ரயில் பயணங்களில்…..6 ஏங்க, எந்திரீங்க! 

மேலே ஏறுவது என்பது எனக்கு கொஞ்சம் சிரமமான காரியம்தான். இப்போது இல்லை. எப்போதுமே. சின்ன வயசிலிருந்தே எதன் மேலாவது ஏறுவது இயலாத ஒன்று. என் அம்மாவிற்குப் பிறந்த நான் இப்படி இருக்ககூடாது தான். அம்மா இன்று கூட ‘டக்’கென்று ஸ்டூல் மேலோ, நாற்காலி மேலோ ஏறிவிடுவாள். எங்களது சிறு வயது நினைவுகளில் நீங்காத ஒரு நிகழ்வு என்னவென்றால் நாங்க ஸ்ரீரங்கம் போகும்போது அம்மா ஏணி மீது ஏறுவதுதான். வெந்நீர் அடுப்பிற்கு விறகுக் கட்டை வாங்குவாள் பாட்டி.(நாங்கள் ஒரு பட்டாளம் ஊருக்கு வந்திருப்போமே!) விறகு வந்தவுடன் அம்மா அதனை ரேழி பரணில் அடுக்கிவிட்டு மறுவேலை பார்ப்பாள். அம்மா ஏணி மீது கிறுகிறுவென ஏறும்போது எனக்கு அவள் ஒரு வீராங்கனையாகத் தோற்றமளிப்பாள். நான் பயந்து நடுங்குவேன். நல்லவேளை என் குழந்தைகள் என்னைக் கொள்ளவில்லை. எனக்கு நகரும் படிக்கட்டுகள் கூட பயத்தை கொடுக்கும். என்ன செய்வது தயாரிப்பிலேயே குறை!

 

அதனால் ரயில் பயணங்களில் கீழ் பெர்த் கிடைத்துவிட்டால் ஏதோ பெரிய சாதனை போல தோன்றும். அப்படி ஒருமுறை எங்களிருவருக்கும் கீழ் பெர்த் கிடைத்தது. பெங்களூரிலிருந்து திருச்சிக்குப் பயணம்.  பெங்களூரு சிடி ரயில் நிலையத்தில் ஏறினோம். கண்டோன்மென்ட் நிலையத்தில் ஒரு குடும்பம் ஏறியது. ஒரு பெரியவர், அவரது மனைவி, கூட ஒரு நடுத்தர வயதுக்காரர். அந்தப் பெரியவரை இவர்கள் இருவருமாக கிட்டத்தட்ட தூக்கி ரயில் பெட்டிக்குள் ஏற்றினர். பாவம் என்ன உடம்போ என்று நினைத்துக் கொண்டோம். உள்ளே வந்தவர்கள் தங்களது பயணசீட்டை எடுத்துப் பார்த்தனர். பெரியவருக்கு மிடில் பெர்த்.  என் கணவர் உடனே அவரிடம் சொன்னார்: ‘நீங்க லோயர் பெர்த்தில் படுத்துக் கொள்ளுங்கள். நான் மிடில் பெர்த்தில் படுக்கிறேன்’ என்று. பெரியவரின் மனைவிக்கு நன்றியோ நன்றி இவரிடத்தில். ‘நாங்க கேக்காம நீங்களே கொடுக்கிறீங்களே! நீங்க நல்லாயிருக்கணும்’ என்று வாழ்த்த ஆரம்பித்துவிட்டார்.

 

ஆனால் வீராச்சாமி (அதான், அந்தக் கணவர்) ‘ஆங்…..அதெல்லாம் வேணாங்க…..நா அப்பிடி  இப்பிடி  ஏறிடுவேன்….’ என்றார். ரயிலில் ஏறவே இரண்டு பேர் உதவ வேண்டி வந்தது. மிடில் பெர்த்ல ஏறுகிறேன் என்று என்ன வீரம் என்று நினைத்துக் கொண்டோம். ‘ஏங்க செத்த சும்மா இருக்கீங்களா?’ என்று அவர் மனைவி ஒரு அதட்டல் போட்டார். ஆசாமி கப்சிப்! அடுத்து சாப்பாட்டுக் கடை திறக்கப்பட்டது. ஒரு பெரிய எவர்சில்வர் டப்பா. திறந்தவுடனே இட்லி வாசனை. மிளகாய் பொடியுடன் ஆ!

 

‘தம்பி! அந்த என்னோட கைப்பையை கொடுங்க…!’ என்று அந்த நடுத்தர வயசுக்காரரிடம் கேட்டார் அந்தப் பெண்மணி. அதிலிருந்த இன்சுலின் பேனாவை எடுத்தார். ‘கர்ர்ர்…’ என்ற ஒலியுடன் எத்தனை யூனிட் போட வேண்டுமோ அதை செட் செய்தார். ‘ஏங்க சட்டையைத் தூக்குங்க….’ என்றார். சினிமாவுல கையில் கத்தியை வைத்துக் கொண்டு ‘குத்திடுவேன்’ என்பார்களே அந்தப் போஸில் இன்சுலின்  பேனாவைப் பிடித்துக் கொண்டார். கணவரது வயிற்றில் இன்சுலின் பேனாவை வைத்து ஒரு வினாடியில் சரக் கென்று ஊசியைப் போட்டுவிட்டு விட்டார். (இன்சுலின் ஊசி மிக மெல்லியது. சரக்கென்று சத்தம் போடாது. நான்தான் பதிவுக்கு சுவை கூட்ட எழுதுகிறேன். ஆனால் அந்தப் பெண்மணி அத்தனை வேகமாக ஊசியை கணவரது வயிற்றில் இறக்கினார். சொல்லப்போனால் எந்த ஊசியும்/கத்தியும்  சத்தம் போடாது) ‘ஏங்க! சட்டையை ஏறக்குங்க……!’ என்றார். ‘போட்டுட்டயா?’ என்றார் கணவர். ‘ஆச்சு…இந்தாங்க இட்லி சாப்பிடுங்க……!’ என்று தட்டில் நாலு இட்லி வைத்துக் கொடுத்தார். ஒரே நிமிடத்தில் காலியானது தட்டு. ‘இன்னும் கொஞ்சம் வைக்கட்டா?’ ‘வேணாம்’ ‘வச்சுக்குங்க… அப்புறம் நடுராத்திரி பசிக்கும்’ என்றபடியே இன்னும் இத்தனை இட்லிகளை வைத்தார் மனைவி.

 

எனக்கும் என் கணவருக்கும் படபடவென்று மனசு அடித்துக் கொண்டது.  இன்சுலின் போட்டுக் கொண்டு இப்படி இட்லியை வெளுத்துக் கட்டுகிறாரே என்று. படுக்கும் நேரம். ‘ஏங்க…ஒண்ணுக்குப் போயிட்டு வந்துடுங்க…..’ என்று கணவரை அழைத்துக் கொண்டு போனார் மனைவி. திரும்பி வந்து கணவரை லோயர் பெர்த்தில் உட்கார வைத்து, கால்கள் இரண்டையும் எடுத்து மேலே வைத்து, ‘ம்ம்ம்…..படுங்க…..’ என்று உதவினார் மனைவி. சுகர் அதிகமாகப் போய் காலில் உணர்ச்சி இல்லாமல் போய்விட்டதோ என்னவோ என்று நினைத்துக் கொண்டேன். இரவில் இரண்டு மூன்று முறை அந்த மனைவி அவரை ‘ஏங்க, எந்திரீங்க’ என்று எழுப்பி பாத்ரூம் அழைத்துப் போனார். பாவம்! அதிகாலையிலும் திருச்சியில் இறங்குவதற்கு முன் ஒருமுறை அவரை எழுப்பி சிறுநீர் கழிக்க வைத்தார்.

 

மறக்க முடியாத கணவன் மனைவி!

திருமதி கீதா சாம்பசிவத்தின் வேண்டுகோள் உடனடியாக நிறைவேற்றப் படுகிறது:

http://www.travelerfood.com/ ஆன்லைனில் பார்க்கலாம். அங்கேயே உணவுக்கு ஆர்டரும் கொடுக்கலாம். தொலைபேசி எண்:07827998877

26 thoughts on “ரயில் பயணங்களில்…..6 ஏங்க, எந்திரீங்க! 

 1. ஏங்க இட்லி இவ்வளவு சாப்பிடக்கூடாது தெரிலைங்களா. என்ன பணிவிடை, அன்யோன்னிய தம்பதி. ஒரு நாள் ரயில்ப் பிரயாணம் தானே. ராத்திரி பசிச்சா என்ன பண்றது. பாவம். வெளி உலகத்தில் எவ்வளவோ பார்க்க முடிகிறது. கற்றுக்கொள்ளவும் முடியும். ஆனால் நமுமுடைய பேஸிக் குணம் என்று ஒன்று இருக்கிறது. அதை ஸமாளித்து மற்றதைப் ப்ளஸ் செய்ய வேண்டும். பிரயாணங்களும் தொடரட்டும். பார்வைகளும் மலரட்டும். அன்புடன்

  1. வாங்கோ காமாக்ஷிமா!
   வெளிஉலகத்தில் எவ்வளோ பார்க்க முடிகிறது, கற்றுக் கொள்ளவும் முடியும் – மிகவும் உண்மை.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 2. உங்கள் ரயில் பயணங்களின் தொகுப்பை ஒரு சேர படிக்கும் பாக்கியம் கிடைத்தது , மிக தாமதமாக வந்ததால்.. படித்து மிகவும் ரசித்தேன் 🙂

  1. வாங்க மஹா!
   எல்லாவற்றையும் ஒன்றாகப் படித்தீர்களா? மகிழ்ச்சி!
   வருகைக்கும், ரசித்துப் படித்ததற்கும் நன்றி!

 3. என்ன போங்க! சர்க்கரை பார்டரில் இருக்கிறதுக்கே எங்க மருத்துவர் என்னை 2 இட்லி தான் சாப்பிடச் சொல்றார்! இங்கேயானா வெளுத்துக் கட்டி இருக்கார்! என்னத்தைச் சொல்றது! மூணாவது இட்லி போட்டுக்கறதுன்னா அன்னிக்குப் பெரிய திருட்டுத் தனம் செய்துட்டாப் போல் இருக்கும்! 🙂

  1. வாங்க கீதா!
   இன்சுலின் ஊசி போடும் அளவிற்கு கற்றுக் கொண்ட அந்த மனைவிக்கு கணவனுக்கு அளவாகக் கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லையே என்றிருந்தது.
   என்ன செய்வது?

 4. அப்புறமா முதல் பத்தியை வரிக்கு வரி ஆமோதிக்கிறேன். எனக்கும் மேலே ஏற முடியாத ஃபோபியா! என்னோட அம்மா ஏணி வைத்துக்கொண்டு ஓட்டுக்கூரையின் மேல் ஏறி நடந்து போய் அங்கிருந்து மொட்டைமாடிக்குப் போய் (மாடிக்குப் படிகள் கிடையாது) வடாம் இட்டு விட்டு வருவா! சாமான்களைத் தானே தூக்கிக் கொண்டு ஏணியில் ஏறி ஓட்டுக்கூரையில் சரியான இடம் பார்த்து வைத்துவிட்டு மாடிக்குப் போய் பாயை விரித்து நனைத்து ஈரப்படுத்திட்டு திரும்ப வந்து வடாம் மாவைத் தேன் குழல் சொப்போடு எடுத்துப் போய்ப் பிழிந்துவிட்டுத் திரும்பி வருவாள். அரிசி அப்பளம் அங்கேயே உட்கார்ந்து இட்டுப் போட்டுக் காய வைத்துக் கொண்டு வருவாள்! நான் சோப்ளாங்கி தான். உங்களைப் போல் அல்லது உங்களை விடவும் எஸ்கலேட்டர்னாலே அலறுவேன். 🙂

  1. அது எப்படி நம் அம்மாக்களுக்கு இருக்கும் தெகிரியம் நமக்கு வரவில்லை? ஆச்சரியம் தான்!
   போனவாரம் பாகுபலி பார்த்துவிட்டு திரும்பும் போது பிள்ளை கேட்டான் எஸ்கலேட்டரில் இறங்கலாமா? என்று. பாகுபலி பார்த்த சந்தோஷம் எல்லாம் போயிடும், வேணாம்ன்னு சொல்லிட்டேன்!
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 5. பயணம் செய்யும்போது கவனிக்க வேண்டியது தான் ஆனாலும் இத்தனை உன்னிப்பாக அனைத்தையும் கவனித்து சுவைபட எழுதுகிறீர்களே ரஞ்சனி கண்டிப்பாக பாராட்டவேண்டும். நானும் பயணத்தில் பல நிகழ்வுகளைக் கவனித்து உள்ளேன் உட்கார்ந்தவுடன் நான் புத்தகங்களை திறந்துவிடுவேன் படிப்பதற்கு அதனால் எனது கவனம் அதிகம் உன்னிப்பாக இருக்காதோ என உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது தோன்றுகிறது. எனக்கும் மேல் பர்த் என்றால் அலர்ஜி தான்

  1. வாங்க விஜயா!
   இது இரவுப் பயணம். அதனால் புத்தகம் படிக்க இயலவில்லை.
   ரயில் பயணத்தின் போது மனிதர்களை கவனிப்பதை விட வேறு சுவாரஸ்யம் ஏது? ஒன்று ஜன்னலுக்கு வெளியே உலகத்தைப் பார்க்க வேண்டும். இல்லையென்றால் உள்ளே மனிதர்களைப் பார்க்க வேண்டும்.
   அடுத்தமுறை முயற்சி செய்யுங்கள். நிறைய பதிவுகள் என்னைப்போல எழுதலாம்!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 6. அக்க்கா….. அவ்வ்வ்வ்… நானும், எங்கம்மாவும் கூட அப்படியே உங்களையும் உங்கம்மாவும் மாதிரிதான்!! எங்கம்மாவுக்கு உள்ள தைரியத்துல நூத்துல ஒரு பங்குகூட எனக்கு கிடையாது!! அதுவும் ஏணியில் ஏறுவது எல்லாம் எனக்கு ஏதோ ஸ்பேஸ்க்கு போற மாதிரி பயமாருக்கும்!! இப்பல்லாம் ஏறவே மாட்டேன்…

  இங்க மால்களில் எஸ்கலேட்டர் வச்சிருப்பாங்க.. எஸ்கலேட்டரில் போறது பயமில்லை என்றாலும், சில சமயம் செங்குத்தாக, பெரிய ஹாலின் நடுவில் தன்னந்தனியே இருக்கும். டாம் & ஜெர்ரியில் ஒரு எஸ்கலேட்டர் பூமியிலிருந்து நேரே விண்ணுக்கு போகும் – அதே மாதிரி இருக்கும்!! இதுல ஏற ரொம்ப பயப்படுவேன்… லிஃப்ட் இல்லைன்னா, எங்கூட்டுக்கார் நிலை ரொம்பப் பாவம்… நான் அந்தப் பாடு படுத்துவேன்… :-)))))

  1. வாங்க ஹூசைனம்மா!
   அட! நீங்களும் ‘புலிக்கு பயந்த பசங்க என்மேல படுங்கடா’ ராகம் தானா? வீராங்கனையான அம்மாக்களுக்கு ஏன் இப்படிப்பட்ட மகள்கள்? நிச்சயம் யாராவது ஆராய்ச்சி செய்ய வேண்டும், என்ன சொல்றீங்க?
   எஸ்கலேட்டர் அனுபவம் மேலே கீதாவிற்குக் கொடுத்த பதிலில்!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  1. வாங்க தனபாலன்!
   அவர் கொடுத்து வைத்தவர்தான். அந்த அம்மா தான் பாவம், தூங்கவேயில்லை.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  1. வாங்க வினோத்!
   வருகைக்கும், ரசித்துப் படித்ததற்கும் நன்றி!

 7. வணக்கம், நானும் Bangalore to Trichy ரயிலில் பயணம் செய்பவன். நானும் இதே போன்ற தம்பதியை பார்க்க நேரிட்டது ஆனால் அவர்களுடன் இன்னும் ஒருவர் பயணம் செய்தார். நான் ஏறும் ஸ்டேஷன் கார்மேளரம் (next to Cantonment Before Hosur) ஆதலால் அது அவர்களின் உறங்கும் நேரம். இவருக்கும் கால் சரி இல்லை. மனைவி நிம்மதியாக மிடில் படுக்கையில் நன்றாக உறங்கி கொண்டார். அனைத்து வேலைகளுக்கும் துணைக்கு வந்தவர் தான் உதவினார்.

  ஏனோ நீங்கள் செல்லும் பொழுது துணைக்கு யாரும் இல்லை போல ஆதலால் மனைவி துணைவியாக இருந்துள்ளார்.

  நான் பார்த்தவர்களும் நீங்கள் பார்த்தவர்களும் வேறு நபர்களாக இருக்கலாம், ஆனால் ஒரு சில ஒற்றுமை.

  1. வாங்க முரளிதரன்!
   நான் பார்த்தபோதும் கூட ஒருவர் வந்தார். ஆனால் மனைவியே தான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார். நீங்கள் பார்த்த அன்று ஒருவேளை அசதியில் தூங்கிவிட்டாரோ என்னவோ?
   இல்லை வேறு வேறு நபர்களோ, தெரியவில்லை.
   கார்மேளரம் என்ற பெயரை இப்போதுதான் கேள்விப் படுகிறேன்.
   வருகைக்கும், உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

 8. முதல் பாராவை அப்படியே நானும் ஆமோதிக்கிறேன். மிடில் பர்த் இப்பல்லாம் ஓகே.. வேற வழியே இல்ல.. யார் இவரிடம் திட்டு வாங்குவது….:)) அப்பர் சான்சே இல்லை….:) தில்லியிலிருந்து வரும் போது ஒருமுறை ஏறி இறங்கியிருக்கிறேன். அவஸ்தை…:)) எஸ்கலேட்டர் ரொம்ப வருஷம் பயந்து, அப்புறம் படி ஏற முடியாத சூழ்நிலையில் தில்லியில் பழக்கிக் கொண்டேன். முதலில் ஏற மட்டுமே… அப்புறம் தான் இறங்கவும்…:))

  என் மாமியார் இந்த வயதிலும் டேபிள் மேலே ஸ்டூல் போட்டு ஏறி பரண் சுத்தம் செய்வார். நான் ஸ்டூல் மேலே ஏறுவதற்கே பயப்படும் ரகம்…:)) (நல்ல பொருத்தம் தான் இல்ல..))))

  1. வாங்க ஆதி!
   நீங்களுமா பயந்தாங்கொள்ளி? நீங்கள் என்னைவிட வயதில் ரொம்பவும் சின்னவர் ஆயிற்றே! ஆச்சரியம் தான்.
   மாமியார்கள், அம்மாக்கள் எல்லாருமே தைரியசாலிகள் தான். ஆஹா! என்னப் பொருத்தம் என்று பாடலாம்.
   வருகைக்கும், அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

 9. நல்ல மனைவி வெரி லக்கி கணவர்!

  ஒரு வேளை போன ஜெனரேஷன் எல்லாம் இப்படி மேலே ஏறி இறங்கி பழக்கப்பட்டு அதற்கு அடுத்த ஜெனரெஷன் பல கம்ஃபோர்ட்ஸ் பழகியதால் இருக்குமோ…பலர் அப்படித்தான் இருக்கின்றார்கள்…

  1. வாங்க துளசிதரன்!
   சரியாகச் சொன்னீர்கள். பல கம்போர்ட்ஸ் பழகி விட்டது நிஜம் தான். என் பெண் நன்றாக ஏறுவாள். மருமகளும் அப்படியே! பயம் என்னுடன் போகட்டும்.
   அவர் லக்கி தான். அந்த மனைவியைப் பார்த்துதான் நான் பரிதாபப் பட்டேன் – தூங்கவேயில்லை, பாவம்!
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s