பணி ஓய்வு பெறப் போகிறீர்களா?

பணி ஓய்வு

நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வருடங்களாக ஒருநாளைப் போல காலை ஐந்தரை மணிக்கு எழுந்திருப்பதும் இயந்திரம் போல சமையல் செய்து முடித்து அலுவலகம் வருவதும், வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பும்போது அடுத்த நாளைக்கு தேவையான கறிகாய்கள், பழம், சில சமயங்களில் மளிகை சாமான்கள் வாங்கிப்போவதும்…. மூச்சுவிடாமல் செய்யும் வேலைகள் எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். இது மனதிற்கு மிகப் பெரிய ஆசுவாசத்தைக் கொடுத்தாலும், அலுவலகத்தில் இத்தனை நாட்கள் செலவழித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் இனி என்ன செய்வது? சோம்பேறியாகி விடுவோமோ? மதிய நேரத்தில் தூங்கித் தூங்கி காலத்தைக் செலவிட வேண்டியிருக்குமோ? இத்தனை நாட்கள் தூங்குவதற்கு நேரமே கிடைக்காமல் தவித்தோம்; இனி தூக்கமே வாழ்க்கை என்று ஆகிவிடுமோ? பணியிலிருந்து ஓய்வு என்பது சிறிது நாட்களுக்கு நன்றாக இருக்கும். பிறகு என்ன செய்வது? இந்தக் கவலையும் கூடவே எழுந்தது விசாலத்திற்கு.

 

பணி ஓய்வுப் பெறப்போகிறோம் என்ற உணர்வே ஐந்தில் நான்கு மூத்த குடிமக்களுக்கு மனஅழுத்தத்தைக் கொடுக்கிறது. இனி என்ன செய்வது என்பது தான் மிகவும் முக்கியமான விஷயம். நாமெல்லோருமே சிறிய வயதில் நம் சொந்த ஊரில் – முக்கால்வாசி அது ஒரு கிராமமாக இருக்கும் – காவிரிக் கரையிலோ, தஞ்சாவூர் பக்கமோ வயல்வெளியைப் பார்த்திருப்போம். பணிஓய்வு பெற்றுவிட்டோம் என்று இப்போது வயலில் இறங்கி வேலை செய்வது இயலாத ஒன்று. இத்தனை நாள் இல்லாத வழக்கமாக திடீரென  புத்தகம் படிப்பதும் முடியும் காரியமில்லை. பணிஓய்வு பெற்றவர்களில் 62.3% பேர்கள் உண்மையில் சலிப்பு அடைகிறார்கள். இந்த சலிப்பு அவர்களுக்கு தாங்கள் எதற்கும் லாயக்கில்லை என்ற உணர்வைக் கொடுக்கிறது. ஒரு சிலர் பழையபடி 9-5 நேரப்படியே வேலை வேண்டும் என்று வேலை தேடத் தொடங்குகிறார்கள். பலர் என்ன வேலையானாலும் பரவாயில்லை; ஒருநாளைக்கு மூன்று நான்கு மணிநேரம் வேலை என்றிருந்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுகிறார்கள்.

 

பெண்களைவிட தங்கள் பணி ஓய்வு பற்றி ஆண்கள் அதிகம் கவலைப்படுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். முதல் காரணம் இதுவரை புருஷ லட்சணமாக இருந்த உத்தியோகம் இனி இல்லை என்ற நிலைதான். என்னதான் இப்போதெல்லாம் பணி ஓய்வு ஊதியம் என்பது தாராளமாக வந்தாலும், மாதாமாதம் வருவது போல ஆகுமா? கையில் காசு அவ்வளவாக இருக்காது. பணப் புழக்கம் குறைவதால், முன் போல நண்பர்களுடன் வெளியில் போவது, வெளியில் சாப்பிடுவது எல்லாமே குறையும். எல்லாவற்றையும் விட மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் பொழுதை எப்படிப் போக்குவது என்பதுதான். சிறிய வயதிலிருந்தே ஏதாவது விளையாட்டோ, அல்லது படிப்பது, எழுதுவது என்று பழகியிருந்தால் அவற்றை வளர்த்துக் கொள்ளலாம். திடீரென்று இப்போது ஏதாவது கற்றுக்கொள்ள முடியுமா? செய்தித்தாள் தவிர வேறு புத்தகங்கள் எதுவும் படித்துப் பழகாதவர்களுக்கு புதிதாகப் புத்தகம் படிக்க ஆரம்பிப்பது சற்று கடினம் தான்.

 

புதிதாக பணி ஓய்வு பெற்ற ஆண்கள் சில கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. முதலாவது புதிய வாழ்க்கை – அலுவலகம் செல்லாத வாழ்க்கைக்குப் பழக வேண்டும். அலுவலகம் செல்லும் இத்தனை வருடங்களில் ஒரு ஒழுங்குமுறை வந்திருக்கும். நேரத்திற்கு எழுந்து, நேரத்திற்குக் குளித்து, நேரத்திற்கு சாப்பிட்டு என்று நேரம் தப்பாது நடந்து வந்தது. முதலில் செய்தித்தாள் படிப்பது, முதலில் டிபன் சாப்பிடுவது, முதலில் குளிப்பது என்று எல்லாவற்றிலும் முதல்வராக இருந்திருப்பார் இத்தனை நாட்கள்.

 

இப்போது வேறு ஒருவிதமான வாழ்க்கை. விருப்பப்பட்ட நேரத்தில் எழுந்திருப்பது;  நீண்ட நேரம் தொலைக்காட்சி முன் உட்கார்ந்துகொண்டு ஒவ்வொரு செய்திச் சானலாக மாற்றிக் கொண்டே இருப்பது. இதுவரை நேரப்படி நடந்து வந்த விஷயங்கள் நேரக் குளறுபடியுடன் நடக்க ஆரம்பிக்கும். எழுந்திருப்பது தாமதம் என்றால் மற்ற வேலைகளும் தாமதம் ஆகும். குளிப்பது, சாப்பிடுவது எல்லாமே நேரம் தவறி நடந்து வீட்டிலுள்ளவர்களின் கோபத்திற்கு இலக்காவார்கள். இவர்களுக்கு நேரக்கட்டுப்பாடு இல்லையென்றாலும், வீட்டில் இருப்பவர்களுக்கு – குறிப்பாக மனைவிக்கு நாள் முழுவதும் வேலை செய்யும்படி ஆகிவிடும். இப்படி நேரம் தவறிச் செய்வதும் கூட சில நாட்களில் அலுத்து விடும். அடுத்து என்ன?

 

இத்தனை நாட்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தவரின் பார்வை வீட்டிலுள்ளவர் மேல் விழுகிறது. முதலில் இவர் கண்களில் விழுவது மனைவி தான். அவள் செய்யும் ஒவ்வொரு செய்கையையும் கவனிக்க ஆரம்பிக்கிறார். சில கணவன்மார்கள் ‘பாவம் எத்தனை வேலை இவளுக்கு. நாம் கொஞ்சம் உதவலாம்’ என்று மனைவி மேல் கரிசனம் காட்டுவார்கள். சிலர் ‘எதற்கு இவள் இத்தனை நேரம் கழித்து சாப்பிடுகிறாள்? கிடுகிடுவென வேலையை முடிக்கத் தெரியவில்லை இவளுக்கு. நானாக இருந்தால் சீக்கிரம் முடித்து விடுவேன். சமர்த்து போதவில்லை!’ என்று நினைத்துக் கொண்டு அதை நிரூப்பிக்கவும் முயலுவார்கள். இரண்டுமே மனைவியை பாதிக்கும் என்பதை பல ஆண்கள் உணருவதில்லை. இவ்வளவு நாட்களாக இல்லத்தில் தனியரசு செலுத்திக் கொண்டிருந்த மனைவிக்கு இவரது தலையீடு நிச்சயம் ரசிக்காது.

 

என் தோழி ஒருவரின் கணவர் ஓய்வு பெற்ற புதிதில் அடிக்கடி இப்படிச் சொல்வாராம்: ‘இத்தனை நாள் ஓடி ஓடி உழைத்துவிட்டேன். இனிமேல் எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி. வாழ்க்கையை ரசிக்கப்போகிறேன். வேளாவேளைக்கு சாப்பிட்டுவிட்டு டீவி பார்ப்பது, தூங்குவது தான் இனி என் வேலை’ என்று. நாள் முழுவதும் இவரை வீட்டில் எப்படி சமாளிப்பது என்று ஒருவித பயம் வந்துவிட்டது என் தோழிக்கு. நல்லகாலம் சீக்கிரமே தோழியின் கணவருக்கு ஒரு பகுதி நேர வேலை கிடைத்து அவர் மறுபடியும் ஒரு ஒழுங்குமுறைக்குள் வந்துவிட்டார்.

 

பணி ஓய்வுக்குப் பின் நிறைய நேரம் கிடைக்கும், என்ன செய்யலாம்? ஒன்றுமே செய்யாமல் இருப்பதோ, அல்லது அதிகமாகச் செய்வதோ மறுபடியும் உங்களுக்கு மனஅழுத்தம், அமைதியின்மை, ஞாபகமறதி, தூக்கமின்மை, பசியின்மையை ஆகியவற்றை கொண்டு வரும்.

 

இதற்கு ஒரே வழி உங்களை நீங்கள் எப்படி பிசியாக வைத்துக் கொள்ளுகிறீர்கள் என்பதுதான்.

 

தற்காலிகமாகச் செய்யக்கூடிய சில விஷயங்கள்:

 • வாரத்திற்கு ஒருமுறை .அரசு சாரா அமைப்பு ஏதாவது ஒன்றில் சேர்ந்து தன்னார்வலராக சேவை செய்யலாம்.
 • மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கலாம். உங்களுக்குத் தெரிந்த பாட்டு, நடனம் ஆகியவற்றைச் சொல்லித் தரலாம்.
 • புதிதாக ஒரு பகுதி நேர வேலையில் சேரலாம்.
 • வீட்டில் தோட்டம் போட்டு பராமரிக்கலாம்.
 • விட்டுப்போன படிப்பைத் தொடரலாம்.
 • புதிதாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்ளலாம்.
 • பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பிக்கலாம். இத்தனை நாட்கள் வாசகியாக இருந்த நீங்கள் இப்போது எழுத்தாளராக மாறலாம்.
 • வீட்டில் சின்னதாக ஒரு நூலகம் அமைத்துப் பராமரிக்கலாம். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் புத்தகப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
 • வீட்டில் இணைய வசதி இருந்தால், வலைத்தளம் ஆரம்பித்து உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

 

 

இங்கும் சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்:

 • எதுவாக இருந்தாலும், அந்த வேலை உங்களுக்குப் பிடித்ததாக, உங்களை மனமுவந்து செய்யத் தூண்டுவதாக இருக்க வேண்டும். சமூகத்திற்காக ஒரு வேலையைச் செய்வது உங்கள் மன ஆரோக்கியத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. இத்தனை நாள் இந்த சமூகம் உங்களுக்குச் செய்தவற்றை நீங்கள் சமூகத்திற்குத் திருப்பி செய்வதும் உங்களுக்கு மனநிறைவைக் கொடுக்கும்.

 

 • தேர்ந்தெடுக்கும் வேலை மிகவும் சுலபமாகவோ, அல்லது மிகவும் கஷ்டமாகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மிகவும் சுலபம் என்றால் சீக்கிரமாக முடித்துவிடலாம் என்று தோன்றும். இன்றில்லாவிட்டால் நாளை என்று ஒரு சின்ன அலட்சியம் கூடத் தோன்றக்கூடும். ஆரம்பத்தில் இருந்த ஈர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடும். அதிக சிரமப்பட்டு செய்யவேண்டிய வேலை என்றாலும் மனஅழுத்தம் அதிகமாகி ஆர்வம் குறைந்துவிடும். உங்கள் கவனத்தையும், உங்கள் மனதையும் ஒருசேர கவரும் வண்ணம் ஒரு பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பதுதான் சிறந்தது.

 

பெண்கள் என்ன செய்வார்கள் என்று பார்ப்போம்:

பெண்கள் வீட்டு வேலைகளில் மூழ்கி விடுவார்கள் – வேலைக்குப் போனாலும், பணி ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது சமையலறை. எத்தனை வயதானாலும் சமையல் செய்வதில் அலுப்பு வராது பெண்களுக்கு. ஆனால் காலம் மாறிவிட்டது. எல்லாத் துறைகளிலும் பெண்களும் முன்னேறி வரும் இந்த காலகட்டத்தில் பணி ஓய்வு பெற்ற பின்னும் தங்கள் நேரத்தை சமையலறைக்கு வெளியே நல்லவிதமாக செலவழிக்க பெண்கள் விரும்புகிறார்கள். சில பெண்கள் கோவில், குளம் என்று கிளம்பிவிடுவார்கள். சிலர் ஏற்கனவே கைவந்த தையல் கலை, சங்கீதம் போன்றவற்றை மறுபடி பழகத் தொடங்குவார்கள். எதுவாக இருந்தாலும் உற்சாகத்துடன் செய்யவேண்டும்.

 

வேறு என்ன செய்யலாம்?

 

புதிதாக பணி ஓய்வு பெற்றவர்கள் 9 மணியிலிருந்து 5 மணிவரை என்ற பழக்கத்திலிருந்து வேலையே இல்லை நிலைக்கு வரும்போது மிகவும் திணறி விடுகிறார்கள் என்று ஹார்வர்ட் உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.

 

பணி ஓய்வுக்குப் பிறகு புதிய ஒரு போழுதுபோக்கையோ, புதியதாக ஒரு விளையாட்டையோ தேர்ந்தெடுத்து செய்யும் ஆண்கள் பல புதிய சாதனைகளைச் செய்கிறார்கள்; மிகவும் ஆர்வத்துடன் படிக்கிறார்கள்; தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ளுகிறார்கள். தங்கள் வயது, தங்களைப் போன்ற ஆர்வம் உள்ளவர்களுடன் பழகுகிறார்கள். பயிற்சியாளர்களுடன் அல்லது ஆசிரியர்களுடன் விடாமல் பேசிப் பழகி தங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்வதுடன் தீவிரப் பயிற்சிகளிலும் ஈடுபடுகிறார்கள் என்று ஆய்வுகள் சொல்லுகின்றன.

 

ஒரே ஒரு விஷயம் இங்கு நினைவில் கொள்ளவேண்டும்: நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேலை உங்கள் மனதிற்குப் பிடித்ததாகவும், உங்களிடம் இதுவரை மறைந்திருந்த திறமையை வெளிக் கொண்டு வரும்படியாகவும் இருக்க வேண்டும். நாம் செய்யும் வேலையில் இருக்கும் சவால் நமது மூளையை மிகுந்த சுறுசுறுப்பாக வைத்திருக்கும். வயதான பிறகு நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியது இதில் தான். உடலுக்கு உடற்பயிற்சி போல நமது மூளைக்கும் பயிற்சி அவசியம் தேவை.

 

இப்போது புதிதாக ஒரு வழக்கம் பணி ஓய்வு பெற்றவர்களிடைய மிகவும் பிரபலமாகி வருகிறது. அதுதான் ‘சீனியர் இன்டர்ன்ஷிப்’ (Senior internship). இதையே ரோல் ரிவர்சல் (Role Reversal) என்றும் சொல்லலாம். அது என்ன என்கிறீர்களா?

 

வாருங்கள் 61 வயதான திரு கிருஷ்ணனைச் சந்திக்கலாம். இரண்டு வருடங்களுக்கு முன் தனியார் நிறுவனத்திலிருந்து பணி ஓய்வு பெற்றவர் இவர். காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது, மின்னஞ்சல்களுக்கு பதில் எழுதுவது, கான்பரென்ஸ் கால்களுக்குக்காக வெகுநேரம் விழித்திருப்பது போன்ற விஷயங்களிலிருந்து பணிஓய்வு விடுதலை கொடுத்தது இவருக்கு. படிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர். பணிஓய்விற்குப் பிறகு  விருப்பமான புத்தகங்களைப் படித்துக்கொண்டு, நல்ல சங்கீதத்தை ரசித்துக் கொண்டு, அவ்வப்போது சமையலிலும் தன் கைத்திறமையைக் காண்பித்துக் கொண்டு, தனது பேரக்குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டு என்று பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார். இவை எல்லாமே சில மாதங்களில் அலுத்துவிட்டன.

 

என்ன செய்யலாம் என்று அங்கே இங்கே தேடியபோது தான் அவருக்கு இந்த ‘சீனியர் இன்டர்ன்ஷிப்’ என்பது பற்றித் தெரிய வந்தது. பலரிடம் விசாரித்து அப்போதுதான் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய நிறுவனத்தில் சேர்ந்தார். இவரது பாஸ் 22 வயது இளைஞர்! தனியாக ஒரு அறை; உதவியாளர் என்று வேலை செய்து பழகியவருக்கு தன்னைச் சுற்றி 20 வயது இளைஞர்கள்; அவர்கள் கேட்கும் உரத்த இசை; கையில் டென்னிஸ் பந்தை வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம், ஒருவருக்கொருவர் சத்தமாகப் பேசிக் கொள்வது எல்லாமே முதலில் கலாச்சார அதிர்ச்சியைக் கொடுத்தாலும், வெகு விரைவிலேயே அந்த சூழ்நிலைக்குப் பழகிப் போனார்.

 

‘நான் அவர்களை விட அனுபவத்தில் பெரியவன். அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டு வருபவர்கள். எனது அனுபவத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அவர்களது ஆர்வமும் ஈடுபாடும் என்னை மிகவும் கவர்கிறது’ என்கிறார் கிருஷ்ணன்.

 

‘இவருக்கு என்ன வயது என்று நான் அவரை நேராகச் சந்திக்கும் வரை எனக்குத் தெரியாது’ என்கிறார் இவரது 22 வயது பாஸ் இளைஞர் திரு பாலாஜி நரசிம்மன். திரு கிருஷ்ணனின் பல வருட அனுபவம் இந்தப் புதிய வேலையிலும் அவருக்குக் கை கொடுத்தது. அவருக்குத் தெரிந்த வியாபார நுணுக்கங்களை இளையவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதில் அவருக்கு மன நிறைவு ஏற்படுகிறது என்கிறார்.

 

ஆண்கள் மட்டுமல்ல; இதைப்போலப் பெண்களும் பணி ஓய்வுக்குப் பிறகு ஒரு புதிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கலாம். திருமதி உன்னிக்கிருஷ்ணன் இதற்கு உதாரணமாக இருக்கிறார். வேலை என்னும் ஓட்டப்பந்தயம் அலுத்து விட்டது அவருக்கு. இரண்டு வருடம் பணியிலிருந்து விலகி இருந்தவர் நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒரு நிறுவனத்தில் கன்டென்ட் ரைட்டர் ஆகச் சேர்ந்தார். வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்ற சலுகை அவருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. தனது பிள்ளைகள் இருவரையும் தனி ஒருவராக வளர்த்தவர் இவர். டெட் லைன் அழுத்தங்கள், தொலைதூர தொலைபேசி அழைப்புகள், மீட்டிங்குகள் இவை இல்லாமல் நிம்மதியாக வேலை செய்வதாக இவர் சொல்லுகிறார். ‘கணவரைப் பறிகொடுத்தபடியால் நான் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இல்லையென்றால் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்திருப்பேன். இப்போது எனக்குப் பிடித்த வேறு வேலைகளையும் செய்ய எனக்கு நேரம் கிடைக்கிறது. தகவல் தொடர்பு சம்மந்தமாகவே என் வேலை இருந்தபடியால் இந்தப் புது வேலையும் எனக்கு மன நிறைவைக் கொடுக்கிறது’ என்கிறார் இவர்.

 

தினமும் 3 மணி நேரம் வேலை பார்த்தால் போதும் இவருக்கு. தான் எழுத வேண்டிய விஷயத்திற்காக இணையத்தில் தேடுவதும் இந்த மூன்று மணி நேரத்திற்குள் அமைகிறது. வருமானம்? நிச்சயம் இவர் வாங்கியதை விட பல மடங்கு குறைவுதான். ‘வயதாக ஆக ஓட்டத்தைக் குறைத்துக் கொள்ளத்தான் வேண்டும். இந்த இன்டர்ன்ஷிப்பில் தினமும் பயணம் செய்ய வேண்டியதில்லை; மன அழுத்தங்கள் இல்லை. கூடவே வருமானமும் வருகிறது. அதனால் எனது பழைய வேலை போய்விட்டதே என்ற வருத்தம் வருவதில்லை’ என்று மகிழ்ச்சியுடன் சொல்லுகிறார் கிருஷ்ணன்.

 

இவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுபவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? ’என்னிடம் இரண்டு மூத்த குடிமகன்கள் ‘இன்டர்ன்’ ஆக இருக்கிறார்கள். முதலில் மூன்று மாதங்களுக்கு என்று இவர்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டேன். தேவைப்பட்டதால் இந்த கால அளவை நீட்டித்தேன். இவர்களது வேலையைப் பொறுத்து வழக்கமான ஊழியர்களுக்குக் கொடுப்பதை விட 10% – 15% குறைவாகக்கொடுக்கிறேன். எங்களுடையது இப்போது தான் தொடங்கிய ஒரு நிறுவனம். இவர்களது அனுபவம் எங்களுக்கு பலவிதங்களில் உதவுகிறது’ என்கிறார் திரு கிருஷ்ணனின் இளம் பாஸ்.

 

இளம் பாஸ்களின் கீழ் வேலை செய்வது, ‘இன்டர்ன்’ என்று அழைக்கப்படுவது இவையெல்லாம் சில மூத்த குடிமகன்களுக்கு ஆரம்பகாலத்தில் சற்று சங்கடத்தை விளைவிக்கிறது என்ற தனது கருத்தைத் தெரிவிக்கிறார் விசாகா மோகன். ஆனால் வேறு சிலர் தங்களது வயதே தங்களுக்கு மரியாதையை வாங்கிக் கொடுக்கிறது என்று சொல்லுகிறார்கள். ‘முதலில் கணனியில் வேலை செய்வது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. சில இளம்வயதுக்காரர்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். வயதானவர்கள் வேலை செய்வதற்கும், இந்த இளம் தலைமுறை வேலை செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. ‘போனால் போகிறது’ என்கிற மனப்பான்மை, எல்லாவற்றையும் ‘லைட்’ ஆக எடுத்துக் கொள்வது, வேலைகளை தள்ளிப் போடுவது போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்’ என்று சொல்லும் விசாகா தொடர்ந்து கூறுகிறார்.

 

‘பணிஓய்வு பெற்றபின் ரொம்பவும் மன அழுத்தத்திற்கு ஆளானேன். பயனற்றவள் ஆகிவிட்டேனோ என்கிற பதைபதைப்பு. அதனாலேயே நான் முன்பு வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தில் இப்போது பாதி தான் கிடைக்கிறது என்ற போதிலும் இந்த வேலையை ஏற்றுக் கொண்டேன். நாள் முழுவதும் பிஸியாக இருக்கிறேன். வெளியே போகிறேன்; என்னுடைய பங்கு பாராட்டப்படுகிறது என்பது மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது’ என்கிறார் விசாகா.

 

மொத்தத்தில் பணிஓய்வு என்பது இத்தனை வருட உழைப்பிற்குப் பின் கிடைத்த அமைதியான வாழ்க்கை என்று சொல்லும்படியாக அமைத்துக் கொள்ளுங்கள். ஓடி ஓடி உழைத்தபின் சற்று ஆற அமர வாழ்க்கையை அனுபவித்து வாழ ஆரம்பியுங்கள். மிகவும் கடுமையான உழைப்பு வேண்டாம். ஒரேயடியான ஓய்வும் வேண்டாம். உங்களுக்குப் பிடித்த வேலைகளை, பொழுதுபோக்குகளைச் செய்யவும் நேரம் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

 

வாழ்க்கையை ரசித்தபடியே உங்கள் திறமைகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

‘பெண்கள் எல்லாவற்றையும் அடைய முடியாது!

 குங்குமம் தோழி 15.7.2016 இதழில் வெளிவந்த கட்டுரை

 kungmam 16.7.16

சென்ற பகுதியில் திருமணம் வேண்டும் ஆனால் குழந்தைகள் வேண்டாம் என்று கூறும் பெண்களைப் பார்த்தோம். இந்தப்பகுதியில் நீங்கள் சந்திக்கப்போவது ஒரு வித்தியாசமான பெண்மணி:

 

‘என் பெண்களைக் கேட்டீர்களானால் என்னை ஒரு நல்ல அம்மாவாக அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!’

இப்படிச் சொன்னது ஒரு சாதாரண இல்லத்தரசியாக இருந்திருந்தால் நான் இதை இங்கு எழுதியே இருக்கமாட்டேன். அது ஒரு செய்தியாகவே ஆகி இருக்காது. சொன்னது உலகில் உள்ள – முக்கியமாக இந்தியாவில் உள்ள பெண்கள் அத்தனை பேரும் பொறாமை கொள்ளும் நிலையில் இருக்கும் ஒரு பெண்மணி! போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் வரிசையில் 13 ஆம் இடத்தைப் பிடித்தவரும், உலகின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனத்தின் உயர் பதவி வகிக்கும் ஒரு பெண்மணி! அவர் இப்படிச் சொன்னார் என்றால் உலகமே கவனிக்காதோ? ஆம் கவனித்தது! உலகின் அத்தனை பகுதியிலிருந்தும் இவர் இப்படிச் சொன்னது குறித்து வாதங்கள், விவாதங்கள் என்று ஒரே அல்லோலகல்லோலம் தான்!

 

இத்துடன் இவர் நிற்கவில்லை. தனது சொந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். கீழே அவர் சொன்னது:

 

‘14 ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது. அலுவலகத்தில் நான் வேலை செய்து கொண்டிருந்தேன். எப்போதும் நான் வெகு நேரம் வேலை செய்பவள். ஒரு முக்கியமான மீட்டிங்கின் நடுவே என் மேலதிகாரி என்னைக் கூப்பிட்டார். அப்போது மணி இரவு 9.30. ‘இந்திரா, உன்னை நமது நிறுவனத்தின் பிரெசிடென்ட் என்று அறிவிக்கப் போகிறேன். இயக்குனர் குழுவில் நீயும் இருக்கப் போகிறாய்’ என்றார். எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை – என்னுடைய பின்னணி, எனது பயணத்தின் ஆரம்பக் கட்டங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் போது – உலகின் மிகச் சிறந்த ஒரு அமெரிக்கா நிறுவனத்தின் ப்ரெசிடென்ட், இயக்குனர் குழுவில் இடம் என்பது எனக்குக் கிடைத்திருக்கும் தனிச்சிறப்பு என்று நினைத்தேன்.

 

சாதாரண நாட்களில் அலுவலகத்திலேயே இருந்து நடுநிசி வரை வேலை செய்பவள் அன்று வீட்டிற்கு சென்று இந்த மகிழ்ச்சியான செய்தியை என் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தேன். பத்து மணிக்கு வீட்டை அடைந்தேன். காரை நிறுத்திவிட்டு திரும்பினால் என் அம்மா மாடிப்படிகளின் உச்சியில் நின்றுக்கொண்டிருந்தார். ‘அம்மா! உனக்கு ஒரு நல்ல செய்தி!’ என்றேன்.

 

‘நல்ல செய்தி கொஞ்சநேரம் காத்திருக்கட்டும்! வெளியில் போய் பால் வாங்கிக் கொண்டு வர முடியுமா?’ என்றார்.

நான் கார் நிறுத்துமிடத்தைப் பார்த்தேன். என் கணவர் வீட்டிற்கு வந்திருந்தார்.

‘எத்தனை மணிக்கு அவர் வீட்டிற்கு வந்தார்?’ நான் கேட்டேன்.

‘8 மணிக்கு!’

‘அவரை வாங்கிக் கொண்டு வரச் சொல்வது தானே?’

‘அவர் ரொம்ப சோர்வாக இருந்தார்!’

‘சரி சரி. நம் வீட்டில் இரண்டு பணியாட்கள் இருக்கிறார்களே!’

‘அவர்களிடம் சொல்ல நான் மறந்துவிட்டேன்!’

‘………………..!’

‘போய் பால் வாங்கிக் கொண்டு வா! அவ்வளவுதான்!’

ஒரு கடமை தவறாத மகளாக நான் வெளியில் போய் பால் வாங்கிக் கொண்டு வந்தேன்.

 

வீட்டிற்குள் சென்று சமையலறை மேடை மேல் பால் பாக்கட்டை ‘பொத்’ என்று வைத்தேன். ‘நான் உனக்காக ஒரு பெரிய செய்தி கொண்டுவந்தேன். எங்கள் நிறுவன இயக்குனர் குழுவில் நான் தலைவராகப் பதவியேற்கப் போகிறேன். நீ என்னவென்றால் ‘போய் பால் வாங்கிக் கொண்டு வா’ என்கிறாய்! என்ன அம்மா நீ?’ பொரிந்து தள்ளினேன்.

 

என் அம்மா அமைதியாகச் சொன்னார்: ‘சில விஷயங்களை நீ தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நீ பெப்ஸிகோ வின் தலைவராக இருக்கலாம். இயக்குனர் குழுவில் இருக்கலாம். ஆனால் இந்த வீட்டுக்குள் நுழைந்துவிட்டால், நீ ஒரு மனைவி, ஒரு மகள், ஒரு மருமகள், ஒரு தாய். இவை எல்லாம் கலந்த ஒரு கலவை நீ. அந்த இடத்தை வேறு யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது. அந்தப் பாழாய்ப்போன அலுவலகக் கிரீடத்தை கார் நிறுத்தத்திலேயே விட்டுவிட்டு வா! அதை வீட்டினுள் கொண்டு வராதே! நான் அந்த மாதிரி கிரீடங்களைப் பார்த்ததே இல்லை!’

 

இதைச் சொன்னவர் யாரென்று இதற்குள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். திருமதி இந்திரா நூயி CEO, பெப்ஸிகோ!

 

இவர் மேலும் சொல்லுகிறார்:

‘பெண்களால் எல்லாவற்றையும் அடைய முடியாது. முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. நமக்கு எல்லாம் கிடைத்துவிட்டது போல நாம் பாவனை செய்கிறோம். எனக்குத் திருமணம் ஆகி 34 வருடங்கள் ஆகின்றது. எங்களுக்கு இரண்டு பெண்கள். தினமும் நீங்கள் இன்று ஒரு மனைவியாக இருக்கப் போகிறீர்களா, அல்லது அம்மாவாக இருக்கப் போகிறீர்களா என்று முடிவு எடுக்க வேண்டும். காலை நேரத்தில் அந்த முடிவை எடுக்க வேண்டும். இதற்கு பலரின் உதவி தேவை. நாங்கள் இருவரும் எங்கள் குடுக்பத்தினரின் உதவியை நாடினோம். ஒரு நல்ல பெற்றோர்களாக இருக்க நாங்கள் இருவரும் மிகவும் கவனத்துடன் திட்டமிடுகிறோம். ஆனால் நீங்கள் என் பெண்களைக் கேட்டால் நான் ஒரு நல்ல அம்மா என்று அவர்கள் சொல்லுவார்களா தெரியாது. எல்லாவிதத்திலும் அனுசரித்துக் கொண்டு போக நான் முயலுகிறேன்.

 

என்னுடைய பெண்ணின் பள்ளியில் நடந்ததைக் கூறுகிறேன். ஒவ்வொரு புதன்கிழமையும் அவளது பள்ளியில் ‘ வகுப்பறை காபி’ என்ற நிகழ்வு இருக்கும். மாணவர்கள் தங்கள் அம்மாக்களுடன் சேர்ந்து வகுப்பறையில் காபி அருந்துவார்கள். அலுவலகத்திற்குப் போகும் என்னால் காலை 9 மணிக்கு அதுவும் புதன்கிழமை எப்படிப் போக முடியும்? முக்கால்வாசி நேரம் நான் வகுப்பறைக் காபியை மிஸ் பண்ணிவிடுவேன். என் பெண் மாலையில் வீட்டிற்கு வந்து யார் யாருடைய அம்மாக்கள் வந்தார்கள் என்று பெரிய லிஸ்ட் படித்துவிட்டு, ‘நீதான் வரலை’ என்பாள். ஆரம்பத்தில் மனது மிகவும் வலிக்கும், குற்ற உணர்ச்சி கொன்றுவிடும். கொஞ்சம் கொஞ்சமாக சமாளிக்கக் கற்றேன். அவளது கோபத்திற்கு ஈடு கொடுக்க ஆரம்பித்தேன். பள்ளிக்கூடத்திலிருந்து யார் யாருடைய அம்மாக்கள் வரவில்லை என்ற பட்டியலைப் பெற்றேன். அடுத்தமுறை அவள் வந்து ‘நீ வரலை, நீதான் வரலை’ என்று சொன்னபோது, ‘மிஸஸ் கமலா வரலை; மிஸஸ் சாந்தி வரலை; நான் மட்டுமே கெட்ட அம்மா இல்லை’ என்றேன்.

 

சமாளிக்க வேண்டும்; ஈடு கொடுக்க வேண்டும். இல்லாவிடில் குற்ற உணர்ச்சியிலேயே மடிய நேரிடும். நமது சொந்த வாழ்க்கை கடியாரமும் தொழில் வாழ்க்கைக் கடியாரமும் எப்போதுமே ஒன்றுக்கொன்று முரணாகத்தான் இருக்கிறது. மொத்தமான, முழுமையான முரண்பாடு! நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் நேரத்தில் உங்கள் தொழில் வாழ்க்கையையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்; தொழில் வாழ்க்கையின் ஆரம்பநிலையைத் தாண்டி நடுக்கட்டத்திற்கு வரும்போது, குழந்தைகள் பதின்ம வயதில் காலடி வைத்திருப்பார்கள்.

 

அதே சமயம் உங்கள் கணவரும் குழந்தையாக மாறியிருப்பார். அவருக்கும் நீங்கள் வேண்டும்! குழந்தைகளுக்கும் நீங்கள் வேண்டும். என்ன செய்ய முடியும்? உங்களுக்கு வயது ஏற ஏற உங்கள் பெற்றோர்களுக்கும் வயது ஏறிக்கொண்டே போகும். அவர்களையும் நீங்கள் கவனிக்க வேண்டும். ஊஹூம்! பெண்களால் எல்லாவற்றையும் அடையவே முடியாது. எல்லாவற்றையும் சமாளிக்க ஒரே வழி – எல்லோருடனும் ஒத்துப்போவதுதான். உங்களுடன் வேலை செய்பவர்களை பழக்குங்கள். உங்கள் குடும்பத்தை ஓர் நீட்டிக்கப்பட்ட குடும்பமாக மாற்றுங்கள்.

 

பெப்சியில் இருக்கும்போது நான் நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனது குழந்தைகள் சின்னவர்களாக இருந்த போது குறிப்பாக இரண்டாமவள் நான் எங்கிருந்தாலும் – சீனா, ஜப்பான் – எனது ஆபிஸிற்கு போன் செய்வாள். வீடியோ கேம்ஸ் விளையாடுவதற்கு நான் மிகவும் கண்டிப்பான நிபந்தனைகள் வைத்திருந்தேன். எனது வரவேற்பாளர் போனை எடுப்பார். ‘நான் என் அம்மாவிடம் பேச வேண்டும்!’ எல்லோருக்கும் தெரியும் அது யார் என்று. ‘என்ன வேண்டும் உனக்கு? ‘எனக்கு கேம்ஸ் விளையாட வேண்டும்’ வரவேற்பாளர் உடனே சில வழக்கமா கேள்விகளைக் கேட்பார் : ‘உன்னுடைய வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டாயா?’ என்பது போல. கேள்விகள் முடிந்தவுடன் ‘சரி, நீ ஒரு அரைமணி நேரம் விளையாடலாம்!’ என்பார்.

 

எனக்கும் செய்தி வரும். ‘டீரா கூப்பிட்டாள். நான் இந்தக் கேள்விகளைக் கேட்டேன். அவளுக்கு அரைமணி நேரம் விளையாட அனுமதி கொடுத்திருக்கறேன்’ என்று. இதுதான் அல்லது இப்படித்தான் தடங்கல் இல்லாத குடும்பத்தை நடத்திச் செல்ல வேண்டும். எல்லோருடனும், வீட்டில், அலுவலகத்தில் உங்களைச் சுற்றி இருப்பவர்களுடன் சுமுகமாக இயங்கினால் தான் எல்லாம் நடக்கும். ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளர் ஆக இருப்பது என்பது மூன்று ஆட்கள் செய்யும் முழு நேரப்பணியை ஒருவர் செய்வது. எப்படி எல்லாவற்றிற்கும் நியாயம் செய்ய முடியும்? முடியாது. இவ்வளவையும் சமாளித்துக் கொண்டு போகையில் உங்களை அதிகமாகக் காயப்படுத்துபவர்  உங்கள் துணைவராக இருக்கக்கூடும். என் கணவர் சொல்லுவார்: ‘உன்னுடைய லிஸ்டில் பெப்ஸிகோ, பெப்ஸிகோ, பெப்ஸிகோ, உன் இரண்டு குழந்தைகள், உன் அம்மா பிறகு கடைசி கடைசியாக கீழே நான்…!’ இதை நீங்கள் இரண்டு விதமாகப் பார்க்கலாம் நீங்கள் லிஸ்டில் இருக்கிறீர்களே என்று நினைக்க வேண்டும். புகார் செய்யக் கூடாது!’ இப்படிச் சொல்லித்தான் கணவரை சமாளிக்க வேண்டும்!’

 

இப்படிச் சொல்லியதற்காக இவருக்கு வந்த கண்டனங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

 

 

 

 

 

 

புதுயுகப் பெண்கள்

குங்குமம் தோழி ஜூலை 1 ஆம் தேதி இதழில் வந்த என் கட்டுரை.

http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=3265&id1=62&issue=20160701

 

 யாரிந்த புதுயுகப் பெண்கள்?

‘திருமணமானவர்கள் ஆனால் அம்மாக்கள் இல்லை; தனியாக இருக்கிறார்கள் ஆனால் தனிமையில் இல்லை. இந்தியப் பெண்களில் சிலர் தங்களது தொழில் வாழ்க்கையில் மேலே மேலே செல்ல விரும்புகிறார்கள். அதற்காகத் திருமணம் செய்து கொள்ளாமலேயோ, அல்லது திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ளாமலேயோ இருக்கவும் தங்களை தயார் செய்துகொள்ளுகிறார்கள்’ என்று புதுயுகப் பெண்களைப் பற்றி தனது பார்வையைச் சொல்லுகிறார், ஃபிலிம்ஃபேர் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர், திருமதி விமலா பாட்டில்.

 

இவர்களின் அடையாளம் என்னென்ன?

வங்கிகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்கள் போன்றவற்றின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள். கலைஞர்கள்; தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் ஆகியவற்றின் இயக்குனர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள்,எழுத்தாளர்கள், இசை அமைப்பாளர்கள், ஒலிப் பொறியாளர்கள், எடிட்டிங் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பாளர்கள், அரசியல் கட்சிகளை வழிநடத்திச் செல்பவர்கள்; இவை  மட்டுமல்ல;  இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள்; கூடவே விளையாட்டு வீராங்கனைகள்.

 

இவர்கள் சுதந்திரமானவர்கள்

லட்சியவாதிகளான இந்தப் பெண்களுக்கு வெற்றிப்படிக்கட்டில் ஏற அவர்களுக்கென இடம் தேவைப்படுகிறது. எந்த ஊருக்கு வேண்டுமானாலும் இடம் பெயர இவர்கள் தயாராக இருக்க வேண்டும். பலவிதமான மக்களையும் கலாச்சாரங்களையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு வேண்டும். தாங்கள் எடுக்கும் முடிவுகளால் யார் பாதிக்கப்படுவார்கள், யார் தன்னைப் பற்றி கீழ்த்தரமாக நினைப்பார்கள் என்றெல்லாம் கவலைப்படாமல் சுயமான முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் வேண்டும். சில தைரியமான, மனஉறுதியுள்ள பெண்கள் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள். ஆனால் குழந்தைக்கு ‘நோ’ சொல்லிவிடுகிறார்கள். சிலர் தங்களது வெற்றிக்கும், புகழுக்கும் விலையாக திருமணத்தையே வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள்.

 

டாக்டர் இஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 35 வயது, திருமணமானவர். ஆனால் குழந்தைகள் இல்லை. அவராகவே வேண்டாம் என்று தீர்மானித்திருக்கிறார். இந்தியாவின் தலைசிறந்த மருத்துவமனை ஒன்றில் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் வரும் புற்றுநோய் இலாகாவின் தலைமைப் பொறுப்பு வகிப்பவர். இந்தப் பதவிக்கு வர அரும்பாடு பட்டிருக்கிறார். அவரது துறையில் மிகச்சிறந்த வல்லுநர் என்று பெயரெடுத்தவர். ஒருநாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்கிறார். தனது ஒவ்வொரு நோயாளியுடனும் அவர்களது குடும்பத்தில் ஒருவர் என்ற முறையில் பழகுகிறார்.

 

‘என் கணவரை நான் பார்ப்பது மிக மிக அரிது. அவர் ஒரு கண் அறுவை சிகிச்சை நிபுணர். தனது துறையில் உருவாகும் புதுப்புது தொழில்நுட்பங்களை பற்றி விளக்க அவர் உலகம் முழுக்க பயணம் செய்து கொண்டிருப்பார். நாங்கள் இருவரும் அவரவர் பணியில் மும்முரமாக இருக்கிறோம். அதனால் எப்போது நாங்கள் சந்தித்தாலும் அதை ஒரு மிகப்பெரிய விழாவாக நினைத்துக் கொண்டாடுவோம். வாரக் கடைசியில் எங்காவது சின்ன டூர் போய்விட்டு வருவோம். இந்திய அளவுகோலின்படி எனக்கு லேட்-மாரேஜ். நிதானமாக எனக்குத் தகுந்த துணைவரைத் தேடினேன். அதிஷ்டவசமாக ஆஷிஷ்-ஐ எனது வேலை இடத்திலேயே சந்தித்தேன். நாங்கள் இருவரும் எங்களது கனவுகளை எந்தவிதத் தடையுமில்லாமல் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக குழந்தை வேண்டாம் என்று தீர்மானித்தோம். எந்தவிதமான பொறுப்புகளும் எங்களை கட்டிப்போடக் கூடாது; தினசரி வேலைகள் என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எங்களிடையே இருப்பது பரஸ்பர அன்பும், புரிதலும், தேவைப்படும்போது ஒருவருக்கொருவர் துணையாக இருப்போம் என்ற உறுதிமொழியும். அவ்வளவே!’ என்று சொல்லுகிறார் இஷா.

 

பாரம்பரியத்தை மாற்ற வந்தவர்கள்

இந்திய பாரம்பரிய வழக்கமான ‘படிப்பு, கல்யாணம், குழந்தை, வயதாவது’ என்ற வட்டத்தை உடைத்தவர்களில் இஷா, ஆஷிஷ் இருவரும் ஒரு சின்ன உதாரணம் தான். புதுயுக இந்திய ஆண்களும் பெண்களும் ஒரு புது வாழ்க்கையை வாழ நினைக்கிறார்கள். இவர்களைப் போன்ற புதுயுக தொழில்துறை வல்லுனர்கள், தொழில் முனைவோர்களின் பன்ச்லைன் என்ன தெரியுமா? DINK அதாவது டபிள் இன்கம் – நோ கிட்ஸ் (Double income, No kids) அல்லது தனியாகவே இருந்து விடுவது. இதன் காரணமாக பல பெண்கள் தங்கள் கருத்திற்கு ஒத்துப் போகும் துணைவர் கிடைக்கும் வரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லை. இப்படிச் செய்வதன் மூலம், இந்தியப் பாரம்பரியத்தின் மிகவும் வலிமையான, பழமையான ஒரு கருத்தை – அதாவது பெண் என்பவள் இல்லத்தரசியாகவும், நல்ல அம்மாக்களாகவும் மட்டுமே இருக்க வேண்டும். அவர்கள் வீட்டிற்குள் வைத்து பூஜிக்கப்பட வேண்டியவர்கள் என்ற கருத்தை – தலைகீழாக மாற்ற நினைக்கிறார்கள்.

 

குடும்பம் நடத்துவதிலுள்ள சிக்கல்களினால் இப்போது திருமணம் என்பது ஒரு சுலபமான பந்தமாக இருப்பதில்லை. குடும்பத்தை நடத்த, எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய மிகவும் பாடுபட வேண்டியிருக்கிறது. அதுவும் இன்றைய பெண்கள் ஆண்களுடன் சரிசமமாக வேலைத்திறனை வெளிப்படுத்தும் நேரத்தில் குடும்பத்தின் எதிர்பார்ப்புகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. உண்மையில் திருமணம், தாய்மை போன்ற பொறுப்புகள் பெண்களை நிறைய இழப்பிற்கு ஆளாக்குகின்றன.

 

கணவன் மனைவி இருவருமே ரொம்பவும் வெற்றிகரமான தொழில்துறை வல்லுனர்களாக இருந்துவிட்டால், பெண்கள் கண்ணுக்குத் தெரியாத உள்ளுறை அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஏனெனில் இந்திய ஆண், ‘ஆண்தான் குடும்பத்தலைவன்;  பெண்டாட்டியின் கீழ் அவன்  இருக்கக்கூடாது’ என்ற மனோபாவத்தில் வளர்க்கப்பட்டவன். ‘இவளது கணவன்’ என்று அறியப்பட அவன் விரும்புவதில்லை. அதனால் வீட்டை நடத்துவதிலோ, குழந்தைகளை வளர்ப்பதிலோ அவனது பங்கு பூஜ்யம் தான். எவ்வளவுதான் பெண்கள் வெகு சாமர்த்தியமாக குடும்பம், அலுவலகம் என்று இரட்டைக் குதிரை மேல் சவாரி செய்தாலும், வீட்டில் மகிழ்ச்சி இருப்பதில்லை.

 

திருமணம் ஒரு தடை

‘சந்தோஷமான திருமணம் என்பது மிகமிக குறைவு’, என்கிறார் தகவல் துறையில் மிக உயர்ந்த பதவி வகிக்கும் ஒரு பெண். ‘அலுவலகத்தில் நாளுக்குநாள் அதிகமாகும் மனஅழுத்தம், வீடுகளில் கணவன் மனைவியரிடையே தன்முனைப்பால் (Ego) வரும் சச்சரவு. அதனால் திருமணம், குழந்தைகள் இவைகளை ஒத்துக்கொள்ள பெண்கள்  மிகவும் யோசிக்கிறார்கள்’ என்கிறார் இவர்.

 

கிரண் மஜூம்தார் போன்ற உயர்பதவி வகிக்கும் பெண்கள் கூட இதை ஒப்புக்கொள்ளுகிறார்கள். ‘இந்தியக் கணவர்கள் வெற்றி பெறும் மனைவியை இரக்கத்துடன் பார்ப்பதில்லை. அதனால் தான் நான் ஒரு வெளிநாட்டுக்காரரை (ஜான் ஷா) மணந்தேன்’ என்கிறார் கிரண். போர்ப்ஸ் பத்திரிக்கையின் ‘உலகின் 100 வலிமையான பெண்கள்’ லிஸ்டில் பல வருடங்கள் இருந்தவர் இவர். இந்தியன் வணிகப்பள்ளி,  மற்றும் ஹைதராபாத்தின் இந்திய தொழில்நுட்ப கழகம் இவற்றின் நிர்வாகக் குழுவிலும் பணியாற்றுபவர். பெண்கள் எத்தனைதான் முன்னேறினாலும், ஆண்களில் சிலர் மட்டுமே தனது மனைவி வெற்றிபெறுவதை ஏற்றுக்கொண்டும், அதை பாராட்டவும் செய்கிறார்கள். தன் மனைவி தன்னைவிட வெற்றிகரமானவளாகவோ, பிரபலமானவளாகவோ அல்லது தன்னை விட அதிகம் சம்பாதித்தாலோ முக்கால்வாசி ஆண்கள் அவளது வாழ்க்கையை உண்டு இல்லை என்று செய்துவிடுகிறார்கள்.

 

இவர்கள் வேண்டுவது அங்கீகாரம்

‘ஒத்துழைக்கும் கணவன் ஒரு பெண்ணிற்கு கிடைத்தால், அது மிகப்பெரிய சொத்து,’ என்கிறார் ஒரு உள்அலங்கார வல்லுநர் லலிதா வைத்யா. ‘ஆனால் அந்த மனைவி தன் வேலையில் மும்முரமாகவோ, சந்தோஷமாகவோ இருந்துவிட்டால், அந்தக் கணவனுக்குக் கூட பிடிக்காமல் போகலாம்’. சில கணவன்மார்கள் பெண்டாட்டிகளை எப்போதும் பூதக்கண்ணாடியை வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பார்கள். தன் அலுவலக நண்பர்களுடன் சிரித்துப் பேசினாலோ, அல்லது வெளியிடங்களுக்குச் சென்று வந்தாலோ பிடிக்காது. இப்போதெல்லாம் பெண்கள் இந்த மாதிரி கணவர்களை அதிகம் கெஞ்ச விரும்புவதில்லை. தங்களது சொந்த வாழ்க்கை, தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவிகளை தாங்களே முடிவு செய்துகொள்ளக் கனவு காண்கிறார்கள். பொருளாதாரச் சுதந்திரம், தங்களது திறமைக்கு உரிய அங்கீகாரம் இவையே அவர்கள் வேண்டுவது. இந்த அங்கீகாரம் அவர்களுக்கு அமிர்தம் போல. ஏனெனில்  மிகக் கடுமையாக விமரிசிப்பவர்களும், இவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுபவர்களுக்கும், இந்தப் பெண்கள் தங்களது சொந்த முயற்சியிலும், திறமையிலுமே முன்னுக்கு வந்தார்கள் என்பதை இந்த அங்கீகாரம் புரிய வைக்கும். சமுதாயமும் இந்தப் புதுயுகப் பெண்களை ஏற்றுக்கொள்ள மாறிக்கொண்டு வருகிறது. புதுப்புது வணிக இணைப்புகள், வணிக சமூகங்கள், பல தொழில்துறை நிறுவனங்கள் போன்றவை முக்கியப் பொறுப்புகளில் பெண்களின்  தலைமையை ஏற்றுகொள்ளுகின்றன.

 

இடைவெளி அவசியம்

அந்தரங்கம் புனிதமானது என்பதே இன்றைய தேசியகீதம். கணவன் மனைவி என்றாலும் இடைவெளி அவசியம். அதுமட்டுமல்ல. திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக இணைந்து வாழ்வது, திருமணம் இல்லாமல் ஒரு ஆணைத் துணையாக ஏற்றுக் கொள்வது இவையெல்லாம் இப்போது பெண்கள் சர்வ சாதாரணமாக ஏற்றுக் கொள்ளும் விஷயங்களாகிவிட்டன. பெண்ணின் இயற்கை உந்துதல்களை அவள் திருமணம் என்னும் பந்தத்திற்குள் நுழையாமலேயே பூர்த்தி செய்து கொள்ளலாம். அவளை புரிந்துகொள்ளும் ஒரு ஆடவனுடன் இருவருக்கும் ஒத்துப்போகும் உறவுடன் வாழலாம். அவனிடமிருந்து மரியாதை, காதல், ஆதரவு இவைமட்டுமின்றி பாலியல் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. ஏனெனில் இந்த உறவுகள் மிகக் குறைவான பொறுப்புக்களுடன் வருகின்றன.

 

மாறிவரும் இந்தியப் பெண்கள்

ஒருகாலத்தில் இந்தியப் பெண்கள் – இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் – நல்ல இல்லத்தரசிகளாக இருப்பதில் பெருமை அடைபவர்களாக அறியப்பட்டிருந்தனர். மிகச்சிறந்த இல்லத்தரசிகளாகவும், நல்ல அம்மாக்களாகவும் புகழப்பட்டவர்கள். ஆனால் இந்தப் புதுயுகப் பெண்கள் பல உச்சங்களைத் தொடவேண்டும் என்ற முனைப்புடன் தங்களின் பழைய இடங்களை விட்டுவிட்டு புதுப்புது இடங்களைத் தேடி பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். ஒரு ஆணைப்போலவே தங்கள் வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள விரும்புகின்றனர் இந்தப் புதுயுகப்பெண்கள். எந்த வேலையானாலும், அது எந்த இடத்தில் இருந்தாலும் தங்கள் திறமைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். எது சரி எது மதிப்பை கொடுக்கும் என்பதை அவர்கள் தீர்மானித்துக் கொள்வார்கள்.

 

நவீன சமுதாயம் இந்தப் பேரார்வப் பெண்களை கட்டுப்படுத்துவது கடினம். எந்தப் பொறுப்பும் இல்லாமல் இருப்பது, யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாதது போன்றவைகளுக்காக இந்தப் பெண்கள் கொடுக்கப் போகும் விலையும் அதிகம் தான். புதுயுகப் பெண்கள் இந்த சவாலையும் எதிர்கொள்ள கற்றுக்கொண்டு வருகிறார்கள். தனிமையுணர்வு, தாய்மை உணர்வுகள், ஒரு ஆணின் துணை இல்லாமல் வாழ்க்கை முழுமையடையவில்லை என்கிற உணர்வுகள் எல்லாமே அவரவர்  மனநிலையைப் பொறுத்தது. தங்கள் வாழ்க்கைமுறையை முழுவதுமாக மாற்றிக்கொள்வதன் மூலம் இந்த உணர்வுகளைக் கடந்துவிடலாம் என்று புதுயுகப் பெண்கள் நம்புகிறார்கள். உயர்பதவி வகிக்கும் சில பெண்கள் இதை நிரூபித்தும் இருக்கிறார்கள்.

 

இதில் சில விதிவிலக்குகளும் உண்டு. தொடர்ந்து பார்ப்போம்.

 

 

 

 

விசாகா ஹரி (கதா)!

 

இரண்டு வாரங்களாக வார இறுதிகள் மிகவும் சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருக்கிறன. முதலில் இந்த வார சனிக்கிழமை பற்றி. (இந்த முன்னுரை எழுதி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன!)

 

எங்களுக்கு மிகவும் வேண்டியவர்களின் பிள்ளைக்குத் திருமணம் ஜூன் 22. திருமணத்திற்கு முன்சனிக்கிழமை சீதா கல்யாண வைபவமும், திருமதி விசாகா ஹரியின் ‘சீதா கல்யாண’ ஹரி கதையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

மல்லேஸ்வரம் ஸ்ரீ வேணுகோபாலன் சந்நிதியிலிருந்து சீதா ராம திவ்ய தம்பதியின் திவ்யமங்கள விக்ரகங்களை எழுந்தருளப் பண்ணி சீதா கல்யாணம் நடந்தது. ஆரம்பத்தில் எதற்காக இந்தக் கல்யாணம் என்று சுருக்கமாக கன்னட மொழியில் கூறினார் கல்யாணத்தை நடத்திக் கொடுக்க வந்திருந்த கோவில் பட்டாச்சார் ஸ்வாமி ஒருவர். கல்யாணப் பிள்ளை, பெண்ணின் பெற்றோர்கள் மணையில் அமர்ந்து சங்கல்பம் செய்துகொண்டு சீதா கல்யாண வைபவத்தைத் தொடங்கி வைத்தனர். பெருமாளுக்கும் தாயாருக்கும் சீர் வரிசை பிரமாதமாகச் செய்திருந்தனர். உள்ளங்கை அகல திருமாங்கல்யம். கையகல ஜரிகைப் புடவை, கெட்டிக்கரை வேஷ்டி எல்லாம்  (இந்த ஊர் வழக்கப்படி வண்ணப்பட்டு வேஷ்டி) அந்த திவ்ய தம்பதிக்கு ஏற்றவாறு அமைந்திருந்தன.

 

நம் கல்யாணம் போலவே பெருமாளும் தாயாரும் மாலை மாற்றி, காப்பு கட்டி கொண்டு அக்ஷதையை ஒருவர் தலை மேல் ஒருவர் போட்டு…. மல்லிகைப் பூவை பந்து போல உருட்டி ஒருவர்மேல் ஒருவர் வீசி எறிந்து விளையாடினர். பட்டாச்சார் ஸ்வாமி இருவர் இவை எல்லாவற்றையும் செய்தனர். பூப்பந்து அவ்வப்போது எங்களிடம் வீசியெறியப்பட்டது. நாங்களும் பந்தைப் பிடித்து அவர்களிடம் எறிந்தோம். சீதா ராம கல்யாணத்தில் பங்கு கொண்டோம் என்ற குதூகலம்! இவை எல்லாவற்றையும் விட தனது அபாரமான வாசிப்பால் எல்லோரையும் கவர்ந்தார் நாயனக்காரர். சமயத்திற்குத் தகுந்தாற்போல பாடல்களை வாசித்துத் தள்ளினார். பட்டாச்சார் ஸ்வாமி மாலையைக் கையில் எடுத்தவுடன் ‘மாலை மாற்றினாள், கோதை மாலை மாற்றினாள்’ பாடல், தொடர்ந்து ஊஞ்சல் பாட்டு, திருமாங்கல்யதாரணம் ஆனவுடன் ‘ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே’ என்று மிகச் சிறப்பாக வாசித்தார். அதேபோல – சாம வேதம் என்று நினைக்கிறேன் – ஒரு ஸ்லோகம் சொல்லி முடித்தவுடன் அதை அப்படியே வாத்தியத்தில்  வாசித்தார். பெரிய பெரிய அண்டாக்களில் சர்க்கரைப்பொங்கல், புளியோதரை. அங்கு வந்திருந்தவர்கள் அத்தனை பேருக்கும் தீர்த்தம் சடாரி ஆனவுடன் பிரசாதம் விநியோகம் செய்தார்கள். கூடவே சுடச்சுட காப்பியும்.

 

இத்தனையும் முடிந்த பின் திருமதி விசாகா ஹரியின் ஹரிகதை. நாங்கள் இருவரும் ஹரிகதை கேட்கவே வந்திருந்தோம். என்னதான் தொலைக்காட்சியிலும், யூடியுபிலும் கேட்டிருந்தாலும், நேரில் ஒருமுறையாவது கேட்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது. சந்தர்ப்பம் வாய்த்திருக்கும்போது விடமுடியுமா?

 

சீதாகல்யாணம் முடிந்தவுடன் நானும் என் கணவரும் ஹரிகதையைக் கேட்க வசதியாக (ஓடிப்போய்!!) இரண்டு நாற்காலிகளைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டோம். சர்க்கரைப் பொங்கல் புளியோதரையையும் தியாகம் செய்தோம் – இடம் போய்விடப்போகிறதே என்ற பதட்டத்தில்!

 

குலசேகர ஆழ்வாரின் ‘அங்கணெடுமதில் சூழ் அயோத்தி என்னும்’ என்ற பாசுரத்துடன் ஆரம்பித்தார் திருமதி விசாகா ஹரி. ஹரிகதை என்பது நிறைய பாடல்கள் நிறைந்தது. பாடல்களுக்கு நடுவில் கொஞ்சம் கொஞ்சம் கதை. அந்தக் காலத்தில் திரு டி.எஸ். பாலக்ருஷ்ண சாஸ்திரி ஹரிகதை செய்வார். எங்கள் பள்ளி வளாகத்திலேயே நடக்கும். நின்றுகொண்டே சொல்வார். அவரது பக்கவாத்தியக்காரர்கள் உட்கார்ந்திருப்பார்கள். இவர் மட்டும் இரண்டு, மூன்று மணிநேரம் நின்றுகொண்டு கதை சொல்வார். அவரும் மிக நன்றாகப் பாடுவார். அவரது ‘தியாகராஜ இராமாயணம் ரொம்பவும் பிரபலம். தியாகராஜரின் கீர்த்தனைகளை வைத்து ராமாயணத்தைச் சொல்லுவார். அவர் பாடித்தான் நான் முதன்முதலாக ‘ஸ்வரராக சுதா ரஸ’ என்ற சங்கராபரணப் பாடலை கேட்டேன். கையில் சப்ளாகட்டையுடன் அற்புதமாகப் பாடுவார்.

 

திருமதி விசாகா ஹரியின் ஹரிகதை கேட்டுக் கொண்டிருக்கையில் எனக்கு டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகளின் நினைவு நிறைய வந்தது. அவரைப் போலவே இவரும் நிறைய பாடல்கள் பாடினார். எல்லா மொழிகளிலிருந்தும் பாடல்கள் பாடினார்.

 

தெலுங்கு, சமஸ்கிருதம், தமிழ் பாடல்களும் மற்றும் துளசிதாசர், புரந்தரதாசர் ஆகியவர்களின் பாடல்களையும் அந்தந்த சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தாற்போல பாடினார். மூன்று மணிநேரம் போனதே தெரியவில்லை. எத்தனையோ முறை கேட்ட கதைதான் என்றாலும் அலுக்காத கதை ராமாயணமும் மகாபாரதமும் என்பதை அன்றும் உணர்ந்தோம்.

 

திருமதி விசாகா ஹரி சொன்னதில் நான் ரசித்த சில சம்பவங்களை உங்களுக்காக இங்கு கொடுக்கிறேன்.

 

 • வால்மீகி ராமனும், சீதையும் திருமணத்திற்கு முன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதாக எழுதவில்லை. ஆனால் பின்னால் வந்த கவிஞர்கள் (கம்பன், அருணாச்சலக் கவிராயர், துளசி தாசர்) ராமாயணத்திற்கு இனிமை கூட்ட ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ என்று எழுதினார்கள்.
 • வால்மீகி மிகவும் சீரியஸ் ஆக இராமாயணத்தை எழுதியிருக்கிறார். ராமனின் குழந்தைப் பருவ விளையாட்டுக்களை அவர் சொல்லவேயில்லை. அந்தக் குறையைப் போக்க குலசேகர ஆழ்வார் திருக்கண்ணபுரத்து சௌரிராஜப் பெருமாளை ராமனாக கற்பனை பண்ணிக்கொண்டு மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே’ ‘என்று தாலாட்டுப் பாடினார்.
 • ‘ராமனின் கால் பட்டு கல் அகலிகை என்ற பெண்ணாயிற்றாமே! இப்போ நம் சீதையின் காலை எடுத்து அம்மி மேல் வைக்கும்போது அவன் கை பட்டு அதுவும் பெண்ணாயிடுத்துன்னா….?’ என்று சீதாராம கல்யாணம் பார்க்க வந்த மிதிலா மக்கள் பேசினார்களாம்.
 • ராமனைப் பார்த்தவுடன் ஜனகர் நினைத்தாராம்: ‘இவன் சிவதனுசை முறிக்கணுமே!’ என்று.
 • விஸ்வாமித்திரர் ராமனைப் பார்த்தார். குருவின் பார்வையைப் புரிந்துகொண்ட ராமன் வில்லை எடுத்தான். அடுத்த நிமிடம் ‘எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்!’ சிவதனுசு முறிந்துவிட்டதுதான் தெரியும்.

 

9 கஜம் பட்டுப்புடவையில் ‘ஜம்மென்று’ வந்து அவையை சுமார் மூன்று மணிநேரம் தன் குரலால், ஹரிகதையால் கட்டிபோட்ட அந்த பெண்மணி மனதை ரொம்பவும் கவர்ந்துவிட்டார். என்ன ஒரு ஆளுமை! என்ன ஒரு தன்னம்பிக்கை! நடுநடுவில் பக்கவாத்தியக்காரர்களுக்கு நேரம் ஒதுக்கி தனக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு தொண்டையை நீவி விட்டுக்கொண்டு, அவர்களையும் உற்சாகப்படுத்தி… அருமை அருமை என்று சொல்வதைத் தவிர வேறு வார்த்தைகளே இல்லை.

 

தனது ஆச்சார்யனான தனது மாமனாரை (திரு கிருஷ்ணப்ரேமி) அவ்வப்போது ஸ்ரீ அண்ணா சொல்லுவார், ஸ்ரீ அண்ணா சொல்லுவார் என்று குறிப்பிட்டுச் சொன்னது இவரது ஆச்சார்ய பக்தியை வெளிப்படுத்தியது. ஆச்சார்யனின் ஆசி இவருக்குப் பரிபூரணமாக இருக்கிறதால் தான் இத்தனை தூரம் பிரகாசிக்க முடிகிறது. கடைசியில் ‘பாவயாமி ரகுராமம்’ என்ற ஸ்வாதித் திருநாள் இயற்றிய ராகமாலிகை கீர்த்தனையைப் பாடி கதையை நிறைவு செய்தார்.

 

இவருக்கு அந்த திவ்ய தம்பதியின் ஆசிகள் எப்போதும் கிடைக்கட்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டு வீட்டிற்குக் கிளம்பி வந்தோம். ஹரிகதா முடிந்ததும் நிறைய இளம்பெண்கள் இவரிடம் போய் பேசிக்கொண்டிருந்தார்கள். பதினைந்து தினங்கள் ஆகியும் எனக்கு ஏற்பட்ட பிரமிப்பு நீங்காமலேயே இதை எழுதுகிறேன்.

 

இவரிடம் ஒரே ஒரு வேண்டுகோள்: நிறைய பெண்களை உங்களை மாதிரியே தயார் செய்யுங்கள், ப்ளீஸ்!

 

 

தொடரும் பணி – டாக்டர் கனகா

திருமதி மஞ்சுளா ரமேஷ் ‘சினேகிதி’ மார்ச் 2016 இதழில் வெளியான கட்டுரை

 

ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், இந்த வயதிலும் – 1932 இல் பிறந்தவர் – நோயாளிகளுக்கும் ஆரோக்கிய சேவைகளுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை குறைக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.  யார் இவர் என்று நீங்கள் யோசிக்கும் முன் சொல்லிவிடுகிறேன். டாக்டர் டி.எஸ்.கனகா தான் இவர்.

 

1990 ஆம் ஆண்டிலிருந்து அறுவை சிகிச்சை செய்வதை நிறுத்திவிட்டாலும் இன்னும் ஒரு முக்கியமான பணியில் மும்முரமாகவே இருக்கிறார். ‘பெருமூளைவாத நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு பயன்படும் Deep Brain Stimulation kit ஒன்றை வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன். உலகளவில் இது முதலாக இருக்கும். இதனை ஸ்ரீ சித்திரைத் திருநாள் மருத்துவ விஞ்ஞான பல்கலைகழகத்தின் உயிரியப் பொறியாளர்கள் குழு மிகவும் உற்சாகத்துடன் வரவேற்றிருக்கிறார்கள். இதன் மூலம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மறுவாழ்வு கொடுக்க முடியும். போதை மருந்திற்கு அடிமையானவர்களை மீட்கவும் உதவும். குறைந்த செலவில் இதைச் செய்யலாம்’ என்று மிகவும் உற்சாகமாகப் பேசுகிறார்.

 

ஆண்கள் மட்டுமே நிறைந்திருந்த நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறையில் தனக்கென ஓரிடம் பிடிக்க இவர் சந்தித்த சவால்கள் கொஞ்சநஞ்சம் அல்ல.  கல்வித்துறையில் துணை இயக்குனர் ஆகவும், சென்னை ஆசிரியர் கல்லூரியில் முதல்வர் ஆகவும் இருந்த திரு சந்தானகிருஷ்ணனின் எட்டு குழந்தைகளில் டாக்டர்கனகாவும் ஒருவர். தனது மகள் ஏதாவது ஒரு தொழிற்கல்வி கற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ‘நான் ஒரு பொறியியலாளர் ஆகவே வருவேன் என்று எப்போதும் நினைத்துக் கொள்வேன். ஆனால் என் அம்மாவிற்கு நான் ஒரு மருத்துவராக வரவேண்டும் என்று ஆசை. என் அம்மாவின் ஆசையை நிறைவேற்றினேன். எனது அக்காவும் ஒரு மருத்துவர் தான். அக்காவின் கணவருக்கு வலிப்பு நோய் தாக்கியதால் எனக்கு நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறையில் சிறப்பு கவனம் ஏற்பட்டது’, என்று பழைய நினைவுகளை அசைபோடுகிறார்.

 

பல பெண் மருத்துவர்கள் பொது அறுவை சிகிச்சைப் படிப்பை தொடர விரும்பியபோதிலும், ஆண் மருத்துவர்களின் கிண்டலும், கேலியும் வேண்டுமென்றே பெண் மருத்துவர்களை தேர்வில் தோல்வி அடையச்செய்தலும் நடைபெற்று வந்ததால் பலர் இந்தப் படிப்பை பாதியில் விட்டுவிட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள். இந்த வேளையில் தான் டாக்டர் கனகா தனது இடைவிடாத முயற்சியால் பலமுறை தேர்வு எழுதி சென்னை மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

 

ஆபரேஷன் தியேட்டரில் நேரடி ஆபரேஷன் செய்ய விடாமல் தடுக்கப்பட்ட நாளிலிருந்து இந்தியாவின் முதன்முதலாக மூளையில் ஒரு மின்முனை கருவியை உட்பதிய வைத்த நரம்பியல் அறுவை சிகிச்சையாளர் என்ற பெருமையை 1975 இல் அடையும் வரை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இவர் மேற்கொண்ட பயணம் சாதாரணமானது இல்லை. எத்தனை யெத்தனையோ இடர்கள் வந்தபோதும் டாக்டர் கனகா தான் நினைத்ததை சாதித்தே முடித்தார்.

 

பேராசிரியர் திரு பி. ராமமூர்த்திக்கு (பிரபல நரம்பியல் மருத்துவராக பின்னாளில் அறியப்பட்டவர்) இவர் ஒரு கோடை விடுமுறையின் போது உதவியாளராகப் பணிபுரிந்தபோது அவர் அளித்த ஊக்கம் தன்னால் மறக்கமுடியாது என்று கூறுகிறார். அதேபோல இவரது ஆசிரியர்களுள் ஒருவரான திரு ஸ்ரீனிவாசன் ‘பெண் மருத்துவ மாணவர்களை அழ வைப்பவர்’ என்ற பெயர் பெற்றவர். அவரிடம் தான் வாங்கிய பாராட்டுக்களையும் மறக்க முடியாது என்கிறார். இவரது மூன்றாவது ஆண்டு இறுதியில் அவர் சொன்னாராம்: ‘ நீ என்னுடைய அத்தனை திட்டுகளையும் தாங்கிக் கொண்டு உன்னை இந்தத்துறையில் நிலைநிறுத்திக் கொண்டு விட்டாய். உன்னால் இனி எந்த வகையான இடர் வந்தாலும் தாங்கிக்கொள்ள முடியும். மருத்துவம் ஒரு பொறாமை பிடித்த பணியாள். உனக்கும், மருத்துவத்திற்கும் இடையில் எதுவும் வராமல் பார்த்துக்கொள்’ என்றாராம்!

 

முதுகலைப் பட்டப்படிப்பு முடித்தபின் ராணுவத்தில் இந்தோ-சீனா யுத்தத்தின்  போது பொதுஅறுவை சிகிச்சை சிறப்பு நிபுணராகப் பணியாற்றினார். புதுதில்லி இராணுவ மருத்துவமனையில் இரண்டு வருடங்கள் பணியாற்றிவிட்டு சென்னை மருத்துவக்கல்லூரியில் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வந்த அதே சமயம் அதே கல்லூரியில் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் உதவிப் பேராசிரியராகவும் சேர்ந்தார்.

 

இந்த அமைப்புகளைத்தவிர, டாக்டர் கனகா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையைச் சேர்ந்த தொற்றுநோய் ஆராய்ச்சி மையத்திலும், ஹிந்து மிஷன் மருத்துவ மனையிலும் பணியாற்றியுள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலும், வசதி குறைவானவர்களுக்கு என்று அமைந்திருக்கும் பல தொண்டு நிறுவனங்களிலும் பணிபுரிந்திருக்கிறார்.

 

பல வெளிநாடுகளுக்கும் சென்று வந்துள்ளார் டாக்டர் கனகா. முதன்முதலாக 1973 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டிற்கு சென்று வந்திருக்கிறார். 2010 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற முதல் பெண் சீன மருத்துவர்களின் சந்திப்பின் போது வாழ்நாள் சாதனைக்காக உலக நரம்பியல் அமைப்பிடமிருந்து விருது வாங்கினார். அங்கு ஒரு ஆய்வுக் கட்டுரையை வாசித்த போது அவருக்கு வயது 70 ஐ தாண்டி இருந்தது.

 

மருத்துவராக மட்டுமல்ல ஒரு நல்ல மனுஷியாகவும் இருக்கிறார் டாக்டர் கனகா. தனது ஓய்விற்குப் பிறகு தனது குரோம்பேட்டை வீட்டின் அருகிலேயே சந்தானகிருஷ்ணன் பத்மாவதி ஆரோக்கிய நிலையம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைத்து 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார். மருத்துவ சம்மந்தமான விரிவுரைகள், முதுமையைப் பற்றிய விழிப்புணர்வு, முதியவர்களைப் பார்த்துக் கொள்ளும் பணியாட்களுக்கான மருத்துவ பிரச்னை குறித்தும் அவ்வப்போது பல அறிஞர்களைக் கொண்டு இந்த நிலையத்தில் பேச வைக்கிறார்.

 

இவர் செய்த இன்னொரு சாதனையும் நம்மை வியக்க வைக்கிறது. இதுவரை அதிக தடவை இரத்த தானம் செய்த தனி நபர் என்கிற சாதனையை செய்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 2004 ஆம் ஆண்டுவரை 139 முறை இரத்த தானம் செய்திருக்கிறார்.

 

திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஒருபோதும் தனது பெற்றோர்கள் தன்னை வற்புறுத்தியது இல்லை என்கிறார் டாக்டர் கனகா. ‘எனக்குத் திருமணம் ஆகியிருந்தால் சொந்த வாழ்க்கை, மருத்துவம் இரண்டிலும் கொஞ்சம் கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்க வேண்டியிருந்திருக்கும். இளம் வயதில் எங்களை விட்டுப் பிரிந்த எனது தம்பியை நான் அக்கறையுடன் கவனித்துக் கொண்ட விதத்தைப் பார்த்த என் அம்மா கல்யாணம் வேண்டாம் என்ற என் முடிவை ஆதரித்தார். நான் சேவை செய்யப் பிறந்தவள் என்பதை என் அம்மா உணர்ந்திருந்தார் என்று தோன்றுகிறது’

 

தன்னலம் பாராமல் மருத்துவ உலகிற்கு சேவை செய்துவரும் இவரை இந்த மகளிர் தினத்தில் ‘தொடரட்டும் உங்கள் பணி’ என்று வாழ்த்துவோம்!

பெண்குரல் 1

முகநூலில் ஒரு காணொளி பகிர்ந்திருந்தார்கள். மாணவர்கள் நிறைந்த ஒரு வகுப்பறை. ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் காண்பித்து இவளுடைய பொழுதுபோக்கு என்ன கண்டுபிடிக்க முடியுமா? என்று மாணவர்களிடம் கேட்டார்கள். எல்லோரும் கோலம், ஓவியம், சமையல், தையல் என்று பெண்களுக்கென்று நம் சமூகம் வரைந்து வைத்திருக்கும் எல்லையை மீறாமல் பதில் சொன்னார்கள். அந்தப் பெண்ணே நேரில் வந்தாள். அவள் சொன்னாள் ‘என் பொழுதுபோக்கு ‘மலையேற்றம்’!’ என்று. எல்லோருக்குமே அளவுகடந்த வியப்பு! பெண்ணாவது மலையேறுவதாவது……? என்று தான் அங்கிருந்த ஒவ்வொருமே – மாணவர்கள் மட்டுமல்ல; மாணவிகளும் கூட நினைத்திருப்பார்கள்.

நேற்றைய டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித்தாளில் இதைப்போல தங்கள் எல்லைகளை கடந்து சாதித்துக்கொண்டிருக்கும் சில பெண்களைப் பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்:

நுங்ஷி மற்றும் தஷி மாலிக்:
உலகத்தின் ஏழு மலை உச்சிகளை (எல்லாக் கண்டங்களிலும் உள்ள அதிக உயரமான மலை உச்சிகள்) ஏறிய முதல் இரட்டை சகோதரிகள் என்ற பெருமையைப் பெற்றவர்கள் இவர்கள். தென், வட துருவங்கள் இடையே உள்ள மிகக்கடினமான கடைசி தூரத்தை ஸ்கீ (Ski) என்னும் சாகச விளையாட்டு மூலம் கடந்தவர்கள். டென்னிஸ் விளையாட்டில் கொடுக்கப்படும் கிராண்ட்ஸ்லாம் என்கிற விருது போல இந்த சாகசவிளையாட்டிற்குக் கொடுக்கப்படும் ‘Adventures Grand Slam’ மற்றும் ‘Three Pole Challange’ ஆகிய விருதுகளைப் பெற்ற முதல் சகோதரிகள், மற்றும் இரட்டையர் என்கிற பெருமையும் இவர்களுக்கு உண்டு.

‘18 வயது நிரம்பியவுடன் மலையேற்றம் ஆரம்பித்தோம். எங்கள் பயிற்சியாளர் எங்களை வேடிக்கையாக ‘எவரெஸ்ட் ட்வின்ஸ்’ என்று கூப்பிட ஆரம்பித்தார். அதுவே எங்களக்கு எல்லா மலை உச்சிகளையும் தொட உந்துதலாக இருந்தது. எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடித்த எட்மன்ட் ஹில்லாரி, ‘நாங்கள் எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகொள்ளவில்லை. எங்களை வெற்றிகொண்டோம்’ என்று கூறியதை நாங்கள் நினைவு கூர்கிறோம். இந்த சாகச விளையாட்டு மூலம் இயற்கையை ஆராய்ந்து அறிந்ததைவிட எங்களை நாங்கள் முழுமையாக அறிந்துகொண்டோம் என்பது தான் மிகவும் முக்கியமான விஷயம். இன்றைக்கும் நமது சமுதாயம் மலையேற்றம் என்பதை ஆண்களுக்கு உரித்தானது என்ற எண்ணத்திலேயே பார்க்கிறது. இதை மாற்றவேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்’ என்று நுங்ஷி கூறுவதை தொடருகிறார் தஷி:

‘உயிருக்கு ஆபத்து, கைகால் மூட்டுக்களுக்கு ஆபத்து, (பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இது ரொம்பவும் கவலை தரக்கூடியது) தனியாக நெடுந்தூரம் பயணம் செய்வது, ஆண்களுடன் பலநாட்கள் தங்குவது, உடல்நிலை சரியில்லாமல் போவது, மாதவிலக்கு என்று பல சவால்கள் இந்த சாகச விளையாட்டில் உண்டு. இதைத்தவிர நாங்கள் இருவரும் கண்ணாடி அணிந்திருக்கிறோம். பனிப்பிரதேசங்களில் கண்ணாடியில் பனி படர்ந்து பார்க்கமுடியாமல் போகும். ஒவ்வொரு அனுபவமும் எங்களுக்கு பல பாடங்களைக் கற்றுத்தருகிறது. பலசமயங்களில் ஆண்களை விட பெண்கள் மனதளவிலும், உணர்வுபூர்வமாகவும் சிறந்த பலசாலிகள் என்பதை உணருகிறோம். அதேபோல ஆண்களைவிட பெண்களின் உடலமைப்பு இயற்கையின் சவால்களை ஏற்கும் வகையில் அமைந்திருக்கிறது என்றும் தோன்றுகிறது!’

கூரை ஏறி கோழி பிடிக்காதவள் நான். அதனால என்ன? வானம் ஏறி வைகுந்தம் போறேன்னு சொல்றவங்களைப் பற்றி எழுதலாமே!

இந்தப் பெண்கள் தினத்தில் இந்த வீரலட்சுமிகளுக்கு வாழ்த்துச் சொல்வோம்!

நாளை இன்னும் சிலரை சந்திக்கலாம்.

குழந்தையின் 3 -வது மாத வளர்ச்சி

செல்வ களஞ்சியமே – 23

மூன்று மாதங்கள் என்பது குழந்தையின் வளர்ச்சியில் ஒரு மைல்கல் எனலாம். இப்போது குழந்தையின் தூக்கம், உணவு, விளையாட்டு எல்லாமே ஓரளவுக்கு ஒரு ஒழுங்குமுறைக்கு வந்திருக்கும். வீட்டில் இருக்கும் எல்லோருமே ‘அப்பாடி, குழந்தைக்கு மூன்று மாதம் ஆகிவிட்டதா?’ என்று ஆசுவாசமாய் கேட்பார்கள். அம்மாவிற்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு புரிதல் ஏற்பட்டிருக்கும். கழுத்து எலும்புகள் கெட்டிப்பட்டு தலை நன்றாக நின்றிருக்கும். இப்போது குழந்தையை எடுப்பது, நீராட்டுவது எல்லாமே கொஞ்சம் சுலபமாக இருக்கும். அம்மாவைத் தவிர மற்றவர்களையும் குழந்தை அடையாளம் கண்டுகொள்ள ஆரம்பிக்கும்.

அழைப்பு மணி அடித்தவுடன், ‘பக்கத்தாத்து மாமி வந்திருக்கா பாரும்மா. கதவுக்கு வெளியே அந்த மாமி பேசறது நம்மாத்துக்குள் கேட்கிறது’ என்று மனதிற்கு நினைத்துக் கொள்ளும். பார்வை நிலைப்பட்டு உங்கள் கண்களைப் பார்த்து சிரிக்கும். நிற்க வைத்துக் கொண்டால் நம் தொப்பை மீது காலை வைத்து சிறிது நேரம் நிற்கும். குப்புறப் படுக்க விட்டிருந்தால் தலையைத் தூக்கிப் பார்க்கும். ஒரு கையை தூக்கி  இன்னொரு கையால் அந்தக் கையைப் பிடிக்கப் பார்க்கும். அப்படியே வாய் வரை கொண்டுவந்து வாய்க்குள் போட்டுக் கொள்ளும். ஏதாவது விளையாட்டுப் பொருள் கொடுத்தால் கெட்டியாக பிடித்துக் கொள்ளும். கைப்பிடி வலுவாக இருக்கும். கையில் எந்த சாமான் அகப்பட்டாலும் நேராக வாய் அருகே கொண்டு போகும். எல்லாக் குழந்தைகளுக்கும் இந்தப் பழக்கம் இருக்கும். சிலசமயம் தன் தலைமயிரை தானே பிடித்துக் கொண்டு  விடத்தெரியாமல் அழும்!

 

தொடர்ந்து படியுங்கள்: தாய்ப்பால் தவிர வேறு பால் கொடுக்கலாமா?

 

இதன் முன் பகுதி 

எங்கள் பாட்டி!

patti

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து கோடை விடுமுறை என்றால் பாட்டி வீடுதான். மூன்று மாமாக்களும் பாட்டியும்  ஸ்ரீரங்கத்தில் இருந்தனர்  என் பெரியம்மாவின் மகன், மகள், என் அண்ணா,  என் அக்கா (சில வருடங்கள் ) ஸ்ரீரங்கத்தில் பாட்டியுடன் தங்கிப் படித்தவர்கள்.

 கோடைவிடுமுறை முழுக்க அங்குதான். பாட்டியின் கை சாப்பாடு, கொள்ளிடக் குளியல், மாலையில் கோவில், வெள்ளைக் கோபுரம் தாண்டி இருக்கும் மணல்வெளியில் வீடு கட்டி விளையாட்டு, சேஷராயர் மண்டபத்தில் கண்ணாமூச்சி விளையாட்டு – இவைதான் தினசரி பொழுது போக்கு.

தாத்தா மிகச் சிறிய வயதிலேயே (45 வயது) பரமபதித்துவிட்டார். கடைசி மாமாவுக்கு 1 1/2 வயதுதான் அப்போது. தாத்தாவிற்கு ஆசிரியர் வேலை – ஊர் ஊராக மாற்றல் ஆகும் வேலை. பாட்டிக்கு மொத்தம் 14 குழந்தைகள். எங்களுக்கு நினைவு தெரிந்து 6 பேர்தான் இருந்தனர். பெரிய பிள்ளைக்கும் பெரிய பெண்ணிற்கும் தாத்தா இருக்கும்போதே திருமணம்.

எந்த வசதியும் இல்லாத அந்தக் காலத்தில் பாட்டி எப்படி இத்தனை குழந்தைகளை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தினாள்  என்பது இன்றுவரை புரியாத புதிர்தான்.

கணவரின் மறைவுக்குப் பிறகு இன்னொரு மகளுக்கு (என் அம்மா) திருமணம் செய்தாள் பாட்டி. இரண்டாவது உலக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 1944 இல் அன்றைய மதராசில் திருமணம். மகள்களுக்குத் திருமணம் செய்தபின் தொடர்ந்து அவர்களது பிரசவங்கள். பெரியம்மாவிற்கு நான்கு குழந்தைகள்; நாங்கள் நாலுபேர்கள்.

நாங்கள் கோடைவிடுமுறை க்குப் போகும்போது நல்ல வெயில் கொளுத்தும். ஆனாலும் பாட்டி வீடு தான் எங்களின் சொர்க்கம். வாசலிலேயே காய்கறி, பழங்கள் என்று வரும். மாம்பழங்கள் டஜன் கணக்கில் வாங்கி கூடத்தில் இருக்கும் உறியில் தொங்கவிடப்படும். இரவு எல்லோருக்கும் கட்டாயம் பால் உண்டு.

இத்தனை செலவுகளை பாட்டி எப்படி சமாளித்தாள்? தெரியாது. மூன்று வேளை  சாப்பாடு, மதியம் ஏதாவது நொறுக்குத் தீனி. எதற்குமே குறைவில்லை.

கோழியின் பின்னால் ஓடும் குஞ்சுகளைப் போல பாட்டி எங்கு போனாலும் – காவேரி வீட்டிற்கு பால் வாங்க (சரியாகத்தான் பெயர் வைத்தார்கள் உனக்கு – நீ கொடுக்கற பாலில்  காவேரிதான் இருக்கு,  என்று என் பாட்டி அவளைக் கடிந்து கொள்வாள்.) செக்கிற்குப் போய் எண்ணெய் வாங்க என்று பாட்டி எங்கு போனாலும் அவள் பின்னே  நாங்கள் – பாட்டி சொல்வாள் – ‘பட்டணத்துலேருந்து குழந்தைகள் வந்திருக்கா பால் இன்னும் கொஞ்சம் கொசுறு ஊற்று, மாம்பழம் குழந்தைகள் கையில் ஆளுக்கு ஒண்ணு கொடு’ என்று பாட்டியின் வியாபர தந்திரங்கள் எங்களுக்கு வேடிக்கையாய் இருக்கும்.

பாட்டி காலையில் தீர்த்தாமாடிவிட்டு வந்து வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு நெற்றிக்கு இட்டுக் கொள்வாள். மூக்கின் மேல் திருமண்; அதற்கு மேல்  சின்னதாக ஸ்ரீசூர்ணம். பாட்டியை நெற்றிக்கு இல்லாமல் பார்க்கவே முடியாது.

அக்கம்பக்கத்தில் இருக்கும் அத்தனை பேருடனும் சுமுக உறவு. பாட்டிக்கு எல்லோருமே ஏதோ ஒரு வகையில் உறவுதான் அம்மாஞ்சி (மாமாவின் பிள்ளை) அவரது மனைவி  அம்மாஞ்சி மன்னி, அத்தான் (அத்தையின் பிள்ளை) அத்தான் மன்னி (அத்தானின் மனைவி) அத்தங்கா (அத்தையின் பெண்) அத்தங்கா அத்திம்பேர் (அத்தங்காவின் கணவர்) என்று பல பல உறவுகள்.

இவர்களுடன் பாட்டி பேசும் ‘என்னங்காணும், ஏதுங்காணம் வாருங்காணம், சொல்லுங்காணம், சௌக்கியமாங்காணம்’ என்கிற பாஷை எங்களுக்கு வேடிக்கையாக இருக்கும். நாங்களும் இப்படியே பேசிப் பார்ப்போம்.

பாட்டி கொஞ்சம் கனத்த சரீரம். லோ பிரஷர் வேறு. அவ்வப்போது தலை சுற்றுகிறது என்று உட்கார்ந்து கொள்வாள். ஓடிப் போய் சோடா வாங்கி வருவோம். ‘சோடா வேண்டுமென்றால் சொல்லேன். வாங்கித் தருகிறோம் அதற்கு ஏன் லோ பிரஷரைத்  துணைக்குக் கூப்பிடுகிறாய்’ என்று என் பெரிய அண்ணா கேலி செய்வான்.

அங்கிருக்கும் நாட்களில் கட்டாயம் குறைந்த பட்சம் இரண்டு சினிமா உண்டு. காலையிலிருந்தே நாங்கள் ஆரம்பித்து விடுவோம்: ‘பாட்டி சீக்கிரம் கிளம்பணும். லேட் பண்ணாத; எங்களுக்கு முதல் ஸீன் லேருந்து பார்க்கணும்’. ஸ்ரீரங்கத்தில் நான் பார்த்த எனக்கு நினைவில் இருக்கும் சினிமாக்கள்: வீரபாண்டிய கட்டபொம்மன், பார்த்தால் பசி தீரும்.

பாட்டி பட்சணம், தீர்த்தம் எல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்புவதற்குள் நாங்கள் பரபரத்துப் போய்விடுவோம். மாட்டு வண்டி வேறு எங்கள் அவசரம் புரியாமல் நிதானமாக நடக்கும்.

பேரன்கள் முதலிலேயே போய்  (சேர் (chair) 8 அணா, தரை 4 அணா ) டிக்கட் வாங்கிவிடுவார்கள். பாட்டியுடன் போனால் தரை டிக்கட்டுதான். பாட்டிக்கு காலை நீட்டிக் கொண்டு உட்கார வேண்டும்.  பாட்டிக்கு அங்குதான் ஓய்வு கிடைத்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது.

பாட்டி கையால் கட்டாயம் ஒரு முறை எல்லோருக்கும் விளக்கெண்ணெய்  கொடுக்கப்படும். பாட்டி அன்று பண்ணும் சீராமிளகு சாத்துமுதுவும், பருப்புத் தொகையலும் ஆஹா! ஓஹோ! தான்.

என்னுடன் ஒருமுறை வந்து இருந்தபோது எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பண்ணுவது சொல்லிக் கொடுத்தாள் பாட்டி. மோர்க்களி செய்து தளதளவென்று அப்படியே தட்டில் போட்டு மைசூர் பாகு மாதிரி துண்டம் போட்டுக் கொடுப்பது பாட்டியின் ஸ்பெஷாலிடி!

இத்தனை வேலை செய்து ஓய்வு ஒழிச்சல் இல்லாத போதும் பாட்டி கைவேலைகளிலும் ஆர்வம் மிகுந்தவள். வண்ண  வண்ண உல்லன்  நூலில் ரோஜாப்  பூ போடுவாள். 10, 15       ரோஜாப்பூக்கள் பின்னியதும் அவற்றிற்கு பொருத்தமான நூலில் அவற்றை வைத்துப் பின்னி ரோஜாப்பூ சவுக்கம் (டவல்) தயார் செய்வாள். பாட்டி பின்னிய கைப்பைகள் சதுரம் வட்டம்,அறுகோணம் என்று எல்லா வடிவங்களிலும் இருக்கும். அவற்றிக்கு உள்ளே தடிமனான அட்டை வைத்து ஜிப் வைத்துத் தைப்பது என் அம்மாவின் கைவேலை.

பாசிமணி எனப்படும் சின்னச்சின்ன மணிகளில் பொம்மைகள் செய்து, அந்த மணிகளிலேயே செடி, கொடி, மரம் செய்து இந்தப் பொம்மைகளை அவற்றின்மேல் உட்கார வைத்து அவற்றை ஒரு பாட்டிலுக்குள் நுழைத்து செய்யும் கைவேலையும் பாட்டி செய்வாள். ‘பாட்டிலுக்குள் இதெல்லாம் எப்படி போச்சு?’ என்ற எங்கள் கேள்விகளுக்கு ‘நான் உள்ள போ அப்படின்னு சொன்னேன் போயிடுத்து’ என்பாள்  பாட்டி!

பாட்டிக்குக் கோவமே வராது. சாப்பிடும் நேரம் யாராவது முதலில் சாப்பிட்டுவிட்டு  ‘எனக்கு, எனக்கு’ என்றால் பாட்டி சொல்வாள்: ‘முதல் பசி ஆறித்தா? கொஞ்சம் சும்மா இரு!’

இன்றும் நாங்கள் இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறோம் எங்கள் குழந்தைகளிடத்தில் – தற்சமயம் பேரன் பேத்திகளிடத்தில்.

பாட்டி எங்கள் அம்மாவிற்குக் கொடுத்து எங்கள் அம்மா எங்களுக்கு கொடுத்தது என்று வெள்ளிப் பாத்திரங்கள் இன்றும் எங்களிடம் உள்ளன. ஒரு சின்ன துரும்பைக் கூட வீணாக்காமல் பாட்டி அன்று நடத்திய குடும்பம்தான் இன்று எங்களிடம் வெள்ளிச் சாமான்களாக இருக்கின்றன.

பாட்டி நிறைய துக்கப் பட்டிருக்கிறாள். கணவனை இழந்த பாட்டியின் வாழ்க்கையில் எனது பெரிய மாமா அதே 45 வயதில் பரமபதித்தது பெரிய துக்கம். பாட்டி ரொம்பவும் ஒடுங்கிப் போனது இந்த  ஈடுகட்ட முடியாத இழப்பிற்குப் பிறகுதான்.

ஒரு கோடைவிடுமுறையில் சித்திரை த் தேர் எங்கள் வீட்டு வாசலைத் தாண்டியபின் மாமாவின் இழப்புச் செய்தி வந்தது. ‘ராமாஞ்ஜம் …!’ என்று கதறியபடியே பாட்டி நிலைகுலைந்து போனது இன்னும் எனக்கு நினைவில் நீங்காமல் இருக்கிறது.

அதேபோல பாட்டியுடன் கூடவே இருந்து ஸ்ரீரங்கத்தில் படித்து IPS ஆபிசர் ஆன  எங்கள் பெரியம்மாவின் மகன் இளம்வயதில் இறைவனடி சேர்ந்தது, என் அக்காவின் கணவர் மறைந்தது என்று என் பாட்டி பல இழப்புகளைப் பார்த்து மனம் நொந்து போனாள்.

எனக்கும் வயதாவதாலோ என்னவோ இன்று பாட்டியின் நினவு அதிகமாக வந்து விட்டது. அன்னையர் தினத்தன்று எங்கள் அருமைப் பாட்டியைப் பற்றி எழுதுவதில் ரொம்பவும் சந்தோஷப் படுகிறேன்.

எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

***************************************************************************

இந்தப் பதிவு படித்துவிட்டு ஸ்ரீரங்கத்தில் இருக்கும் என் மாமா (திருமஞ்சனம் சுந்தரராஜன்) எழுதிய கடிதம் இது. சில திருத்தங்கள் சொல்லியிருக்கிறார். அவற்றை அப்படியே மாமாவின் கடிதத்திலிருந்தே கொடுக்கிறேன். மாமாவின் பாராட்டையும் இணைத்துள்ளேன்.

சௌபாக்யவதி ரஜிக்கு 
சுந்துமாமாவின் ஆசீர்வாதம் 
 
பாட்டியைப் பற்றி உனது கட்டுரை படித்தேன், (தில்லியில் ஆண்டு 1985 கண்ணப்பா மாமா எடுத்த) போட்டோவும் பார்த்து சந்தோஷப் பட்டேன்.
 
இரண்டு வாஸ்தவமான திருத்தங்கள்  ~ 
 
என் தகப்பனார் (மாத்த்யூ ஆர்னல்ட் போன்று) 
ஸ்கூல்ஸ்-இன்ஸ்பெக்டர் ஆக இருந்தார், 
அவர் ஆயுள் 54 வருஷம்.
மாமா” (ராமாநுஜம்) ஆயுள் 49 வருஷம் 7 மாசம் 
கொண்டது.   தான் பிறந்தது ருஷ்ய போல்ஷ்விக் புரட்சி
நிகழ்ந்த ஆண்டு 1917 என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வார்.  
அவர் நீங்கியது மே-1967. 
உன் கட்டுரை மிக அருமை.
ஏதோ இலக்கிய உத்தி / ரீதி என்று கற்பனை
பண்ணிக்கொண்டு முண்டும் முடிச்சுமாக
எழுதி அவஸ்தைப் படுகிறவர்களை நான்
பார்த்திருக்கிறேன்.
 
உன் எழுத்து கி. ராஜநாராயணன் என்கிறவர்
நடை போல ஸ்வதந்த்ரமாக, போலி இன்றி 
அமைந்திருக்கிறது.
 
உன்னுடைய readers’ feedback புகழ்ச் சொற்கள் 
அனைத்தும் தகும்.    பாராட்டுகள்.   மிக அருமை.
 
நான் எனது சுய-சரிதை எழுதி, அதற்கு  முன்னர் 
உன் கட்டுரை கிடைத்திருந்தால், அதை அப்படியே 
தூக்கி ஒரு முழு அத்தியாயமாகச் சேர்த்திருப்பேன் !
அன்புடன்,
சுந்து மாமா
(ஸ்ரீரங்கம்)
 

சூப்பர் மாம்!

செல்வ களஞ்சியமே – 16

 

 

 

இந்த வாரம் நாம் சில சூப்பர் அம்மாக்களைப் பார்க்கலாம்.

முதலில் டாக்டர் சுபா.

இரண்டு வருடங்களுக்கு முன் தான் இவர் எனக்கு அறிமுகம் ஆனார். தோல் சிகிச்சை நிபுணர். முதல் தடவை போய்விட்டு வந்தபின் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் இவரைப் பார்க்கவில்லை. பிறகு ஒரு நாள் தொலைபேசியில் கூப்பிட்டபோது சாயங்காலம் வாருங்கள் என்றார்.

‘இப்போது காலை வேளைகளில் வருவதில்லையா?’ என்று கேட்டதற்கு, ‘குழந்தை பிறந்திருக்கிறது. மாலை வேளைகளில் கணவர் (அவரும் ஒரு மருத்துவர்) குழந்தையைப் பார்த்துக் கொள்ளுகிறார். அவர் தனது வாடிக்கையாளர்களை காலை வேளையில் சந்திக்கிறார். இருவருமாக இந்த மருத்துவ மனையை இப்படி ஷிப்ட் போட்டுக் கொண்டு சமாளித்து வருகிறோம்’ என்றார்

இந்தப் பகுதியிலும் வேலைக்குச் செல்லும் நான்கு பெண்கள் குழந்தை பிறந்தவுடன் அதனை எப்படி வளர்த்தனர் என்று பார்க்கப் போகிறோம். தொடர்ந்து படிக்க கீழே சொடுக்குங்கள்:

நீங்களும் ஆகலாம் சூப்பர் அம்மா!