குறும்செய்தியில் வந்த இன்சுலின்!

முதல் நாள் இரவு எட்டு மணிக்கு கிளம்பிய ரயில் அடுத்த நாள் மாலை ஊர் போய் சேர்ந்தது. முதலில் உறவினர் வீட்டிற்குப் போனோம். அங்கு எல்லோரையும் குசலம் விசாரித்துவிட்டு நாங்கள் தங்கவிருந்த ஹோட்டேலுக்கு வந்தோம். இவரிடம் மெள்ளக் கேட்டேன் : ‘டாக்டருக்கு போன் செய்து கேட்கட்டுமா?’ என்று. இவர் பதில் சொல்வதற்குள் டாக்டரின் நம்பரைப் போட்டு பேச ஆரம்பித்துவிட்டேன். ‘நாங்கள் வெளியூருக்கு வந்திருக்கிறோம். இன்சுலின் பேனா கொண்டுவர மறந்துவிட்டார். அதற்கு பதிலாக வேறு மருந்துகள் எடுத்துக் கொள்ளலாமா? நீங்கள் எப்படிச் சொல்லுகிறீர்களோ, அப்படி….’ என்றேன். ‘இன்சுலினுக்கு மாற்று வேறு கிடையாது. முதலில் அவரிடம் போனைக் கொடுங்கள்’ என்றார் டாக்டர்.

‘குட் ஈவினிங் டாக்டர்……!’ என்று ஆரம்பித்தவரை பேசவே விடவில்லை எங்கள் டாக்டர். ‘எப்படி இன்சுலின் மறந்து போகலாம் நீங்கள்? எங்கு ஊருக்குப் போனாலும் முதலில் இன்சுலின், உங்கள் மெடிக்கல் ஃபைல், க்ளூகோ மீட்டர் இவற்றைத்தான் எடுத்து பெட்டியில் வைத்துக் கொள்ள வேண்டும்….’ என்று சொல்லிவிட்டு என்ன இன்சுலின் வாங்க வேண்டும் என்று எஸ்எம்எஸ் செய்வதாகச் சொன்னாராம். அடுத்த நிமிடம் என்ன இன்சுலின், கூடவே பயன்படுத்த வேண்டிய சிரிஞ்ஜ் என்று குறும்செய்தி வந்தது. பின்னாலேயே இன்னொரு கு.செ. எப்போது ஊருக்குப் போனீர்கள்? இன்று காலை இன்சுலின் எடுத்துக் கொண்டாரா? என்று. அதற்கு நான் பதில் செய்தி அனுப்புவதற்குள் இன்னொரு கு.செ. ‘இந்த இன்சுலின் ஊசி நீங்களே போட்டுக் கொள்ள முடியாது. டாக்டரிடமோ, நர்ஸ்ஸிடமோ தான் போட்டுக் கொள்ள வேண்டும். ஏதாவது பிரச்னை என்றால் உடனே என்னைக் கூப்பிடுங்கள். நான் அவர்களுக்கு சொல்லுகிறேன்’ என்று. நான் அப்படியே மனசு உருகிப் போய்விட்டேன். எத்தனை அக்கறையுடன் சொல்லுகிறார் என்று அவருக்கு நன்றி கூறி இறைவனுக்கும் நன்றி கூறினேன்.

இரவு சாப்பாட்டிற்கு உறவினர் வீட்டிற்குப் போனபோது அவர்களது உதவியுடன் டாக்டரின் கு.செ – யைக் காட்டி மருந்துக் கடையிலிருந்து இன்சுலின், சிரிஞ்ஜ் வாங்கிக் கொண்டோம். அடுத்தநாள் காலை 9 மணி அளவில்’ பக்கத்திலிருந்த ஒரு மருத்துவ மனைக்குப் போய் இன்சுலின்  போட்டுக் கொண்டு வந்தார். அப்புறம் தான் எனக்கு உயிரே வந்தது. எங்கள் டாக்டருக்கும் உடனடியாக ஒரு கு.செ அனுப்பினேன். டேக் கேர் என்று பதில் அனுப்பினார். நாங்கள் அங்கு இருந்த நான்கு நாட்களும் எங்கள் உறவினரின் பிள்ளை இவரை அழைத்துக்கொண்டு போய் இன்சுலின் போட்டுக் கொண்டு வருவதை தன் தலையாய கடமையாகச் செய்தார்.

எங்களுடைய டாக்டருக்கும், எங்கள் உறவினரின் பிள்ளைக்கும் என்ன கைம்மாறு செய்ய முடியும், மனமார்ந்த நன்றியை மறுபடி மறுபடி சொல்வதை தவிர?

ரயில் பயணங்களில்………. ஒரு சாகசப் பயணம்!

இந்தமுறை பயணம் ஆரம்பிக்கும்போதே சாகசப் பயணமாக அமைந்தது. சாகசம் என்றவுடன் ஓடும் ரயிலில் பாய்ந்து ஏறினேன் என்றோ, வேகமாக வரும் ரயிலை ஒற்றைக்கையால் நிறுத்தினேன் என்றோ நீங்கள் கற்பனை செய்து கொண்டால் நான் பொறுப்பு இல்லை!

வீட்டிலிருந்து கிளம்பி சற்று தூரம் போனவுடன் கேட்டேன்: ‘இன்சுலின் எடுத்துக் கொண்டீர்’களா?’ (வீட்டிலேயே கேட்டிருக்கலாம் தான். அவரவர் பொருட்களை அவரவர் எடுத்துக் கொள்வது தான் எப்போதுமே பழக்கம். அதனால் மருந்துகளை எடுத்து வைத்துக் கொண்டவுடன் இன்சுலினையும் எடுத்து வைத்துக் கொண்டிருப்பார் என்று நினைத்துக் கொண்டேன்.) திடீரென வண்டியில் போகும்போது நினைவிற்கு வருவானேன்? அதைத்தான் விதி என்பார்களோ? ‘இன்சுலின் எடுத்துக்கொள்ளவில்லை’ என்றவுடன் பதறிப்போய்விட்டேன். திரும்பப் போய் எடுத்துக் கொள்ளலாம் என்றேன். ‘அதெல்லாம் வேண்டாம். நான்கு நாட்கள் தானே சமாளித்துக் கொள்ளலாம். இல்லைன்னா அங்கேயே வாங்கிக் கொள்ளலாம். என்னிடம் இருக்கும் மருந்துகளை ‘அட்ஜஸ்ட்’ பண்ணி சாப்பிடுகிறேன்’ என்ற ரீதியில் பதில் சொல்லி என் வாயை மூடியாகி விட்டது.

எனக்கு ஊருக்குப் போகும் மனநிலையே போய்விட்டது. காலில் வேறு காயம். இப்படி செய்கிறாரே என்று பதட்டம் ஆரம்பமாகியது. மறுபடி சொன்னேன். ‘வீட்டிற்குப் போய் எடுத்துக் கொண்டு வரலாம்’. கோபத்துடன் பதில் வரவே சும்மா இருந்தேன். இன்றைக்கு போட்டுக் கொண்டாகிவிட்டது. இனி நாளைக் காலையில் தான்  இன்சுலின். அதற்குள் டாக்டரிடம் போன் செய்து கேட்டுக் கொள்ளலாம் என்று தீர்மானம் செய்தேன். வெளியில் சொல்லவில்லை. சொன்னால் அதற்குத் தனியாக வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்.

வண்டி வந்தது. எங்கள் பெட்டிக்கு அருகில் போய் பெயர் இருக்கிறதா என்று பார்த்து ஏறி…… ஒரு படியில் காலை வைத்து ஏறி இன்னொரு படியில் காலை வைக்கப் போனேன்… செருப்பு நழுவி கீழே பள்ளத்தில் விழுந்துவிட்டது! அடக்கடவுளே! இது என்ன இப்படி சோதனை மேல் சோதனை! பின்னால் ஏறியவரிடம் எப்படிச் சொல்வது?  சொல்லாமலும் இருக்க முடியாதே! நான் தயங்கித் தயங்கி நிற்பதைப் பார்த்தவரிடம் சொன்னேன்: ‘செருப்பு கீழே விழுந்துடுத்து!’ ‘என்னம்மா, நீ? பார்த்து ஏறக் கூடாதா?’ என்ன பதில் சொல்ல? ஆடு திருடின கள்வன் போல முழித்தேன்.

அங்கிருந்த இரண்டு மூன்று பேரிடம் உதவி கேட்டேன்.  செருப்பு எங்கே என்றே தெரியவில்லையே எப்படி எடுப்பது என்றனர். இப்போதுதான் இரண்டு மாதங்களுக்கு முன் வாங்கிய செருப்பு. செருப்பு இல்லாமலேயே இந்தமுறை பயணம் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ஒரு டீ விற்கிறவர் வந்தார். நானும் இவரும் குனிந்து குனிந்து பார்ப்பதைப் பார்த்து ‘ஏனாயித்து ஸார்?’ என்றார். ‘செப்பலி கேளகே பித்துபிட்டிதே!’ என்றேன். ‘நோட்தினி’ என்றவாறே பார்த்தவரின் கண்களில் செருப்பு அகப்பட்டது. நிதானமாக ரயில் மேடையில் உட்கார்ந்த வாறே தன் ஒரு காலை விட்டுத்  துழாவித் துழாவி எடுத்துக் கொடுத்துவிட்டார்!

அப்பாடா!  இன்சுலின் கதை நாளைக்கு!

ஸ்ரீரங்கத்து வீடு – பாட்டியின் கமகம காப்பி!

விறகுக் கட்டைகள்

கூடத்திலிருந்து நேராக புழக்கடைக்குச் செல்லலாம். இங்கு முதலில் வருவது விறகு அடுக்கும் பரண் இருக்கும் இடம். நாங்கள் எல்லோரும் இரண்டிரண்டு விறகாக கொண்டுவந்து கொடுப்போம். ஏற்கனவே சொன்னது போல என் அம்மா வீராங்கனை போல சரசரவென்று பரண் மேல் ஏறி விறகை அடுக்கிவிடுவாள். சில சமயங்களில் அம்மாவை தேள் கொட்டும். அந்தத் தேள் எங்கிருக்குமோ, எங்களை கொட்டாது. அம்மா அதற்கெல்லாம் அசர மாட்டாள். பரணில் ஏறி உட்கார்ந்து கொள்வாள். ஏற்கனவே இருக்கும் விறகுகளை ஒரு ஓரமாக அடுக்கி விட்டு புது விறகுகளை அடுக்குவாள். முதல் நாள் பெரிய பெரிய மரத்துண்டுகளாக வரும். அடுத்த நாள் ஒருவர் வந்து அவற்றை விறகாக வெட்டிக் கொடுப்பார். தூர நின்று கொண்டு வேடிக்கைப் பார்ப்போம். ஸ்ரீரங்கத்தில் இதெல்லாம் தான் எங்கள் பொழுதுபோக்கு. கையில் சிலாம்பு ஏறிவிடும் என்று விறகு கட்டைகளை அப்படியே எடுத்து வர மாட்டோம். ஒரு சாக்கு துணியில் இரண்டிரண்டாக வைத்து எடுத்து வருவோம்.

 

 

இந்த இடத்தைத் தாண்டி ஒரு ரேழி. அங்கு மாடிப்படிகள். அப்படியும் மாடிக்குப் போகலாம். இந்த ரேழியில் கமகமவென்று ஒரு வேலை நடக்கும். உங்களை சஸ்பென்ஸில் வைக்காமல் நானே சொல்லிவிடுகிறேன். காப்பிக்கொட்டை இங்கு வறுப்பார்கள். இதுவும் எங்களுக்குப் பொழுதுபோக்கு தான். காபிக்கொட்டையை வாங்கிக் கொண்டுவந்து ரோலரில் போட்டு வறுப்பார்கள். அம்மாவோ, பெரியம்மாவோ இதைச் செய்வார்கள். யாரும் இல்லையென்றால் பாட்டியே செய்துகொள்ளுவாள். கீழே இரும்பு அடுப்பு இருக்கும். அதன் மேல் இந்த ரோலர் இருக்கும். ரோலரில் இரண்டு உருளைகள் இருக்கும். முதலில்  சல்லடை போன்ற ஒரு உருளை இருக்கும். இது உள்ளே இருக்கும். மேலே இன்னொரு உருளை இருக்கும்.  ரோலருக்கு ஒரு பக்கம் கைப்பிடி இருக்கும். ரோலரில் வறுக்காத காப்பிக் கொட்டைகளை (வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும் இவை) சல்லடை போன்ற உருளையில் போடுவார்கள்.அதை மேல் உருளையால் மூடுவார்கள். ரோலரின் அடியில் அடுப்பு இருக்கும். ரோலர் நேராக அடுப்பின் மேல் உட்காராது. அடுப்பில் கரி போட்டு மூட்டி அதன் மேல் ரோலரை வைப்பார்கள். ரோலரின் ஒரு பக்க கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு ‘கிறுகிறுவென’ சுற்றவேண்டும். கீழே இருக்கும் அடுப்பில் தணல் சூடு அதிகமாகவும் இருக்கக்கூடாது. குறைவாகவும் இருக்கக் கூடாது. அவ்வப்போது கரியை கூட்டி, குறைத்து அடுப்பில் சூட்டை ஒரே மாதிரி வைத்துக் கொள்ள வேண்டும். ரோலரை  கைவிடாமல் ஒரே சீராக சுற்ற வேண்டும். . எனக்கு ரொம்ப ஆசை அதை சுற்ற வேண்டும் என்று. விடவே மாட்டார்கள். ‘உனக்கு சரியாக வறுக்கத் தெரியாது. விளையாடு, போ!’ என்று விரட்டுவார்கள். ஆனால் எனக்கு அங்கேயே இருக்கப் பிடிக்கும். காரணம் கொஞ்ச நேரத்தில் வெளிர் பச்சை நிற காப்பிக் கொட்டைகள் வறுபட்டு பிரவுன் கலரில் வெளியே வரும். வாசனையை வைத்து உள்ளே இருக்கும் காப்பிக் கொட்டைகள் சரியான படி வறுபட்டிருக்கிறதா என்று பாட்டி சொல்லிவிடுவாள். ரோலரில் சின்னதாக ஜன்னல் மாதிரி மூடியிருக்கும். அதைத் திறந்தும் கொட்டைகள் வறுபட்டு விட்டனவா என்று பார்ப்பார்கள். வறுபட்ட கொட்டைகளை ரோலரின் மூடியைத் திறந்து ஒரு தட்டில் கொட்டுவார்கள். ஆறியதும் அதை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்து விடுவார்கள். அந்தக் கொட்டைகளை பொடியாக மாற்ற ஒரு மிஷின் உண்டு. தினமும் தேவையான அளவு வறுத்த காப்பிக் கொட்டைகளை அதில் போட்டு அரைத்துக் கொள்ளுவாள் பாட்டி. புத்தம்புது காபி!  இந்த மிஷின் ஒரு புனல் மாதிரியான அமைப்புடன் இருக்கும். அதற்குள் வறுத்த காப்பிக் கோட்டைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போடவேண்டும். இதற்கும் ஒரு கைப்பிடி இருக்கும். அதை சுற்றினால் இன்னொரு பக்கம் காப்பிப் பவுடர் ஒரு குழாய் வடிவ அமைப்பிலிருந்து வரும். பாட்டியில் கமகம காப்பி வாசனை தூக்குகிறதா?

தளிகை உள்ளிருந்தும் புழக்கடைக்கு வரலாம். புழக்கடையில் கிணறு  இருக்கும். வெந்நீர் உள் இங்குதான் இருக்கும். காலையிலேயே எழுந்து இந்த வெந்நீர் அடுப்பை மூட்டி விடுவாள் பாட்டி. பெரிய பாத்திரம் ஒன்று – அதற்குப் பெயர் சருவம் – தினமும் நீர் காய்ந்து காய்ந்து அடிப்பாகம் கரேல் என்று இருக்கும். குளிக்கப் போகிறவர்கள் கிணற்றிலிருந்து நீரை இழுத்து வாளியில் எடுத்துக் கொண்டு போகவேண்டும். வெந்நீருடன் இந்த கிணற்று நீரை கொட்டி விளாவிக் கொண்டு குளிக்க வேண்டும். குளித்து முடித்தவுடன் சருவத்தில் குறைந்திருக்கும் நீரை கிணற்றிலிருந்து நீரை இழுத்து நிரப்பி விட்டு வரவேண்டும்.

 

இன்னும் வரும்……

எங்கள் பாட்டி

ஸ்ரீரங்கத்து வீடு – மண் அடுப்பு

இத்தனை அமர்க்களம் செய்து அந்த விளக்கெண்ணெய் மஹோத்சவம் தேவையா என்று இப்போது தோன்றுகிறது. வருடத்திற்கு ஒரு தடவை வயிற்றை சுத்தம் செய்வது நல்லதுதான். எங்கள் தலைமுறைக்குப் பிறகு இந்த வைபவம் நடந்ததா என்றும் எனக்குத் தெரியவில்லை.

 

இந்த விளக்கெண்ணெய் குடித்தலில் அதிகம் பாதிக்கபடுபவள் நான்தான். இரண்டுமுறை பின்னால் போய்விட்டு வந்தால் அசந்து போய் படுத்துக்கொண்டு விடுவேன். பாட்டியே என்னைப் பார்த்துப் பரிதாபப்படும் அளவிற்கு ஆகிவிடும் நிலைமை. ‘அடுத்த வருடத்திலிருந்து இதுக்குக் குடுக்க வேணாம். பாவம் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது’ என்று சொல்வாள் பாட்டி. ஆனால் ஒவ்வொரு வருடமும் மறக்காமல் – தான் சொன்னதை மறந்து கொடுத்து விடுவாள். அத்தனை அமர்க்களம் செய்த என் சகோதரன் ஜாலியாக விளையாடிக் கொண்டிருப்பான். ‘இவன் இப்படி அக்குல ஏறி, தொக்குல பாய்ஞ்சா, அந்த விளக்கெண்ணெய் எங்க வேலை செய்யும்? அது எப்பவோ ஜீரணம் ஆகியிருக்கும்’ என்பாள் பாட்டி. ‘அடுத்த வருடம் நாலு ஸ்பூனா கொடுக்கணும்!’ ‘அடுத்த வருடம் உன் கைல அகப்பட்டாதானே?’ என்று அவன் பாட்டிக்கு சவால் விடுவான்!

 

நாம் ஸ்ரீரங்கத்து வீட்டின் கூடத்தில் ஊஞ்சல் அருகிலேயே நிற்கிறோம், இல்லையா? அதற்குள் வி.எண்ணைய் விழா வந்து கட்டுரை திசை மாறிப் போய்விட்டது. சரி வாருங்கள் ஸ்ரீரங்கத்து அகத்தின் உள்ளே போகலாம். தலை பத்திரம்! மிகவும் தாழ்ந்த நிலைப்படிகள். சிறிது அசந்தால் தலையைப் பதம் பார்த்துவிடும். யாராக இருந்தாலும், சிரம் தாழ்த்தித் தான் உள்ளே வரவேண்டும். கூடத்திலிருந்து இரண்டாகப் பிரியும் வீடு. ஒரு வழி அரங்கு என்ற அறைக்குள் போய் தளிகை உள்ளில் முடியும். இன்னொரு வழி பின்பக்கத்து  ரேழி வழியாக புழக்கடையில் முடியும். தளிகை உள்ளிற்கு இப்படியும் போகலாம். புழக்கடை வழியாகவும் மாடிக்குச் செல்லலாம். அங்கும் ஒரு மரப்படி இருக்கும்.

 

இந்த உள்ளிற்கு அரங்கு என்று ஏன் பெயர் வந்தது என்று தெரியாது. பெருமாள் எழுந்தருளியிருப்பதால், அரங்கன் கோயில் கொண்டுள்ள இடம் என்று அரங்கு என்ற பெயர் வந்ததோ, என்னவோ. இந்த ‘அரங்கு’ என்னும் அறைக்கும் எங்களுக்கும் தொப்புள்கொடி உறவு. ஆமாம், நாங்கள் எல்லோரும் இந்த அறையில்தான் பிறந்தோம். அதனாலோ என்னவோ இன்றைக்கும் இந்த அறைக்குள் நுழையும்போதே மனதில் இனம் தெரியாத ஒரு உணர்வு ஏற்படும். இந்த உள்ளில் தான் எங்கள் தாத்தா காலத்துப் பெருமாளும் நாச்சிமார்களுடன் எழுந்தருளி இருக்கிறார். தினமும் பாட்டி தளிகை செய்து பெருமாளுக்கு கண்டருளப் பண்ணிவிட்டுத் தான் எங்களுக்கு சாதம் போடுவாள். எந்தப் பழத்தைக் கையில் கொடுத்தாலும் கண்களை மூடிக்கொண்டு ‘கிருஷ்ணார்ப்பணம்’ என்று சொல்லிவிட்டு சாப்பிடும் பழக்கமும் ஸ்ரீரங்கத்தில் தான் கற்றோம்.

 

அரங்கின் ஒரு மூலையில் ஒரு குழி இருக்கும். எதற்கு என்று தெரியாது. எல்லா குழந்தைகளும் தவழ்ந்து போய் அதில் உட்கார்ந்து கொள்ளும்! அரங்கிலிருந்து தளிகை உள்ளிற்குப் போக இரண்டு படி ஏற வேண்டும். தளிகை உள் பெரியது. நுழைந்தவுடன் வலது பக்கத்தில் பெரிய பெரிய மரப்பெட்டிகள் இருக்கும். அதில் பலசரக்குகள் இருக்கும். ஒரு டப்பியில் அச்சு வெல்லம் இருக்கும். பாட்டி மத்தியானம் தூங்கும் போது நானும் என் சகோதரனுமாக (அப்போது மட்டும் கூட்டு சேருவோம்) இந்தப் பெட்டியைத் திறந்து வெல்லம் திருடி சாப்பிடுவோம். மற்ற நேரங்களில் இருவருக்கும் சண்டை தான்!

 

தளிகை உள்ளில் ஒரு பெரிய அமுது பாறை இருக்கும். கருங்கல்லால் ஆன மேடை. ரொம்பப் பெரியது. அந்தக் காலத்தில் அதில் சாதத்தைக் கொட்டிக் கலப்பார்களாம் – புளியோதரை போன்ற சாதங்களாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதிலேயே அம்மி, உரல் இரண்டும் போட்டிருப்பார்கள். இட்லி, தோசைக்கு அரைக்கும்போது அம்மா அல்லது பெரியம்மா அந்த  அமுது பாறையின் மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு அரைப்பார்கள். அதை ஒட்டியே தொட்டி மித்தம். பாத்திரங்கள் அலம்புமிடம். அதன் பக்கத்தில் பெரிய சிமெண்டு தொட்டி. கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து இதில் நிரப்பி வைத்துக் கொள்வோம். பாத்திரங்கள் அலம்ப இந்த நீர் பயன்படும். கிணற்றிலிருந்து இதற்கு நீர் வர கல்லில் அரை வட்ட வடிவில் ஒரு பிறை (திறப்பு) கிணற்றின் அருகில் இருக்கும். கிணற்றிலிருந்து நீர் இறைத்து இந்தப் பிறையில் கொட்டினால் இந்த சிமென்ட் தொட்டியில்  நீர் விழும். ஸ்ரீரங்கத்தில் எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு  இது. ‘பாட்டி! சிமென்ட் தொட்டியில தண்ணீர் நிரப்பட்டுமா?’ என்று கேட்டு கேட்டு நீர் நிரப்பிக் கொடுப்பேன். தளிகைக்கு பாட்டி கிணற்றிலிருந்து குடங்களில் நீர் கொண்டு வந்து வைத்துக் கொள்வாள். நாங்கள் சின்னவர்களாக இருந்த போது மண் அடுப்புதான். விறகு அடுப்பு அது. மண் அடுப்பை பாட்டி மெழுகுவதைப் பார்ப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். மெழுகி மெழுகி அடுப்பு மழுமழுவென்று இருக்கும். ராத்திரி படுக்கப் போகும் முன் அதை நன்றாகத் துடைத்து கோலமிட்டு விட்டு வருவாள் பாட்டி. அழகு மிளிரும். அதில் விறகு வைத்து தளிகை பண்ணுவாள் பாட்டி. காவிரித் தண்ணீர், விறகு அடுப்பு என்று பாட்டியின் தளிகை கமகமக்கும்.

தளிகை உள்ளில் இன்னொரு பிறை இருக்கும். அதற்குப் பெயர் பழையத்துப் பிறை. அங்குதான் பழைய சாதம் வைக்கப்படும்.

 

தொடரும் ………..

படங்கள் கூகிள் உபயம்

விளக்கெண்ணெய் க்ளைமாக்ஸ்!

patti

 

எங்கள் ஸ்ரீரங்கம்மாள் பாட்டி

க்ளைமாக்ஸ் அன்னிக்கு காலையில் எழுந்திருக்கும்போதே நாங்கள் எல்லோரும் பலியாடு மாதிரி முகத்தில் சுரத்தே இல்லாமல் இருப்போம். (பின்னணியில் சோக வயலின் சத்தம் கேட்கிறதா?) பல் தேய்த்துவிட்டு வந்தவுடன் காபியில் விளக்கெண்ணெய் விட்டுக் கொடுத்து விடுவாள் பாட்டி. அதற்குப் பிறகு அன்றைக்கு மென்யூ வெறும் பருப்புத் துவையலும், சீராம் மொளகு ரசமும் தான். வேறு ஒன்றும் கிடைக்காது. இதையெல்லாம் விட இப்போது நினைத்தாலும் சுவாரஸ்யம் என் சகோதரன் செய்யும் ரகளை. எப்போதுமே அவன் கொஞ்சம் வாலு தான். அவனை ரங்கவிலாசம் அழைத்துக்கொண்டு போய்விட்டால் போச்சு! பார்க்கும் சாமானையெல்லாம் வாங்கிக்கொடு என்று அழ ஆரம்பிப்பான். வாங்கிக் கொடுக்கவில்லையென்றால் அவ்வளவுதான்! அங்கேயே தரையில் கீழே விழந்து பிரண்டு அழுதுத் தள்ளிவிடுவான். பார்க்கிறவர்கள் இவன் அழும் அழுகை தாங்காமல்,  ‘பாவம், குழந்தை, கேட்டதை வாங்கிக் கொடேன். என்னத்துக்கு இப்படி அழ விடற?’ என்று சொல்லிவிட்டுப் போவார்கள். என் பெரியம்மா சொல்வாள்: ‘இவன அழைச்சிண்டு போனா ரொம்ப தொல்லை. பார்க்கறதெல்லாம் வாங்கிக்குடு வாங்கிக்குடுன்னு  உசிர வாங்குவான்.  இல்லன்னா உருண்டு பிரண்டு அழுகை. பார்க்கறவா நான் ஏதோ குழந்தைய  கொடுமை பண்ணிட்டேன் போல ஏம்மா குழந்தையை இப்பிடி அழ விடறேன்னு கேட்டுட்டுப் போறா. அதே இந்த ரஜினியை (நான்தான்!) பாரு. தேமேன்னு கையை பிடிச்சுண்டு எல்லாத்தையும் கண் கொட்டாமல் பார்த்துண்டு வரது. வாய தொறந்து இது வேணும், அது வேணும்னு கேட்டதே கிடையாது!’ அப்பவே நான் ரொம்ப நல்ல பொண்ணு!

 

சரி. இப்போ மறுபடியும், விளக்கெண்ணெய் படலத்திற்கு வருவோம். என் சகோதரன் காலையில் எழுந்திருக்கும்போதே ‘ஓ! என்ற அலறலுடன் தான் அன்று எழுந்திருப்பான். நாங்கள் எல்லோரும் எழுந்துவிட்ட பின்னாலும், தூங்குவது போல பாசாங்கு செய்வான். என் மாமாக்களில் யாராவது ஒருவர் அவனை குண்டுகட்டாகத் தூக்கிக் கொண்டு போய் புழக்கடையில் நிறுத்தி, ‘பல்லை தேய்!’ என்று ஒரு மிரட்டல் போடுவார்கள். அவன் வீறிட்டுக் கொண்டு அவர்கள் பிடியிலிருந்து திமிறி  ‘முடியாது!’ என்று சொல்லிக்கொண்டு திண்ணைக்கு ஓடி வருவான் மறுபடி தூங்க! மாமாக்களிடம் அதெல்லாம் நடக்காது. ஒருவழியாக அழுதுகொண்டே பல்லைத் தேய்ப்பான் – தேய்ப்பான், தேய்ப்பான், தேய்ப்பான் ரொம்ப நேரம் தேய்த்துக்கொண்டே இருப்பான். ‘ம்ம்ம்! சீக்கிரம்’ என்று மாமா அவனை மிரட்டிக்கொண்டே இருப்பார்.

 

இந்தக் களேபரம் புழக்கடையில் நடந்து கொண்டிருக்கும்போதே நாங்கள் ஒவ்வொருவராக தளிகை உள்ளில்  உட்கார்ந்து கொண்டிருக்கும் பாட்டியினிடம் போவோம். பாட்டிக்கு ஒரு பக்கத்தில் ஒரு பெரிய பாத்திரத்தில் காப்பி – சாப்பிடும் சூட்டில் இருக்கும். இன்னொரு பக்கத்தில் விளக்கெண்ணெய் பாட்டில் இருக்கும். பாட்டி காப்பியை ஒரு டம்ப்ளரில் கொட்டி அதில் இரண்டு ஸ்பூன் வி.எண்ணையை விட்டுக் கலக்கிக் கொடுப்பாள்.  பாட்டிலைப் பார்க்கும்போதே எங்களில் ஒருவருக்கு ‘உவ்வே….!’ என்று குமட்டும். ‘யாரது, அது?’என்று அதட்டுப் போடுவாள் பாட்டி. முதல் நாளே நாங்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுவோம். யாரு பெரியவாளோ அவா முதலில் விளக்கெண்ணெய் சாப்பிட வேண்டும். அப்புறம் அவர்களை விட சிறியவர்கள் என்று. இல்லையில்லை சின்னவர்கள்  முதலில்  சாப்பிடவேண்டும்  என்று போட்டியும் வரும்.

 

நான் இந்தப் போட்டிக்கெல்லாம் வரவே மாட்டேன். கிடுகிடுன்னு போயி பாட்டி குடுக்கறத வாங்கி வாயில குத்திண்டு வந்துடுவேன் சமத்தா! சில வருடங்கள் எல்லோரையும் போல காப்பில விளக்கெண்ணெய் விட்டு சாப்பிட்டு வந்தேன். அப்புறம் சே! ஏன் காப்பியையும் கெடுக்கணும், வி. எண்ணைய் சேர்த்து என்று ஒரு ஞானோதயம் பிறந்தது. அதனால முதல்ல வி.எண்ணையை வாங்கி ஒரே மடக்கு. குரங்கை நினைக்காமல் குடித்துவிடுவேன். பிறகு காப்பியை என்ஜாய்! எல்லோருக்கும் என்னைப் பார்த்து அதிசயம். ‘எப்படி நீ ஜாலியாக வி.எண்ணையை வாங்கிக் குடிக்கிறாய்? குமட்டலையா?’ என்று நேர்முகப் பேட்டி எல்லாம் எடுப்பார்கள்.’காப்பில கலந்தாலே எங்களால குடிக்கமுடியலையே! உன்னால எப்படி அப்படியே குடிக்க முடியறது?’ ன்னு  அதிசயப் பிறவி மாதிரி என்னைப் பார்ப்பார்கள். நான் என்னோட லாஜிக்கை சொல்வேன்: ‘வி.எண்ணைய் குடிக்கறது கஷ்டம் தான். அதை காப்பில போட்டு காப்பியையும் ஏன் கெடுக்கணும்? அப்புறம் ஏன் அதைக் கஷ்டப்பட்டு குடிக்கணும்? இரண்டுமே கஷ்டமா இருக்கறத விட, வி.எண்ணையை தனியா கஷ்டப்பட்டு குடிச்சுட்டு, காப்பியை ரசிச்சு குடிக்கலாமே!’

 

‘இதுக்கு இருக்கற சாமர்த்தியத்தைப் பாரேன்’ என்று எல்லோரும் சொன்னாலும் யாருமே என்னை மாதிரி ரிஸ்க் எடுக்க விரும்பல. வி.எண்ணையை காப்பில கலந்து காப்பியையும் கெடுத்து, காப்பியை ‘கொழ கொழ’ன்னு சாப்பிடவே செய்தார்கள். நான் மட்டும் என் தனி வழில குடித்துக் கொண்டிருந்தேன். எங்களில் சிலர் வி.எண்ணையைக் குடிக்க பயந்து தாங்களாகவே பாட்டியிடம் போய், ‘பாட்டி நீயே மூக்கை பிடித்து என் வாயில வி.எண்ணைய் கலந்த காப்பியை கொட்டிட்டு’ என்று பாட்டியிடம் ‘சர்வ தர்மான் பரித்யஜ்ய’ என்று தஞ்சம் புகுந்து விடுவார்கள்!

 

இவ்வளவும் இங்கே நடந்துகொண்டிருக்கும் போது இந்தக் கதையின் நாயகன் மாமாக்களின் பிடியில்    “எனக்கு வேண்டாம்….நான் சாப்பிட மாட்டேன்…!’ என்று அலறிக்கொண்டே  வருவான். அப்போதுதான் தளிகை உள் களைகட்டும். பாட்டி சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு வழிகளையும் பயன்படுத்துவாள். ‘சமத்து நீ! தங்கக்கட்டி நீ! வாடா ராஜா!’ என்று கொஞ்சலில் ஆரம்பிப்பாள். ‘நான் சமத்து இல்ல. தங்கக்கட்டி இல்ல. நான் வரமாட்டேன் போ!’ என்று தொண்டை கிழிய கத்துவான் நாயகன். ‘இந்த ஒரு தடவ தான். அடுத்த வருஷத்துலேருந்து வேண்டவே வேண்டாம், சரியா? நீ சமத்தா என் மடில படுத்துப்பாயாம்; நான் வாயில காப்பியை கொட்டுவேன். நீ டக்குன்னு முழுங்கிடுவயாம். வா! வா!’ என்று அடுத்த அஸ்த்திரத்தை விடுவாள். நாங்கள் எல்லாம் குசுகுசுவெனப் பேச ஆரம்பிப்போம். ‘களுக்’ என்று சிரிப்பும் வரும் எங்களுக்கு. பாட்டி எங்களைக் கோபமாகப் பார்த்து பேதத்தில் இறங்குவாள்.  ‘எல்லோரும் அவாவா வேலையைப் பார்த்துண்டு போங்கோ! இங்க என்ன கூட்டம்? இங்க என்ன வேடிக்கையா நடக்கிறது?’ என்று எங்களையெல்லாம் விரட்டுவாள் பாட்டி. நாங்க இந்த வேடிக்கையைப் பார்க்கத்தானே இத்தனை நேரம் காத்திருந்தோம்? அதனால கொஞ்ச தூரம் தள்ளி நின்று கொள்வோம்.

 

‘வாடண்ணா! நீ எத்தனை சமத்து! ஓட்டை கூடல ஒன்றரை கூடை சமத்து!’ என்று நைச்சியானுசந்தானம் ஆரம்பிக்கும். ‘ஓட்டை கூடைன்னா எனக்குத் தெரியும். அதுல ஒண்ணும் நிக்காது! நான் சமத்து இல்ல…நீ பொய் சொல்ற….நான் வரமாட்டேன் போ…!’ என்று நாயகன் ஓட எத்தனிக்க, இனி பொறுக்க முடியாது என்று என் மாமாக்கள் இருவர் அவனைக் கட்டிப் பிடித்து பாட்டியிடம் கொண்டு வருவார்கள். அவர்களிருவரையும் கால்களாலும் கைகளாலும் அடித்து, உதைத்து ஒருவழி செய்துவிடுவான் நாயகன். ‘எமப்பய….! போன ஜென்மத்துல கழுதையாப் பொறந்துருப்பான்…!’ என்று என் மாமா ஒருவர் அவனிடம்  உதை வாங்கும் சமயத்திலும் ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று ஜோக் அடிப்பார்.

 

இப்போது பாட்டியும் வைய ஆரம்பித்து விடுவாள். கடைசி வழி தண்டம் ஆயிற்றே! பாட்டியின் மடியில் அவனைப் படுக்க வைத்து, இரண்டு பேர்கள்  கையைக் காலைப் பிடித்துக் கொள்ள, பாட்டி அவன் மூக்கை இறுக்கப் பிடித்து ‘ஆ…..!’ என அவன் அலறும்போது வி.எண்ணைய் கலந்த காப்பியை அவன் வாயில் கொட்டுவாள். அப்பாடா என்றிருக்கும் எங்களுக்கு! ஆனால் அத்துடன் முடியாது அந்த நிகழ்வு. வாயில் இருப்பதை முழுங்காமல் தொண்டையில் வைத்துக் கொண்டு ‘களகள’ என சத்தம் செய்வான். எங்களுக்கு சிரிப்புத் தாங்காது. நாங்கள் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்துவிடுவோம். இறுக்கமான சூழ்நிலை அப்படியே மாறிவிடும். நாங்கள் சிரிப்பதைப் பார்த்து பாட்டி சிரிக்க, மாமாக்கள் அந்த சிரிப்பில் கலந்து கொள்ள, நாயகன் கம்பீரமாகப் பாட்டியின் மடியிலிருந்து எழுந்து கொள்வான். திடீரென நினைவு வந்தாற்போல பாட்டி ‘டேய்! விளக்கெண்ணெய் என்னாச்சுடா?’ என்று பதறிப் போய் கேட்பாள். ‘முழுங்கிட்டேன்!’ என்று சொல்லிவிட்டு நாயகன் சிட்டாகப் பறந்துவிடுவான்!

ஸ்ரீரங்கத்து வீடு

IMG_20130221_145709

 

இது ஸ்ரீரங்கம் வீடு அல்ல. சிவராமபுரம் வீடு.

 

எங்கள் ஸ்ரீரங்கத்து அகம் பேரன் பேத்திகள் நிறைந்து இரண்டு பட்டுக் கொண்டிருக்கும். காலையில் எங்களுக்கு சாதேர்த்தம் (இரவு சாதத்தில் நிறைய நீர் ஊற்றி வைத்துவிட்டு, காலையில் அதில் உப்பு, மிளகாய், நிமிண்டிப் போட்டு கூடவே பெருங்காயம் போட்டு டம்ப்ளரில் கொடுப்பாள் பாட்டி – இது தான் சாதம்+ தீர்த்தம் = சாதேர்த்தம்)  தான் காலை சிற்றுண்டி.  சாதேர்த்தம் இல்லை அது அமிர்தம்! ‘கம்’மென்று வயிறு நிரம்பிவிடும்.

 

பாட்டியின் அகம் பெரியது. இந்தக் காலத்தைப் போல அறைகள் இருக்காது. அத்தனை பெரிய வீட்டில் ஒரே ஒரு அறை தான் – காமிரா உள். வேறு அறைகள் கிடையாது. வாசலிலிருந்து வரலாம், வாருங்கள். வாசலில் நுழைந்தவுடன் இடது பக்கம் மிகப்பெரிய திண்ணை. திண்ணையின் ஒரு பக்கம் பாதித் திண்ணைக்கு வெய்யில் வராமல் மூங்கில் தட்டி போட்டிருக்கும். இப்போது நாம் ‘ஜாலி’ என்கிறோமே, அது போல. திண்ணையில் தலைகாணி போல ஒரு அமைப்பு. ‘சாய்வு’ என்பார்கள் அதை. அங்கிருந்தே மாடிக்கு ஒரு மரப்படி போகும். இடது பக்கத் திண்ணை போலவே வலது பக்கத்திலும் ஒரு சின்ன திண்ணை. சும்மா உட்காரலாம், அவ்வளவுதான். திண்ணை உலர்ந்த தென்னங்கீற்றுகளால் மூடப்பட்டிருக்கும். சிலசமயம் இந்தக் கீற்றுகளை மாற்றுவார்கள். ரொம்பவும் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருப்போம், கீற்றுகள் அடுக்கப்படுவதை.

 

எங்களின் பகல் பொழுதுகள் இந்தத் திண்ணையில் தான். பாட்டியின் அகத்தில் நிறைய புளியங்கொட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். திண்ணை முழுக்க இவைகளைப் பரப்பி, கொந்தி கொந்தி விளையாடுவோம். ஐந்துகல் விளையாட்டும் உண்டு. ஆடுபுலி ஆட்டம்; தாயம் பரமபதம் என்று எல்லா உள்அரங்கு விளையாட்டுகள் பகல் பொழுதில். சாயங்காலம் கிட்டிபுள், கோலி பம்பரம் என்று வெளியரங்கு விளையாட்டுக்கள் வாசலில். ஏழெட்டு வயது ஆகிவிட்டால் என் பெரியம்மா பிள்ளை சைக்கிள் விடச் சொல்லிக் கொடுப்பான். விழுந்து எழுந்து விடுமுறை முடிவதற்குள் கற்றுக்கொண்டு விடுவோம். நான் தான் சைக்கிள் விட சரியாகக் கற்றுக்கொள்ளாத ஆள். பிற்காலத்தில் இருசக்கர வண்டி விட ரொம்பவும் திண்டாடினேன் அதனால்.

 

திண்ணையைத் தாண்டி உள்ளேபோனால் சின்னதாக தாழ்வாரம். இங்குதான் கயிற்றுக்கட்டில்கள்  வைக்கப்பட்டிருக்கும். இரவு வெளியே எடுக்கப்பட்டு வாசலில் போடப்பட்டு நாங்கள் இதன் மேல் படுத்துக் கொள்வோம். ஆஹா! வானத்தில் மினுமினுக்கும் நட்சத்திரங்களைப் பார்த்தபடி ரொம்ப நேரம் கதை பேசுவோம். எப்போது தூங்கினோம் என்றே தெரியாது. நடு இரவில் சிலசமயம் குளிரும். அப்போது எழுந்து திண்ணையில் படுத்துக்கொள்வோம்.

 

தாழ்வாரத்தில் இடது பக்கம் வாசப்பக்கத்து உள். அது எப்போதும் பூட்டியே இருக்கும். இந்தப் பூட்டு இந்த தலைமுறைகளுக்கு தெரியாத ஒன்று. இந்த உள்ளிற்கு இரண்டு கதவுகள் ஒரு கதவு முதலில் சாத்தப்பட்டு மேல் தாழ்ப்பாள், கீழ் தாழ்ப்பாள் போடப்படும். பிறகு இன்னொரு கதவும் சாத்தப்படும். இந்தக் கதவின் மேல் புறத்தில் ஒரு சங்கிலி இருக்கும். கதவின் நிலையில் ஒரு கொக்கி இருக்கும். சங்கிலியை இந்தக் கொக்கியில் போட்டு பிறகு பூட்டுப் போடுவார்கள்.

 

தாழ்வாரத்தைத் தாண்டினால் பெரிய கூடம். கூடத்தில் இரண்டு தூண்கள். தூண்களுக்கு அந்தப் பக்கம் ஊஞ்சல். புளியங்கொட்டை, பல்லாங்குழி ஆட்டங்கள் அலுத்துவிட்டால் ஊஞ்சல் ஆட வந்துவிடுவோம். ஊஞ்சல்தான் ரயில் வண்டி. அதில் உட்காருபவர்களுக்கு எந்த ஊர் என்று கேட்டு மாமாக்கள் சேர்த்து வைத்திருக்கும் ரயில் டிக்கட்டுகளை விநியோகிப்போம். நடுவில் ஸ்டேஷன்கள் வரும் அப்போது நிறுத்தி என் கடைசி மாமா ‘பஜ்ஜி, போண்டா, முறுக்கு, வடை!’ என்று  விற்றுக்கொண்டு வருவார். இதுவரை நாங்கள் சீரியஸ் ஆகக் கேட்டுக் கொண்டு வருவோம். உடனே ‘தண்ணிக் காபி, தண்ணிக் காபி, கடுப்பு டீ’ என்று குரல் கொடுப்பார். கிளுகிளுவென்று சிரிப்போம் நாங்கள்.

 

ஊஞ்சல் பற்றியே ஒரு பதிவு முழுக்க எழுதலாம். நாங்கள் எல்லோரும் அதில் உட்கார்ந்துகொண்டால் என் மாமாக்களில் ஒருவர் அந்த ஊஞ்சலை ஒரு பக்கத்து உச்சிக்குக் கொண்டுபோய் சட்டென்று விட்டுவிட்டு பக்கத்தில் ஒதுங்கி விடுவார். அந்த ஊஞ்சல் கீழே வரும் வேகத்தில் நாங்கள் ‘ஓ’ என அலறுவோம். சிலசமயம் அவரும் ஓடிவந்து ஏறிக்கொள்ளுவார்.

 

எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டே சாப்பிடுவோம். ஆளாளுக்கு ஒவ்வொன்று கேட்போம் – பாட்டி சா போ சா (சாதம் போட்டு சாத்தமது) சா போ கு, சா போ மோ என்று. பாட்டி பாவம் எங்களை சமாளிக்க முடியாமல் எல்லோரும் ஒண்ணா கேளுங்கோ என்பாள். அவ்வளவுதான். சா போ சா என்று கோரஸ் ஆகக் கத்துவோம். பாட்டி ‘முதல் பசி ஆறித்தா? பேசாமல் இருக்கணும்’ என்பாள். தட்டை எடுத்துப் போவதற்கு முன் கட்டாயமாக தட்டை சுற்றி நீர் சுற்ற வேண்டும். அப்போதுதானே எச்சில் பிரட்ட உதவும்? சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே யாராவது ஒருவர் ‘லொடக்’ என்று தீர்த்தத்தைக் கொட்டுவோம். அது அப்படியே இன்னொருவர் தட்டு வரை ஓடும். சாப்பிடும் நேரம் அமர்க்களம் தான். பாட்டி எங்களை எதற்காகவும் கோபிக்கவே மாட்டாள்.

 

இப்படியிருக்கும் பாட்டி ஒருநாள் மட்டும் ‘வில்லி’யாக மாறிவிடுவாள். விளக்கெண்ணை போட்டும் நாள் தான் அது. முதல் நாள் இரவே எங்களிடம் சொல்லிவிடுவாள் பாட்டி: நாளைக்குக் காலை காபியில் விளக்கெண்ணை கலந்து கொடுக்கப்படும் என்று. நாங்கள் எல்லோருமே இஞ்சி தின்ற ஏதோ போல அன்றைக்கு படுக்கப் போவோம். எல்லோருக்குமே தெரியும் பாட்டியிடமிருந்து தப்ப முடியாது என்று. ஆனால் என் சகோதரன் இரவே அழுது அடம் பிடிக்க ஆரம்பிப்பான். ‘நாளைக்குத் தானே இன்னிக்கே ஏன் அழற?’ என்று அவனை சமாதானப் படுத்துவோம். அழுது கொண்டே தூங்கப்போவான். தூங்காமல் எழுந்து உட்கார்ந்து கொண்டு ‘நான் இன்னிக்கே ஊருக்குப் போறேன்’ என்பான். ‘விடிஞ்சதும் விளக்கெண்ணை குடித்துவிட்டு நீ கிளம்பு’ என்பாள் பாட்டி விடாக்கண்டனாய்.

அடுத்த நாள் விடியும்……….கூடவே என் சகோதரனின் அழுகையும் ஆரம்பிக்கும் !

நாளை க்ளைமாக்ஸ்!

ரயில் பயணங்கள் தொடர்கிறது……!

 

 

 

சிறுவயதுகளில் எங்களுக்குத் தெரிந்த ஒரே ரயில்நிலையம் சென்னை எழும்பூர். மலைக்கோட்டை ரயிலில் ஏறி ஸ்ரீரங்கம் போவோம். கோடை விடுமுறை ஆரம்பித்தவுடன் போனால், பள்ளிக்கூடம் திறப்பதற்கு முதல் நாள் திரும்பி வருவோம். ஸ்ரீரங்கம் தவிர வேறெங்கும் ரயிலில் சென்றது கிடையாது. பல வருடங்கள் சென்ட்ரல் ரயில் நிறுத்தம் பார்த்ததேயில்லை. எங்கள் உறவினர் ஒன்றிரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் சென்னையில் தான் இருந்தார்கள். அவர்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்றால் உள்ளூர் பேருந்துகள் அல்லது நடராஜா சேவை. முக்கால்வாசி நடைதான்.  மறந்துவிட்டேனே! அப்பாவைப் பெற்ற தாத்தா, பாட்டி பல்லாவரத்தில் இருந்தார்கள். அதற்கும் எக்மோர் போய் உள்ளூர் ரயிலில் போவோம். இந்த இரண்டு இடங்களைத் தவிர வேறெங்கும் ரயிலில் போனது இல்லை.

 

எங்கள் பெரியம்மாவின் குடும்பம் வடஇந்தியாவில் இருந்தது. அவர்களும் கோடை விடுமுறையில் ஸ்ரீரங்கம் வருவார்கள். எங்களைப் போல இரவு ஏறினால் காலையில் ஸ்ரீரங்கம் என்றிருந்ததில்லை அவர்கள் பயணம். சென்னை சென்ட்ரலுக்கு வந்து அங்கிருந்து இன்னொரு ரயில் பிடித்து ஸ்ரீரங்கம் வரவேண்டும். மூன்று நாட்கள் ஆகிவிடும் ஸ்ரீரங்கம் வந்து சேர. எனக்கும் அவர்களைப் போல மூன்று நாட்கள் பயணம் செய்ய வேண்டும் என்று அப்போதெல்லாம் ஆசையாக இருக்கும். மூன்று  நாட்கள் ரயிலில் ஜாலியாக வேடிக்கை பார்த்துக் கொண்டே வரலாமே என்று தோன்றும். என் அம்மாவிடம் சொன்னால், ‘நாறிப் போய்விடுவோம்’ என்பாள்.

 

இன்னொரு ஆசையும் எனக்கு உண்டு. திருச்சி வந்து ஸ்ரீரங்கம் வரும் ரயிலில் வரவேண்டும் என்பதுதான் அந்த ஆசை. ஏனென்றால் அப்போது இரண்டு பாலங்கள் வரும். காவிரிப் பாலம் ஒன்று; கொள்ளிடப் பாலம் ஒன்று.  காவிரிப் பாலத்தில் ரயிலில் போவது போல த்ரில் வேறில்லை என்று நினைத்திருந்தேன் – பிற்காலத்தில் சம்பல் நதியைப் பார்க்கும்வரை! சம்பல் நதி மேல் ரயில் போனபோது பிரமித்துப் போய் உட்கார்ந்திருந்தது இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. திருப்பதி மலைமேல் பேருந்து போவதைப் பார்த்து பிரமித்தவள் பத்ரிநாத் போனபோது இமயமலை எதிரில் நம் திருமலா ஜுஜுபி என்று உணர்ந்தேன்!

 

ஸ்ரீரங்கம் வரும்போது பெரியம்மா பால் கோவா செய்து கொண்டு வருவாள். இன்னும் அதன் ருசி எங்கள் நாவில் இருக்கிறது. இனிக்கிறது. ஸ்ரீரங்கத்தில் எங்களை வரவேற்க மாமாக்களில் யாராவது ஒருவர் ஸ்டேஷனுக்கு வருவார்கள். ஒரு லொடலொட மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டு பின்மண்டையில் இடி பட்டுக்கொண்டே வீடு வந்து சேருவோம். ஸ்ரீரங்கத்தின் மண்வாசனையே அலாதிதான். நாங்கள் வந்திறங்கியவுடன் எங்கள் மாமா சொல்லுவார்: ‘மெட்ராஸ் அழுக்குப் போக எல்லோரும் குளித்துவிட்டு வாருங்கள். உங்களுக்காகவே ‘லைப்பாய் சோப்’ வாங்கி வைத்திருக்கிறேன். உங்களோட அழுக்கிற்கு அதுதான் சரி’ என்பார். இப்போது இந்த சோப்பிற்கு என்ன விளம்பரம் செய்கிறார்கள்!

 

ஸ்ரீரங்கம் நினைவுடன் போட்டிபோட்டுக் கொண்டு நினைவிற்கு வருவது சிலோன் ரேடியோ. காலையில் எங்களை எழுப்புவதே இந்த வானொலி தான். முத்துமுத்தான பாடல்களுடன் மயில்வாகனம் எங்களை எழுப்புவார். ‘என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்?’ என்று டிஎம்எஸ், சுசீலா இனிமையாக பாடி எங்கள் கோடை விடுமுறையை துவக்குவார்கள். அதைத் தொடர்ந்து பல்தேய்த்து, காப்பி  குடித்துவிட்டு  குளிப்பதற்கு  கொள்ளிடம் போவோம். எங்களுடன் பெரியவர்கள் யாரும் வர மாட்டார்கள். நாங்களே போய்விட்டு  குளித்துவிட்டு வருவோம். ‘9 மணி சங்கு ஊதியவுடன் வந்துவிட வேண்டும் ‘ என்று சொல்லி அனுப்புவாள் பாட்டி. போகும் வழியில் எல்லாம் ‘ஸ்ரீரங்கம்மாவின் பேரன் பேத்தி’களாக அறியப்படுவோம். கொள்ளிடத்தில் அதிகம் நீர் இருக்காது. உட்கார்ந்துகொண்டு ஆறஅமரக் குளிப்போம் . ஆனால் ஊற்றுக்கள் நிறைய இருக்கும். என் சகோதரன் சொல்லுவான்: ‘நாமளே இந்த ஊற்றுக்களை எல்லாம் தோண்டிதோண்டி  இன்னொரு கொள்ளிடம் பண்ணிடலாம்’ என்று!

ஸ்ரீரங்கத்தில் இன்னொரு நிகழ்வு மறக்க முடியாதது: விளக்கெண்ணை போட்டல்!

நாளை தொடரலாம்….

 

சந்தோஷமோ சந்தோஷம்!

 

காலையிலேருந்து எனக்கு சந்தோஷமோ சந்தோஷம்! எனக்கு வந்த ஒரு இமெயில் தான் என்னோட இத்தனை சந்தோஷத்திற்குக் காரணம் அப்படின்னா நீங்க நம்பணும், சரியா?

 

வயசாச்சுன்னா பாசஞ்ஜர் வண்டி மாதிரி மெதுவா ஆயிடறாங்க; அந்த வண்டி எப்படி ஒரு ஸ்டேஷன் விடாம நின்னு நின்னு மெதுவா போறதோ அதேபோல இவங்களும் ஒவ்வொண்ணுக்கும் நின்னு நின்னு மெதுவா யோசிச்சு யோசிச்சு….ஆ!  தாங்க முடியலடா சாமீ! ஆமை கூட இவங்களை தோற்கடிச்சுடும் அப்படின்னு எல்லாரும் சொல்றாங்க, இல்லையா? அது ஏன் அப்படின்னு அதாவது வயசானவங்க ஏன் slow coach ஆகறாங்கன்னு  ஒரு ஆராய்ச்சி பண்ணியிருக்காங்க. அதுல என்ன தெரிஞ்சுது அப்படின்னா வயசானவங்க புத்திசாலித்தனத்துல குறைஞ்சு போயிடறது இல்ல; அவங்க புத்தி கெட்டுப் போறதில்ல; அவங்களோட மூளையில எக்கசக்கமாக விவரங்கள் குமிஞ்சு கிடக்கறதால அவங்க யோசிக்க கொஞ்சம்(!!) அதீ…………..க நேரம் எடுத்துக்கறாங்க, அவ்வளவுதான். இத நான் சொல்லல. விஞ்ஞானிகள் ஆதார பூர்வமா சொல்றாங்க. என்ன ஆதாரம் அப்படின்னு கேட்கறவங்களுக்கு:

 

உங்களோட கணனி ஹார்ட் டிரைவ் ல விவரங்கள் அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிட்டால், அது எப்படி நீங்க கேட்கிற தகவலை எடுத்துக் கொடுக்கத் திணறுதோ அதேபோலத் தான் வயசானவங்களும். அவங்களோட மூளை தகவல்களால் நிரப்பப்பட்டு விடுவதால் நீங்கள் கேட்கிற கேள்விக்கு பதிலை தேட நேரம் எடுத்துக்கறாங்க. இத நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு, ‘வயசானாலும் ‘கெத்து’ போகல பாரு. ரத்தம் சுண்டிப் போனாலும் கொழுப்பு அடங்கல பாரு’, கேட்ட கேள்விக்கு பதில் சொன்னா என்ன? வாயில கொழுக்கட்டையா?’ அப்படின்னு எடுப்பு எடுக்கக்கூடாது.

 

இந்த மெத்தனம் புலனுணர்வு மெத்தனம் அல்ல. மனித மூளை வயதான காலத்தில் மெதுவாக வேலை செய்யக் காரணம் நாங்கள் அதிக அதிக விவரங்களை பலபல வருடங்களாக சேமித்து சேமித்து வைத்துக் கொள்ளுகிறோம். எங்களது மூளைகள் பலவீனமடைவதில்லை. மூளை மழுங்கி போச்சு, மூளைய கழட்டி வச்சுட்டீங்களா? ன்னு குத்தம் சொல்லக்கூடாது. இதற்கு நேர்மாறாக எங்களுக்கு அதிகம் தெரியும். அதிலேருந்து நீங்க கேட்குற ‘தம்மாத்துண்டு’ விவரத்த எடுத்துக் கொடுக்க வேணாமா? அது என்ன அவ்வளவு லேசுப்பட்ட காரியமா? அதான் லேட் ஆகிறது. அவ்வளவுதான்.

 

அதேபோல இன்னொன்று நாங்க திடீர்னு எழுந்து இன்னொரு அறைக்கு கனகாரியமாகப் போவோம். அங்கு போனவுடன் எதற்கு அங்கு வந்தோம் என்று இடுப்பில் கையை வைத்துக் கொண்டு மூளையை கசக்கிக் கொண்டு நிற்போம். நினைவிற்கே வராது. எதற்கு இங்கு நிற்கிறோம் என்று வியப்பாகக் கூட இருக்கும். முதல்ல உட்கார்ந்திருந்த இடத்துக்கு திரும்பி வந்தவுடனே ‘பளிச்’ என்று பல்பு எரியும். மறுபடி எழுந்து போய் அந்த வேலையை முடிச்சுட்டு வருவோம். இதற்குப் பெயர் ஞாபகமறதி இல்லை. இயற்கையே எங்களை அதிக உடற்பயிற்சி செய்ய வைப்பதற்காக ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் இது. புரிகிறதா?

 

அதான்!

 

இந்த செய்தியை என்னோட எல்லா  நண்பர்களுக்கும் அனுப்ப ஆசைப்படுகிறேன். இதைப் படிச்சுட்டு அவங்களும் என்ன மாதிரியே சந்தோஷப்படுவாங்க இல்லையா? ஆனா எனக்கு அவா அத்தனை பேர்களோட பேரும் உடனே நினைவுக்கு வரல; அதனால ஒரு சின்ன உதவி பண்ணுங்களேன். உங்கள் நண்பர்களுக்கு இத அனுப்பிடுங்கோ. அவங்கள்ளாம் என்னோட நண்பர்களாகவும் இருக்கலாம், இல்லையா?

திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களின் சினேகிதி ஜூலை 2015 இதழில் வெளியாகியிருக்கும் என் கட்டுரை இது.

சர்வதேச யோகா தினம்

Published in 4tamilmedia.com on 21.6.2015  

இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோதி கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஐக்கிய நாடுகள் சபை இந்த வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் ஜூன் 21 ஆம் தேதியை ‘சர்வதேச யோகா தின’மாக அறிவித்திருக்கிறது. இதன் காரணமான 6000 வருடப் பழமையான இந்த யோகக்கலை பல நாடுகளிலும் மக்களிடையே ஆரோக்கியத்திற்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். மனம், உடல், ஆத்மா ஆகிய மூன்றையும் வளப்படுத்தும் இந்தக் கலையை சர்வதேச யோகா தினத்தன்று இந்தியா முன் நின்று நடத்தும். அன்று காலை 7 மணி முதல் 7.35 மணிவரை சுமார் 50,000 மக்கள் பங்குபெறும் பிரம்மாண்ட யோகா முகாம் ராஜ்பத், புதுதில்லியில் நடைபெற உள்ளது.

 

இந்தியாவின் மாநில அரசுகளும், வெளிநாடுகளில் உள்ள இந்திய அமைப்புகளும் அவரவர் இடங்களில்  இதே போன்ற நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றன. மத்திய அரசு  152 நாடுகளின் அரசு அதிகாரிகளை இந்த மிகப்பெரிய நிகழ்விற்காக அழைத்துள்ளது. நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் ஐக்கிய நாடுகளின் நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படும்.

 

இந்தியா தனது பழம்பெருமை வாய்ந்த கலாச்சார தத்துவத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட இது ஒரு பொன்னான வாய்ப்பு. விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த யோகா, நமது முன்னோர்கள் உலகிற்கு அளித்த கொடையாகும். யோகக்கலையின் மதிப்பும், அதனால் விளையும் நன்மைகளையும் உலக நாடுகளும் மெதுமெதுவே அறியத் தொடங்கியிருக்கிறன. இந்தக் கலையின் மூலம் உலக மக்களை குறைந்த செலவில் ஆரோக்கியமாக வாழ வைக்க முடியும் என்பதையும், பிற உடற்பயிற்சிகளைப் போல் இல்லாமல் யோகா மனதையும் உடலையும் இணைப்பதால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துடன், ஆழ்மன அமைதியும் கிடைக்கிறது என்பதனையும் இந்த நாடுகள் உணர்ந்திருக்கின்றன.

 

யோகாவின் பெருமையை உணர்ந்தவர்கள் இந்த நாளை வரவேற்கும் வேளையில் சிலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி, அதை அரசியல் செய்யப் பார்ப்பது வருத்தத்திற்குரியது. மோதி அரசு தனது பெருமையை பறைசாற்ற இப்படிச் செய்கிறது என்று இவர்கள் சொல்லுகிறார்கள். சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் சிலர் யோகா என்பது எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்று அல்ல என்று முரண்பட்ட கருத்துக்களைச் சொல்லி வருகிறார்கள்.

 

யோகா என்பது வேத காலத்திற்கு முன்பிருந்தே இந்தியாவில் இருந்து வந்திருக்கிறது. நமது ஆளுமையை நமது வாழ்வின் எல்லா நிலையிலும் மேம்படுத்திக் கொண்டு, மனம், உடல் இரண்டாலும் இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழ்வது தான் யோகா. ஆரம்பத்தில் யோகா என்பது மதவாத மெய்யியல் அடிப்படையிலேயே பார்க்கப்பட்டது. ஸ்வாமி விவேகானந்தர் இந்தக் கலையை மேற்கத்திய நாடுகளில் அறிமுகம் செய்தார். 1980 களில் இது ஒரு உடற்பயிற்சி முறையாக மேற்கு நாடுகளில் பிரபலம் அடைந்தது.

 

இன்றும் பலருக்கு யோகா என்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஒரு உடற்பயிற்சி என்ற நிலையிலேயே தெரிந்திருக்கிறது. யோகாவை தினமும் செய்வதன் மூலம் ஒரு வலுவான, தன்னம்பிக்கை நிறைந்த உடலைப் பெறலாம் என்பதுடன் உளவியல், மற்றும் நரம்பியல் ரீதியாகவும் நன்மைகளைப் பெறலாம். நமது ஆழ்மன, அதாவது உள்ளுணர்வு  மற்றும் படைப்பாற்றல் சக்தியையும் மேம்படுத்த உதவுகிறது.

 

மேற்கு நாடுகளிலும் யோகாவை ஆரோக்கியத்தை வளப்படுத்தும் ஒரு வழியாகவே பார்க்கிறார்கள். ஆசனங்கள் செய்வதில் இருக்கும் ஆர்வம் இந்த நாடுகளின் மக்களுக்கு அதிகரித்து வந்தாலும் யோகாவின் ஆன்மீக, தத்துவார்த்தங்கள் அவர்களை இன்னும் அவ்வளவாகக் கவரவில்லை என்றே சொல்ல வேண்டும்.

 

யோகா என்பது மதங்களையும், கலாச்சாரங்களையும் தாண்டிய ஒரு ஆன்மீக பயிற்சியின் அவசியத்தை உணர்த்தும் உலகப் பொதுமொழி என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்துகிறார்.

 

இந்தியாவில் யோகா என்பது வாழும் வழியாகப் பார்க்கப்படுகிறது. உலக ஆரோக்கிய நிறுவனம் இந்தியாவின் யோகா மையங்களுடன் சேர்ந்து அறிவியல் சான்றுகளுடன் யோகாவின் நன்மைகளை உலகெங்கும் பரப்புவதுடன், உலக மக்களின் ஆரோக்கியத்திற்கு யோகாவை பயன்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறது. பலவிதமான நோய்கள் மக்களை அண்டாமல் தடுக்கவும், அவற்றைக் கட்டுப்படுத்தவும் யோகா முழுமையான சிகிச்சை முறையாக உலகெங்கும் அறியப்பட்டு வருகிறது.

 

 

மருத்துவ அறிவியலில் எத்தனையோ முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், நவீன மருத்துவம் பொதுமக்களிடையே ஓரளவிற்கே வெற்றி பெற முடிகிறது. ஏனெனில் மனிதனை மருத்துவப் பார்வையிலேயே அது பார்க்கிறது. மனிதனின் உளநலத்தையும், உளவியல் சார்ந்த எண்ணங்களையும், ஆன்மீக அம்சங்களையும் அது ஒதுக்கிவிட்டு அவனை ஒரு உயிரியல் பொருளாக மட்டுமே பார்க்கிறது.

 

‘நம்மால் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான போஷாக்கினையும், உடற்பயிற்சியையும் கொடுக்க முடிந்தால், ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பான வழியை கண்டுபிடித்திருக்க முடியும்’ என்று கிரேக்க மருத்துவ வல்லுநர் ஹிப்போகிரேட்ஸ் சொல்லுவார். யோகாசனங்கள் நமது ஆரோக்கியத்தை காக்கும் சிறந்த வழி என்று சொல்லலாம்.

 

பிராணவாயுவை உள்ளிழுக்க நமது நுரையீரலின் சக்தியைப் பெருக்கவும், இரத்தத்தை உடலெங்கும் கொண்டு செல்லும் இதயத்தின் இயக்கத்தை வலுப்படுத்தவும், இன்சுலினை சுரக்க கணயத்தை வலுப்படுத்தவும் ஆசனங்கள் உதவுகின்றன. அத்துடன் நமது வளர்சிதை மாற்றத்தை பலப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கவும் யோகாசனப் பயிற்சிகள் உதவுகின்றன.

 

ஆழ்ந்த மூச்சுப்பயிற்சியும், ஆசனங்களும் யோகாவின் ஆரம்பநிலைதான். ஆழ்மனப் பயிற்சி, குண்டலினியை எழும்பச் செய்தல், மற்றும் சமாதி ஆகியவை நம்மை உயர்நிலைக்கு அழைத்துச் செல்பவை. இந்த மேம்பட்ட  யோகாப்பயிற்சி மனிதனை அவனது ஆழ்மனத்துடன் ஒன்றச் செய்யும். ‘அடிக்கடி பழைய சம்பவங்களை நினைத்து அல்லலுறும் மனிதனை நிகழ்காலத்தில் வாழச்செய்து, வாழ்க்கையை பயமில்லாமல் எதிர்கொள்ள வைக்கும் யோகா. எதிர்காலம் பற்றிய நம்பிக்கையுடன், நேர் எண்ணங்களை மனதில் தோன்றச் செய்யும்’ என்கிறார் ஜப்பானிய யோகா ஆசிரியர் எச். இ. தவே.

 

யோகாப் பயிற்சிகளை மேற்கொள்வதால் நமது அகந்தை அழிந்து, மற்றவர்களின் மேல் அன்பு செலுத்தவும், மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படாத நிலையும், கடவுளின் ஆசியும் கிடைக்கும். மனதில் குழப்பமில்லாத அமைதி, நல்லது செய்வதில் ஒரு இன்பம், தீயவர்களைப் பொருட்படுத்தாமை ஆகியவை யோகப்பியாசத்தால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள்.

 

‘நமது சிக்கல்கள் நிறைந்த உடலானது மிதமிஞ்சிய செயல்முறைகளை  கொண்டது. நமக்கு இறைவனால் அளிக்கப்பட வரம் இந்த உடல். இதனை நல்ல ஆரோக்கியத்துடனும், கட்டமைப்புடனும் வைத்துக் கொண்டாலொழிய நமது மனம் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்க இயலாது’ என்பார் புத்தர். யோகாவினால் புத்தர் கூறும் உடல்நலத்தைப் பெறலாம்.

 

உடலின் திறன்கள் பெருகப் பெருக நமது சக்தி பெருகுகிறது. இதனால் நாம் செய்யும் வேலைகளின் தன்மை உயருகிறது. நமக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர்ந்து, சோம்பலை ஒழித்து, வாழ்வில் மகிழ்ச்சியை காண நாள்தோறும் செய்வோம் யோகப் பயிற்சிகளை.

 

சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!