அழகுக் குறிப்பு

ஒரு நாள் ஒரு பத்திரிக்கை அலுவலகத்திற்கு போன் செய்திருந்தேன். இன்டர்நெட் மூலம் என் படைப்புகளை அனுப்ப இமெயில் ஐடி கேட்டேன். உடனே பத்திரிகை அலுவலர் “என்ன மேடம், சமையல் குறிப்பா?” என்றார். எனக்கு கொஞ்சம் கோவம், வியப்பு; பெண்களின் படைப்பு என்றால் சமையல் குறிப்பு, கோலம் இவை தானா? சரி அவரையே கேட்போம் என்று “ஏன் சார், பெண்கள் என்றால் சமையல் குறிப்பு தானா?” என்றேன். “பொதுவா அப்படித்தான்……” என்றார்.

இந்த உரையாடலுக்குப் பிறகு எனக்குள் ஒரு குறுகுறுப்பு. “பெண்கள் இன்டர்நெட்டில் எதை அதிகம் படிக்கிறார்கள்?” என்று ஆராய்ந்தால் முதல் இடம் சமையலுக்குத்தான்! அடுத்தாற்போல் அழகு குறிப்பு; மூன்றாவது இடம் எடை குறைப்பது. சரி நான் இப்போது எதைப் பற்றி எழுதுவது? சமையல்? அழகுக் குறிப்பு? எடை குறைப்பு?

சமையல் குறிப்பு நிறைய நிறைய இருக்கிறது; சரி எடைக்குறைப்புப் பற்றி எழுதலாம் என்றால் ‘முதலில் நீ உன் எடையைக் குறைத்து விட்டு பிறகு எழுது’ என்று என் மனசாட்சி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் சொன்னது. கடைசியில் அழகுக் குறிப்பு எழுதலாம் என்று தீர்மானம் செய்தேன். ‘முதலில் நீ அழகாக………….’ என்று ஆரம்பித்த மனசாட்சியை ‘ஏய்! சும்மா இரு. அழகாக இருப்பவர்கள் அழகுக் குறிப்பு எழுதுவதில்லை, முட்டாள் மனசாட்சியே!’ என்று அடக்கினேன்

ரொம்ப நேரம் யோசித்து சரி புதுவிதமான அழகுக் குறிப்பு ஏதாவது கிடைக்கிறதா என்று கூகுளில் தேட ஆரம்பித்தேன்.  தலை முடியில் தொடங்கி பாதம் வரை விதம் விதமாக எத்தனை குறிப்புகள்? ஆனால் புதுமையாக ஒன்றுமே இல்லை. மறுபடி தேடித், தேடித், தேடித்…….
கடைசியில் நான் எதிர்பார்த்த மாதிரியே ஒரு குறிப்பு! யுரேகா! ஆட்ரி ஹெப்பர்ன் அழகுக் குறிப்பு  என்று போட்டிருந்தது. ஆஹா! ஆங்கில நடிகை அல்லவா? கட்டாயம் பிரமாதமாக இருக்கும் என்று சந்தோஷமாக இருந்தது. படிக்க ஆரம்பித்தேன். ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது எனக்கு. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

ஆட்ரி ஹெப்பர்ன் அழகுக் குறிப்பு 

யார் இந்த ஆட்ரி ஹெப்பர்ன்? 1929 ஆம் ஆண்டு பிறந்த பிரிட்டிஷ் நடிகை. மிகச் சிறந்த நடிகை மட்டுமல்ல; சிறந்த மனிதாபிமானி என்று இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது இவரது வலைத்தளம். ஐம்பது, அறுபதுகளில் பல வெற்றிப் படங்களில் நடித்த இவரது ‘My fair Lady’ என்கிற திரைப் படம் நம் ஊரிலேயே ஓடு ஓடென்று ஓடிற்று. 1964 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இது.

பெர்னார்ட் ஷா எழுதிய ‘பிக்மேலியன்’ என்ற மேடை நாடகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த படத்தை திரு. சோ அவர்கள் ‘மனம் ஒரு குரங்கு’ என்ற பெயரில் நாடகமாக தயாரித்தார். திருமதி சுகுமாரி கதாநாயகி. பிறகு முத்துராமன், கே.ஆர். விஜயா நடிக்க சினிமாவாகவும் வந்தது.

1950 களிலேயே UNICEF நிறுவனத்தின் சார்பில் பல சமுதாய நற்பணிகளில் பங்கு கொண்ட இவர் தனது கடைசிக் காலத்தில் பெரும் பகுதியை ஆப்ரிகா, தெற்கு அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் இருக்கும் பின் தங்கிய மக்களின் நலப் பணிகளுக்காக செலவழித்தார். இந்த நிறுவனத்தின்  ‘குட்வில் அம்பாசடர்’ பணியாற்றிய இவர் 1993 இல் தனது 63 வது வயதில் குடல் வால் புற்று நோயால் இயற்கை எய்தினார்.

இனி இவர் எழுதிய அழகுக் குறிப்பு பார்க்கலாமா?

  • கண்கள் அழகாக வேண்டுமா? உங்களைச் சுற்றியுள்ளவர்களின் ‘நல்ல தன்மை’ யைப் பார்க்கவும்.
  • மெல்லிய உடல் வேண்டுமா? உங்களின் உணவை பசித்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  • அழகான கூந்தலுக்கு: தினமும் ஒரு முறையாவது ஒரு குழந்தை உங்கள் கூந்தலை தன பிஞ்சுக் கைகளால் கோதி விடட்டும்.
  • உங்களது அறிவுத் திறனால் நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட தோளும் பெறுங்கள்.
  • யாரையும் துச்சமாக எண்ணாதீர்கள்; பொருட்களை விட மனிதர்கள் தான் பாதுகாக்கப் பட வேண்டியவர்கள்; துயரத்தில் இருப்பவர்களை மீட்டுவாருங்கள்; அவர்கள் நம்பிக்கையை புதுப்பியுங்கள்; கவலைகளில் இருந்து விடுவியுங்கள்; அவர்களுக்கு புத்துயிர் கொடுங்கள்; அவர்களது பாதையை சீர்படுத்துங்கள்.
  • இதனால், உங்களுக்கு ஒரு தேவை ஏற்படும்போது, உதவ ஆயிரம் கரங்கள் இருக்கும்.
  • வயது ஆக ஆக உங்களுக்கு இரண்டு கைகள் இருப்பது – ஒன்று உங்களுக்காகவும், இன்னொன்று மற்றவருக்காகவும் என்பதை உணருங்கள்.
  • பெண்ணின் அழகு அவளது உடைகளிலோ, அவளது உருவத்திலோ, கூந்தலை முடியும் அழகிலோ இல்லை.
  • ஒரு பெண்ணின் அழகை, அவளது அன்பு நிறைந்த இதயம் என்கிற வாசல் மூலம் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
  • ஒரு பெண்ணின் அழகு அவள் முகத்தில் இருக்கும் மறுவில் இல்லை. அவளது உண்மையான அழகு அவளது ஆத்மாவை பிரதி பலிப்பது. அவள் நம்மிடம் காட்டும் பரிவில், பேரார்வத்தில் அழகு இருக்கிறது;  வருடங்கள் செல்லச் செல்ல அவளது அழகும் வளர்ந்து கொண்டே போகிறது.

படித்து முடித்தவுடன் நீண்ட மௌனத்தில் ஆழ்ந்து விட்டேன். எத்தனை அருமையான, சத்தியமான வார்த்தைகள். கடைப் பிடிப்போமா பெண்மணிகளே?

published in a2ztaminadunews.com

23 thoughts on “அழகுக் குறிப்பு

  1. ரஞ்சனி ,

    உங்கள் அழகுக்குறிப்பு படித்தேன்.
    மிகவும் அருமையாக் இருக்கிறது.பெண்களின் உண்மையான அழகு எதில் இருக்கிறது என்று அழகாக உணர்த்திவிட்டீர்கள்.
    படித்து முடித்தவுடன் நானும் உங்களைப் போலவே மௌனித்து விட்டேன்.
    எத்தனை உண்மையான வார்த்தைகள். இதை விட்டு விட்டு புற அழகிற்கு எத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
    உண்மை அழகினை அழகாய் பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள்.
    மற்றும் நன்றியும் கூட.

    ராஜி

    1. நான் எழுதிய பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது இது. போன வருடம் இதைபோல பகிர்ந்து கொள்ளத் தெரியாமல் இருந்தது. அதனால் இதை இப்போது மறுபடி பகிர்ந்து கொண்டேன்.

      உங்களுக்கும் இது பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி ராஜி!

  2. அழகுக்குறிப்பு அழகோ அழகு பெண்களுக்கு பொன் நகை எதற்கு புன்னகை இருக்க என்று சும்மாவா சொன்னார்கள்? அக அழகை ரசிக்கக் கற்றுக்கொண்டால் போதுமே
    வாழ்வில் முன்ணேறிவிடலாம் அல்லவா?

  3. ரொம்பவும் நிஜம் விஜயா நீங்கள் சொல்வது. ரசித்துப் படித்து கருத்துரை கொடுத்ததற்கு நன்றி!

  4. சரி எடைக்குறைப்புப் பற்றி எழுதலாம் என்றால் ‘முதலில் நீ உன் எடையைக் குறைத்து விட்டு பிறகு எழுது’ என்று என் மனசாட்சி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் சொன்னது.

    அருமை அருமை அருமை…. பாதி சமயம் இந்த மனசாட்சியே தான் நமக்கு வில்லன்/வில்லி …..

    1950 களிலேயே UNICEF நிறுவனத்தின் சார்பில் பல சமுதாய நற்பணிகளில் பங்கு கொண்ட இவர் தனது கடைசிக் காலத்தில் பெரும் பகுதியை ஆப்ரிகா, தெற்கு அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் இருக்கும் பின் தங்கிய மக்களின் நலப் பணிகளுக்காக செலவழித்தார்

    எவ்வளவு பெரிய மனசு வேண்டும் …..

    யாரையும் துச்சமாக எண்ணாதீர்கள்; பொருட்களை விட மனிதர்கள் தான் பாதுகாக்கப் பட வேண்டியவர்கள்; துயரத்தில் இருப்பவர்களை மீட்டுவாருங்கள்; அவர்கள் நம்பிக்கையை புதுப்பியுங்கள்; கவலைகளில் இருந்து விடுவியுங்கள்; அவர்களுக்கு புத்துயிர் கொடுங்கள்; அவர்களது பாதையை சீர்படுத்துங்கள்

    ரொம்ப சந்தோஷமாக இருக்கு ரஞ்சனி…. சிறிய அளவில் செய்துக்கொன்டிருப்பது ……..மன நிறைவை அளிக்கிறது

    பெண்ணின் அழகு அவளது உடைகளிலோ, அவளது உருவத்திலோ, கூந்தலை முடியும் அழகிலோ இல்லை’

    ரஞ்சனி என்னுடைய ‘இன்று ஒரு மைல் கல் ” இல் கிட்டத்தட்ட இதே வரிகளை நான் எழுதியுள்ளேன்… படித்தீர்களா?இதை பற்றி மேலும் விரிவாக நான் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

    பகிர்வுக்கும், அதில் இருக்கும் பொது அறிவு விஷயங்களுக்கும் மிக்க நன்றி….

  5. சிறிய அளவில் செய்து கொண்டிருப்பது ……..(என்ன புள்ளி,புள்ளி, புள்ளி?) உங்களுக்கு மன நிறைவை அளிப்பவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    உங்களுடைய இன்று ஒரு மைல் கல் படித்த நினைவு. திரும்பவும் படிக்கிறேன்.
    நானும் ஒரு மின்னஞ்சல் செய்திருக்கிறேன்.

  6. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். மொத்தத்தில் நல்ல எண்ணங்களின் அடிப்படைதான் எல்லாம். மிகவும்பிடித்திருந்தது.

  7. எண்ணங்கள் தான் நம் வெளி அழகுக்குக் காரணங்கள். ரொம்ப சரியாகச்சொன்னீர்கள்.
    நன்றி!

  8. ரஞ்சனி,

    ஆட்ரி ஹெப்பர்னின் அழகுக் குறிப்புகளைப் படிக்கப்படிக்க ஏனோ அன்னை தெரஸாதான் நினைவுக்கு வந்தார்.இவரது அழகுக் குறிப்புகளை பெற்றுக்கொள்ள சிறிதளவாவது முயற்சி செய்வோம்.

    பதிவின் முதல் பகுதி நகைச்சுவையாகவும்,இரண்டாம் பகுதி சிந்திக்கவும் வைத்துவிட்டது.

  9. மன அழகுக் குறிப்புகள். நல்ல தொகுப்பு 🙂

    1. வாருங்கள் சித்திரவீதிக்காரன்!
      உங்கள் மறுமொழிக்கு இப்போதுதான் பதில் அளிக்கிறேன். மன்னிக்கவும்.
      எல்லோரும் இதைப் பின்பற்றினால் ‘fair&lovely’ விற்பனை என்னாவது?
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    1. வாருங்கள் உஷா!
      படித்து ஒரு அருமையான கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

Leave a comment