோறும் ஒரு சாதனையாளரை ‘வல்லமையாளாராக’த் தேர்ந்தெடுப்பார்கள். இந்த வாரம் எனது இனிய, இணைய நட்பு காமாக்ஷிமா ‘வல்லமையாளர்’ ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரைப் பற்றி வல்லமை இதழில் வந்ததை இங்கு பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமிதம் கொள்ளுகிறேன்.

ஆகஸ்ட் 4, 2014

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு திருமதி காமாட்சி மகாலிங்கம் அவர்கள்

kamatchi

இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி காமாட்சி மகாலிங்கம் அவர்களுக்கு அவரது வலைப்பூவைத் தொடங்கிய ஆண்டுக்கு ஓராண்டு முன்பு வரை கணினியைப் பயன் படுத்தத் தெரியாது.  ஆனால் அவருடைய 78 வயது என்பது அவரது ஆர்வத்திற்கு ஒரு தடையாக இருக்கவில்லை.  விகடனின் தீவிர வாசிப்பளரான இவர், பதிவுகளைப் படித்து கருத்துரைகளையும் வழங்கி வருபவர்.  பத்திரிக்கைகளை உடனுக்குடன் இணையம் மூலம் படிப்தற்கும், எழுதுவதற்கும் தனது மகனின் உதவியால் கணினியைக் கையாளக் கற்றுக் கொண்டதுடன் தானும் எழுதத்  தொடங்கி, தனது வலைப்பூ பதிவில் கருத்துரைக்கும் வாசகர்களுடனும் உற்சாகமாக கலந்துரையாடுகிறார்.

இவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமை வாசகர் ரஞ்சனி  அவர்கள். முதுமைக் காலத்திலும் தன்னால் இயன்ற அளவு பயனுறப் பொழுதைக் கழித்து, தனது எழுத்து ஆர்வத்தின் மூலம் தனக்குத் தெரிந்தவற்றை பிறருக்குப் பயன்படும் வகையில் எழுதி வரும் “சொல்லுகிறேன் காமாட்சி”அம்மையாரை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

காமாட்சி அம்மையார் சிறு வயதில் ஒரு பெரிய நகரில் பிறந்து வளர்ந்தாலும் அந்நாட்களில் பெண்கல்விக்கு இருந்த வசதியற்ற சூழலில் எட்டாம் வகுப்புடன், அவருடைய 12 ஆவது வயதில் அவருடைய பள்ளிப்  படிப்பு நின்று போயிருக்கிறது.  அண்டை அயல் வீடுகளில் உள்ளவர்களுக்கு நூல்கள் படித்துக் காட்டியும், கடிதங்கள் எழுத உதவியும் வந்திருக்கிறார். 1945 ஆம் ஆண்டு கட்டாயக் கல்விமுறையை அரசு அறிவித்த பொழுது மாணவர்கள் தொகை அதிகமாகிவிட  ஆசிரியர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.  இவர் படித்த பள்ளியிலேயே ஆசிரியராகப் பணி புரிந்திருக்கிறார்  (அந்தக் காலத்தில் E.S.L.C படித்தாலே ஆசிரியர் பணி புரியலாம்). சுதேசமித்திரன்  போன்ற பத்திரிக்கைகளில்,கதைகளும், பலவகை சமையல் குறிப்புக்களும் எழுதி சன்மானங்களும் வாங்கி இருக்கிறார்.

திருமணத்திற்குப் பிறகு, அவர் வசித்த நேபாளத்திலிருந்து  மடல்கள் அனுப்பினாலே ஏற்படும் தாமதம், குடும்பப் பொறுப்பு, ஐந்து குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு ஆகியவற்றினால் இவரது எழுத்துப்பணி தடை பட்டிருக்கிறது.  பிறகு முதுமைக்காலத்தில் தனது மகனுடன் ஜெனிவாவில் வசிக்கத் துவங்கியதும் இணையம் மூலம் தனது எழுத்தார்வத்தை புதுப்பித்துக் கொண்டுள்ளார்.  காமாட்சி அம்மையார் 1930 களில் பிறந்தவர். அவர் தனது 78 ஆவது வயதில் வர்ட்பிரஸ் (wordpress.com)  வலைப்பூ தொடங்கி எழுதத் துவங்கியதே ஒரு சாதனைதான்.

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, தற்பொழுது  தனது 82 ஆவது வயதிலும்  தொடர்ந்து  “சொல்லுகிறேன்” என்ற தலைப்பில் தனது வலைப்பூவில் எழுதி வருகிறார். சமையல் குறிப்பில் தொடங்கி தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்வேன் என்று வலைப்பூவில் தன்னைப்பற்றிய அறிமுகப் பகுதியில் குறிபிட்டுள்ள காமாட்சி அம்மையார், அதைப் போலவே பெரும்பான்மையான சமையல் குறிப்புகளும், அவற்றுடன் பயணக் கட்டுரைகள், விழாக்கள், சில நினைவுகள்,கடிதங்கள், கதைகள், துணுக்குகள்,  நடப்பு என்ற பற்பல தலைப்புகளின் கீழும் தனது எண்ணங்களைப் பதிவு செய்து வருகிறார்.  அத்துடன் தனது பதிவிற்கான புகைப்படங்களையும் தானே எடுத்து பதிகிறார் என்பது  இவரது தனிச் சிறப்பு. திரு சைபர் சிம்மன் ’80 வ‌யது பாட்டியின் வலைப்பதிவு!’ என்றும் இவரது வலைப்பூவை அறிமுகப்படுத்தியுள்ளார். திருமதி காமாட்சியின்  வலைப்பூ அவள் விகடனிலும் அறிமுகம் ஆகியுள்ளது.

ஓர் அன்னையர் தினப் பதிவாக தனது அன்னையைப் பற்றிய அந்தக் கால நினைவுகளை அசை போடத் தொடங்கியவர் தொடர்ந்து  அடுத்த ஆண்டு வரை பதினைந்து பதிவுகளுக்கு அக்கால நினைவலைகளில் நீந்திச் செல்கிறார்.  அதன் வழியாக சென்ற நூற்றாண்டின் ஆரம்பக் காலங்களில் மக்களின் வாழ்க்கையை, குறிப்பாக பெண்களின் வாழ்க்கையைப் பற்றிய கால வரலாற்றைப் பதிவு செய்துள்ளார்.  “பழைய காலத்தில் பெண்களுக்கு வாழ்க்கை எப்படியெல்லாம் அமைந்தது என்பதின் சிலரின் குறிப்புகள்…… அந்த நாளைய சமாசாரங்கள். இந்த கதையெல்லாம் யாராலே சொல்லமுடியும் ? பிடிச்சா படியுங்கோ. அவ்வளவுதான்…” என்று முன்குறிப்புகள் கொடுத்துத் தொடர்ந்துள்ளார்.  அப்பதிவுகளில் இருந்து ஒரு சில பகுதிகள் மட்டும்  படித்து மகிழ கீழே கொடுக்கப்பட்டுள்ளது….

அன்னையர் தினத் தொடர்வு

என் அம்மாவைப் பற்றி எழுதுகிறேன் என்று சொன்னேன். அவர் இருந்தா  நூறைவிட அதிகம் வயது. இருக்க வாய்ப்பில்லை. அவரின் சின்ன வயது அனுபவங்களைப் கேட்டபோது காலம் எப்படியெல்லாம் இருந்தது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. அவரின் சிறிய வயது காலத்தில்  விவாகம் என்பது பெண் குழந்தைகளுக்கு அவசியம் என்பதுடன், உள்ளூரிலேயே ஸம்பந்தம் செய்ய வேண்டும்,  என்பதால்,  சாப்பாட்டிற்கு கஷ்டமில்லாது பார்த்துக் கொள்ளக் கூடியவரைப் பார்த்தார்களே தவிர நல்ல இடம் கிடைக்கும் என்றுவேறு ஊர்களில் வரன் தேடுவதில்லை. கஷ்டப் பட்டாலும், கண்ணெதிரே இருப்பதை விரும்பினார்கள்.  ஆதலால் வயது வித்தியாஸம், பெரியதாகத் தெரிவதில்லையாம். அந்தந்த ஸீஸனில் விளையும் பயிர் பச்சைகள் போல, கிடைக்கும் மாப்பிள்ளைகளைத் தேர்ந்தெடுப்பார்கள போலும்………..

……. மற்றொரு பதிவில் …….

அது ஒருகாலம்.  குழந்தை வைத்தியம் ஸரிவர இல்லாத காலமென்றும் சொல்லலாம். மருந்துகள்   கண்டு பிடித்த காலம் அது என்றும்  சொல்லலாம். எங்கு நோக்கினாலும்    ஒரு வயதுக் குழந்தைகள்  வயிற்றைப் பெரியதாக முன்நோக்கித் தள்ளிக் கொண்டு, சரிந்த தோள்களும், மெலிந்த கால்களுமாக உட்கார்ந்து கொண்டிருக்குமே தவிர சுரு சுருப்பாக இராது. கண்களில் ஒரு ஏக்கம். அழுகை என ஈரல், குலைக்கட்டிக்கு ஆளாகி  இம்மாதிரிக் குழந்தைகள்தான் பார்க்கக் கிடைக்கும். கட்டி விழுந்த குழந்தை.,   மாதமொரு  முறை  ஜம்மி வெங்கட ரமணய்யாவின் அருகிலிருக்கும் பெரிய ஊர்களுக்கு அவரின் விஜயம் எல்லா மாதங்களிலும் ஒரே குறிப்பிட்ட தேதியில் அவர் வருகைக்காக அம்மாவுடன் பயணிக்கும். நல்ல    வார்த்தை  டாக்டர்  சொல்ல  வேண்டுமே  என்று  வேண்டும் தாயின்  உள்ளங்கள்.

பத்துரூபாய் மருந்து என்றால்   பாப்பையா மருந்து.   வியாதி கடினம். ஐந்து ரூபாய் மருந்து என்றால்  ஜம்மியோ, ஜிம்மியோ? வியாதி  ஆரம்பம். அப்படிப் பெயர்போன மருந்துகள். மிகவும் கஷ்டம், எத்தனை தேரும், தேராது என்பது. ஒரு முப்பது வருஷ காலங்கள் இம்மாதிரிதான் ஓடிக்கொண்டிருந்தது. நான் நிறைய இம்மாதிரி குழந்தைகள் பார்த்திருக்கிறேன். ஒரு ஐம்பது வருஷமாக இம்மாதிரி அவல நிலை ஓய்ந்தது என நினைக்கிறேன். அம்மாவின் முதல் ஆண் குழந்தை இம்மாதிரி இழப்பு………..

அக்காலத்தில் தனது பாட்டிகளிடம் கதைகேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரியும் பாட்டிகள் எவ்வளவு அனுபவச் சுரங்கங்களாக இருந்தார்கள் என்பது. கதைகள், வைத்தியக் குறிப்புகள், சமையல் குறிப்புகள், பாடல்கள், காலக்குறிப்புகள் எனஅவர்கள் அள்ளி அள்ளி வழங்குவார்கள்.  அந்த அருமையான வாய்ப்பினை இழந்த இக்காலதவருக்கு, அந்த ஏக்கத்தை தீர்க்க  ‘இணையப்பாட்டி’ போல  காமாட்சி அம்மையார்  எழுதி வருகிறார்.  இளைய தலைமுறையினருக்கு இவரது வலைப்பூ  தகவல் பலத் தரும் ஓர் அருமையான கருவூலம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

 

நன்றி:  திருமதி தேமொழி, வல்லமை இணைய இதழ்

 

நட்புக்கு ஒரு கதை

வலைப்பதிவு உலக நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

 

 

ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார். ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது. தன் கையிலிருந்தவற்றை அப்படியே போட்டுவிட்டு ஓடினார் ஃப்ளெமிங். ஒரு சிறுவன் இடுப்பளவு ஆழத்தில் அந்தப் புதை மணலில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான். நல்லவேளையாக ஃப்ளேமிங் அவனை காப்பாற்றினார்.  ஃப்ளேமிங் இல்லையென்றால் அந்தச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக புதை மணலில் மூழ்கி இறந்திருப்பான்.

அடுத்த நாள் ஒரு ஆடம்பரமான வண்டி  ஃப்ளெமிங் வீட்டு முன்னால் வந்து நின்றது. நேர்த்தியாக உடை அணிந்த ஒரு பிரபு அவ்வண்டியிலிருந்து இறங்கி வந்து நேற்று ஃப்ளெமிங் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தாம் என்று அறிமுகம் செய்து கொண்டார். “நீங்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களுக்கு நான் ஏதாவது கொடுக்க விரும்புகிறேன்”, என்றார்.

“இல்லை, என்னால் எதுவும் வாங்கிக் கொள்ள முடியாது” என்று பணிவாக மறுத்தார் ஃப்ளெமிங். அப்போது அவரது பிள்ளை அவர்களது எளிய குடிசையின் வாசலுக்கு வந்தான்.

“அவன் உங்கள் மகனா?” என்று கேட்டார் பிரபு.

“ஆமாம்” என்று பெருமையுடன் கூறினார் ஃப்ளெமிங்.

“அப்படியானால் சரி, நாமிருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுவோம். என் பிள்ளைக்குக் கிடைக்கும் அதே மிகச்சிறந்த கல்வியை அவனுக்குக் கொடுக்கிறேன். அவன் அவனது தந்தையைப் போலிருந்தால் பிற்காலத்தில் நாமிருவரும் பெருமை அடையக்கூடிய அளவுக்கு வருவான்” என்றார்.

சொன்னதோடு மட்டுமல்ல; செய்தும் காண்பித்தார்.

விவசாயியின் மகன் மிகச் சிறந்த பள்ளிக் கூடங்களில் படித்தான். லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவப் பள்ளியில் படித்து உலகம் புகழும் பெனிசிலின் கண்டுபிடித்த சர் அலெக்ஸ்சாண்டர் ஃப்ளெமிங் ஆனார்.

வருடங்கள் பல கழிந்தபின் பிரபுவின் பிள்ளை நிமோனியாவால் பாதிக்கப்பட்டபோது பெனிசிலின் தான் அவரைக் காப்பாற்றியது.

அந்த பிரபுவின் பெயர் லார்ட் ரண்டோல்ப் சர்ச்சில். அவரது பிள்ளை?

சர் வின்ஸ்டன் சர்ச்சில்!

தினை விதைத்தவன் தினை அறுப்பான். நல்லது செய்பவனுக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும்.

வாழ்க்கையில்……

பணம் தேவையில்லை என்பது போல் வேலை செய்;

யாரும் உன்னை புண்படுத்தவில்லை என்பது போல் அன்பு செய்;

யாரும் உன்னை பார்க்கவில்லை என்ற எண்ணத்துடன் நடனம் ஆடு;

யாரும் உன் பாட்டைக் கேட்கவில்லை என்ற எண்ணத்துடன் பாடு;

சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்;

இதோ ஒரு சின்ன ஐரிஷ் வாழ்த்து எல்லா நண்பர்களுக்கும்:

உன் கைகளில் எப்போதும் செய்வதற்கு வேலை இருக்கட்டும்;

உன் பணப்பையில் எப்போதும் ஒன்றிரண்டு காசுகள் இருக்கட்டும்;

உன் ஜன்னலில் எப்போதும் சூரியன் பிரகாசிக்கட்டும்;

ஒவ்வொரு மழைக்குப் பின்னும் வானவில் தோன்றட்டும்;

எப்போதும் நண்பன் ஒருவனின் கைகள் உனக்கருகில் இருக்கட்டும்;

கடவுள் உன் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பட்டும்;

சைத்தானுக்குத் தெரிவதற்கு முன்  நீ இறந்து அரை மணி நேரம் ஆகி இருக்கட்டும்.

 

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

 

இது ஒரு மீள் பதிவு.

Greeting card courtesy: 123 greetings.com

 

மோடி – வாட்நகர் முதல் புது டெல்லி வரை

ஆழம் ஜூன் 2014 இதழில் வெளிவந்த எனது கட்டுரை

 

 • 1950 ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ம் தேதி குஜராத் மாநிChap01லத்திலுள்ள வாட்நகர் கிராமத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி. குடும்பத்துக்குச் சொந்தமான டீக்கடையில் சிறு வயதில் வேலை செய்தார். ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கின் (ஆர்எஸ்எஸ்) மாணவர் பிரிவான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தில் சேர்ந்து பின்னர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்தார்.
 • 1987 – பாரதிய ஜனதா கட்சியில் சேர்கிறார்.
 • 1990 – எல்.கே. அத்வானியின் தலைமையில், குஜராத்திலுள்ள சோமநாத்திலிருந்து அயோத்தியா வரையிலான ராம் ரத யாத்திரையின் முக்கிய வடிவமைப்பாளராக மோடி முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
 • 1995 – ஐந்து மாநிலங்களுக்கு பாஜகவின் தேசியச் செயலாளராகப் பொறுப்பேற்கிறார். குஜராத்தில் பாஜக பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற, கட்சியில் மோடியின் நிலையும் உயர்கிறது.
 • 1998 – கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவியேற்றம்.
 • 2001 – ஜனவரி மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20,000 மக்கள் பலியாக, அதன் காரணமாக அப்போதைய முதலமைச்சர் கேஷுபாய் படேல் பதவி இழக்க நேர்கிறது. அவருக்குப்  பதிலாக மோடி குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.
 • 2002 பிப்ரவரி – கோத்ராவில் நடந்த ரயில் தீ விபத்தில் 59 இந்து கர சேவகர்கள் இறக்க நேர்ந்ததன் பின்விளைவாக நடந்த கொடூரமான கலவரத்தில் சிறுபான்மையினர் ஆயிரம் பேருக்கு மேல் கொல்லப்படுகிறார்கள். இவர்களை அடக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று காரணம் காட்டி மோடிமீது கடும் விமரிசனங்கள் எழுகின்றன.
 • 2002 – தேர்தலில் 182 இடங்களில் 128 இடங்களைக் கைப்பற்றி மகத்தான  வெற்றியுடன் இரண்டாவது முறையாக முதலமைச்சர் பதவியேற்கிறார்.
 • 2005 – மோடிக்கு  மதச்சகிப்புத்தன்மை இல்லாததைக் காரணமாகக் காட்டி அமெரிக்கா அவருக்கு விசா கொடுக்க மறுக்கிறது.
 • 2007 – மூன்றாவது முறையாக குஜராத்தின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
 • 2008 – அக்டோபர்  டாடா மோட்டாரின் குறைந்த விலை நானோ கார்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை குஜராத்தில் அமைக்குமாறு அழைக்கிறார்.
 • 2012 – 182 இடங்களில் 115 இடங்களைக் கைப்பற்றி நான்காவது முறையாக குஜராத்தின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
 • 2013 ஜூன் 9 – 2014 பொதுத் தேர்தலின் பிரசாரத் தலைமை பொறுப்பாளராக மோடியை நியமிக்கிறது.
 • 2013 செப்டம்பர் 13 – தனது கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்கிறது பாஜக.
 • 2013 நவம்பர் – கோப்ரா போஸ்ட் என்ற இணையத்தளம் மோடியின் வலது கையான அமித் ஷா சட்டத்துக்குப் புறம்பாக 2009ல் அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தி ஒரு பெண்ணை உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி காணொளியையும் ஒளிபரப்பியது.
 • 2014 ஏப்ரல் 9 – வதோதராவில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
 • 2014 ஏப்ரல் 24 – வாரணாசியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
 • 2014 மே 16 – தேர்தல் முடிவுகள் வெளிவருகின்றன. போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வெற்றி வாகை சூடுகிறார் மோடி. பாஜக வரலாறு காணாத வெற்றி பெறுகிறது. புதிய பிரதமராக நரேந்திர மோடி அடுத்த சில தினங்களில் பொறுப்பேற்கப்படவுள்ளார்.

இன்றோ திருவாடிப்பூரம்!  

andal rangamanar

 

இன்றோ திருவாடிப்பூரம்* எமக்காக

வன்றோ இங்காண்டாளவதரித்தாள்* குன்றாத

வாழ்வான வைகுந்தவான்போகந்த(ன்)னையிகழ்ந்து*

ஆழ்வார் திருமகளாராய்.

 

இன்று என்ன விசேஷம்? நமக்காகவே ஆண்டாள் அவதரித்த திருநாள் இன்று. திருமாலுடன் கூடிவாழும் என்றுமே குறையாத பெரும் செல்வமாகிய வைகுந்தமாகிற வான்போகத்தை வேண்டாமென உதறித் தள்ளிவிட்டு, பூவுலக மாந்தர்களை உய்விக்க பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையாய் பூமிதேவி இந்தப் புவியில் அவதரித்த திருநாள் இன்று. என்கிறார் மணவாள மாமுனிகள் தமது உபதேசரத்தின மாலையில்.

 

பெரியாழ்வாருக்கு மகளாக ஏன் பிறக்க வேண்டும்? பூவுலகில் பிறந்தாலும் ‘மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்’ என்று சூளுரைத்தவள். ‘வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை வேங்கடவர்’ கென்று பிறந்தவள். ‘பொங்கும் பரிவாலே’ அந்தப் பரம்பொருளுக்கே பல்லாண்டு பாடியவருக்குப் பிறக்காமல் வேறு யாருக்கு பிறக்க முடியும்?

 

எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் முதல் உதாரண புருஷர் தகப்பனார் தான். பொதுவாகவே பெண் குழந்தைகளுக்கு அம்மாவைவிட தங்களது தகப்பனாரிடத்தில் அதிகமான பரிவு உண்டு. தகப்பனார்களுக்கும் அப்படியே. இதற்கு கோதாவும் விலக்கல்ல. பரமனிடம் பெரியாழ்வார் காட்டிய பரிவைப் பார்த்து, பூமிப் பிராட்டி அவரது துளசித் தோட்டத்தில் வந்துதித்தாள் என்றும் சொல்லலாம். பரமனுக்கு பல்லாண்டு பாடியவர் அந்தப் பரமனிடத்தில் தன்னை சேர்ப்பிப்பார் என்று நினைத்தும் அவருக்கு திருமகளாய் வந்தவதரித்தாள் என்று கூடச் சொல்லலாம்.

 

தனது திருத்தந்தையாரையே தனது ஆசார்யனாகக் கொண்டு தனது நாச்சியார் திருமொழியில் ஒவ்வொரு பத்துப் பாசுரங்களின் முடிவிலும் அவரது மகளாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளுகிறாள் ஆண்டாள் – நாம் எப்படி நமது தந்தை பெயரின் முதலெழுத்தை முதலில் போட்டுக் கொள்ளுகிறோமோ அப்படி. நாச்சியார் திருமொழி முதல் பத்தில் ‘புதுவையர்கோன்விட்டு சித்தன் கோதை’ என்று ஆரம்பித்து ‘வில்லிபுத்தூர் மன்விட்டுசித்தன் தன் கோதை’, பட்டர்பிரான் கோதை’ என்று ஒவ்வொரு பத்துப் பாசுரங்களின் முடிவிலும் தன்னை பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையாய் நிலைநிறுத்திக் கொள்ளுகிறாள்.

 

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஆசார்ய சம்பந்தம் மிகவும் முக்கியமில்லையோ? ஆண்டாளும், மதுரகவிகளும் ஆச்சார்ய சம்பந்தத்தில் ஒரே மாதிரி. அதனால்தான் மணவாள மாமுனிகள் தனது உபதேசரத்தினமாலையில் இந்த இருவரையும் ஒரு சேரப் பாடுகிறார். ஆழ்வார்கள் வரிசையில் இவர்களை சேர்த்துப் பாடாமல்

‘ஆழ்வார்த்திருமகளா ராண்டாள்* மதுரகவியாழ்வார்

என்று ஆசார்யனை முன்னிட்டுக் கொண்டு வாழ்ந்தவர்களை தனியே பாடிச் சிறப்பிக்கிறார்.

 

திருதகப்பனாரை ஆசார்யன் என்று ஏற்றுக் கொண்டுவிட்டால் போதுமா? அவரது வழி நடக்க வேண்டாமா? பெரியாழ்வார் கண்ணனின் பிள்ளைத் தமிழை ‘பாதக்கமலங்கள் காணீரே’ என்று ஆரம்பித்து

‘செண்பக மல்லிகை யோடு செங்கழு நீர்இரு வாட்சி எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்றுஇவை சூட்டவாவென்று’ பாடி முடித்தார். அதாவது பரம்பொருளின் திருவடியிலிருந்து திருமுடிவரை பாடினார்.

 

‘அதேபோல ஆண்டாளும் திருப்பாவையில் இரண்டாவது பாசுரத்தில் ‘பாற்கடலுள் பையத்துயின்ற பரமனடி பாடி’ என்று ஆரம்பித்து கடைசியில் வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனை’ என்று முடிக்கிறாள். இப்படி ஆசார்யன் காட்டிய வழியில் நடப்பதையே ‘ஆந்தனையும் கைகாட்டி’ என்றும் திருப்பாவையில்  குறிப்பிடுகிறாள்.

 

ஆண்டாள், கோதா என்றெல்லாம் குறிப்பிட்டாலும் கூட இவளுக்கு இன்னொரு சிறப்புப் பெயர் ‘ஏகாரச் செல்வி’ என்று. ஒரு சொல்லை அழுத்திச் சொல்லும்போது ‘ஏ’ சேர்த்து சொல்லுவோம், இல்லையா? ஆண்டாளும் தனது திருப்பாவை முதல் பாசுரத்தில் ‘நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்று ‘ஏ’ காரத்தில் சொல்லுகிறாள். அந்த செல்வத் திருமால் நம்மையெல்லாம் ‘எங்கும் திருவருள் பெற்று இன்புற’ச் செய்யும் போது நாம் என்ன செய்ய வேண்டும்? இருபத்தி ஒன்பதாம் பாசுரத்தில் சொல்லுகிறாள்: ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம்; உனக்கே நாமாட்செய்வோம்’ என்று இருக்க வேண்டும்.

 

இவள் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை; ‘மல்லிநாடாண்ட மடமயில்’, ‘மெல்லியலாள்’. அதுமட்டுமல்ல; ‘செழுங்குழல் மேல் மாலைத் தொடை தென்னரங்கருக்கு ஈயும் மதிப்புடைய சோலைக்கிளி’. (தனது கூந்தலில் சூடிக் களைந்த மாலையை அரங்கருக்குக் கொடுத்தவள்). எப்பொழுதோ அவதரித்தவள் எப்படி பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் (பிறகு பிறந்தவள் – தங்கை) ஆகமுடியும்?

 

ஸ்வாமி ராமாநுஜருக்கு ‘திருப்பாவை ஜீயர்’ என்றே ஒரு திருப்பெயர் உண்டு. அவரது உதடுகள் எப்போதும் திருப்பாவையை சேவித்துக்கொண்டே இருக்குமாம். நாச்சியார் திருமொழி திருமாலிருஞ்சோலை பாசுரத்தில் ஆண்டாள் தன் ஆவலை கூறுகிறாள்:

 

நாறுநறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு* நான்

நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்*

நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்*

ஏறுதிருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்கொலோ!

 

ஸ்ரீ ராமானுஜர் இந்த பாசுரத்தை சேவித்து போது ஆண்டாளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று திருமாலிருஞ்சோலை சென்று நாறு அண்டா வெண்ணெய், நூறு அண்டா நிறைந்த அக்காரவடிசில் செய்வித்து அழகருக்கு அமுது செய்விக்கிறார். அதன் பின் ஸ்வாமி ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற போது ஆண்டாள் தன் திருவாயாலே ஸ்வாமியை ‘வாரும், அண்ணா’ என்று அழைத்தாளாம்.

 

தாய் பத்தடி பாய்ந்தால் சேய் பதினாறு அடி பாயும் என்பார்கள். திருத்தகப்பனார் பரமனுக்குப் பொங்கும் பரிவாலே பல்லாண்டு பாடினார் என்றால் திருமகள் என்ன செய்தாள் தெரியுமோ? வேதங்கள், ரிஷிகள், முனிவர்கள் பிரம்மாதி தேவர்களெல்லாம் ‘பரமன் எங்கே?’ என்று தேடிக் கொண்டிருக்க, இவள் ‘விருந்தாவனத்தே கண்டோமே’ என்று அவனைக் கண்டு அதை பாசுரங்களாகவும் பாடி விட்டாள்.

 

நாச்சியார் திருமொழியின் கடைசிப் பத்துப் பாடல்களை உரையாடலாகவே அமைத்திருக்கிறாள் ஆண்டாள்.

கேள்வி: ‘பட்டிமேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க்கன்றாய்

இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக்கண்டீரே?

பதில்:   இட்டமான பசுக்களை இனிதுமறித்து நீரூட்டி*

விட்டுக்கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே’.

 

‘ஆடுமாடுகள் மேய்க்கும் ஆயர்குலத்தில் பலதேவனின் தம்பியாகப் பிறந்தவனை விருந்தாவனத்தே கண்டீர்கள். அன்று ஆயர்களுக்காக மலையை தூக்கினானே, அந்த கோவர்த்தனனைக் கண்டீரே? மாலாய்ப் பிறந்த நம்பியை, மாலே செய்யும் மணாளனை கண்டீரே?  மாதவன் என் மணியினை கண்டீரே? ஆழியானைக் கண்டீரே? விமலன் தன்னைக் கண்டீரே?’ என்ற தொடர்கேள்விகளுக்கு முத்தாய்ப்பாகப் பதில் சொல்லுகிறாள் கோதை:

‘பருந்தாட்களிற்றுக்கருள் செய்த பரமன் தன்னை* பாரின்மேல்

விருந்தாவனத்தே கண்டமையை விட்டுசித்தன் கோதைசொல்*

மருந்தாமென்று தம்மனத்தே வைத்துக்கொண்டு வாழ்வார்கள்*

பெருந்தாளுடைய பிரானடிக் கீழ்ப்  பிரியாதென்றுமிருப்பாரே’.

 

இப்படி ஆண்டாள் பாடியதாலேயே ஸ்ரீவைஷ்ணவத் திருத்தலங்களில் பெருமாள் திருவீதி வலம்வரும்போது திராவிட வேதம் என்றழைக்கப்படும் திவ்யப்பிரபந்தம் சேவிப்போர் பெருமாளின் முன்னாலும், இன்னமும் பந்தாமனைத் தேடிக்கொண்டிருக்கும் வேதங்களை சேவிப்போர் பின்னாலும் வருகிறார்கள் என்று சொல்லுவார்கள்.

 

இந்தப் பத்துப் பாசுரங்களை தினமும் சேவிக்க ஆண்டாளின் அருளும், திருமாலின் அருளும் சேர்ந்து கிடைக்கும். இனிமையான எளிமையான தமிழில் அமைந்த பாடல்கள் இவை. இணையத்தில் இணைப்பு இதோ:

பட்டிமேய்ந்தோர் காரேறு

 

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே!

 

அன்புள்ள இந்தியர்களே!

வல்லமை இதழில்   இன்று வெளியான கடிதம்

 

அப்துல் கலாம் நலமாக இருக்கிறார் - வதந்திகளை நம்ப வேண்டாம்: உதவியாளர் தகவல்!

திரு அப்துல் கலாம் அவர்களின் கடிதம்:

அன்புள்ள இந்தியர்களே,

இந்த உரையை நான் ஹைதராபாத் நகரத்தில் ஆற்றிக்கொண்டிருந்தபோது ஒரு 14 வயது பெண் என் கையெழுத்து வேண்டுமென்றாள். நான் அவளிடம் அவளது எதிர்காலக் கனவு என்ன என்று கேட்டேன். அவள் சொன்னாள்: முன்னேறிய இந்தியாவில் நான் வாழ வேண்டும் என்று. அவளுக்காக நீங்களும் நானும் இந்த முன்னேறிய இந்தியாவை உருவாக்க வேண்டாமா?

 

இந்தியா பின்தங்கிய நாடு அல்ல; மிகவும் முன்னேறிய நாடு தான் என்று நாம் பிரகடனப்படுத்த வேண்டும். எப்போது இதைச் செய்யப் போகிறோம்?

நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

 

நமது அரசாங்கம் திறமையானது அல்ல என்கிறோம்;

நமது சட்டங்கள் மிகப் பழமையானவை என்கிறோம்;

மாநகராட்சி கழிவுகளை சரிவர அப்புறப்படுத்துவதில்லை என்கிறோம்;

தொலைபேசிகள் இயங்குவதில்லை; இரயில் நிர்வாகம் ஒரு ஜோக். விமானப் போக்குவரத்து உலகிலேயே படுமட்டமான ஒன்று. தபால்கள் ஆமை வேகத்தில் போய்ச்சேர வேண்டிய இடத்திற்குப் போய் சேருவதே இல்லை. இன்னும் இன்னும் எத்தனையோ குறைகள் இந்த நாட்டைப்பற்றி சொல்லுகிறோம். நாம் என்ன செய்தோம் இவற்றை சரிசெய்ய?

 

இந்தியாவிலிருந்து சிங்கபூர் செல்லும் ஒருவரை எடுத்துக்கொள்ளுங்கள். அவருக்கு உங்கள் பெயரைக் கொடுங்கள்; உங்கள் முகத்தைக் கொடுங்கள்; இப்போது அந்த ‘நீங்கள்’ சிங்கபூர் விமான நிலையத்திலிருந்து வெளியே வருகிறீர்கள். நன்னடத்தையின் உருவமாக அங்கு இருக்கிறீர்கள். அங்கு சிகரெட்டை பிடித்துவிட்டு மீதியை தெருவில் போடுவதில்லை நீங்கள். அவர்களது பாதாள இரயில் பற்றி அவர்களைப் போலவே பெருமிதம் அடைகிறீர்கள்; நமது மாஹிம் கடல்வழிப் பாதை போலவே அமைந்திருக்கும் ஆர்செர்ட் சாலையில் மாலை 5 மணியிலிருந்து 8 மணிவரை போக 5 டாலர்கள் (இந்தியப்பணம் சுமார் 60 ரூபாய்) கூசாமல் கொடுக்கிறீர்கள்; மால் அல்லது உணவகத்தின் வெளியில் நிறுத்தியிருக்கும் காரை எடுக்கத் தாமதமானால் அதிகப்படியான பார்க்கிங் பணத்தை செலுத்துகிறீர்கள்; சிங்கப்பூரில் இதற்கெல்லாம் நீங்கள் எதுவும் சொல்லுவதில்லை.

ரமதான் சமயத்தில் துபாயில் இருந்தால் வெளியில் சாப்பிட பயப்படுவீர்கள்;

ஜெட்டாவில் தலையை துணியால் மூடிக்கொள்ளாமல் எங்கும் செல்ல மாட்டீர்கள்;

‘என்னுடைய வெளியூர் தொலைபேசிக் கட்டணத்தை இன்னொருவருக்கு அனுப்பிவிடு’ என்று சொல்லி இந்தியாவில் தொலைபேசி ஊழியரை விலைக்கு வாங்கலாம்; லண்டனில் இது நடக்குமா? காரில் அநாயாசமாக வேக அளவை தாண்டி சென்றுவிட்டு காவல்துறை அதிகாரியிடம், ‘நான் யார் தெரியுமா?’ என்று இந்தியாவில் பெருமை பேசலாம்; வாஷிங்கடனில் முடியுமா?

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கடற்கரைகளில் காலி சாக்லேட் பேப்பரை  குப்பைத் தொட்டிகளில் போடுவீர்கள், இங்கு?

டோக்கியோவின் வீதிகளில் வெற்றிலை சாற்றைத் துப்பத் துணிவீர்களா?

பாஸ்டனில் உங்களுக்கு பதிலாக வேறு ஒருவரை பரீட்சை எழுத வைக்கவோ, பொய் சர்டிபிகேட் வாங்கவோ உங்களால் முடியுமா?

இப்போதும் ‘உங்களைப்’ பற்றித்தான் பெசிகொண்டிருக்கிறோம்.

நீங்கள் மற்ற தேசங்களில் உள்ள சட்டதிட்டங்களுக்கு தலை வணங்குவீர்கள் ஆனால் உங்கள் தேசத்தில் இதைச் செய்ய மாட்டீர்கள்.

இந்திய மண்ணைத் தொட்டவுடன், சிகரெட் துண்டை, கையிலிருக்கும் துண்டுக் காகிதங்களை வீதியில் வீசி எறிவீர்கள். அந்நிய தேசங்களுக்குப் போய் அங்கு நடக்கும் நிகழ்வுகளில் பங்கு கொண்டு அங்குள்ளவர்களை போற்றத் தெரிந்த உங்களால் உங்கள் தேசத்தில் ஏன் அப்படி இருக்க முடியவில்லை? அமெரிக்காவில் ஒவ்வொரு நாய் சொந்தக்காரரும் தெருவில் நாயுடன் நடக்கும்போது, தங்கள் நாய் சுச்சூ, கக்கா போனவுடன் சுத்தம் செய்வார்கள். எந்த இந்தியனாவது செய்வானா?

 

தேர்தலில் ஓட்டு போட்டவுடன் நம் கடமைகள் முடிந்துவிட்டதாக நினைத்து, வீட்டில் ஹாயாக உட்கார்ந்து கொள்வோம். அரசு நமக்கு வேண்டியவற்றை எல்லாம் செய்து தரவேண்டும் என்று எதிர்பார்ப்போம். ஆனால் நமது பங்களிப்பு வெறும் பூஜ்யம். மாநகராட்சி தெருக்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்போம், ஆனால் குப்பைகளை தெரு முழுவதும் போடுவது நம் தப்பு என்று உணர மாட்டோம். அல்லது தெருவில் கிடக்கும் ஒரு துண்டு காகிதத்தையாவது எடுத்து குப்பைத் தொட்டியில் போடமாட்டோம்.

ரயில்வே நிர்வாகம் கழிப்பறைகளை சுத்தமாக வைக்கவேண்டும் என்று நினைப்போம். ஆனால் நாம் அவைகளை சரிவர பயன்படுத்த வேண்டும் என்பது நம் பொறுப்பு என்பதை உணர மாட்டோம். விமானப் பயணங்களில் மிகச்சிறந்த உணவு கொடுக்கப்பட வேண்டும். விலையுயர்ந்த சோப்பு, ஷாம்பூ இவைகளைக் கொடுக்க வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு. ஆனால் ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தால் போதும் இவைகளை திருடக்கூடத் தயங்கமாட்டோம்.

 

பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வரதட்சிணை, பெண்சிசு கொலை போன்ற சமூக விரோத செயல்களுக்கு எதிராக நாம் என்ன செய்கிறோம்? வீட்டில் வரவேற்பறையில் உட்கார்ந்து கொண்டு வாய்கிழியப் பேசுவோம். வீட்டில் பெண்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்று சிந்திப்போமா?

 

இப்படி நடந்துகொள்ள நாம் சொல்லும் சால்ஜாப்புகள் என்ன?

‘அமைப்பு மாறவேண்டும், நான் ஒருவன் மாறி என்ன ஆகப்போகிறது?’

யார் இந்த மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறார்கள்? இந்த அமைப்பில் அங்கத்தினர்கள் யார்? நம்மைப் பொறுத்தவரை இந்த அமைப்பில் இருப்பவர்கள் நமது அக்கம்பக்கத்தவர்கள், மற்ற வீடுகள், மற்ற நகரங்கள், மற்ற சமூகங்கள் இவை தவிர அரசு. நிச்சயமாக நீங்களும் நானும் இதில் இல்லை.

 

உண்மையில் நமக்கு இந்த சமூகத்தை மாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று வைத்துக்கொள்வோம். ஏதாவது நேர்மறையாக நமது பங்களிப்பை கொடுப்போமா? குடும்பத்துடன் பத்திரமான இடத்திற்கு போய், ஒரு கூண்டுக்குள் ஒளிந்துகொண்டு விடுவோம். யாரோ ஒரு திருவாளர் ‘சுத்தம்’ வந்து தனது கையை ‘விஷுக்’ கென்று வீசி ஏதாவது அற்புதங்கள் செய்ய வேண்டும். அல்லது நாம் வேறு ஏதாவது வெளிதேசத்திற்கு கோழைகள் போல ஓடிவிடுவோம். அமெரிக்காவிற்கு சென்று அவர்களது நாட்டின் அமைப்பைப் புகழுவோம் அவர்களது பெருமையில் குளிர் காய்வோம். நியூயார்க் நகரம் பாதுகாப்பானதாக இல்லையா, ஓடு இங்கிலாந்திற்கு; இங்கிலாந்தில் வேலையில்லாத் திண்டாட்டமா, அடுத்த விமானத்தைப் பிடித்து ஓடு வளைகுடா நாட்டிற்கு; வளைகுடா நாடுகளில் போர் அபாயமா? உடனே இந்திய அரசு ஓடிவந்து உங்களை காப்பாற்றவேண்டும்!

 

இங்கிருப்பவர்கள் எல்லோரும் இந்த நாட்டை தூற்றவும், மோசமாகப் பேசவும் தான். யாருக்குமே இந்த நாட்டின் அமைப்பின் மீது அக்கறை இல்லை. நமது மனசாட்சியை பணத்திற்கு அடமானம் வைத்துவிட்டோம்.

 

அன்புள்ள இந்தியர்களே, இந்த கட்டுரை உங்களை சிந்திக்க வைக்கவும் உங்களை நீங்கள் ஆராய்ந்து கொள்ளவும்தான் எழுதப்படுகிறது. இந்தக் கேள்விகள் உங்கள் மனசாட்சியை கொஞ்சமாவது தட்டி எழுப்பும் என்றுதான்.

 

ஜான் எப் கென்னடி சொன்னதை நானும் திரும்பச் சொல்லுகிறேன்: ‘இந்த நாட்டிற்கு நாம் என்ன செய்ய முடியும், என்ன செய்தால் அமெரிக்காவும் பிற நாடுகளும் இன்றிருக்கும் நிலைமைக்கு இந்தியா வரமுடியுமோ அதைச் செய்வோம்.’

 

இந்தியாவிற்கு என்ன தேவையோ அதைச் செய்வோம். இந்தக் கடிதத்தை ஒவ்வொரு இந்தியனுக்கும் அனுப்புங்கள் – ஜோக்குகள் அனுப்புவதற்குப் பதிலாக!

 

நன்றியுடன்,

அப்துல் கலாம்.

அருமைப் பேரனின் அரிய சாதனை

 

teji teji

இந்தப் படத்தில் இருப்பது தேஜஸ் கிருஷ்ணா. என் பிள்ளையின் புகைப்பட ஆற்றலையும் கண்டு களியுங்களேன்!

 

எனது பேரன் சிரஞ்சீவி தேஜஸ் கிருஷ்ணா CBSE பத்தாம் வகுப்பில் எல்லா பாடங்களிலும் பத்துக்குப் பத்து புள்ளிகள் பெற்று அவனது பள்ளியில் முதல் மாணவனாக வந்திருக்கிறான் என்பதை மிக மிக மிக மிகப் பெருமையுடன் இங்கு பதிய விரும்புகிறேன். இந்த கல்வி முறையில் மதிப்பெண்கள் கொடுப்பதில்லை. (வாழ்க, முன்னாள் கல்வி அமைச்சர் கபில் சிபல்!!) Cumulative Grade Point Average (CGPA) என்று ஒவ்வொரு பாடத்திலும் 10 புள்ளிகளுக்கு மாணவர்களின் திறமை கணக்கிடப்படுகிறது.

 

அவனது திறமையை வெளிக் கொணருவதில் என் மகளின் பங்கு மிகப்பெரியது. தேஜஸ் வெகு புத்திசாலி. அவனது புத்திசாலித்தனத்தை நல்லமுறையில் வழிநடத்திச் சென்ற பெருமை என் மகளையே சேரும்.

 

தேஜஸ் கிருஷ்ணாவின் அப்பா (என் மாப்பிள்ளை), அத்தைகள், பெரியப்பா என்று எல்லோருமே படிப்பில் புலிகள். என் மாப்பிளையின் பெரியப்பா (80+) அஸ்ட்ராலஜி எனப்படும் ஜோசியத்தில் இப்போது முனைவர் பட்டம் பெற படித்துக் கொண்டிருக்கிறார். என் மாப்பிளையின் அப்பா பல சம்ஸ்க்ருத நூல்களை கன்னட மொழியில் மொழி பெயர்ப்பு செய்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் கணணி தொழில் நுட்பத்திலும் வல்லவர்கள். தங்கள் ஆராய்ச்சிகளுக்கும், நூல் மொழி பெயர்ப்புகளுக்கும் கணணியை அசாதாரணமாக பயன்படுத்துகிறார்கள்!

 

மொத்தத்தில் பெரிய படிப்பாளிக் குடும்பம். அப்படியிருக்கையில் தேஜஸ் செய்தது என்ன பெரிய சாதனையா என்று தோன்றலாம். இந்தப் பக்கத்தில் நான் இருக்கிறேனே!!!!

 

எங்களுடன் இந்த விடுமுறையில் தேஜஸ் வந்து இருந்தான். ரொம்பவும் ஒட்டுதலாக பேசிக்கொண்டும், எனக்கும், அவனது தத்தாவிற்கும் உதவிகள் செய்துகொண்டும் இருந்தான். அவன் வந்தது சோர்ந்திருந்த எங்களுக்கு (கணவர் தொலைக்காட்சி முன், நான் என் கணணி முன் – வீட்டில் சத்தமே இருக்காது) பாலைவனத்தில் பெய்த மழையைப் போல குளிர்ச்சி ஊட்டியது.

 

அவன் ஒரு நல்ல படிப்பாளியாக, நல்ல மகனாக, நல்ல அண்ணாவாக, நல்ல பேரனாக மட்டுமின்றி, ஒரு நல்ல மனிதனாகவும் முழுமை பெற்று வாழ எங்கள் எல்லோரின் ஆசிகளும்.

 

பாதகமலங்கள் காணீரே!  – தேஜஸ் கிருஷ்ணாவைப் பற்றிப் படிக்க

 

அம்மா மின்னலு…..! மகளின் பெருமையைப் படிக்க

 

 

யாரைப் போல மோதி?

யாரைப்போல மோதி?

 

 

 

 

இன்றைய நான்காம்தமிழ் ஊடகத்தில் வெளியாகியுள்ள எனது கட்டுரை:

 

தேர்தல் அமர்க்களங்கள் ஒருவழியாக முடிந்தன. இந்தியக் குடிமக்கள் தங்கள் கடமையைச் செய்துவிட்டனர். தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும்? செய்தித்தாள்களும், தொலைகாட்சிசானல்களும் போட்டி போட்டுக்கொண்டு யார் அடுத்த பிரதம மந்திரி, எந்தக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று ஊகங்களை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றன. பார்க்கவும் படிக்கவும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது இந்தச் செய்திகள் எல்லாம். இன்னும் ஒரு நாள், எல்லாம் தெரிந்துவிடும்.

 

பாஜக தனது பிரதமர் வேட்பாளராக திரு மோதியை அறிவித்தபோது, எல்லா அரசியல் கட்சிகளும் துள்ளி குதித்தன. மற்ற கட்சிகளை விடுங்கள், பாஜகவிலேயே அதிருப்தி வெளிப்படையாகத் தெரிந்தது. திரு அத்வானியைத் தான் பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்க வேண்டும்; அவர்தான் அந்த கட்சியின் மூத்தவர்; திரு வாஜ்பாயிக்குப் பின் அவர்தான் கட்சியில் செல்வாக்கு வாய்ந்தவர் என்றெல்லாம் பேசப்பட்டது. அத்வானி கூட ஆரம்பத்தில் தனது அதிருப்தியை தெரிவித்தார். பின்னர் சமாதானமாகிவிட்ட போதிலும், தேர்தலில் போட்டியிடப்போகும் இடத்தைப் பற்றிய குழப்பத்தை ஏற்படுத்தினார்.

 

எது எப்படியோ பாஜகவினர் எல்லோரும் மோதியின் தலைமையை ஏற்று, ‘இந்தியாவெங்கும் மோதி அலை’, ‘இந்த முறை மோதி அரசு’ என்று பல்வேறு கோஷங்களையும் எழுப்பினார்கள். மே 12 ஆம் தேதியுடன் வாக்குப்பதிவுகள் நாடு முழுவதும் நடந்து முடிந்தன. இந்தத் தேர்தலில் நகைச்சுவைக்கும் குறைவில்லாமல் பார்த்துக்கொண்டனர் நம் அரசியல்வாதிகள். மோடி, லேடி, இல்லையில்லை எங்க டாடி என்ற தமிழ்நாட்டு நகைச்சுவையும், ராகுல் காந்தியின் நேர்முகம் என்ற காமெடி ஷோவும் நல்லமுறையில் நடந்தேறியது.

 

போன ஞாயிறு அன்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித்தாளில் மோதியைப் பற்றி வந்த ஒரு சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Modi Xeroxed என்ற தலைப்பில் பல்வேறு அரசியல் பார்வையாளர்கள், வல்லுனர்கள் உலகத் தலைவர்களுடன் மோதியை ஒப்பிட்டுப் பார்த்து யாரைப் போல மோதி இருக்கிறார் என்று சொல்லியிருந்தார்கள். அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மோதி யாரை காப்பியடிக்கிறார், அல்லது யார் வழியைப் பின்பற்றுகிறார் என்று வெளியாகியிருந்த சில கருத்துக்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

 

ரீகனின் மறுபிறவி

மோதியின் பொருளாதார கொள்கைகள் ரொனால்ட் ரீகனின் பொருளாதார கொள்கையை ஒத்திருக்கிறது என்கிறார் அமெரிக்க அரசியல் வர்ணனையாளர் டேவிட் பி. கொஹேன்.

 

பிரதமர் பதவியைக் குறி வைக்கும் முன் இரண்டு தலைவர்களும் முதலில் மாநில அளவில் – ரீகன் கலிபோர்னியாவின் ஆளுநர் ஆகவும், மோதி குஜராத்தின் முதல் மந்திரியாகவும் – தங்கள் அடையாளங்களைப் பதித்தார்கள். இருவரும் கட்டுபாடற்ற சந்தை என்பதை முன் வைத்தார்கள். இருவரும் தங்களது நிர்வாகத் திட்டத்தில்  நலத் திட்டங்களுக்கு குறைவான இடத்தைதான் கொடுக்கிறார்கள். இந்தியாவில் படித்தவர்கள் முதலில் மோதியை ஓரம் கட்டியது  போலவே அமெரிக்காவில் ரீகனை புத்திசாலிகள் யாரும் அத்தனை சீரியஸ்ஸாக எடுத்துக்கொள்ளவில்லையாம்.  ரீகனுக்கு இனவாதி அடையாளம் போல மோதிக்கு வகுப்புவாத அடையாளம். சிவப்பு நாடாவை இருவரும் வெறுக்கிறார்கள்.

 

இந்திராகாந்தியை ஒத்திருக்கிறார்:

 

இப்படிச் சொல்பவர் வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா. அதாவது, 1971-77 களில் நாம் பார்த்த இந்திராவின் சாயலை மோதியிடம் பார்க்கலாம். தனது கட்சி, தனது அரசு, தனது நிர்வாகம் தனது நாடு இவைகளை தனது ஆளுமையின் தொடர்ச்சியாகவே உருவாக்க எண்ணிய இந்திராவின் செயலை மோதியின் செயலும் ஒத்திருக்கிறது என்று ஒரு செய்திதாளில் எழுதிய தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார், குஹா. மோதி குறிப்பிடும் ரோம் ராஜ், மியான் முஷ்ராஃப் ( பிறகு இந்த வார்த்தைகள் மியான் அஹ்மத் படேல் என்று மாற்றப்பட்டது) இவையெல்லாம் இந்திராவின் ‘வெளிநாட்டு சதி’ ‘எனது எதிரிகள்’ என்ற சொற்களை போலவே இருக்கின்றன என்கிறார் குஹா.

 

நிக்சனின் நிழல்:

 

முக்கிய நிகழ்வுகளை மறுப்பது, ரகசியம் காப்பது, உயர்குடி மக்களை அலட்சியப்படுத்துவது போன்ற விஷயங்களில் மோதி நிக்சனை போலிருக்கிறார் என்கிறார் ராப் ஜென்கின்ஸ்.

 

இருவருமே தங்கள் சொந்த வாழ்க்கையில் சில விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க விரும்பினார்கள். தான் சாய் விற்பவராக இருந்ததை வெளியில் சொன்ன மோதி தனது சிறுவயது திருமணத்தை இந்த வருடம் ஏப்ரல் வரை ரகசியமாக வைத்திருந்தார். நிக்சன் தனது நண்பர் கழக (quaker) தொடர்பையும் ரகசியமாகவே வைத்திருக்க விரும்பினார். தேவைப்பட்ட போது மட்டும் இந்தத் தொடர்பை பயன்படுத்தினார். இருவரின் ‘நம்பிக்கைக்கு உகந்தவர்கள்’ பட்டியல் மிகச் சிறியது. கென்னடி குடும்பத்தவர்களின் அறிவுசார்ந்த அரசியலையும், அவர்களுக்குக் கிடைத்த ராஜ மரியாதையையும் ஏளனமாகவே பேசியவர் நிக்சன். சோனியா, ராகுல் இவர்களைப் பற்றி மோதி சொல்லும் விரும்பத்தகாத விஷயங்களை இதனுடன் ஒப்பிடலாம். குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் இருவருக்கும் பொதுவானது என்னவென்றால் நடந்ததை மறுப்பது: நிக்சனுக்கு வாட்டர்கேட் என்றால் மோதிக்கு 2002 கலவரங்கள்.

 

தாட்சரின் தம்பி  

 

மோதியிடம் நாம் காணும் சர்வாதிகாரப் போக்கு, நலத்திட்டங்களுக்கு எதிரான போக்கு, சந்தைக்கு ஆதரவான போக்கு ஆகியவை தாட்சரை நினைவு படுத்துகின்றன என்கிறார்கள் அரசியல் நோக்குனர்கள்.

 

பல அரசியல் கண்காணிப்பாளர்கள் மோதியை இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சரின் பிரதி பிம்பமாகக் காண்கிறார்கள். இருவரும் எளிய குடும்பத்திலிருந்து வந்தவர்கள். சிறிய அரசாங்கம், தனியார் மயமாக்கலின் நன்மைகள் ஆகியவற்றில் பெரும் நம்பிக்கை உள்ளவர் மோதி. மோதியின் ஆலோசகர் வட்டம், நலத்திட்டங்களைப் பின்னுக்குத் தள்ளி, சந்தையை குறிவைக்கும் கொள்கையை முன்னுக்குத் தள்ளும் பொருளாதார நிபுணர்களைக் கொண்டது. இவையெல்லாம் அப்படியே தாட்சரின் முத்திரை பதித்த செயல்கள். தாட்சர் தனது சர்வாதிகாரத்திற்கும், எதிர்கட்சிகளை இகழ்வாகப் பார்க்கும் குணத்திற்கும் பெயர் பெற்றவர். இவையெல்லாம் மோதிக்கும் பொருந்தும். தனக்கு எதிர்ப்பு என்பதை மோதி விரும்புவதில்லை. அவர் ஒரு குழுவாக ஆடவும் விரும்புவதில்லை.

 

யாரை வேண்டுமானாலும் மோதி காப்பியடிக்கட்டும். இந்தியாவிற்கு ஒரு நிலையான அரசை கொடுக்கட்டும் என்பதுதான் இந்தியர் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும். இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா மோதி?