எங்கள் மாமா

ஸ்ரீரங்கம் என்றால் உடனே நினைவுக்கு வருவது எங்கள் பாட்டியின் வீடு மட்டுமல்ல; எங்கள் மாமாக்களின் நினைவும் தான்.

எங்கள் பெரிய மாமா சென்னை திருவல்லிக்கேணியில் இருந்தார். அவர் ரொம்பவும் கண்டிப்பானவர். அவரிடம் எங்களுக்கு சற்று பயம் அதிகம். எதிரில் நின்று பேச பயப்படுவோம்.

அடுத்த மூன்று மாமாக்களிடம் அதீத செல்லம். மாமா வா, போ என்று பேசும் அளவுக்கு சுதந்திரம். இந்த மூவரில் பெரிய மாமா திருமஞ்சனம் கண்ணன் என்கிற கண்ணப்பா மாமா. அவர்தான் இந்தப் பதிவின் நாயகன்.

நாங்கள் சிறுவயதினராக இருந்த போது  மாமா எங்களுடன் சில காலம் சென்னையில் தங்கி இருந்தார். அதனால் இந்த மாமா ரொம்பவும் நெருக்கமானவர் எங்களுக்கு.

மாமாவின் பொழுதுபோக்கு புகைப்படங்கள் எடுப்பது. அவரது  புகைப்படங்களுக்கு பாத்திரங்கள் நாங்கள் – மாமாவின் மருமான்களும், மருமாக்களும் தான். அதுவும் நான் ரொம்பவும் ஸ்பெஷல்.

என் தோழி ஜெயந்தி எனக்கு photographic memory இருப்பதாக எழுதியிருந்தாள். என் மாமா நான் photogenic என்று அடிக்கடி சொல்லுவார். அதனால் மாமா எடுத்த படங்களின் முக்கிய கதாநாயகி நானாக இருந்தேன் – எனக்குத் திருமணம் ஆகி புக்ககம் போகும் வரை!

எங்களை சிறுவயதில் புகைப்படங்கள் எடுத்ததுடன் நிற்காமல் எங்களது திருமணங்களுக்கும் மாமாதான் புகைப்படக்காரர்.

தன்னிடமிருந்த கருப்பு வெள்ளை காமிராவில் மாமா காவியங்கள் படைத்திருக்கிறார். மாமாவின் புகைப்படங்களில் நாங்கள் எல்லோரும் உயிருடன் உலா வந்தோம். மாமா தன் புகைப்பட பரிசோதனைகளை எங்கள் மேல் நடத்துவார்.

மாமாவின் மனதில் தோன்றும் கற்பனைகளுக்கு ஏற்ப நாங்கள் ‘போஸ்’ கொடுக்க வேண்டும். மாமா நினைத்தது புகைப்படத்தில் வரும் வரை எங்களை விட மாட்டார்.

இப்போது இருப்பது போல டிஜிட்டல் காமிராக்கள் இல்லாத நேரம் அது. ஒரு பிலிம் சுருள் முடியும் வரை புகைப்படங்கள் எடுத்துவிட்டு, திருச்சி போய் அவற்றை பிரதி எடுத்துக் கொண்டு வருவார். கூடவே புதிய பிலிம் சுருளும் வரும், அடுத்த பரிசோதனைக்கு.

காவிரியில் ஆடிப்பெருக்கன்று சுழித்தோடும் வெள்ளத்திலிருந்து, மகாபலிபுரம் அர்ஜுனன் தபஸ் வரை மாமாவின் கருப்பு வெள்ளைக் காமிராவில் புகைப் படங்களாக சிறைப் பிடிக்கப்பட்டிருக்கும்.

எனக்கு நினைவு இருக்கும் மாமாவின்  புகைப்படப் பரிசோதனை ஒன்று. எனக்கு நானே புத்தகம் கொடுப்பது போல.

நான் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பேன். காமிராவின் லென்ஸ் –ஐ பாதி மூடிவிட்டு உட்கார்ந்திருக்கும் படத்தை எடுப்பார். அடுத்தாற்போல அந்த நாற்காலி பக்கத்தில் நின்று கொண்டு காலி நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு புத்தகத்தைக் கொடுக்க வேண்டும். லென்ஸ்- இன் மறுபாதியை மூடிவிட்டு இந்தப் படத்தை எடுப்பார்.

திரும்பத் திரும்பத் திரும்பத் ……….

எத்தனை முறை இதனை எடுத்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்? எனக்கு இன்றுவரை நினைவு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அப்போதெல்லாம் செய்தி பரிமாற்றம் கடிதங்கள் மூலம்தான். நாங்களும் எங்கள் மாமாக்களுக்கு கடிதம் எழுதுவோம். கடிதத்தின் ஆரம்பத்தில் ‘ஸ்ரீமதே ராமானுஜாய நம:’ போட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது எங்கள் கண்ணப்பா மாமா தான்.

மாமாவுக்கு கணீரென்ற குரல். அகத்தில் இருக்கும் பெருமாளுக்கு அந்த கணீர் குரலில் பாசுரங்கள் சேவித்தபடியே மாமா திருமஞ்சனம் செய்வதைக் காணக் கண் கோடி வேண்டும்.

‘நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ என்று மாமா நாத்தழுதழுக்க பெரிய திருமொழி சேவிக்கும்போது திருமங்கையாழ்வாரும், ‘எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்* எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே’ என்று திருமாலை சேவிக்கும்போது தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் நம் கண் முன்னே தோன்றுவார்கள்.

கண்ணப்பா மாமாவுக்குத் திருமணம் ஆகி மாமி வந்தார். மாமா எங்களுக்கு எத்தனை நெருக்கமோ அத்தனை நெருக்கம் ராஜம் மாமியும். திவ்யப்பிரபந்தம் மட்டுமே தெரிந்திருந்த எங்களுக்கு முமுக்ஷுப்படி, ஸ்ரீவசன பூஷணம், ஆச்சார்ய ஹ்ருதயம் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியவர் இந்த மாமிதான்.

‘பகவத்கீதையில் கிருஷ்ணனுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் ராஜத்தைத் தான் கேட்பார்’ என்று என் மாமா வேடிக்கையாகக் கூறுவார். அந்த அளவுக்குக் கீதையை கரைத்துக் குடித்தவர் மாமி.

பல திவ்ய தேசங்களுக்கும் சென்று அங்கிருக்கும் பெருமாள்களையும் தன் காமிராவில் சிறை எடுத்து வருவார் எங்கள் மாமா. மாமாவிற்கு தான் எடுத்த படங்களுள் மிகவும் பிடித்தமான படம் திருவாலி திருநகரி திருமங்கையாழ்வார் தான். கூப்பிய கைகளுடன் நிற்கும் அவரது திரு முகத்தை மட்டும் க்ளோஸ்-அப் – பில் எடுத்து வீட்டுக் கூடத்தில் மாட்டியிருப்பார். ஆழ்வாரின்  கண்களின் வழியே அவரது கருணை நம்மை ஆட்கொள்ளும்.

இத்தனை திறமை இருந்தும் மாமா தனது திறமையை பணமாக்க விரும்பவில்லை. எத்தனையோ பேர்கள் சொல்லியும் தனது மனதுக்குப் பிடித்த பொழுதுபோக்காக மட்டுமே வைத்துக்கொண்டு இருந்தார்.

எங்களது பாட்டியின் முதுமை காலத்தில் மாமாவும் மாமியும் மிகுந்த ஆதுரத்துடன் பாட்டியைப் பார்த்துக் கொண்டனர். மாமாவின் குழந்தைகளும் பாட்டியினிடத்தில் வாஞ்சையுடனும், மிகுந்த பாசத்துடனும் இருந்தனர். பாட்டியின்  கடைசிக் காலம் இவர்களது அரவணைப்பில் நல்லவிதமாக கழிந்தது. இதற்காக மாமாவுக்கும், மாமிக்கும் நாங்கள் எல்லோருமே நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறோம்.

கண்ணப்பா மாமா என்று நாங்கள் ஆசையுடன் இன்றும் அழைக்கும் எங்கள் மாமாவுக்கு இன்று 80 வயது நிறைகிறது. மார்கழித் திருவாதிரையில் பிறந்தவர் மாமா. எங்கள் அம்மா ஒவ்வொரு வருடமும் தனது தம்பியை நினைத்துக் கொண்டு திருவாதிரை களியும், ஏழுகறிக் கூட்டும் செய்வாள்.

பழைய நினைவுகளுடன், மாமாவின் அன்பில் நனைந்த நாட்களை அசை போட்டபடியே இந்தப் பதிவை மாமாவுக்கு அர்ப்பணிக்கிறேன்.

மாமாவும் மாமியும் என்றென்றும் ஆரோக்கியத்துடன், சந்தோஷமாக இருக்க ஸ்ரீரங்கம் திவ்ய தம்பதிகளை வேண்டுகிறேன்.

25 thoughts on “எங்கள் மாமா

  1. ரஞ்ஜனி,

    உங்க தாய்மாமாவின் அன்பை மகிழ்ச்சியுடன் அசைபோடுவதை பதிவின் மூலம் தெரிந்துகொண்டோம்.அவர்கள் ஆரோக்கியமாகவும்,சந்தோஷமாகவும் இருக்க நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்.

    “மாமா தனது திறமையை பணமாக்க விரும்பவில்லை”______பணமாக்கினால் அடுத்தவர் விருப்பத்திற்கு ஆடனும்.அதனால் அந்த திருப்தி வராது.

    நீங்க கடைசியாக எழுதும் பதிவு முதல் பக்கத்தில் வருமாறு செய்யுங்க. இரண்டுமூன்று பதிவுகளை நான் பார்க்காமல் விட்டுவிட்டது தெரிகிறது. பின்னூட்டத்தைப் பார்த்துத்தான் புதிய பதிவு தெரிய வருகிறது.பதிவுக்கு பின்னூட்டம் இல்லையென்றால் பார்க்காமலே போக வாய்ப்புண்டு. சாப்பிட்டுவிட்டு (breakfast)அந்தப் பதிவுகளுக்கு வருகிறேன்.

    1. அன்புள்ள சித்ரா,

      உங்கள் கருத்துக்களுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி!

      நீங்கள் சொன்னது போலவே செய்து விட்டேன்.
      இனி கடைசிப் பதிவுகள் முதலில் வரும்.

      என்ன ப்ரேக்பாஸ்ட் இன்னிக்கு?

      1. ரஞ்ஜனி,

        எழுதிட்டேனே தவிர பப்ளிஷ் ஆனதும் உள்ளுக்குள் ஒரு உதறல்.ஏதோ ஒரு விஷயத்திற்காக‌க்கூட அப்படி செய்திருக்கலாம்;ஒருவேளை அவ‌ங்களுக்கு அது பிடித்திருக்கலாம்;இன்னும் என்னென்னவோ.அவசரக்குடுக்கை நான்தானோ என்றெல்லாம் நினைத்துவிட்டேன்.மாற்றியதுமில்லாமல் பதிலும் கொடுத்ததால் இனி பயமில்லை.இந்த லவ்பேர்ட்ஸ் தீமை நான்கூட கொஞ்ச நாட்கள் பயன்படுத்தினேன்.

        அன்று சூடான இட்லி & இட்லி சாம்பார்+தேங்காய் சட்னி.இதை அடுத்தடுத்து இரண்டு நாட்கள் டிஃபனை முடித்துவிட்டு வந்து சொல்கிறேன்.இவர்களுக்கு விடுமுறை என்பதால் ஒரு வாரத்திற்கும் மேலாக 12 மணிக்கு மேல்தான் காலை டிஃபன்.மாலை 6 க்குதான் சாப்பாடு.இது இன்னும் ஒரு வாரம் தொடரும்.

  2. மாமாவின் அன்பு ,பாசம்,அதற்கு ஈடு இணை கிடையாது.மாமாவின் நினைவலைகள் என் மாமாக்களை நினைவு படுத்தின.எதிர்கால சந்ததியினர்களுக்கு இவ்வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்.இப்பொழுது வேலையின் நிமித்தமாக சொந்தங்களின் தொடர்பு கைபேசி வலைத்தளம் தான்.நாம் கொடுத்துவைத்தவர்கள்.

    1. நீங்கள் சொல்வது மிகவும் உண்மை. நம்மைப் போல இத்தனை சொந்தபந்தம் அடுத்த தலைமுறைகளுக்கு இல்லையே!

      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி ஸார்!

  3. எனக்கு இப்படி ஒரு மாமா இல்லையே என்று ஏக்கமே வர சைத்து விட்டது உங்கள் எழுத்து, பணம் பணம் என்று பறக்கும் உலகில் தன் அரிய திறனை பணமாக்க விரும்பாத மாமா ஒரு அதிசயம்தான். நினைவின் பகிர்தல் மிக நன்று.

    1. வாருங்கள் கணேஷ்,
      ரொம்ப நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள்.

      எங்கள் மாமாவைப் பற்றி படித்து ரசித்ததற்கு நன்றி!

  4. I think everybody will agree that this is a touching tribute to your special uncle and aunty.; perhaps, you are sort of
    following your uncle in not making money out of your passion – photography for him and of course, writing for
    you.

  5. மாமாவின் நினைவுகள் ரொம்ப அருமை எனக்கும் மூன்றூ மாமாக்கள் உண்டு இப்போது ஒருவர் தான் இருக்கிரார். தாய்மாமங்களின் அன்பு ரொம்பவும் அலாதியானதுதான் நானும் என் மாமாக்களீன் அன்பை நினைவுபடுத்திக்கொண்டேன்

  6. சின்ன வயதில் நம் எல்லோருக்குமே மாமாக்களின் தாக்கம் அதிகம் என்று தோன்றுகிறது, இல்லையா? நன்றி விஜயா!

  7. மேலும் பல பிறந்த நாட்களை நலமுடன் கொண்டாட இறைவனை பிராத்திக்கிறேன்!!
    அம்மா.. உங்கமேல ஒரே கோவம் தான்: ஒரு புகைப்படம் கூட நீங்க இதில் பகிரவில்லை. எவ்ளோ ஆவலா படம் இருக்கும்-நு நினைச்சேன் தெரியுமா??

    1. என் மாமா என்னை எடுத்த புகைப்படங்கள் தான் என்னிடம் அதிகம் இருக்கின்றன. அவற்றை இங்கு போட என் தன்னடக்கம் இடம் கொடுக்கவில்லை, சமீரா!

      என் மாமாவிற்கான உன் பிரார்த்தனைக்கு நன்றி சமீரா!

  8. பதிவு நெகிழச்செய்தது.பழைய அனுபவங்களை அசை போடுவதே ஒரு சுகானுபவம்தான்.

    மாமாவும் மாமியும் என்றென்றும் ஆரோக்கியத்துடன், சந்தோஷமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனிடன் பிரார்த்தனை செய்கிறேன்.

  9. உங்களது மலரும் நினைவுகளால் எனக்கும் மலரும் நினைவுகள் வந்தன.
    எவ்வளவு திறமை இருந்தாலும் அதைப் பணமாக்க விரும்பாத உங்கள் மாமா மரியாதைக்குரியவர்.

    உங்கள் மாமாவிற்கு நீண்ட ஆயுள் கொடுக்குமாறு ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

    ராஜி

    1. உங்கள் ஆருத்ரா பதிவிற்கு நான் ஒரு கருத்துரை எழுதி இருந்தேன். என் மாமாவிற்கும் மார்கழி திருவாதிரை அன்று பிறந்த நாள் வரும், என் அம்மா திருவாதிரைக் களி செய்வாள் என்று, இந்த மாமாதான்!
      நன்றி ராஜி!

  10. தாய் வழி உறவுகளில் மிகச்சிறந்த உறவு தாய் மாமா தான் . அழகா சொன்னீங்க. தங்களுக்கும் தங்கள் இல்லத்தில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  11. அன்பு மாமா பற்றிய பாசப் பகிர்வு மிக மிக பாசமாக உள்ளது.மகிழ்ந்தேன்.
    உங்கள் பாணி ஓரு விதம்.
    இனிய நல்வாழ்த்து..
    வேதா. இலங்காதிலகம்.

  12. என் பாணி உங்களுக்குப் பிடித்திருக்கிறதா சகோதரி?
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  13. அம்மா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! எனது முதல் முகம் தெரியாத தோழி நீங்கள்தான்! என் எழுத்துக்களின் முதல் வாசகியும் நீங்கள் தான்! WordPress இல் என் கைகளை பற்றி , சிறு குழந்தைக்கு சொல்லி கொடுப்பது போல் எனக்கு வழி காட்டியதும் நீங்கள்தான்! நன்றி அம்மா!

  14. ஆஹா! எத்தனை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் – முகம் தெரியாத முதல் தோழி என்று!
    நல்லது என்று எனக்குப் படுபவற்றை உற்சாகப் படுத்துவது எனக்குப் பிடித்த ஒன்று, மஹா!
    உங்களைப் போன்ற இளம் வயது தோழிகள் வலைப்பதிவு மூலம் கிடைப்பது சந்தோஷமான ஒன்று!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  15. தங்கள் படைப்பை மிகவும் ரசித்து படித்தேன்.
    அதில் எனக்கு பிடித்தது அந்த உறவின் உயிர்.

    முந்தைய காலகட்டத்தில் ஒரு மனிதனுக்கு முதல் வட்டம் உறவினர்கள், இரண்டாம் வட்டம் நண்பர்கள், முன்றாம் வட்டம் சமுதாயம்.
    ஆனால் இன்று, முதல் வட்டம் நண்பர்கள், இரண்டாம் வட்டம் உறவினர்கள், முன்றாம் வட்டம் சமுதாயம்.

    இதில் தவறொன்றும் இல்லை. ஆனால் சமுதாயத்திற்குள் உறவினர்கள் வந்தது தான் அந்தோ பரிதாபம்…

  16. நீங்கள் சொல்வது மிகவும் நிஜம் பழனிவேல்! ஒரே குழந்தையுடன் குடும்பம் நின்று விடுவதால் இப்படி ஆகிவிட்டதோ என்று தோன்றுகிறது.
    ரசித்துப் படித்ததற்கு நன்றி!

Leave a comment