மூக்குத்திப் பூ ….!

 

nose ring

‘பொண்ணு மூக்கு குத்திண்டு இருக்காளா?’

‘இல்லை…பிடிக்கலங்கறா…’

‘பெரிய மாட்டுப் பொண்ணும் குத்திக்கல…. அக்கா மாதிரியே தங்கையும் இருக்காளாமா?’

என் அப்பாவுக்கும் என் எதிர்கால மாமியாருக்கும் என் திருமணத்திற்கு முன் நடந்த வார்த்தையாடல் இது.

‘வயசானப்பறம் மூக்குத்தி இல்லைன்னா முகத்துல களையே இருக்காது….’ (என்னுடைய இப்போதைய முகக் களைக்கு காரணம் தெரிஞ்சுதா?)

எதற்கும் நான் மசியவில்லை.

‘உங்க மாமியார் இப்படி சொல்றாளே’ என்று என் அப்பா சொன்னதற்கு ‘வயசானப்பறம் குத்திக்கறாளாம் – ன்னு சொல்லு அப்பா’ என்றேன்.

‘நீயே கல்யாணம் ஆனப்பறம் சொல்லிக்கோ’ என்றார் என் அப்பா.

இதனால் எங்கள் கல்யாணம் நிற்காது என்ற தைரியம் எனக்கு. காதலித்து கடிமணம் புரிபவர்கள் ஆயிற்றே!

ஸோ, மூக்கு குத்திக்காமலேயே கல்யாணம் ஆயிற்று.

அக்காவைப் போல என்று என் மாமியார் சொன்னது என் பெரிய ஒர்ப்படியை – என் பெரியம்மாவின் பெண்!

அவளது திருமணத்தில் தான் செம்புலப்பெயல் நீர் போல எங்கள் அன்புடை நெஞ்சங்கள் கலந்தன!

எனக்கு அடுத்த ஒர்ப்படி என் மாமியார் சொல்வதற்கு முன்பே மூக்குத்தி அணிந்தே எங்கள் கூட்டுக் குடும்பத்தில் வலது காலை வைத்து வந்தாள். அவளுக்கு ஸ்பெஷல் மரியாதை!

‘நான் சொல்வதற்கு முன்னாலேயே லட்சணமா மூக்குத்திண்டு வந்திருக்கா!’ என்று.

என் பெரிய ஓர்ப்படி வெளியூரில் இருந்ததால் நான்தான் எல்லோருடைய விமரிசனத்துக்கும் ஆளானேன்.

அசரவில்லை நான்.

பக்கத்து வீட்டு மாமியின் பிள்ளைக்குக் கல்யாணம். போய்விட்டு வந்து என் மாமியாரிடம் சொன்னேன்: ’பொண்ணு மூக்கு குத்திண்டு லட்சணமா இருக்கா..!’

‘வயசானப்பறம் மூக்குத்தி இல்லைன்னா முகத்துல களையே இருக்காது… அதான் உன்னையும் குத்திக்கச் சொன்னேன்….!’

‘அதான் வயசானப்பறம் குத்திக்கறேன்னு சொன்னேனே!’

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு என் மாமியார் ‘நான் இந்த விளையாட்டுக்கு வரலை’ ன்னு  விலகிட்டார்.

என் மாமியார் 1992 ஆம் வருடம் பரமபதித்தார். நானும் மூக்குத்தி விவகாரத்தை மறந்தே போனேன். அப்போது நாங்கள் தும்கூரில் இருந்தோம்.

எங்கள் திருமணத்தின் போது என் அப்பா என் கணவருக்கு 3 வைரக் கற்கள் வைத்து ஒரு மோதிரம் போட்டிருந்தார். தினமும் அதை கையோடு போட்டிருந்தார் என்னவர்.

ஒரு நாள் அதில் ஒரு கல்லைக் காணவில்லை. எங்கே விழுந்ததோ? எனக்கு ரொம்பவும் வருத்தம். அப்பா போட்ட மோதிரம் என்று பயங்கரமான சென்டிமென்ட் வேறே!

என் கணவர் அதை கழட்டி விட்டார். என் அம்மாவிடம் கேட்டேன். இரண்டு கற்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய?

என் கணவருக்கு நவரத்தின மோதிரம் வேண்டும் என்று ரொம்ப நாட்களாக ஒரு ஆசை. சரி இந்த இரண்டு கற்களில் அதில் ஒன்றை வைத்து விடலாம் என்றாள் அம்மா.

இன்னொன்று?

‘நீ மூக்கு குத்திண்டு அதில் மூக்குத்தி பண்ணி போட்டுக்கோ!’

‘நானா? இந்த வயதில் மூக்கு குத்திக்கறதா?’

‘நீதானே சொன்னே, வயதானப்பறம் மூக்குக் குத்திக்கறேன்னுட்டு….!’ மடக்கினாள் அம்மா. என் அம்மாவாயிற்றே!

ஆஹா!, நுணலும் தன் வாயால் கெடும் என்பார்களே, அது இதுதானோ?

கொஞ்சம் யோசித்தேன். சரி வந்தது வரட்டும் என்று சம்மதித்தேன்.

ஒரே மாதத்தில் மூக்குத்தி ரெடி! மூக்கு?  குத்திக்கொள்ளணுமே! அப்போதானே ரெடி ஆகும்?

வலிக்குமோ என்று கொஞ்சம் (இல்லை, நிறையவே)  பயந்தேன். எங்கள் டாக்டரிடம் போனேன். ஏதோ ஸ்ப்ரே அடித்து விட்டு மூக்கை வலி தெரியாமல் குத்தி மூக்குத்தியையும் போட்டு விட்டு விட்டார். சந்தோஷமாக வீட்டிற்கு வந்தேன். அல்ப சந்தோஷம் என்று அடுத்த நாள் காலையில் தெரிந்தது. மூக்கு வீங்கிப் போய் வேதனை தாங்கவில்லை.

டாக்டரிடம் போய் மூக்குத்தியை வெற்றிகரமாக கழற்றிக்கொண்டு வந்தேன்.

சிறிது நாட்கள் ஆன பின் என் அம்மா சொன்னாள்: ‘தங்க மாளிகைல போய் குத்திக்கோ. வலி தெரியாம குத்திண்டு வரலாம்’

மறுபடியுமா? அடுத்த முறை சென்னை போனபோது தங்க மாளிகையில் போய் கேட்டேன். ‘உங்கள் மூக்குத்தியை போட முடியாது. எங்களிடம் வெறும் தங்கத்தில் செய்த மூக்குத்தி இருக்கிறது. முதலில் அதைப் போட்டுக் கொள்ளுங்கள். கொஞ்ச நாட்கள் ஆனவுடன் வைர மூக்குத்தியைப் போட்டுக் கொள்ளுங்கள்’ என்றார்கள்.

அடடா! இந்த ரகசியம் தெரியாமல் எடுத்தவுடனே வைர மூக்குத்தியைப் போட்டுக் கொண்டு….

ஐந்தே நிமிடங்கள் தான். 1993 இல் இரண்டாவது முறையாக வெற்றிகரமாக மூக்கு குத்திக்கொண்டு தங்க மூக்குத்தியுடன், முகத்தில் புதிய களை வழிந்து ஓட, வெளியே வந்தேன். உலகம் முழுவதுமே என்னையும், என் மூக்குத்தியையுமே பார்க்கிறாப் போல பிரமை!

சிறிது நாட்களில் என் வைர பேசரியை (சும்மா…ஒரு பந்தா தான்!) போட்டுக் கொண்டேன்.

ஒரு விஷயம் நினைவுக்கு வந்து துன்புறுத்தியது. 40 வயதில் பண்ணிக் கொண்டதை 20 வயதில் பண்ணிக் கொண்டிருந்தால் மாமியார் மகிழ்ந்திருப்பாரோ?

 

பி.கு. இது எனது ரசிகை திருமதி ஷாந்தி அவர்களின் வேண்டுகோளுக்காக எழுதப்பட்டது.

அன்பு ஷாந்தி உங்கள் காமென்ட் – ஐ மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

முகத்தின் அழகு மூக்குத்தியில்!

 

 

 

 

பாரத நாட்டின் தவ புதல்வா!

 

 

R day

‘பாரத நாட்டின் தவ புதல்வா

பாராய் அன்னை மணிக்கொடியை

வீர வணக்கம் செய்திடுவோம்

வெல்க பாரதம் என உரைப்போம்!’

 

இந்தப் பாடல் யார் இயற்றியது என்று தெரியாது. இதைப் படிக்கும் யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்.

 

நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது எங்கள் பாட்டு டீச்சர் அழகான ராகத்தில் இசை அமைத்து எங்களுக்கு சொல்லிக் கொடுத்த பாடல் இது. இத்தனை வருடங்களுக்குப் பின் எனக்கு நினைவு இருப்பது இந்த நான்கு வரிகள் தான்.

 

ஒரு குடியரசு தினத்தன்று இந்தப் பாடலுக்கு நேரு மைதானத்தில் (அப்போது அதன் பெயர் கார்ப்பரேஷன் மைதானம் என்று நினைவு) நாங்கள் நடனம் ஆடியதும் நினைவிருக்கிறது.

 

வெள்ளைப் பாவாடை, வெள்ளை சட்டை (அதில் தேசியக்கொடியை குத்திக்கொண்டு) வெள்ளை ரிப்பன், வெள்ளை வளையல்கள், வெள்ளை  பொட்டு என்று சகலமும் வெள்ளை வெளேரென்று அணிந்து கொண்டு இந்தப் பாடலுக்கு நடனம் ஆடினோம்.

 

இதற்காக பள்ளி முடிந்தபின் ரிகர்சல் இருக்கும். தினமும் வீட்டிற்கு தாமதமாகப் போவேன். அம்மாவிடம் நல்ல திட்டு விழும்.

 

நடனம் தவிர, உடற்பயிற்சி போல ஒன்றும் செய்வோம். வெறும் இசை மட்டும் ஒலிக்கும். அதற்குத் தகுந்தாற்போல ஒன், டூ, த்ரீ, ஃபோர் என்று எங்கள் ஆசிரியை சொல்ல நாங்கள் செய்வோம்.

 

குடியரசு தின சிறப்பு பயிற்சியின் போது மூங்கிலினால் செய்த பெரிய பெரிய வட்டங்களை (லூ-லா- லூப் போல) கையில் வைத்துக்கொண்டு குனிந்த நிமிர்ந்து செய்வோம். முதல்  வரிசையில்  பச்சை காகிதங்கள் சுற்றப்பட்ட வட்டங்கள்; மூன்றாவது  வரிசையில்  காவி வண்ணக் காகிதங்கள் சுற்றப்பட்ட வட்டங்கள்; நடுவில் வெள்ளைக் காகிதங்கள் சுற்றப்பட்ட வட்டங்கள் – நம் தேசியக் கொடியை போல – மிக அழகாக இருக்கும் பார்ப்பதற்கு.

 

அந்த வட்டங்களை வலது கையில் வைத்துக் கொண்டு சுற்றுவோம்; இடது கையில் வைத்துக் கொண்டு சுற்றுவோம். சில சமயம் அதிலேயே ஸ்கிப்பிங் செய்வோம். முடிவில் எங்கள் தலைக்கு மேலே வட்டங்களைப் பிடித்துக் கொண்டு ஒரு வரிசை உட்கார்ந்து எழுந்தவுடன் அடுத்த வரிசை அதே போலச் செய்ய அதற்கடுத்த வரிசை உட்கார்ந்து எழுந்திருக்க, தேசியக் கொடி பறப்பது போல இருக்கும்.

 

வேறு வேறு பள்ளிகளிலிருந்தும் மாணவ மாணவியர்கள் எங்களைப் போலவே தங்கள் திறமைகளைக் காண்பிப்பார்கள்.

 

ஒவ்வொரு திங்கட்கிழமையும் பள்ளியில் இறைவணக்கம் முடிந்தபின் கொடி ஏற்றுவோம். பள்ளி மாணவத் தலைவி இதைச் செய்யவேண்டும். இறைவணக்கத்துடன் அன்று ‘தாயின் மணிக்கொடி பாரீர்!’ பாடலையும் சேர்த்துப் பாடுவோம்.

எல்லோரும் கொடிக்கு ‘சல்யூட்’ அடிப்பது போல நெற்றியில் கையை வைத்துக் கொண்டு நிற்போம்.

 

‘ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் – அதன்

உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே

பாங்கின் எழுதித் திகழும் செய்ய

பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!’

 

என்று பள்ளி மாணவிகள் அத்தனை பெரும் ஒரே குரலில்  பாடும் போது மனது தளும்பும்.

 

கடைசியாக

‘வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்,

வாழிய பாரத மணித்திருநாடு

வந்தே மாதரம் வந்தே மாதரம்,

வந்தே மாதரம்!’

 

என்று பாடி முடித்தபின் அங்கு நிலவும் அமைதி இன்னும் எனக்கு நினைவு இருக்கிறது!

 

இனிய குடியரசு தின நினைவுகள்!

 

செல்வக் களஞ்சியமே – 3

baby 2 குழந்தை வளர்ப்பு பற்றி நான்குபெண்கள் தளத்தில் நான் எழுதி வரும் தொடரின் 3வது பகுதி இது.

 

குழந்தை தாயின் வயிற்றில் கருவாக உருவாகத் தொடங்கும் முதல் நாளிலிருந்து அதற்கு  இரண்டு வயதாகும் வரை உள்ள காலத்தைத்தான் ‘முதல் ஆயிரம் நாட்கள்’ என்று குறிப்பிடுகிறார்கள்.இந்த ‘முதல் ஆயிரம் நாட்களை’ குழந்தையின் வளர்ச்சியில் பொன்னான நாட்கள் என்று சொல்லலாம். இந்த நாட்களில் குழந்தைக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து  குழந்தையின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. இத்தகைய சத்து நிறைந்த உணவுகளினால் நீண்ட கால நோய்களிலிருந்தும்  குழந்தையை காக்கலாம். தேவைப்பட்ட ஊட்டச்சத்து கிடைக்காது போனால் குழந்தையின் உடல் மற்றும் புலனுணர்வு (cognitive) சார்ந்த வளர்ச்சிகள் பாதிக்கப்படும்.

 

மேலும் படிக்க: ‘அந்த ஆயிரம் நாட்கள்’

செல்வக்களஞ்சியமே – பகுதி – 1

செல்வகளஞ்சியமே பகுதி – 2

 

முதல் இரண்டு பகுதிகளைப் படித்து பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய தோழமைகளுக்கு எனது நன்றி!

 

எனது இரண்டாவது எண்ணங்கள் தளத்தில் : தேசிய பெண் குழந்தைகள் தினம் படித்தீர்களா?

செல்வ களஞ்சியமே – பகுதி 2

நேற்று காலை திரு சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு. ஒரு ஜென் கதை சொன்னார்.

ஜென் துறவியிடம் ஒருவர் வந்தார். வந்தவுடன் துறவியைப் பார்த்து ‘நான் நிறைய விஷயங்கள் பற்றி உங்களிடம் கேட்கவேண்டும்’ என்றார். துறவி நிதானமாக ‘ஒரு கோப்பை தேநீரைக் குடித்துக் கொண்டே பேசலாமா?’ என்று கேட்டார். வந்தவருக்கு சிறிது ஏமாற்றமாக இருந்தாலும் ‘சரி’ என்கிறார்.

சிறிது நேரத்தில் சுடச்சுட தேநீர்  வந்தது. துறவி தேநீர்  ஜாடியை எடுத்து அதிலிருந்த தேநீரை, ஏற்கனவே நிறைந்திருந்த கோப்பையில் ஊற்றினார். கோப்பையிலிருந்து தேநீர் வெளியே வழிய ஆரம்பித்தது. வந்தவர் பதறிப்போய் ‘நிறுத்துங்கள், நிறைந்த கோப்பையில் மேலும் மேலும் ஊற்றிக் கொண்டே இருக்கிறீர்களே!’ என்றார்.

துறவி சிரித்துக் கொண்டே, ‘காலிக் கோப்பையில் தான் நிரப்ப முடியும். இல்லையா? நீங்கள் உங்கள் தலையில் இருப்பதை வெளியில் கொட்டி விட்டு வாருங்கள். அப்போதுதான் நான் பேசுவது உங்களுக்குப் பயன்படும்’ என்றார்.

இந்தக் கதை சொல்வது என்ன?

எந்த ஒரு புதிய விஷயம் ஆனாலும் மனதை திறந்து வைத்துக் கொள்ள வேண்டும். திறந்திருக்கும் மனதில் தான் புதிய எண்ணங்கள் நுழைய முடியும், இல்லையா?

கருவுற்றிருக்கும் இளம்பெண்களும் முதலில் மனதளவில் தயார் ஆக வேண்டும். ஒரு பெண்ணின் வாழ்க்கையை தி.மு., தி.பி. என்று பிரிக்கலாம். திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் என்று.

திருமண வாழ்க்கையின் அடுத்த  கட்டத்தை கு.பி.மு. (குழந்தை பிறப்பதற்கு முன்), கு. பி. பி. (குழந்தை பிறந்த பின்) என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தி.மு – இருந்த வாழ்க்கையே தி.பி. தொடராது. இதை எல்லா பெண்களுமே அனுபவத்தில் தெரிந்து கொண்டிருப்பார்கள். அதேபோலத்தான் கு.பி.மு இருக்கும் நிலை வேறு, கு.பி.பி. இருக்கப் போகும் நிலை வேறு.

உங்கள் குழந்தையை பாலூட்டி, சீராட்டி வளர்ப்பது மட்டுமல்ல; அவளுக்கு ஒரு நல்ல ரோல் மாடல்  அம்மாவாகவும் இருக்கப் போகிறீர்கள். உங்களது குழந்தைத்தனம் மாறி ஒரு தாயாராக உருவாக வேண்டும். மிகப் பெரிய மாற்றம் இல்லையா?

புதிதாகக் கல்லூரியில் சேர்ந்து இருக்கிறீர்கள். நாளை முதல் தினம். ஒரு வாரத்திற்கு முன்பே ஷாப்பிங் செய்து புது டிரெஸ், புது கைப்பை, புது ஸ்லிப்பர்ஸ் என்று எல்லாமே புதிது – வாங்கியாயிற்று. வெளி விஷயங்கள் எல்லாம் ரெடி. மனம்?

பள்ளிக்கூடம் போலல்ல கல்லூரி. பள்ளியில் ஆசிரியர்கள் ஸ்பூனால் படிப்பை ஊட்டி விடுவார்கள். கல்லூரியில் நீங்களே படித்துக் கொள்ள வேண்டியதுதான். பாடங்களும் அதிகம். உங்கள் உழைப்பும் அதிகம் தேவைப்படும்.

அதே போலத்தான் குழந்தை பிறப்பதும். எல்லாமே புதிராக இருக்கும். உங்களுக்கு மட்டுமல்ல; குழந்தைக்கும் இந்த உலகம் புதிது. இத்தனை நாட்கள் பாதுகாப்பான இடத்தில் இருந்துவிட்டு திடீரென வெளிச்சமான ஒரு உலகம்; நாமே சாப்பிடவேண்டும்; நாமே வெளியேற்ற வேண்டும். பசித்தால் அழ வேண்டும். அம்மாவின் தயவில் சுகமாக நடந்து வந்தது எல்லாம் இப்போது குழந்தை தன் முயற்சியில் தானே செய்து கொள்ளவேண்டும்.

அம்மாவின் அரவணைப்பு அதிகம் தேவைப்படும் குழந்தைக்கு. அம்மாவின் வயிற்றில் கதகதப்பாக இருந்த குழந்தை அதை வெளியிலும் தேடும்.

பிறந்த குழந்தைக்கு கழுத்து உறுதியாக இருக்காது. அதனால் மிகவும் பத்திரமாக அதை கையில் எடுக்கவேண்டும்.

குழந்தை படுக்கையில் படுத்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளுவோம்.

முதலில் இடது கையை நன்றாக விரித்து, விரல்களை அகலமாக்கிக் கொள்ளுங்கள். கையை குழந்தையின் தலைக்கும் கழுத்துக்கும் அடியில் கொடுங்கள்.

வலது கையை குழந்தையின் பிருஷ்ட பாகத்தில் வைத்து குழந்தையை மெதுவாக உங்கள் பக்கம் கொஞ்சமாக ஒருக்களித்துக்  (நிதானம்…. நிதானம்…..) கொள்ளுங்கள்

குழந்தையின் தலை, கழுத்து, கொஞ்சம் முதுகுப் பகுதி எல்லாம் உங்கள் விரிந்த இடது கையில் இருக்கட்டும். கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இரண்டு கைகளாலும் தூக்கவும். உங்கள் பிடி கெட்டியாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் குழந்தைக்கு எந்தவிதமான அழுத்தமும் தெரியக் கூடாது.

நிதானமாக குழந்தையை உங்கள் மார்பின் மேல் சாய்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது குழந்தையின் தலை உங்கள் முழங்கை பகுதிக்கு வரும்படி மெதுவாக உங்கள் இடது கையை குழந்தையின் தலையிலிருந்து பிருஷ்ட பாகத்திற்கு கொண்டு வாருங்கள். வலது கையை எடுத்து விடலாம்.

பிறந்த குழந்தை உங்கள் ஒரு கை அளவுதான் இருக்கும்.

சுமார் மூன்று மாதங்கள் வரை குழந்தையை இந்த முறைப்படியே தூக்க வேண்டும். சில குழந்தைகளுக்கு 6 மாதங்கள் கூட தலை சற்று தள்ளாடியபடியே இருக்கும். அதனால் அதிக கவனம் தேவை.

குழந்தையின் தலை உங்கள் கைகளிலோ அல்லது முழங்கையிலோ (நீங்கள் கையை மடக்கும் போது மேல் கைக்கும், முழங்கைக்கும் நடுவில் வரும் ‘எல்’ போன்ற அமைப்பிலோ) பதிந்து இருக்க வேண்டும்.

இத்தனை எழுதுவதால் எப்படி இருக்குமோ என்று பயப்பட வேண்டாம். நீங்களும் உங்கள் குழந்தையும் ஒருவருக்கொருவர் சில நாட்கள் பழகியவுடன் சரியாகிவிடும்.

குழந்தையுடன் நிறைய பேசுங்கள். அதை பார்த்து சிரியுங்கள். குழந்தையின் பார்வை முதல் சில மாதங்களில் நிலைபெற்றிருக்காது. சில சமயம் நடிகை ரம்பாவின் பார்வை பார்க்கும்! அதையும் ரசியுங்கள்.

அடுத்த பகுதி: முதல் 1,000 நாட்கள்

செல்வக் களஞ்சியமே – பகுதி 1

பகுதி – 3

 

 

 

 

முதல் பகுதி படிக்காதவர்களுக்கு: செல்வ களஞ்சியமே பகுதி 1

முதல் பகுதியைப் படித்து தங்கள் கருத்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்த அன்புத் தோழமைகளுக்கு மனமார்ந்த நன்றி!  நன்றி! நன்றி!

இசைப்பாவில் குறையொன்றுமில்லை கேட்டீர்களா?

தமிழ் இசை

மூதறிஞர் திரு இராஜகோபாலாச்சாரியாரின் பாடல் வரிகள் இவை. திருமதி எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களால் ஐ.நா. சபையில் முதல் முதல் பாடபெற்ற தமிழ் பாடல் இது.

எல்லோருக்கும் தெரிந்த பாடல். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். மனதை உருக்கும் பாடல். கண்களில் நீரை வரவழைக்கும் பாடல்.

எத்தனையோ பாடகர்கள் பாடியிருந்தாலும் எம்.எஸ். குரலில் கேட்கும்போது உண்டாகும் மன உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகள் கிடையாது.

எங்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்தவுடன் எங்கள் அம்மா வாங்கித்தந்த புத்தகங்கள் வியாசர் விருந்து, ராமாயணம் இரண்டும்தான். எளிய தமிழில் ராஜாஜி அவர்களின் கதை சொல்லும் பாணி மிகவும் நன்றாக இருக்கும். எத்தனை முறை படித்திருப்போம் என்ற கணக்கே இல்லை.

அதே அவரது பாணியிலேயே எளிமையும், இனிமையும் நிறைந்த பாடல் இது.

இறைவனிடம் எதுவுமே கேட்கக்கூடாது; அவருக்கு நமக்கு என்ன தேவை என்று தெரியும். நமக்குப் பிடித்ததைவிட, நமக்கு தேவையானவற்றை அவரே தருவார் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

இந்தப் பாடல் அந்த வகையை சேர்ந்ததுதான்.

இராக மாலிகையில் அமைந்துள்ளது இந்தப் பாடல்

பாடலாசிரியர் : சக்கரவர்த்தி ராஜாஜி

பாடியவர் : எம்.எஸ்.சுபலட்சுமி

இசை அமைத்தவர் : தெரியவில்லை

ராகம்: சிவரஞ்சனி
குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா

குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா

அனுபல்லவி
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம்

View original post 531 more words

வைர விழா!

75th yearஉங்களிடம் இரண்டு கேள்விகள்:

தொலைக்காட்சி தொடர்களினால் யாருக்கு  லாபம்?

ஏக்தா கபூருக்கு என்கிறீர்களா? அதுவும் சரிதான். ஏக்தா கபூர் எடுக்கும் ஹிந்தி தொடர்களால் நம் தமிழ் தொலைகாட்சிகளுக்கு லாபம். அந்தத் தொடர்களுக்கு பழைய, புதிய திரைப் படங்களின் பெயர்களை இட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார்களே!

இவர்களையெல்லாம் விடுங்கள். பழைய, வயதான நடிக நடிகையருக்கும் இந்தத் தொடர்களால் மறுவாழ்வு கிடைத்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

பதிவுகள் எழுதுவதால் என்ன லாபம்?

பல புதிய நட்புகள் உருவாகி செழித்து வளருகின்றன. எழுத்துக்களால் மட்டுமே இணையும் நட்புகள்.

தொலைக்காட்சியில் வரும் பழைய, வயதான நடிக நடிகையர் போலவே என்னைப் போன்ற வயசாளிகளுக்கு   பதிவுலகம் புதிய வாழ்க்கையை கொடுத்துள்ளது.

எங்களின் பொழுதுகள் வீணடிக்கப் படுவதில்லை. வளரும் தொழில் நுட்பத்தை நாங்களும் கற்று அதை எங்களுக்கு தகுந்த முறையில் பயன்படுத்துகிறோம். பொழுது போகவில்லையே என்று அலுத்துக் கொள்வதில்லை. யாரிடமாவது அரட்டை அடிக்கலாமா, வம்பு பேசலாமா என்று அலைவதில்லை. முக்கியமாக அது இல்லை, இது இல்லை என்று குறைப்பட்டுக் கொண்டு மற்றவரை பாடாய் படுத்துவதில்லை!

எங்களுக்கு வாழ்க்கை தந்த அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் வரும் ஆனந்தத்தை வீட்டிலிருந்தபடியே அனுபவித்து வருகிறோம். உட்கார்ந்த இடத்தில் உலகை சுற்றி வருகிறோம் என்று கூட சொல்லலாம்.

வயது எங்கள் உடலுக்கே தவிர மனதிற்கு அல்ல.பதிவு எழுதுவது எங்களின் மனதிற்கு உற்சாகத்தைத் தருகிறது.

நாங்கள் எத்தனை உற்சாகமாக இருக்கிறோம் என்பதை நாளை (19.01.2013) தனது 75 வது பிறந்த நாளைக் கொண்டாடிடும் திருமதி ருக்மிணி சேஷசாயியின் பதிவுகளைப் படித்தால் தெரியும்.

யார் வழிக்கும் போகாமல் இவர் தனது பதிவுகளை குழந்தைகளுக்கு கதைகள் எழுதுவதற்கென்றே வைத்துக் கொண்டு விட்டார். பெரியவர்களின் விளையாட்டுக்கு இவர் வருவதே இல்லை. சென்ற ஆகஸ்டில் நடந்த பதிவர் விழாவிலும், பிறகு பெங்களூரில் எங்கள் வீட்டிற்கு வந்த போதும் இவரை சந்தித்திருக்கிறேன்.

இவருடன் பேசிக்கொண்டு இருப்பதே மனதுக்கு நிறைவைத் தரும் விஷயம்.

சமீபத்தில் ‘ஆழி கடந்தான் வாழி’ என்று சுந்தரகாண்டத்தை குழந்தைகளுக்கு புரியும்படி எழுதி இருந்தார். ஹனுமத் ஜெயந்தியை ஒட்டி இந்தக் கதையை எழுதி இருப்பதாக சொன்னார்.

இவரது தாய்மொழி கன்னட. படித்தது தமிழ் முதுகலை பட்டப்படிப்பு! நான் வியப்புடன் இவரைப் பார்த்தபோது சொன்னார்: ‘எங்கள் பள்ளியில் மூன்று தமிழ் ஆசிரியைகள். ஒருவருக்கு தாய்மொழி தெலுங்கு. இன்னொருவருக்கு மலையாளம். எனக்கு கன்னட.’

பதிவுலகத்தில் மட்டுமில்லாமல், ஜெயா தொலைக்காட்சியிலும், சுட்டி விகடனிலும் கதைகள் சொல்லி சாதனை புரிந்துள்ளார் இவர்.

 

புதுவருட வாழ்த்திற்காக இவருக்கு நான் தொலைபேசிய போது தனது 75 வது பிறந்தநாளை தன் குழந்தைகள் எல்லோரும் ஒன்று கூடி கொண்டாட இருப்பதாகவும், கட்டாயம் வரவேண்டும் என்றும் சொன்னார்.

வரும் வாரம் எங்கள் வீட்டில் ஒரு திருமணம் கேரளாவில். அதற்கு கிளம்ப வேண்டும் என்பதால் என்னால் போக இயலவில்லை. ஒரு நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விடுகிறோமே என்று கொஞ்சம் வருத்தம் தான்.

அடுத்த மாதம் இன்னொரு திருமணம் சென்னையில். அப்போது வந்து பார்ப்பதாக அவரிடம் சொல்லி இருக்கிறேன்.

இந்தப் பதிவை படிப்பவர்கள் எல்லோரும் தவறாமல் திருமதி ருக்மிணி சேஷசாயி அவர்களின் தளத்திற்கு போய் அவரது  ஆரோக்கிய வாழ்விற்கு  இறைவனை பிரார்த்தித்துக் கொண்டு, அவரை  வணங்கி அவரது ஆசிகளைப் பெற்று வருமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.

 

 பாட்டி சொல்லும் கதைகள் 

 

 

 

இசைப்பாவில் கேட்டு மகிழுங்கள்:’

நான் ஆணையிட்டால்!

‘சின்னஞ்சிறு கிளியே’

நான்கு பெண்கள் என்ற தளத்தில் நான் தொடராக எழுதப் போகும் ‘செல்வக் களஞ்சியமே!’ என்ற பதிவின் முதல் பகுதி இது.

குழந்தைகள் வளர்ப்பு பற்றிய பதிவு இது. எனது அனுபவத்தையும் சேர்த்து எழுத போவதால் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கிறேன். படிப்பவர்கள் தங்களது கருத்துக்களை பின்னூட்டம் மூலம் சொல்லுங்கள். உங்களது சந்தேகங்களையும் கேட்கலாம். இது ஒரு கலந்துரையாடல் போல இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

உங்களது அனுபவத்தையும் எழுதலாம்.

உங்கள் தொடர்ந்த ஆதரவை நாடுகிறேன்.

*************************************************************************mother

 

‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே!’

எனக்கு மிகவும் பிடித்த, என் குழந்தைகளுக்கும், என் பேரக் குழந்தைகளுக்கும் பாடிய, பாடப் போகும் பாடல் இது.

இந்தப் பாடலில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வரிகளைத்தவிர இன்னும் நிறைய இருக்கிறது.

ஒரு குழந்தை என்னவெல்லாம் செய்யும்?

மழலைச் சொல்லாலே நம் துன்பங்கள் தீர்த்திடும்;

முல்லைச் சிரிப்பாலே நமது மூர்க்கத்தைத் தவிர்த்திடும்;

குழந்தையின் மூலம் நாம் பெறும் இன்பம், ஏடுகள் சொல்லாத இன்பக் கதைகள்!

தெய்வத்திற்கு இணையாக, அதற்கும் மேலான அன்பை நம் மேல் பொழியும் குழந்தை.

சரி, கற்பனையை விட்டுவிட்டு இப்போது நிஜ உலகிற்கு வருவோம்:

சின்ன வயதிலிருந்தே எனக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம். எனது திருமணத்திற்கு முன்பே என் அக்காவின் மகனை (அக்கா வேலைக்கு சென்று கொண்டிருந்ததால்) கொஞ்சி சீராட்டி, பாராட்டி, மையிட்டு, பொட்டிட்டு, விதவிதமாக அழகு செய்து பார்ப்பதில் அலாதி ஆசை எனக்கு.

எனக்குக் குழந்தை பிறந்தபின் தான் குழந்தை வளர்ப்பில் இருக்கும் கஷ்டங்கள் தெரிய வந்தன. அக்காவின் குழந்தையை தூக்கி கொஞ்சி விட்டு, அழுதால் அவளிடம் கொடுத்துவிடலாம். நம் குழந்தை என்றால், முழுப் பொறுப்பும் நம்முடையதாயிற்றே!

குழந்தை பிறந்தவுடன் இரவு முழுவதும் தூங்காமல் குழந்தையையே பார்த்துக் கொண்டிருப்பேன். அது அழுது எனக்குக் கேட்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்று. இன்று போல அப்போது டயபர்கள் கிடையாது. அடிக்கடி குழந்தையின் அடியில் போட்டிருக்கும் துணியை வேறு மாற்ற வேண்டும்.

என் மருத்துவர் என் பயங்களை இதமான வார்த்தைகளால் போக்கினார். “குழந்தைக்கு அசௌகரியமாக இருந்தால் அது கண்டிப்பாக அழும். உனக்கு கட்டாயம் காது கேட்கும். குழந்தை கொஞ்ச நேரம் அழுதால் ஒன்றும் ஆகிவிடாது. அனாவசிய பயங்களை மறந்து விட்டு தூங்கு. உனக்குப் போதுமான ஓய்வு கிடைத்தால்தான் உன்னால் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த முடியும்”.

புதுத் தாய்மார்கள் எல்லோருமே நினைவில் கொள்ளவேண்டிய ஒரு நல்ல அறிவுரை இது.

குழந்தை வளர்ப்பு பற்றி மேலும் பார்க்கும்முன் செய்தி தாளில் நான் படித்த ஒரு விஷயம் உங்களுடன்:

 

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு அளவுக்கதிகமான உணவை கொடுக்கிறார்கள் அல்லது குழந்தையின் வயிற்றில் உணவைத் திணிக்கிறார்கள்!

‘குழந்தை ரொம்பவும் இளைத்து விட்டாள்’

‘குழந்தை ரொம்பவும் ஒல்லியாக இருக்கிறான்’

‘சரியாகச் சாப்பிடுவதே இல்லை’

‘நான் கலந்து கொண்டு வரும் உணவில் பாதிதான் சாப்பிடுகிறாள்’

இப்படி இந்தியத் தாய்மார்கள் மட்டுமல்ல; மேலை நாட்டுத் தாய்மார்களும் சொல்லுகிறார்களாம்!

உண்மையில் தாய்மார்களால் தங்கள் குழந்தைகளின் எடையைப்  பற்றிய நிஜமான கருத்தை அதாவது அவர்கள் நார்மல், அதிக எடை, அளவுக்கு  அதிக எடை என்பதை சரியாகச் சொல்லவே முடியவில்லையாம். எல்லாத் தாய்மார்களும் தங்கள் குழந்தை ஒல்லியாகத் தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு அதிகளவு உணவை ஊட்டுகிறார்கள்!

சுமார் 300 தாய்மார்களை இந்த ஆய்வுக்காக தேர்ந்தெடுத்தனர். இவர்களின் குழந்தைகள் ஒரு வயதிலிருந்து ஒன்றரை வயதுக்குள் இருந்தன.  அவர்களது குழந்தைகளின் எடையைப் பற்றி இவர்களிடம் கேட்டபோது 27% தாய்மார்கள் தங்கள் குழந்தை மிகவும் மெலிந்து இருப்பதாகச் சொன்னார்களாம். உண்மையில் ஒரு குழந்தைதான் எடை குறைவாக இருந்ததாம்.

32% குழந்தைகள் அதிக எடையுடன் இருந்தனர். 12 தாய்மார்கள் மட்டுமே தங்கள் குழந்தை அதிக எடையுடன் இருப்பதாகச் சொன்னார்களாம்.

27% குழந்தைகள் அதிக எடையுடன் இருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இரண்டு வயதிற்குள் அதிக எடையுடன் இருக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் அதிகப் பருமன் (Obese) ஆவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

இதனால் தாய்மார்கள் தங்கள் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றி சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் எடை கூடுவது, குறைவது பற்றிய சரியான அறிவைப் பெற வேண்டியது இன்னும் முக்கியம். எல்லாவற்றையும் விட முக்கியம்: உணவை அதிகளவில் குழந்தைக்குக் கொடுக்காதீர்கள்!

குழந்தைகள் ‘கொழுக், மொழுக்’ என்று இருந்தால் பார்க்க அழகாக இருக்கும் தான். அமுல் பேபி போல தன் குழந்தையும் இருக்க வேண்டும் என்று ஒரு அம்மா ஆசைப்படுவதில் தப்பு இல்லை. ஆனால் அந்தக் ‘கொழுக், மொழுக்’ எதிர்காலத்தில் அவர்களது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்றால் தாய்மார்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

கொழுக், மொழுக் குழந்தையை விட பிற்காலத்தில் சரியான எடையுடன், ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதும் தாய்மார்களாகிய நம் கையில்தான் இருக்கிறது.

இந்தத் தொடரில் குழந்தை வளர்ப்பை அடிப்படையிலிருந்து பார்க்கலாம்.

இளம் குழந்தையை எப்படி தூக்குவது, நீராட்டுவது, பால் புகட்டுவது, தாய் பாலின் அவசியம், கெட்டி ஆகாரத்திற்கு எப்போது மாறுவது, என்னென்ன கொடுக்கலாம், எப்படிக் கொடுக்கலாம் என்று எல்லாவற்றையும் எனது அனுபவத்துடன் சொல்லவிருக்கிறேன்.

என் குழந்தைகளுக்கு அம்மாவாகவும், பேரக்குழந்தைகளுக்குப் பாட்டியாகவும் பலபல அனுபவங்கள். எனது அனுபவங்களும் இந்தத் தொடரில் சேருவதால் இது வெறும் ஏட்டு சுரைக்காயாக இல்லாமல் நடைமுறைக்கு ஒத்ததாகவே இருக்கும்.

உங்களது ஐயப்பாடுகளையும் கேள்விகளையும் பின்னூட்டம் (feedback) மூலமாகக் கேட்கலாம்.

வாசகர்களும் பங்கு கொண்டு இந்தப் பகுதியை சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

 

 

மேலும் படிக்க

 

 

இசைப்பாவில் கேட்டு மகிழுங்கள்:

முதல் முறை கிள்ளிப் பார்த்தேன்

நிர்பயாவிற்கு ஒரு கவிதை

சமீபத்தில் நமது தலைநகரில் ஒரு பெண்ணிற்கு நேர்ந்த கொடுமையை எல்லோரும் அறிவோம்.

திரு அமிதாப்பச்சன் அவள் நிலையில் இருந்து எழுதிய ஒரு கவிதையும் அதன் தமிழாக்கமும்

திரு வெங்கட் நாகராஜ் அவர்களின் வலைப்பதிவில்.

ஹிந்தி மூலமும்,  அதன் தமிழாக்கமும்

நிர்பயாவிற்கு ஒரு கவிதை 

 

 

 

இசைப்பா கேட்டீர்களா?

பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்!

குதிக்கும் ‘அவரை’ தெரியுமா?

avarekaai

உங்கள் அவரா? ரொம்பவும் குதிப்பாரோ? எப்பவுமா? இல்லைக் கோபம் வந்தால் மட்டும் தலைகால் புரியாமல் குதிப்பாரா?

அவர் குதித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஸ்வரஜதி போடுவீர்களா? இல்லை, அவருடன் சேர்ந்து நீங்களும் குதிப்பீர்களா? என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறதா?

ஸ்டாப்! ஸ்டாப்!

எங்கள் ஊரில் இந்த சீசனில் கிடைக்கும் அவரைக் காய்க்குத்தான் இந்தப் பெயர். ஆங்கிலத்தில் இதனை ‘Jumping Bean’ என்பார்கள். கன்னட மொழியில் ‘இதுக்கு’ (பிதுக்கு) அவரை என்பார்கள். எதுக்கு அவரை என்று கேட்காதீர்கள்!

அவரேகாய் என்றாலும் பயன்படுத்துவது இதன் பருப்புகளை மட்டுமே. கிட்டத்தட்ட மொச்சக் கொட்டை போல கொஞ்சம் சின்ன சைஸில் இருக்கும்.

தினசரி செய்யும் சாம்பார் வகைகளிலிருந்து, ஸ்பெஷல் ஆகச் செய்யும், கோடுபளே, அக்கி (அரிசி) உப்பிட்டு, மிக்ஸர்  என்று விதம்விதமாக  இந்த அவரை பருப்புகளை பயன்படுத்துவார்கள். இந்தப் பருப்புகளை வைத்து செய்யும்போது கட்டாயம் இஞ்சி சேர்க்க வேண்டும் – ஜீரணம் ஆவதற்காக – இன்னொரு காரணம் கடைசியில் சமையல் குறிப்பில் காண்க. மிகவும் ‘ஹெவி’ யாக இருக்கும் என்பதால் பலர் – குறிப்பாக வயதானவர்கள் – இதனை சாப்பிடுவதில்லை.

உரித்த அவரேகாய்

முன்பெல்லாம் முழுதாகக் கிடைக்கும். அதை வாங்கி வந்து மேல்தோல் பிரித்து (பட்டாணி போல) உள்ளிருக்கும் பருப்புகளை எடுக்கலாம். இந்த ஊருக்கு வந்த புதிதில் இந்தப் பருப்புகளின் மேல் இருக்கும் தோலியையும் எடுத்துவிட்டு சமைக்க வேண்டும் என்று எனக்குத் தெரியாது.

எங்கள்  வீட்டு சொந்தக்காரரின் மனைவி ‘இதுக்(கு) பேக்கு’ (மேல்தோலை பிதுக்க வேண்டும்) என்று சொன்னவுடன் நான் மனதில் நினைத்துக் கொண்டேன்: ‘இதுக்கு பேக்கு, அதுக்கு பேக்கு, எதுக்கு பேக்கு, எல்லாத்துக்கும் பேக்கு?’ என்று!

பிறகு என் தோழி விளக்கம் கொடுத்தார். மேல்தோல் எடுத்தவுடன் கிடைக்கும் இந்த அவரை விதைகளை தண்ணீரில் எட்டு மணி நேரம் ஊறப் போட வேண்டும். பிறகு ஒவ்வொன்றாக எடுத்து ‘இதுக்க’ (பிதுக்க) வேண்டும்.

வேறு வேலை இல்லை என்று இதை வாங்குவதையே விட்டு விட்டேன். இப்போதெல்லாம் இதுக்கிய அவரேகாயே கிடைக்கிறது. உரிச்ச வாழைப்பழம் போல.

இந்த மாதங்களில் – அதாவது அவரேகாய் சீசனில் இங்குள்ளவர்கள் துவரம்பருப்பு வாங்கவே மாட்டார்களாம். அதற்கு பதில் இந்த பருப்பை பயன்படுத்துவார்களாம்.

இன்னொரு வேடிக்கையான விஷயமும் இந்தக் காயை பற்றி இருக்கிறது. இந்த சீசனில் தெருக்களின் நடுவில் இந்த பருப்புகளின் ‘இதுக்கிய’ தோலிகளை எறிந்து இருப்பார்கள்.

‘ஏன் இப்படி நடுத்தெருவில் இந்தத் தோலிகளைப் போடுகிறார்களோ’ என்று நான் அலுத்துக் கொண்டதற்கு என் தோழி கூறினார்: எத்தனை பேர்கள் இதன் மேல் நடந்து போகிறார்களோ அதனைக்கத்தனை இதன் ருசி கூடும்’ என்று!

இது எப்படி இருக்கு? குதிக்கும் அவரை மாதிரியே குதிக்கத் தோன்றுகிறதா?

சரி. இதனை வைத்துக் கொண்டு ஒரு சின்ன சமையல் குறிப்பு:

அவரேகாய் அக்கி உப்பிட்டு

புழுங்கலரிசி ரவை – 1 கப்

நீர் இரண்டு கப்.

அவரேகாய் கால் கப்.

பச்சை மிளகாய் 2 அல்லது 3 – குறுக்கு வாட்டில் அரிந்து கொள்ளவும்.

கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு

தாளிக்க கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தலா 1 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் 2 அல்லது 3

பெருங்காயம் – சிறிதளவு

கட்டாயம் சேர்க்க வேண்டியது இஞ்சி (இல்லாவிட்டால் ஆட்டோகிராப் படத்தில் வரும் வாத்தியார் படும்பாடுதான்!)

தேங்காய்  துருவியது  கால் கப்

எண்ணெய் – 4 அல்லது 5 மேசைக் கரண்டி

உப்பு – ருசிக்கேற்ப

aval uppumaa

செய்முறை:

வாணலி அல்லது வெண்கல உருளியில் எண்ணெயை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் க.பருப்பு, உ.பருப்பு, மிளகாய் போடவும். இஞ்சியை துருவிப் போடவும். பெருங்காயம் போடவும். கறிவேப்பிலை சேர்க்கவும். நீரை விடவும். தேவையான உப்பு சேர்க்கவும். நீர் கொதிக்கும் போது அவரேகாய் போடவும். 1௦ நிமிடம் கொதிக்க விடவும். ஒரு தட்டால் மூடி விட்டால் அவரேகாய் பாதி வெந்து விடும். பிறகு அரிசி ரவையைக் கொட்டிக் கிளறவும். உருளியின் மேல் ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு வைக்கவும். உப்புமாவிற்கு நீர் தேவைபட்டால் இந்தக் கொதி நீரை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறவும். அவரேகாய் நன்றாக வெந்து, அரிசியும் வெந்தவுடன் தேங்காய் பூவைப் போட்டு ஒரு கிளறு கிளறி அடுப்பை நிறுத்தி விடவும்.

சுடச்சுட சாப்பிட்டால் நன்றாக இருக்கும். பரிமாறும் முன்பு சிறிதளவு நெய்யை விடவும்.

பூப்பூவான அவரேகாய், அக்கி உப்பிட்டு தயார்!

avarekaai saaruஇந்த சீசனில் எல்லா உணவகங்களிலும் இந்தப் பருப்புகளை வைத்தே ரவை  உப்புமா, அவல் உப்புமா, கலந்த சாதங்கள் (சித்திரான்னம்) தோசை, அக்கி ரொட்டி, சாறு எனப்படும்  குழம்பு  முதலானவை தயாரிக்கப் படும். ருசியும், விலையும் வானத்தை தொடும்!

அவரேகாயில் செய்த மிக்சரை சாப்பிட்டுக் கொண்டே இந்தப் பதிவை எழுதுகிறேன்.

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

இந்தப் பதிவு வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளது: வைரப் பதிவர்கள் 

நன்றி மனோ மேடம்!

 

இன்று இசைப்பா கேட்டீர்களா?

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்!