நிம்மதி சூழ்க!

 

நிம்மதி சூழ்க!

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க

சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க

நீரில் மிதந்திடும் கண்களும் காய்க

நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

 

ஜனனமும் பூமியில் புதியது இல்லை

மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை

இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை

இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

 

பாசம் உலாவிய கண்களும் எங்கே?

பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?

தேசம் அளாவிய கால்களும் எங்கே?

தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே?

 

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக

மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க

எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக

எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

 

பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை

இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை

நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை

மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை

 

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை

தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை

நதி மழை போன்றதே விதியென்று கண்டும்

மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன!

 

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்

மரணத்தினால் சில சாபங்கள் தீரும்

வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்

விதை ஒன்று வீழ்ந்திட செடி வந்து சேரும்

 

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்

யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்

நித்திரை போவது நியதி என்றாலும்

யாத்திரை என்பது தொடர் கதையாகும்

 

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்

சூரிய கீற்றோளி தோன்றிடும் போதும்

மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்

மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

 

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க்க!

தூயவர் கண்ணொளி சூரியர் சேர்க!

பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!

போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!

கவிஞர் வைரமுத்து 

 

மரணம் என்பது என்ன? 

ஒரு வயதுக் குழந்தைக்கு என்னென்ன சொல்லித் தரலாம்?

baby creeping

 

செல்வ களஞ்சியமே – 38

‘பூந்தளிர்’ என்ற வலைபதிவு எழுதிவரும் திருமதி தியானா தனது பதிவில் ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். ‘நான் வேலை செய்யும்போது யாராவது என்னைக் கண்காணித்தால் எனக்குப் பிடிக்காது; ஆனால் என் குழந்தை, தண்ணீர்  சிந்தியிருக்கிறது என்று சொன்னவுடன்  துணியை எடுத்துக் கொண்டுவந்து துடைப்பதைப் பார்த்த போது சந்தோஷமாக இருக்கிறது’ என்கிறார். இளம் குழந்தைகள் இருக்கும் அனைவருமே படிக்க வேண்டிய குழந்தைகள் பற்றிய பதிவுகளை எழுதுகிறார் இவர். குழந்தைகளின் கற்பனைத்திறனை எப்படியெல்லாம் அதிகப்படுத்தலாம் என்று பல விஷயங்களைச் சொல்லுகிறார்.

ஒரு நல்ல வலைப்பதிவை தெரிந்து கொண்ட சந்தோஷத்துடன் நம் செல்வ களஞ்சியத்தைப் பார்ப்போம்.

அம்மா செய்வதை குழந்தை அப்படியே காப்பி அடிக்கிறது. இந்த ஒரு விஷயம் மட்டுமல்ல; தாய்மொழியை குழந்தை கற்பது கூட இப்படி காப்பி அடித்துத்தான். அதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு சிறந்த உதாரணமாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

நல்ல விஷயங்களை மட்டுமல்ல, நம் தவறான செய்கைகளையும் குழந்தை காப்பி அடிக்கிறது.

எப்படி என்று அறிய இங்கே சொடுக்குங்கள்

வெள்ளெழுத்து என்றால் என்ன?

நோய்நாடி நோய்முதல் நாடி – 16

பல வருடங்களுக்கு முன் என் உறவினர் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வைத்திருந்தார். காலையில் செய்தித்தாள் வந்தது. சோபாவில் அவர் உட்கார்ந்திருந்தார். செய்தித்தாள் கிட்டத்தட்ட அவரது கைகள் எவ்வளவு நீளுமோ அத்தனை தூரத்தில் இருந்தது. ‘என்ன இவ்வளவு தூரம் வைத்துக் கொண்டு படிக்கிறீர்கள்?’

‘இல்லையே, சரியாத்தான் வைச்சுண்டு படிக்கிறேன்…!’

‘டாக்டர் கிட்டே போய் செக்கப் பண்ணிக்குங்க. வெள்ளெழுத்து வந்திருக்கும்’ என்றேன்.

‘சேச்சே! அதெல்லாம் இருக்காது. எனக்கு நன்றாக படிக்க முடியறதே!’

‘ஆனால் எவ்வளவு தூரத்தில் வைத்துப் படிக்கிறீர்கள், பாருங்கள்…’

அவர் தனக்கு கண் குறை இருக்கும் என்று ஒத்துக் கொள்ளத் தயாராகவே இல்லை. நம் ஊரில் இப்படித்தான். ‘எனக்கு எதுவும் வராது’ என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது.

யாருக்கும் எதுவும் வர வேண்டாம் என்றுதான் எல்லோருமே பிரார்த்திக்கிறோம். ஆனால் மனித உடம்பு தானே. அதுவும் வயதானால் சில கோளாறுகள் வரும். உடனடியாக கவனித்தால் ஆரம்பத்திலேயே குணப்படுத்தலாம்.

உடலுக்கு வயதாவதை தலையில் தோன்றும் நரை காண்பிப்பது போல கண்ணுக்கு வயதாவதை இந்த வெள்ளெழுத்து காட்டுகிறது.

 

இதன் அறிகுறிகள் என்ன? தொடர்ந்து படிக்க : நான்குபெண்கள்

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 15

சீனுவிடம் ஒரு மன்னிப்பு; ஒரு நன்றி!

செப்டம்பர் ஒன்றாம் தேதி கோயம்பேடுவில் உறவினரின் திருமணம். அன்றுதான் சென்னையில் பதிவர் சந்திப்பும். ரயிலிலேயே திருமதி ருக்மிணி சேஷசாயியை சந்தித்துப் பேசினேன்; பேசினோம்; பேசினோம்; பேசிக் கொண்டே இருக்கையில் சென்னை வந்தே விட்டது! இத்தனை சீக்கிரம் சென்னை வந்ததேயில்லை!

திருமணம் முடிந்து சந்திப்புக்குப் போகமுடியுமா என்று கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது. என் உறவினரிடம் (திரும்ப கல்யாண மண்டபத்திற்கே வருவதாக) சொல்லிவிட்டு கிளம்பும் போதே மதியம் ஒன்றரை மணி. ஆட்டோவில் ஏறி கமலா தியேட்டர் என்று சொல்லியதும் அவர் 120/-  என்றார். ஓ! பக்கம்தான் போலிருக்கு என்று நினைத்துக்கொண்டேன். கமலா  தியேட்டரின் எதிர்பக்கத்தில் வந்துவிட்டேன்.

அங்கிருந்து திரு சீனுவிற்கு தொலைபேசினேன். கொஞ்சம் முன்னால் வாருங்கள் என்றார். வந்தவுடன் பதிவர் திருவிழா பேனர் கண்ணில் பட்டது. ‘கொஞ்சம் முன்னால் போய் ‘U’ திருப்பம் திரும்புங்கள் என்றேன் ஆட்டோ டிரைவரிடம். அமர்க்களமாக இருந்த பேனர்களைப் பார்த்து டிரைவர் ‘என்ன விசேஷம்?’ என்றார். வாய்ப்பு கிடைத்தால் விடுவேனா? அந்த ஒரு ‘U’ திருப்பத்திற்குள் எவ்வளவு சொல்ல முடியுமோ சொல்லிவிட்டேன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு ‘ஓ! நீங்கள் எழுத்தாளரா?’ என்றார். ‘வலை…’ என்று ஆரம்பிப்பதற்குள் சீனு வாசலுக்கு வந்துவிட்டார். நானும் ஆட்டோவிலிருந்து இறங்கினேன். ‘சுத்தி வந்ததற்கு இன்னும் பத்து ரூவா போட்டுக் கொடுங்கள்’ என்றார் ஆ. டி. கொடுத்துவிட்டு உள்ளே போனேன்.

தம்பதி சமேதராக திரு வெங்கட் வரவேற்றார். திருமதி ஆதி, ரோஷ்ணி குட்டி ஆகியோருடன் பேசியவாறே உள்ளே வந்தேன். திரு ரூபக் ராம் வந்து ஒரு புன்னகையைத் தந்தார். திரு மின்னல் பால கணேஷ் தனது மின்னல் புன்னகையுடன் ‘வாங்கம்மா, சாப்பிட்டீங்களா?’ என்றார். திரு சித்தூர் முருகேசன் வந்து தனது புத்தகத்தைக் கொடுத்துவிட்டு சட்டென்று மறைந்துவிட்டார். திரு ஆர்.எஸ். சரவணன் வந்து ‘உள்ளே வாங்கம்மா’ என்று அரங்கினுள் அழைத்துப் போனார். வெளியிலேயே திரு இராமானுசம், திரு பழனி கந்தாசாமி ஆகியோர் உட்கார்ந்திருந்தனர். அவர்களிடம் குசலம் விசாரித்துவிட்டு, பேசிக் கொண்டிருக்கையில் திரு கோவை ஆவி வந்து ஒரு sweet ஸ்மைல் கொடுத்தார். திருமதி ராஜி (காணாமல் போன கனவுகள்) வந்து வரவேற்றார்.

அடுத்து சேட்டைக்காரன் வந்தார். அவருக்கு புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக் கூறினேன். திரு சங்கவி வந்து அறிமுகம் செய்து கொண்டார். எல்லோருடைய புத்தகங்களையும் வாங்கிக் கொண்டேன். திரு விஜயன் துரை வந்தார். இவரை போன பதிவர் சந்திப்பிலேயே பார்த்திருந்தேன். ‘என்ன விஜயன்! ரொம்பவும் இளைத்து விட்டீர்களே?’ என்றேன். கூட இருந்த பால கணேஷ் ‘நீங்க வேற! அவன் எப்பவும் இப்படித்தாம்மா’ என்றார். ச்சே! என்னைப் பார்த்து யாரும் இப்படிச் சொல்ல மாட்டார்களா? என்று நினைத்துக் கொண்டேன். என்னைப் பார்த்து வேறுவிதமாக சொல்வார்கள்! (அம்மா வந்தாங்கன்னாலே சபை நிறைஞ்சுடும்’)

திரு பாலகணேஷிடம் கேட்டேன்: ’சேட்டைக்காரருக்கு உடல்நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டேனே, இப்போது எப்படி இருக்கிறார்?’ என்று. ‘உண்மைதாம்மா, மனதாலும் உடலாலும் ரொம்பவும் நொந்து போயிருந்தார். அவருக்கு வேண்டிய அளவு ஆறுதல் சொல்லி எழுப்பி உட்கார வைத்திருக்கிறேன்’, என்றார். இப்படி ஒரு நண்பர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!

உள்ளே போனேன். கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்த திரு மயிலனை நலமா என்று விசாரித்தேன். அவருக்குப் பக்கத்தில் திருமதி அமுதா கிருஷ்ணா உட்கார்ந்திருந்தார். அவருடன் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். திருமதி ஆதி வெங்கட் வந்து பக்கத்தில் அமர்ந்தார். அவருடன் கொஞ்சம் அரட்டை. ரோஷ்ணி குட்டி, அம்மா, அப்பாவைக் கொண்டு நல்ல உயரம் – இப்பவே. ‘புகைப்படத்தில் பார்ப்பதைவிட உங்கள் கணவர் மிகவும் இளமையாக இருக்கிறார்’ என்றேன் ஆதியிடம். ‘நீங்களும் புகைப்படத்தில் பார்ப்பதைவிட வேறு மாதிரிதான் இருக்கிறீர்கள் என்றார் ஆதி.

திரு மோகனுக்கும் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துத் தெரிவித்தேன்.

நிகழ்ச்சிகள் தொடங்கின. திரு மயிலன் தன் கவிதையை வாசித்தார். வழக்கம்போல நல்ல வரவேற்பு அவரது கவிதைக்கு. கவிதையிலேயே குழந்தையின் வரவை எதிர்பார்த்திருப்பதையும் சொன்னார். சென்றமுறை தனது திருமணத்திற்கு அழைப்பு விடுத்தவர் ஆயிற்றே! திரு ஆர்.எஸ். சரவணன், திரு தேவாதிராஜன் தங்கள் கவிதைகளைப் படித்தனர்.

திரு ரமணி, திரு முரளிதரன், திரு கவியாழி  வந்து நலம் விசாரித்தார்கள். முரளிதரனுக்கு தன் காதல் கடிதத்திற்கு பரிசு வந்தது பற்றிய எல்லையில்லா சந்தோஷம். திரு மதுமதி ‘நல்லா இருக்கீங்களா?’ என்றார். அவரிடம் திருமதி வல்லி வந்திருக்கிறாரா என்று கேட்டேன். உடல்நலம் காரணமாக வரவில்லை என்றார். கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. திருமதி எழில், திருமதி சசிகலா, திருமதி அகிலா புகழ்  வந்து பேசினார்கள். பரவாயில்லை, இந்தமுறை நிறையபேர்கள் என்னைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று சந்தோஷமாக இருந்தது.

காலையிலேயே திருமதி ருக்மிணி வந்துவிட்டு காலில் ஏற்பட்டிருந்த வலி காரணமாக நான் வருவதற்குள் கிளம்பிப் போய்விட்டார்.

திரு மதுமதி அவர்கள் இயக்கத்தில் 90 டிகிரி குறும்படம் காண்பிக்கப்பட்டது. நடித்த சிறுமி நன்றாகவே தன் பாத்திரத்தை செய்திருந்த போதிலும் ஏழ்மை அந்தப் பெண்ணின் முகத்தில் தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும்.

புத்தக வெளியீடுகள் ஒவ்வொன்றாக நடந்தன. திரு சங்கவியிடம் மட்டுமே அவரது புத்தகத்தில் கையெழுத்து வாங்க முடிந்தது. திரு தனபாலன் வந்தார். என்னைப்பார்த்து, ‘அட! நீங்க வரலைன்னு’ நினைச்சேன்’ என்றார். ‘உங்கள் நிகழ்ச்சி எப்போது’ என்றேன். ‘கான்சல் ஆயிடுச்சு’ என்றார். திரு ஜோதிஜியுடன் கொஞ்சம் அதிக நேரம் பேச முடிந்தது. எனக்கும் திருமதி அமுதாவிற்கும் ஐஸ்க்ரீம் வாங்கி வந்தார். கிட்டத்தட்ட மில்க் ஷேக் போல இருந்தது. சென்னையின் வெயிலுக்கு ஐஸ்க்ரீம் அப்படித்தான் இருக்கும்! திரு ஜோதிஜி மூலம் பலாபட்டறை பாலா அவர்களின் அறிமுகம் கிடைத்தது. உண்மை தமிழன் அறிமுகம் ஆனார்.

கடைசி நிகழ்ச்சியாக திரு கோவை ஆவி பதிவர் சந்திப்பிற்காக தான் எழுதி இசையமைத்த பாடலை கோரஸ் உடன் பாடினார். அகிலா என் முகத்தைப் பார்த்துவிட்டு ‘டீ சாப்பிடுகிறீர்களா?’ என்று கேட்டுவிட்டு உடனே போய் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்.  தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி முடிவடைந்தது. சீனு வந்து என்னிடம் ‘ஒரு ஐந்து நிமிடங்கள் இருங்கள்’ என்றார். பட்டிக்காட்டான் வந்து அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரைப்பார்த்து ‘ஸ்கூல் பையனா?’ என்றேன். ‘இல்லையம்மா, பட்டிக்காட்டான்’ என்றார். ஸ்கூல் பையனைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி பார்த்து அவரது எழுத்துக்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தேன்.

சீனு அங்கிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு எதோ எழுதிக் கொண்டிருந்தார். என்னிடமும் ஒரு gift கூப்பனைக் கொடுத்து, ‘இங்கேயே புத்தகங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றார். ஐநூறு ரூபாய்க்கான கூப்பன். சற்று தூக்கிவாரிப் போட்டது. ‘வேண்டாம் சீனு! ரொம்பவும் அதிகம் என்றேன்’ ‘இல்லையம்மா, வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று வற்புறுத்திக் கொடுத்தார்.

திரு கி. ராஜநாராயணனின் கதைகள் (2), திரு ஜெயமோகன் (வெண்கடல்) திரு இரா. எட்வின் (அவனுக்கு அப்போது மனு என்று பெயர்) ஆகிய புத்தகங்களை வாங்கி, அதில் திரு சீனு கொடுத்த பரிசு என்றும் எழுதி வைத்துக் கொண்டேன். நன்றி சீனு!

திரு முரளிதரன், திருமதி சசிகலா, திருமதி ரேவதி சதீஷ் செல்லதுரை, கண்மணி சார்பில் திரு ராம் (சிவகாசிக்காரன்) ஆகியோர் என்னிடமிருந்து பரிசுக் கூப்பன்களைப் பெற்றுக் கொண்டார்கள். என்னை வியக்க வைத்தவர் திருமதி ரேவதி! எந்த வகுப்பில் படிக்கிறாய் என்று கேட்கலாம்! அப்படி ஒரு சின்ன உருவம்! உற்சாகமாகப் பேசினார்.

எல்லோரையும் பார்த்த சந்தோஷத்தில் மறுபடி ஆட்டோ! கல்யாண மண்டபத்திற்கு வந்தபோது ‘உங்களுக்காகத்தான் நலங்கிற்கு காத்திருக்கிறோம் என்றார்கள். உடலில் இருந்த அசதியையும் மீறி ஒரு உற்சாகம் மனதில் ஏற்பட்டது. எல்லா நிகழ்ச்சிகளிலும் பரிபூரணமாகக் கலந்து கொண்டு மகிழ்ந்தது இன்னும் பல காலத்திற்கு நினைவில் இருக்கும்.

இத்தனை தாமதமாக சீனுவிற்கு நன்றி கூறுவதற்கு அவரிடம் மன்னிப்பு!

பி.கு.: திரு சைபர் சிம்மன், திரு அகநாழிகை பொன். வாசுதேவன் அவர்களையும் சந்தித்தேன். இடுகையில் குறிப்பிட மறந்துவிட்டதற்கு மன்னிக்கவும்.

நான் மறந்தவர்கள் லிஸ்டில் திரு சுரேஷ் (தளிர்) உம் ஒருவர். நான் எழுதும் குழந்தை வளர்ப்பு பற்றிய பதிவுகளைப் படித்து உற்சாக பின்னூட்டம் போடுபவர் இவர்.

திரு தமிழ்வாசி பிரகாஷ், திரு ஆரூர் மூனா செந்தில் திரு தேவாதிராஜன் – இவர்களையும் குறிப்பிட மறந்துவிட்டேன். எல்லோரும் மன்னிக்கவும்.

அடுத்த வீட்டில் சாப்பிடும் குழந்தை

bathing baby

 

செல்வ களஞ்சியமே – 37

ஒவ்வொரு விளையாட்டிற்கும் உடம்பு படுத்தும் என்று நாம் சொல்வதை அப்படியே மறுக்கிறார் டாக்டர் ஸ்பாக். குழந்தை மெள்ள மெள்ள வளர்ந்து விளையாட்டுகள் அதிகமாகிறது; வீடு முழுவதும் சுற்றிச்சுற்றி வருகிறது. தொட்டுப் பார்த்தும், வாயால் கடித்துப் பார்த்தும் பொருள்களை அறிந்து கொள்ளுகிறது குழந்தை.

அதனால் குழந்தையின் கைகள் அழுக்காகின்றன. அப்படியே உணவுப் பொருட்களைத் தொடும்போது நோய் தொற்றுகள் குழந்தையின் வயிற்றினுள் போகின்றன. இந்தத் தொற்றுகளின் விளைவாகவே குழந்தைக்கு உடல்நலம் குன்றுகிறது என்கிறார் டாக்டர் ஸ்பாக்.

குழந்தை வளர வளர அதன் பழக்க வழக்கங்கள் மாறுகின்றன. தூங்கும் நேரம் குறைகிறது. உணவில் ருசிகள் மாறுகின்றன. அம்மாவின் பால், சீரியல் என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தை சாதம் பருப்பு என்று சாப்பிட ஆரம்பித்தவுடன், ‘அட! எத்தனை வகை வகையான உணவுகள் இவர்கள் (அம்மா, அப்பா) சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு மட்டும் அந்த உப்புசப்பில்லாத பால், சீரியலா?’ என்று நினைக்கிறது. காரசாராமாக வெங்காய சாம்பார், உருளைக்கிழங்கு பொடிமாஸ் என்று சாப்பிடும் அம்மா எனக்கு மட்டும் ஏன் வெறும் பருப்பு சாதம், காரமில்லாத ரசம், தயிர் சாதம் ஊட்டுகிறாள்? என்று நினைக்கிறது. விளையாடிக்கொண்டு இருக்கும் குழந்தையை ‘குளிக்க வா’ என்றால் விளையாட்டை விட்டுவிட்டு வர அது தயாரில்லை. இதைப் புரிந்து கொள்ளாமல் நாம் குழந்தை சாப்பிடப் படுத்துகிறது; குளிக்க படுத்துகிறது என்கிறோம். இது நியாயமா?

நம் வீட்டில் சாப்பிடப்படுத்தும் குழந்தை வேறு ஒருவர் வீட்டில் போய் நன்றாக சாப்பிடுகிறது. இது எப்படி என்று அம்மா வியக்கிறாள்.

மேலும் தெரிந்து கொள்ள: நான்குபெண்கள்

செல்வ களஞ்சியமே – 36

மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு நற்செய்தி

நம் நகரங்களில் ஓடும் பேருந்துகள், ரயில்கள் வயதானவர்களுக்கு எந்த விதத்திலும் சௌகரியமானதாக இல்லை. போனமுறை double decker ரயிலில் பெங்களூருக்கு வந்து சேர்வதற்குள் போறும் போறும் என்றாகிவிட்டது. இத்தனைக்கும் எனக்கு கிடைத்தது single seat. அதில் போடப்பட்டிருக்கும் கைப்பிடியை மேலே தூக்கவோ, மடக்கவோ முடியவில்லை. எப்படி இருக்கைக்குள் போவது? ஒவ்வொருமுறையும் வெளியே வருவதும், போவதும் மகா அவஸ்தை. எப்படியோ ஊருக்கு வந்து சேர்ந்தேன். அதேபோல கீழடுக்கு, மேலடுக்குகளுக்குப் போக அமைந்திருக்கும்  படிகளுக்கு இடையிலும் இமாலய உயரம். அன்று என்னுடன் பயணம் செய்தவர்கள் எல்லோருமே எனக்கு அக்கா, அண்ணா, மாமா, மாமி!

மாற்றுத்திறனாளிகள் எப்படி இதில் பிரயாணம் செய்யமுடியும் என்று ரொம்பவும் யோசனையாக இருந்தது.

போனவாரம் என் மன்னியிடமிருந்து (ஒன்று விட்ட சகோதரனின் மனைவி) ஒரு மின்மடல். கூடவே ஒரு காணொளி.

இவரது மகள் திருமதி சுஜாதா ஸ்ரீநிவாசன் – IIT- சென்னை (Mechanical faculty) தனது மாணவர்களுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்காக உருவாக்கியிருக்கும் swimming lift என்ற உபகரணத்தை பற்றி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘ஆயுதம் செய்வோம் – மாற்றுவழி அறிவியல்’ என்ற நிகழ்ச்சியில் விவரித்திருப்பது பற்றி எழுதி, அதன் காணொளியையும் அனுப்பியிருந்தார்.

மாற்றுத் திறனாளிகளை இந்த லிப்ட் பத்திரமாக நீச்சல் குளத்திற்குள் இறக்கி விடுகிறது. அவர்களது பயிற்சி முடிந்த பின் மறுபடி அவர்களை கரை சேர்க்கிறது. இதைப்பற்றி  மாற்றுத் திறனாளியான ஒரு பெண் – தேசிய அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றுவர் – கூறுவதையும் கீழே கொடுத்துள்ள இணைப்பில் பார்க்கலாம்.

இதுபற்றி திருமதி ஸ்ரீநிவாசன் கூறுகையில், ‘இந்த உபகரணத்தை மாற்றுத் திறனாளிகள் காரில் ஏறவும், படிக்கட்டுகளில் ஏறவும் பயன்படுத்தலாம் – சின்னச்சின்ன மாற்றங்களுக்குப் பிறகு’ என்று குறிப்பிட்டார்.

கீழே கொடுத்துள்ள இணைப்பில் இந்த swimming lift பற்றி மேலதிகத்தகவல்களை அறியலாம்.

மாற்றுத் திறனாளிகளைப் பற்றிய உனது அக்கறை எங்களை மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் கொள்ளச் செய்கிறது. உன் சாதனை மூலம் எங்களைப் பெருமைபடச் செய்துவிட்டாய், சுஜி! உன் சாதனைகள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்!

புதிய தலைமுறை – ஆயுதம் செய்வோம்

 

நாற்பது வயதில் வரும் கண் நோய்கள்

eyes

 

நாற்பது வயது என்பது நம் எல்லோர் வாழ்விலும் ஒரு மைல்கல் என்று சொல்லலாம். சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன், ஐம்பது வயது என்பது வாழ்க்கை முடியும் நிலை என்றிருந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை. இந்தக் காலத்தில் ஐம்பது வயதை நடு வயது என்கிறார்கள். மருத்துவத் துறையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள், தொழில்நுட்பத் துறை முன்னேற்றங்கள் பலவற்றிற்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

நாற்பது வயது வரை கண்ணாடி அணியாதவர்கள் இனி அணியத் தொடங்குவார்கள். இதை பொதுவாக நாம் வெள்ளெழுத்து அல்லது சாளேஸ்வரம் என்று சொல்லுவோம். இது தவிர வேறு சில குறைபாடுகள் இந்த நாற்பது வயதில் தொடங்கலாம்.

உலர் கண் (Dry Eyes)

  • இது பொதுவாக ஆண், பெண் இருபாலருக்கும் வரும்.
  • பெண்களுக்கு இந்த வயதில் வருவதற்குக் காரணம் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள். இறுதி மாதவிடாய் நெருங்கும் சமயத்தில் ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்ட்ரோன் அளவுகள் குறைவதால் இந்த உலர்தன்மை உண்டாகும்.
  • அதிக நேரம் கணனி முன் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கும் இது போல ஏற்படலாம். பொதுவாக நாம் ஒரு நிமிடத்திற்கு முப்பது முறை கண் சிமிட்டுவோம். கணனி முன் உட்காரும்போது இதில் பாதி அளவே கண் சிமிட்டுகிறோம்.
  • சாதாரண கண்ணாடி அணிபவர்களை விட, காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்களுக்கு இந்த உலர் தன்மை அதிகம் இருக்கும்.

 

என்ன செய்யலாம்?

கண் மருத்துவரிடம் போவதுதான் சிறந்த வழி. கண்ணில் போட்டுக் கொள்ளும் சொட்டு மருந்து (lubricating drops) கொடுப்பார். இதைக் காலையில் போட்டுக் கொண்டால் நாள் முழுவதும் கண்கள் உலர் தன்மை இல்லாமல் இருக்கும். மருத்துவரின் ஆலோசனைப்படி சொட்டு மருந்தை தவறாமல் பயன்படுத்தவும். கணனி பார்க்கும்போது முடிந்தவரை கண்களை அடிக்கடி சிமிட்டவும். 

 

மேலும் படிக்க:  நான்குபெண்கள்

நோய்நாடி நோய்முதல் நாடி – 14

கிணற்றுக்குள் சொம்பு!

well

என் மாமியார் ரொம்பவும் ஆசாரம் பார்ப்பவர். திருமணம் ஆன புதிதில் சமையலறைக்குள் செல்ல வேண்டுமென்றால் கையை அலம்பிக்கொண்டுதான் நுழைய வேண்டும். இது என்ன பெரிய இதுவா என்கிறீர்களா? சற்று பொறுங்கள், நான் இன்னும் மெயின் கதைக்கே வரவில்லையே!

சமையலறைக்கு வெளியே ஒரு சொம்பு இருக்கும். தங்கம், வெள்ளி, பித்தளை, மண் இவற்றால் ஆன சொம்பு அல்ல; சிமென்ட் சொம்பு! என் வாழ்க்கையில் அப்போதுதான் முதன்முதலாக சிமென்ட் சொம்பு பார்க்கிறேன். குளியலறைக்குள் போய் அந்த சொம்பில்  இருக்கும் நீரில் கையை அலம்ப வேண்டும்.

சரி, கையை அலம்பியாயிற்று; உள்ளே போய் ஏதாவது எடுக்கலாம் என்றால், ‘இரு, இரு…’ என்று என் மாமியாரின் குரல் ஒலிக்கும் – அவர் எங்கிருந்தாலும் நான் சமையலறைக்குள் நுழைவது அவருக்குத் தெரிந்துவிடும். இது என்ன மாய மந்திரம் என்று இதுவரை எனக்குப் புரிந்ததே இல்லை!

அடுத்தாற்போல சமையலறையில் இருக்கும் குழாயில் கையை அலம்ப வேண்டும். அந்தக் குழாயை –  விரல்களால் அல்ல – மேல் கைகளால் இரண்டு பக்கமும் பிடித்துக் கொண்டு –– திறந்து கையை அலம்ப வேண்டும்.

ஒரொரு சமயம் இப்படியாவது கையை அலம்பி அலம்பி சமையலறையிலிருந்து ஏதாவது எடுக்க வேண்டுமா என்று தோன்றும். உள் பாத்திரங்கள், வெளி பாத்திரங்கள் என்று இருக்கும். உள் பாத்திரங்களை வெளியே கொண்டு வரக் கூடாது. வெளியில் இருப்பது உள்ளே போகக் கூடாது.  வெளியே குடிக்கும் நீருக்கு தனியாக ஒரு பாத்திரம். அதில் நீர் காலியாகிவிட்டால், சமையலறைக்குள் போய் சொம்பில் (இது வேறு சொம்பு – பித்தளை சொம்பு!)  இருக்கும் கொதித்து ஆறின நீரை மேலே சொன்ன முறையில் கையை அலம்பிக் கொண்டு எடுத்து வந்து வெளியில் இருக்கும் பார்த்திரத்தில் ஊற்ற வேண்டும். பொதிகை தொலைக்காட்சியில் வரும் ‘அத்தே! நான் ஸ்கூலுக்குப் போய்விட்டு வரேன்’ விளம்பர மாமியார் போல என் மாமியாரும் என்னைப் பார்த்துக் கொண்டே இருப்பார்.

எனக்கு சவாலாக இருந்தது அந்த சிமென்ட் சொம்பு தான். (இப்போது கூட அவ்வப்போது கனவில் வந்து ‘ஹா…..ஹா…..!’ என்று வீரப்பா ஸ்டைலில் சிரிக்கும் அந்த சொம்பு) திருமணம் ஆன அடுத்த நாள் ‘வாசல் தெளித்து கோலம் போடு’ என்றார் என் மாமியார். ‘கிணற்றிலிருந்து தண்ணி சேந்திக்கோ..!’ இது உபரி கட்டளை. கிணறு, தண்ணி இந்த இரண்டு வார்த்தைகளை வைத்துக் கொண்டு சேந்திக்கோ என்றால் இறைப்பது என்று அர்த்தம் புரிந்து கொண்டேன். (I am always good at reading in between the lines….!)

நான் கேட்க மறந்தது எதால் சேந்திக் கொள்வது? நான் மரியாதையாக (திரு திரு) முழிப்பதைப் பார்த்து ‘அந்த சிமென்ட் சொம்பு இருக்கு பாரு, அதில் சேந்திகோ..!’ என்றார் என் மாமியார்.

‘எனக்குதான் கிணற்றில் நீர் சேந்த வருமே! ஸ்ரீரங்கத்தில் என் பாட்டி அகத்தில் கிணற்றில் நீர் ‘சேந்தி’ இருக்கிறேனே’ என்று மனதிற்குள் தன்னைபிக்கை ஊற்றுப் பெருக்கெடுக்க, சிமென்ட் சொம்பை தூக்கிக் கொண்டு கிணற்றை நோக்கி நடந்தேன். தாம்பக் கயிற்றில் சொம்பைக் கட்டி உள்ளே இறக்கினேன். மேலே இழுத்தால் கனமே இல்லை. சிமென்ட் சொம்பில் இத்துனூண்டு தண்ணீர்!

அசோக்நகரில் எங்கள் வீடு. MIG அடுக்குக் குடியிருப்பு. 2 பெட்ரூம் வீடு. வீட்டின் முன்னாலும் பின்னாலும் நிறைய இடம் இருக்கும். சிமென்ட் சொம்பில் வந்த நீரைப் பார்த்து எனக்கு கண்ணில் நீர்! இத்தனூண்டு இத்தனூண்டாக எத்தனை முறை நீர் சேந்தி வாசல் தெளிப்பது?

‘மொதல் தடவ சேந்தினத கீழ கொட்டிடு…!’ பின்னாலிருந்து கட்டளை. ‘ரெண்டாவது தடவ தண்ணி எடுத்து வாசல் தெளி…!’

‘ராத்திரில கிணற்றை பூதம் காவல் காக்கும். அதனால மொத தண்ணியை கொட்டிடணும்…!’ காரணம் புரிந்தது.

‘இத்துனூண்டு தண்ணி தான் வரது…’ தைரியத்தை வரவழைத்து கொண்டு கேட்டேன். ‘இன்னொரு தடவ தண்ணி எடுத்துண்டு வா…!’

‘எத்தன தடவ?’

என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, ‘சரி பெரிய பக்கெட் எடுத்துக்கோ!’ ஒரு வழியாக பெரிய பக்கெட்டில் நீர் எடுத்து வாசல் தெளித்து எனக்கு தெரிந்த ‘மாடர்ன் ஆர்ட்’ கோலத்தைப் போட்டு முடித்தேன்.

‘புள்ளிக் கோலம் வராதா?’

‘வராது…’

அரிச்சந்திரனின் தங்கை நான்!

ஒரு நாள் காலை எழுந்திருக்கும்போதே தூக்கமான தூக்கம். முதல் நாள் இரவு இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு வந்ததன் விளைவு.

‘ஆவ்வ்வ்….!’ என்று கொட்டவி விட்டுக் கொண்டே சிமென்ட் சொம்பை கயிற்றில் கட்டி கிணற்றுக்குள் இறக்கினேன். மேலே இழுத்தால் சிமென்ட் சொம்பு காணோம்! அய்யய்யோ!

சட்டென்று தூக்கம் கலைந்து, கயிற்றைப் பார்த்தால் சொம்பின் கழுத்து மட்டும் கயிற்றில்!  தூக்குப்போட்டுக் கொண்டு விட்டதோ? சொம்பு கிணற்று சுவற்றில் பட்டு உடைந்து விட்டது. தூக்கக்கலக்கத்தில் எனக்கு இது உறைக்கவே இல்லை!

மாமனார் வேறு ரொம்ப கோபக்காரர். என்ன செய்வது? கயிற்றை மறுபடி கிணற்றில் இறக்கிவிட்டு – சொம்பின் கழுத்துடன் தான் – ஆபத் பாந்தவா, அனாத ரக்ஷகா என்று கணவரிடம் ஓடி – இல்லையில்லை – நடந்து தான் – போய் சொன்னேன்.

ஒரு நிமிடம் யோசித்தார். பிறகு சொன்னார்: ‘ அந்தக் (சொம்பின்) கழுத்தையும் கிணற்றில் போட்டுவிடு. அம்மாவிடம் சொம்பு கிணற்றுக்குள் விழுந்துடுத்து அப்படின்னு சொல்லிடு’ என்றார்.

மாமியாரிடம் போய் சொன்னேன் ‘சொம்பு கிணத்துக்குள் விழுந்துடுத்து!’ நான் சொன்னது மாமனாரின் காதிலும் விழுந்துவிட்டது.

மாமனார் ஏதோ கோவமாக சொல்ல ஆரம்பித்தார். மாமியார் சொன்னார் : ‘புது பொண்ணு; விடுங்கோ!’

அப்பாடி பெரிய ரிலீப். மாமனார் மாமியார் கோவிச்சுக்கலை என்பதற்காக இல்லை.

NO MORE சிமென்ட் சொம்பு!

பாவம் அந்த சொம்பு. நான் கரித்து கொட்டியதிலேயே தற்கொலை பண்ணிண்டுடுத்தோ?

well 1

பல் முளைக்கும் பருவம்

babay with incissor

 

 

 

 

செல்வ களஞ்சியமே – 36

பொதுவாக குழந்தைக்கு முதலில் வருவது இரண்டு கீழ் நடு பற்கள். இவை ‘வெட்டுப் பற்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. மேலும் கீழுமாக மொத்தம் 8 கூர்மையான பற்கள்  இருக்கும். சில குழந்தைகளுக்கு முதலில் மேல் பற்கள் முதலில் வரும். சில குழந்தைகளுக்கு மேலே நான்கு பற்களும், கீழே இரண்டு பற்களும் வரும். எப்படி இருந்தாலும் இதுவரை இருந்த ‘பொக்கை வாய்’ சிரிப்பு மறைந்து குட்டி குட்டி பற்களுடன் கூடிய சிரிப்பு நம்மை மயக்கும். பொக்கை வாயாக இருக்கும்போதும் அழகு. இப்போது இரண்டே இரண்டு பற்களைக் காட்டிச் சிரிக்கும்போதும் அழகு. அதுதான் குழந்தை!

 

ஒரு வயது குழந்தைக்கு கீழே இரண்டு பற்களும், மேலே நான்கு பற்களும் இருக்கும். இதற்குப் பிறகு பல மாதங்களுக்கு பற்கள் வராது. கீழே மேலும் இரண்டு பற்கள் தோன்றும். இதற்கு அடுத்தபடியாக நான்கு கடைவாய்ப் பற்கள் வரும். அவை இந்த வெட்டுப் பற்களின் அருகில் வராது. ஈறுகளின் கடைசியில் தோன்றும். நடுவில் வரப்போகும் கோரைப் பற்களுக்கான இடைவெளி இது.

 

மொத்தப் பற்களும் வர இரண்டு வயதாகலாம். மூன்று வயதில் இன்னும் இரண்டு கடைவாய் பற்கள் வரும். கடைவாய் பற்கள் வரும் சமயத்தில் சில குழந்தைகளுக்கு உடம்பு படுத்தும். இரவில் எழுந்து அழும். பசி இல்லாமல் போகலாம். மறுபடி தூங்குவதற்கு நேரம் ஆகலாம். குழந்தைக்கு பால் கொடுப்பது, அல்லது அதற்கு விளையாட்டு காட்டுவது போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். இல்லையேல் இது ஒரு புதிய பழக்கமாக உருவாகக் கூடும்.

தொடர்ந்து படிக்க : நான்குபெண்கள்

 

செல்வ களஞ்சியமே – 35