பணி ஓய்வு பெறப் போகிறீர்களா?

பணி ஓய்வு

நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வருடங்களாக ஒருநாளைப் போல காலை ஐந்தரை மணிக்கு எழுந்திருப்பதும் இயந்திரம் போல சமையல் செய்து முடித்து அலுவலகம் வருவதும், வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பும்போது அடுத்த நாளைக்கு தேவையான கறிகாய்கள், பழம், சில சமயங்களில் மளிகை சாமான்கள் வாங்கிப்போவதும்…. மூச்சுவிடாமல் செய்யும் வேலைகள் எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். இது மனதிற்கு மிகப் பெரிய ஆசுவாசத்தைக் கொடுத்தாலும், அலுவலகத்தில் இத்தனை நாட்கள் செலவழித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் இனி என்ன செய்வது? சோம்பேறியாகி விடுவோமோ? மதிய நேரத்தில் தூங்கித் தூங்கி காலத்தைக் செலவிட வேண்டியிருக்குமோ? இத்தனை நாட்கள் தூங்குவதற்கு நேரமே கிடைக்காமல் தவித்தோம்; இனி தூக்கமே வாழ்க்கை என்று ஆகிவிடுமோ? பணியிலிருந்து ஓய்வு என்பது சிறிது நாட்களுக்கு நன்றாக இருக்கும். பிறகு என்ன செய்வது? இந்தக் கவலையும் கூடவே எழுந்தது விசாலத்திற்கு.

 

பணி ஓய்வுப் பெறப்போகிறோம் என்ற உணர்வே ஐந்தில் நான்கு மூத்த குடிமக்களுக்கு மனஅழுத்தத்தைக் கொடுக்கிறது. இனி என்ன செய்வது என்பது தான் மிகவும் முக்கியமான விஷயம். நாமெல்லோருமே சிறிய வயதில் நம் சொந்த ஊரில் – முக்கால்வாசி அது ஒரு கிராமமாக இருக்கும் – காவிரிக் கரையிலோ, தஞ்சாவூர் பக்கமோ வயல்வெளியைப் பார்த்திருப்போம். பணிஓய்வு பெற்றுவிட்டோம் என்று இப்போது வயலில் இறங்கி வேலை செய்வது இயலாத ஒன்று. இத்தனை நாள் இல்லாத வழக்கமாக திடீரென  புத்தகம் படிப்பதும் முடியும் காரியமில்லை. பணிஓய்வு பெற்றவர்களில் 62.3% பேர்கள் உண்மையில் சலிப்பு அடைகிறார்கள். இந்த சலிப்பு அவர்களுக்கு தாங்கள் எதற்கும் லாயக்கில்லை என்ற உணர்வைக் கொடுக்கிறது. ஒரு சிலர் பழையபடி 9-5 நேரப்படியே வேலை வேண்டும் என்று வேலை தேடத் தொடங்குகிறார்கள். பலர் என்ன வேலையானாலும் பரவாயில்லை; ஒருநாளைக்கு மூன்று நான்கு மணிநேரம் வேலை என்றிருந்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுகிறார்கள்.

 

பெண்களைவிட தங்கள் பணி ஓய்வு பற்றி ஆண்கள் அதிகம் கவலைப்படுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். முதல் காரணம் இதுவரை புருஷ லட்சணமாக இருந்த உத்தியோகம் இனி இல்லை என்ற நிலைதான். என்னதான் இப்போதெல்லாம் பணி ஓய்வு ஊதியம் என்பது தாராளமாக வந்தாலும், மாதாமாதம் வருவது போல ஆகுமா? கையில் காசு அவ்வளவாக இருக்காது. பணப் புழக்கம் குறைவதால், முன் போல நண்பர்களுடன் வெளியில் போவது, வெளியில் சாப்பிடுவது எல்லாமே குறையும். எல்லாவற்றையும் விட மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் பொழுதை எப்படிப் போக்குவது என்பதுதான். சிறிய வயதிலிருந்தே ஏதாவது விளையாட்டோ, அல்லது படிப்பது, எழுதுவது என்று பழகியிருந்தால் அவற்றை வளர்த்துக் கொள்ளலாம். திடீரென்று இப்போது ஏதாவது கற்றுக்கொள்ள முடியுமா? செய்தித்தாள் தவிர வேறு புத்தகங்கள் எதுவும் படித்துப் பழகாதவர்களுக்கு புதிதாகப் புத்தகம் படிக்க ஆரம்பிப்பது சற்று கடினம் தான்.

 

புதிதாக பணி ஓய்வு பெற்ற ஆண்கள் சில கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. முதலாவது புதிய வாழ்க்கை – அலுவலகம் செல்லாத வாழ்க்கைக்குப் பழக வேண்டும். அலுவலகம் செல்லும் இத்தனை வருடங்களில் ஒரு ஒழுங்குமுறை வந்திருக்கும். நேரத்திற்கு எழுந்து, நேரத்திற்குக் குளித்து, நேரத்திற்கு சாப்பிட்டு என்று நேரம் தப்பாது நடந்து வந்தது. முதலில் செய்தித்தாள் படிப்பது, முதலில் டிபன் சாப்பிடுவது, முதலில் குளிப்பது என்று எல்லாவற்றிலும் முதல்வராக இருந்திருப்பார் இத்தனை நாட்கள்.

 

இப்போது வேறு ஒருவிதமான வாழ்க்கை. விருப்பப்பட்ட நேரத்தில் எழுந்திருப்பது;  நீண்ட நேரம் தொலைக்காட்சி முன் உட்கார்ந்துகொண்டு ஒவ்வொரு செய்திச் சானலாக மாற்றிக் கொண்டே இருப்பது. இதுவரை நேரப்படி நடந்து வந்த விஷயங்கள் நேரக் குளறுபடியுடன் நடக்க ஆரம்பிக்கும். எழுந்திருப்பது தாமதம் என்றால் மற்ற வேலைகளும் தாமதம் ஆகும். குளிப்பது, சாப்பிடுவது எல்லாமே நேரம் தவறி நடந்து வீட்டிலுள்ளவர்களின் கோபத்திற்கு இலக்காவார்கள். இவர்களுக்கு நேரக்கட்டுப்பாடு இல்லையென்றாலும், வீட்டில் இருப்பவர்களுக்கு – குறிப்பாக மனைவிக்கு நாள் முழுவதும் வேலை செய்யும்படி ஆகிவிடும். இப்படி நேரம் தவறிச் செய்வதும் கூட சில நாட்களில் அலுத்து விடும். அடுத்து என்ன?

 

இத்தனை நாட்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தவரின் பார்வை வீட்டிலுள்ளவர் மேல் விழுகிறது. முதலில் இவர் கண்களில் விழுவது மனைவி தான். அவள் செய்யும் ஒவ்வொரு செய்கையையும் கவனிக்க ஆரம்பிக்கிறார். சில கணவன்மார்கள் ‘பாவம் எத்தனை வேலை இவளுக்கு. நாம் கொஞ்சம் உதவலாம்’ என்று மனைவி மேல் கரிசனம் காட்டுவார்கள். சிலர் ‘எதற்கு இவள் இத்தனை நேரம் கழித்து சாப்பிடுகிறாள்? கிடுகிடுவென வேலையை முடிக்கத் தெரியவில்லை இவளுக்கு. நானாக இருந்தால் சீக்கிரம் முடித்து விடுவேன். சமர்த்து போதவில்லை!’ என்று நினைத்துக் கொண்டு அதை நிரூப்பிக்கவும் முயலுவார்கள். இரண்டுமே மனைவியை பாதிக்கும் என்பதை பல ஆண்கள் உணருவதில்லை. இவ்வளவு நாட்களாக இல்லத்தில் தனியரசு செலுத்திக் கொண்டிருந்த மனைவிக்கு இவரது தலையீடு நிச்சயம் ரசிக்காது.

 

என் தோழி ஒருவரின் கணவர் ஓய்வு பெற்ற புதிதில் அடிக்கடி இப்படிச் சொல்வாராம்: ‘இத்தனை நாள் ஓடி ஓடி உழைத்துவிட்டேன். இனிமேல் எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி. வாழ்க்கையை ரசிக்கப்போகிறேன். வேளாவேளைக்கு சாப்பிட்டுவிட்டு டீவி பார்ப்பது, தூங்குவது தான் இனி என் வேலை’ என்று. நாள் முழுவதும் இவரை வீட்டில் எப்படி சமாளிப்பது என்று ஒருவித பயம் வந்துவிட்டது என் தோழிக்கு. நல்லகாலம் சீக்கிரமே தோழியின் கணவருக்கு ஒரு பகுதி நேர வேலை கிடைத்து அவர் மறுபடியும் ஒரு ஒழுங்குமுறைக்குள் வந்துவிட்டார்.

 

பணி ஓய்வுக்குப் பின் நிறைய நேரம் கிடைக்கும், என்ன செய்யலாம்? ஒன்றுமே செய்யாமல் இருப்பதோ, அல்லது அதிகமாகச் செய்வதோ மறுபடியும் உங்களுக்கு மனஅழுத்தம், அமைதியின்மை, ஞாபகமறதி, தூக்கமின்மை, பசியின்மையை ஆகியவற்றை கொண்டு வரும்.

 

இதற்கு ஒரே வழி உங்களை நீங்கள் எப்படி பிசியாக வைத்துக் கொள்ளுகிறீர்கள் என்பதுதான்.

 

தற்காலிகமாகச் செய்யக்கூடிய சில விஷயங்கள்:

 • வாரத்திற்கு ஒருமுறை .அரசு சாரா அமைப்பு ஏதாவது ஒன்றில் சேர்ந்து தன்னார்வலராக சேவை செய்யலாம்.
 • மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கலாம். உங்களுக்குத் தெரிந்த பாட்டு, நடனம் ஆகியவற்றைச் சொல்லித் தரலாம்.
 • புதிதாக ஒரு பகுதி நேர வேலையில் சேரலாம்.
 • வீட்டில் தோட்டம் போட்டு பராமரிக்கலாம்.
 • விட்டுப்போன படிப்பைத் தொடரலாம்.
 • புதிதாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்ளலாம்.
 • பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பிக்கலாம். இத்தனை நாட்கள் வாசகியாக இருந்த நீங்கள் இப்போது எழுத்தாளராக மாறலாம்.
 • வீட்டில் சின்னதாக ஒரு நூலகம் அமைத்துப் பராமரிக்கலாம். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் புத்தகப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
 • வீட்டில் இணைய வசதி இருந்தால், வலைத்தளம் ஆரம்பித்து உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

 

 

இங்கும் சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்:

 • எதுவாக இருந்தாலும், அந்த வேலை உங்களுக்குப் பிடித்ததாக, உங்களை மனமுவந்து செய்யத் தூண்டுவதாக இருக்க வேண்டும். சமூகத்திற்காக ஒரு வேலையைச் செய்வது உங்கள் மன ஆரோக்கியத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. இத்தனை நாள் இந்த சமூகம் உங்களுக்குச் செய்தவற்றை நீங்கள் சமூகத்திற்குத் திருப்பி செய்வதும் உங்களுக்கு மனநிறைவைக் கொடுக்கும்.

 

 • தேர்ந்தெடுக்கும் வேலை மிகவும் சுலபமாகவோ, அல்லது மிகவும் கஷ்டமாகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மிகவும் சுலபம் என்றால் சீக்கிரமாக முடித்துவிடலாம் என்று தோன்றும். இன்றில்லாவிட்டால் நாளை என்று ஒரு சின்ன அலட்சியம் கூடத் தோன்றக்கூடும். ஆரம்பத்தில் இருந்த ஈர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடும். அதிக சிரமப்பட்டு செய்யவேண்டிய வேலை என்றாலும் மனஅழுத்தம் அதிகமாகி ஆர்வம் குறைந்துவிடும். உங்கள் கவனத்தையும், உங்கள் மனதையும் ஒருசேர கவரும் வண்ணம் ஒரு பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பதுதான் சிறந்தது.

 

பெண்கள் என்ன செய்வார்கள் என்று பார்ப்போம்:

பெண்கள் வீட்டு வேலைகளில் மூழ்கி விடுவார்கள் – வேலைக்குப் போனாலும், பணி ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது சமையலறை. எத்தனை வயதானாலும் சமையல் செய்வதில் அலுப்பு வராது பெண்களுக்கு. ஆனால் காலம் மாறிவிட்டது. எல்லாத் துறைகளிலும் பெண்களும் முன்னேறி வரும் இந்த காலகட்டத்தில் பணி ஓய்வு பெற்ற பின்னும் தங்கள் நேரத்தை சமையலறைக்கு வெளியே நல்லவிதமாக செலவழிக்க பெண்கள் விரும்புகிறார்கள். சில பெண்கள் கோவில், குளம் என்று கிளம்பிவிடுவார்கள். சிலர் ஏற்கனவே கைவந்த தையல் கலை, சங்கீதம் போன்றவற்றை மறுபடி பழகத் தொடங்குவார்கள். எதுவாக இருந்தாலும் உற்சாகத்துடன் செய்யவேண்டும்.

 

வேறு என்ன செய்யலாம்?

 

புதிதாக பணி ஓய்வு பெற்றவர்கள் 9 மணியிலிருந்து 5 மணிவரை என்ற பழக்கத்திலிருந்து வேலையே இல்லை நிலைக்கு வரும்போது மிகவும் திணறி விடுகிறார்கள் என்று ஹார்வர்ட் உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.

 

பணி ஓய்வுக்குப் பிறகு புதிய ஒரு போழுதுபோக்கையோ, புதியதாக ஒரு விளையாட்டையோ தேர்ந்தெடுத்து செய்யும் ஆண்கள் பல புதிய சாதனைகளைச் செய்கிறார்கள்; மிகவும் ஆர்வத்துடன் படிக்கிறார்கள்; தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ளுகிறார்கள். தங்கள் வயது, தங்களைப் போன்ற ஆர்வம் உள்ளவர்களுடன் பழகுகிறார்கள். பயிற்சியாளர்களுடன் அல்லது ஆசிரியர்களுடன் விடாமல் பேசிப் பழகி தங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்வதுடன் தீவிரப் பயிற்சிகளிலும் ஈடுபடுகிறார்கள் என்று ஆய்வுகள் சொல்லுகின்றன.

 

ஒரே ஒரு விஷயம் இங்கு நினைவில் கொள்ளவேண்டும்: நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேலை உங்கள் மனதிற்குப் பிடித்ததாகவும், உங்களிடம் இதுவரை மறைந்திருந்த திறமையை வெளிக் கொண்டு வரும்படியாகவும் இருக்க வேண்டும். நாம் செய்யும் வேலையில் இருக்கும் சவால் நமது மூளையை மிகுந்த சுறுசுறுப்பாக வைத்திருக்கும். வயதான பிறகு நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியது இதில் தான். உடலுக்கு உடற்பயிற்சி போல நமது மூளைக்கும் பயிற்சி அவசியம் தேவை.

 

இப்போது புதிதாக ஒரு வழக்கம் பணி ஓய்வு பெற்றவர்களிடைய மிகவும் பிரபலமாகி வருகிறது. அதுதான் ‘சீனியர் இன்டர்ன்ஷிப்’ (Senior internship). இதையே ரோல் ரிவர்சல் (Role Reversal) என்றும் சொல்லலாம். அது என்ன என்கிறீர்களா?

 

வாருங்கள் 61 வயதான திரு கிருஷ்ணனைச் சந்திக்கலாம். இரண்டு வருடங்களுக்கு முன் தனியார் நிறுவனத்திலிருந்து பணி ஓய்வு பெற்றவர் இவர். காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது, மின்னஞ்சல்களுக்கு பதில் எழுதுவது, கான்பரென்ஸ் கால்களுக்குக்காக வெகுநேரம் விழித்திருப்பது போன்ற விஷயங்களிலிருந்து பணிஓய்வு விடுதலை கொடுத்தது இவருக்கு. படிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர். பணிஓய்விற்குப் பிறகு  விருப்பமான புத்தகங்களைப் படித்துக்கொண்டு, நல்ல சங்கீதத்தை ரசித்துக் கொண்டு, அவ்வப்போது சமையலிலும் தன் கைத்திறமையைக் காண்பித்துக் கொண்டு, தனது பேரக்குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டு என்று பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார். இவை எல்லாமே சில மாதங்களில் அலுத்துவிட்டன.

 

என்ன செய்யலாம் என்று அங்கே இங்கே தேடியபோது தான் அவருக்கு இந்த ‘சீனியர் இன்டர்ன்ஷிப்’ என்பது பற்றித் தெரிய வந்தது. பலரிடம் விசாரித்து அப்போதுதான் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய நிறுவனத்தில் சேர்ந்தார். இவரது பாஸ் 22 வயது இளைஞர்! தனியாக ஒரு அறை; உதவியாளர் என்று வேலை செய்து பழகியவருக்கு தன்னைச் சுற்றி 20 வயது இளைஞர்கள்; அவர்கள் கேட்கும் உரத்த இசை; கையில் டென்னிஸ் பந்தை வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம், ஒருவருக்கொருவர் சத்தமாகப் பேசிக் கொள்வது எல்லாமே முதலில் கலாச்சார அதிர்ச்சியைக் கொடுத்தாலும், வெகு விரைவிலேயே அந்த சூழ்நிலைக்குப் பழகிப் போனார்.

 

‘நான் அவர்களை விட அனுபவத்தில் பெரியவன். அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டு வருபவர்கள். எனது அனுபவத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அவர்களது ஆர்வமும் ஈடுபாடும் என்னை மிகவும் கவர்கிறது’ என்கிறார் கிருஷ்ணன்.

 

‘இவருக்கு என்ன வயது என்று நான் அவரை நேராகச் சந்திக்கும் வரை எனக்குத் தெரியாது’ என்கிறார் இவரது 22 வயது பாஸ் இளைஞர் திரு பாலாஜி நரசிம்மன். திரு கிருஷ்ணனின் பல வருட அனுபவம் இந்தப் புதிய வேலையிலும் அவருக்குக் கை கொடுத்தது. அவருக்குத் தெரிந்த வியாபார நுணுக்கங்களை இளையவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதில் அவருக்கு மன நிறைவு ஏற்படுகிறது என்கிறார்.

 

ஆண்கள் மட்டுமல்ல; இதைப்போலப் பெண்களும் பணி ஓய்வுக்குப் பிறகு ஒரு புதிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கலாம். திருமதி உன்னிக்கிருஷ்ணன் இதற்கு உதாரணமாக இருக்கிறார். வேலை என்னும் ஓட்டப்பந்தயம் அலுத்து விட்டது அவருக்கு. இரண்டு வருடம் பணியிலிருந்து விலகி இருந்தவர் நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒரு நிறுவனத்தில் கன்டென்ட் ரைட்டர் ஆகச் சேர்ந்தார். வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்ற சலுகை அவருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. தனது பிள்ளைகள் இருவரையும் தனி ஒருவராக வளர்த்தவர் இவர். டெட் லைன் அழுத்தங்கள், தொலைதூர தொலைபேசி அழைப்புகள், மீட்டிங்குகள் இவை இல்லாமல் நிம்மதியாக வேலை செய்வதாக இவர் சொல்லுகிறார். ‘கணவரைப் பறிகொடுத்தபடியால் நான் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இல்லையென்றால் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்திருப்பேன். இப்போது எனக்குப் பிடித்த வேறு வேலைகளையும் செய்ய எனக்கு நேரம் கிடைக்கிறது. தகவல் தொடர்பு சம்மந்தமாகவே என் வேலை இருந்தபடியால் இந்தப் புது வேலையும் எனக்கு மன நிறைவைக் கொடுக்கிறது’ என்கிறார் இவர்.

 

தினமும் 3 மணி நேரம் வேலை பார்த்தால் போதும் இவருக்கு. தான் எழுத வேண்டிய விஷயத்திற்காக இணையத்தில் தேடுவதும் இந்த மூன்று மணி நேரத்திற்குள் அமைகிறது. வருமானம்? நிச்சயம் இவர் வாங்கியதை விட பல மடங்கு குறைவுதான். ‘வயதாக ஆக ஓட்டத்தைக் குறைத்துக் கொள்ளத்தான் வேண்டும். இந்த இன்டர்ன்ஷிப்பில் தினமும் பயணம் செய்ய வேண்டியதில்லை; மன அழுத்தங்கள் இல்லை. கூடவே வருமானமும் வருகிறது. அதனால் எனது பழைய வேலை போய்விட்டதே என்ற வருத்தம் வருவதில்லை’ என்று மகிழ்ச்சியுடன் சொல்லுகிறார் கிருஷ்ணன்.

 

இவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுபவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? ’என்னிடம் இரண்டு மூத்த குடிமகன்கள் ‘இன்டர்ன்’ ஆக இருக்கிறார்கள். முதலில் மூன்று மாதங்களுக்கு என்று இவர்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டேன். தேவைப்பட்டதால் இந்த கால அளவை நீட்டித்தேன். இவர்களது வேலையைப் பொறுத்து வழக்கமான ஊழியர்களுக்குக் கொடுப்பதை விட 10% – 15% குறைவாகக்கொடுக்கிறேன். எங்களுடையது இப்போது தான் தொடங்கிய ஒரு நிறுவனம். இவர்களது அனுபவம் எங்களுக்கு பலவிதங்களில் உதவுகிறது’ என்கிறார் திரு கிருஷ்ணனின் இளம் பாஸ்.

 

இளம் பாஸ்களின் கீழ் வேலை செய்வது, ‘இன்டர்ன்’ என்று அழைக்கப்படுவது இவையெல்லாம் சில மூத்த குடிமகன்களுக்கு ஆரம்பகாலத்தில் சற்று சங்கடத்தை விளைவிக்கிறது என்ற தனது கருத்தைத் தெரிவிக்கிறார் விசாகா மோகன். ஆனால் வேறு சிலர் தங்களது வயதே தங்களுக்கு மரியாதையை வாங்கிக் கொடுக்கிறது என்று சொல்லுகிறார்கள். ‘முதலில் கணனியில் வேலை செய்வது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. சில இளம்வயதுக்காரர்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். வயதானவர்கள் வேலை செய்வதற்கும், இந்த இளம் தலைமுறை வேலை செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. ‘போனால் போகிறது’ என்கிற மனப்பான்மை, எல்லாவற்றையும் ‘லைட்’ ஆக எடுத்துக் கொள்வது, வேலைகளை தள்ளிப் போடுவது போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்’ என்று சொல்லும் விசாகா தொடர்ந்து கூறுகிறார்.

 

‘பணிஓய்வு பெற்றபின் ரொம்பவும் மன அழுத்தத்திற்கு ஆளானேன். பயனற்றவள் ஆகிவிட்டேனோ என்கிற பதைபதைப்பு. அதனாலேயே நான் முன்பு வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தில் இப்போது பாதி தான் கிடைக்கிறது என்ற போதிலும் இந்த வேலையை ஏற்றுக் கொண்டேன். நாள் முழுவதும் பிஸியாக இருக்கிறேன். வெளியே போகிறேன்; என்னுடைய பங்கு பாராட்டப்படுகிறது என்பது மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது’ என்கிறார் விசாகா.

 

மொத்தத்தில் பணிஓய்வு என்பது இத்தனை வருட உழைப்பிற்குப் பின் கிடைத்த அமைதியான வாழ்க்கை என்று சொல்லும்படியாக அமைத்துக் கொள்ளுங்கள். ஓடி ஓடி உழைத்தபின் சற்று ஆற அமர வாழ்க்கையை அனுபவித்து வாழ ஆரம்பியுங்கள். மிகவும் கடுமையான உழைப்பு வேண்டாம். ஒரேயடியான ஓய்வும் வேண்டாம். உங்களுக்குப் பிடித்த வேலைகளை, பொழுதுபோக்குகளைச் செய்யவும் நேரம் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

 

வாழ்க்கையை ரசித்தபடியே உங்கள் திறமைகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

சிரித்துச் சிரித்து…..

smile

 

நீங்க தினமும் வாக்கிங் போவீங்களா? அங்கு உங்களைப் போலவே வாக்கிங் போறவங்களைப் பார்த்து புன்னகை செய்வீர்களா? அதுவும் முதல் முறை? அதெப்படி புன்னகை செய்யமுடியும்? அவங்க யாருன்னே எனக்குத் தெரியாதே அப்படீன்னு சொல்றீங்களா? நீங்க சொல்றது சரிதான். முன்பின் தெரியாதவங்களைப் பார்த்து எப்படி புன்னகைப்பது? நான் கூட உங்கள மாதிரி தான் இருந்தேன். பலவருடங்களுக்கு முன். இப்போது என்ன என்று கேட்கிறீர்களா? இப்போதெல்லாம் வாக்கிங் போகும்போது எதிரில் வருபவர்களைப் பார்த்து சிரிக்காவிட்டாலும் முகத்தில் ஒரு தோழமை பாவனையை காண்பிக்கிறேன். அவர்களும் பாசிடிவ் ஆக முகத்தை வைத்துக் கொண்டால் உடனே சிரிப்பேன். இரண்டாம் முறை பார்த்தால் கைகளைக் கூப்பி ‘நமஸ்தே’, ‘நமஸ்கார’ – சிலசமயம் நான் தமிழ் என்று தெரிந்து சிலர் ‘வணக்கம்’ என்பார்கள் – நானும் வணக்கம் என்று சொல்லிச் சிரிக்கிறேன். இந்த அற்புதமான மன மாற்றத்திற்குக் காரணம் டாக்டர் ஆர்த்தி.

 

பலவருடங்களுக்கு முன் குதிகாலில் வலி தாங்க முடியாமல் இருந்தபோது ராமகிருஷ்ணா நர்சிங் ஹோமில் பிசியோதெரபி செய்துகொள்ளச் சொல்லி என் மருத்துவர் யோசனை சொன்னார். முதல்நாள். முதலிலேயே பணம் கட்டிவிட்டு (பிசியோதெரபிக்குத்தான்) மாடிக்குச் சென்றேன். அங்குதான் பிசியோதெரபி அறை இருப்பதாக ரிசப்ஷனிஸ்ட் சொன்னார். பிசியோதெரபி என்ற பெயர்ப்பலகையுடன் இருந்த அறையை நோக்கி நடந்தேன். அந்த அறையின் வாசலில் ஒரு இளம் பெண் நின்று கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் முகம் மலரச் சிரித்தார். எனக்கோ குழப்பம். யாரைப் பார்த்து சிரிக்கிறார்? அப்போதெல்லாம் நானும் முன்பின் தெரியாதவர்களைப் பார்த்து சிரிக்க மாட்டேன். என் பின்னால் யாரோ அவருக்குத் தெரிந்தவர் வந்துகொண்டிருக்கிறார் போலிருக்கிறது. அவரைப் பார்த்துத்தான் சிரிக்கிறார் என்று நினைத்துப் பின்னால் திரும்பிப் பார்த்தேன். யாருமில்லை. என் குழப்பம் இன்னும் அதிகமாகியது. மறுபடியும் அந்தப் பெண்ணைப் பார்த்தேன்.

 

‘ஏன் பின்னால் திரும்பிப் பார்க்கிறாய்? உன்னைப் பார்த்து நான் சிரிக்கக் கூடாதா? முன்பின் தெரியாதவர்களைப் பார்த்து நீ சிரிக்கமாட்டாயா? சிரித்தால் என்ன? உன்னை நான் முழுங்கிவிடுவேனா? இல்லை உன் சொத்து குறைந்துவிடுமா? வாயிலிருந்து முத்து உதிர்ந்து விடுமா?’, படபடவென்று பொரிந்தார் அந்தப் பெண்.

‘ஸாரி, நான் இப்போதான் முதல் முறை வருகிறேன்………’

‘ஸோ வாட்?’

‘………….?’

‘சிரிப்பதற்கு உனக்கு என்னைத் தெரிந்திருக்க வேண்டுமா? நீ ஒரு மனுஷி; நான் ஒரு மனுஷி. இந்த ஒரு காரணம் போதாதா? ஊரு, பேரு எல்லாம் தெரிந்திருந்தால்தான் ஒருவரையொருவர் பார்த்து சிரிக்க வேண்டுமா?…….’ இந்த முறை பட்டாசு மாதிரி பொரிந்து தள்ளிவிட்டு, ‘ஊம்?’ என்ற உறுமலுடன் நிறுத்தினார் அந்தப் பெண்மணி (பெண்புலி?)

 

எனக்கு ஒரு விஷயம் அவரிடம் மிகவும் பிடித்திருந்தது. இத்தனை பொரிந்த போதும், அவரது முகத்திலிருந்த சிரிப்பு மாறவேயில்லை. இப்படி ஒருவர் இருப்பாரா? அவர் சொல்வது எத்தனை நிஜம். நாமாகவே முன் வந்து சிரிக்காமல் போனாலும், ஒருவர் நம்மைப் பார்த்து சிரித்த பின் நாம் அவரைப் பார்த்து சிரிக்கலாமே.

 

‘ரொம்ப அப்செட் ஆகிவிட்டாயோ?’

 

‘இல்லையில்லை. நீங்க சொன்னதை யோசித்துக் கொண்டிருக்கிறேன்….’ என்று முதல்முறையாக என் முகத்தில் சிரிப்புடன் சொன்னேன். ‘அப்பாடி! இப்பவாவது சிரித்தாயே!’

 

‘நான் டாக்டர் ஆர்த்தி, பிசியோதெரபிஸ்ட்’ என்றபடியே கையை நீட்டினார். சிரிப்பு அவரது முகத்தில் ஓட்டிக்கொண்டே இருந்தது. பிறக்கும்போதே இப்படிச் சிரித்துக் கொண்டேதான் பிறந்தாரோ என்று நினைக்கும்படி முகத்தில் நிரந்தரமாக இருந்தது அந்தச் சிரிப்பு.

 

பலவருடங்களுக்குப் பின் அவரை மறுபடி சந்தித்தபோது நான் அவரைப் பார்த்து சிரித்தேன் ரொம்பவும் தோழமையுடன் – அவர் சிரிப்பதற்கு முன்பாகவே! இளமையாகவே இருந்தார் – முகத்தில் அதே சிரிப்பு. இந்தச் சிரிப்பு தான் அவரது இளமையின் ரகசியமோ?

‘நீ ஏற்கனவே இங்கு வந்திருக்கிறாயா?’ என்றார். ‘ஓ! முதல் தடவை வந்திருந்தபோது உங்களைப் பார்த்து சிரிக்காததற்கு உங்களிடமிருந்தும் ‘திட்டு’ம் வாங்கியிருக்கிறேன்!’ என்றேன்.

‘ஓ! ரொம்பவும் கடுமையாக நடந்துகொண்டேனா? ஸாரி’

‘இல்லை. நான் ஒரு மிகப்பெரிய பாடத்தை அன்று கற்றுக்கொண்டேன்’ என்றேன்.

அன்றிலிருந்து எப்போது வாக்கிங் போனாலும் எதிரில் வருபவர்களைப்  பார்த்து புன்னகைக்க ஆரம்பித்தேன். என்ன ஆச்சரியம்! அதற்காகவே காத்திருந்தது போல பலரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். சிலர் சிரிக்காமலும் போனார்கள்.

 

நான் வாக்கிங் போகும் பூங்காவில் லாபிங் க்ளப் (laughing club) அங்கத்தினர்கள் நிறையப் பேர் வருவார்கள். தினமும் இவளும் வருகிறாளே, கொஞ்சம் புன்னகையாவது புரியலாம் என்று ஒருநாளாவது யாராவது என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள் என்று நினைத்து நினைத்து நான் ஏமாந்ததுதான் மிச்சம். ஆகாயத்தைப் பார்த்து, மரத்தைப் பார்த்து ‘ஹா….ஹா….’ என்கிறவர்கள் உடலும் உயிருமாக இருக்கும் என்னைப் பார்த்து சிரிக்க மாட்டார்கள்!!  இதுவும் ஒரு பாடம் தான், இல்லையா?

 

பல்வேறு இடங்களில் இருந்தாலும் என் வாக்கிங் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கூடவே புன்னகையும். சமீபத்தில் நாங்கள் குடியேறிய பகுதியில் எங்கள் வளாகத்தின் உள்ளேயே கட்டிடங்களைச் சுற்றி மிக நீண்ட வாக்கிங் டிராக்.  டிராபிக் பற்றிக் கவலைப்படாமல் எத்தனை நேரம் வேண்டுமானாலும் நடக்கலாம். சிரிப்புப் பரிமாறல்களை இங்கும் தொடருகிறேன். நிறைய அனுபவங்கள். ஒரு சாம்பிள் இதோ:

 

‘வாக்கிங் போறீங்களா?’

பார்த்தால் எப்படித் தெரிகிறது? என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தேன்.

கிட்டத்தட்ட என் வயதில் ஒரு பெண்மணி. என் பின்னால் வந்துகொண்டிருந்தார். அவர் தான் இந்தக் கேள்வியைக் கேட்டார். முகத்தில் சட்டென்று ஒரு சிரிப்பை வரவழைத்துக் கொண்டு ‘ஆமாம்’.

கேட்டாரே இரண்டாவதாக ஒரு  கேள்வி: ‘உங்களுக்கு சுகரா? அதான் தினமும் இப்படி நடக்கறீங்களா?’

 

அடப்பாவமே! சுகர் இருந்தால் தான் நடக்கணுமா? நம் ஊரில் குண்டாக இருப்பவர்கள் தான் ஜிம் போகணும். சுகர் இருந்தால் தான் நடக்கணும். BP இருந்தால் தான் உப்பு குறைச்சலாக சாப்பிடணும்.

 

ஆரோக்கியமாக இருக்க எல்லோருமே இந்த மூன்றையும் செய்யலாம்!

smile

காதல்களும் கடந்து போகும்..

Shankar Ji·Friday, March 18, 2016

 

முகநூலிலிருந்து: எழுதியவர் திரு ஷங்கர்ஜி.

 

காதல், காதல் என்று பல உணர்ச்சிகரமான பதிவுகளைப் பார்க்கிறேன். 16 வயது முதல் 30 வயது வரை, என்னிடம், உன்னை எனக்குப் புடிச்சிருக்கு, ‘ஐ லவ் யூன்னு’ சொன்னவர்கள் 12 பெண்கள். நானாகச் சொல்ல விரும்பியது ஒரே ஒருவரிடம். பத்துக் காசு வருமானம் இல்லாதப்ப, கூட இருந்த நண்பர்கள் எல்லாம், ‘கிடைச்சா, அவுத்துடனும்டா’ என்ற வயதுக்குரிய ஹார்மோன் பிரச்சனைகளில், பித்துப் பிடித்துப் பேசிக்கொண்டிருக்க, வீட்டில் ஒரே மகனாகப் பிறந்து அக்காவோ, தங்கையோ இல்லாமல் தனிமரமாக இருந்த நான், பெண்களைப் பார்த்தாலே தலை குனிந்து ஓரமாக ஓடிப்போகின்ற குணாதிசியத்துடன் வாழ்ந்துவந்தேன்.

 

இதைப் படிக்கும் உங்களில் பலருக்கு இது கேலியாக இருக்கலாம், பலருக்கு உண்மை என்று வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கலாம். ஆனாலும் அன்றைக்கு நான் அதிகம் படித்த பாலகுமாரன் நாவல்கள் மட்டுமே பெண்களைப் பற்றிய ஒரு மரியாதையை எனக்குள் ஏற்படுத்தியது. ஒரு பெண்ணைக் கண்ணைப் பார்த்துப் பேசும் தைரியத்தை, மரியாதையை எனக்குக் கற்றுத்தந்தது.

 

எனக்குப் பெண்களைப் பிடித்திருந்தது, அவர்கள் விரும்புகிறேன் என்று சொன்னது கிறக்கத்தைக் கொடுத்தது. ஆனாலும் திடீரென்று ஒரு பயம் வரும், இது சரியா? எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது, ஏதோ ஒன்று என்னிடம் அந்தப் பெண்ணை ஈர்த்திருக்கிறது. நிச்சயம் அது என்னிடம் இல்லை என்று தெரியவரும்பொழுது அவள் ஏமாற்றமடைவாள், எதற்கு இந்த அவஸ்தை என்று, சாரி, நான் உனக்கு சரிப்படமாட்டேன், நாம நண்பர்களாகவே இருப்போம் என்று விலகிவிடுவேன்.

 

லேன்ட்லைன் போனே இல்லாத க்ரீட்டிங் கார்ட் காலகட்டத்தில், நான் இப்படிச் சொல்லும்பொழுதுதான் அவர்கள் என்னை மிகவும் விரும்பினார்கள் என்பது இன்னும் ஒரு பெரிய கொடுமை. ‘எவனும் சொல்லமாட்டான், கொஞ்சம் பக்கத்துல வந்தாலும் கைபோடத்தான் பார்ப்பான், நீ ஏன் இவ்ளோ நல்லவனா இருக்க? அதனாலத்தான் உன்னைய எனக்கு ரொம்ப புடிக்கும்’, என்று இன்னும் என் மென்னியை அன்பு கொண்டு நெருக்குவார்கள். என்னை அவர்கள் நம்புவதற்குக் காரணமிருந்தது. எந்தப் பெண் என்னைப் பிடித்திருக்கிறது என்றாலும் முதலில் அவர்களை என் வீட்டிற்கு வாருங்கள் என்று சொல்லி என் பெற்றோருக்கு அறிமுகப்படுத்தி வைப்பேன். நண்பர்கள் எல்லாம் காதலிக்க சந்து, பொந்துகளைத் தேடிக்கொண்டிருக்க, என்னை விரும்பிய பெண்கள் என் அப்பா போட்டுத்தரும் காப்பியைக் குடித்தபடியே, என் வீட்டில் சர்வசாதாரணமாக என்னிடம், என் பெற்றோர்களிடம், பேச முடிந்ததை அவர்கள் ஆச்சரியமாகவே பார்த்தார்கள். 1980 களின் இறுதியில் அது உலக அதியசமாகவே இருந்தது.

 

ஆங்கிலம் பேசுவது, அழகாக உடை உடுத்துவது, ஒழுங்காகப் படிப்பது, பரிட்சைக்குத் தயாராவது, அழுகை, கோபம், அன்பு என்று எல்லாவற்றையும் அந்தப் பெண்கள்தான் எனக்குக் கற்றுத்தந்தார்கள். என்னுடைய நிறமோ, எனக்கு வீட்டிலிருக்கும் சுதந்திரமோ, அல்லது காதல் பற்றிய அவர்களின் மனோபாவமோ ஏதோ ஒன்றுதான் ‘லவ்’ எனும் போர்வையில் என்னிடம் இவர்கள் வரக் காரணமாக இருக்கிறது என்பதை நான் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தேன். ஆனால், அதெல்லாம் வேலைக்கே ஆகாத விஷயங்கள் என்று எனக்குப் புரிந்திருந்தது. ‘பின்ன என்ன மயிறுக்கு 12 பொண்ணுங்கள லவ் பண்ணின?’ என்று நீங்கள் கேட்கலாம். கவனியுங்கள், அவர்கள்தான் என்னிடம் வந்து சொன்னார்கள். ஆயிரம் பேசினாலும், யோசித்தாலும் ‘சராசரி ஜொள்ளை’ ஜீனில் வைத்திருக்கும் ஒரு ஆணாகிய நான் ‘சாரிங்க, நான் அந்த டைப் இல்லை,.’ என்று சொல்லமுடியாதவனாக இருந்தேன். கொஞ்சம் லூசுத்தனமான குழப்பமான மனநிலைதான்.

 

ஆனால், அப்படி என் வாழ்வில் வந்த அந்தப் பெண்களாலேயே நான் ஓரளவு விஷயம் கற்றவனாக மாறினேன். இன்றைக்கும் வாழ்வில் அவர்களைச் சந்திக்க நேர்ந்தால், எந்தத் தயக்கமுமின்றி அவர்களுடன் சகஜமாக ஒரு உரையாடலைத் துவக்க முடியும். வீட்டிற்கு வாருங்கள் என்று என் மனைவியையும், குழந்தைகளையும் அறிமுகப்படுத்தி வைக்கமுடியும். சுவையான ஒரு மதிய உணவைப் பரிமாற முடியும். என்னைவிட நன்கு படித்த, சம்பாதிக்கும், திறமையான நல்ல வளமான வாழ்க்கையைத் தரக்கூடிய ஒருவர் அவர்களுக்குத் துணையாகக் கிடைப்பார்கள் என்பதே என் நம்பிக்கையாகவும், என் விலகலுக்கான விளக்கமாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் எல்லோருமே என்னை விட பல விஷயங்களில் முன்னேறியே இருந்தார்கள். இந்த மிக முக்கியமான விஷயத்தைக் ‘காதல்’, திரை போட்டு மறைத்தபொழுது, திரையை விலக்கி நான் தெளிவாக ‘பொருளாதாரம், அறிவு, சம்பாதிக்கும் திறன் சார்ந்த, என் கெப்பாசிட்டியைச்’ சொல்லிவிட்டு, கை குலுக்கி நாம் நண்பர்களாக இருப்பதே ‘உங்கள் வாழ்க்கைக்கு நல்லது’, என்று ஒவ்வொருமுறையும் (அப்கோர்ஸ் ஃபீலிங்கோடதான்) வெளியே வந்தேன்.

 

என்னுடைய வாழ்க்கையின் முதல் கட்டமாக என் சிறிய மகன் இருக்கிறான். என் கிளாஸ் கேர்ஸுங்க ஓவர் சீன் போடறாங்கப்பா.. அவங்கள தனி க்ளாஸ்ல போட்டுட்டா நானும் என் ப்ரென்ட்ஸ் எல்லாம் நிம்மதியா இருப்போம். அதுலயும் இந்த மிஸ்ஸுங்க பொண்ணுங்க அடிக்கிற பந்தா இருக்கே..

 

இரண்டாம் கட்டமாக என் பெரிய மகன் இருக்கிறான். என்ன கண்ணு அந்த பொண்ணு ஏதோ உன்னை கேலி பண்ணிட்டுப் போகுது? அது ஒண்ணும் இல்லைப்பா என் தலைமுடிய கேலி பண்றாங்க. உனக்குக் கோவம் வரலியா? இல்லப்பா, அவங்க எல்லாம் என் ப்ரென்ட்ஸ்தானே? எனக்கு மேக்ஸ் தலைல கொட்டி சொல்லித் தர்றதே அந்தப் பொண்ணுதான்.

 

பெண்களை விட ஆண்குழந்தைகளை வளர்ப்பதில்தான் அதிக பொறுப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். சக மாணவிகளிடம் மரியாதையாக நடக்கவேண்டும், அடிப்பது, கேலி செய்வது, முடியைப் பிடித்து இழுப்பது போன்ற விஷயங்கள் தவறாகப் பார்க்கப்படலாம், சென்சிடிவாக எடுத்துக்கொள்ளப்படலாம். ஆணோ, பெண்ணோ நண்பர்கள் என்பவர்கள் மதிப்புக்குரியவர்கள், அவர்களுக்கென்று தனித் திறமைகள் இருக்கும் அவற்றில் நல்லவைகளைக் கற்றுக்கொள், தவறாகப் பேசினால் அது தவறு அதில் எனக்கு உடன்பாடு இல்லை மன்னிக்கவும் என்று சொல்லி அதிலிருந்து வெளியேறிவிடு. சகஜமாகப் பேசு, ஜாதி, மதம் போன்றவைகள் தேவையற்றது. என்றெல்லாம் எனக்குத் தெரிந்தவைகளைக் கற்றுக்கொடுக்கிறேன்.

 

‘டேய், தகப்பா, நிஜமா 12 கேர்ல்ஸ், உன்கிட்ட லவ்யூ சொன்னாங்களா?’ என்று என் மகன்கள் கேட்கும்பொழுது என்ன பதில் சொல்வது என்பதையும் ஒத்திகை பார்த்து வருகிறேன்.

எங்க ஊரு… திருக்கண்ணபுரம்

தென்றல் சசிகலா அவர்கள் ஒரு தொடர் பதிவுக்கு அழைத்தார் மார்ச் மாதத்தில். இப்போதுதான் எழுத முடிந்தது எங்க ஊரு பற்றி. சசியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன் இத்தனை தாமதமாக இதை எழுதியதற்கு.

DSCN0010

முதன்முதலில்1974 ஆம் ஆண்டுதான் இந்த ஊர் பற்றி எங்கள் வீட்டில் அதிகம் பேசப்பட்டது. அந்த வருடம் என் பெரியம்மா பெண்ணின் திருமணம். மாப்பிள்ளையின் அம்மாவின் ஊர் திருக்கண்ணபுரம். ‘திருக்கண்ணபுரத்திலிருந்து சம்மந்தி என்றால் கொடுத்து வைத்திருக்கணுமே’ என்று எங்கள் வீட்டில் எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அப்போது தெரியாது அடுத்தவருடம் நானும் அங்கேதான் வாழ்க்கைப்படப் போகிறேன் என்று.

 

திருமணத்திற்கு முன் திருக்கண்ணபுரம் போனதில்லை. திருமணம் ஆனவுடன் போகவேண்டும் என்று சொன்னபோது என் மாமியார் சொன்னார்: ’சௌரிபெருமாளை அத்தனை சீக்கிரம் நீ சேவிக்க முடியாது. பெருமாளே பார்த்து இவள் என்னை வந்து சேவிக்க வேண்டும் என்று மனசு வைத்தால் தான் நடக்கும்’ என்றார். திருமணம் நடந்தவுடன் கும்பகோணம் போய் உப்பிலியப்பனை சேவிக்கப் போனோம். என் கணவரிடம் அப்படியே திருக்கண்ணபுரம் போகலாம் என்று சொன்னேன். ‘அவ்வளவு சுலபமில்லை அது. சரியா பஸ் வசதி ஒண்ணும் கிடையாது. மெயின் ரோடுல இறங்கி ரொம்ப தூரம் நடக்கணும்’ என்றார். ரொம்பவும் ஏமாற்றமாக இருந்தது. இனி பெருமாள்தான் மனசு வைக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

 

அதற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து ஒரு நாள் போனோம். அந்த முதல் விஜயம் பற்றி கணபுரத்தென் கருமணியே என்ற பதிவில் எழுதியிருக்கிறேன். ரொம்பவும் சின்ன ஊர். இப்போது இங்கிருந்தவர்கள் எல்லோரும் இந்த ஊரை விட்டு வெளியே போய்விட்டார்கள். மிகப்பெரிய குளம். குளத்தை சுற்றி நாலு மடிவளாகம் என்ற வீதிகள். அவ்வளவுதான் ஊர். ஊரில் நுழையும் முன் ஓர் பெரிய வளைவு. அருள்மிகு ஸௌரிராஜப்பெருமாள் திருக்கோவில் என்று எழுதியிருக்கும். 1991 இல் சம்ப்ரோக்ஷணம் நடந்தது. அப்போது நாங்களிருவரும் போயிருந்தோம். ஊர் நிரம்பி வழிந்தது சந்தோஷமாக இருந்தது.

 

இங்கு எப்படிப் போவது என்று கேட்பவர்களுக்கு:

 

மாயவரம் என்னும் மயிலாடுதுறைக்குப் போய் அங்கிருந்து நாகபட்டினம் போகும் பேருந்தில் போகலாம்.இன்னொரு வழி. திருவாரூரிலிருந்தும் வரலாம். உங்கள் பக்கம் அதிருஷ்டம் இருந்தால் திருக்கண்ணபுரம் உள்ளேயே வரும் பேருந்தும் கிடைக்கலாம் திருவாரூரிலிருந்து!

 

இல்லையென்றால், மாயவரம்-காரைக்கால் பேருந்தில் ஏறி திருப்புகலூர் என்ற இடத்தில் இறங்க வேண்டும். இடது பக்கம் போனால் திருப்புகலூர். வலது பக்கம் திருக்கண்ணபுரம். பேருந்து செல்லும் முக்கிய பாதையிலிருந்து 3 அல்லது 4 கிலோமீட்டர் உள்ளே நடக்க வேண்டும். பேருந்திலிருந்து இறங்கியவுடன் உங்களை வரவேற்பது காவிரி ஆறு. நீரில்லாத ஆறு வருத்தத்தைக் கொடுக்கிறது. ஒரு காலத்தில் நிறைய நீர் ஓடியிருக்க வேண்டும். ஆற்றின் மேல் இருக்கும் பாலம் இதற்கு அத்தாட்சி! இரண்டு பக்கமும் பச்சை பசேல் என்று வயல்வெளிகள். சுவாசிக்குபோதே புத்துணர்ச்சி பரவும். இதையெல்லாம் அனுபவித்தால்தான் புரியும்.

 

பெருமாள் திருநாமம் சௌரிராஜன்; தனிக்கோவில் நாச்சியார்  கண்ணபுர நாயகி. வருடத்திற்கு ஒருமுறை பத்மினித் தாயாருடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

 

முதல்முறை போயிருந்தபோது அங்கிருந்த ஒரு குடும்பத்துடன் அறிமுகம் ஏற்பட்டது. இன்றுவரை எப்போது திருக்கண்ணபுரம் போனாலும் அவர்கள் வீட்டில் தான் தங்குவோம். முதல்முறை போனபோது மாமா, மாமி இருவரும் இருந்தனர். இப்போது இருவருமே பரமபதித்துவிட்டனர். ஆனாலும் எங்களுக்கு அந்தக் குடும்பத்தின் இளைய தலைமுறையுடன் ஆன உறவு தொடர்கிறது.

 

முதல்முறை போனபோது இரவு பெருமாளுக்கு தினம்தோறும் அமுது செய்யும் முநியதரையன் பொங்கல் கிடைத்தது. ஐந்து அரிசி, மூன்று பச்சைபயறு, இரண்டு நெய் என்ற அளவில் செய்யப்படுகிறது இந்தப் பொங்கல். அரிசியும் பருப்பும் நன்றாகக் குழையக் குழைய வேக வைக்கப்படுகிறது. பயறு அதில் இருப்பது தெரியவே தெரியாது.  அதில் நெய்யை ஊற்றி ஐந்து உருண்டை செய்கிறார்கள். ஒரு உருண்டையை மூன்று நான்கு பேர்கள் சாப்பிடலாம். கொஞ்சம் சாப்பிடும் போதே வயிறு நிரம்பிவிடும்.

 

மிகப்பெரிய கோவில். சேவிக்கத்தான் ஆளில்லை. ஒவ்வொருமுறை போகும்போதும் அங்கேயே தங்கிவிடலாம் என்று தோன்றும். அப்படி ஒரு அமைதி; ஒரு மன நிறைவு. எப்போதும் நீர் நிறைந்திருக்கும் திருக்குளம். ஒவ்வொருமுறை போகும்போதும் அங்கு நிச்சயம் தீர்த்தமாடுவோம்.

 

பெருமாளுக்கென்று நிறைய நிலபுலங்கள் இருக்கின்றன. ஆனால் விளைச்சலைக் கொடுக்க மனிதர்களுக்கு மனம் வருவதில்லை.

 

நித்ய புஷ்கரிணியில் எப்படி இவ்வளவு நீர் என்ற என் கேள்விக்கு மாமியிடமிருந்து பதில் கிடைத்தது. காவிரியில் நீர் வரத்து மிகும் போது அந்த உபரி நீர் இங்கு வரும்படியாக செய்திருந்தனர். அதைத்தவிர மழை பெய்யும்போது கோவிலில் விழும் நீர் நேரடியாக திருக்குளத்தில் வந்து சேருமாறு அமைத்திருக்கிறார்கள். அந்தக் காலத்திலேயே மழை நீர் அறுவடை! திருக்குளத்தில் பெருமாளுக்கு தெப்போற்சவம் உண்டு.

 

திருவிழா சமயங்களில் வரும் பாகவதர்களின் கூட்டம் அப்படியொரு பக்தியில் திளைக்கும். ஆட்டம், பாட்டம் என மெய்மறந்து பெருமாளை சேவிப்பார்கள். குலசேகர ஆழ்வாரின் ‘மன்னுபுகழ் கோசலைதன்’ பாடலைப் பாடி ஆடியபடியே வீதிவலம் வருவார்கள்.

 

பெருமாள் வீதி உலா முடித்துவிட்டு திரும்பவும் கோவிலுக்குள் வரும்போது பெருமாளுக்கு வெந்நீரில் திருவடித் திருமஞ்சனம் நடைபெறும். வெளியே போய்வந்த அலுப்பு தீர இந்த உபசாரம். உடனே தோசை அமுது செய்யப்படும். அந்த தோசையின் ருசி ஆஹா!

 

குலசேகர ஆழ்வார் இந்தப் பெருமாளை ஸ்ரீராமனாக நினைத்து தாலாட்டுப் பாடினார். திருமங்கையாழ்வார் நாயகி பாவத்தில் இந்தப்பெருமாளை நினைத்து உருகுகிறார். பெருமாள் சந்நிதிக்கு பின்னால் திருமங்கையாழ்வார் சந்நிதி இருக்கிறது. விளகேற்றக்கூட ஆள் இல்லை.

 

மாசிமகத்தன்று பெருமாள் தீர்த்தவாரிக்கு திருமலைராயன் பட்டினத்திற்கு (கடற்கரை ஊர்) எழுந்தருளுவார் பெருமாள். அங்கு மீனவர்களின் மாப்பிள்ளையாக பெருமாளுக்கு ஏகப்பட்ட உபசாரம் நடக்கும். பெருமாள் தங்கள் ஊருக்கு எழுந்தருளும் ஆனந்தத்தை கொண்டாட பெருமாளை அப்படியே தூக்கித் தூக்கிப் போட்டு தங்கள் தோள்களில் பிடிப்பார்களாம். இதுவரை சேவித்தது இல்லை.

 

வாழ்நாளில் ஒருமுறையாவது இந்தப் பெருமாளை சேவித்துவிட்டு வாருங்கள். அந்த அழகு உங்களை மறுபடி மறுபடி அழைக்கும்.

 

இதைத் தொடர நான் அழைக்க விரும்புபவர்கள்:

திருமதி சித்ரா

திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் 

திரு பாண்டியன் 

திருமதி ராதா பாலு 

 

என் அழைப்பை ஏற்று எழுத வருமாறு அழைக்கிறேன்.

 

தொடர்புடைய பதிவுகள்: என்னுடைய இன்னமுதே

ராகவனே தாலேலோ 

 

நானூறு வருட சாபம்!

courtesy: Google

 

ராஜா ராணி கதைகளுக்கு இன்னும் நம்மிடையே வரவேற்பு இருப்பது போலவே, நம்மிடையே ஒரு ராஜா இருக்கிறார், நாம் அவரால் ஆளப்படுகிறோம் என்பதும் ஒரு பெருமையான விஷயமாகவே இன்றளவும் கருதப்படுகிறது. அதனால் தானோ என்னவோ 2013 டிசம்பர் மாதம் 10 தேதி மைசூரு மகராஜா ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ ஒடையார் (60) அவரது குலதெய்வமான சாமுண்டீஸ்வரி தேவியின் திருவடியை அடைந்தபோது கர்நாடக மாநிலமே சோகத்தில் ஆழ்ந்தது.

 

இவருக்கு குழந்தைகள் இல்லாததால் இவரே கடைசி அரசர். இதன் காரணமாகவே  ‘நானூறு வருட சாபம் அரச பரம்பரையை இன்றும் விடாமல் தொடர்கிறதோ?’ என்று கர்நாடக மாநிலம் முழுவதும் கேள்வி எழுந்தது. என்ன சாபம் இது என்பதைப் பார்க்கும் முன், மறைந்த மஹாராஜாவைப் பற்றிப் பார்க்கலாம்.

 

முன்னாள் மைசூரு மகாராஜா ஜெயசாமராஜேந்திர ஒடையாருக்கும், அவரது இரண்டாம் மனைவி மகாராணி திரிபுரசுந்தரி அம்மணிக்கும் 1953 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் நாள் பிறந்தவர். ஜெயசாமராஜேந்திர ஒடையாரும் அவரது தந்தையின் தத்துப்புத்திரர் தான்.

 

‘பழமையை விடாமலும், அதேசமயம் காலத்திற்குத் தகுந்தாற்போல புதுமைகளை ஏற்றுக்கொண்டு, புதுமை விரும்பியாகவும் இரு’ என்ற தனது தாயின் வார்த்தைகளை அப்படியே கடைபிடித்தவர். ஆன்மீகத்திலும், பழைய சம்பிரதாயத்திலும் ஆழ்ந்த நம்பிக்கையும், அதே சமயம் புது யுகத்திற்கு தகுந்தாற்போல தன்னை மாற்றிக் கொண்டதால், பழமைவாதிகளும், நவநாகரீக யுவர்களும் அவரை விரும்பினார்கள். தசரா சமயத்தில் தனது ராஜ பீடத்தில் அமருபவர், ஃபாஷன் ஷோக்களையும் நடத்தினார். கர்நாடக சங்கீதத்தில் இருந்த ஆர்வத்தை மேல்நாட்டு இசையிலும், ராக் இசையிலும் கொண்டிருந்தார். நாகரீகஉடை வடிவமைப்பாளர், தொழில்துறை வல்லுநர், ஹோட்டல் அதிபர், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் என்று பலமுகங்கள் கொண்ட மகாராஜா  மாறிவரும் காலத்திற்கேற்ப தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருந்தவர்.

 

அரச பரம்பரையில் இருந்தாலும், இன்றைய அரசியலையும் விட்டுவைக்கவில்லை இந்த மகராஜா. இந்திராகாந்தியின் மறைவுக்குப் பிறகு 1984 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியினால் நேரடியாக மைசூரில் நிற்க வைக்கப்பட்டு வெற்றி பெற்றார். மகாராஜா தங்கள் வீடுகளுக்கு வந்து வாக்குக் கேட்டதை மைசூரு மக்கள் இன்றைக்கும் மறக்கவில்லை. நடுவில் ஒருமுறை பா.ஜ.க விற்கு மாறியவர் மறுபடி காங்கிரசில் சேர்ந்தார்.

 

கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். வெளிநாட்டுக் கார்களில் அமோக மோகம் கொண்ட இவரிடம்,  ஒரு காலகட்டத்தில் 20 சொகுசுக் கார்கள் இருந்தன. கார் ஓட்டுவதிலும் வல்லவரான இவர், மைசூரு-பெங்களூரு இடையே உள்ள தூரத்தை ஒருமுறை 90 நிமிடங்களில் கடந்தவர். பந்தயக் குதிரைகளையும் வளர்த்து மகிழ்ந்தார்.

 

இவரிடத்தில் பல அலைபேசிகள் – குடும்பத்தினருடன் பேச, நண்பர்களுடன் அளவளாவ, தனது தொழில் உறவுகளுடன் உரையாட என்று – தனித்தனியாக வைத்திருந்தார். விதம்விதமான கைகடியாரங்கள் சேமித்து வைப்பதிலும் பேரார்வம் கொண்டிருந்தார். கலை மற்றும் கலாச்சார போஷகராக இருந்தார். பிறந்த வருடமான 1953 ஐ தனது அதிர்ஷ்ட எண்ணாக நினைத்திருந்ததால், அந்த எண் தனது கார்களிலும், அலைபேசிகளிலும் வருமாறு அமைத்துக் கொண்டார்.

 

கல்லூரி நாட்களிலேயே கிரிக்கெட் விளையாடுவதில் தீவிர ஆர்வம் கொண்டிருந்த மகாராஜா  மாநில அளவில் ஆடியவர். பின்னாட்களில் இரண்டு முறை கர்நாடக மாநில கிரிக்கெட் போர்டிங் தலைவராக இருந்தவர். மிக சமீபத்தில் தான் (டிசம்பர் 1, 2013) இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

‘என்னுடைய எழுபது வயதுவரை எனது வாரிசு பற்றி யோசிப்பதாக இல்லை’ என்றவர் வாரிசு இல்லாமல் 60 வயதில் மரணமடைந்து தலக்காடு சாபத்திற்கு ஆளாகிவிட்டார் என்று  எண்ண வைத்துவிட்டார்.

 

அது என்ன தலக்காடு சாபம்? நானூறு வருட சாபமும் இதுவே.

 

விஜயநகரத்தின் தளபதி ஸ்ரீரங்கராயனிடமிருந்து ஸ்ரீரங்கப்பட்டினத்தை 1610 ஆம் ஆண்டு அன்றைய மைசூரு மகராஜா ராஜ ஒடையார் கைப்பற்றினார். ஸ்ரீரங்கராயனின் மனைவி அலமேலம்மா ஆதிரங்கனின் ஆலய நகைகளை எடுத்துக் கொண்டு தலைமறைவானபோது, ராஜ ஒடையார் அவரைப் பிடிக்க தனது படை வீரர்களை அனுப்புகிறார். அவர்களிடமிருந்து  தப்ப அலமேலம்மா தலக்காடு நோக்கி ஓடிவருகிறார். அங்கு மாலங்கி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, தப்ப முடியாத அலமேலம்மா, ‘தலகாடு மணல் மூடி போகட்டும்; மாலங்கி நதி மடுவாகட்டும்; ஒடையார் பரம்பரை வாரிசற்றுப் போகட்டும்’ என்று சாபமிட்டு விட்டு நதியில் குதித்து விடுகிறார்.

 

இப்போதும் தலகாடு மணல் மூடித்தான் இருக்கிறது. மாலங்கி நதியில் நீர் வரத்து இல்லை. இந்த இரண்டு சாபங்களும் பலித்தது போலவே ஒடையார் பரம்பரையிலும் நேர் வாரிசு என்பது இல்லை. ஸ்ரீகண்ட தத்தாவின் அந்திமக் கிரியைகளை அவரது சகோதரி மகன் காந்தராஜ் அர்ஸ் செய்தார். அவரே அடுத்த ஒடையார் பரம்பரையின் வாரிசாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது.

 

மறைந்த மகாராஜாவிற்கு நம் அஞ்சலிகள்.

 

 

 

 

 

அழகுக் குறிப்பு

இன்று ஆட்ரி ஹெப்பர்ன் – இன் 85 வது பிறந்தநாள் என்று கூகிள் சொல்லுகிறது. அவரது நினைவாக இந்தப் பதிவு மறுபடியும் இங்கே:

 

 

ஒரு நாள் ஒரு பத்திரிக்கை அலுவலகத்திற்கு போன் செய்திருந்தேன். இன்டர்நெட் மூலம் என் படைப்புகளை அனுப்ப இமெயில் ஐடி கேட்டேன். உடனே பத்திரிகை அலுவலர் “என்ன மேடம், சமையல் குறிப்பா?” என்றார். எனக்கு கொஞ்சம் கோவம், வியப்பு; பெண்களின் படைப்பு என்றால் சமையல் குறிப்பு, கோலம் இவை தானா? சரி அவரையே கேட்போம் என்று “ஏன் சார், பெண்கள் என்றால் சமையல் குறிப்பு தானா?” என்றேன். “பொதுவா அப்படித்தான்……” என்றார்.

இந்த உரையாடலுக்குப் பிறகு எனக்குள் ஒரு குறுகுறுப்பு. “பெண்கள் இன்டர்நெட்டில் எதை அதிகம் படிக்கிறார்கள்?” என்று ஆராய்ந்தால் முதல் இடம் சமையலுக்குத்தான்! அடுத்தாற்போல் அழகு குறிப்பு; மூன்றாவது இடம் எடை குறைப்பது. சரி நான் இப்போது எதைப் பற்றி எழுதுவது? சமையல்? அழகுக் குறிப்பு? எடை குறைப்பு?

சமையல் குறிப்பு நிறைய நிறைய இருக்கிறது; சரி எடைக்குறைப்புப் பற்றி எழுதலாம் என்றால் ‘முதலில் நீ உன் எடையைக் குறைத்து விட்டு பிறகு எழுது’ என்று என் மனசாட்சி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் சொன்னது. கடைசியில் அழகுக் குறிப்பு எழுதலாம் என்று தீர்மானம் செய்தேன். ‘முதலில் நீ அழகாக………….’ என்று ஆரம்பித்த மனசாட்சியை ‘ஏய்! சும்மா இரு. அழகாக இருப்பவர்கள் அழகுக் குறிப்பு எழுதுவதில்லை, முட்டாள் மனசாட்சியே!’ என்று அடக்கினேன்

ரொம்ப நேரம் யோசித்து சரி புதுவிதமான அழகுக் குறிப்பு ஏதாவது கிடைக்கிறதா என்று கூகுளில் தேட ஆரம்பித்தேன்.  தலை முடியில் தொடங்கி பாதம் வரை விதம் விதமாக எத்தனை குறிப்புகள்? ஆனால் புதுமையாக ஒன்றுமே இல்லை. மறுபடி தேடித், தேடித், தேடித்…….
கடைசியில் நான் எதிர்பார்த்த மாதிரியே ஒரு குறிப்பு! யுரேகா! ஆட்ரி ஹெப்பர்ன் அழகுக் குறிப்பு  என்று போட்டிருந்தது. ஆஹா! ஆங்கில நடிகை அல்லவா? கட்டாயம் பிரமாதமாக இருக்கும் என்று சந்தோஷமாக இருந்தது. படிக்க ஆரம்பித்தேன். ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது எனக்கு. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

ஆட்ரி ஹெப்பர்ன் அழகுக் குறிப்பு 

யார் இந்த ஆட்ரி ஹெப்பர்ன்? 1929 ஆம் ஆண்டு பிறந்த பிரிட்டிஷ் நடிகை. மிகச் சிறந்த நடிகை மட்டுமல்ல; சிறந்த மனிதாபிமானி என்று இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது இவரது வலைத்தளம். ஐம்பது, அறுபதுகளில் பல வெற்றிப் படங்களில் நடித்த இவரது ‘My fair Lady’ என்கிற திரைப் படம் நம் ஊரிலேயே ஓடு ஓடென்று ஓடிற்று. 1964 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இது.

பெர்னார்ட் ஷா எழுதிய ‘பிக்மேலியன்’ என்ற மேடை நாடகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த படத்தை திரு. சோ அவர்கள் ‘மனம் ஒரு குரங்கு’ என்ற பெயரில் நாடகமாக தயாரித்தார். திருமதி சுகுமாரி கதாநாயகி. பிறகு முத்துராமன், கே.ஆர். விஜயா நடிக்க சினிமாவாகவும் வந்தது.

1950 களிலேயே UNICEF நிறுவனத்தின் சார்பில் பல சமுதாய நற்பணிகளில் பங்கு கொண்ட இவர் தனது கடைசிக் காலத்தில் பெரும் பகுதியை ஆப்ரிகா, தெற்கு அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் இருக்கும் பின் தங்கிய மக்களின் நலப் பணிகளுக்காக செலவழித்தார். இந்த நிறுவனத்தின்  ‘குட்வில் அம்பாசடர்’ பணியாற்றிய இவர் 1993 இல் தனது 63 வது வயதில் குடல் வால் புற்று நோயால் இயற்கை எய்தினார்.

இனி இவர் எழுதிய அழகுக் குறிப்பு பார்க்கலாமா?

 • கண்கள் அழகாக வேண்டுமா? உங்களைச் சுற்றியுள்ளவர்களின் ‘நல்ல தன்மை’ யைப் பார்க்கவும்.
 • மெல்லிய உடல் வேண்டுமா? உங்களின் உணவை பசித்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 • அழகான கூந்தலுக்கு: தினமும் ஒரு முறையாவது ஒரு குழந்தை உங்கள் கூந்தலை தன பிஞ்சுக் கைகளால் கோதி விடட்டும்.
 • உங்களது அறிவுத் திறனால் நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட தோளும் பெறுங்கள்.
 • யாரையும் துச்சமாக எண்ணாதீர்கள்; பொருட்களை விட மனிதர்கள் தான் பாதுகாக்கப் பட வேண்டியவர்கள்; துயரத்தில் இருப்பவர்களை மீட்டுவாருங்கள்; அவர்கள் நம்பிக்கையை புதுப்பியுங்கள்; கவலைகளில் இருந்து விடுவியுங்கள்; அவர்களுக்கு புத்துயிர் கொடுங்கள்; அவர்களது பாதையை சீர்படுத்துங்கள்.
 • இதனால், உங்களுக்கு ஒரு தேவை ஏற்படும்போது, உதவ ஆயிரம் கரங்கள் இருக்கும்.
 • வயது ஆக ஆக உங்களுக்கு இரண்டு கைகள் இருப்பது – ஒன்று உங்களுக்காகவும், இன்னொன்று மற்றவருக்காகவும் என்பதை உணருங்கள்.
 • பெண்ணின் அழகு அவளது உடைகளிலோ, அவளது உருவத்திலோ, கூந்தலை முடியும் அழகிலோ இல்லை.
 • ஒரு பெண்ணின் அழகை, அவளது அன்பு நிறைந்த இதயம் என்கிற வாசல் மூலம் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
 • ஒரு பெண்ணின் அழகு அவள் முகத்தில் இருக்கும் மறுவில் இல்லை. அவளது உண்மையான அழகு அவளது ஆத்மாவை பிரதி பலிப்பது. அவள் நம்மிடம் காட்டும் பரிவில், பேரார்வத்தில் அழகு இருக்கிறது;  வருடங்கள் செல்லச் செல்ல அவளது அழகும் வளர்ந்து கொண்டே போகிறது.

படித்து முடித்தவுடன் நீண்ட மௌனத்தில் ஆழ்ந்து விட்டேன். எத்தனை அருமையான, சத்தியமான வார்த்தைகள். கடைப் பிடிப்போமா பெண்மணிகளே?

published in a2ztaminadunews.com

இயற்கையெல்லாம் சுழலுவதேன்?

 

https://www.youtube.com/watch?v=8emUszS4fXI

எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி பாடும் அருமையான எனக்கு மிகவும் பிடித்த  பாடல் இது.

‘என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்? உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன்?’

 

என்னருகே யாருமில்லாமலேயே ஒரு வாரமாக சுழன்று கொண்டே இருக்கிறது, என்னைச் சுற்றி இருப்பதெல்லாம். காலையில் தலையணையிலிருந்து தலையை உயர்த்தியவுடன் ‘கிர்ர்ர்ரர்ர்ர்ரர்….’. மறுபடி தலையணையில் முகம் புதைத்தேன். மறுபடி எழுந்தால்….மறுபடி கிர்ர்ர்ரர்ர்ர்ரர்….. இந்த முறை அப்படியே அனந்தசயன ஆசனத்தில் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு மெதுவாக சமாளித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தால் மறுபடியும் ‘கிர்ர்ர்ரர்ர்ர்ரர்..’ நிதானமாக சுவற்றைப்பிடித்துக் கொண்டு, எழுந்து நின்றால் உடம்பு ஒரு ஆட்டம் ஆடி நிற்கிறது. நி………..தா……..ன……..மா…….க…… வலதுகால், இடதுகால் என்று ஒவ்வொரு காலாக எடுத்து வைத்து ஒரு கையால் சுவற்றைப்பிடித்துக் கொண்டே…… (பிற்காலத்துல பேசறதுக்கு வசனம் ரெடி: இந்த ரூம்ல இருக்குற ஒவ்வொரு செங்கலும் எனக்குத் தெரியும்!!!)

 

கடவுளே! என்னாவாயிற்று எனக்கு? தலைக்குள் ஏதோ புகுந்துகொண்டாற் போல….

 

‘தலையைத் தூக்கினா ரூம் எல்லாம் சுத்தறது……!’

‘பேசாம படுத்துக்கோ…!’

 

‘இன்னிக்கு உங்களுக்குப் பிறந்தநாள். கோவிலுக்குப் போகலாம்னு நினைச்சேன்……’

‘சும்மா இரும்மா….வீட்டுலேயே தலை சுத்தறது. இன்னும் கோவிலுக்கு வேற போகணுமா? அங்கே போய் 108 தடவை அனுமாரை சுத்தணும்னு வேண்டுதலா?’ பிள்ளையின் கோபம் புரிந்தது.

 

‘இன்னிக்கு அம்மாவை கோவிலுக்கு அழைச்சுண்டு போகலாம். எப்பவும் அம்மா கோவிலை பிரதட்சணம் பண்ணுவா. இன்னிக்கு கோவில்ல போய் அம்மா நின்னா போதும். கோவில்  அம்மாவை சுத்தும்……!’ கணவர் கோபத்தை அடக்கிக் கொண்டு ஜோக் அடிப்பதும் புரிந்தது.

 

(கணவரின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு) மருத்துவரிடம் போனேன். என்னுடைய சோகக்கதையைக் கேட்டுவிட்டு, இரத்த அழுத்தம் பார்த்தார். ‘பி.பி. நார்மலா இருக்கே!’ என்று சொல்லிக்கொண்டே, இல்லாத தனது குறுந்தாடியை தடவிக்கொண்டு யோசித்தார். பிறகு சட்டென்று முகம் மலர்ந்து, ‘இது வெர்டிகோ…!’ (வியாதியின் பெயர் கண்டுபிடித்த சந்தோஷத்தில்) என்னைப்பார்த்து சிரித்தார். எனக்கு சிரிப்பு நின்று போயிருந்தது. இது என்ன புது கஷ்டகாலம்?

 

‘சட்டென்று எழுந்து நிக்காதீங்க., தலையை ‘வெடுக்’கென்று திருப்பாதீங்க., தலையை ரொம்ப அசைக்காதீங்க….’ என்று சொல்லிவிட்டு, ‘இதுக்கு மருந்து எதுவும் கிடையாதும்மா….தானா வரும், தானா போகும்..(ரஜினிகாந்த் வசனம் இவர் பேசறாரே!) எப்போ வரும்ன்னு சொல்லமுடியாது…. உயிருக்கு அபாயமான வியாதி இல்ல… ஆனா ஒரு மாதிரி இன்செக்யூர்டு ஃபீலிங்ஸ்… இருக்கும்….!’  நீளமா வசனம் பேசிட்டு தன்னுடைய லெட்டர்ஹெட் எடுத்து ஏதோ ஒரு மருந்து எழுதிக்கொடுத்தார். ‘நிறைய தண்ணீர் குடிங்க. ரெஸ்ட் எடுத்துக்கோங்க….!’

 

வீட்டிற்கு வந்தவுடன் ஆரம்பித்தது எனக்கு உண்மையான கஷ்டகாலம். வழக்கமாக நான் உட்காரும் இடத்தில் உட்கார்ந்ததும், ‘அந்த லாப்டாப் – ஐத் தொடாதே!’ முதலில் இடி. தொடர்ந்து மின்னல், மழை. ‘எப்போ பார்த்தாலும் ஏதோ அதுல பண்ணிண்டே இருக்க….! மாதவா! அதுல அம்மாவுக்கு இணையம் வராதபடி பண்ணிடு….!’ என்ன நல்ல எண்ணம்!

 

நல்ல கணவர்தான். எனக்கு ஒரு சின்ன தலைவலி என்றாலும் உடனே அவருக்கு என்னையும் என் லேப்டாப் –ஐயும் பிரித்தே ஆக வேண்டும். அதுதான் என்னுடைய உடல் கோளாறுகளுக்கு காரணம் என்று படு ஸ்ட்ராங்காக நம்புபவர். மகள், மகன் எல்லோரும் எனக்கு எதிர்கட்சியில் இப்போது. வாயைத் திறக்காமல் இருந்தேன்.

 

‘பாட்டு கேட்கிறாயா?’ தலையைத் திருப்பாமல் ‘ஊம்’ என்றேன். ‘என்னைப் பார்த்து சொல்லேன்….!’

‘உங்கள பார்த்தால் தலையை சுத்தறது….!’ (அவரது முகத்தில் ஒரு ‘பளிச்!’ – இந்த வயதிலும் உன்னை கிறுகிறுக்க வைக்கிறேன் பார், என்பது போல!!!) அவசர அவசரமாக ‘தலையைத் திரும்பி உங்களை பார்த்தால் தல சுத்தறது…!’ என்றேன்.

‘ஜெயா மேக்ஸ் போடட்டுமா? இப்போ ஏதோ ஒரு நிகழ்ச்சி வருமே…. ரெண்டு கையையும் விரிச்சு பத்து அப்படின்னு காமிச்சுண்டு…..? ஒரே நடிகர், நடிகையோட பாட்டு பத்து போடுவாங்களே? அது பேர் என்ன?’

‘பத்துக்குப் பத்து….!’ தலை சுத்தினாலும், நினைவு நன்றாக இருக்கிறது என்று ஒரு அல்ப சந்தோஷம்!

‘சுத்தி சுத்தி வந்தீஹ…..!’

ரஜினிகாந்த்தை சுத்தி சுத்தி சௌந்தர்யா பாடிக் கொண்டிருந்தார். கடவுளே! இங்கேயும் சுத்தலா? கண்களை மூடிக்கொண்டேன்.

‘வேற போடட்டுமா?’

‘அந்த ஒரு சானல்ல போட்டி எல்லாம் நடந்ததே, எப்பவும் வெள்ளை புடவையிலேயே வரும் ஃபேமஸ் பாடகி நேரா மேடைக்குப் போயி அந்த பெண்ணை கட்டிண்டு……ரொம்ப பிரமாதமா பாடற என்றாங்களே….அதப் போடட்டுமா?’

 

‘சரி…….!’ (நல்லகாலம்…. சானல் பெயர், நிகழ்ச்சியின் பெயர், பாடகியின் பெயர், போட்டியாளரின் பெயர் என்று கேட்காமல் விட்டாரே!)

 

‘தரிகிடதோம்…..தரிகிடதோம்…..!’ (நிஜமாகவே தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது!) எதற்கு இந்தப் பெண் இத்தனை வேகமாகப் பாடுகிறாள், தலை சுற்றாதோ  என்று தோன்றியது.

 

‘இந்த பெண் பெயர் என்னம்மா…..?’

 

‘சோனியா…’ என்றேன் தீனமாக.

 

‘நீ பேசாம ரெஸ்ட் எடுத்துக்கோ….!’ பேசாமல் ரெஸ்ட் எடுத்துக்கலாம். வேலை செய்யாமல் ரெஸ்ட் என்பது கொஞ்சம் சிரமமாயிற்றே!

 

படுத்திருந்தவள் மெல்ல எழுந்திருக்க…….’படுத்துக்கோ படுத்துக்கோ…..நான் இன்னிக்கு சமையல் பண்றேன்…..! நான் சூப்பரா பண்ணுவேன்…..’ என்று மகன், மகள் இருவரையும் பெருமையுடன் பார்த்தபடியே, ‘என்ன பண்ணலாம் சொல்லு….?’

 

‘நேத்திக்கு கீரை வாங்கிண்டு வந்தீங்களே….அப்புறம் வாழத்தண்டு…..!’

 

‘கீரை சுலபமா கட் பண்ணிடலாம்….இந்த வாழைத்தண்டு தான்….கஷ்டம்… வட்டமா கட் பண்ணிட்டு நடுவுல இருக்கற நாரை கையிலே சுத்திண்டு சுத்திண்டு…..!’

 

கண்ணை மூடிக்கொண்டேன் , காதில் விழாத மாதிரி. மறுபடி வந்து படுக்கையில் படுத்து, ஒரு நொடி சுற்றிய தலையை சமாளித்து, ‘ஏதாவது புக் கொடுங்களேன்……!’

நல்லகாலம் ஒண்ணும் சொல்லாம….’அந்த பொன்னியின் செல்வன் கொடுக்கட்டுமா?’

‘ஆஹா! கொடுங்கோ….!’

‘ஐந்து இருக்கே….!’

‘ஏதாவது ஒண்ணு கொடுங்கோ….!’

கொண்டுவந்து கொடுத்தார். பிரித்தால்…..சுழல் காற்று!

 

ஆயாசமாக கண்ணை மூடிக்கொண்டேன். கொஞ்ச நேரம் கழித்து எழுந்து வந்தேன். ‘முரசு போடட்டுமா?’

 

‘என்னருகே நீயிருந்தால்……இயற்கையெல்லாம் சுழலுவதேன்?’

எம்ஜிஆர் சரோஜாதேவியைக் கேட்டுக் கொண்டிருந்தார். பதிலுக்கு சரோஜாதேவி ‘உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன்?’ என்று பாடிக்கொண்டிருந்தார்.

 

அப்படியே கண் அசந்துவிட்டேன், போலிருக்கிறது. ‘சாதம் ரெடி. எழுந்துக்கோ. சூடா பிசைந்து கொண்டுவரேன்..!’ கணவரின் குரல் கேட்டு எழுந்தேன்.

 

‘இளைமையிலே காதல் வரும்? எதுவரையில் கூட வரும்?’

முழுமை பெற்ற காதல் எல்லாம் முதுமை வரை ஓடி வரும்’

 

பாடல் மனதில் ஒலித்தது.

 

என்னவருக்கு ஏப்ரல் 13 பிறந்தநாள். பங்குனி உத்திரம். இப்படியே நாங்களிருவரும் ஒருவருக்கொருவர் துணையாக (கேலியானாலும், கோவமானாலும்) இருக்க வேண்டும் என்று ஸ்ரீரங்கத்து திவ்ய தம்பதிகளிடம் விண்ணப்பம் செய்துகொண்டேன்.

 

 

 

 

 

சரியாத்தான் சொன்னாரு ‘குஷ்’

 

 

2014 ஏப்ரல் சினேகிதி (திருமதி மஞ்சுளா ரமேஷ்) இதழில் வெளியான கட்டுரை

 

 

நிறைய எழுத்தாளர்களின் படைப்புக்களைப் படித்தாலும், ஒரு சிலரது எழுத்துக்கள் நம்மை மிகவும் கவர்ந்து விடுகின்றன. அந்த சிலரில் இன்று மறைந்த குஷ்வந்த் சிங் என்னைக் கவர்ந்தவர்களில் ஒருவர். நிறைய எழுதியிருக்கிறார். இவரது எழுத்துக்களில் கிண்டலும் கேலியும் அதிகமாக இருக்கும். எல்லோரையுமே நகைச்சுவை கலந்து சாடியிருப்பார். அதுவே இவரது எழுத்துக்களுக்கு சுவாரஸ்யம் கூட்டியது என்று சொல்லலாம். சம்பந்தப்பட்டவர் படித்தால் கூட நிச்சயம் சின்ன புன்னகையாவது செய்வார். பிறகுதான் கோபித்துக் கொள்வார். அவருக்கும் கூட சிலசமயம் இவர் எழுதுவது ‘நிஜம்தானே?’ என்று தோன்றலாம்!

 

இவர் எழுதும் பெரிய நூல்களை விட தினசரியில் இவர் எழுதி வந்த சின்ன சின்ன பத்திகள் மிகவும் சுவாரஸ்யம் வாய்ந்தவை. மற்றவர்களைப் பற்றி மட்டுமல்ல; தனது தவறுகளையும் வெளிப்படையாக பேச இவர் எப்போதும் தயங்கியது இல்லை. இவர் எழுதிய பத்திகளில் நான் படித்தவற்றில் எனக்கு நினைவு இருப்பது இதோ:

 

வெளிநாடு போயிருந்தபோது ஒருமுறை வயிற்று உபாதைக்காக ஒரு மருத்துவரிடம் சென்றாராம். மருத்துவர் இவரைப்பார்த்து, ‘கடந்த ஒரு வாரத்தில் என்னவெல்லாம் சாப்பிட்டீர்கள்?’ என்று கேட்டுவிட்டு இவர் சொல்வதைக் குறித்துக் கொண்டாராம். மருந்து எழுதிக்கொடுத்துவிட்டு, ‘ஒரு வாரம் கழித்து வந்து பாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

 

ஒருவாரம் கழித்து இவர் மருத்துவமனைக்குப் போனபோது அங்கு ஒரு பெரிய கண்ணாடி ஜாடி ஒரு மேஜையின் மேல் இருந்ததாம். அதனுள் நிறைய திரவம், நிறைய திடப்பொருள் என்று ஒரு கலவை. அதைப்பார்க்கவே இவருக்கு ஒரு மாதிரி இருந்ததாம். மருத்துவர் சொல்லும்வரை காத்திருக்காமல், இவரே கேட்டாராம்: ‘அந்த ஜாடிக்குள் என்ன?’ என்று. ‘நீ ஒரு வாரமாக என்னென்ன சாப்பிட்டாயோ அதெல்லாம் அந்த ஜாடிக்குள் இருக்கிறது’ என்று பதிலளித்தாராம் மருத்துவர். ‘வயிறு என்பதை வயிறாக நினை. இதைபோல ஒரு கண்ணாடி ஜாடி என்று நினைத்து கிடைத்ததை எல்லாம் அதற்குள் போடாதே!’ என்றாராம் மருத்துவர்.

 

அவரது பெயரைப்போலவே மிகவும் ஜாலியானவர். இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அவரது எழுத்துக்களுக்கு ரசிகர்கள் உண்டு. 99 ஆண்டுகள் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்த அவர் ஒரு மனிதனின்  என்ன தேவை என்று பட்டியலிடுகிறார்:

 

 1. முதல் தேவை: பரிபூரண ஆரோக்கியம். சின்ன நோய் என்றால் கூட உங்கள் சந்தோஷத்தை அது பாதிக்கும்
 2. இரண்டாவது தேவை: போதுமான அளவு வங்கித் தொகை: இது லட்சக்கணக்கில் இல்லாமல் போனாலும், வாழ்க்கையின் வசதிகளை அளிக்க வல்லதாக இருக்கவேண்டும். வெளியில் போய் சாப்பிடுவதற்கும், அவ்வப்போது திரைப்படங்கள் பார்ப்பதற்கும், பிடித்த இடங்களைப் போய் பார்த்து வருவதற்கும், விடுமுறையை மலை வாசஸ்தலத்திலோ அல்லது கடற்கரை அருகிலோ கழிக்கவும் உதவுவதாக இருக்க வேண்டும். பணப்பற்றாக்குறை உங்களை நிலைகுலையச் செய்யும். கடன் வாங்குவது, கிரெடிட் கார்டுகளில் வாழ்வது தவறான பழக்கம். நம்மைப் பற்றிய பிறரது கணிப்பில் நம் மதிப்பு குறையும்.
 3. மூன்றாவது தேவை: சொந்தவீடு. நம் வீட்டில் கிடைக்கும் சுகம் வாடகை வீடுகளில் கிடைக்காது. சின்னதாக ஒரு தோட்டம். நம் கையால் விதை போட்டு சின்னஞ்சிறு செடிகள் முளைத்து பூக்கள் மலருவதைப் பார்ப்பதும், அவற்றுடன் ஒரு நட்புணர்வை வளர்த்துக் கொள்வதும் அதிக சந்தோஷத்தைக் கொடுக்கும்.
 4. நான்காவது தேவை: நம்மைப் புரிந்துக்கொண்ட ஒரு மனைவி/கணவன்/ ஒரு நண்பன். புரிதல் இல்லாத வாழ்வில் சேர்ந்து இருந்து, ஒருவரையொருவர் கடித்துக் குதறிக் கொள்வதை விட மணவிலக்கு எவ்வளவோ மேல்.
 5. ஐந்தாவது தேவை: நம்மைவிட நல்ல நிலையில் இருக்கும் ஒருவரைப் பார்த்து பொறாமை கொள்ளாமல் இருத்தல்: பொறாமை உங்களை அரித்துவிடும். மற்றவருடன் உங்களை ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள்.
 6. ஆறாவது தேவை: விலகி இருத்தல். வதந்திகளைப் பரப்புபவர்களை கிட்டே நெருங்க விடாதீர்கள். அவர்களது வார்த்தைகள் உங்களை செயலிழக்கச் செய்வதுடன், உங்கள் மனதையும் விஷமாக்கும்.
 7. ஏழாவது தேவை: உங்களுக்கென்று ஒரு பொழுதுபோக்கை வளர்த்துக் கொள்ளுங்கள். தோட்டவேலை, புத்தகம் படித்தல், எழுதுதல், படங்கள் வரைதல், விளையாடுதல் அல்லது இசையைக் கேட்டல் என ஏதாவது உங்களுக்கென்று வேண்டும்.
 8. எட்டாவது தேவை: தினமும் காலையும் மாலையும் 15 நிமிடங்கள் சுயபரிசோதனைக்கு ஒதுக்குங்கள். காலை பத்து நிமிடங்கள் மனதை அமைதிப்படுத்தவும், 5 நிமிடங்கள் இன்று என்ன செய்யவேண்டும் என்று திட்டமிடவும் ஒதுக்கவும். அதேபோல மாலை 5 நிமிடங்கள் மனதை நிலைநிறுத்தவும், பத்து நிமிடங்கள் என்னென்ன செய்து முடித்தீர்கள் என்று பார்க்கவும் நேரத்தை செலவிடுங்கள்.
 9. கடைசியாக கோபம் கொள்ளாதீர்கள். முன்கோபம், பழி வாங்கும் எண்ணம் வேண்டவே வேண்டாம். உங்களின் நண்பர் கடுமையாகப் பேசினால் கூட சட்டென்று அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடுங்கள்.

 

இவையெல்லாவற்றையும் விட மிகவும் தேவையான ஒன்று:

இறக்கும்போது நாம் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றிய வருத்தங்களோ, உறவினர்கள், நண்பர்கள் பற்றிய எந்தவிதமான மனக்குறைகளோ இல்லாமல் மரணிக்க வேண்டும். பாரசீக மொழியில் கவிஞர் இக்பால் சொல்லுவதை நினைவில் கொள்வோம்: ‘உண்மையான மனிதனின் லட்சணங்கள் என்ன தெரியுமா? மரணத்தைப் புன்னகையுடன் வரவேற்பதுதான்’.

 

2014 மார்ச் மாதம் 20 நாள் மரணத்தைத் தழுவிய இந்த மனம்கவர் எழுத்தாளருக்கு நம் அஞ்சலிகள்!

 

இதையும் படிக்கலாமே!

மரணம் என்பது என்ன? 

 

 

 

 

 

ஆட்டிஸம் (Autism Spectrum Disorder)

 

autism

இன்றைக்கு ஆட்டிஸம் விழிப்புணர்வு நாள். ( ஏப்ரல் 2) ஆட்டிஸம் என்றால் என்ன? இது ஒரு குறைப்பாடு. குறிப்பாக ஆண் குழந்தைகளை பாதிக்கும் குறைப்பாடு.

 

இந்தக் குழந்தைகள் யாருடனும் பழகுவதையோ, பேசுவதையோ விரும்புவதில்லை. பொதுவாழ்க்கை என்பதை இவர்கள் அவ்வளவாக ஏற்றுக் கொள்ளுவதில்லை. மற்றவர்களுடன் பேசுவது, அவர்களை நேருக்கு நேர்  பார்ப்பது இதெல்லாம் அவர்களுக்கு மிகவும் கடினமான ஒரு விஷயம். நாம் வழமையான விஷயங்கள் என்று நினைப்பது அவர்களுக்கு கடினமாக இருக்கும். வெளியே அதிகம் பழகாமல் தங்களுக்குள்ளேயே வாழ நினைப்பவர்கள். இன்னொருவரால் தொடப்படுவதைக் கூட இவர்கள் விரும்புவதில்லை. தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு, முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு, தங்கள் நினைப்பிலேயே சிரித்துக் கொள்வார்கள். மாற்றம் என்பதை ஏற்றுக்கொள்வது மிகமிகக் கடினம் இவர்களுக்கு.

 

ஆட்டிஸம் ஏன் ஏற்படுகிறது என்பதற்கு இதுவரை பதில் இல்லை. இது பரம்பரையாக வரும் குறைபாடு.  பெற்றோர்களுக்கு இந்த பாதிப்பு இருந்தால் குழந்தைகளுக்கும் இருக்கும். பிறப்பதற்கு முன்னும், பிறந்த பின்னும்  குழந்தையின் மூளை வளர்ச்சி அடைவதைப் பொறுத்து இந்த ஆட்டிஸம் ஏற்படுகிறது.  இந்தக் குறைபாட்டினை ஸ்பெக்ட்ரம் குறைபாடு என்கின்றனர். அதாவது சிலரை இந்த நோய் அதிகமாகவும், சிலரை மிதமாகவும் பாதிக்கும். மிதமான வகையை Asperger Syndrome அல்லது High functioning Autism என்றும் குறிப்பிடுகிறார்கள். இவர்களால் தங்கள் தேவைகளை தாங்களாகவே – அதாவது உடை மாற்றிக் கொள்வது, உணவு எடுத்துக் கொள்வது – பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் அலுவலகம் செல்வது, தனியாகப் பயணம் செய்வது என்பதெல்லாம் முடியாத செயல்கள். அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் யாருடைய பராமரிப்பிலாவது வாழவேண்டும்.

 

இந்த குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் சிலர் மிகத் திறமைசாலியாக இருக்கிரார்கள். ஏதாவது ஒரு குறிப்பிட்ட துறையில் – அது கணக்குப் பாடமாகவோ அல்லது பியானோ வாசிப்பாகவோ, அல்லது கால்பந்து விளையாட்டின் ஸ்கோர்களை நினைவு வைத்துக் கொள்வதாகவோ இருக்கும். ஆயிரம் நபர்களில் ஒருவரோ, இருவரோ இந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

 

இந்த பாதிப்பின் அறிகுறிகள்

தனியாக இருத்தல்:

 

இயல்பாக குழந்தைகளுக்கு மற்றவர்களைப் பார்ப்பது, பிறர் பேசுவதைக் கேட்பது, அவர்களது முகத்தை, சிரிப்பை கவனிப்பது போன்ற எதையும் ஆட்டிஸம் பாதித்தக் குழந்தைகள் செய்ய மாட்டார்கள். ஒரு நொடி யாரையாவது பார்த்தால் அடுத்த நொடி தலையை திருப்பிக் கொண்டு விடுவார்கள். யாரைப் பார்த்தும் சிரிக்க மாட்டார்கள், தங்களுக்குப் பிடித்ததை பார்த்து மட்டும் சிரிப்பார்கள்.

தனிமை இந்தக் குழந்தைகளுக்குப் பிடித்த ஒன்று. நண்பர்கள் ஆகவோ, பிறரை நண்பர்கள் ஆக்கிக் கொள்ளவோ விரும்ப மாட்டார்கள். பெற்றோர்கள் ஆசையுடன் அணைத்துக் கொண்டால் கூட ஒன்றும் நடக்காதது போல இருப்பார்கள். பெற்றோர்களைப் பிடிக்காது என்பதல்ல, இதன் பொருள். தங்களது உணர்ச்சிகளைக் காட்டத் தெரிவதில்லை இவர்களுக்கு. அதேபோல பெற்றோர்களது உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ளா இயலாது இவர்களால். நாம் சிரிக்கும்போது இவர்கள் அழுவதும், நாம் அழும்போது இவர்கள் சிரிப்பதும் வழக்கமாக நடக்கும் ஒன்று.

 

பேசுதல்:

ஒரு வயது ஆனாலும் சில ஆட்டிஸ குழந்தைகள் பேசுவதற்கு முயற்சி செய்ய மாட்டார்கள். விரல்களினால் சுட்டிக் காட்டவோ, அல்லது ஏதோ ஒரு விஷயம் சொல்லவோ முயற்சிக்க மாட்டார்கள். சிலருக்கு அவர்களது மொழியே புரியாது. சிலர் பேசுவதும் இல்லை. இப்படி இருக்கும் குழந்தைகளை சிறு வயதிலேயே பயிற்சி கொடுத்து பேச வைக்கமுடியும்.

 

திரும்பத் திரும்ப ஒன்றையே செய்தல்:

 

ஒரே செயலையே திரும்பத்திரும்ப மணிக்கணக்கில் செய்து கொண்டிருப்பார்கள். வழக்கத்திற்கு மாறாக செயல்படுவார்கள். வட்ட வட்டமாக சுற்றிக் கொண்டிருப்பார்கள்; தங்களது கட்டைவிரலை வாயில் வைத்துக் கொள்வது, அல்லது எல்லாவற்றையும் ஒழுங்கு செய்வது என்று நேரம் போவது தெரியாமல் செய்வார்கள். தங்களது விளையாட்டு சாமான்களை ஒரு வரிசையில், அல்லது ஏதாவது ஒரு வடிவில் வைத்துக் கொண்டிருப்பார்கள். நடுவில் யாராவது வந்துவிட்டால் கோபம் தலைக்கேறும்.

 

எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்க தயாராக இருக்கமாட்டார்கள். குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவது, குறிப்பிட்ட வகைகளையே சாப்பிடுவது, ஆடை அணிவது, வெளியில் போவது எல்லாமே ஒரே மாதிரி இருக்க வேண்டும். தங்களுக்குப் பிடித்ததை கற்றுக்கொள்ள பலமணிநேரம் செலவழிப்பார்கள்.

 

முதன்முதலாக ஆட்டிஸம் என்ற சொல் 1943 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது. லியோ கனேர் என்பவர் 11 குழந்தைகளை ஆராய்ந்து அவர்கள் செய்யும் சில வழக்கமில்லாத செயல்களை கண்டுபிடித்தார். அவர் அந்த நிலையை Infantile Autism என்று பெயரிட்டார். அதே சமயம் இன்னொரு மருத்துவர் ஹான்ஸ் அச்பெர்கர் இன்னொரு ஆராய்ச்சி செய்தார். அவரது கண்டுபிடிப்பு இப்போது Asperger Sydrome என்று அழைக்கப்படுகிறது.

 

 • இந்தியாவில் சுமார் 10 மில்லியன் பேர்கள் இந்த குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 80% சிறுவர்கள்.
 • இது எதனால் ஏற்படுகிறது என்பது தெரியாததால், இதற்கு சிகிச்சையும் இல்லை என்பது வருத்தத்திற்கு உரிய விஷயம்.
 • ஜாதி, இனம். மதம் என்ற பாகுபாடு இல்லாமல் யாரை வேண்டுமானாலும் இது பாதிக்கும்.

 

பெற்றோர்கள் கவனத்திற்கு:

 

 • உங்கள் குழந்தைக்கு இந்தக் குறைபாடு இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால் உடனடியாக உதவியை நாடுங்கள். குழந்தை வளரட்டும் என்று பாதிப்பை கண்டறிவதில் காலதாமதம் செய்யாதீர்கள்.
 • ஆட்டிஸம் என்றால் என்ன, அது உங்கள் குழந்தையை எப்படி பாதித்திருக்கிறது என்று கண்டறிந்து குழந்தைக்கு உதவுங்கள்.
 • ஒவ்வொரு மாநில அரசும் இந்த குறைபாட்டிற்கான மையங்களை ஏற்படுத்தியுள்ளது. தேசீய அளவிலும் பல மையங்கள் இருக்கின்றன. ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால் இந்த மையங்களின் உதவியுடன் உங்கள் குழந்தைகள் கல்வி கற்பது, தங்கள் வேலையை தாங்களே செய்துகொள்வது போன்றவற்றில் பயிற்சி கொடுக்கலாம்.
 • அவர்களுக்கென்று கொடுக்கப்படும் கல்வியால் அவர்களுக்கான வாழ்க்கை வாய்ப்புகளும் தெரியவரும்.

மேலும் விவரங்களுக்கு : ஆட்டிஸம்

மேற்கண்ட இணைப்பில் உள்ள திரு பாலபாரதி அவர்களின் வலைத்தளத்தில் இந்தக் குறைபாடு பற்றிய பல விஷயங்களை அறியலாம். பெற்றோர்களுக்கு உதவ: ஆட்டிஸ நிலையாளர்களின் பெற்றோர் ஒன்று கூடல் அழைப்பிதழ் ஏப்ரல் 5, 2014