சாம்பார் ஊத்தும்மா……!

 

தீபாவளி என்றால் ஒரு சம்பவம் தவறாமல் எனக்கு நினைவுக்கு வரும்.

 

ஒருமுறை நானும் என் தோழியும் ‘கல்யாணப்பரிசு’ படம் பார்க்கப் போயிருந்தோம்.  என் தோழிக்கு ரொம்பவும் இளகிய மனது. சோகப் படம் என்றால் பிழியப் பிழிய அழுவாள். அழுது அழுது சினிமா அரங்கமே அவளது கண்ணீரில் மிதக்கும். எனக்கோ அவளைப் பார்க்கவே சிரிப்பாக இருக்கும்.

 

கல்யாணப்பரிசு படம் பாதிவரை நன்றாகவே இருந்தது. தங்கவேலு, சரோஜாவின் நகைச்சுவைக் காட்சிகளை ரொம்பவும் ரசித்துக் கொண்டிருந்தோம். அப்புறம் வந்தது படத்தில் ஒரு திடீர் திருப்பம்.

 

தான் விரும்பும் ஜெமினி கணேசனையே தன் அக்காவும் (விஜயகுமாரி) விரும்புவது தெரிந்து தங்கை சரோஜா தேவி தன காதலைத் தியாகம் செய்கிறார். (இந்த இடத்தில் என் தோழியின் அழுகையும் ஆரம்பித்தது.) ஜெமினியும் விஜயகுமாரியும் திருமணம் செய்துகொண்டு வெளியூரில் குடும்பம் நடத்தச் செல்லுகிறார்கள். ரயில் நிலையத்தில் இருவரையும் வழி அனுப்ப வரும் சரோஜாதேவி கண்ணீருடன் கையை அசைத்து அவர்களுக்கு விடை கொடுப்பார். பின்னணியில் ‘காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்’ பாட்டு ஒலிக்கும்.

 

என் தோழியால் அழுகையை அடக்கவே முடியவில்லை. பொதுவிடம் என்பதையும் மறந்து விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிட்டாள். என் சமாதானங்கள் அவளிடம் செல்லவேயில்லை. சொல்லப்போனால் அரங்கம் முழுவதுமே சோகமான சூழல் தான். பலரும் ‘ப்ச்…ப்ச்’…..’ என்று சரோஜாதேவியின் நிலைக்கு வருந்திக் கொண்டிருந்தார்கள்.

 

அடுத்த சீன். வெளியூரில் விஜயகுமாரியும், ஜெமினியும் குடித்தனம் நடத்துவதைக் காட்டினார்கள். ஜெமினி சோகமான முகத்துடன் சாப்பிட உட்காருவார். வி.குமாரி சாதம் போடுவார். திடீரென்று அரங்கத்தில் ஒரு குரல்: ‘சாம்பார் ஊத்தும்மா…!’ என்று.

 

அடுத்த கணம் அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது. என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. ரொம்பவும் சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். என் தோழிக்கோ ஒரே கோவம். ‘ச்சே! என்ன மனிதன்! அங்க ஒருத்தி கண்ணீரும் கம்பலையுமாக இருக்கும்போது இப்பிடியா ஜோக் அடிக்கிறது!’ என்று பொரிந்து தள்ளினாள். நான் சிரிப்பது அவளது கோவத்தை இன்னும் அதிகமாக்கியது. ‘மனசாட்சி இருந்தால் நீ இப்படி சிரிக்க மாட்டே!’ என்று என்னை கோபித்துக் கொண்டாள்.

 

‘ஏய்! இது வெறும் சினிமா. இதற்கு ஏன் உனக்கு இவ்வளவு கோவம் வரது?’ என்று நான் கேட்டவுடன் தான் அவள் கொஞ்சம் நிதானத்திற்கு வந்தாள்.

 

இந்தப் படத்தில் வரும் அழகான தீபாவளி பாட்டு இதோ உங்களுக்கு.

 

முதலில் சந்தோஷமாகப் பாடப்படும் இந்தப்  பாடல் பிறகு சோகமாகவும் பாடப்படும். நான் சந்தோஷத்தை மட்டுமே உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன்.

 

சில நாட்களாக இணையத்திற்கு வர முடியாத நிலை. இந்த நிலை இன்னும் பல நாட்கள் தொடரும் என்று தோன்றுகிறது. இதனால் பலருடைய பதிவுகளைப் படித்துப் பின்னூட்டம் போட முடியவில்லை. எல்லோரிடமும் மன்னிப்பு வேண்டுகிறேன்.

 

தீபாவளி வாழ்த்துகளை தெரிவிக்கவாவது ஒரு பதிவு போட வேண்டாமா? அதனால் இந்தப் பதிவு.

 

எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

 

பார்வையிழந்தவர்களுக்கு ஒரு மாத இதழ்

நோய்நாடி நோய்முதல் நாடி 

 

upasana makati

நாம் தெருவில் நடந்து போகும்போது, அல்லது போக்குவரத்து நிறைந்த சாலைகளைக் கடக்கும் போது நமக்குப் பக்கத்தில் யாராவது பார்வையிழந்தவர்கள் இருந்தால் கைபிடித்து அழைத்துக் கொண்டு போவோம். அதற்கு மேல் என்ன செய்வது, அவர்களுக்கு எப்படி உதவுவது என்று நாம் யாரவது நம் எல்லையைத் தாண்டி சிந்தித்திருக்கிறோமா?

 

அப்படி சிந்தித்த ஒருவரைத்தான் நாம் இந்த வாரம் கண் பற்றிய இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

 

‘நம்மில் நிறைய பேர் காலையில் எழுந்தவுடன் காபி கோப்பையும் ‘ஹிந்து’ வுமாக நம் நாளைத் துவங்குகிறோம். இதை நமக்கு கிடைத்திருக்கும் ஒரு மிகப் பெரிய சொகுசு என்று நினைத்து சந்தோஷப் படுகிறோம், இல்லையா? அதேபோல பார்வையிழந்தவர்களுக்கும் இந்த சந்தோஷத்தைக் கொடுத்தால் என்ன என்று எப்போதாவது தோன்றியிருக்கிறதா?’

White Print

 

கேட்பவர் உபாசன மகதி. யார் இவர்? பார்வை இழந்தவர்களுக்காக இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் ப்ரெயில் (Lifestyle) பத்திரிகை ‘வொயிட் பிரின்ட்’ ஐ வடிவமைத்தவர், வெளிக் கொணர்ந்தவர். இதன் முதல் இதழ் இந்த வருடம் மே மாதத்தில் வெளி வந்தது.

 

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள்

குழந்தையின் விளையாட்டு

playing with car

செல்வ களஞ்சியமே – 41

 

குழந்தையின் விளையாட்டு வெறும் விளையாட்டு அல்ல என்கிறார் டாக்டர் ஸ்பாக். குழந்தை விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது ஏதோ பொழுது போக்க, அல்லது மனமகிழ்விற்காக விளையாடுவதாகத் தோன்றும். நாம் அதை பெரியவர்கள் பார்வையில் பார்க்கும்போது அதற்கு அத்தனை முக்கியத்துவம் இருக்காது. ஒரு சின்ன பொம்மையை வைத்துக் கொண்டு அம்மா, அப்பா என்றெல்லாம் சொல்லும்போது நாம் அதை ரொம்பவும் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் குழந்தையின் விளையாட்டுக்கள் வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொள்ளவே என்கிறார் டாக்டர் ஸ்பாக். பிற்காலத்தில் தாம் வாழப் போகும் வாழ்க்கைக்குத் தம்மை தயார் செய்துகொள்ளவே குழந்தைகள் விளையாடுகிறார்கள். குழந்தைகள் எளிதாக விளையாடுவதாக நாம் நினைக்கிறோம்; ஆனால் அவர்களுக்கு விளையாட்டு பிடிப்பதற்குக் காரணம் அது ‘கஷ்டம்’ ஆக இருப்பதனால்தான். ஒரு உயர்நிலைப்பள்ளி மாணவன் எத்தனை கஷ்டப்பட்டு ‘ஜியோமெட்ரி’ யைக் கற்றுக் கொள்ளுகிறானோ அதே தீவிரத்துடன் குழந்தைகள் விளையாட்டினை திரும்பத்திரும்ப விளையாடி அதன் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்ளுகிறார்கள்.

என் பிள்ளை சின்ன வயதில் கையில் எது கிடைத்தாலும் அதை வைத்துக் கொண்டு கார் ஓட்ட ஆரம்பித்துவிடுவான். பென்சில், அழிப்பான், ஸ்கேல் என்று எல்லாமே அவன் கையில் கார் ஆக மாறும். விளயாடுவதற்குமுன் தனது விளையாட்டு சாமான்களில் சிலவற்றை அங்கங்கே வைப்பான். இவனது கார் அந்த சாமான்களைச் சுற்றி, அவற்றின் மேல் மோதாமல் ஓடும். சிலசமயம் அவற்றின் அருகே போகும்போது ‘கீய்ங்……’  என்று சடன் ப்ரேக் போடுவான். தூரத்தில் வரும்போது ஹார்ன் அடிப்பான். அவன் விளையாடுவதை வியப்புடன் அன்று நான் பார்த்துக் கொண்டிருப்பேன்.

அவன் கார் சிலசமயம் என் கால் அருகிலும் வரும். ஹார்ன் சத்தம் அல்லது ‘கீய்ங்க்‘ என்ற சடன் ப்ரேக் ஏதாவது ஒன்றை செய்வான். ‘எப்போ பார்த்தாலும் என்னடா கார் விளையாட்டு?’ என்று கோபித்துக் கொள்வேன். அவன் இன்று மிகவும் லாவகமாக இரண்டு சக்கர வண்டியோ,  நான்கு சக்கர வண்டியோ  ஓட்டும்போது டாக்டர் ஸ்பாக் நினைவுக்கு வருகிறார். அவனது திறமைக்கு இந்த சின்ன வயது விளையாட்டும் காரணம் என்று டாக்டர் ஸ்பாக் சொல்வது புரிகிறது.

 

தொடர்ந்து படிக்க : நான்குபெண்கள்

 

செல்வ களஞ்சியமே – 40

பார்வையற்றோருக்குப் பார்வை

312px-Braille_closeup

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 19

 

என் தோழியின் மகன் தனது பள்ளியில் கொடுத்திருந்த ஒரு craft வேலையை செய்து கொண்டிருந்தபோது அவனது தங்கை ஓடிவந்து அண்ணாவின் மேல் விழ, அவன் கையில் இருந்த ஊசி அவள் கண்ணினுள் போய்விட்டது! நல்லவேளை, உடனடியாக சிகிச்சை கொடுத்ததால் கண் பார்வை காப்பாற்றப்பட்டது.

 

எவ்வளவு பேருக்கு அந்த அதிர்ஷ்டம் அமையும்? பார்வை போனால் போனதுதான். அவர்களின் வாழ்க்கையே அவ்வளவுதான் என்றிருந்த காலம் போய்விட்டது. கண் பார்வையிழந்தவர்கள் ப்ரெயில் முறையில் இப்போது எல்லோரையும் போல படிக்க முடியும். அது மட்டுமல்ல; கார் ஓட்டமுடியும், புகைப்படங்கள் எடுக்கலாம் இன்னும் நிறைய செய்யலாம். இவற்றிற்கெல்லாம் வழி வகுத்துக்கொடுத்துள்ள தொழில் நுட்பத்திற்கு நன்றி!

 

ப்ரெயில் முறை பற்றி எல்லோருமே கேள்விப் பட்டிருப்போம். இதைக் கண்டுபிடித்தவர் லூயி ப்ரெயில் என்கிற பிரெஞ்சுகாரர்.

 

நான்கு வயது சிறுவனாய் இருந்தபோது, செருப்பு தைக்கும் தனது தந்தையின் பெரிய ஊசியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த தடிமனான ஊசி அவர் கண்ணைக் குத்தி விட்டது. ஒரு கண் பார்வை போயிற்று. அந்தக் கண்ணில் உண்டான தொற்று சில மாதங்கள் கழித்து இன்னொரு கண்ணிற்கும் பரவி முழுப் பார்வையும் போய்விட்டது. பார்வை போய்விட்டாலும், படிக்க வேண்டும் என்ற ஆவல் அவரிடம் நிறைய இருந்தது. கண் பார்வை இழந்தவர்கள் படிக்க ஏதாவது ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும் என்று யோசித்தார். பலரிடமும் பேசினார். என்ன செய்யலாம் என்று எல்லோரிடமும் கேட்டுக் கொண்டிருந்தார்.

 

என்ன செய்தார் என்று அறிய : நான்குபெண்கள்

துரத்தும் பதவி!

write a poem

 

எனக்குத் திருமணம் ஆன புதிதில் ஒரு நாள் என் மாமியார் சொன்னார்: ‘நாராயணன் ஜட்ஜ் ஆக வருவான்’. எனக்கு கொஞ்சம் வியப்பு நிறைய சிரிப்பு. ஏனெனில் என் கணவர் படித்தது மெக்கானிகல் இன்ஜினியரிங். எப்படி ஜட்ஜ் ஆக முடியும்? அட்லீஸ்ட் உயர் நீதிமன்றம் அருகில், எதிரில், பக்கத்தில் அலுவலகம் என்றால் கூட நீதிமன்றக் காற்றாவது அடிக்கும். இவரது அலுவலகமோ பாடியில். ஆனால் என் மாமியார் ‘அவனது ஜாதகப்படி அவன் ஜட்ஜாக வருவான்’ என்று கடைசிவரை (அவரது கடைசி காலம் வரை) சொல்லிக்கொண்டிருந்தார்.

 

ஆனால் ஒரு விஷயம் மனிதர்களை சரியாகக் கணிப்பார். அதனால் என் மாமியாரின் கூற்று பாதி பலித்தது என்று சொல்லலாம்.

 

நான்கு வருடங்களுக்கு முன் ஒரு தொலைபேசி வந்தது. ‘மேடம், KSIT கல்லூரியிலிருந்து பேசுகிறோம். எங்களுடைய கல்லூரி fest – இல் ஒரு போட்டிக்கு ஜட்ஜ் ஆக வரமுடியுமா?’ என்று. சுமார் நான்கு வருடங்கள் தொடர்ந்து நடுவராக இருந்தேன்.

 

என் மாமியார் என் ஜாதகத்தைப் பார்த்து ஒன்றும் சொல்லாமல் போய்விட்டாரே என்று கொஞ்சம் வருத்தமாக இருந்தது. ஒருவேளை என் கணவரின் ஜாதகத்தில் மனைவி ஜட்ஜ் ஆக இருப்பார் என்று இருந்ததோ, என்னவோ!

 

இந்த வருடம் மறுபடி இந்தக் கல்லூரியிலிருந்து அழைப்பு வந்தபோது வெளியூரில் இருந்ததால் போக முடியவில்லை. ‘வட போச்சே’ என்று நினைத்துக் கொண்டிருக்கையில் திரு சீனு தயவில் மறுபடி ஒரு ஜட்ஜ் பதவி! என் கணவருக்கு வந்திருக்க வேண்டிய பதவி என்னைத் துரத்தி துரத்தி பிடிக்கிறது!

 

இப்போது எதற்கு இதைச் சொல்லுகிறீர்கள், என்கிறீர்களா?

 

இன்னொரு போட்டி. மறுபடி நடுவர் பதவி. ‘ரூபனின் எழுத்துப்படைப்பு’ என்ற வலைபதிவில் தனது கவிதை, கதை என்று பல படைப்புகளையும் படைத்துவரும் திரு ரூபன் இன்னொரு போட்டியை அறிவித்து இருக்கிறார்.

 

இதோ விவரங்கள்:

போட்டிக்கான தலைப்பு

1. நாம் சிரிக்கும் நாளே திருநாள்

2. ஒளி காட்டும் வழி

3. நாம் சிரித்தால் தீபாவளி

போட்டிக்கு கவிதைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் 31.10.2013.

மேலும் விவரங்களுக்கு

ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி

இந்த  இணைப்பிற்கு சென்று பார்க்கவும்.

திடங்கொண்டு போராடு சீனுவைத் தொடர்ந்து தன் சொந்தப் பணத்தை செலவு செய்து ஏராளமான பரிசுகளை அறிவித்து கவிதைப்  போட்டியினை நடத்தும் ரூபனுக்கு, கவிஞர்களே உங்கள் அழகான படைப்புகளை அனுப்பி ஆதரவு வழங்குங்கள்.

 

பங்குபெறும் அத்தனை பெரும் வெற்றிபெற வாழ்த்துகள்!

 

 

 

அப்பா செல்லமா? அம்மா செல்லமா?

அம்மாவோட போன்...அம்மா செல்லமா?
அம்மாவோட போன்…அம்மா செல்லமா?

 

‘அப்பாவ பிடிக்குமா? அம்மாவ பிடிக்குமா?’

‘நீ யார் செல்லம்? அப்பா செல்லமா? அம்மா செல்லமா?’

நம்மில் 99% பேர் ஒரு குழந்தையிடம் கேட்கும் கேட்கக்கூடாத பைத்தியக்காரத்தனமான கேள்விகள் இவை!

குழந்தையை உருவாக்குவதிலிருந்து அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாகி திருமணம் முடிக்கும் வரை இருவரின் கவனிப்பும் குழந்தைக்குத் தேவை. குழந்தையின் அறிவு, சாமார்த்தியம், ஆளுமை, உருவம், பேச்சு, நடவடிக்கை இவை எல்லாமே அப்பா, அம்மாவின் பாதிப்புடன்தான் இருக்கும்.  கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தீர்மானம் செய்வது ஆணின் குரோமோசோம் என்றாலும், மற்ற விஷயங்களில் அப்பாவின் பங்கு நிச்சயம் ஐம்பது சதவிகிதம் இருக்கும். இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால் சந்தோஷமே!

இன்றைய இளைய தலைமுறை அப்பாக்கள் உண்மையில் குழந்தையின் வளர்ப்பில் அதிகம் பங்கு பெறுகிறார்கள். நன்றி: அவர்களது அமெரிக்க வாசம். அங்கு ஒரு பெண் தாயாகும் போதே கணவனுக்கும் குழந்தைக்கு டயபர் மாற்றுவதிலிருந்து எல்லாவற்றுக்கும் பயிற்சி அளித்துவிடுகிறார்கள்.

டயபர் என்றவுடன் எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது என் மாமா ஒருவர் தில்லியிலும், ஒருவர் கோட்டா (ராஜஸ்தான்) விலும் இருந்தார்கள். . என் முதல் குழந்தைக்கு ஐந்து மாதம் இருக்கும் போது  நாங்கள் குழந்தையுடன் முதலில் கோட்டா போனோம். என் மாமாவிற்கும் கைக்குழந்தை. என் குழந்தையை விட சின்னவன். எனக்கு இங்கு ஒரு வியப்பான விஷயம் காத்திருந்தது. என் மாமி அவ்வப்போது அந்தச் சின்னக் குழந்தையை பாத்ரூமிற்கு எடுத்துக்கொண்டு போய் ‘உஸ்ஸ்ஸ்…..உஸ்ஸ்ஸ்…’ என்று வாயால் சத்தம் செய்வார். அது சமத்தாக மூச்சா போய்விடும். எனக்கு ரொம்பவும் வியப்பு. எப்படி குழந்தைக்கு பயிற்சி அளித்தீர்கள் என்று கேட்டேன். அவ்வப்போது இப்படி செய்து கொண்டிருந்தால் பழகிவிடும் என்றார் மாமி. நானும் அப்படி செய்ய ஆரம்பித்தேன். ஊஹும்….! நான் ஏதோ விளையாட்டு காட்டுகிறேன் என்று என் குழந்தை ‘கிளு கிளு’ வென்று சிரிக்கும். இந்தக் காலம் மாதிரி டயபர் இல்லாத காலம் அது.

இப்போது கவலையில்லை டயபர் போட்டுவிடுகிறார்கள்.

ஆனாலும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப்பின் குழந்தைகளுக்கு ஒன், மற்றும் டூ பாத்ரூம் போக பயிற்சி அளிப்பது மிகவும் அவசியம்.

 

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள்

சோம்பேறி கண்!

eyes

நோய்நாடி நோய்முதல் நாடி – 18

சோம்பேறி கண் எனப்படும் பார்வை தெளிவின்மை (amblyopia)

ஒருநாள் பக்கத்துவீட்டிற்கு சென்றபோது அவர்கள் குழந்தை டிவி பார்த்துக் கொண்டிருந்தது. குழந்தையைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி. ஒரு கண்ணிற்கு மட்டும் ஒரு பிளாஸ்டர் போட்டு மறைத்திருந்தது. ‘என்ன ஆச்சு? கண்ணில் அடிபட்டு விட்டதா?’ என்றேன் கொஞ்சம் படபடப்புடன். 6 வயதுப் பிள்ளை. கொஞ்சம் வால் என்றாலும் கண் ஆயிற்றே!

குழந்தையின் அம்மா சொன்னார்: ‘இல்ல மாமி. லேசி ஐஸ் (lazy eyes). ஒரு கண்ணால் மட்டும் அதிகமாகப் பார்க்கிறான். இன்னொரு கண்ணில் சரியான பார்வை இல்லை. ஒரு கண் நார்மலாகவும், இன்னொரு கண் பலவீனமாகவும் இருக்கிறதாம். அதனால் தினமும் அரைமணி நேரம் நார்மலாக இருக்கும் கண்ணை பிளாஸ்டர் போட்டு மறைத்து இன்னொரு கண்ணால் பார்க்க சொல்லியிருக்கிறார் கண் மருத்துவர்’.

மனிதர்கள் மொத்தமாக சோம்பேறிகளாக இருப்பார்கள், கண் மட்டும் சோம்பேறியாக இருக்குமா? இதென்ன புதிதாக இருக்கிறதே என்று இணையத்தில் தேட ஆரம்பித்தேன். நான் படித்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இந்த பார்வை தெளிவின்மையில் ஒரு கண்ணில் மட்டும் பார்வை (பிம்பங்கள்) சரியாக உருவாவதில்லை. அதாவது ஒரு கண்ணில் தெளிவான பார்வையும் இன்னொரு கண்ணில் ‘மசமச’ வென்று (குறைவான) பார்வையும் இருக்கும். இப்படிப்பட்ட நிலை இருக்கும் ஒரு குழந்தையின் மூளை, சரியாக பார்வை இல்லாத கண்ணில் விழும் தெளிவற்ற பிம்பத்தை அலட்சியப்படுத்திவிடுகிறது. மூளையின் பார்க்கும் சக்தியும் அந்த கண்ணில் வளராமல் போகிறது. இந்த ஆம்ப்ளியோபியா-வை கவனிக்காமல் விட்டுவிட்டால் ஒரு கண்ணில் பார்வை இழப்பு நேருகிறது. இந்த நிலையை கண்ணாடிகள் மூலமாகவோ, காண்டாக்ட் லென்ஸ் மூலமாகவோ சரி செய்ய முடியாது. இது மூளையில் ஏற்படும் நரம்புக் கோளாறு.

இந்த நிலை எப்படி ஏற்படுகிறது?

தொடர்ந்து படிக்க : நான்குபெண்கள்

குழந்தையா, குரங்குக் குட்டியா?

crying baby
நா யாரு? குழந்தையா? குரங்குக் குட்டியா?

 

செல்வ களஞ்சியமே – 39

என் உறவினர் ஒருவர் நன்றாக தையல் வேலை செய்வார். ஒருநாள் அவர் தைத்துக் கொண்டிருக்கும்போது அவரது பேரன் அருகில் வந்து, அவர் வைத்துக் கொண்டிருக்கும் நூல் கண்டுகளை எடுக்க ஆரம்பித்தான். இவர் உடனே ‘வேண்டாம் வேண்டாம் எடுக்காதே…!’ என்றிருக்கிறார்.

‘ஒண்ணே ஒண்ணு கொடு’

‘வேண்டாம் நீ வீடு முழுக்க நூலை இழுத்துண்டு போய் நூலை வேஸ்ட் பண்ணிடுவே’

அதற்கு அந்தக் குழந்தை, ‘இவ்வளவு நூல்கண்டு வைச்சிருக்கே, நீ ஷேர் பண்ணிக்க மாட்டியா?’ என்று கேட்டிருக்கிறது. வீட்டிற்கும் வரும் குழந்தைகளுடன் தன்னிடம் இருக்கும் பொம்மைகளை ஷேர் பண்ணிக்கச் சொல்லும் பாட்டி, தன் நூல்கண்டுகளை மட்டும் நம்முடன் ஷேர் பண்ணிக்க மாட்டேன் என்கிறாளே என்பது  குழந்தையின் (நியாயமான) கேள்வி.

இந்த உரையாடலிலிருந்து கற்க வேண்டிய பாடம்: நாம் செய்யாத ஒன்றை குழந்தைகளைச் செய்ய சொல்லக்கூடாது.

‘நான் தொலைக்காட்சி பார்க்கணும். நீ உள்ளே போய் படி’ என்று சொல்லும் பெற்றோர்கள் நிச்சயம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உங்கள் குழந்தைகளின் படிப்பு முக்கியமா? அல்லது பொருத்தமில்லாத நடிகர்களும், லாஜிக் இல்லாத கதைகளும் கொண்ட நீண்ட தொடர்கள் முக்கியமா?

ஓரளவிற்கு மேல் தொலைக்காட்சி வேண்டாம். அதேபோல DVD போட்டு சாதம் ஊட்டுவதும் தவறுதான். தமிழ் பாடல்கள் உள்ள டிவிடி – க்கள் கிடைக்கின்றனவா என்றும் தெரியவில்லை. ஆங்கில பாடல்கள் நம்மூருக்கு ஒத்து வராது. நாம் ‘மாமழை போற்றுதும்’ என்போம். மழைக்காகத் தவம் கிடப்போம். அவர்கள் ‘ரெயின் ரெயின் கோ அவே ((Rain Rain go away) என்பார்கள்.

அதேபோல இன்னொரு மோசமான பாட்டு:

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள்

பிங்குவும் பென்னியும் பின்னே ஞானும் எண்ட பேரன்மாரும்!

penguine

முன் குறிப்பு: தலைப்பைப் பார்த்துவிட்டு ஏதோ மலையாளப் பட விமரிசனம் என்று நினைத்தால் ஞான் – மன்னிக்கவும் – நான் பொறுப்பல்ல!

‘பிங்கு’ என்பது நானும் என் பெரிய பேரனும் மிகவும் விரும்பிப் பார்த்த கார்ட்டூன் நிகழ்ச்சி. அந்த சமயத்தில் வெறும் கார்ட்டூன் நெட்வொர்க் மட்டும்தான். போகோ, சிபிபிஸ் எல்லாம் கிடையாது. கார்ட்டூன் நெட்வொர்க்கிலேயே காலை 11 மணியிலிருந்து டைனி (TINY TV) என்று 2 மணிநேரத்திற்கு வரும். அதில் சின்ன சின்னதாக நிறைய கார்டூன்கள் வரும். அதில் ஒன்று தான் பிங்கு என்னும் ஒரு குட்டி பெங்குயின். பேச்சே கிடையாது. வெறும் இசைதான். படம் பார்த்துக் கதை சொல் தான். எடுத்தவுடன் ஒரு குட்டி பெங்குயின் வந்து தன் மூக்கை நீட்டி இரண்டுதடவை ‘பீயங்…பீயிங்..’ என்று கத்தும்.

அந்தக் குட்டி பிங்குவிற்கு ஸ்கூல் போகப் பிடிக்காது. இழுத்துப் போர்த்திக் கொண்டு ஜுரம் வந்தது போல நடிக்கும். பிங்குவின் அம்மா டாக்டரை அழைத்துக் கொண்டு வரும். டாக்டர் பெரிய – நிஜமாகவே பெரிய – ஊசியை எடுத்துக் கொண்டு வருவதைப் பார்த்து குட்டி பிங்கு பின் பக்க கதவு வழியாக ஸ்கூலுக்கு ஓடி விடும்! ஒவ்வொரு கதையும் இவ்வளவுதான்.

ஸ்னோமேன், சின்ன சின்ன பெங்குயின் வீடுகள் என்று பனிக்கட்டிகளுடன் பெங்குயின்கள் இருக்கும் அன்டார்டிகாவை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துவார்கள்.

நாடி, ஆஸ்வால்ட் (ஆக்டோபஸ்), பாப் த பில்டர் என்று நிறைய வரும். பிங்குவிற்கு அடுத்தபடியாக எங்கள் இருவரையும் கவர்ந்தது ஆஸ்வால்ட். மிக மிக நல்ல ஆக்டோபஸ். தலையில் சின்னதாக ஒரு தொப்பி போட்டிருக்கும். நண்பர்களைப் பார்க்கும்போதெல்லாம் அந்த தொப்பியை கழற்றி அது ‘விஷ்’ பண்ணும் அழகே அழகு!

அதன் தோழன் ஒரு குட்டி நாய். ‘வின்னி’ என்று பெயர். நல்ல ஆங்கிலத்தில் உரையாடல்கள் இருக்கும். இவர்கள் இரண்டுபேரும் சேர்ந்து வீட்டுத் தோட்டத்தில் தக்காளிசெடி போடுவார்கள். தக்காளி அழகழகாக வரும். அடுத்த நாள் காலையில் பார்த்தால் சின்னச்சின்ன புழுக்கள் வந்து அவற்றை சாப்பிட்டிருக்கும். அலுக்காமல் சலிக்காமல் வாங்கி வாங்கி வந்து செடி நட்டு கடைசியில் எல்லாப் புழுக்களும் சாப்பிட்டது போக மீதி இருக்கும் செடியிலிருந்து தக்காளியை  ஆஸ்வால்டும், அதன் தோழன் வின்னியும்  சாப்பிடும்.

அடிதடி சண்டை, ஒருவரையொருவர் வெட்டுவது, குத்துவது என்று எதுவுமே இந்த கார்டூன்களில் இருக்காது. வரும் அத்தனை விலங்குகளும் ஒன்றுகொன்று ஒற்றுமையாக விளையாடும். நட்பு, விட்டுக் கொடுத்தல் இவைதான் முக்கிய கரு.

penguin-diner-screenshot

அடுத்து பென்னி. இதுவும் ஒரு பெங்குயின் தான். இது கார்டூன் இல்லை. ஒரு விளையாட்டு. இதன் கதை வேறு. அண்டார்டிகாவில் ட்ரெக்கிங் போகும்போது பென்னிக்கு வழி தவறிவிடும். மீண்டும் வீட்டிற்கு போக பணத்தை சம்பாதிக்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு இடத்திலும் உணவகங்கள் வைத்து சமைத்து பரிமாறி பணம் சேர்த்து கடைசியில் அன்டார்டிகா போகும்.

இந்த விளையாட்டை நான் என் சின்னப் பேரனுடன் விளையாடுவேன். இதில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் பென்னி பல வேலைகளை (multi-task) அழகாக கிடுகிடுவென செய்யும் பாங்கு.

காலையில் 9 மணிக்கு உணவகம் திறக்கும். மொத்தம் 5 மேசைகள். வரும் வாடிக்கையாளர்களை டேபிளில் உட்கார வைத்து ஆர்டர் எடுத்து பரிமாறி பணத்தை பெற்றுக் கொண்டு…..மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் Penguin Diner என்ற இந்த விளையாட்டு.

மொத்தம் மூன்று சுற்றுகள். முதல் சுற்று கொஞ்சம் சுலபமாகவே இருக்கும். உணவகத்தின் பெயர் Hill Top Cafe. முதல் நாள் 105 டாலர்கள் சம்பாதிக்க வேண்டும். அடுத்தநாள் இன்னும் கொஞ்சம் கூட. இந்த சுற்று முடிந்தவுடன், இரண்டாவது சுற்று.

இந்த உணவகத்தின் பெயர் Ice Rink Cafe. இப்போது இன்னும் சீக்கிரம் சீக்கிரம் விருந்தாளிகள் வருவார்கள். இரண்டிரண்டு பேர்களாக வருவார்கள். சில சமயம் நாம் சரியாக அவர்களை அமர்த்தி ஆர்டர் எடுத்து சப்ளை பண்ணவில்லையானால், அடுத்து க்யூவில் காத்திருக்கும் பெங்குயின்களின் முகம் ‘சிவப்பா’க மாறும். விருட்டென்று வெளியேறி விடுவாரகள். என் பேரன் அலறுவான்: ‘பாட்டி, பாட்டி, மூஞ்சி செவந்து போச்சு, சீக்கிரம் சீக்கிரம் உட்கார வை’. அவசரமாக மௌஸ்-ஐ இங்கும் அங்கும் நகர்த்தி……  அப்பா! பேரன் முகத்தில் சிரிப்பு வரும்.

சற்று நேரம் கழித்து இடம் காலியானவுடன் முகம் சிவந்தவர்களை  அமர்த்தி அவர்கள் கேட்டதைக் கொடுத்தால், சற்று குறைவாக டிப்ஸ் வைப்பார்கள்.

பென்னிக்கு புது ஷூக்கள் வாங்கலாம். இன்னும் வேகமாக ஓடி ஓடி சப்ளை செய்வாள்.  ஹோடேலின் உள்அமைப்புகளை மாற்றலாம். தொலைக்காட்சி பெட்டியை வைத்தால், உணவுக்குக் காத்திருக்கும் பெங்குவின்கள் சற்று பொறுமை காக்கும். விருந்தினர்கள் உட்கார்ந்தவுடன், உணவு பரிமாற தாமதமானால் அப்போதும் முகம் சிவந்து வெளியேறிவிடுவார்கள். ‘சீக்கிரம் சீக்கிரம் சாப்பாடு கொண்டு வா…ஆஅ…..’ என்பான் பேரன்.

ஒரு நாளைக்கு இவ்வளவு என்று பென்னி சம்பாதிக்க வேண்டும். குறைவாக சம்பாதித்தால், மறுபடி அதே நாளை ஆட வேண்டும். விருந்தினர்கள் வருவதும், டேபிளில் உட்கார்ந்தவுடன், அவர்கள் கையில் மெனு கார்டு வருவதும், உணவு வரும்வரை விருந்தினர்கள் காலை ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பதும் அழகோ அழகு!

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விலை. பின்னணி இசை நன்றாக இருக்கும். காசை எடுத்து பாக்கெட்டில் பென்னி போடும்போது காசுகள் குலுங்கும் ஓசை; விருந்தினர்கள் ஆர்டர் எடுத்துக் கொள்ள பென்னியை கூப்பிடும் ‘ஹலோ’ எல்லாமே நன்றாக இருக்கும். நானும் என் சின்னப் பேரனும் ரசித்து ரசித்து ஆடுவோம்.

மூன்றாவது உணவகத்தின் பெயர் Ice Berg Cafe. இங்கு வரும் விருந்தாளிகள் எல்லோரும் கழுத்தில் ஸ்கார்ப் கட்டிக் கொண்டு வருவார்கள். அண்டார்டிகாவின் சமீபம் ஆயிற்றே!

மூன்றாவது சுற்றும் வெற்றிகரமாக ஆடிவிட்டால், பென்னி நமக்கெல்லாம் ‘டாடா’ காட்டிவிட்டு, சூப்பராக உடை அணிந்துகொண்டு, ஸ்டைலாக கோலா குடித்தபடியே, கப்பல் ஏறி அண்டார்டிகா போய்விடுவாள்.

இப்போது பேரன்கள் இருவரும் பெரியவர்களாகி படிப்பில் ரொம்பவும் மும்முரமாக இருக்கிறார்கள். அதனால் கார்டூன் பார்ப்பதோ, பெங்குயின் டைனர் விளையாடுவதோ இல்லை. வெறும் ஸ்பைடர் சாலிடேர் தான்!

நீங்களும் பெங்குயின் டைனர் ஆடலாம் : http://www.2dplay.com/