கணிதமும் நானும்!

என் மொழிப்புலமை போலவேதான் என் கணிதப் புலமையும்.

maths

எட்டாவது வகுப்பில் என் கணித ஆசிரியர் திருமதி லில்லி கான்ஸ்டன்டைன் அவர்கள் என்னை ஆச்சர்யத்துடன் கேட்ட கேள்வி இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது: ;ஏண்டி! உனக்கு கணக்குப் பாடம் வராதா?’

நான் ‘வராது டீச்சர்’ உண்மையை ஒப்புக் கொண்டேன். வராததை வராது என்ற ஒப்புக் கொள்ளும் குணம் நல்லது இல்லையா?

அன்றிலிருந்து அவர் என் வழிக்கு வருவதே இல்லை. மற்ற பாடங்களில் இருந்த மேதமை(!!) கணக்குப் புத்தகத்தை எடுத்தாலே மறைந்து கொண்டு கண்ணாமூச்சி விளையாடியது.

ஒரு நாள் என் ஆசிரியர் சொன்னார்: ’இத பாருடி! யாருகிட்டயாவது கணக்கு கத்துக்க. அண்ணா, அக்கா யாரும் இல்லையா, வீட்டிலே?’

அண்ணா தான் ஆங்கிலம், கணக்கு இரண்டும் சொல்லித் தருவான். அவனும் தன திறமைகளை எல்லாம் என்னிடத்தில் பயன்படுத்திப் பார்த்து வெறுத்துப் போய் விட்டான். ‘இந்த ஜென்மத்தில உனக்கும் கணக்குக்கும் ஸ்நானப் பிராப்தி இல்லை..!’ என்று சொல்லி என்னை மஞ்சள் தண்ணீர் தெளித்து விட்டு விட்டான்.

எப்படியோ சமாளித்து எஸ் எஸ் எல் சி வந்துவிட்டேன். ஆசிரியை ராஜி பாய்! ரொம்பவும் கண்டிப்பு. எனக்கு எப்படியாவது கணக்குப் பாடத்தை சொல்லிக் கொடுத்துவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார். தினமும் போராட்டம்தான் எனக்கும் (கணக்கு பாடத்திற்கும் இல்லை!) ராஜி பாய் டீச்சருக்கும் தான்!

அந்த காலத்தில் ஒன்பதாம் வகுப்பில் காம்போசிட் மேத்ஸ் அல்லது அரித்மேடிக்ஸ் இரண்டு வகைகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அண்ணா சொன்னான்:’காம்போசிட் மேத்ஸ் எடு. மதிப்பெண்கள் நிறைய வாங்கலாம். நான் சொல்லித் தருகிறேன்’.

‘ஐயையோ! வேண்டாம்’ என்று ஜகா வாங்கிவிட்டேன்.

‘1௦ ஆட்கள் சேர்ந்து 8 மணிநேரம் வேலை செய்தால் 6 நாட்களில் ஒரு வேலை முடியும். அதே வேலையை இரண்டே நாட்களில் முடிக்க எத்தனை ஆட்கள் எத்தனை மணிநேரம் வேலை செய்யவேண்டும்?’

‘ஒரு பெரிய நீர்த்தொட்டி. இரண்டு குழாய்கள் குறிப்பிட்ட வேகத்தில் நீரை நிரப்பும். ஒரு குழாய் குறிப்பிட்ட வேகத்தில் நீரை காலி செய்யும். எத்தனை மணி நேரத்தில் தொட்டி நிரம்பும்?’

தண்ணீர் நிரம்பவே நிரம்பாது என்பது என் வாதம். ஒரு குழாய் காலி செய்து கொண்டே இருக்கும் போது தொட்டி எப்படி நிரம்பும்?

இந்த சாதாரணக் கணக்குகளைப் போடவே தடுமாறும் நான் ஜியோமெட்ரி, அல்ஜீப்ரா (காப்ரா தான்!) என்று வாயில் நுழையாத பெயர்களில் கணக்குப் பாடம் என்றால் எங்கே போவேன்?

என் தலைமை ஆசிரியை திருமதி ஷாந்தா உட்பட எல்லா ஆசிரியர்களும் நான் எஸ் எஸ் எல் சி –யில் ‘கப்’ (அதாங்க, எங்க காலத்தில் பெயில் என்பதற்கு செல்லப் பெயர்) வாங்கிவிடுவேன் என்று உறுதியாக நம்பினார்கள்.

ஒரே ஒருத்தியைத் தவிர. நான் இல்லை அது!

எனது தோழி டி.ஏ. இந்திராதான் அந்த ஒரே ஒருத்தி.

அவள் ரொம்பவும் தீர்மானமாகச் சொன்னாள்: ‘இதோ பாருடி, இவர்கள் எல்லோரையும் தலை குனிய வைக்கிறாப் போல நீ எஸ் எஸ் எல் சி – பரீட்சையில கணக்குல அறுபது மார்க்ஸ் எடுத்து பாஸ் பண்ற, சரியா?’

‘வேண்டாம் இந்திரா, நான் மங்கம்மா இல்லை இது போல சபதம் போட…’

‘ஒண்ணும் பேசாதே…!’ என்று சொன்னவள் தினமும் பள்ளிக் கூடம் முடிந்ததும் எனக்கு கணக்கு சொல்லித் தர ஆரம்பித்தாள். என்னுடன் முட்டி மோதி என் தலையில் கணக்குப் பாடத்தை ஏற்றி…!

அவளுடைய அயராத முயற்சியினால் கணக்குப் பாடத்தில் நான் 61 மதிப்பெண்கள் பெற்று தேறினேன்! அந்தக் காலகட்டத்தில் 6௦ மதிப் பெண்கள் என்பது மிகவும் உயர்ந்த ஒன்று அதுவும் நான் வாங்கியது!

இப்போது நினைத்தாலும் எனக்கு மிகவும் ஆச்சரியம் தான்!

அவளுக்கென்ன என் மேல் இப்படி ஒரு அக்கறை? இன்று வரை விடையைத் தேடிக் கொண்டே இருக்கிறேன்.

என் கணவர் எத்தனை பெரிய எண்கள் கொடுத்தாலும் வாயினாலேயே கூட்டிச் சொல்லிவிடுவார்.

எனது மகளும், மகனும் என்னுடைய நேர் வாரிசு கணக்குப் பாட விஷயத்தில்.

என் பிள்ளைக்கு கல்யாணத்திற்கு பெண் தேடியபோது நான் போட்ட இரண்டே இரண்டு கண்டிஷன்கள் என்னென்ன தெரியுமா?

முதலாவது கணக்குப் பாடத்தில் வல்லவளாக இருக்க வேண்டும்.

இரண்டாவது அளக பாரம் (கூந்தல்) நிறைய இருக்க வேண்டும்.

நம் தலையெழுத்தை மாற்ற வேண்டுமே!

*********************************************************************************************************************

இன்று கணித மேதை ஸ்ரீனிவாச இராமானுஜன் அவர்களின் 125 வது பிறந்த நாள். அந்த மாமேதையின் பெயரைச் சொல்லவோ     அவரைப் பற்றிய பதிவு எழுதும்  தகுதியோ இல்லை எனக்கு.

என்னைபோல பலரும் கணக்குப் பாடம் என்றால் ஓடுகிறார்களே. கணக்குப் பாடத்தை எப்படி சுவாரஸ்யமாக சொல்லித் தரலாம் என்று யோசனைகள் சொல்லுங்களேன்.

என் தோழி திருமதி அனுஸ்ரீனியின் பதிவையும் படியுங்களேன்: கணிதத்தைப் பற்றிய அவரது எண்ணங்களும் என் எண்ணங்களும் எத்தனை ஒத்துப் போகின்றன பாருங்கள்!

இதோ இன்னுமொரு தோழி திருமதி மஹாலக்ஷ்மி விஜயன் அவர்களின் அனுபவம்

எனது இன்னொரு தோழி திருமதி விஜயா கணக்கு ஆசிரியை. அவரும் கணித மேதை ராமானுஜம் பற்றி எழுதி இருக்கிறார். அதையும் படியுங்கள், ப்ளீஸ்!

இரண்டாவது எண்ணத்தில் இப்போது: ஒரு கோப்பையிலே நம் வாழ்க்கை!