கண்ணிலே நீரெதற்கு?

 

நோய்நாடி நோய்முதல்நாடி – 32

‘கண்ணிலே நீரெதற்கு? காலமெல்லாம் அழுவதற்கு!’

அந்த காலத்தில் ‘போலீஸ்காரன் மகள்’ படத்தில் சீர்காழி கோவிந்தராஜன், எஸ் ஜானகி குரலில் ஒலிக்கும் இந்த பாடல் மிகவும் பிரபலம். சினிமாவில் இந்தப்பாடல் காட்சியைப் பார்த்தபோது விக்கி விக்கி அழுதவர்கள் அதன்பிறகு இந்தப்பாடல் வானொலியில் ஒலிக்கும்போதெல்லாம் அழுதார்கள்.

 

உண்மையில் கண்ணீர் என்பது நிச்சயம் காலமெல்லாம் அழுவதற்கு அல்ல. நமது கண்களை கழுவுவதற்கும், ஈரத்தன்மையுடன் வைப்பதற்கும், நாம் இமைகளை மூடித் திறக்கும்போது ஏற்படும் உராய்வைத் குறைக்கவும்தான். எந்தவிதமான வலுவான உணர்ச்சியாக இருந்தாலும் – துக்கம், ஆனந்தம், அதீத வியப்பு – கண்ணில் நீர் வருவது இயல்பு. அதிகமான சிரிப்பு, கொட்டாவி, கண்களில் எரிச்சல் இவற்றினாலும் அதிகமான கண்ணீர் வரலாம்.

 

நம் கண்களில் உள்ள கண்ணீர் திரை மூன்று அடுக்குகளைக் கொண்டது. முதல் அடுக்கு Lipid layer (கொழுப்பு அடுக்கு) எனப்படுகிறது. இதில் இருப்பது எண்ணெய்கள். அடுத்ததாக இருப்பது நீர் அடுக்கு. மேல் அடுக்கு இந்த நீர் அடுக்கினை காப்பதுடன், கண்ணீர் வழிந்து கன்னங்களில் வழியாமல் தடுக்கிறது. இரண்டாவதாக இருக்கும் நீர் அடுக்கு தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது. இந்த கண்ணீர் திரை சமமாக கண்ணினுள் பரவி இருப்பதற்கும் இந்த அடுக்கு உதவுகிறது. மூன்றாவது  அடுக்கு சளி அடுக்கு. விழி வெண்படலத்தின் மேல் உள்ள இந்த அடுக்கும் கண்ணீர்த்திரை சமமாக பரவுவதற்கு உதவுகிறது. 

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள்

பூச்சி இனங்களின் கண்கள்

நோய்நாடி நோய்முதல் நாடி – 31

eyes of insects

நமக்குக் கண்கள் இருப்பதுபோலவே விலங்குகளுக்கும், பூச்சி இனங்களுக்கும் கண்கள் இருக்கின்றன. இவைகள் நம்மைப் போலவே பார்க்குமா? நாம் கண்களை பயன்படுத்தும் வகையிலேயே இவைகளும் பயன்படுத்துமா?

பூனைக்கண் என்று சிலரை குறிப்பிடுகிறோம். உண்மையில் பூனையின் கண் அமைப்பு பற்றி யோசித்திருக்கிறோமா? அத்தனை பெரிய யானைக்கு ஏன் இத்தனை சிறிய கண்கள்? இப்படியெல்லாம் என்றைக்காவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? இதோ இந்தவாரம் இதுபற்றி பேசலாம், வாருங்கள்.

மனிதர்களின் கண்களைவிட விலங்குகள், பூச்சிகளின் கண்கள் மிகவும் வித்தியாசமானவை. இரவிலும் அவைகளுக்கு கண்கள் தெரியவேண்டும் ஆகையால் பயன்பாடுகளும் அமைப்பும் வித்தியாசமானவைதான். பெரும்பாலான பூச்சி இனங்களுக்கு கூட்டுக் கண்கள் எனப்படும் compound eyes இருக்கின்றன. இவற்றைத் தவிர கூடுதலான கண்களும் இருக்கின்றன. இந்தக் கூடுதல் கண்கள் simple eyes (Ocelli) எனப்படுகின்றன. தேனீ, வண்ணத்துப்பூச்சி, வீட்டு ஈ, வெட்டுக்கிளி இவற்றிற்கு இரண்டு பெரிய கண்கள் இருப்பது போலத் தெரியும். ஆனால் இவை பல ஆயிரக்கணக்கான குட்டிகுட்டியான கண்கள் (ommatidia) அல்லது கண்களின் பகுதிகள்தான். இந்தக் கண்களின் எண்ணிக்கை பூச்சியின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்.

தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பைத் தொடரவும்

குழந்தைகள் பொய் சொல்லுவதில் பெற்றோரின் பங்கு?

செல்வ களஞ்சியமே 57

 

‘குழந்தை கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறோம், வெளியில் அழைத்துப் போகிறோம் எதற்கும் குறை வைப்பதே இல்லையே, அப்படியும் என் குழந்தை பொய் பேசுகிறதே’ என்று பெற்றோர்கள் விசனப்படுகிறார்கள்.

 

வகுப்பில் ஆசிரியை தேர்வு முடிந்தபின் தாள்களை மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர்களின் கையெழுத்து வாங்கி வரச் சொல்லுகிறார். ரவி மிகவும் குறைந்த மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறான். எப்போது கேட்டாலும் அப்பா ஊருக்குப் போயிருக்கிறார் என்கிறான். இவனது பையில் கையெழுத்திடாத தாள் இருப்பதை பார்த்த ஆசிரியை வகுப்பில் எல்லார் முன்னாலும் கோபிக்கிறார். ‘என்ன பெற்றோர்கள்’ என்று பெற்றோர்கள் மேல் அவரது கோபம் திரும்புகிறது.

 

வீட்டில் என்ன நடக்கிறது? ஏன் குறைந்த மதிப்பெண், நான் கையெழுத்துப் போடமாட்டேன் என்கிறார், தந்தை. தாயும் அதையே சொல்லும்போது ரவியால் என்ன செய்யமுடியும்? ஆசிரியையும் சரி, பெற்றோர்களும் சரி ஏன் குறைந்த மதிப்பெண் வாங்கினாய், அப்பா ஊரில் இல்லை என்று ஏன் பொய் சொல்லுகிறாய் என்று கோபிக்கிறார்களே தவிர, அவன் அந்த பாடத்தில் குறைந்த மதிப்பெண் வாங்க என்ன காரணம் என்று கேட்பதேயில்லை. ரவி ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன்.

 

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள்

 

 

பொய்யைப் பற்றிய சில உண்மைகள்

செல்வ களஞ்சியமே – 56

‘பொய் சொல்லக்கூடாது காதலி – பொய் சொன்னாலும் நீ என் காதலி’

எனக்கு மிகவும் பிடித்த பாடல். உங்களுக்கும் பிடிக்கும், இல்லையா? இந்தப் பாடலுக்கும், நமது தொடருக்கும் என்ன சம்மந்தம், என்கிறீர்களா? குழந்தைகள் மட்டும் தான் பொய் சொல்லுவார்கள் என்பதில்லை; காதலன் காதலியிடமும், காதலி காதலனிடமும் பொய் சொல்லுவார்கள். அதுமட்டுமில்லை; கவிதைக்குப் பொய் அழகு என்கிறார் கவிஞர் வைரமுத்து.

 

இதையெல்லாம் ரசிக்கும் நாம் நம் குழந்தைகள் பொய் சொல்லும்போது வருத்தப்படுகிறோம். வேதனைப் படுகிறோம். ஏன்? எல்லோருமே ஏதோ ஒரு சமயத்தில் புளுகுகிறோம். ஏன்? இந்தக் கேள்விகளுக்கு பதில் பார்ப்பதற்குமுன் பொய்யைப் பற்றிய சில உண்மைகளைப் பார்ப்போமா?

 

வர்ஜினியா பல்கலைக்கழக உளவியலாளர் பெல்லா டீபாலோ (Bella dePaulo) தனது சகாக்களுடன் பொய் பற்றி ஒரு ஆராய்ச்சியில் இறங்கினார். 77 பள்ளி மாணவர்களையும், 70 உள்ளூர் ஆசாமிகளையும் தேர்ந்தெடுத்து, ஒரு வாரத்திற்கு எப்போதெல்லாம் அவர்கள் பொய் சொல்லுகிறார்கள் என்று குறித்து வைக்கச் சொன்னார்.

 

மேலும் விவரங்கள் : நான்குபெண்கள்lies

அன்புள்ள அர்விந்த்!

திரு அர்விந்த் கெஜ்ரிவால் மீதான எனது நம்பிக்கையை ஒரு திறந்த மடல் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறேன். இந்தக் கடிதம் 4tamilmedia.com தளத்தில் வெளியாகியிருக்கிறது.

kejriwal

வளமான இந்தியாவை உருவாக்க…!

வணக்கம்.

உங்களை மிகவும் கவனமாகக் கவனித்து வரும் பலகோடி இந்தியர்களில் நானும் ஒருவள். அரசியல் அதிகம் தெரியாத எனக்கு உங்களின் வரவு ஒரு புது நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. உங்கள் வரவினால் இந்திய அரசியல் நிச்சயம் ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கிச் செல்லும் என்ற நம்பிக்கை. புதிதாகப் பிறக்கும் குழந்தை எப்படி ஒரு குடும்பத்திற்கு ஆனந்தம், நம்பிக்கை கொடுக்குமோ அதுபோல இந்திய அரசியலில் புதிதாக பிறந்திருக்கும் குழந்தையான ஆம் ஆத்மி கட்சி பல கோடி இந்தியர்களுக்கு ஆனந்தத்தையும், புதிதான நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது.

 

டெல்லி முதலமைச்சர் ஆவதற்கு முன்பே, திரு அண்ணா ஹசாரேயுடன் தலைமையில் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திய அன்றே நீங்கள் அடையாளம் காணப்பட்டு விட்டீர்கள், என் போன்ற சாமான்ய இந்தியர்களால். உங்களது நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும் தெளிவான பேச்சும், என்ன செய்ய வேண்டும் என்பதில் இருந்த உறுதியும்,  எங்களது நம்பிக்கையை அதிகப்படுத்தியது. இளைய தலைமுறையைச் சேர்ந்த வசீகரமான தலைவராக நீங்கள் இருப்பீர்கள் என்று மனதில் உறுதி பிறந்தது.

 

60 வருடங்கள் நாட்டை ஆண்டவர்களைப் பார்த்து பார்த்து, அரசியல் தலைவர்கள் என்றால் வயதானவர்கள், சொல்லியதையே திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டு இருப்பார்கள் என்ற எங்கள் எண்ணத்தை உங்கள் ‘இளம் தலைமுறையை சேர்ந்தவர்’ என்கிற அடையாளம் உடைத்தது. இத்தனை நாட்கள் சாமான்ய இந்தியன் உங்களைப் போன்ற ஒருவருக்காகத் தான் காத்திருந்தான் என்பது போல தோன்றியது.

 

உன் நண்பனைக் காட்டு; உன்னைப்பற்றிக் கூறுகிறேன் என்பார்கள். அதேபோல ஆரம்பத்தில் உங்களுடன் கூட திரு அண்ணா ஹசாரே, காவல்துறை அதிகாரி கிரண் பேடி, நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, திரு பிரஷாந்த் பூஷன் ஆகியவர்கள் இருந்தனர். இவர்களுடனான உங்களது  நட்பில் உங்கள் மேலிருந்த எங்கள் நம்பிக்கை வானளவு உயர்ந்தது.

 

யார் நீங்கள், இவ்வளவு நாட்கள் எங்கிருந்தீர்கள் என்று ஆராய முற்பட்டேன். அப்போது எனக்குக் கிடைத்தது நீங்கள் எழுதிய ஸ்வராஜ் என்கிற புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘தன்னாட்சி’ என்கிற புத்தகம்.

 

இந்த புத்தகத்தின் மூலம் உங்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். 1989 ஆம் ஆண்டு ஐஐடி கரக்பூரில் இயந்திரவியலில் பட்டம் பெற்றவர்; சிறிது காலம் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணிபுரிந்து 1992 இல் இந்திய வருவாய்த்துறையில் இணை ஆணையராக இருந்தவர்; பரிவர்த்தன் என்ற அமைப்பை உருவாக்க நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு தில்லியில் சேரிகளில் வாழும் மக்களுக்கு நிறைய சேவை செய்தவர்; தகவல் அறியும் சட்டத்துக்காக பெரு முயற்சிக்காக ராமோன் மாக்சேசே விருது பெற்றவர்; இவை மட்டுமல்ல; இந்த புத்தகம் எழுதுவதற்காக பலவிடங்களுக்கு பயணம் செய்து, சோதனை முயற்சிகள் செய்து பார்த்திருக்கிறீர்கள். இதனால் உங்கள் மேல் நான் கொண்டிருந்த மதிப்பு பலமடங்கு உயர்ந்தது. இதில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இன்னொரு விஷயமும் என்னை வியக்க வைத்தது. இந்த புத்தகத்தை எல்லோரும் வாங்கும் விலையில் விற்க வேண்டும் என்பதற்காக ராயல்டி கூட வேண்டாம் என்று நீங்கள் பதிப்பகத்தாரிடம் சொல்லியிருப்பது.

 

இந்தப்புத்தகத்தில் நீங்கள் சொல்லியிருப்பவை எல்லாமே நடைமுறையில் சாத்தியம் என்பது புரிந்தபின் இத்தனை வருடங்கள் வீணாகிவிட்டனவே என்று வருத்தப்பட்டோம். ஆனால் தாமதமானாலும் உங்கள் வருகை சரியான சமயத்தில் தான் நடந்திருக்கிறது என்று புரிந்தது.

 

நீங்கள் தனிக்கட்சி ஆரம்பித்தவுடன் எங்கள் நம்பிக்கைகள் இன்னும் வளர்ந்தன. இனி இந்தியாவுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என்று நம்பினோம். சாமான்ய மக்களின் கட்சி என்ற பெயரை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டோம். எங்கள் குரலாக நீங்கள் பேசுவீர்கள் என்று மேலும் மேலும் நம்பிக்கைகளை வளர்த்துக்கொண்டோம்.

 

கட்சியை வளர்க்க சில வருடங்கள் ஆகும்; பிறகுதான் நீங்கள் தேர்தலில் நிற்பீர்கள் என்ற எதிர்பார்ப்பை முறியடித்துவிட்டு அதிரடியாக டெல்லி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றீர்கள்.

 

அரசியல் என்பது ஒரு சாக்கடை; யாரும் அதில் இறங்கி சுத்தம் செய்ய விரும்புவதில்லை என்கிற சொல்லை கையில் துடைப்பத்துடன் வந்து பொய்யாக்கிக் காட்ட முயன்றது எங்களிடைய பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் சாக்கடையை துப்புரவு செய்ய வந்த துப்புரவாளர் நீங்கள் என்று நினைத்தோம். அதுமட்டுமல்ல; பொதுவாழ்வில் நேர்மை, நாணயம் என்ற நல்ல செய்தி தாங்கி வந்திருப்பவர் நீங்கள் என்று இந்தியாவே உங்களைக் கொண்டாடியது.

 

காங்கிரஸ், பாஜகா இரண்டு கட்சியை விட்டால் வேறு வழியில்லை என்றிருந்தஎங்களுக்கு உங்கள் வரவு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது. இந்திய அரசியலில் நிச்சயம் மாறுதல் கொண்டுவருவீர்கள் என்று நினைத்தோம்.  உங்களை முதலில் இந்தக்கட்சிகள் பலத்த எதிரியாக  எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் உங்களது அதிரடி வெற்றி எல்லோரையும் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ள வைத்துவிட்டது.

 

நீங்கள் தனிக்கட்சி ஆரம்பித்தவுடன் ஏதோ காரணத்தினால் அண்ணா உங்களிடமிருந்து விலகினார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் உங்களுடன் கூட இருந்த உங்கள் நண்பர்கள் ஒவ்வொருவராக விலக ஆரம்பித்தனர். இது கொஞ்சம் நெருடலாக இருந்தாலும், நீங்கள் யாரைப்பற்றியும் எதுவும் கூறவில்லை. நாங்களும் உங்கள் மேல் இருந்த நம்பிக்கையில் இவற்றை அதிகம் பொருட்படுத்தவில்லை.

 

தொலைக்காட்சிகள் உங்களின் நேர்முக பேட்டிகளை மாறி மாறி ஒளிபரப்பின. கேள்விக் கணைகளால் உங்களைத் துளைத்தனர் ஒவ்வொருவரும். உங்களை எப்படியாவது மண்டி போடச் செய்துவிட வேண்டும் என்பதே அவர்களது குறியாக இருந்தது. நீங்கள் துளிக்கூட அசரவில்லை. முகத்தில் இருந்த புன்னகை மாறவில்லை. கீழே குனிந்துகொண்டோ, சூனியத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டே பதில் கூறவில்லை. கேள்வி கேட்பவரின் கண்களைப் பார்த்து நேராக பதில் அளித்தீர்கள். எல்லாவிதமான கேள்விகளுக்கும் உங்களிடம் பதில் இருந்தது. அதுவே எங்களை வியக்க வைத்து, உங்கள் மேலிருந்த மரியாதை அதிகரித்தது.

 

பொதுவாக ‘பழுத்த மரம்தான் கல்லடி படும்’ என்பார்கள். ஆனால் உங்கள் விஷயத்தில் பழுப்பதற்கு முன்னாலேயே கல்லடிக்க காத்திருந்தார்கள். ஒருவேளை எங்கே பழுத்துவிடுவீர்களோ என்று பயந்து கல்லடித்து உங்களை வீழ்த்தப் பார்த்தார்களோ?

 

நீங்கள் டெல்லியில் உங்கள் பலத்தை நிரூபித்தது எங்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஒருவிதத்தில் சற்று கலக்கமாகவும் இருந்தது; காரணம் கூட்டணி அரசு அமைக்கும் நிலை வந்திருந்தது உங்கள் வெற்றியால். கோடிக்கணக்கான பணம் செலவழித்து நடக்கும் தேர்தலில் நிலையான அரசு வேண்டும் என்றுதான் மக்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் கூட்டணி அரசு தான் தில்லியில் அமைந்தது. அதுவும் எனக்கு சற்று குழப்பமாக இருந்தது நீங்கள் ஊழல் என்று குற்றம் சாட்டிய காங்கிரசுடனேயே கூட்டணி வைக்கிறீர்களே என்று.

 

இன்று உங்களின் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து பார்த்து விமரிசனம் செய்யும் ஊடகங்கள் இதேபோல ஒவ்வொரு அரசியல்வாதியையும் செய்திருந்தால் நாடு இவ்வளவு சீரழிந்திருக்காதே என்று தோன்றுகிறது. உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்களா என்று  இதுவரை எந்த அரசியல்வாதியையும் ஊடகங்கள் கேட்டதில்லை. ஆனால் உங்களைக் கேட்கிறார்கள்.

 

 

டெல்லி அரசு நிர்வாகத்தை கவனித்து அதை சரி செய்து, இந்தியாவிற்கே வழி காட்டியாக நீங்கள் இருந்தால் போதுமே, ஏன் அனாவசியமாக போலீசுக்கு எதிராக தர்ணா செய்தீர்கள்? ஊழல் அரசியல்வாதிகள் என்று ஒரு பட்டியல் படித்தீர்கள், தேவைதானா இது? உங்கள் கட்சிக்கு ஆதரவு கொடுத்த சிலர் உங்களிடமிருந்து விலகினார்கள். இதுவும் உங்களை வீழ்த்திவிடுமோ? என்றெல்லாம் உள்ளத்தில் பல பல கேள்விகள். ஆனால் அரசியலில் எதிரிகள் ஆடும் ஆட்டத்திற்கு நீங்களும் எதிராட்டம் ஆடத்தானே வேண்டும்?

 

இன்றைய நிலவரப்படி ஜன்லோக்பால் கொண்டுவரப்பட வேண்டும்; இல்லையென்றால் பதவி விலகுவேன் என்று சொல்லியிருக்கிறீர்கள். என்ன ஆகுமோ தெரியாது. ஆனால் ஒன்று நீங்கள் முன் வைத்த காலை பின் வாங்க மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

 

அரசியலில் ஒரு கட்சி ஆரம்பித்து நடத்துவது என்பது எத்தனை கடினம் என்று எங்களுக்குத் தெரியும். அரசு இயந்திரத்தில் பதவி கிடைக்காத காரணத்தால் மட்டும் தாய்கட்சியிலிருந்து விலகி வேறு கட்சி ஆரம்பிக்கும் பலரையும் பார்த்துவிட்டோம். தொண்டர்கள் செய்யும் அக்கிரமங்களை தட்டிக் கேட்காத தலைவர்களையும் பார்த்துவிட்டோம். இப்போது நடக்கும் நிகழ்ச்சிகள் உங்களை வீழ்த்தலாம். ஆனால் ஆம் ஆத்மி கட்சியை அடியோடு அழிக்க முடியாது. என்னைபோல பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம்.

 

மற்ற கட்சிகளிடம் இல்லாத கை சுத்தம் உங்களிடம் இருக்கிறது. அதை இந்திய மக்கள் புரிந்துகொள்ள நேரம் ஆகலாம். வரும் தேர்தலில் உங்கள் கட்சிக்கு ஆதரவு நிறைய இருக்கும் என்று தோன்றினாலும், டெல்லியில் ஏற்பட்டிருக்கும் இழுபறிநிலை பாராளுமன்றத் தேர்தலில் ஏற்படக்கூடாது என்று விரும்புகிறேன். மத்தியில் நிச்சயம் ஒரு நிலையான அரசு தேவை. கூட்டணி அரசியல் உங்களுக்கும் தெரிந்திருக்கும். இப்போதே அதை அனுபவித்துக்கொண்டு தானே இருக்கிறீர்கள்!

 

பல கோடி இந்தியர்களின் சார்பில் நான் சொல்ல விரும்புவது இதுதான்:

 

2014 தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் 2019 தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று நாட்டை ஆளும் பொறுப்பு உங்களுக்குக் கிடைக்கட்டும். இந்த ஐந்து வருடங்களை நாடு முழுதும் விழிப்புணர்வு கொண்டுவர பயன்படுத்திக் கொள்ளுங்கள். கட்சியைப் பலப்படுத்துங்கள். இதுவரை எந்தக் கட்சிக்கும் இந்த அளவு வரவேற்பு இருந்ததில்லை. என்னைப்போன்ற பல கோடி இந்தியர்கள் ‘உங்களால் முடியும்’ என்று நம்புகிறோம். அந்த நம்பிக்கையை காப்பாற்றுங்கள்.

 

தன்னாட்சி: வளமான இந்தியாவை உருவாக்க (உங்கள் புத்தக தலைப்பு) என்பது உங்கள் தேர்தல் கோஷமாக இருக்கட்டும். நாங்களும் உங்கள் கைகளை பலப்படுத்த தயாராக இருக்கிறோம்.

 

இப்படிக்கு

அன்புடன்

பல கோடி இந்தியர்களின் பிரதிநிதி

குழந்தைகள் ஏன் பொய் சொல்லுகிறார்கள்?

செல்வ களஞ்சியமே – 55

lies

சில வாரங்களாக இரட்டைக் குழந்தைகள், மற்றும் ஒரே பிரசவத்தில் பல குழந்தைகள் என்று பார்த்தோம். ஒரு குழந்தையோ, இரட்டையரோ, பலரோ, ஒவ்வொரு குழந்தையும் தனி ரகம்தான். ஒட்டிப்பிறந்தவர்களுக்கும் தனித்தனி குணங்கள்; தனித்தனி ஆசைகள். அவர்களை வளர்ப்பது என்பது பெற்றோர்களுக்கு நிச்சயம் சவால்தான்.

 

சிறிது நாட்களுக்கு முன் ஒரு இணைய தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. குழந்தை வளர்ப்பு நிகழ்ச்சி அது. ஒரு பெண்மணி தனது மகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். எத்தனை வயது என்று சொல்லவில்லை. ஆனால் அவர் பேசியதிலிருந்து ரொம்பவும் பெரிய பெண் இல்லை என்று புரிந்தது.

 

இரண்டுநாட்கள் முன் பள்ளி விடுமுறை. இந்தக் குழந்தை வீட்டில் வழக்கம்போல விளையாடிக்கொண்டு, சாப்பிட்டுக்கொண்டு சந்தோஷமாகவே இருந்திருக்கிறாள். ஆனால் பள்ளியில் தனது ஆசிரியையிடம் ‘நேத்திக்கு ஸ்கூல் லீவு. எனக்கு வீட்டுல இருக்கவே பிடிக்கல. ரொம்ப ‘போர்’ அடிச்சுடுத்து. அழுகை அழுகையாக வந்தது. எப்போ ஸ்கூலுக்கு வரப்போறோம்ன்னு இருந்தது’ என்று சொல்லியிருக்கிறாள். அம்மாவுக்கோ ரொம்பவும் வியப்பு; ஏன் குழந்தை இப்படிச் சொல்லியிருக்கிறாள் என்று. ஆனால் அதைப்பற்றி குழந்தையிடம் ஒன்றுமே கேட்கவில்லையாம். ‘குழந்தையைப் பார்த்து ஏன் பொய் சொன்னாய் என்று கேட்ககூடாது. அதனால் சும்மா இருந்துவிட்டேன்’ என்றார்.

 

இவர் இன்னொரு நிகழ்வையும் குறிப்பிடுகிறார். வீட்டிற்கு யாராவது தொலைபேசினால் இந்தக் குழந்தை தொலைபேசியை எடுத்து ‘அம்மா ஊரில் இல்லை. வெளியூருக்கு போயிருக்காங்க’ என்று சொல்லுவாளாம். அம்மா அங்கேயே உட்கார்ந்திருக்கும்போதும் இப்படி சொல்லுவாளாம். அப்போதும் அம்மா எதுவும் சொல்லமாட்டாராம். ‘ஏன் பொய் சொல்லுகிறாய் என்று குழந்தையைக் கேட்ககூடாது இல்லையா?’ என்கிறார். இந்தக் குழந்தை இப்படி ஊரில் இருக்கும்போதே இல்லையென்று சொல்லுவதால் பல சமயங்களில் உறவினரிடம் ஏச்சு கேட்கவேண்டியிருக்குமாம். அப்போதும் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்கமாட்டாராம்.

 

தொடர்ந்து படிக்க : நான்குபெண்கள்

லேசிக் சிகிச்சை

நோய்நாடி நோய்முதல் நாடி – 30

eyes

‘காலையில் எழுந்தவுடன் படிப்பு’ என்றார் நம் பாரதி. என்னைப் பொறுத்தவரை காலை எழுந்தவுடன் கண்ணாடி – முகம் பார்க்கும் கண்ணாடி இல்லைங்க…. (அதிகாலையில் ‘பேய்’ முகத்தில் விழிக்கும் எண்ணம் எனக்குக் கிடையாதுங்கோ!) மூக்குக்கண்ணாடி! ஆரம்பத்தில் படிக்கும்போது மட்டுமே பயன்படுத்தி வந்த மூ.கண்ணாடி இப்போது தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் என் கண்களின் மேலேயே வாசம் செய்கிறது. என்னைபோல பலர் இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி: LASIK எனப்படும் சிகிச்சை மூலம் காலையில் எழுந்தவுடன் கண்ணாடி தேட வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான்.

 

LASIK எனப்படும் எழுத்துக்களின் முழு பொருள் Laser In-Situ Keratomileusis. கிட்டப்பார்வை, தூரப்பார்வை, தெளிவில்லாத பார்வை என்று எல்லாவகையான பார்வை குறைபாடுகளுக்கும் செய்யப்படும் அறுவை சிகிச்சை. லேசர் கதிர்கள் மூலம் கண்ணின் முன் பகுதி (corneal bed) மறுவடிவமைப்பு செய்யப் படுகிறது.

 

லேசிக் சிகிச்சை அளிக்க மைக்ரோகெரடோம் என்னும் கருவி பயன்படுத்தப்படுகிறது. லேசர் ஒளிக்கதிர்களின் உதவியால் கருவிழியில் ஒரு சிறிய திறப்பு உருவாக்கப்படுகிறது. கருவிழி மறுவடிவமைப்பு செய்யப்பட்டு இந்த திறப்பு மறுபடி மூடப் படுகிறது.

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள் 

 

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்

செல்வ களஞ்சியமே – 54

quadruplets

 

தான் கருவுற்றிருப்பது தெரிய வந்தவுடன் காயத்ரி நினைத்தார்: தனது மகனுக்கு விளையாட ஒரு தம்பியோ, தங்கையோ பிறக்கப்போகிறது என்று. ஆனால் நடந்தது என்ன? ஒரு தம்பியும் மூன்று தங்கைகளும் பிறந்திருக்கிறார்கள். வியப்பாக இருக்கிறதா? நமக்கு மட்டுமல்ல; காயத்ரி குடும்பத்தினருக்கும் இது வியப்பான செய்திதான். (ஸ்கேனில் தெரிந்திருக்காதோ?)  சென்னை மைலாப்பூரைச்  காயத்ரி என்ற பெண்மணிக்கு கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. ஒரு ஆண், மூன்று பெண் குழந்தைகள். இதைபோல ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறப்பது ரொம்பவும் அரிதாக நடக்கும் விஷயம். உலகம் முழுவதும் சுமார் 4000 க்கும் குறைவான குழந்தைகளே இதுபோல பிறந்துள்ளார்கள். 70 லட்சம் பிரசவத்தில் ஒன்று இதுபோல ஏற்படும்.

 

இந்த மருத்துவமனையில் இதுபோல நான்கு குழந்தைகள் பிறப்பது இது இரண்டாம் தடவை. 1984 இல் இதுபோல நான்கு குழந்தைகள் பிறந்திருக்கின்றன. இந்த மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர் டாக்டர் மோகனாம்பாள் கூறுகிறார்: ‘அப்போது நான் எனது முதுகலைப்பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒருமுறை ஐந்து குழந்தைகளும், ஒரு முறை நான்கு குழந்தைகளும் பிறந்தன. நாங்கள் எல்லோரும் இப்படி ஒரே பிரசவத்தில் பல குழந்தைகள் பிறப்பதை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தோம். அதிஷ்டவசமாக எல்லா குழந்தைகளும்  பிழைத்து பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்தன’.

 

தொடர்ந்து படிக்க : நான்குபெண்கள்

இரட்டை குழந்தைகள் – 2

 

செல்வ களஞ்சியமே – 53

உலகத்தின் மிகவும் வயதான இரட்டையர் தங்களது பிறந்தநாளை ஜனவரி நான்காம் தேதி கொண்டாடினார்கள். இங்கிலாந்தில் இருக்கும் ஈனா பக் மற்றும் லில்லி மில்வார்ட் இருவருக்கும் இப்போது 104 வயது! இதன் காரணமாக உலகின் மிக மூத்த இரட்டையர் என்ற பெயரில் கின்னஸ் புக் ஆப் வேர்ல்ட் ரெகார்டில் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த விருது கிடைத்ததில் இருவருக்கும் மிக மிக மகிழ்ச்சி. எப்போதும் போல இருவரும் தங்களது பிறந்தநாளன்று ஒன்றாக இருந்தனர். இப்போது இந்த இரட்டையரில் ஒருவரான லில்லிக்கு இடுப்பு எலும்பு முறிவு காரணமாக மருத்துவ மனையில் இருக்க நேர்ந்த போதிலும் இருவரும் ஒரே குரலில் சொல்லுவது ‘நாங்கள் இருவரும் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர்கள்; எங்கள் இருவரின் ஆரோக்கியமும் நன்றாகவே இருக்கிறது’ தங்களது ஆரோக்கியத்தின் ரகசியமாக இருவரும் சொல்லுவது: எப்போதும் சிரிப்பு, அதற்கு ஒரு நல்ல ஜோக்!

 

இரட்டைக் குழந்தைகளை பார்த்துக் கொள்வது எப்படி? முதலில் இரட்டையர்களைச் சுமக்கும் போதும், பிரசவம் ஆன பின்பும்  என்னென்ன செய்யலாம்?

 

  • நீங்கள்தான் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளப் போகிறீர்கள். அதனால் உங்கள் மனநலம், உடல்நலம் நல்ல நிலையில் இருப்பது மிகவும் முக்கியம்.
  • வீட்டுவேலைகள், கணவரின் தேவைகள் எத்தனை முக்கியமோ அத்தனை ஏன், இவற்றைவிட என்று கூடச் சொல்லலாம் – உங்களை நீங்கள் கவனித்துக் கொள்வது.
  • மனதில் எப்போதும் ஒரு உற்சாகம் இருக்கட்டும். பாசிடிவ் எண்ணங்களையே நினையுங்கள்.
  • மற்றவர்களிடமிருந்து உதவியை பெறுவதில் தயக்கம் வேண்டாம்.
  • எல்லாவற்றையும் நீங்களே செய்யவேண்டும் என்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். சாதாரண வேலைகள் கூட கடினமாகத் தோன்றும் இதனால்.
  • மனதிற்கும் உடலுக்கும் தேவையான ஓய்வு கொடுங்கள். இதனால் அடுத்தடுத்த வேலைகளை சுலபமாகச் செய்யலாம்.

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள்