வந்தார் விவேகானந்தர்!

vivekanandar - firstbook

எத்தனை நாட்களாய் இந்த நாளுக்காய் தவமிருந்திருப்பேன்! காத்திருத்தல் என்பதன் உண்மையான பொருள் தெரிந்தது என்று சொல்லலாம்.

எந்த மொழியில் எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் அவற்றை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாட்களாக உண்டு. யாரைப் பிடிப்பது, யாரிடம் உதவி கேட்பது என்று தெரியவில்லை. திரு சொக்கன் அவர்களைக் கேட்டேன். அவர் திரு ஜவர்லால்-ஐக் கை காட்டினார். போனவருடம் திரு ஜவர்லால் மொழிபெயர்ப்பு செய்திருந்த கெஜ்ரிவால் எழுதிய தன்னாட்சி புத்தகம் வாங்கியிருந்தேன். அவரிடம் கேட்கலாம் என்று அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். கிழக்குப்பதிப்பகத்தை அணுகலாம் என்று சொன்னார். கிழக்குப்பதிப்பகத்திற்கு தொலைபேசினேன். அகப்பட்டார் திரு மருதன்.

மொழிபெயர்ப்பு பற்றி கேட்டவுடன் ஏதாவது புத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்ய ஆசைப்படுகிறீர்களா என்று கேட்டார். நான் சொன்ன இரண்டு புத்தகங்களுக்கும் ‘ஊஹூம்’ சொல்லிவிட்டார். ‘நீங்கள் ப்ளாகில் எழுதிய (சில) வற்றை அனுப்புங்கள்’ என்றார். பிறகு ‘எங்களது ‘ஆழம்’ பத்திரிகையில் எழுதுங்கள். பிறகு பார்க்கலாம்’ என்றார். முதலில் எழுதியது பெண்கள் தினம் பற்றியது. அவர் சொன்னது மார்ச் 6 ஆம் தேதி. மார்ச் 8 பெண்கள் தினம். அவசரமா எழுதி அனுப்பினேன் உடனே வேண்டும் போலிருக்கிறது என்று. ஆழம் ஒரு மாதப் பத்திரிகை; நான் எழுதுவது அடுத்த மாதம் வரும் என்பது தெரியாமல்! எப்படியெல்லாம் கற்றுக்கொள்ளுகிறேன்! அடுத்தாற்போல ஒன்பில்லியன் ரைஸ் என்பது பற்றி எழுதச்சொன்னார். இந்த முறை முதலிலேயே காலக்கெடு பற்றிக் கேட்டுக்கொண்டுவிட்டேன்.

நிதானமாக எல்லாத் தகவல்களையும் சேகரித்து எழுதினேன். நன்றாக இருக்கிறது என்றார். அப்பாடா! பிறகு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வாய்ப்புக் கொடுத்தார். இந்தமாதம் வரை எழுதி இருக்கிறேன். சென்ற செப்டம்பர் மாதம் ‘சென்னை வருகிறேன். உங்களை சந்திக்க முடியுமா?’ என்று கேட்டபோது ‘நிச்சயம் வாருங்கள்’ என்றார். செப்டம்பர் 10 ஆம் தேதி சந்தித்தேன். நன்றி சொல்லப் போனவளுக்கு  இந்த புத்தகம் எழுதும் வாய்ப்புக் கொடுத்தார்.   இராமகிருஷ்ணமடத்திலிருந்து சுவாமிஜியின் வரலாற்றுப் புத்தகங்கள் இரண்டு வாங்கிக்கொண்டு பத்து தலைப்புகள் கொடுத்து ஒரு முன்னோட்டம் எழுதி அனுப்பினேன். அப்போதே சொன்னார்: ‘உங்களுக்கு அதிக நேரம் இல்லை; நவம்பர் இறுதிக்குள் முடித்து அனுப்பவேண்டும்’ என்றார். நான் எழுதிய முன்னோட்டத்தைப் படித்து பச்சை விளக்கு காட்டியபோது அக்டோபர் வந்துவிட்டது. நவராத்திரி ஆரம்பம்.

கிடைத்த நேரத்தில் எல்லாம் புத்தகமும் பென்சிலும் கையுமாக விவேகானந்தரை மெல்ல மெல்ல உள் வாங்க ஆரம்பித்தேன். என்னவென்று சொல்ல? படிக்கப்படிக்க சொல்ல முடியாத உணர்ச்சிகள். என்ன மனிதர்! எதற்காக இத்தனை கஷ்டப்பட வேண்டும்? கடவுளை தேடி அலைந்து கடைசியில் மனிதனில் மனிதத்தைக் கண்டு அதுவே தெய்வம் என்கிறாரே! எல்லா மனிதர்களின் மேலும் எல்லையில்லா கருணை. துறவறம் என்பது உன் சொந்த முக்தி மட்டுமல்ல; சக மனிதனிடம் கருணை வை என்கிறாரே! துறவு என்று சொல்லி கதவை சாத்திக் கொள்ளாதே; வெளியே வா. சமுதாயத்திற்கு சேவை செய் என்கிறாரே! துறவறத்திற்கு ஒரு புது அர்த்தம் கொடுத்து, மனித சக்தியின் மேல் நம்பிக்கை வைக்கச்சொல்லி, கீதை படிக்கும் நேரத்தில் கால்பந்து விளையாடு, உடல் வலிமை உள்ளவலிமையைப் பெருக்கும் என்கிறாரே!

அதைவிட ஆச்சரியம் இன்னொன்று: இந்தியாவிற்கே இந்தியாவை காட்டிக் கொடுத்தாரே, அது! இந்தியா என்றால் வறுமையும், பஞ்சமும், பெண் குழந்தைகளைக் கொல்லுவதும், பெண்கள் கொடுமைக்கு உள்ளாவதும் மட்டுமே என்று நினைத்திருந்த மேலைநாடுகளின் எண்ணத்தை மாற்றி, ஆன்மீகச் செல்வம் செழிக்கும் நாடு இந்தியா என்ற கருத்தை நிலைநாட்ட தன்னந்தனியாக மேலைநாடுகளுக்குச் சென்றாரே, அவருடன் கூடப் போனது யார்? எந்த இந்து சமய அமைப்பின் சார்பில் அவர் மேலைநாடுகளுக்குச் சென்றார்? சர்வமத மகாசபையில் எல்லோரும் முன்கூட்டியே தயார் செய்துகொண்டு வந்து பேசியபோது, முன்தயாரிப்பு எதுவும் இல்லாமல், ‘அமெரிக்க சகோதர சகோதரிகளே’ என்று பேச ஆரம்பித்து அனைவரையும் ஸ்தம்பிக்கச் செய்தாரே, அவரை வழி நடத்திய அற்புத ஆற்றல் எது? 150 ஆண்டுகளுக்குப் பின்னும் நாம் அவரை தெய்வத் திருமகனாக நினைக்கக் காரணம் என்ன? அவருடனேயே, அவர் வாழ்ந்த காலத்திலேயே இருப்பது போல இரவும் பகலும் அவர் சிந்தனையே!

நவராத்திரி ஆயிற்று தீபாவளி; தொடர்ந்து கார்த்திகை! நவம்பர் இறுதிக்குள் முடிக்க முடியுமா? கடைசி அத்தியாயத்தை எப்படி முடிப்பது என்று ஒரு குழப்பம். நெருங்கிய நண்பர் – பதிவர் வழிகாட்டினார். நான் நினைத்ததும் அவர் சொன்னதும் சரியாக இருந்தது. சுவாமிஜி அன்று கொடுத்த உத்வேகம் எனக்குள்ளும் புகுந்து புத்தகத்தை முடித்து அனுப்பியும் விட்டேன். நம்பமாட்டீர்கள், அனுப்பிய அன்று உறக்கமே வரவில்லை!

இதோ இப்போது புத்தக வடிவில் வந்தே விட்டார் விவேகானந்தர்! இந்த சந்தோஷச் செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக மிக சந்தோஷமடைகிறேன். திரு மருதனுக்கும், கிழக்குப் பதிப்பகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

சென்னை புத்தகக்கண்காட்சியில் கிழக்குப்பதிப்பகம் ஸ்டாலில் கிடைக்கும் இந்த புத்தகம்.