சுயராஜ்யம் என்பது என்ன?

001

 

இப்போது நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் ‘ஸ்வராஜ்’ என்ற தலைப்பில் திரு அர்விந்த் கெஜ்ரிவால் எழுதிய புத்தகத்தின் தமிழாக்கம் ‘தன்னாட்சி’. மொழிபெயர்த்தவர் திரு கே.ஜி. ஜவர்லால் – இதயம் பேத்துகிறது வலைத்தளத்தின் சொந்தக்காரர். அதிலிருந்து சிலவரிகள் உங்களுக்காக:

 

இந்தப்புத்தகத்தின் முகவுரையில் திரு அண்ணா ஹசாரே கூறுவது:

‘நிஜமான ஜனநாயக அரசு என்பது தில்லியில் உட்கார்ந்திருக்கும் இருபது பேரால் நடத்தப்படுவது அல்ல. தில்லி, மும்பை, கல்கத்தா போன்ற முக்கிய நகரங்கள் அதிகார மையங்களாக இப்போது விளங்குகின்றன. இதை இந்தியாவின் ஏழு லட்சம் கிராமங்களுக்கும் பகிர்ந்தளிக்க நான் விரும்புகிறேன்’. –  காந்திஜி

 

‘1950 –ல் நம்முடைய முதல் குடியரசு தினத்தைக் கொண்டாடும்போதே காந்தி சொன்ன இந்த வார்த்தைகளை மறந்துவிட்டோம். ஊழலும் விலைவாசி உயர்வும் சாமானியர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறி ஆக்கிக்கொண்டிருக்கின்றன. சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகியும் பசியும், வேலையில்லாக் கொடுமையும் இன்னும் மறையவில்லை.

 

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலில் வாக்களிப்பதுடன் ஜனநாயகத்தில் மக்களின் பங்கு முடிந்துவிடுவதில்லை. நிர்வாகத்தில் மக்களின் பங்களிப்பு இருக்கவேண்டும். அதிகார மையங்கள் தலைநகரங்களில் இருந்து வெளியேறி சமூகத்துக்கும் கிராமங்களுக்கு சென்றடைய வேண்டும்.

 

எந்தெந்த கிராமங்களில் மக்கள் தங்கள் நிலத்துக்கும், நீருக்கும் அரசாங்கத்தின் தலையீடின்றி திட்டமிட்டு உழத்தார்களோ அங்கெல்லாம் பசி, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய சொற்கள் வழக்கொழிந்து போய்விட்டன.வலுவான, தன்னிறைவு பெற்ற தேசத்தை உருவாக்க வேண்டுமானால் அரசியமைப்பில் மறுதலை உண்டாக்க வேண்டும். கிராம சபைகளுக்கும சமூக அமைப்புக்களுக்கும் அதிகாரம் இருப்பது மாதிரியான அமைப்பை நாம் உருவாக்க வேண்டும்.

 

 

திரு கெஜ்ரிவால் தனது புத்தகத்தில் கூறுவது:

இந்தியா ஜனநாயகத்தை எங்கே கற்றது? நிறையப்பேர் நாம் அமெரிக்காவைப்பார்த்துக் கற்றுக்கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் நாம் பிரிட்டனிலிருந்து கற்றுக் கொண்டோம் என்று சொல்லுகிறார்கள். புத்தர் காலத்திலிருந்தே ஜனநாயம் இருந்து கொண்டிருக்கிறது என்பதுதான் நிஜம். உண்மையில் அந்தக் காலத்தில் இன்னமும் அழுத்தமாக, வலுவாக இருந்திருக்கிறது. வைஷாலி என்கிற பீகார் மாநிலத்தில் இருக்கும் புராதன நகரம் தான் உலகின் முதல் ஜனநாயகம்.

 

இந்த ஜனநாயகம் எப்போது மாறியது?

 

1830 –ல் அப்போதைய கவர்னர் ஜெனரல் மெட்கால்ஃப் கிராம சபைகள்தான் இந்த நாட்டின் முதுகெலும்பு என்பதை இங்கிலாந்துக்கு எழுதினர். கிராமங்களில் மக்கள் ஒன்று கூடித் தீர்மானங்கள் எடுப்பதை எழுதினார். இதை விட்டுவைப்பது தங்களுக்கு ஆபத்தாக முடியும் என்று நினைத்த பிரிட்டிஷ் அரசு 1860-ல் கிராம சபைகளைக் கலைக்கும் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. பாசனம் கல்வி என்று எதையெல்லாம் கிராம சபைகள் சர்வ சாதாரணமாக நிர்வகித்துக்கொண்டு வந்தனவோ அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு துறை ஏற்படுத்தி ஒரு அதிகாரியும், உதவியாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

 

1947 – இல் ஆட்சிப் பொறுப்பு ஆங்கிலேயரிடமிருந்து நமக்கு வந்த போது துரதிர்ஷ்டவசமாக கிராம சபைகளிடம் அவர்களுடைய பொறுப்புகள் திருப்பித் தரப்படவில்லை. நாம் செய்ததெல்லாம் ஆங்கிலேய கலெக்டருக்கு பதில் இந்தியக் கலெக்டரை நியமித்ததுதான்! இதன் பெயர் சுயராஜ்யம் அல்ல.

*****************

இப்புத்தகம் இந்தியர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்று திரு அண்ணா ஹசாரே தமது முகவுரையில் குறிப்பிடுகிறார். எல்லோரும் படிக்க வேண்டிய விலையில் இருக்கவேண்டும் என்பதற்காக பதிப்பகத்தாரிடம் இப்புத்தகத்திற்கான ராயல்டி வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார், திரு கெஜ்ரிவால்.

 

புத்தகத்தின் பெயர்: தன்னாட்சி

மூலம் ஆங்கிலம் ஆசிரியர்  திரு அர்விந்த் கெஜ்ரிவால்

மொழிபெயர்த்தவர்: திரு கே. ஜி. ஜவர்லால்

கிடைக்குமிடம்: கிழக்குப்பதிப்பகம்

விலை: ரூ. 80

எல்லோரும் இந்தப் புத்தகத்தைப் படிப்பதுடன் நமது ஜனநாயகக் கடமையைச் செய்ய மறக்க வேண்டாம். ப்ளீஸ்! உங்கள் வாக்குரிமைகளை பயன்படுத்துங்கள்! இந்தியாவிற்கு நல்ல காலம் பிறக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் வோட்டுப் போடுவது ஒன்றே வழி!

 

குடியரசு தின வாழ்த்துக்கள்!