மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

இன்றைய செய்தித் தாளில் வந்த ஒரு செய்தி:

உலக மக்களில் மிகவும் மகிழ்ச்சியாக  இருப்பவர்கள் பட்டியலில்  இந்தியர்கள் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள்!

பணப் பற்றாக்குறை, சண்டைகள், முரண்பாடுகள், இயற்கையின் சீற்றம் இவை எல்லாவற்றையும் தாண்டி இந்தோனேஷியா, இந்தியா, மெக்ஸிகோ நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் என்ற பட்டியலில் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளார்கள்.

பணத்தைக் கொண்டு மகிழ்ச்சியை வாங்க முடியாது என்பதை இந்த ஆய்வு நிரூபித்து இருக்கிறது. மிக முன்னேறிய நாடான அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருக்கும் மக்கள் அத்தனை சந்தோஷமாக இல்லையாம்.

மக்களின் மகிழ்ச்சியை  எது நிர்ணயிக்கிறது? நல்ல  சாப்பாடு ஒருவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கலாம்; கேர் ஆப் பிளாட்பாரம் என்றால் தலைக்கு மேல் ஒரு கூரை இருந்தால் மகிழலாம். இதனால் தெரிய வருவது யாதெனில், மகிழ்ச்சி என்பது ஒரே ஒரு விஷயத்தை மட்டும் பொறுத்தது அல்ல. ஒருவருக்கு மகிழ்ச்சியைக்  கொடுக்கும் ஒரு விஷயம் இன்னொருவருக்கு மகிழ்வைக்  கொடுக்காமல் போகலாம்.

ஆனால் இந்த ஆய்வின்படி குடும்ப அமைப்பு – நிலையான, புரிதலுடன் கூடிய உறவுகள் – ஒருவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்ற ஒரு ஆச்சர்யமான விஷயம் தெரிய வந்திருக்கிறது.

சந்தோஷத்திற்கான 10 மந்திரங்கள் இதோ:

1.மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம்

இதற்குக் காரணம் நம் வழிதான் சிறந்தது என்று நாம் எண்ணுவது; மற்றவர்களின் தனித்தன்மையை உணர மறுப்பது. இதனால் நம் அமைதி குலைகிறது; நமக்கு நாமே ஆபத்துக்களை, எதிரிகளை உருவாக்கி கொள்ளுகிறோம்; நம்மைப்போல் மற்றவருக்கும் சிந்திக்கக்கூடிய திறன் உண்டு; அவர்களது சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் முடிவு எடுப்பார்கள்; அவர்களாகவே வந்து கேட்டால் அன்றி மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

2. மன்னிப்போம் மறப்போம்!

இந்த மனோபாவம் அமைதியான வாழ்க்கைக்கும் உறவுகள் நிலைக்கவும் மிகவும் தேவையான ஒன்று. யாரோ எப்போதோ நம்மை காயப்படுத்தி இருப்பார்கள்; ஒரு முறை நடந்ததை திரும்பத்திரும்ப நினைத்து நம் அமைதியை இழக்க வேண்டாமே! பழைய, ஆறிப்போன புண்களைக் கிளறிவிடுவானேன்? தூக்கம் கெட்டு, இரத்த அழுத்தம் அதிகமாகி, குடல் புண்கள் ஏற்பட்டு நம் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளுவானேன்?

3. பிறரது அங்கீகாரத்தை எதிர்பார்க்காதீர்கள்: 

யாருமே யாரையுமே அனாவசியமாக புகழுவதில்லை. நீங்கள் பதவியில் இருக்கும்போது சல்யூட் அடிப்பவர்கள், அதிகாரம் போனவுடன் உங்களையும், நீங்கள் செய்த நல்ல காரியங்களையும் மறந்து விடுவார்கள். இப்படிப்பவர்களிடம் அங்கீகாரத்தை எதிர்பார்த்து ஏன் ஏமாற வேண்டும்? உங்கள் கடமையை பலன் பாராமல் நல்ல மனதுடன் செய்யுங்கள்.

4. பொறாமை வேண்டாம்:

எல்லோருடைய வாழ்க்கையுமே முன்பே எழுதப்பட்ட ஒன்று. நீங்கள் பணக்காரன் ஆகவேண்டும் என்று இருந்தால் கட்டாயம் பணம் உங்களிடம் குவியும்; இல்லை என்றால் இல்லை. உங்களின் அதிருஷ்டம் அல்லது துரதிர்ஷ்டம் இரண்டுக்கும் வேறு யாரும் காரணம் அல்ல. மற்றவர்களுடைய அதிருஷ்டத்தை பார்த்துப் பொறாமை வேண்டவே வேண்டாம். பொறாமைப் படுவதால் எதுவும் மாறப் போவதில்லை; மன அமைதிதான் குலையும்.

5. சூழ்நிலைக்கு ஏற்ப மாறுங்கள்: 

குல்லாய்க்குத் தகுந்தவாறு தலையை வெட்டுவதா? தலைக்கு தகுந்தவாறு குல்லாவை வெட்டுவதா? எது விவேகமான செயல்? சூழ்நிலைக்குத் தக்கவாறு உங்களை மாற்றிக் கொள்ளுவதால், பாதகமான சூழல் கூட சாதகமாக மாறும் அதிசயத்தை உணரலாம்.

6. சரிசெய்ய முடியாததை பொறுத்துக் கொள்ளுங்கள்:

நம் அன்றாட வாழ்வில் பல விஷயங்கள் நம் கட்டுப் பாட்டில் இல்லாதவை. இவற்றை பொறுத்துக் கொள்ளுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? கஷ்டங்களை பொறுமையுடன் எதிர்கொள்ளுவதால் மன உறுதியும்  எந்தவிதமான சூழ்நிலையிலும் நிதானம் தவறாமல் நடந்து கொள்ளும் பக்குவம் வரும்.

7. உங்கள் எல்லையை தெரிந்து கொள்ளுங்கள்:

எல்லோரையும் திருப்தி படுத்த வேண்டும் என்றோ, என்னால் முடியும் என்று காட்டவோ ஏகப்பட்ட பொறுப்புகளை தலையில் சுமக்காதீர்கள். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு: Don’t bite more than you can chew என்று. நாம் எல்லோரும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய பழமொழி இது. பொறுப்புக்களை நிறைவேற்றிய பின் இருக்கும் நேரத்தை இறைவனை பிரார்த்திக்கவும், தியானம் செய்யவும், சுயப் பரிசோதனை செய்யவும் பயன் படுத்துங்கள்.

8. தினமும் தியானம் பழகுங்கள்:

தியானம் மன அமைதியைக் கொடுப்பதுடன், பலவிதமான மன உளைச்சல்களிலிருந்தும் நம்மை காக்கிறது. அரை மணி நேரத் தியானம் மீதி இருக்கும் 23 ½ மணி நேரத்திற்கு நம்மை அமைதிப் படுத்தும். சின்னச் சின்ன விஷயங்கள் நம்மை அலை பாய வைக்காது. அரை மணி நேரம் உட்கார முடியுமா? எத்தனை வேலை இருக்கிறது என்று நினைக்காமல் தியானம் செய்யுங்கள்; உங்களது செயல் திறன் தியானத்தினால் பன்மடங்கு அதிகரிக்கும்.

9. மனதை எப்போதும் ஆக்க பூர்வமான வழியில் செலுத்துங்கள்:

மனம் காலியாக இருக்கும் போது தான் வேண்டாத எண்ணங்கள் வந்து குடியிருக்கும். உங்களுக்குப் பிடித்த ஒரு பொழுதுபோக்கை தொடர்ந்து செய்து வாருங்கள். சமூக நற்பணி அல்லது பக்கத்தில் தேவைப் படுபவர்களுக்கு உதவுதல் என்று ஏதாவது செய்து கொண்டே இருங்கள். இதனால் உங்களுக்கு பண வரவு இல்லாமல் போகலாம்; ஆனால் இவையெல்லாம் ஆத்மாவிற்கு நன்மை அளிப்பவை.

10. எந்தக் காரியத்தையும் தள்ளிப் போடாதீர்கள்:

ஒரு காரியத்தை எடுத்தால் உடனே செயல் பாட்டில் இறங்குங்கள். இப்போது செய்வதா, அல்லது பிறகா என்று குழப்பம் வேண்டாம். காலம் பொன்னானது. வீண் செய்யாதீர்கள். ஒரு முறை தோல்வி வந்தால் மனம் உடைய வேண்டாம்.  உங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். முடிந்து போன விஷயத்தை நினைத்து புலம்பாதீர்கள். வருத்தப் படாதீர்கள். நடந்து முடிந்தது முடிந்ததுதான்.

கடந்த  காலத்தை மாற்றி எழுத முடியாது; ஆனால் எதிர்காலம் நம்  கையில் அதை ஆக்கபூர்வமாக மாற்றலாம். 

மகிழ்ச்சியாக இருப்பது நம் கையில் தான் இருக்கிறது; இருப்போமா?

 

 

published in a2ztamilnadunews.vom

30 thoughts on “மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

    1. நன்றி வை.கோ. சார். உங்கள் பின்னூட்டம் பார்த்தாலே மகிழ்ச்சிதான். உங்கள் எழுத்துக்களை படிப்பது கூட மகிழ்ச்சிக்கு காரணம் தான். உங்கள் எழுத்துப் பணி மேலும் மேலும் தொடரட்டும்.
      அன்புடன்
      ரஞ்சனி
      .

  1. சந்தோஷத்திற்கான 10 மந்திரங்கள்

    மகிழ்ச்சிக்குரிய பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

  2. சந்தொஷம் வெளியே வாங்க கிடைக்காது அது நமக்குக்குள்ளேயேதான் இருக்கிறது
    அதனை வெளிக்கொணரத்தான் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டும் மகிழ்ச்சிக்கான கட்டுரை பார்க்க மிக்க மகிழ்ச்சி ரஞ்சனி பாராட்டுக்கள்

    1. ரொம்ப சரியாகச் சொன்னீர்கள் விஜயா!
      மகிழ்ச்சிக்கான கட்டுரையைப் பார்த்து நீங்கள் மிகக் மகிழ்ச்சி கொண்டது எனக்கு பெருத்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது!
      நன்றி!

  3. சிறப்பான கருத்துகள். தொடர்வதில் தான் இருக்கிறது சூட்சுமம்! 🙂

  4. வாருங்கள் வெங்கட். ரொம்ப நாட்களாக காணோமே என்று நினைத்திருந்தேன். நீங்கள் இன்று வந்தது என்னுடைய மகிழ்ச்சிக்கு இன்னொரு காரணம்.
    நன்றி!

  5. /. மிக முன்னேறிய நாடான அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருக்கும் மக்கள் அத்தனை சந்தோஷமாக இல்லையாம்.////

    பெறுதான் முன்னேறிய நாடு ஆனால் இந்த மக்களிடம் உண்மையாகவே பணம் முன்பு மாதிரி இல்லை. இந்தியாவில் வேலை இல்லாமல் சில வருடங்கள் இருந்தாலும் எப்படியோ பொழைப்பை நடத்திவிடலாம். இங்கே வேலை போனால் உடனடியாக் ஹெல்த் இன்சுரன்ஸ் கட் ஆகிவிடும். அது இல்லாமல் இருந்தால் சந்தோசம் எல்லாம் காணாமல் போகிவிடும்

    1. நீங்கள் சொல்வது நிஜம். சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா?
      உங்கள் தொடர் வருகை எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
      நன்றி மதுரை தமிழ் இளைஞரே!

  6. ரஞ்சனி,

    10 மந்திரங்களும் படிக்க எளிதாகத்தான் உள்ளன.மகிழ்ச்சி வேண்டுமெனில் செயல்படுத்தத்தான் வேண்டும்.

    “கடந்த காலத்தை மாற்றி எழுத முடியாது;ஆனால் எதிர்காலம் நம் கையில் அதை ஆக்கபூர்வமாக மாற்றலாம்”____நாமும் நடைமுறைப்படுத்த முயற்சிக்க‌லாம்.

    1. நமக்கு சந்தோஷம் வேண்டுமென்றுதானே ஓய்வில்லாமல் உழைக்கிறோம்.
      பணம் சம்பாதிக்கிறோம். அப்படியும் சந்தோஷம் இல்லையென்றால், நம்மிடம் தான் ஏதோ கோளாறு என்று தோன்றுகிறது.
      நன்றி சித்ரா!

  7. வாழ்க்கைக்கு அவசியமான பத்து அறிவுரைகள்! சூப்பர் அம்மா! நாம் வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதும் , இல்லாமல் போவதும் , சாத் சாத் , நம் கையில் தான் இருக்கிறது!

  8. எல்லோரும் இதை உணர்ந்தால் நன்றாக இருக்கும், இல்லையா?
    நன்றி மஹா!

  9. ரஞ்சனி,

    உங்களுடைய ten commandments ம் அருமையாக இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையே கடவுளால் திட்டமிட்டபடி கதை வசனத்துடன் அவனே அரங்கேற்றுகிறான்.. நம் கையில் எதுவுமே இல்லை. என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் . மூளைக்குத் தெரிகிறது ,ஆனால் மனதிற்குத் தெரிவதில்லையே!

    நல்லதொரு பகிர்வு,பாராட்டுக்கள்.

    ராஜி

  10. 10 மந்திரங்கள் நன்றாக உள்ளன.
    ஓரளவு தெரிந்தவையும் தான்.
    மிக பயன் தரும் பலருக்கு.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

  11. இந்தியர்கள் எல்லாவற்றையும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதால் எப்போதும் மகிழ்ச்சியாகயிருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.

  12. இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன என்ற மனோபாவத்தை சொல்லுகிறீர்களா?

    ஒருவிதத்தில் இது சரி என்றே தோன்றுகிறது. எதற்கு என்று கவலைப் படுவது, இல்லையா?

  13. உங்களின் கட்டுரையைப் படித்ததே
    எனக்கு மனமகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
    நன்றி.

  14. வாருங்கள் அருணா!
    என் நடையிலேயே ஒரு பின்னூட்டம் கொடுத்திருக்கிறீர்களே!
    நன்றி!

  15. வெண்ணெயை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன், சந்தோஷம் நமக்குள்ளே தான் இருக்கிறது அதை உணரத்தான் பழக வேண்டும்.பத்து அறிவுரைகளும் அருமை, பாராட்டுக்கள் ரஞ்சனி மேடம்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s