இரண்டாம் ஆண்டில் என் வலைத்தளம்! (2)

first anniversary 2

இரண்டாம் ஆண்டில் என் வலைத்தளம் – தொடர்ச்சி

நானும் படித்து பின்னூட்டமிட்டேன். இந்த இரு இளைஞர்களின் எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தன. எங்களுக்குப் பாலமாக கல்கி அவர்கள் இருந்தார் என்பது மிகப் பெரிய விஷயம்! இருவரையும் தொடர ஆரம்பித்தேன்.

இந்த இருவரில் எனக்கு முதலில் திரு தமிழ் பற்றி சிறிய பயம் இருந்தது; ரொம்பவும் கண்டிப்பான தமிழ் ஆசிரியரோ என்று! இப்போது இவரும் நானும் நல்ல நண்பர்கள்!

ஆனால் திரு ஓஜஸ் முதலிலிருந்தே மிகவும் நட்புடன் இருந்தார்.

நமக்குத்தான் கொஞ்சம் நட்பானவுடன் நெக்குருகி அடுத்த நாளே காலை சிற்றுண்டியுடன் அவர்கள் வீட்டு வாசலில் நிற்கும் குணமாயிற்றே.

அவரிடம் ஒரு முறை மின்னஞ்சலில் கேட்டேன் : ‘எங்கே இருக்கிறீர்கள்?’ என்று.

வந்ததே ஒரு பதில்! ‘உங்களைப் போன்ற நல்லவர்களின் மனதில்!’

ஒரு வினாடி திகைத்தாலும், மறு வினாடி புரியாத பாடம் புரிந்தது:

‘உங்கள் சுதந்திரம் என் மூக்கு நுனி வரைதான். உங்கள் எல்லையில் நீங்கள் இருங்கள். என் எல்லையில் நான்!’

இளைஞரான இவரிடமிருந்து நான் கற்ற பாடம் மறக்க முடியாத ஒன்று.

‘காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்’ இல்லையா?

***********

தமிழ் பதிவுலகில் கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும் கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன. பிரபல எழுத்தாளர்களும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். நல்ல பல படைப்புகள் படிக்கக் கிடைக்கின்றன.

பலபல திரட்டிகள். உலகம் முழுவதும் நம் எழுத்தைப் படிக்கிறார்கள். நமது பொறுப்புகளும் அதிகம்.

சென்சார் இல்லாத இணையம் இருமுனைக் கத்தி போல. மிகவும் விழிப்புடன் பயன்படுத்த வேண்டும். மற்றவர்களைப் பார்த்து கத்தியை நீட்டும்போது அதன் இன்னொரு கூர் முனை நம்மை நோக்கி இருப்பதை மறந்து விடக்கூடாது.

நம் எழுத்துக்களின் பாதிப்பு உடனே பின்னூட்டங்கள் என்னும் வடிவில் நமக்கு வரும்.

எப்போதும் புகழ்ந்தே எழுதுவார்கள் என்று எதிர்பார்ப்பது நல்ல எழுத்துக்களை உருவாக்காது. எதிர்மறையான கருத்துக்களை ஏற்கும் பக்குவம் வேண்டும்.

பிறரது எழுத்துக்களைப் படித்துவிட்டு – நல்ல பதிவு, பகிர்வுக்கு நன்றி என்று மொக்கையாக பின்னூட்டம் போடாமல், நிஜமான உணர்வுகளை எழுத வேண்டும். சில பதிவர்களுக்கு இது பிடிப்பதில்லை. எதிர்மறையான கருத்துக்களை – அல்லது அவர்களது எழுத்துக்களை உண்மையாக விமரிசனம் செய்தால் பிடிப்பதில்லை. நம் தளத்திற்கு வருவதை நிறுத்தி விடுவார்கள்.

இந்தப் போக்கு நல்லதல்ல.

***********

பதிவுலகில் மறக்க முடியாத நிகழ்வு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடை பெற்ற மூத்த பதிவர்களுக்கு நடந்த பாராட்டு விழா.

பல பதிவர்களை சந்தித்தேன். இத்தனை பேர்களா என்று ஆச்சரியப் பட்டேன். வேர்ட்ப்ரஸ் தளத்தில் எழுதுபவர்களில் நான் ஒருவள் மட்டுமே. நிறைய இளைஞர்கள், யுவதிகளைச் சந்தித்தேன்.

ப்ளாக்ஸ்பாட்டில் எழுதுபவர்கள் எல்லோரும் ஒரே குடும்பமாக பழகுவது மிகவும் வியப்பாக இருந்தது. அதே போல இங்கும் வேர்ட்ப்ரஸ்ஸில் தமிழில் எழுதுபவர்கள்  ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை.

தொடர்பதிவுகள் எழுதலாம். மற்றவர்களை நம் பதிவில் (விருந்தினர் பதிவுகள்) எழுத வைக்கலாம். நான்கு பேர்களாக அல்லது ஒரு குழுவாக  சேர்ந்து எழுதலாம்.

ஏற்கனவே திரு தமிழும், திரு ஓஜஸ்ஸும் சேர்ந்து இசைப்பா என்று ஒரு வலைத்தளம் துவங்கி இருக்கிறார்கள்.

ஒத்த கருத்தை உடையவர்கள் சேர்ந்து இதைப்போல செய்யலாம்.

எல்லாமே எல்லையைத் தாண்டாமல் தான்!

என் ப்ளாக் மூலம் என் பழைய தோழியை 33 வருடங்களுக்குப் பின் சந்தித்தேன். இதை விட வேறு என்ன வேண்டும்?

இதுவரை என் எழுத்துக்களைப் படித்து ரசித்து பின்னூட்டமிட்ட ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

தொடர்ந்து உங்கள் ஊக்கத்தை அளியுங்கள்.

பதிவர்கள் விழாவில் எடுத்த காணொளி

இரண்டாம் ஆண்டில் என் வலைத்தளம்! பாகம் ஒன்று

first anniversary

எனது வலைத்தளம் இன்று முதலாண்டை கடந்து இரண்டாம் ஆண்டில் காலடி வைக்கிறது.

இந்த ஓராண்டில் நான் படித்து மகிழ்ந்த தளங்களையும், அதனால் ஏற்பட்ட தோழமைகளையும், கற்றுக் கொண்ட பாடங்களையும், பாராட்டுக்களையும்,  பகிர்ந்து கொள்ள இந்த சிறப்புப் பதிவு.

(உஸ்……அப்பாடா!)

***********

ஒரு வாரத்திற்கு முன்னால் வேர்ட்ப்ரஸ் இலிருந்து ஒரு வாழ்த்து செய்தி: போன வருடம் இந்த நாள் தான் நீங்கள் எங்களிடம் பதிவு செய்து கொண்டீர்கள், வாழ்த்துக்கள் என்று! முதல் வாழ்த்து!

ஆனால் முதல் பதிவு போட்டது 24.12.2012

அதனால் இந்த நாளையே என் வலைதளத்தின் முதல் பிறந்தநாள் என்று கொண்டாடலாம்!

வலைப்பூ ஆரம்பித்ததன் நோக்கம் எனது படைப்புக்களை ஒரே இடத்தில் தொகுப்பதுதான்  என்றாலும், வேறு வேறு படைப்புக்களைப் படிக்க ஆரம்பித்த பின் என் வலைப்பூவிற்காகவே எழுத ஆரம்பித்தேன்.

சுய தம்பட்டம்:

வலைச்சரத்தில் ஆசிரியர் பதவி – நினைத்து நினைத்து மகிழும் ஒரு நிகழ்வு!

மூன்று முறை வலைச்சரத்தில் தொடர்ச்சியாக அறிமுகப் படுத்தப் பட்டேன்.

தமிழ் மணம் 205 ரேங்க். (சொல்லிக் கொள்ள வேண்டாம் என்றாலும் ஒரு வருடத்தில் நல்ல முன்னேற்றம் என்றே தோன்றுகிறது.) தமிழ்மணம் 2 வது 5 வது ரேங்க் பெற்றவர்களுக்கும் எனக்கும் நடுவில் ஒரு பூஜ்யம் – அவ்வளவே வித்தியாசம்!

மேலும் இரண்டு வலைத்தளங்கள் ஆரம்பித்தது.

http://pullikkolam.wordpress.com

http://thiruvarangaththilirunthu.blogspot.in

புதிதாக இவற்றில் எழுதுவது இல்லை. முதல் தளத்தில் இருப்பதையே இங்கும் போடுகிறேன். சில புதிய பதிவுகளும் இருக்கின்றன.

எதிர்காலம்:

எனது கதைகள் சம்ஸ்க்ருத மொழியில் மொழி பெயர்க்கப் பட இருக்கின்றன.

ஸ்ரீவைஷ்ண க்ரந்தங்களை எளிய ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனது பிறவிப் பயன் இது.

***********

என்னிடம் ஒரு குணம். நல்லது என்று மனதிற்கு படுபவற்றை மற்றவர்களுக்கும் சொல்லுவேன். இது நான் படிக்கும்  புத்தகங்கள்  என்ற ஒரு சிறிய வட்டத்திற்குள் அடங்காது. சிலசில உணவகங்களும்,ஊர்களும், உறவுகளும்  இந்தப் பட்டியலில் அடங்கும்!

இவற்றைத் தவிர

எனது ஹோமியோபதி மருத்துவர் டாக்டர் ராஜேஷ்;

யோகா பயிற்சியாளர் திருமதி ரேகா ஸ்வரூப்;

துணைவரின் மருத்துவர் டாக்டர் சிவராமையா;

எங்கள் ஜோசியர் திரு. உமேஷ் ஜோயிஸ், திரு அருளாளன்

என்னிடம் தங்களதுஆரோக்கியத்தை பற்றி பேசுபவர்கள் எல்லோருக்கும் இவர்களை பரிந்துரைப்பேன். விளைவு: நான் பார்த்தே இராத பலர் என் பெயரைச் சொல்லிக் கொண்டு  இவர்களை நாடுவார்கள்!

சிலர் சில சமயங்களில் இதற்காக கோபப் பட்டதும் உண்டு! ‘நீ யாரு என்னை பற்றி சொல்ல?’ என்று!

சமீபத்திய உதாரணம்: வலைச்சரத்தில் பலரை அடையாளம் காட்டியிருந்தும், சிலர் மட்டுமே நன்றி பாராட்டி இருந்தார்கள்.

‘இவள் யார் நம்மை அடையாளம் காட்ட?’ என்று நினைத்திருப்பார்களோ, என்னவோ?

அப்போது எனக்குள் நான் நல்லவளா கெட்டவளா என்ற கேள்வி எழுந்தது.

ஆனாலும் இந்த குணம்  மாறவில்லை. இப்போது பதிவுலகத்திலும் எனக்குப் பிடித்த தளங்களை தொடருவதுடன், பின்னூட்டமிட்டு, என் வலைபதிவில் இணைப்பு கொடுத்து…. அவர்களது பதிவை ரீ-ப்ளாக் செய்து…. எனது சமூகம் என்று அவர்களை அடையாளம் காட்டி…

தொட்டில் பழக்கம்…..மாறாது இல்லையா?

எனது வலைதளத்தின் மூலம் பலரின் நட்பு கி டைத்திருக்கிறது.

வலைப்பதிவுக்கு அப்பால் என்னுடன் நட்பாக இருக்கும் ஒருவர் திருமதி காமாட்சி. 

அவ்வப்போது தொலைபேசவும் செய்கிறோம். அவரிடம் பேசுவது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. எங்கள் நட்பு இதேபோல வரும் வருடங்களிலும் தொடர வேண்டும்!

ஒரு முறை நான் வலைச்சரத்தில் அறிமுகம் ஆகும் போது இவரும் அறிமுகம் ஆகியிருந்தார். எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்கிறாய் என்று நெகிழ்ந்து போனார் இவர்.

எனக்கு எங்கு போனாலும் ஒரு ராசி. என்னைவிட வயது குறைந்தவர்கள் என்னுடன் மிக எளிதில் நட்பு கொள்ளுவது. பதிவுலகத்திலும் இது தொடர்வது அதிசயமே!

எனக்குப் பிடித்த இரண்டு இளைய தலைமுறை:

ஆடி பதினெட்டாம் நாள். காலையில் கலந்த சாதங்கள் செய்துவிட்டு கணணி முன் உட்கார்ந்து பதிவுகளைப் பார்க்க ஆரம்பித்தேன். தமிழ் என்னும் பெயரில் எழுதும் திரு தமிழ் ‘ஆடித் திருநாள் என்னும் பதிவு எழுதியிருந்தார். படித்து விட்டு

‘பதினெட்டாம் பெருக்கு என்று கலந்த சாதங்கள் செய்துவிட்டு, வந்து கணணி முன் உட்கார்ந்தால் உங்கள் பதிவு! காவிரிக்கரையில் வந்தியத்தேவனுடன் அங்கு நடக்கும் கோலாகலங்களை நேரடி ஒளிபரப்பு செய்துவிட்டீர்கள்!

கல்கியின் ‘பொன்னியின்செல்வன்’ போனதலைமுறையிலிருந்து இந்த இளைய தலைமுறை வரை இதயத்தைக் கொள்ளை கொள்ளுவது வியப்பேதும் இல்லை. அது அமர காவியம் என்பதற்கு இந்தச் சான்று ஒன்று போதும்.

இந்த நன்னாளில் காவிரியையும் பொன்னியின் செல்வனையும் நினைவு படுத்தியதற்கு நன்றிகள் பல!’

என்று ஒரு பின்னூட்டம் போட்டேன்.

அடுத்த நாள் ஓஜஸ் என்பவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல்: எனது நண்பன் தமிழ் அவர்களின் பதிவைப் படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி. என்னுடைய நாற்சந்தி   வலைத்தளத்தில் வந்தியத்தேவன்  பற்றிய பதிவைப் படித்து கருத்து இருந்தால் சொல்லவும் என்று.

ரொம்பவும் நீளமாகப் போய்விட்டபடியால் அடுத்த பதிவில் தொடருகிறேன்.