நலம் நலம் தானே நீயிருந்தால்…!

சென்ற வாரம் வாழ்க்கை துணைக்கு உடல் நலம் சரியில்லை. தலை சுற்றல்.

மருத்துவர் மருந்து கொடுத்துவிட்டு, ‘அடுத்த வாரம் வாருங்கள், தேவைப் பட்டால் ப்ரைன் ஸ்கேன் செய்யலாம்,’ என்றார்.

‘ஏதாவது நடவடிக்கையில் மாறுதல் இருந்தால் சொல்லுங்கள். மறதி அதிகம் இருக்கிறதா?’

எப்போதுமே யாருடைய பெயரும் நினைவிருக்காது வா.து. வுக்கு. ஒரு முறை வழக்கமான தொலைக்காட்சி தொடரை ஒரு நாள் பார்க்க முடியாமல் போயிற்று. வா.து. விடம் ‘என்ன ஆச்சு?’ என்றேன்.

‘ஒண்ணும் ஆகலை. அவ இருக்கால்ல… இவளோட வீட்டுக்கு அவ வரா. இவளோட அம்மா அவளைப் பத்தி எதோ சொல்ல…இவளுக்கு கோவம் வந்து…இவளோட ஆம்படையான் அவளை திட்ட….’

அடுத்த வாரம் நானே பார்த்துக் கொள்ளுகிறேன் என்று சொல்லி விட்டேன்!

மருத்துவரும் எங்களுடன் கூட சிரித்து விட்டு ‘உட்கார்ந்த இடத்திலேயே தூங்குகிறாரா?’ என்று அடுத்த கேள்வி கேட்டார்.

 

‘பின்ன? உட்கார்ந்த இடத்தில் தான் தூங்குவார்.  தொலைக்காட்சி சத்தம் தான் தாலாட்டு. தொலைக்காட்சியை நிறுத்தினால் அடுத்த நொடி எழுந்து விடுவார். அத்தனை மின் விளக்குகளும் எரிய…தூங்கினால் தான் உண்டு. படுத்தால் தூக்கம் போய் விடுமே…!’

 

மருத்துவர் வாய் விட்டு சிரித்தார். ‘நீங்கள் இப்படி பேசினால்…..’

 

‘உங்களுக்கு நோயாளிகள் குறைந்து விடுவார்கள்….’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.

 

அடுத்த வாரம். மருத்துவ மனை செல்ல லிப்ட் அருகே போனோம். வா.து. மூக்கை இழுத்து இழுத்துப் பார்த்து விட்டு, ‘ஏதோ பர்னிங் ஸ்மெல்….!’ என்றார்.

 

‘ப்ரைன் ஸ்கேன் தேவை இல்லை….யு ஆர் பர்பெக்ட்லி ஆல்ரைட்’ என்றேன் நான்.

 

மருத்துவர் நான் சொன்னதை ரசித்துவிட்டு ‘எதற்கும் ஈ.என்.டி – யை பாருங்கள்’ என்றார்.

 

ஈ.என்.டி நிபுணர் பல்வேறு நிலைகளில் வா.து. வை படுக்க வைத்து, எழ வைத்து…..  ‘ஒன்றுமில்லை…. காதுக்குள் இருக்கும் திரவத்தில் ஏதேனும் குறை இருக்கலாம். காதுக்குள் சிறிது மெழுகு சேர்ந்திருக்கிறது. ஒரு வாரத்திற்கு இந்த மருந்தைப் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்த வாரம் காதுகளை சுத்தம் செய்யலாம்’ என்று கூறி அனுப்பினார்.

 

வீட்டிற்கு வந்தோம். வா.து. சொன்னார்.

 

‘கண்ணிற்கு மருந்து காலை 8 மணிக்கு. கொஞ்ச நேரம் கழித்து காதிற்கு மருந்து போடு’ என்றார்.

 

நான் சிரித்தேன். ‘பழைய வண்டிகளுக்கு எண்ணெய் போட்டு ஓவர்ஹால் செய்வது போல  ஒரொரு உறுப்புக்கும் மருந்து போட்டு சரி செய்து கொள்ள வேண்டும் – வயதானால்….’ என்றேன்.

 

வாழ்க்கை துணையும் கூடவே சிரித்தார்

 

வயதுடன் கூட நகைச்சுவையும் கூடினால் நல்லதுதானே?

 

நலம் (நான்), நலம்(ஆகத்) தானே நீயிருந்தால்!

 

வம்பு வேணுமா உமா?

 

எனது 250 வது பதிவு இது! என்பதை அடக்கத்துடன் சொல்லிகொள்ளுகிறேன்.

இப்போதெல்லாம் மாலை வேளை ஒரு புதிய பரிமாணம் அடைந்திருக்கிறது. தோழிகளுடன் அரட்டை அடித்துக் கொண்டே நடந்து யோகா வகுப்புக்குப் போவது ஒரு மணி நேர யோகா பயிற்சிக்குப் பிறகு மறுபடி அரட்டை அடித்துக் கொண்டே திரும்பி வருவது. நடை  பயிற்சியும் ஆயிற்று; யோகாவும் ஆயிற்று.

நான் எனது மொழிப்புலமை பற்றி எழுதி இருந்தேன். நமக்கு நம் தாய் மொழி மிகவும் சுலபம்.

எனது யோகா வகுப்பில் எனக்கு இரண்டு தோழிகள். சுகன்யா, ஜோதி. சுகன்யாவின் தோழி உமா சிவஸ்வாமி. எனக்குத் தோழி சுகன்யா; சுகன்யாவின் தோழி உமா; அதனால் நானும் உமாவும் தோழிகள். (அட, அட, என்ன ஒரு லாஜிக்!)

மூவரும் கர்நாடகாவில் பிறந்து திருமணம் ஆன பின் தமிழ் நாட்டில் குடியேறி, தற்சமயம் தாய் மாநிலத்துக்கே திரும்பி வந்தவர்கள்.

நான் ஒருநாள் என் ‘பாப்பா’ அனுபவத்தை சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது உமா தன் அனுபவத்தை சொன்னார்:

‘திருமணம் ஆகிப் போன இடம் அம்பா சமுத்திரம். திருநெல்வேலி! அங்கு பேசும் தமிழ் சென்னை வாசிகளுக்கே புரியாது. போன புதிதில் பக்கத்து வீட்டு மாமியுடன் பேசிக்கொண்டு இருந்தேன் எனக்குத் தெரிந்த அரைகுறை தமிழில். மாமி பேசுவதும் அரைகுறையாகத்தான் புரியும். யாரையோ பற்றி பேசிக்கொண்டு இருந்த மாமி கேட்டார்:

‘நமக்கெதுக்கு வம்பு? உனக்கு வம்பு வேணுமா உமா?’

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என் வீட்டுக்காரரைக் கேட்டுச் சொல்லுகிறேன்’, என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தேன்.

வேலையிலிருந்து வீடு திரும்பியவரிடம், ‘ பக்கத்து வீட்டு மாமி கேட்கிறார் வம்பு வேண்டுமா என்று என்ன சொல்ல?’

எனது கணவர் பல வருடங்களாக தமிழ் நாட்டில் இருந்தவர். நன்றாக தமிழ் வரும். என்னை பார்த்தவர், ‘ ‘சீப்’ ஆக இருந்தால் இரண்டு வாங்கிக் கொள்’ என்றார்.

நானும் அடுத்த நாள் மாமியிடம் போய் ‘சீப்’ ஆக இருந்தால் இரண்டு வாங்கிக் கொள்ளச் சொன்னார் என் வீட்டுக்காரர்’ என்று சொல்ல மாமி என் கன்னத்தை இரண்டு கைகளாலும் அழுத்தி திருஷ்டி கழித்து, ‘எத்தனை சமத்துடி நீ பொண்ணே!’ என்று சொல்லியபடியே சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

உமா சொல்லி முடிக்கவும், உமாவுடன் சேர்ந்து அந்த தெருவே அதிருகிறாப்போல நாங்கள் சிரித்தோம்.

‘இன்னிக்கு சிரிக்கிறேன். அன்னிக்கி என்னடாது மொழி தெரியாத ஊர்ல எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று ஒரு சின்ன பயம் இருந்தது’. என்றார் உமா.

இங்கு வந்த புதிதில் ஒரு பெண்மணி என்னிடம், ‘எஷ்டு மக்களு?’ என்றபோது கொஞ்சம் கோவமாக ‘மக்களு?!’ என்றேன். என்ன நம்மைப் பார்த்து எவ்வளவு மக்கள் என்கிறாளே, ஆசைக்கு ஒன்று, ஆஸ்திக்கு ஒன்று என்று இரண்டுதானே என்று கோவம். பிறகுதான் தெரிந்தது மக்கள் என்றால் குழந்தைகள் என்று!

எனது வகுப்பில் ஒரு இளைஞர் முதல் நாள் வந்திருந்தார். நான் அவரிடம் ‘பெயர் என்ன?’ என்றேன்.

‘கணேசன்’

‘எங்கிருந்து வருகிறீர்கள்?’

‘பனசங்கரி’

அடுத்த நிமிடம் மற்ற மாணவர்கள் ‘மேடம் தமிளு!’ என்றார்கள்.

உண்மையில் எனக்கு இங்கு வந்தபின் தான் உச்சரிப்பில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

மகாபாரதம் (magabaradham!) महाभारथम  ஆகி இருக்கிறது.

எனக்கு வீட்டு வேலை செய்யும் சுதா தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மராட்டி என்று பல மொழிகள் பேசுவாள். ஒரு நாள் என்னிடம் வந்து ‘அம்மா பாங்கு – ல அக்கவுண்ட் ஆரம்பிக்கணும். சுதா – ன்னு  எழுத சொல்லிக் கொடுங்க என்றாள். ஆங்கிலத்தில் எழுத விரும்பிகிறாள் போலிருக்கிறது என்று நினைத்து நீ கன்னடாவிலேயே கையெழுத்துப் போடலாம் சுதா’, என்றேன். ‘எனக்கு ஒரு மொழியும் எழுத வராதும்மா’ என்ற அவள் சொன்ன போது  அசந்து விட்டேன். ‘இத்தனை மொழிகள் பேசுகிறாயே?’ என்றபோது ‘நான் வீட்டு வேலை செய்யும் வீடுகளில் பேசும் மொழிகள் எல்லாம் எனக்கு பேச வரும்மா. ஆனா எழுத படிக்க ஒரு மொழியும் தெரியாது’ என்றாள்.

‘நீங்க மட்டும் என்னோட கூட இங்கிலீஷ்ல தினம் பேசினீங்கன்னா அதையும் பேசுவேன்….!’

சுதாவுக்கு இருக்கும் தன்னம்பிக்கை படித்த நம் இளைஞர்களுக்கு ஏன் இல்லை?

கங்கா ஸ்நானம் ஆச்சு!

 

படம்

‘ஸ்ரீராமா ஜெயஜெயா…..சீதே மனோஹரா ….

காருண்ய சாகரா கருணாநீ ஜெயஜெயா…’

விடியற்காலை 5 மணிக்கே (!) எழுந்து பிள்ளை மாட்டுப் பெண்ணை மணையில் உட்கார வைத்துப் மேற்சொன்ன பாட்டைப் பாடி நலங்கு இட்டு…..தலைக்கு எண்ணெய் வைத்து…

முதலில் இந்தப் பாட்டை பாடி பிறகு இதன் தமிழ் பதிப்பை பாடுவது என் வழக்கம்.

மேலே சொன்ன பாட்டோட தமிழாக்கம் – சம்ஸ்க்ருத / தமிழறிஞர்கள் கோபிக்க வேண்டாம்.

முழுக்க முழுக்க வேடிக்கை!

 

சீராமா, மொ(மி)ளகாமா – சேர்த்தரைச்சா விழுதாமா

காய்ச்சினா ரசமாமா – கடுப்பு வலிக்கு இதமாமா!       

ஒரிஜினல் பாட்டை பாடும் அதே ராகத்தில் இதைப் பாடலாம்!

 

கங்கா (காவேரி) ஸ்நானம் செய்து புதுசு கட்டிண்டு பட்டாசு வெடிக்க கீழே போனோம்.

மாடி வீட்டு ஸ்ருதி நான் வருவதைப் பார்த்துவிட்டு, ‘பாட்டி, ஹேப்பி தீபாவளி’ என்றது. 3 வயதுக் குழந்தை. அதை அப்படியே கட்டிண்டு, ‘ஹேப்பி தீபாவளி’ என்றேன்.

ஸ்ருதியின் அண்ணா ராகுல் வாசலில் வெடி வெடிச்சுண்டு இருந்தான். ஸ்ருதி காதைப் பொத்திண்டு, ‘எனக்கு வெடின்னா ரொம்ப பயம்’ ன்னு காதைப் பொத்திக்கொண்டு எங்கிட்ட வந்து ஒட்டிண்டு நின்னுது.

குழந்தைகளை அணைப்பது என்பது எத்தனை பெரிய இன்பம்! நம் குழந்தையாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ‘உன்னைத் தழுவிடிலோ… கண்ணம்மா..உன்மத்தம் ஆகுதடி!’

என் பிள்ளை என்னிடம் ‘நீ ஆட்டம்பாம் வைக்கிறயா?’ என்றான்.

‘சரி’ என்று எழுந்தேன்.

‘பாட்டி…! நீ வெடிப்பியா?’ என்றது ஸ்ருதி.

‘ம்ம்ம்ம்…….’ என்றபடியே வெடி வெடித்து விட்டு வந்தேன்.

‘நீங்க செம பாட்டி….!’ என்றான் ராகுல்.

கங்கா ஸ்நானம் ஆச்சு!

பதிவுலக வாசகர்களுக்கும், பதிவாளர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! 

 

 படம்

 

 ப்ளாக்ஸ்பாட்டில் படிக்க:  

 http://thiruvarangaththilirunthu.blogspot.in/2012/11/blog-post_13.html

வோட்டுப் போட்டால் புளியோதரை….!

அமெரிக்கத் தேர்தல் முடிந்து திரு ஒபாமா மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த சமயத்தில் அந்தக் கால தேர்தல் பற்றி நான் படித்த ஒரு சிறிய கட்டுரை இதோ:

‘என் வாழ்க்கையில் முதன்முதலில் நான் தேர்தல் ஆர்ப்பாட்டங்களைப் பார்த்தது ஸ்ரீவில்லிபுத்தூரில் தான். ஆனால், இந்தக் காலத்துத் தேர்தல் பிரசாரங்களுக்கும், தடபுடல்களுக்கும் அது எவ்விதத்திலும் ஈடாகுமா? எனினும் அந்தக் காலத்துத் தேர்தல் நிகழ்ச்சிகளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தவை பிரமாதமாக இருந்தன என்றே சொல்லவேண்டும்.

அவைகளில் முனிசிபல் வார்டு எலெக்ஷன் தான் முக்கியமானது. அப்போது எவ்வளவு தேடித் பார்த்தாலும் ஒரு வார்டில் நூறு வாக்காளர்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள். ஆனாலும், எலெக்ஷன் என்றால், ஊரில் எங்கும் ஒரே பரபரப்பாகத்தான் இருக்கும்.

அப்போது முனிசிபல் ஆபீஸ் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதித் தெருவில் இருந்தது. அது ஒரு மண்டபம். போட்டி போடும் ஒவ்வொருவரும் முனிசிபல் ஆபீஸுக்குப் பக்கத்தில் இருக்கும் மற்ற மண்டபங்கள் ஒவ்வொன்றிலும் ஜாகை ஏற்படுத்திக் கொள்ளுவார்கள். வோட்டுப் போடுகிறவர்களை அபேட்சகர்கள் ஆட்களை அனுப்பியோ, வண்டிகளிலேயோ கூட்டிக்கொண்டு வருவார்கள். முதலில் அவரவர்கள் ஜாகைக்குத் தான் கூட்டிக்கொண்டு வருவார்கள்.

அங்கே ஓர் கூடையில் புளியோதரை; மற்றொரு கூடையில் தோசை; இன்னும் பிரசாத வகைகளையும் வைத்திருப்பார்கள். கலியாண அழைப்புக்காக வந்தவர்களுக்கு வெற்றிலை பாக்குத் தாம்பூலம் கொடுத்து மரியாதை செய்யும் வழக்கம் இருக்கிறதல்லவா? அதேபோல, வோட்டுப் போட வந்தவர்களுக்கும் ஏதாவது மரியாதை செய்யாமல் அனுப்புவது நன்றாக இராது என்று எண்ணித்தான் பிரசாத வகையறாக்களை கொடுத்து உபசாரம் செய்வது. வந்தவர்கள் முதலில் புளியோதரை, தோசைகளைச் சாப்பிட்டுவிட்டுத் தான் பிறகு வோட்டுப் போடப் போவார்கள்.

புளியோதரை, பொங்கல், தோசை இவைகளை சாப்பிட்டப் பிறகு தான் வோட்டுப் போட வேண்டுமென்று தேர்தல் விதி ஒன்றும் கிடையாது. ஆனால், நடைமுறையில் அப்படித்தான்!

இதைத் தெரிந்து கொள்ளாமல் யாரவது நேராகப் போய் வோட்டுப் போட்டு விட்டால், அப்புறம் புளியோதரை, தோசை ஒன்றையும் அவர் காண முடியாது! வோட்டுப் போட்ட பிறகு அவரை என்ன, ஏது என்று கேட்பார் தான் யார்…? திக்கற்ற அநாதை போல வீடு திரும்ப வேண்டியதுதானே!

ஆனால் ஒன்று: ஒரு மண்டபத்தில் சாப்பிட்டு விட்டு மற்றொரு மண்டபக் காரருக்கு வோட்டுப் படுவது அந்தக் காலத்தில் நடந்திருக்காது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் இந்தக் காலம் மாதிரி எலெக்ஷன் சூட்சுமங்களும் சூழ்ச்சிகளும் அவ்வளவாக இல்லாத காலம் அல்லவா?’

பின் குறிப்பு:

தமிழகத்தின் முதல்வராக இருந்த பி.எஸ். குமாரஸ்வாமி ராஜா ஆனந்த விகடன் இதழில் 1952 தனது இளைமைக்கால நினைவுகளை எழுதி இருந்தார். 1998 ஆம் வருடம் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட போது ஆ.வி. யில், அதிலிருந்து சில பகுதிகளை வெளி இட்டனர். அதிலிருந்து ஒரு பகுதி தான் நீங்கள் மேலே படித்தது.

 

என் அம்மாவிற்கு பிடித்த பொழுதுபோக்கு பத்திரிகைகளில் வரும் நல்ல கதை கட்டுரை கவிதைகளை எடுத்து புத்தகமாகத் தைத்து வைப்பது. இன்று பிற்பகல் ஓய்வின்போது இந்தத் தொகுப்பை படிக்க எடுத்தபோது இந்தக் கட்டுரை கண்ணில் பட்டது.

சுவாரஸ்யமான இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே என்று!

 

 

ரமாவும் ரஞ்ஜனியும்!

ரஞ்ஜனியை எல்லோருக்கும் தெரியும். அதாங்க, அ. உ. பு. பதிவாளர்.

ரமா யார்? அ. உ. பு. பதிவாளர் ரஞ்ஜனியின் அக்கா. என்னைவிட 3 வயது மூத்தவள்.

என்னைவிட புத்திசாலி. எல்லாவிதத்திலும் என்னைவிட சிறந்தவள். மிக நன்றாகப் பாடுவாள்.

சின்ன வயதில் அவளுடன் நான் எப்பவுமே எல்லாவற்றிற்கும் போட்டி போடுவேன். அவள் திருமணம் ஆகிப் போகும் வரையிலும் இது தொடர்ந்தது.

கோலம் போடுவதில் வல்லவள். புள்ளிக் கோலங்கள் அனாயாசமாகப் போடுவாள். எனக்கு வராத பல கலைகளில் இதுவும் ஒன்று. நான் போடும் கோலங்கள் மாடர்ன் ஆர்ட் வகையை சார்ந்தவை. மிகுந்த பொறுமையுடன் புள்ளிகள் வைத்து அவள் கோலத்தை போடுவதைப் காணக் கண் கோடி வேண்டும். ‘நீ புள்ளி வைத்துப் போடும் கோலத்தை நான் புள்ளி இல்லாமலேயே போடுவேன்’ என்று பல தடவை சவால் விட்டு தோற்றவள் நான்.

 

வெள்ளிக்கிழமைகளில் வீட்டை நன்கு பெருக்கி, துடைத்து  கூடத்தை அடைத்துக் கோலம் போடுவாள், பாருங்கள்! கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல இருக்கும்.

 

கோலத்திற்கு அடுத்தபடியாக இப்போது அவள் விரும்பிச் செய்வது ஸ்ரீரங்கம் போய் நம்பெருமாளை சேவிப்பது.

 

திருமணம் ஆவதற்கு முன் சுருக்கெழுத்து.

 

வானொலியில் வரும் ஆங்கில செய்திகளை கேட்டு சுருக்கெழுத்தில்  எழுதிக் கொண்டே இருப்பாள். சுருக்கெழுத்தில், சுருக்கெழுத்தாளர் எழுதும் ஸ்ட்ரோக்ஸ் (strokes) ரொம்ப முக்கியம். அதை வைத்துதான் எழுதிய விஷயத்தை ஆங்கிலத்தில் transcribe செய்ய வேண்டும். அக்காவின் ஸ்ட்ரோக்ஸ் perfect ஆக இருக்கும். நான் எப்போதும் போல ‘சமாளி’ தான்!

 

அவளுக்குத் திருமணம் ஆகி குழந்தை பிறந்தது எனக்கு இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது. ஆபீஸிற்கு அப்பா போன் செய்திருந்தார். ‘அக்காவை மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறோம். முடிந்தால் லீவு சொல்லி விட்டு வா’ என்று.

 

எனக்கு ஆபீஸ் போவதை விட லீவு போடுவது பிடித்தமான விஷயம் ஆயிற்றே! உடனே லீவு சொல்லிவிட்டுப் பறந்தேன்.

 

இன்னும் குழந்தை பிறந்திருக்கவில்லை. அம்மா அப்போதுதான் அக்காவிற்கு காபி கலந்து எடுத்துப் போகலாம் என்று வீட்டிற்கு வந்திருந்தாள். ‘கொஞ்சம் போய் அவள் பக்கத்தில் இரு’ என்றாள்.

 

நான் உள்ளே நுழையவும் குழந்தையின் அழுகை ஒலி கேட்கவும் சரியாக இருந்தது. சிறிது நேரத்தில் ஒரு ஆயா வெளியே வந்து ‘இத பாரு, உங்க அக்கா குழந்தை’ என்று சொல்லிய படியே நல்ல ரோஸ் கலரில் ஒரு பஞ்சு உருண்டையை என் கையில் கொண்டு வந்து கொடுத்தாள். ஒரு சிலிர்ப்புடன் வாங்கிக் கொண்டேன்.

 

‘முதன்முதலில் நான் தான் உன்னைப் பார்த்தேன்; நான்தான் எடுத்துக் கொண்டேன்’ என்று (அதிலும் போட்டி!) இன்றும் என் அக்காவின் பிள்ளை சம்பத்குமாரனிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். அன்று தொடங்கி இன்றுவரை அவன் தான் என் முதல் பிள்ளை. அந்த வாத்சல்யம் இன்னும் குறைய வில்லை. அவனுக்கு மட்டுமில்லை – அவனுடைய இரு குழந்தைகளுக்கும் – (ஷ்ரேயா, மேக்னா)   நான் சித்தி தான்! இருவரையும் என் பதிவு ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

 

எனக்குத் திருமணம் ஆகி 3 மாதங்களில் என் அப்பா பரமபதித்து விட்டார். அந்த வருடம் தலை தீபாவளி இல்லை. அடுத்த வருடம் என் அக்காவும் அத்திம்பேரும் எங்களை அழைத்துக் கொண்டு போய் அவர்கள் வீட்டில் விருந்து கொடுத்தனர்.

 

எனக்கு பூச்சூட்டல் செய்து, சீமந்தத்திற்கு சீர்கள் கொண்டு வந்து வைத்து, தலைப் பிரசவத்திற்கும் தன் வீட்டிற்கு அழைத்துப் போனாள் அம்மாவாக இருந்து.

 

எங்கள் அத்திம்பேர் சின்ன வயதில் பரமபதித்தது எங்கள் எல்லோருக்கும் இன்னும் ஒரு அதிர்ச்சியாகவே இருக்கிறது.

 

தைரியமாக தனக்கு நேர்ந்ததை எதிர் கொண்டு தனி ஒருவளாக பிள்ளையை வளர்த்து ஆளாக்கினாள். அம்மாவும் அவளும் அத்தனை திவ்ய தேசங்களையும் சேவித்து இருக்கிறார்கள். நாலாயிர திவ்யப்பிரபந்தம் அத்தனையும் அத்துப்படி.

 

கண்களில் நீர் தளும்பப் பெருமாளை அலுக்காமல் சலிக்காமல் சேவிப்பாள்.

 

எனக்கு அக்காவாக, அம்மாவாக இருக்கும் ரமா ஆரோக்கியமாக, சந்தோஷமாக பேத்திகளுக்கு திருமணம் ஆகி கொள்ளுப் பேரன்களையும், கொள்ளுப் பேத்திகளையும் பார்த்து பல ஆண்டுகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நம்பெருமாளையும், ரங்கநாயகித் தாயாரையும் பிரார்த்தித்து நிற்கிறேன்.

 

அவளுடன் கொண்டாடிய தலை தீபாவளி நினைவுகளுடன்………

 

 

 

அன்புள்ள ரசிகப் பெருமக்களே!!!!!!!!!!!!!!! (?????????????????)

 

 

அன்புள்ள ரசிகப் பெருமக்களே!!!!!!!!!!!!!!! (?????????????????)

இதனால் அறிவிக்கப் படுவது யாதெனில்,

பொழுது போகாமல் இன்னொரு வலைத்தளம் ஆரம்பித்து இருக்கிறேன். பெயர்  ‘இரண்டாம் எண்ணங்கள்’

பெயர்க் காரணம் கேட்காதீர்கள். எனக்கே தெரியாது.

 

இரண்டும்கெட்டான் எண்ணங்களாக இருந்தாலும் (இப்போது மட்டும் என்ன வாழ்கிறது என்று தோன்றினாலும்)

என் ரசிகர்களான நீங்கள் இப்போது போல கோடிக்கணக்கில் வருகைதந்து எப்போதும் போல ஆதரிக்க வேணுமாய் கேட்டுக் கொள்ளுகிறேன்.

ப்ளாகர்களின் வசதிக்காக இங்கு எழுதும் பதிவுகளை அங்கும் அரங்கேற்ற எண்ணம்.

புதிய தளத்தில் என் முதல் பதிவு:

 

சத்தமில்லாமல் ஒரு தீபாவளி!

http://wp.me/p2RUp2-8

 

 

 

தீபாவளி வந்தாச்சு!

 

 

இன்று காலை சம்மந்தி அம்மா வந்திருந்தார். மாட்டுப் பெண்ணின் அம்மா. பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கூடவே மாப்பிள்ளைக்கு புது டிரஸ் வாங்கிக் கொள்ள பணம். எல்லாவற்றையும் வைத்து என்னிடம் நீட்டினார்.

நான் அதை அப்படியே மாட்டுப் பெண்ணிடம் கொடுத்து விட்டேன். சம்மந்தி அம்மா கிளம்பியவுடன், மாட்டுப் பெண் ‘நாம போய் உங்களுக்கும், அப்பாவுக்கும் புது துணிமணிகள் வாங்கலாம் வாருங்கள்’ என்றாள். படு குஷியுடன் கிளம்பி விட்டேன்.

புடவை வாங்கப் போய் ரொம்ப நாளாகிவிட்டது. இப்போதெல்லாம் புது புடவை வாங்குவதே இல்லை. பிறந்த நாளுக்குக் கூட ஒன்றும் வாங்கிக் கொள்ளவில்லை. தியாகம் எல்லாம் இல்லை. வெளியே போவது ரொம்பவும் குறைந்து விட்டது. புடவை வாங்கி அடுக்குவானேன் என்று.

முன்பெல்லாம் அதாவது நான் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்தபோது பிறந்தநாளுக்கு மூன்று, தீபாவளிக்கு மூன்று என்று புடவைகள் வாங்கிக் கொண்டே இருப்பேன். அதுவும் காட்டன் புடவைகள் தான். என் அம்மா சொல்வாள்: ‘புடவை விலையை விட maintenance –க்கு அதிகம் செலவழிக்கிறாய்’ என்று! காட்டன் புடவையில் வரும் கம்பீரம் வேறு எதிலும் வருவதில்லை.

சரி இன்றைய கதைக்கு வருவோம்:

எப்போதும் போகும் பொப்பத்தி கடைக்குப் போனோம். சில்க் காட்டன் புடவைகள் பார்த்தோம். எல்லா கலருமே என்னிடம் இருப்பது போல இருந்தது. பச்சை வேண்டாம், நீலம் வேண்டாம், மரூன் வேண்டாம் – வேறு என்ன கலர் வாங்குவது? வெள்ளையில் மரூன் பார்டர் – என்னவருக்குப் பிடிக்கவில்லை. பச்சையில் மரூன் பார்டர் எனக்கு அவ்வளவாக சரி படவில்லை.

‘மாட்டுப் பெண்ணே என்னடி வாங்குவது?’ என்றேன்.

‘உங்களுக்குப் பிடித்ததை வாங்குங்கோ’ என்றாள் சமத்து!

ஆஹா! கண்டேன் சீதையை இல்லையில்லை! மயில் கழுத்துக் கலர் பச்சையும் நீலமும் கலந்து இரண்டு பக்கமும் பார்டர் போட்ட புடவை. அகல பார்டர் புடவை, இரண்டு பக்க பார்டர் புடவை  – உயரமானவர்களுக்குத் தான் நன்றாக இருக்கும். நிஜம் தான் ஆனால் எனக்குப் பிடித்திருக்கிறதே! நான் உயரம் இல்லை என்று நன்றாக இருக்கும் புடவையை வாங்காமல் இருக்க முடியுமா?

விலையைப் பார்த்தேன். கிறுகிறுத்தது. நான் பார்த்து கிறுகிறுத்ததை மாட்டுப் பெண் பார்த்தாள்.

‘விலையைப் பார்க்காதீங்கோ. பிடித்திருந்தால் வாங்கிக்கோங்கோ’ என்றாள். வாங்கியாச்சு!

எல்லாவற்றையும் விட எது அதிசயம்? 10 நிமிடத்தில் புடவை வாங்கினது தான்!

 

புடவை வாங்கி முடித்து பில் போட வந்தோம். பட்டுப் புடவை செக்ஷனில் ஒரு இளம் தம்பதி. அந்தப் பெண் தனது  தோளின் ஒரு பக்கம் வெள்ளையில் பல கலர் பார்டர் போட்ட புடவை; இன்னொரு பக்கம் நல்ல மஞ்சளில் அதே போல பல கலர் பார்டர் போட்ட புடவையைப் போட்டுக் கொண்டு எதை எடுப்பது என்று தெரியாமல் கணவனை கேட்டுக் கொண்டிருந்தாள். கடை சிப்பந்தியில் கையில் நல்ல நீல நிறத்தில் அதேபோல ஒரு புடவை!

நான் சும்மா வந்திருக்கலாம்.  சும்மா வருவது unlike Ranjani! இல்லையா?

‘உங்கள் கலருக்கு மஞ்சள் நன்றாக இருக்கும்….’என்றேன். அந்த இளம்  கணவன் என்னைப் பார்த்து, ‘என் விருப்பம் வெள்ளை ஆனால் அவள் மஞ்சள்…..!’ என்றான்.

‘இரண்டு பேருக்கும் பொதுவாக நீலத்தை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றேன்.

இரண்டு பேரும் வாய்விட்டு சிரித்தனர்.

இதற்கு மேல் பேசினால் எல்லை மீறல்!

‘ஹேப்பி தீபாவளி’ என்று வாழ்த்தி விட்டு நகர்ந்தேன்.

தீபாவளி வந்தாச்சு!

 

 

 

கன்னட கொத்து!

 

முதல் முறையாக சிங்காரச் சென்னையை விட்டு நான் வெளியே வந்தது 1987 ஆம் ஆண்டுதான்.

அதுவே பெரிய சாதனையாக எனக்குத் தோன்றியது. இரண்டு நாட்கள் எங்காவது வெளியூர் போனாலே ‘ஆனந்தம் ஆனந்தம்’ பாடும் நான், சில வருடங்கள் பெங்களூரில் இருப்போம் என்றவுடன் ஆனந்தத்தின் எல்லைக்கே போய்விட்டேன்.

ஏப்ரல் மாதத்தில் குழந்தைகளுக்கு விடுமுறை ஆரம்பித்தவுடன் இங்கு வந்து விட்டோம். பசவங்குடியில் ஒரு பிரபல பள்ளியில் (TVS கம்பெனி என்று சொல்லுங்கள். உடனே இடம் கிடைக்கும் என்று நண்பர்கள் சொன்னார்கள்!) இருவரையும் சேர்த்தோம்.

என் அம்மா மல்லேஸ்வரத்தில் வீடு பார்க்கச் சொன்னாள்: ’தமிழ்காரா நிறைய இருப்பா. நீ கன்னடம் கத்துக்க வேண்டிய சிரமம் இருக்காது….’

ஆனால் என் எண்ணமே வேறு. ‘ரோமில் இருக்கும்போது ரோமாநியனாக இருக்க வேண்டும் இல்லையா? வாழ்வில் முதல் முறையாக வெளி ஊருக்கு வந்திருக்கிறோம். புது ஊர், புது பாஷை, புது மனிதர்கள் ஒவ்வொன்றையும் அனுபவிக்க வேண்டும், இல்லையா?

ஆங்கிலம் பேச வராமல் நான் தவித்த போது என் அப்பா சொன்ன ஒரு அறிவுரை: காதுகளை திறந்து வைத்துக் கொள். கவனமாகக் கேள். ஓரளவுக்குப் புரியும்.’

அப்பா சொன்ன அறிவுரையை பெங்களூர் வந்தவுடன் செயலாற்றத் தொடங்கினேன்.

நாங்கள் அப்போது இருந்து இடம் நரசிம்ம ராஜா காலனி. நிறைய கன்னடக்காரர்கள் இருக்குமிடம். கன்னடம் காதில் விழுந்து கொண்டே இருந்ததால் மூன்று மாதத்தில் கன்னட மொழியை தமிழில்– நான் பேச ஆரம்பிக்கும்போதே ‘தமிளா?’ என்று கேட்கும் அளவுக்கு பேச ஆரம்பித்தேன்!

என் குழந்தைகள் இருவரும் ‘அம்மா, ப்ளீஸ் கன்னடத்துல பேசாதம்மா! நீ தமிழ் உச்சரிப்புல பேசறது எங்களுக்கு வெக்கமா இருக்கு…. என்று கெஞ்சினர்.

‘ ச்சே…ச்சே….இதுக்கெல்லாம் வெக்கப்படக் கூடாது….  தப்புத்தப்பா பேசித்தான் புது பாஷையைக் கத்துக்கணும்’, என்று  அவர்களை அடக்கினேன்.

என் கணவர் இந்த விளையாட்டுக்கு வரவே இல்லை. ‘இந்த வயதுக்கு (40+) மேல்(!) இன்னொரு மொழி கற்பது கஷ்டம் என்று அன்று சொல்லி இன்று வரை கற்காமலேயே காலம் தள்ளுகிறார்!

ஒரு முறை என்னவருக்கு உடல்நிலை சரியில்லை. ஆபீஸ் போகவில்லை. வீட்டிலேயே படுத்திருந்தார்.

இதை அறிந்து எங்கள் வீட்டு சொந்தக்காரரின் மனைவி எங்கள் வீட்டுக்கு வந்தாள். என்னவர் எப்படி இருக்கிறார் என்று கேட்டு விட்டு ‘………….பாப்பா…………!’ என்றாள்.

‘………….பாப்பா……!’

ஒவ்வொரு வாக்கியத்தின் முன்னும் பின்னும் பாப்பா, பாப்பா என்று…..

என் கணவரைப் பார்த்து இவள் ஏன் பாப்பா பாப்பா என்கிறாள்? குழந்தைகளும் வீட்டில் இல்லையே? ஸ்கூல் போய் விட்டார்களே! கணவரை கன்னடத்தில் ‘பாப்பா’ என்பார்களோ?

தலையே வெடித்துவிடும் போலிருந்தது. நாங்கள் இருந்த வீட்டில் கார் வைக்க இடமில்லாததால் பக்கத்து தெருவில் ஒரு வீட்டில் என் கணவர் காரை நிறுத்துவார். அவர்களுக்கு தமிழும் தெரியும். அவர்களுக்கு தொலைபேசினேன்.

நான் சொன்னதைக்கேட்டு அந்த மாமி ரொம்பவும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

பாபம் (பாவம்) என்பதை தான் அந்த பெண்மணி பாப….பாப… என்றிருக்கிறாள்!

இதற்கு அடுத்தபடி என்னை அதிர வைத்த வார்த்தை டாக்டர் ஷாப்!

மகனுக்கு உடல்நிலை சரியில்லை. வீட்டு சொந்தக்காரரிடம் போய் ‘டாக்டர் வீடு எங்கே?’ என்றேன்.

அவர் பதறிப்போய் ‘வீட்டுக்கெல்லாம் போகதீங்கம்மா. ஷாப்புக்கு போங்க!’ என்றார்.அவர் காட்டிய திசையில் போனேன். அங்கு ஒரு மெடிக்கல் ஷாப். இதைதான் சொன்னாரோ? கடைக்காரரிடம் ‘டாக்டர் வீடு எங்கே?’ என்று கேட்டேன். அவரும் ஷாப்புக்குப் போங்க என்றார்.

என்ன இது? அவரிடமே கேட்டேன். ‘தமிளா?’ என்று கேட்டு விட்டு அரைகுறை தமிழில் (என் அரைகுறை கன்னடத்திற்கு சமமாக!) இங்க டாக்டர் வீடுன்னு சொல்ல மாட்டோம். டாக்டர் ஷாப்பு (கிளினிக்) என்றுதான் சொல்லுவோம்’ என்றார்.

இப்படி பேச ஆரம்பித்த நான் என் பிள்ளையுடன் சேர்ந்து கன்னட மொழியை எழுத படிக்கக் கற்று, இரண்டாம் வகுப்பிற்கு கன்னட ஆசிரியையாகவும் ஆனேன் பிற்காலத்தில்!

முயற்சி திருவினையாக்கும் இல்லையா?

 

 

 

 

 

 

 

.

 

 

 

நானும் என் மொழிப் புலமையும்!

தலைப்பை படித்தவுடன் நானும் நமது முன்னாள் பிரதமர் (17  மொழிகளில் மௌனம் சாதிப்பவர் என்று திரு மதன் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்!) திரு நரசிம்மராவ் மாதிரி பன்மொழி புலமை உடையவள் என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பாளி அல்ல!

திரு அப்பாதுரை சொன்னது போல ஆங்கிலத்தையும் தமிழில் கற்றவள் நான். அந்த காலத்து வழக்கப்படி என் அக்காவின் வழியில் SSLC முடித்தவுடன் தட்டச்சு, சுருக்கெழுத்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

ஒரு அலுவலகத்தில் வேலையும் கிடைத்து, 1971 ஜூன் 2 ஆம் தேதி வேலையில் சேர்ந்தேன். நேர்முக தேர்வில் எனது ஆங்கில அறிவு தடையாக இல்லை. ஆனால் போகப் போக,  வெறும் ஸ்டெனோ-டைப்பிஸ்ட் மட்டுமில்லாமல் தொலைபேசிக்கும் பதில் சொல்லவேண்டும் என்று வந்தபோது ரொம்பவும் தவித்தேன். ஆங்கிலத்தில் பேசுவது சிம்ம சொப்பனமாக இருந்தது.

என் அப்போதைய பாஸ் கொஞ்சம் முரடர். அவரைப் பார்த்தாலே பயமாக இருக்கும். ‘sslc – வரைக்கும் ஆங்கிலம் படித்திருக்கிறாய் இல்லையா? பேசு!’ என்பார். கடிதங்கள் எழுதுவதிலேயோ, வரும் கடிதங்களுக்கு பதில் எழுதுவதிலேயோ எனக்கு எந்தவித பிரச்சினையும் இருக்கவில்லை. பேசுவதற்குத் தயங்கினேன்.

இன்னொரு பிரச்சினை என் பாஸ்- களின் பெயர்கள்! நான் பொதுமேலாளருக்கு உதவியாளியாக இருந்துபோதும் சேர்மன், மானேஜிங் டைரக்டர் என்று எல்லோருக்கும் வரும் தொலைபேசி அழைப்புகளை பெற்று அவர்களுக்கு தொடர்பு கொடுக்கும் வேலையையும் செய்ய வேண்டி வந்தது.

எனது நேர் பாஸ் பெயர் நடராஜ். சேர்மன் எதிராஜ். மானேஜிங் டைரக்டர் (சேர்மனின் தம்பி) நாகராஜ். சேர்மனின் பிள்ளை ஹரிராஜ்!

முதலே ஆங்கிலம் என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஒரேமாதிரியான பெயர்களும் சேர்ந்து என்னைபோட்டுக் குழப்பியதில் (நான் என் ஆங்கிலத்தில் கவனம் செலுத்துவேனா, பெயர்களை கவனிப்பேனா?) இந்த ராஜ்-க்கு வரும் அழைப்பை அந்த ராஜ்-க்கும், இளைய  ராஜ்-ஜின் பெண் தோழியின் அழைப்பை அவரது அப்பாவிற்கும் மாற்றி மாற்றிக் கொடுத்து……

இதெல்லாம் நடந்து சிறிது காலம் ஆயிற்று. ஒரு நாள் காலை எனது நேர் பாஸ் அலுவலகத்திற்கு வந்தவர் ஏதோ அவசர அழைப்பு வர தலைமை அலுவலகத்திற்குக் கிளம்பி விட்டார். தலைமை அலுவலகம் பாரி முனையில். நான் வேலை பார்த்தது தொழிற்சாலை – திருவேற்காடு பக்கத்தில். இனி இவர் எங்கே திரும்பி வரப் போகிறார் என்ற தைரியத்தில் தட்டச்சு இயந்திரத்திற்கு உறையைப் போட்டு மூடி, ஆனந்தமாக கையோடு எடுத்துப் போன ஆனந்த விகடனில் மூழ்கினேன்.

நிஜமாகவே மூழ்கிப் போனவள் பாஸ் வந்ததையே பார்க்கவில்லை. ஏதோ ஃபைலை எடுத்துப் போக திரும்பி வந்திருக்கிறார். எனது அறையில் தான் ஃபைல் ராக் இருக்கிறது.

‘ரஞ்ஜனி…!’ அவரது இடி முழக்கம் கேட்டு ஆ. வி. யில் மூழ்கி போனவள் திடுக்கிட்டு எழுந்தேன்.

கையில் ஆ.வி!

என் கையிலிருந்த ஆ.வி.யை ஒரே பிடுங்காகக் பிடுங்கி இரண்டாகக் கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டார்!

(அப்போதெல்லாம் ஆ.வி. குண்டு புத்தகமாகவே வரும். இவர் எப்படி ஒரே தடவையில் இரண்டாகக் கிழித்தார் என்று எனக்கு இன்னும் ஆச்சரியம் தான்!)

‘காச் மூச் என்று கத்த ஆரம்பித்தார். சாரம் இதுதான்: உன்னை ஆங்கிலம் கற்க சொன்னால் தமிழ் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாய்….. இன்னொரு தடவை நீ தமிழ் புத்தகம் படிப்பதைப் பார்த்தால்….என்ன நடக்கும் தெரியுமா?’

(என்ன நடக்கும் இதேபோல கிழித்துப் போடுவாய்!)

பதிலே பேசவில்லை நான்.

‘உனக்கு வேலையில்லை, ‘போர்’ அடிகிறது என்றால்…..’ என்று சொல்லியபடியே அவரது அறைக்குள் போய் அவரது மேஜை டிராயரில் இருந்து கேம்ப்ரிட்ஜ் அட்வான்ஸ்ட் டிக்ஷனரியை கொண்டு வந்து என் மேஜை மேல் போட்டார்.

‘இதைப் படி…வாழ்வில் உருப்படுவாய்….என்று சொல்லியபடியே திரும்ப காரில் ஏறிக் கொண்டு போய்விட்டார்.

வீட்டிற்குப் போய் என் அப்பாவிடம் இனி ஆபீசுக்குப் போகவே மாட்டேன் என்று நடந்ததை சொல்லி என் பாஸ்-ஐ கன்னாபின்னாவென்று (இடியட், ஸ்டுபிட்….என்று எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில்!) திட்டித் தீர்த்தேன்.

‘சரி தூங்கு, காலையில் பார்த்துக் கொள்ளலாம்’ என்றார் அப்பா.

அடுத்த நாள் கலையில் வழக்கம்போல அப்பா என்ன சீக்கிரமே எழுப்பினார். எங்கள் வீட்டிலிருந்து பூந்தமல்லி ஹை ரோட் வரை நடராஜ சர்வீஸ். அங்கிருந்து அலுவலகத்திற்கு பேருந்து. அதனால் 8.30 மணி ஆபிசுக்கு சீக்கிரமே எழுந்து 7 மணிக்கு கிளம்ப வேண்டும்.

‘நான்தான் போகப் போவதில்லையே!’ என்றேன்.

‘யார் மேல தப்பு? நிதானமா யோசி. உன் மேல தப்பு என்றால் உடனே கிளம்பு. பாஸ் மேலே என்றால் போக வேண்டாம்’ என்றார் அப்பா.

அடுத்த அரை மணியில் கிளம்பி அலுவலகம் போய் சேர்ந்தேன். என் பாஸ்-க்கும் என்னைத் திட்டியது ஒரு மாதிரி இருந்திருக்க வேண்டும். மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை. என்னைக் கொஞ்சம் கருணையுடன் நடத்தத் தொடங்கினார்.

நானும் அன்றிலிருந்து அவர் சொன்னதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு டிக்ஷனரி படிக்க ஆரம்பித்தேன். பெரிய ஆங்கில அகராதியில் ஒரு வார்த்தைக்கு வெறும் அர்த்தம் மட்டும் கொடுத்திருக்க மாட்டார்கள். அதை வைத்து எப்படி வாக்கியம் பண்ணுவது என்றும் உதாரணங்கள் கொடுத்திருப்பார்கள். அது எனக்கு பெரும் உதவியாக இருந்தது.

இன்றும் எனக்கு டிக்ஷனரி படிப்பது மிகவும் விருப்பமான பொழுது போக்கு.

இன்றைக்கு என் மாணவர்கள் என் ஆங்கிலத்தை மதிக்கிறார்கள் என்றால் எனக்குப் பிடிக்காத அந்த பாஸ் தான் காரணம்.

நாளை நானும் கன்னடமும்……!