மீனாவின் புகழ்!

47

2.4.2015 புதிய தலைமுறை ‘பெண்கள் டயரி’ பகுதியில் வெளிவந்த எனது கட்டுரை

அன்றுதான் புதிதாக வீட்டு வேலைக்குச் சேர்ந்திருந்தாள் மீனா. அன்றைய வேலைகளை முடித்துவிட்டு வந்தவள் சொன்னாள்: ‘பாத்ரூம்ல உட்கார்ந்துகொண்டு என்னால் பாத்திரங்கள் தேய்க்கமுடியாது. முதுகு வலி. அதனால் இங்க இருக்கற (ஹாலை ஒட்டி இருக்கும் பால்கனி) சிங்க்கில் நின்று கொண்டே தேய்க்கிறேன். அப்புறம்……இந்த சபீனா எல்லாம் யூஸ் பண்ண முடியாது. விம் லிக்விட் வாங்கிக் கொடுங்க…..’

 

வந்த அன்றே இத்தனை கறாராகப் பேசினால் என்ன செய்வது என்று யோசித்தபடியே இருந்தேன். வீட்டு வேலைக்கு உதவி இல்லாமல் இருக்க முடியாது. சரி வேறு வழியில்லை என்று நினைத்துக் கொண்டே விம் லிக்விட் வாங்கி வந்தேன். அடுத்த நாள் காலையில் மீனா வந்தவுடன், ‘சிங்கிலேயே தேய்த்து விடம்மா’ என்றேன். அவள் வேலையை முடித்துவிட்டுக் கிளம்பியவுடன் பாத்திரங்களை உள்ளே கொண்டு வர சிங்க் அருகே போனேன். ஒரு நிமிடம் என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. அசந்து போய் நின்று விட்டேன். பாத்திரங்கள் எல்லாம் பளபளவென்று மின்னின. சிங்க் சுத்தமாக கழுவப் பட்டு அதுவும் பளபள என்று மின்னியது. அதுமட்டுமல்ல; பாத்திரக்கூடையில் பாத்திரங்கள் எல்லாம் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. கரண்டிகள் எல்லாம் அந்தக் கூடையில் அவற்றிற்கென இருந்த கொக்கியில் மாட்டப்பட்டிருந்தன. தட்டுகள் ஒரு பக்கமாக, ஸ்பூன்கள் ஒரு பக்கமாக என்று, எடுத்து அடுக்குவதற்குத் தோதாக பாத்திரக்கூடையில் எல்லாம் வைக்கப்பட்டிருந்தன. டிபன் பாக்ஸ்கள் தனித்தனியாக மூடிகளுடன் மேடை மேல் கவிழ்க்கப்பட்டிருந்தன.

 

‘எல்லாம் முதல் நாள்’ என்று நீங்கள் நினைப்பது போலத்தான் நானும் நினைத்தேன். ஆனால் தினமுமே இந்த ஒழுங்கு தொடர்ந்தது. அதேபோல அவளது நடை உடை பாவனைகள் எல்லாமே மெச்சும் வகையில் இருந்தது.

 

வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் மீனாவைப் பார்க்க வேண்டும். பளிச்சென்று தலைக்குக் குளித்து மஞ்சள் மின்னும் முகத்துடன் தலையில் கிள்ளு பூவுடன் மங்களகரமாக வருவாள்.

 

மீனாவின் இன்னொரு திறமையையும் சொல்ல வேண்டும். எல்லா மொழிகளையும் அனாயாசமாகப் பேசுவாள். கன்னடம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி என்று புகுந்து விளையாடுவாள். வீட்டில் ஆட்கள் அதிகம் வந்துவிட்டால் கடைசி பாத்திரம் விழும்வரை காத்திருந்து தேய்த்துக் கொடுத்துவிட்டுத்தான் போவாள். நிச்சயம் லீவு போடமாட்டாள்! எங்கள் அடுக்குமாடிக் கட்டிடத்தில் யார் வீட்டிற்காவது வேலையாள் வரவில்லையென்றால் மீனாவிற்குத்தான் அழைப்பு வரும். துளிக்கூட முகம் சிணுங்காமல் போய் செய்து கொடுத்துவிட்டு வருவாள். வீட்டு வேலை செய்வது தவிர தையல் வேலையும் செய்கிறாள் மீனா. நானும் எனது ரவிக்கை புடவைகளை அவளிடமே தைத்து வாங்கிக் கொள்ளுகிறேன். வெளியில் கொடுக்கும் அதே கூலியை மீனாவிற்கும் கொடுக்கிறேன்.

என்ன இப்படி ஒரேயடியாக உங்கள் வீட்டு உதவியாளைப் புகழ்கிறீர்கள் என்கிறீர்களா? சொல்லாமல் கொள்ளாமல் லீவு போடும், எத்தனை சம்பளம் கொடுத்தாலும் இன்னும் அதிகம் கொடுங்க என்று பாட்டு பாடும், தங்கள் கோபத்தை எல்லாம் நம் பாத்திர பண்டங்கள் மேலும், துணிகளின் மேலும் காட்டும் வேலையாட்கள் நிறைந்த இந்த காலத்தில் இப்படி ஒரு ஆள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க  வேண்டுமே!

 

மீனாவின் புகழ் சொல்லி மாளாது!

16 thoughts on “மீனாவின் புகழ்!

  1. மீனா போன்றவர்கள் மிக அரிது! அவளது நல்ல உள்ளத்திற்கும், உழைப்பிற்கும் இறைவன் அவளுக்கு எல்லா நன்மையும் அருளட்டும்! இப்படிப்பட்டவர்கள் வாழ்வில் சிறந்து விளங்குவார்கள்! அவர்களது தூய உள்ளத்தினாலும் அன்பினாலும்! அவளுக்கு எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கவும்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    1. வாங்க துளசிதரன்!
      மீனாவிடம் உங்கள் வாழ்த்துக்களை நிச்சயம் சொல்லுகிறேன்.
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  2. கட்டுரை வெளியானதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள் ரஞ்சனி். சுறுசுறு மீனாவிற்கு பாராட்டுக்கள்.

  3. மீனா போன்றவர்களை காண்பது நிஜமாகவே அரிது தான் அம்மா! எனக்கு நீங்கள் மீனாவை பற்றி குறிப்பிட்டவுடன் எனக்கு என் வீட்டில் வேலை செய்த அமீனா தான் நியாபகத்துக்கு வருகிறாள்! என் இரண்டாவது பையன் கை பிள்ளையாக இருக்கும் போது என் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொண்டவள் அவள்! அவளுக்கு தமிழ் தெரியாது! கன்னடதுக்காரி , என்னுடன் ஹிந்தியில் பேசுவாள்! வேலைக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே என் மனதுக்கு மிகவும் நெருங்கி விட்டாள்! உங்கள் மீனாவை போல் எதையும் சுத்தமாக செய்வாள்! நான் அவளிடம் நிறைய கற்று கொண்டேன்! எனக்கு பல விதங்களில் தன்னம்பிக்கை ஊட்டி இருக்கிறாள்! எவ்வளவோ கஷ்டங்கள் அவள் வாழ்க்கையில் இருந்தாலும் சிரித்த முகத்துடன் வலம் வருவாள்! கிட்டத்தட்ட 10 15 வீடுகளில் பணி புரிவாள்! ஆனால் , மின்னல் வேகத்தில் முடித்து விடுவாள்! சொன்னால் நம்ப மாட்டீங்க , எனக்கு எதிர்பாராமல் அம்மை வந்து துன்ப பட்டு கொண்டிருந்த நேரத்தில் , வேண்டாம் , வேண்டாம் என்று சொல்ல சொல்ல கேளாமல் வந்து உதவி செய்தாள். அந்த மனசு எல்லாம் யாருக்கும் வராது! அவளிடம் நான் அடிக்கடி சொல்வேன், நீ தான் நான் என் வீட்டு வேலைக்கு அமர்த்தும் கடைசி வேலைக்காரி என்று! நாங்கள் அந்த ஊரில் இருந்து மாற்றம் பெற்று வேறு ஊர் வரும் பொழுது பிரியா விடை பெற்றோம். அதன் பிறகு நான்கு வருடங்கள் உருண்டோடி விட்டன.. இன்று வரை நான் என் வீட்டு வேலைகளை நானே திறம்பட செய்து கொள்கிறேன் ! எல்லாம் அமீனாவின் ட்ரைனிங் தான்! இன்றும் என்றாவது வேலை செய்ய சோம்பல் உண்டாகும் போது அவளை தான் மனதார துணைக்கு அழைத்து கொண்டு மட மடவென்று முடித்து விடுவேன் ! அம்மா… உங்களை நெடு நாள் கழித்து சந்தித்ததில் மகிழ்ச்சி 🙂

  4. வணக்கம்
    அம்மா
    மீனாவுக்கு எனது வாழ்த்துக்கள் அவளின் திறமையை கண்டு வியந்து விட்டேன் தையல்கலை பல மொழிகளில் பேசும் திறன் எல்லாம் தன்னகத்தே கொண்டுள்ள மீனா வாழ்வில் உயர்வாள் என்பது உறுதி.

    எல்லாவற்றுக்கும் காரணம் அவள் வேலைக்கு சேர்ந்தவீட்டுக்கார்கள் நல்ல மனிதர்கள் என்றுதான் சொல்ல வேண்டும் அம்மா

    புதிய தலைமுறை இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  5. மீனாவின் புகழ் ஓங்கட்டும்! இப்படிப்பட்டவர்கள் கிடைப்பது அபூர்வம் தான். கடவுள் அவருக்கு நன்மையே செய்யட்டும்.

  6. சபாஷ் மீனா. எல்லா வேலைக்கு வருபவர்களும் இப்படி அமைந்து விட்டால்
    கொடுத்து வைத்தவர்கள்தாம் நாம். மாற்று வழியிலும் அவளை ஊக்குவிப்பது
    மிகவும் நல்லது. வேலைக்கு ஆள் அமைவதைப்போல் எஜமானி அம்மாக்களும்
    ஒருவராக இருந்தால் நல்லது. பாராட்டி எழுதுவதற்கும் மனது வேண்டும்.
    இது வேலைக்காரர்கள் அமைவது கூட கடவுள் கொடுத்த வரமாகவும் இருக்குமோ என்னவோ? அன்புடன்

  7. நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்தில் ரஞ்சனி படிக்க சந்தோஷமாக இருந்தது அதிலும் மீனாவின் புகழ் எனக்கும் இப்படித்தான் 30 வருடமாக என்னிடம் வேலை செய்கிறாள். அவளை எங்கள் குடும்பத்தில் ஒருவராகத்தான் நினைப்பேனே தவிர வேலைக்காரியாக அல்ல ரொம்பவும் நம்பிக்கையானவள். வெளீயே செல்ல வேண்டியிருந்தால் வீட்டுச்சாவியை அவளிடம் கொடுத்து வேலையை முடிக்கச் சொல்லிவிட்டு செல்வேன் நம்பிக்கையானவர்கள் கிடைப்பது மிகவும் அரிது பாராட்டுக்கள் ரஞ்சனி

  8. உண்மையிலேயே ஆச்சரியம் தான். இப்படியே தொடர்ந்து உதவி வரப் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துகள் உங்களுக்கும், உங்கள் மீனாவுக்கும். 🙂

  9. புதிய தலைமுறை இதழில் கட்டுரை வெளியானதில் மிக்க மகிழ்ச்சி மேடம்! தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  10. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  11. it is true that most servants reciprocate our behaviour with them… our treatment with them…. so it is evident that our author must have treated her well…

Leave a comment