நிறமறியா நோய்!

color chart

 

நோய்நாடி நோய்முதல் நாடி 12

ஒரு முறை என் உறவினருடன் இங்குள்ள ஆயுர்வேத கண் மருத்துவ மனைக்குச் சென்றிருந்தேன். ஒவ்வொரு சோதனையாக செய்துகொண்டு வந்த மருத்துவர் ஒரு அட்டையை அவரிடம் கொடுத்தார். அதில் பல நிறங்கள் கொண்ட ஒரு வட்டம் இருந்தது. ஒவ்வொரு நிறமாக பெயர் சொல்லச் சொன்னார் மருத்துவர். ரொம்பவும் யோசித்து யோசித்து சொன்னார். சில நிறங்களை அவரால் சரியாக சொல்லவும் முடியவில்லை. அதுவும் சிவப்பு, பச்சை ஆகியவற்றின் வேறு வேறு நிற மாற்றங்களை சொல்ல தெரியவில்லை. எனக்கு ரொம்பவும் வியப்பு. ரொம்பவும் தெளிவாக நிறங்கள் தெரிகின்றனவே என்று.

பெண்கள் நிறங்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துச்  சொல்வதில் ரொம்பவும் சமர்த்து. வெளிர் பச்சை, கறுத்த பச்சை, ஆலிவ் பச்சை, மருதாணி பச்சை, கிளி பச்சை, ராமர் பச்சை – (இதிலேயே நீலம் அதிகமிருந்தால் அது ராமர் நீலம்!) மயில் கழுத்துப் பச்சை/ நீலம், ஆர்மி பச்சை என்பதெல்லாம் பெண்களுக்கே உண்டான நிறங்களை பிரித்துச் சொல்லும் திறமையை காண்பிக்கும் சொற்கள்.

ஒரு சில நிறங்களைப் பிரித்துப் அறிய முடியாததால் இக்குறை இருப்பவர்களை நிறக்குருடு என்று சொல்வது அத்தனை சரியில்லை. இதற்காக இப்போது பயன்படுத்தப்படும் ஒரு சொல் Color Visiion Deficiency எனப்படும் CVD. நிறக்குருடு என்றால் இவர்களால் நிறங்களையே பார்க்க முடியாது என்ற  பொருளைக் கொடுக்கும். சில சில நிறங்களின் பல்வேறு வகைகளை இனம் பிரித்துக் காண முடியாது என்பதுதான் இவர்களின் குறைபாடு. இதனால் இவர்களின் பார்வையில் எந்தக் குறைபாடும் இருக்காது. இந்த CVD பரம்பரையாக வருவது. 99% நபர்களுக்கு சிவப்பு, பச்சை நிறங்களின் வேறு வேறு வகைகளை கண்டறிவதில் சிக்கல் இருக்கும். அதேபோல நீலம், மஞ்சள் கலர்களைக் கண்டறிவதிலும் சிலருக்கு சிரமம் இருக்கும். ஆனால் இந்த வகைக் குறைபாடு மிக மிக அரிது. இந்த வகைக் குறைபாடுகளைக் கண்டறிய சோதனைகள் எதுவுமில்லை.

இந்தக் குறைபாட்டிற்குக் காரணம் என்ன?

தொடர்ந்து படிக்க 

ஒரு இல்லத்தரசியின் பார்வையில் : டாலர் நகரம்

Doller nagaram2

ரயில் பிரயாணத்தில் படிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தடங்கலில்லாமல் நேரம் கிடைக்கும். நடுநடுவில் எழுந்து போய் வீட்டுவேலை செய்ய வேண்டாம். சமையல் வேலை இருக்காது என்பது கூடுதல் மகிழ்ச்சி. இந்த மாதிரி பயணங்களில் படிப்பதற்கென்றே சில புத்தகங்களை தனியாக எடுத்து வைப்பேன்.

இந்தமுறை எனக்கு படிக்கக் கிடைத்த புத்தகம்: டாலர் நகரம். பதிவர்களுக்கு மிகவும் பழக்கமான,தான் நினைத்ததை பட்டவர்த்தனமாகச் சொல்லும் திருப்பூர் தேவியர் இல்லம் என்ற தளத்தின் சொந்தக்காரர் திரு ஜோதிஜியின் புத்தகம். இவரது பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் எனக்கு இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஒரு உந்துதல் இருந்து கொண்டே இருந்தது.

திருப்பூர் நகரத்தின் பெயரைத் தவிர எனக்கு அந்த ஊரைப் பற்றி  தெரிந்த ஒரு விஷயம் அங்கு உள்ளாடைகள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டாவது விஷயம் திருப்பூர் குமரன். இந்த நகரத்திற்கு டாலர் நகரம் என்ற பெயர் என்பதும் எனக்கு இந்தப் புத்தகத்தைப் படித்த பின்பே தெரிய வந்தது. இதனால் இந்தப் புத்தகத்தைப் பற்றிய எந்தவிதமான முன்கூட்டிய எண்ணங்கள், எதிர்பார்ப்புகள்  இல்லாமல் படிக்க ஆரம்பித்தேன்.

நிட் சிட்டி, டாலர் சிட்டி, பின்னலாடை நகர், பனியன் நகரம் என்ற பலபெயர்கள் கொண்ட திருப்பூருக்கு நாலுமுழ வேஷ்டி அணிந்து  ஒரு கையில் துணிக்கடை மஞ்சள் பையுடன் வரும்  ஜோதிஜி நம்மையும் இன்னொரு கையால் பிடித்து இந்தப் புத்தகத்தினுள் – இல்லை டாலர் நகரத்தினுள் அழைத்துக் கொண்டு செல்லுகிறார்.

ஒன்றுமே தெரியாமல், கிடைத்த முதல் வேலையில் சேர்ந்து, தொடர்ந்து பல வேலைகளுக்கு மாறி ஒவ்வொரு வேலையிலும்  தனக்கு ஏற்பட்ட பலவிதமான அனுபவங்களையும் அதில் தான் பட்ட வலிகளையும், தோல்விகளையும் எழுதும் ஆசிரியர், பலமுறை ‘நான் தோற்றுக் கொண்டே இருந்தேன்’ என்று குறிப்பிட்டாலும், அந்தத் தோல்விகளிலும், வலிகளிலும் இருந்து பல பாடங்களைக் கற்று, தனது வாழ்க்கை குறிக்கோளை அடைய மேற்கொண்ட தனது பயணத்தின் கூடவே  இந்த நகரத்தின் வளர்ச்சியையும், இதனை நம்பி வரும் மக்களின் மனநிலையும்  கூறுகிறார்.

எல்லாத் தொழில் நகரங்களுக்கும் உண்டான சாபக்கேடுகள் இங்கேயும் இருக்கின்றன. உழைப்புக்கேற்ற கூலி கிடைக்காமல் போவது, நம்பிக்கை துரோகம், ஆணும் பெண்ணும் சேர்ந்து தொழில் செய்யும்போது ஏற்படும் பாலியல் வரம்பு மீறல்கள், தங்களுக்குத் தெரிந்த கொஞ்ச நஞ்ச ஆங்கில அறிவை வைத்துக் கொண்டு முதலாளிகளை சுரண்டும் இடைத் தரகர்கள்  என்று ஜோதிஜியின் எழுத்துக்கள் மூலம் திருப்பூரின் இன்னொரு முகத்தைப் பார்க்கிறோம். ஒரு நகரத்தின் வாழ்வு தாழ்வு, அங்கு வாழும் மனிதர்களின் மனநிலையைப் பொறுத்து அமையும். திருப்பூரும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்த நகரம் நம்மைக் காப்பாற்றும் என்று நம்பிகையுடன் வருபவர்கள், தங்களை இங்கு நிலை நிறுத்திக் கொள்ள எடுக்கும் முடிவுகள், அவற்றின்  விளைவாக அவர்கள் வாழ்வில் ஏற்படும் அல்லல்கள் என்று அடுக்கடுக்காக நிகழ்வுகளின் பிடியில் நம்மை சிக்க வைக்கிறார் ஆசிரியர். பின்னலாடைத் தொழிலாளர்களின் – உழைப்பு, உழைப்பு, இன்னும் கடின உழைப்பு என்பதை மட்டுமே அறிந்த அவர்களின் – வாழ்க்கைப்பயணம்  இந்த நகரத்தின் வளர்ச்சியுடன் எப்படிப் பின்னிப் பிணைந்து கிடக்கிறது என்று வாசிக்கும்போது அதிர்ச்சி, வியப்பு, சோகம் என்று மனதில் பலவிதமான உணர்வுகள். சிலர் மட்டுமே இந்தப் பின்னலிலிருந்து வெளிவந்து முன்னேறுகிறார்கள். சிலர் இந்த மாயவலையில் காணாமலேயே போகிறார்கள்.

தன்னுடன் படித்த, தமிழில் கூட ததிங்கிணத்தோம் போட்ட ஆறுமுகம் இன்று ஒரு நிறுவன முதலாளியாக இருப்பதையும், வகுப்பில் முதல் மதிப்பெண்கள் எடுத்த இருவர் வாழ்க்கை பயணத்தில் பின்தங்கி இருப்பதையும் குறிப்பிட்டு  அனுபவக் கல்வியில் தேர்ந்தவர்களுக்கே வாழ்க்கை என்னும் பாடத்தை கற்றதாக கூறுகிறார். இது படிக்கும் அத்தனை பேருக்கும் பாடம் தான்.

‘திருப்பூரில் வருடா வருடம் எகிறிக் கொண்டிருக்கும் மில்லியன், பில்லியன் அந்நியச்செலாவணி வரைபட குறியீடு அத்தனையுமே பலருக்கும் அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் மட்டுமே தந்த வெற்றியாகும். திருப்பூரில் எல்லோருமே மெத்தப் படித்தவர்கள் அல்ல. எந்த நிர்வாக மேலாண்மைக் கல்லூரிகளிலும் படித்தவர்களும் அல்ல. தொடர்ச்சியான உழைப்பு. சாத்தியமான திட்டங்கள். உறக்கம் மறந்த செயற்பாடுகள், தொழிலுக்காகவே தங்களை அர்பணித்த வாழ்க்கை.’

அனுபவக் கல்வியில் செல்வந்தர் ஆனபின் பணம் தந்த மிதப்பில் தான் செய்த தவறுகளுக்காக அதே ஆறுமுகம் இப்போது கோர்ட்டுக்கும், காவல் நிலையத்திற்கும் நடையாய் நடந்து கொண்டிருப்பதையும் ‘டாலர் நகர’த்தில் படிக்கலாம். இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்கள் எல்லோரும் ‘கருணா என்னும் கூலி’ என்ற  அத்தியாயத்தைப் கட்டாயம் படிக்க வேண்டும். ஆறுமுகங்கள் மட்டுமில்லை திருப்பூரில், கருணாகரன்களும் உண்டு என்று புரியும்.

மனத்தை கசக்கும் ஒரு அத்தியாயம் : காமம் கடத்த ஆட்கள் தேவை.

ஆர்வத்துடன் படித்த அத்தியாயம்:ஆங்கிலக்கல்வியும் அரைலூசு பெற்றோர்களும். என் தொழில் சம்மந்தப்பட்ட விஷயமாயிற்றே!

‘நூல் என்பது ஆடையாக மாறுவதற்குள் எத்தனை துறைகள்? ஒவ்வொன்றும் ஒரு உலகம். ஒவ்வொரு துறைக்குள்ளும் நூற்றுக்கணக்கான துறைகள். தினந்தோறும் ஆயிரம் ரூபாய் முதலீட்டை வைத்துக் கொண்டு முயற்சிப்பவர்கள் முதல், கோடிகளை வைத்துக் கொண்டு துரத்தும் நபர்கள் வரைக்கும் இந்தத் தொழிலில் உண்டு’ (அத்தியாயம் – நம்பி கை வை)

அத்தனை துறைகளையும் பல நுணக்கமான விஷயங்களை இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார் ஆசிரியர். ‘விதவிதமான பல வண்ண ஆடைகளின் வடிவமைப்பில் துணியாக உருமாறும் நேரமென்பது ஏறக்குறைய ஒரு குழந்தையின் பிரசவத்தைக் காண்பது போலவே இருக்கும்’. நமக்கும் இந்த அனுபவம் ஏற்படுகிறது என்றால் அது ஜோதிஜியின் எழுத்துக்களின் வீரியம் தான்.

ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் குழந்தைகளும் கூட இந்த டாலர் நகரத்தை நம்பி வருகிறார்கள். குடும்பம் முழுவதற்கும் இங்கு வேலை கிடைக்கும். ஆனால் வாழ்க்கை?

வருகின்ற அரசுகளும் தங்கள் சுய லாபத்திற்காகவே இந்த நகரைப் பயன்படுத்திக் கொண்டு,உழைக்கும் மனிதர்களுக்கு ஒன்றும் செய்து கொடுக்காமல் சும்மா இருப்பதையும் சாடுகிறார் ஆசிரியர். ‘கடந்த இரண்டு வருடங்களாக திருப்பூரில் மூடுவிழா நடத்திக் கொண்டிருக்கும் சிறிய ஏற்றுமதி நிறுவனங்களிடம் ‘உங்களுக்கு என்னப்பா பிரச்சனை?’ என்று தமிழ் நாட்டில் வந்து கேட்ட அமைச்சர் எவரெவர்? ஆட்சிகள் மாறியது. ஆனால் காட்சிகள் எதுவுமே மாறவில்லை.

‘திருப்பூருக்குள்  இரண்டு உலகம் உண்டு ஒன்று உள்நாட்டு தயாரிப்புகளான ஜட்டி,பனியன்கள். இன்னோன்று ஏற்றுமதி சார்ந்த ஆடை ரகங்கள். இரண்டுக்குமே நூல் என்பது முக்கிய மூலப் பொருள். அரசாங்கத்தின் பல கொள்கைகள் பல்லாயிரக்கணக்கான பஞ்சாலைகளை மூட வைத்தன’.

‘இலவச செல்போன் கொடுக்கத் திட்டம் தீட்டும் மத்திய அரசாங்கம் உழைக்கத் தயாரா இருக்கின்றோம் என்று சொல்லும் திருப்பூருக்கு எதிர்காலத்தில் என்ன திட்டம் தீட்டி இந்த ஊர் மக்களைக் காப்பாற்றப் போகிறார்களோ?’

இந்தக் கேள்வியுடன் புத்தகத்தை முடித்திருக்கிறார் ஜோதிஜி.

திருப்பூர் பற்றி எதுவுமே தெரியாத எனக்கு இந்தப் புத்தகம் பல விஷயங்களை உணர்த்தியிருக்கிறது. நான் உடுத்தும் ஒவ்வொரு ஆடையின் பின்னாலும் ஒரு தொழிலாளியின் இரவு பகல் பாராத கடின உழைப்பு இருக்கிறது. அந்த உழைப்பை நம்பி தனது ஊரை விட்டு வரும் அவரையும், அவரை சார்ந்த  மனிதர்களையும், அவர்களின் வாழ்க்கையையும் பரிவோடு  நினைக்க வைக்கிறது இந்தப் புத்தகம்.

இந்த முகம் தெரியாத மனிதர்களுக்காக ‘இவர்களுக்கு ஒரு விடியல் சீக்கிரம் வரட்டும்’ என்று இறைவனிடம் பிரார்த்திப்பதை தவிர எனக்கு வேறொன்றும் செய்யத் தெரியவில்லை.

இனி புடவைக் கடையில் போய் இந்தப் புடவை நன்றாக இல்லை என்று சொல்வேனா?

இந்தப் புத்தகத்தில் குறைகள் இல்லையா? புத்தகமே திருப்பூர் என்ற டாலர் நகரத்தின் குறைகளையும் நிறைகளையும் சொன்னாலும், குறைகளே மிகுந்திருப்பது போல ஒரு தோற்றத்தை நம்முள் ஏற்படுத்துகிறது. நான் வேறு என்ன குறை சொல்ல முடியும்?

அட்டவணை போட்டிருக்கலாம். புத்தகத்தைப் பற்றிய என் எண்ணங்களை எழுதத் தொடங்கிய போதுதான் இந்தக் குறையை உணர்ந்தேன்.

இதைத் தவிர்த்துப் பார்த்தால், திரு ஜோதிஜி நிச்சயம் ஒரு வரலாறு படைத்திருக்கிறார். திருப்பூர் தொழிலாளிகளின் உழைப்பை விட இந்தப் புத்தகம் எழுத கடினமாக உழைத்திருக்கும் அவருக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்.

நான் இதுவரை புத்தக விமரிசனம் எழுதியதில்லை. முக்கியமாக திரு ஜோதிஜி அவர்களின் எழுத்துக்களை விமரிசிக்கும் தகுதி எனக்கில்லை. இந்தப் புத்தகத்தைப் படித்து என் மனதில் ஏற்பட்ட தாக்கங்களை இங்கு எழுதியிருக்கிறேன். இவை என் எண்ணங்கள் அவ்வளவுதான்.

ஜோதிஜியின் வலைத்தளம்

புத்தகம் வாங்க கீழ்கண்ட வங்கி முகவரிக்கு ரூபாய் 190/- அனுப்பவும்.

வங்கி விபரம்  

SRM JOTHI GANESAN
KOTAK MAHINDRA BANK
TIRUPUR
ACCOUNT (S/B) NO. 0 4 9 1 0 1 1 0 0 1 2 7 6 4
IFC CODE NO.     KKBK0000492   

 

Dollar_Nagaram

குழந்தைகளை எப்படி சாப்பிட வைப்பது?

 

 

செல்வ களஞ்சியமே – 33

 

குழந்தை தானாகவே சாப்பிட ஆரம்பிக்கும்போது மேலே கீழே போட்டுக் கொள்ளும். சில அம்மாக்கள் இதெல்லாம் யார் சுத்தம் செய்வது என்று அவர்களாகவே ஊட்டி விட்டு பழக்கப்படுத்தி விடுவார்கள். குழந்தை தன் கையால் எடுத்து சாப்பிடுவது தான் நல்ல பழக்கம். குழந்தை கொஞ்சம் வளர்ந்தவுடன் கீழே சிந்தாமல் சாப்பிடக் கற்றுக் கொடுக்கலாம். அந்தக் காலத்தில் குழந்தைககென்றே பொரி வாங்கி வைத்திருப்பார்கள். தரையிலேயே போட்டு விடுவார்கள். தவழ்ந்து வரும் குழந்தை இதையெல்லாம் பொறுக்கித் தின்னும். இப்போதெல்லாம் இந்த வழக்கம் இல்லை. ஆனால் சிறிது சாதத்தை அல்லது இட்லியை உதிர்த்து ஒரு தட்டில் போட்டுக் கொடுக்கலாம். அப்பளம் சுட்டது அல்லது பொரித்தது இரண்டுமே வேண்டாம். சாதம், இட்லி, பொரி போல அப்பளம் குழந்தையின் வாயில் கரையாது. அதனால் தொண்டையில் போய் மாட்டிக் கொள்ளும்.

 

இன்னோரு விஷயம்: சில குழந்தைகள் வெகு விரைவில் அவர்களாகவே சாப்பிடக் கற்றுக் கொண்டுவிடுவார்கள். சில குழந்தைகள் பல மாதங்கள் எடுத்துக் கொள்வார்கள். தாய்மார்கள் பொறுமை காக்க வேண்டும்.

 

குழந்தைக்கு திட ஆகாரம் காலை ஒருவேளை நன்றாகப் பழகிய பின் சாயங்காலம் இன்னொரு வேளை கொடுக்க ஆரம்பிக்கலாம். முதலில் சிறிய அளவில் ஆரம்பியுங்கள். அது குழந்தைக்கு நன்றாகப் பழகியபின் மாலை இன்னொரு முறை கொடுக்கப் பழக்கலாம்.

 

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள் 

 

செல்வ களஞ்சியமே – 32

கண்கள் எப்படி வேலை செய்கின்றன?

blue eyes

 

 

 

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 11

மனிதக் கண்கள் எப்படி வேலை செய்கிறதோ அதே போலவே காமிராவும் வேலை செய்கிறது. நாம் பார்ப்பது நம் கண்களின் வழியே ஒரு செய்தியாக நமது மூளைக்குச் (ஆகிஸிபிடல் கார்டெக்ஸ் பகுதி) செல்லுகிறது. அங்கு அந்த செய்தி மூளையினால் – நீள, அகலங்கள், குறுக்கு, நெடுக்குத் தோற்றங்கள், வண்ணங்கள் என்று எல்லாம் – அலசப்பட்டு நாம் பார்க்கும் பொருளை நம்மால் அறியமுடிகிறது. பொருளை அறிவதோடு மட்டுமல்ல; அது அசைகிறதா? சின்னதா? பெரியதா? நாலு கால்களா, இரண்டு கால்களா, என்று சகலத்தையும் நமது கண்கள் மூலம் நமது மூளை அறிந்து இந்த விளக்கங்களையும் அந்தப் பொருளின் வடிவத்துடன் ஒரு இடத்தில் சேர்த்து வைக்கிறது. அதே பொருளை மறுபடி பார்க்கும்போது – அட! இது எதிர் வீட்டு நாய்! – என்று நம் மூளை சொல்லுகிறது. நமது பொது அறிவுத் திறன் 80% நமது கண்களின் மூலமே வளர்கிறது.

 

camera

 

நமது கண்களுக்கும் காமிராவிற்கும் இருக்கும் ஒற்றுமைகள் வேற்றுமைகள் இரண்டுமே நம்மை அசத்தும்.

நமது கண்கள், காமிரா இரண்டிலும் லென்ஸ் இருக்கிறது. இரண்டு லென்ஸ்களுமே ஒரே மாதிரியான குவி லென்ஸ். பூதக் கண்ணாடியில் இருக்கும் ஒருங்கிணைப்பு லென்ஸ் போன்ற அமைப்பு கொண்டது.

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள்

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 10

 

 

ஆஹா…. முடிவு வந்தாச்சு!

 

 

crackers

 

 

 

 

 

                                b'day gift

 

 

காதல் கடிதம் போட்டி முடிவுகள்

வெற்றிகரமாக மற்ற நடுவர்களுடன், ‘கனம்’ நீதிபதியாக இருந்து காதல் கடிதங்களைப் படித்து முடிவையும் வெளியிட்டாகி விட்டது.

திகட்டத் திகட்ட காதல் கடிதங்களைப் படித்தாயிற்று. முதல் 5 வாரங்கள் ஐந்து அல்லது ஆறு கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் கடைசி வாரத்தில் மட்டும் 22 கடிதங்கள்!

திரு சீனு அவர்கள் தனது தளத்தில் இந்த போட்டி முடிவுகளை வெளியிட்டிருக்கிறார். முடிவுகளைத் தவிர இன்னொரு செய்தியையும் தனது தளத்தில் சொல்லியிருக்கிறார் திரு சீனு. அவர் சொல்லியிருக்கும் அந்தச் செய்தி:

puratchi FM

புரட்சி F.M நடத்தி வரும் நிரூபன் அவர்கள் தனது பண்பலையில் நமது கடிதப் போட்டியில் இடம்பெற்ற கடிதங்களை தனது நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாரமும் தனது நிகழ்ச்சியில் பங்குகொண்ட கடிதங்களின் ஒலி வடிவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இதுவும் நமக்குக் கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரம். மேலும் தானாக முன்வந்து பதிவர்களின் படைப்புக்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இருக்கும் நிருபன் அவர்களுக்கும் அவர் நடத்தும் புரட்சி F.M -மிற்கும் மனமார்ந்த  நன்றிகள்.’

சரி இப்போது போட்டி முடிவுகள்:

முதல் பரிசு

சுபத்ரா – வார்த்தைகள் தேவையா   கடிதம் படிக்க     crackers 2

       இரண்டாம் பரிசு

கோவை மு சரளா – என் உள்ளம் கவர் கள்வனுக்கு  கடிதம் படிக்க

      மூன்றாம் பரிசு (இருவர் பங்கிட்டுக் கொள்ளுகிறார்கள்)

ஜீவன் சுப்பு – கலவரக்காரனின் காதல் கடிதம் கடிதம் படிக்க

கண்மணி – உறங்கும் கடிதம் கடிதம் படிக்க

 

 pot marigold

 

 

 

 

 

 

 

 

ஆறுதல் பரிசுகள்

முரளிதரன் – கவுத்துட்டியே சரோ கடிதம் படிக்க

ஹிஷாலி – எழுத நினைத்த காதல் கடிதம் கடிதம் படிக்க

தமிழ்செல்வி – என் எழுத்தின் உயிர்ப்பானவனுக்கு கடிதம் படிக்க

சசிகலா – என்னைப் புதுப்பித்த புதியவனுக்கு கடிதம் படிக்க

ரேவதி சதீஷ்  – உன் காதலே அன்றி கடிதம் படிக்க

பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். நீங்களும் அவர்களுக்கு வாழ்த்துச் செல்ல வசதியாக இணைப்பு கொடுத்திருக்கிறேன். வாழ்த்துங்கள், ப்ளீஸ்!

முடிவுகள் சொன்னபடி ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியாகின. என்னால் தான் உடனே பதிவு எழுத முடியவில்லை. தாமதத்திற்கு மாப்பு!

போட்டிக்கு வந்த எல்லா கடிதங்களையும் படிக்க : இங்கே

 

இந்த அருமையான வாய்ப்பைக் கொடுத்த திரு சீனுவிற்கும், எல்லா கடிதங்களையும் படித்து பரிசுகளை முடிவு செய்ய உதவிய  திரு அப்பாதுரை, திரு ஸ்ரீராம், திரு பாலகணேஷ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!

 

thank you 1

சென்னைக்கு இன்று 374 வயது

                                                    madras 2

இன்று ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினம். சென்னைக்கு இன்று 374 வயது.

நாமும்  சேர்ந்து  கொண்டாடுவோமா….!!

சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது.

அதை பற்றி முதலில் தெரிந்து கொள்வோம் வாருங்கள் …..

கி.பி. 1 ஆம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர்.

இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது. சென்னையில் ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது, தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இது அமைந்தது. 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தான் தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது.

அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை இப்போது உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.

ஆங்கிலேயர்கள் 1639 ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டியதைத் தொடர்ந்துதான் சென்னை நகரம் உருவாகி வளர்ந்தது என்றாலும் பின்னர் நகரத்தோடு இணைந்த திருவல்லிக்கேணி, மைலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய பகுதிகள் அதற்கு மேலும் பல நூற்றாண்டுகள் தொன்மையானவை. சென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது.

புனித தாமஸ் இங்கு கி.பி. 52 முதல் 70 வரை போதித்ததாக கருதப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர், 1522 ஆம் ஆண்டு சாந்தோம் என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612 ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது. 1639 ஆம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது.

ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.

1522 ஆம் ஆண்டில் இங்கு வந்த போத்துக்கீசியர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி போத்துக்கீசியர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612 ஆம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது.

1688 ஆம் ஆண்டில் சென்னை முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்திய குடியிருப்பு பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது.

1746 ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது. 1749 ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது.

இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது.

சென்னை மாகாணம் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996 ஆம் ஆண்டு சென்னை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1996 ஆம் ஆண்டு தமிழக அரசாங்கம் மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் சென்னை என மாற்றம் செய்யப்பட்டது.

வெங்கடபதி சகோதரர்களரிடம் இருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தை பிரித்தானியர் வாங்கியதால், தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னப்பட்டணம் என அழைக்கவேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனை சுற்றிய பகுதிகளும் சென்னை என அன்றிலிருந்து அழைக்கப்படுகிறது.

நானும் உங்களுடன் சேர்ந்து சென்னை பிறந்த தினத்தை  கொண்டாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தகவல்/நன்றி  திரு அனந்தநாராயணன்

மேலும் படிக்க : Chennai day by Dr. Rajanna

 

குழந்தைக்கான மாற்று உணவு

 

செல்வ களஞ்சியமே – 32

 

 

ஆறு மாதம் வரை குழந்தைக்கு முழுக்க முழுக்க  தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். வேலைக்கு போகும் தாய்மார்களால் இது சாத்தியப்படாது. அதனால் நீங்கள் வேலைக்குப் போக ஆரம்பிக்கும் முன் ஒரு பதினைந்து நாட்கள் முன்னதாகவே ஏதாவது ஒரு வேளை தாய்ப்பாலுக்கு பதில் வேறு உணவை குழந்தைக்கு அறிமுகப்படுத்துங்கள். அப்போதுதான் புது உணவு குழந்தைக்கு சரிபட்டு வருகிறதா என்று தெரிந்து கொள்ள முடியும். அது பவுடர் பாலாகவோ அல்லது வெளியில் கிடைக்கும் திட உணவாகவோ (சீரியல்)  இருக்கலாம். ஆரம்பத்தில் மிகவும் குறைவான அளவில் நிறைய நீர் சேர்த்துக் கொடுக்க ஆரம்பியுங்கள். குழந்தைக்கு அது ஒத்துக் கொள்ளுகிறதா என்று பார்த்துவிட்டு அளவைக் கூட்டலாம்.முதலில் திரவ ஆகாரமாகவே ஆரம்பித்து பிறகு பாதி-திரவம், பிறகு நீரைக் குறைத்து திட உணவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். மெள்ள மெள்ளத்தான் இதைச் செய்ய வேண்டும்.

 

ஏன் மாற்று உணவு ஆரம்பிக்க வேண்டும்?

 

குழந்தையின் வளர்ச்சிக்கு ஒரு சில மாதங்களுக்குப் பின் தாய்ப்பால் மட்டும் போதாது. குழந்தையின் வளர்ச்சிகேற்ற வகையில் அதிக கலோரி கொண்ட உணவுகளை கொடுக்க வேண்டும். மாற்று உணவு ஆரம்பிப்பது குழந்தையின் வளர்ச்சியிலும், ஆரோக்கியத்திலும் ஒரு மைல்கல் என்று சொல்லலாம்.

 

அதுமட்டுமல்ல; குழந்தை சாப்பிடும் கலையை கற்கத் தொடங்குவதும் இப்போதுதான். உணவை தன் வாயில் வைத்து அசைபோடவும், மெல்லவும் கற்கிறது. கொஞ்சம் பெரிய குழந்தையானால் ஸ்பூனை கையில் பிடிக்கவும் அதனால் உணவை எடுக்கவும் கற்கிறது. கை, வாய் ஆகிய பகுதிகள் ஒருங்கிணைந்து செயல்பட ஆரம்பிக்கின்றன.

 

மூன்று மாதத்திலிருந்து சிலர் திட உணவு கொடுக்க ஆரம்பிப்பார்கள். ஆனால் மருத்துவர்கள் ஏன் 6 மாதம் என்கிறார்கள்? அப்போதுதான் குழந்தையின் ஜீரண உறுப்புகள் வளர்ந்து மற்று உணவை செரிக்க தகுந்தவையாக மாறுகின்றன. புது ருசிகளை அறியவும் குழந்தையிடம் இந்த மாதங்களில் ஒரு ஆர்வம் உண்டாகும். தாய்ப்பால் கூடவே இந்த மாற்று உணவுகளையும் ஆரம்பிக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.

 

மாற்று உணவு கொடுக்கத் துவங்கும்போது கவனிக்க வேண்டியவை:

தொடர்ந்து படிக்க : நான்குபெண்கள்

நமக்குள் ஒரு கேமிரா!

blue eyes

நோய்நாடி நோய்முதல் நாடி – 10

‘பறவையை கண்டான் விமானம் படைத்தான்

பாயும் மீன்களில் படகினைக் கண்டான்

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்..’

என்று பாடிக் கொண்டே போகும்போது மனிதன் மட்டும் பிற பொருட்களைப் பார்த்து மற்றவற்றை படைத்தானா? இறைவனின் மிகச்சிறந்த படைப்பான மனிதனிடமிருந்து எதுவுமே உண்டாகவில்லையா என்ற கேள்வி எழுகிறது, இல்லையா?

ஏன் இல்லை? நம் கண்களைப் பார்த்துத்தான் கேமிரா படைக்கப்பட்டது என்று பெருமை பட்டுக் கொள்ளலாம்.

நாம் கண் என்று சொல்வது புருவம், இமை, இமைக்குள் காணப்படும் வெண்மைப் பகுதி (Sclera), இதன் மேல் படர்ந்திருக்கும் கஞ்சங்டைவா எனப்படும் மெல்லிய திசு, ஐரிஸ் எனப்படும் கண்ணின் வண்ணப் பகுதி, இதற்கு நடுவில் சிறு துளை ‘பாப்பா’ (pupil) இவையே.

ஐரிஸ் நீலம், பச்சை, பிரவுன், கருப்பு என்று பல வண்ணங்களில் இருக்கும். நம் தோலின் அடியில் இருப்பது போலவே கண்களிலும் இந்த நிறத்தைக் கொடுக்கும் மெலனின் என்ற நிறமி இருக்கிறது.

‘பாப்பா’ என்று பெயர் தானே தவிர இது செய்யும் காரியங்கள் எல்லாமே பெரியவை. இதன் வழியாகத்தான் நாம் பார்க்கும் காட்சிகள் மூளைக்கு செல்லுகின்றன.  ஐரிசை மூடி இருக்கும் படலம் தான் கார்னியா. வண்ணமில்லாமல் இது இருப்பதற்கு காரணம் இங்கு இரத்தக் குழாய்கள் இல்லை.

மனித கண்களைப் பற்றி மேலும் படிக்க :இங்கே

நோய்நாடி நோய்முதல் நாடி – 8

சுதந்திரம் எதிலிருந்து?

 

 

அந்நியனிடமிருந்து நம் நாட்டிற்கு விடுதலை கிடைத்து விட்டது. நமக்கு?

 

எப்போது பார்த்தாலும் நம் நாட்டை குறை கூறிக் கொண்டே இருக்கிறோமே, அந்த மனப்பான்மையிலிருந்து விடுதலை பெறுவோம். நம் எல்லோருக்கும் இது ஒரு மன நோய் போல ஆகிவிட்டது.

 

இன்று ஒரு பட்டிமன்றம் பார்த்தேன். இன்றைய நிலைக்கு இளைஞர்களே காரணம் என்று ஒரு சாரார், இல்லை முதியோர்களே என்று ஒரு  சாரார் ஒருவரையொருவர் குறை சொல்லிக் கொண்டனர். நடுவர் கடைசியில் நமது இளைய தலைமுறைக்கு நாம் சரியாக எதையும் கற்றுக் கொடுக்கவில்லை அதுவே இன்றைய நிலைக்குக் காரணம் என்று முடித்துவிட்டார்.  ஒருவிதத்தில் இதுவும் சரியே. நமக்கு நம் பெற்றோர்கள் சொல்லித் தந்த பல விஷயங்களை நாம் நம் இளைய தலைமுறைக்கு சொல்லித் தந்தோமா? நம்மை நாமே கேட்டுக் கொள்ளுவோம். 

 

விடுதலை கொடுத்துவிட்டு போன மகானுபாவன் அதை எப்படிக் காப்பது என்று சொல்லித் தரவில்லையே! 

 

விடுதலைப் போராட்டம் என்னும் மிகப்பெரிய போர் முடிந்து எல்லோரும் ஓய்வு எடுத்துக் கொள்ள போய்விட்டனர். நீண்டகால ஓய்வு. ஓய்வு முடிந்து திரும்பி வந்தால்…அவரவர் அவரவர் பாணியில் சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

 

சாலைகளில் சாலை விதிகளை மதிக்காமல் வாகனங்களை ஒட்டினார்கள். கேட்டால் நான் சுதந்திர இந்தியாவின் சுதந்திர குடிமகன்.  எப்படி வேண்டுமானாலும் வாகனம் ஓட்ட எனக்கு சுதந்திரம் இருக்கிறது என்கிறார்கள். 

 

சுதந்திர நாட்டில்  தேர்தலில் வாக்குப் பதிவு செய்வது உங்கள் கடமை என்றால் ‘எனக்கு இன்று விடுமுறை . வெளியில் போகப் பிடிக்கவில்லை. சுதந்திரமாக வீட்டில் இருக்கவே விரும்புகிறேன்’ என்கிறார்கள். விடுமுறை கொடுத்ததே வாக்கு சாவடிக்குப் போகத்தான்! நம்மில் எத்தனை பேர் தவறாமல் வாக்களிக்கிறோம்?

 

எல்லோரும் தங்கள் கடமையைச் செய்தால்தான் ஒரு அலுவலகமோ, வீடோ தொடர்ந்து இயங்க முடியும். நாடு என்பதும் இவைப் போன்றதே. நான் வாக்குப் பதிவு செய்யமாட்டேன் என்கிறவர்களுக்கு ஆள்பவர் சரியில்லை என்று சொல்லவும் உரிமை இல்லை.

 

வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் இந்தியாவைக் குறை சொல்லும் குட்டை புத்தி வேண்டாம். அங்கு மிகவும் நல்ல குடிமகனாக இருப்பவர் இங்கு வந்தவுடன், வரிசையில் நிற்க மறுப்பதும், கண்ட இடங்களில் குப்பையைப் போடுவதும் ஏன்? 

 

வெளிநாட்டில் இருக்குவரை எந்த மொழி பேசினாலும் இந்தியர். இந்தியாவில் காலை வைத்தவுடன் என்ன ஜாதி என்று கேட்பது ஏன்?

 

வெளிநாட்டு குடியுரிமை வாங்க அந்த நாட்டு சரித்திரம் படித்து பரீட்சை எழுதும் இந்தியர்கள் எத்தனை பேருக்கும் நம் வரலாறு தெரியும்? முதலில் நம் நாட்டின் நல்ல குடிமக்களாக மாறுவோம். 

 

 

நம்மிடம் இருக்கும் இந்த மனநோயிலிருந்து சுதந்திரம் பெறுவோம். அப்போதுதான் நாம் சொல்லும் சுதந்திரதின வாழ்த்துக்களுக்கு அர்த்தம் இருக்கும். மேலோட்டமான சுதந்திர தின வாழ்த்துகள் வேண்டாமே!

 

நம் கடமையை நாம் செய்வோம். நாடும் முன்னேறும். நாமும் முன்னேறுவோம். 

 

independance day