சுருக்கெழுத்தும் நானும்!

சென்ற வாரம் செய்தித்தாளில் ‘சுருக்கெழுத்து இனி இல்லை’ என்ற செய்தி வந்திருந்தது. கணணி தொழில்நுட்பம் பல்கிப் பெருகுவதில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது சுருக்கெழுத்து என்று சொல்லப்படும் Shorthand. சுருக்கெழுத்து சொல்லித்தரும் மையங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதாம். இன்னும் சில வருடங்களில் சுருக்கெழுத்து என்பதே இல்லாமல் மறைந்துவிடுமாம்.

இதை படித்ததிலிருந்து மனதிற்குள் வருத்தமோ வருத்தம். எத்தனை அருமையான ஒரு கண்டுபிடிப்பு, ஓர் அரிய கலை இந்த சுருக்கெழுத்து தெரியுமா? இதை கற்றுக் கொண்ட என் போன்றவர்களுக்குத்தான் இதன் அருமை நன்றாகத் தெரியும்.

எஸ்எஸ்எல்சி + டைப்பிங், ஷார்ட்ஹேண்ட் என்பது அந்தக் காலத்தில் வேலை கிடைக்க மிகப் பெரிய தகுதி. டைப்பிங், ஷார்ட்ஹேண்ட் தெரிந்தால் Stenographer  வேலைக்கு உத்தரவாதம். அதனால் (இன்றைய  +1) அன்றைய எஸ்எஸ்எல்சி முடித்தபின் கல்லூரிக்குப் போகாத என்னைப் போன்ற அத்தனை பெண்களும் மாலைப்பொழுதில் கையில் சுற்றிய வெள்ளைப் பேப்பருடன் டைப்பிங் வகுப்பிற்கு போக ஆரம்பிப்பார்கள்.

புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் இருந்தது மீனா இன்ஸ்டிட்யூட். டைப்பிங், ஷார்ட்ஹேண்ட்,  D.Com என்றழைக்கப்படும் Diploma in Commerce (இதில் அக்கௌண்டன்ஸி, புக்-கீப்பிங், பாங்கிங் எல்லாம் அடக்கம்.) இவற்றை சொல்லித் தரும் இன்ஸ்டிடியூட் தான் மீனா இன்ஸ்டிட்யூட் ஆப் காமர்ஸ்.

டைப்பிங் கற்றுக்கொள்ள வரும் எல்லோரும் ஷார்ட்ஹேண்ட் கற்க மாட்டார்கள்.  ஒரு சிலரே ஷார்ட்ஹேண்ட் கற்பார்கள். ஏனெனில் மிகவும் உழைக்க வேண்டும் இது கற்க. பயிற்சி, பயிற்சி, இடைவிடாப் பயிற்சி இதுதான் முதல் நாள் எங்களுக்கு சொல்லித் தரப்படும் மந்திரம்.

தட்டச்சிற்கு எப்படி fingering முக்கியமோ அதேபோல ஷார்ட்ஹேண்ட் –க்கு strokes முக்கியம்.

என் தோழிகள் ஒருவர் விடாமல் கல்லூரிக்குப் போக நான் மட்டும் கையில் வெள்ளைப் பேப்பருடன் இன்ஸ்டிடியூட் போக ஆரம்பித்த போது அழுகை அழுகையாக வரும்.. ஏற்கனவே அங்கு சேர்ந்திருந்த எங்கள் பள்ளியின் பழைய மாணவிகள் ‘ஏண்டி, காலேஜ் சேரலையா?’ என்று கேட்டாலே அழுகை பொத்துக் கொண்டு வரும். ஒரு நாள், ‘பரவால்ல, விடு, அடுத்த ஜென்மத்துல படிப்பியாம்!’ என்று ஒருவள் ஜோக்கடிக்க, அன்று நான் பட்ட மனத்துயரம்……! (அப்போது தொலைதூர பல்கலைகழகம் எல்லாம் வந்திருக்கவில்லை.)

ஆனால் ஷார்ட்ஹேண்ட் கற்க ஆரம்பித்தவுடன் தன்னிச்சையாக அதில் ஒரு ஆர்வம் வர, என் அழுகையும் மாறியது.

இந்த சுருக்கெழுத்து என்பது ஆங்கில உச்சரிப்பின் அடிப்படையில் உருவானது. நாங்கள் கற்றது Pitman Shorthand. வேறு சில முறைகளும் சுருக்கெழுத்தில் உண்டு. முதலில் வெறும் கோடுகள்தான். அதாவது P, B, T, D, என்று ஆரம்பிக்கும். இவைகளுடன் பிறகு உயிரெழுத்துக்கள் புள்ளி, சின்னக் கோடு, சின்ன v வடிவில் என்று சேரும்.

shorthand strokes

சுருக்கெழுத்து எழுதுவதற்கென்றே தனியாக நோட்டுப் புத்தகங்கள் கிடைக்கும். சாதாரண நோட்டுப் புத்தகங்கள் போல் இல்லாமல் இதில் ஒரு கோட்டுக்கும், இன்னொரு கோட்டுக்கும் இடையில் அதிக இடைவெளி இருக்கும். அதேபோல பென்சிலும் உண்டு.

வெறும் கோடுகளாலேயே எல்லா வார்த்தைகளையும் எழுதுவதால் P என்பதற்கு மெல்லிய சாய்வுக் கோடு என்றால் B என்பதற்கு அதையே அழுத்தமாக எழுத வேண்டும்.

நன்றி: http://pitmanshorthand.homestead.com/BasicsofPitman.html

இந்தக் கோடுகளையும் வளைவுகளையும் நான்கு விதமாக எழுதுவோம்.  Above the line, On the line, Under the line, Through the line என்று. உயிர் எழுத்துக்களுக்கு பயன்படும் புள்ளி, சின்னக் கோடு, v வடிவம் ஆகியவையும் stroke க்குகளின் மேலே, நடுவே, கீழே, மற்றும் behind stroke, in front of the stroke என்று எழுதும் போது வேறு வேறு வார்த்தைகள் வரும். அதெல்லாம் ஆரம்பம்தான். போகப்போக பெரிய பெரிய சொற்களையும் ஒரு சின்ன கோடு, ஒரு வளைவுக்குள் அடக்கிவிடுவோம். எனக்கு இப்போது எவ்வளவு நினைவு இருக்கிறது என்று கேட்காதீர்கள். ஒன்றும் நினைவில்லை அடிப்படைக் கோடுகளைத் தவிர.

எங்கள் சுருக்கெழுத்து ஆசிரியர் திரு பாலசுந்தரம் மாஸ்டர். ரொம்பவும் கண்டிப்பானவர். வகுப்பு காலை 6.30 மணிக்கு என்றால் ‘டாண்’ என்று வந்துவிடுவார். டிக்டேஷன் ஆரம்பமாகிவிடும். சுருக்கெழுத்தில் எழுதியதை திரும்பவும் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு transcription என்று பெயர். மாஸ்டர் கொடுக்கும் டிக்டேஷனை எப்படியோ ஆங்கிலத்தில் படித்துவிடுவோம். ஹப்பா! படித்தாயிற்று என்று சந்தோஷப்பட முடியாது. எழுதிய நோட்டை வாங்கிப் பார்ப்பார். எந்தெந்த ஸ்ட்ரோக்ஸ் சரியாக இல்லை என்று சொல்லி மறுபடி எழுதச் சொல்லுவார்.

ஏனெனில் நேர்முகத் தேர்வுக்கு  முன் கொடுக்கப்படும் சுருக்கெழுத்து பரீட்சைகளில் transcription உடன் ஸ்டெனோக்ராபர்கள் தாங்கள் எழுதிய shorthand பேப்பரையும் இணைத்துக் கொடுக்க வேண்டும். எங்களது ஸ்ட்ரோக்ஸ் – க்கும் மதிப்பெண் உண்டு. ‘ஆங்கிலத்தில் ஒரு கடையின் பெயரைப் பார்த்தால் கூட உங்கள் கைகள் தன்னிச்சையாக ஸ்ட்ரோக்ஸ் போட வேண்டும்’ என்பார் மாஸ்டர்.

சுருக்கெழுத்து கீழ் நிலையில் 80 வார்த்தைகள் ஒரு நிமிடத்திற்கு எழுத வேண்டும். மேல் நிலையில் 120 வார்த்தைகள். டிக்டேஷன் சொல்லப்படும்போது கவனச் சிதறல் கூடவே கூடாது. சொல்பவரின் வார்த்தைகள் மட்டுமே நம் உடல், பொருள் ஆவி எல்லாவற்றிலும் நிறைந்திருக்க வேண்டும். ஒரு நொடிப் பொழுது கவனச் சிதறல் ஒரு முழு வாக்கியத்தை தவற விட்டுவிடச் செய்யும்.

எங்களுக்கு வீட்டில் யார் டிக்டேஷன் கொடுப்பார்கள்? அதற்கும் கூட முறைப்படி பயிற்சி பெற்றவர்கள் வேண்டும். ஆங்கிலச் செய்திகள் வாசிப்பவர்கள் தான் எங்கள் டிக்டேஷன் குரு.

எழுத எழுதத்தான் வேகம், கவனம் எல்லாம் சரிவர வரும்.

எழுதி முடித்த பின் இப்படித்தான் இருக்கும்:

shorthand - 2

இதைக் கற்று பல வருடங்களுக்கு பிறகு ஒரு முறை எனது ஆங்கில வகுப்பில் இந்த அரிய கலையை பற்றி பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த வகுப்பு உயர்நிலை வகுப்பு. தினமும் ஒருவர் ஏதாவது ஒரு தலைப்பில் பேச வேண்டும். பொதுவாக மாணவர்கள் பேசும் விஷயங்கள்  எனக்குத் தெரிந்ததாகவே இருக்கும். அவர்கள் பேசி முடித்தபின் என்னுடைய கருத்துக்களையும் சேர்த்துச் சொல்லுவேன்.

ஒருமுறை ஒரு மாணவி இந்த சுருக்கெழுத்து பற்றி பேச ஆரம்பித்தாள். அறிமுக உரையில் ‘இன்றைக்கு நான் பேச இருக்கும் விஷயம் பற்றி நம் ஆசிரியைக்குக் கூட தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே..’ என்றபடி சுருக்கெழுத்துப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள்.

அவள் பேசி முடித்தவுடன் சொன்னேன், நான் ஒரு ஸ்டெனோவாக இருந்தவள் தான் என்று.

‘எப்படி மேடம், உங்களுக்குத் தெரியாததே இருக்காதா?’ என்று மாணவர்கள் வியந்தபோது சொன்னேன்:

‘எனக்குத் தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் சுருக்கெழுத்து தெரியும்  என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமைப் படுகிறேன்.’ என்று.

இன்றும் அதே பெருமையுடனேயே இந்தப் பதிவை எழுதுகிறேன். இதைக் கற்பித்த திரு பாலசுந்தரம் மாஸ்டரை நினைவு கூர்வதில் மிகப் பெருமை அடைகிறேன். நன்றி ஸார்!

 

***********************************************************

எனது மாமா திரு டி.எஸ் சுந்தரராஜனின் கருத்துரை:

சுருக்கெழுத்து / ஸ்டெநோகிராபி பற்றின கட்டுரை
மிக அருமை.
நலிந்த பிறப்புகளைப்பற்றி மிகவும் இரங்கி எழுதின
சார்லஸ்-டிகென்ஸ்  ஸ்டெநோ ஆகவே தொழில் ஏற்றார்.
பெர்னார்டு-ஷா லண்டன் மாடி-பஸ்-இல்
தொடக்கத்திருந்து இறுதிவரை டிக்கட் எடுத்து,
மாடியில் முதல் ஸீட்-இல் பொருந்தியமர்ந்து
தனது ஆச்சர்யமான நாடகங்களையும், அவற்றையும்
விஞ்சும் முன்னுரைகளையும் ஷார்ட்-ஹாண்டிலேயே
எழுதித்தள்ளி, அகம் திரும்பி அவருக்கென்று வாய்த்த
மிகப் பொறுமைசாலியான மனைவியிடம் ஒப்படைக்க,
அவள் சிறப்பாக டைப் செய்து கொடுத்து விடுவாளாம்.
இவ்விதம் பேரிலக்கியத்தைக் காத்துக்கொடுத்த
ஷார்ட்-ஹாண்டு எனும் சிறந்த திறமையைக்
கழற்றிவிட்டோமானால் எவ்வளவு நஷ்டம் !
இவ்வாறே டெலிகிராப் தந்தியும் இந்நாட்டில்
ஜூலை 2013 வரைதான் இருக்கும் !
*********************************************************

 

29 thoughts on “சுருக்கெழுத்தும் நானும்!

  1. உண்மை. ஷார்ட் ஹேண்ட் பயிலுவது கடினம்தான். ஆங்கிலம், தமிழ் இரண்டு தட்டச்சிலும் மேல்நிலை தேர்ச்சி பெற்ற நான் சுருக்கெழுத்து வகுப்புப் போகத் தொடங்கிய கொஞ்ச நாளிலேயே ஜகா வாங்கி விட்டேன்! மனதிலேயே பதியவில்லை!

    1. வாருங்கள் ஸ்ரீராம்!
      கொஞ்சம் முயன்றால் வந்துவிடும். மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். நானும் என் அக்காவும் போட்டிபோட்டுக் கொண்டு எழுதுவோம், எழுதுவோம், எழுதிக் கொண்டே இருப்போம்! எங்கள் ஆசிரியரின் தூண்டுதல் என்று கூடச் சொல்லலாம்.

      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  2. எனது அலுவலத்தில் (முன்பு) சுருக்கெழுத்து பயின்றவர் – அவரின் அசுர வேகமான சுருக்கெழுத்து திறமையை கண்டு பல முறை வியந்துள்ளேன்…

    ‘சுருக்கெழுத்து இனி இல்லை’ என்பது வருத்தம் தான் அம்மா…

    திரு பாலசுந்தரம் அவர்களை குறிப்பிட்டது சிறப்பு… அவருக்கும் வாழ்த்துக்கள்… நன்றிகள்…

    1. வாருங்கள் தனபாலன்!
      ரொம்பவும் அருமையான கலை இது. அழியப் போகிறது என்று நினைக்க ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது!
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  3. சுருக்கெழுத்து இனி இல்லை – நிச்சயம் வருந்தத்தக்க விஷயம் தான் ரஞ்சனிம்மா.. கணினி மயமான பிறகு சுருக்கெழுத்து எழுதுவது குறைந்துவிட்டது மட்டுமல்ல Dictation தருவதற்கும் தகுதி இல்லாதவர்கள் இப்போது அதிகமாகி விட்டார்கள். பல அலுவலகங்களில் தொடர்ந்து பத்து வரிகள் ஆங்கிலத்தில் பேசக்கூடியவர்கள் இல்லாது போய் விட்டார்கள் என நினைக்கிறேன். சுருக்கெழுத்து எப்படி ஒரு உன்னதக் கலையோ அது போலவே Dictation தருவதும்!

    1. வாருங்கள் வெங்கட்! மிகச் சரியாகச் சொன்னீர்கள், dictation தருவதற்கு முடியாமல் நான் வேலை செய்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி எழுதிக் கொடுத்துவிடுவார்!
      பல நேர்முகத் தேர்வுகளுக்குப் போய் dictation சரியாக கொடுக்காததால் வெறுத்துப் போய் வந்திருக்கிறேன்!
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  4. உண்மைதான் ஆகமிகச்சிறந்த கலை என்று கூட சொல்லலாம் பேச்சாளர்களின் சொற்பொழிவை உடனுக்குடன் மிகச்சரியாக கொண்டு சேர்ப்பவர்கள் md களுக்கும் செய்தித்தாள்களுக்கும் மூச்சே இவர்கள்தான் .அதே சமயம் காளைகளுக்கும் கன்னியருக்கும் மீட்டிங் பாயிண்ட் அந்த இன்ஸ்டிடியு ட்டுகள் தான் காதலையும் வளர்த்தது

    1. வாருங்கள் நாகராஜ்!
      ஹா….ஹா….நான் சொல்லாமல் விட்டதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்!

      எனது பதிவுக்கு புது பரிமாணத்தை உருவாக்கியதற்கு நன்றி!

  5. //ஆங்கிலத்தில் ஒரு கடையின் பெயரைப் பார்த்தால் கூட உங்கள் கைகள் தன்னிச்சையாக ஸ்ட்ரோக்ஸ் போட வேண்டும்’ என்பார் மாஸ்டர்.//

    ஆஹா, நம்மளோட சப்ஜெக்ட் ஆச்சே. இப்போக் கூட ஆங்கிலப் பெயரைப் பார்த்தால் உடனே ஸ்ட்ரோக்ஸ் போட்டுடுவேன். :))) நான் படிச்சது மதுரை மேலாவணி மூலவீதியில் மஹாகணபதி டெக்னிகல் இன்ஸ்டிட்யூடில். ஆனால் பள்ளியிலேயே தட்டச்சுப் பயிற்சி பத்து, பதினோராம் வகுப்புக்களில் இருந்ததால் நேரடியாக ஆங்கிலத் தட்டச்சு ஹையர், தமிழ்த் தட்டச்சு ஹையர், சுருக்கெழுத்து ஹையர், அக்கவுன்டன்சி ஹையர்னு போயிருக்கேன். அக்கவுன்டன்சியும் பள்ளியிலேயே உண்டு. எங்கள் இன்ஸ்டிட்யூட் வாத்தியார் கோபால் சார் என்றழைக்கப்படும் கணபதி சுப்பிரமணியம் அவர்களே எங்கள் பள்ளியிலும் இந்த செக்ரடேரியல் கோர்ஸின் ஆசிரியராக இருந்தார். சொல்லப் போனால் பத்தாம் வகுப்பில் பாடத் தேர்வுகளில் கணக்கு எடுக்கலாமோ என நினைத்துக் கொண்டிருந்த என்னை இந்தப் பாடத்திட்டத்தில் சேர்த்து விட்டதே அவர் தான். பல முறை எனக்கு மட்டும் சிறப்புப் பாடம் எடுத்திருக்கார். நான் என் வாழ்நாளில் மறக்கவே முடியாத என் குரு மட்டுமல்லாமல் தந்தைக்கும் மேல் அவர் தான் என்றே சொல்லலாம். ஒரு நோஸ்டால்ஜியா வந்துடுச்சு! :))))))

    1. வாருங்கள் கீதா!
      //ஆஹா, நம்மளோட சப்ஜெக்ட் ஆச்சே//
      உங்களின் சந்தோஷம் இந்த வரிகளில் தெரிகிறது!
      நீங்க ரொம்ப புத்திசாலிப்பா! எத்தனை கோர்ஸ்-கள் பண்ணியிருக்கிறீர்கள்!

      நானும் உங்களைப் போலத்தான் – பழைய நினைவுகளிலிருந்து மீளவே முடியவில்லை. நமக்கு அமைந்த ஆசிரியர்கள் ஒரு வரம் தான், இல்லையா?

      இன்னமும் என்னிடம் Pittman shorthand புத்தகம் இருக்கிறது. மறுபடி எழுத வேண்டும் என்று அடிக்கடி தோன்றும்.

  6. அப்போதெல்லாம் வானொலியில் மெல்வில் டிமெல்லோவின் செய்தி வாசிப்பைக் கேட்டுக் கொண்டே எழுதிப் பழகுவோம்.

    1. கீதா! சிம்ப்ளி கிரேட் நீங்க.
      எனக்கு பெயர் நினைவுக்கு வரவில்லை. நீங்கள் சொல்லிவிட்டீர்கள்!
      அதுசரி என்ன நானும் நீங்களும் சம காலத்தவர்களா?

      1. என்ன, ஒரு வயசோ, இரண்டு வயசோ வித்தியாசம் இருக்கலாம். அப்போதும், இப்போதும் சம காலத்தவர்கள் தானே! :))))) நான் பதினைந்து வயது முடியறதுக்குள்ளே வயசு கூடக் கொடுத்து எஸ்.எஸ்.எல்.சி. எழுதினேன். என்னோடு எழுதினவங்க எல்லாம் என்னை விட இரண்டு வயதாவது பெரியவங்க! :)))) பதினைந்து முடியலைனா அனுமதி கிட்டாது என்பதால் எஸ்.எஸ்.எல்.சி. செர்டிஃபிகேட்டில் வயசை மாத்தினார் அப்பா. :))))) சீக்கிரமாய்க் கல்யாணமும்! :)))) பெரும்பாலான குடும்பங்களில் இது சகஜமான ஒன்று தானே அந்தக் கால கட்டத்தில்!

  7. நல்ல கட்டுரை.
    என்ன காரணத்தினால் இப்படிச் செய்கிறார்கள்? ஸ்டெனோ பதவி தேவையில்லையா அல்லது மாற்றுவழி ஏதேனும் கண்டுபிடித்துவிட்டார்களா?

    1. வாருங்கள் பாண்டியன்!
      இப்போதெல்லாம் SMS வந்துவிட்டதே! அந்த நாட்களைப் போல நீண்ட கடிதங்கள் இப்போது தேவைப்படுவதில்லை. ஆனால் இன்னும் பல செய்தியாளர்கள் அரசியல் மீட்டிங், அல்லது பெரிய நிறுவனங்களின் போர்ட் மீட்டிங் முதலியவற்றில் கலந்து கொள்ளும்போது குறிப்பெடுக்க shorthand பயன்படுத்துகிறார்கள்.
      சிலர் மொபைல் போனில் பதிவு செய்துகொண்டு விடுகிறார்கள். அதனால் shorthand தேவைபடுவதில்லை போலும்!

  8. ஒஹோ சகல கலா வல்லிதான் தட்டெழுத்துடன் நானும் சில நாட்கள் சுருக்கெழுத்து கற்றுக் கொண்டேன் பிறகு நேரமின்மையால் விட்டு விட்டேன் அருமையான கலை அழிந்துவருவது மனதிற்கு வேதனையாக உள்ளது

    1. வாருங்கள் விஜயா!
      எனக்கும் என் அக்காவிற்கும் வேலை கிடைக்கக் காரணமே இந்த சுருக்கெழுத்துதான்! எப்படி மறக்க முடியும்?

  9. ரொம்ப கஷ்டம் போலயே! நீண்ட நாட்களாக பரீட்சை என்று இந்தப் பக்கம் அதிகம் வரவில்லை, வந்தேன் இன்று, அறிந்தேன் நன்று! 🙂 🙂

    1. வா கண்மணி! ரொம்ப நாளாயிற்று உன்னை பதிவில் சந்தித்து. நலம் தானே? நிஜமாகவே வருத்தம் தான்! அப்போதெல்லாம் வீடுகளில் டேபிள், சேர் கிடையாது. தரையில் உட்கார்ந்துகொண்டு முதுகை வளைத்து மணிக்கணக்கில் shorthand பயிற்சி செய்வோம். இந்தக் களை அழிகிறது என்றால் எங்கள் உழைப்பும் வீண் அல்லவா?

  10. பத்தாவது படிச்சாச்சுன்னா ஷாட்டேண்டும், டைப்பும் கத்துண்டு ஒரு வேலைக்குபோனா , குடும்பத்து கஷ்டம் தீந்துடும்,பசங்க கஷ்டம் பத்து வருஷம்.
    வேலை கிடைச்சுடுத்தா? இனி விசாரமில்லை, என்று முக்கால் வாசி குடும்பங்களுக்கு
    நம்பிக்கைக் கொடுத்த நல்ல கலை. வார்த்தையில் ஷார்ட்ஹேண்ட்–ஷாட்டாண்டுதான். அன்புடன்

  11. வாருங்கள் காமாக்ஷிமா!
    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு நிஜம். நடுத்தரக் குடும்ப பெண்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்தது இந்த ஷாட்டாண்டு தான்!
    பொண்ணு எஸ்எஸ்எல்சி, டைப்பிங், ஷாட்டாண்டு தெரியும் என்பது கல்யாண மார்கெட்டில் கூட டிமாண்ட் கூடும்!

  12. சுருக்கெழுத்து பற்றி முதன் முறையாக அறிந்து கொண்டேன்! இந்த கலை அழிய போகிறது என்பதை அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன்!

    1. வாருங்கள் மஹா! புது ஊரில் செட்டில் ஆயாச்சா?
      மறுபடி எழுதத் தொடங்குங்கள் சீக்கிரமாக!
      இந்த தலைமுறையினர்க்கு சுருக்கெழுத்து பற்றித் தெரியவே வாய்ப்பில்லாமல் போய்விடும் போலிருக்கு! ரொம்பவும் வருத்தமான விஷயம்!

  13. Thanks for bring back my memory of my shorthand.. 15 years gone.. still remember the strokes. My dad say, ‘shorthand, cycling and typewriting’ – you never forget and it takes a minute to recollect. Its true. Its good to see ur article.

    1. வாருங்கள் ஸ்ரீராம்!
      உங்கள் கடிதம் உற்சாகத்தைத் தருகிறது. அந்தக்காலத்தில் பலருக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு அள்ளி வழங்கிய அரிய கலை இது. உங்கள் தந்தை சொல்வதுபோல மறக்க முடியாத கலை recollect செய்வதும் எளிதுதான்.
      எனக்குக் கூட ஒரு ஆசை – மறுபடி எழுதிப் பார்க்க வேண்டும் என்று!
      வருகைக்கும், உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

  14. உங்கள் மூலமாகத்தான் சுருக்கெழுத்தைப் பற்றி தெரிந்து கொண்டேன்.நன்றி. இந்த‌ எழுத்துகளைப் பார்க்கும்போது ஏதோ கல்வெட்டு மாதிரி இருக்கு.மாணவிக்கு கொடுத்த பதில் ரொம்பவே ஈர்த்துவிட்டது.

  15. நான் இப்பொழுதுதான் பயன்று வருகிறேன்.. மூன்று வருடங்கள் கழித்து இதன் மூலம் பணிக்கு செல்லலாம் அல்லவா?? தயவுசெய்து விளக்கவும்

    1. வாங்க மகேந்திரன்,
      நீங்கள் சுருக்கெழுத்து கற்று வருவது பற்றி மகிழ்ச்சி. ஆனால் இப்போது இதனால் பயன் இருக்குமா என்று தெரியவில்லை. நீங்கள் எந்தத் துறையில் பணியாற்ற விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து இதன் உபயோகம் அமையும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு மிக நல்லதொரு பணி கிடைக்க வாழ்த்துக்கள்.

  16. நான் சுருக்கெழுத்து கற்று வருகிறேன்.
    வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்

Leave a reply to venkat Cancel reply