‘இங்க த்ரிஷா யாரு?’

 

 

கண் மருத்துவ மனையில் உட்கார்ந்திருந்தோம். பொதுவாக மற்ற மருத்துவமனைகள் போல கண் மருத்துவமனை இருக்காது. வந்திருப்பவர்கள் கண்ணை மூடிக் கொண்டு அல்லது ஒரு கண்ணை மட்டும் அவ்வப்போது திறந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். கூட வந்திருப்பவர்களும், கண்ணைக் காண்பித்துக் கொள்ள வந்திருப்பவர்களும்  எப்போது மருத்துவர் கூப்பிடுவார், எப்போது இந்த ஒற்றைக்கண் தரிசனம் முடியும்  என்று காத்திருப்பார்கள்.

 

அன்றும் அப்படித்தான் அந்த மருத்துவமனை சத்தமே இல்லாமல் இருந்தது. எங்களுக்கு முன் வரிசையில் ஒரு அப்பா, அம்மா இரண்டு சிறுமிகள் – ரொம்பவும் சின்னவர்கள் பத்து அல்லது பதினோரு வயது இருக்கலாம் – கூட ஒரு ஆண்ட்டி. கிசுகிசு என்று சன்னக்குரலில் அந்தப் பெண்கள் பேசிக்கொண்டே இருந்தனர். கூடவே சிரிப்பு வேறு. எனக்கு பார்க்கவே ரொம்பவும் பிடித்திருந்தது. மருத்துவ மனையின் சூழலையே அவர்களது சன்னக் குரல் பேச்சும் சிரிப்பும் மாற்றிக் கொண்டிருந்தது. முதலில் அவர்களது அம்மா மருத்துவரின் அறைக்குள் சென்றார். கூடவே இந்தப் பெண்களும் போனார்கள். ஐந்து நிமிடங்களில் திரும்பி வந்து தங்கள் தந்தையிடம் ‘அம்மாவிற்கு கடைசி வரி தெரியலை, அப்பா!’ என்று கொஞ்சம் கவலை நிறைய சிரிப்புடன் கூறினர். அடுத்து சிறுமிகளின் அப்பா உள்ளே போனார். இது முதல் சுற்று செக்-அப் தான். சிறுமிகள் தங்கள் அப்பாவின் கண்பார்வை பற்றி வெளியே வந்து பேசிச் சிரித்தனர்.

 

தங்களுக்குள் என்னவோ பேசிக்கொண்டு துளிக்கூட தங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் அந்தச் சிறுமிகள் சிரித்துக் கொண்டிருந்தது பார்க்கவே பரவசமாக இருந்தது. என்ன ஒரு அழகான பருவம்! எனது கடந்த காலத்தை நினைத்துக் கொண்டேனோ என்னவோ, அவர்கள் அறியாமல் அவர்களை நான் கவனித்துக் கொண்டிருந்தேன்.

 

சற்று நேரத்தில் நர்ஸ் வந்தார். ;த்ரிஷா…!  த்ரிஷா…!’ என்று கூப்பிட்டுக் கொண்டே சுற்றிவரப் பார்த்தார். யாரும் எழுந்திருக்கவில்லை. நர்ஸ் உள்ளே போய்விட்டார். இந்த பெண்களுக்கு சிரிப்பு இன்னும் அதிகமாகியது. ‘ஏய்! யாரோ த்ரிஷாவாம்…..! யாரோ தெரியலையே….!என்று அங்கு உட்கார்ந்திருப்பவர்களை திரும்பிப் பார்த்து  கிளுகிளுத்தனர். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு மறுபடி அந்த நர்ஸ் வந்தார்: ‘இங்க யாரு   த்ரிஷா….?’ இந்த முறையும் யாரும் நான் தான் த்ரிஷா என்று முன்வரவில்லை. அதனால் உள்ளே போய் கையில் ஒரு ஃபைலுடன் திரும்ப வந்தார். ‘குமாரஸ்வாமி லேஅவுட்…..’ என்று விலாசத்தைப் படிக்க ஆரம்பித்தார். அடுத்த நொடி! இந்தச் சிறுமிகளின் ‘குபீர்’ சிரிப்பு அந்த ஹாலை நிறைத்தது. ‘ஹேய்….நம்ம ஆண்ட்டி! ஆண்ட்டி உங்கள அந்த நர்ஸ்ம்மா த்ரிஷா ஆக்கிட்டாங்க… ஹே……ஹே……..ஹி……ஹி…..ஹோ….!’ அவர்கள் இருவருக்கும் சிரிப்பு தாங்கவில்லை.

 

அந்த ஆண்ட்டி பொங்கி வரும் சிரிப்பை (புடவைத் தலைப்பால் வாயைப் பொத்தி) அடக்கிக் கொண்டு எழுந்து உள்ளே போனார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் சிரிப்பு தாங்கவில்லை. எனக்கு ஒரு சந்தேகம். மெல்ல எழுந்து அந்த சிறுமிகளின் அருகில் போனேன். ‘உங்க ஆண்ட்டி பேரென்ன?’ என்றேன். ‘தெரேசா’ என்றனர் சிரிப்பு அடங்காமலேயே அந்தச் சிறுமிகள். அன்னை தெரேசா த்ரிஷாவான விந்தையை எண்ணி எண்ணி சிரித்துக்கொண்டே வந்து என்னிடத்தில் உட்கார்ந்தேன்.

 

நேற்று மறுபடி அதே கண் மருத்துவ மனை. அந்தச் சிறுமிகள் இல்லை. ஆனால் அன்றைக்கு நடந்த அதே சம்பவம் சற்று மாறுதலுடன் நடந்தது. இந்த நர்ஸ் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தார். கூப்பிட வரும்போதே ஃபைலைக் கொண்டுவந்துவிட்டார்! ‘ பேரு என்ன?  ராஜாமணியா, ரோஜாமணியா…?’ என்று கேட்டுவிட்டு சரியான பெயரை நிச்சயப்படுத்திக் கொண்டு பிறகு ‘ராஜாமணி’ என்று அந்தப் பெண்மணியை கூப்பிட்டார்!

 

இந்த சம்பவங்கள் எனக்கு இன்னொரு சம்பவத்தை நினைவிற்கு கொண்டு வந்தது. கிட்டத்தட்ட இதே போல. உங்களுடன் அதையும் இங்கே பகிர்ந்து கொள்ளுகிறேன். அப்படியே உங்களுக்கு ஒரு சின்ன கேள்வி!

 

எங்கள் உறவினர் ஒரு பெண்மணி இதே போல ஒரு மருத்துவமனைக்கு போயிருக்கிறார். அவரது பெயர் குமுதா. அவரை எப்படி நர்ஸ் கூப்பிட்டிருப்பார் என்று ஒரு guess அடியுங்களேன்!

 

ஒரு சின்ன க்ளூ: இந்தப் பெயருடன் ‘அம்மா’ சேர்த்துக் கொள்ளுங்கள்.

 

நீங்கள் சிரித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இன்னொரு சந்தோஷச் செய்தியையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

 

எனது வலைத்தளம் மூன்று வருடங்களை முடித்து நான்காம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. இந்தப் பதிவு எனது ஐநூறாவது பதிவு.

 

தவறாமல் வந்து கருத்துரை கொடுக்கும்  சக பதிவாளர்கள், என்னைப் பின்தொடர்பவர்கள், வாசகர்கள் எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி.

50 thoughts on “‘இங்க த்ரிஷா யாரு?’

    1. வாங்கோ கோபு ஸார்!
      வெகுநாட்களுக்குப் பிறகு உங்கள் வருகை ரொம்பவும் சந்தோஷம்.
      வருகைக்கும் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  1. //‘இங்க த்ரிஷா யாரு?’//

    நல்லதொரு நகைச்சுவை சம்பவம். அதைத்தாங்கள் சொல்லியுள்ள விதமும் அருமை

  2. முதலில் உங்க தளத்தின் பிறந்த நாளுக்கும், அடிச்ச அஞ்சு நூறுகளுக்கும் எங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சொல்லிக்கறேன். இந்த ஐநூறு விரைவில் ஆயிரமாகப் பெருகட்டும்!!!!

    மருத்துவமனைகள் ஒரு தனி உலகம். நேத்து அவசர சிகிச்சை ஆஃப்டர் அவர்ஸ் பிரிவுக்குப்போக வேண்டியதாப் போச்சு. கோபாலுக்கு ஒரு டெட்டனஸ் ஊசி போட்டுக்கணும். வீடு இம்ப்ரூவ்மெண்ட் சம்பந்தமா சின்ன ஆக்ஸிடெண்ட். காத்திருப்பு ஒன்னரை மணி நேரம். அப்போ கவனிச்ச சமாச்சாரங்கள் குறுநாவல் எழுத உதவும்:-)))))

    ஒரு ஒன்னரை வயசு அடிச்ச லூட்டி இருக்கே… அப்பப்பா….. எல்லோரும் பயந்துக்கிட்டே காத்திருந்தோம். அதன் ஒவ்வொரு செய்கைக்கும் பெருமிதம் கலந்த முகத்தோடு அம்மா ஓ, ஆ என்று காமிச்ச முகபாவனை…… எழுந்து போய் அந்த அம்மாவை என்ன செய்யலாமுன்னு தோணுச்சு தெரியுமா?
    இங்கே பிள்ளைகளை அடிக்கக்கூடாதுதான். அதுக்காக….. அது மற்றவங்களைத் தொல்லை செய்து காயப்படுத்தவிடலாமா?

    எனக்கு வயசாகிப்போச்சு. இப்பெல்லாம் இதை ரசிக்க முடியறதில்லை!

    1. வாங்க துளசி!
      பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீங்கள் சொல்வது சரிதான். மற்றவர்களை இம்சை செய்வது நிச்சயம் ஒப்புக்கொள்ளக் கூடியது இல்லை. என்னாலும் இதுபோன்றவைகளை சகித்துக் கொள்ள முடியாது தான்.
      ஆனால் இந்தச் சிறுமிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டு சிரித்துக் கொண்டு இருந்தார்களே தவிர மற்றவர்களை எந்த விதத்திலும் தொந்திரவு செய்யவில்லை. ரொம்பவும் டீசண்டாகவே இருந்தனர்.

      வருகைக்கு நன்றி!

      1. ஐயோ ரஞ்ஜனி, நான் சொல்ல நினைத்ததைச் சரியாச் சொல்லலை போல இருக்கே:(

        சிறுவர்களும் சிறுமிகளும் தங்களுக்குள் பேசிக்கொள்வதும் விளையாடுவதும் நமக்குப் பார்க்கவும் கவனிக்கவும் நேரும்போது ரொம்பவே அருமையாக இருக்கும். அந்த வயசுக் குறும்புகள் தனிரகம்:-)

        இங்கே என்னன்னா…. பலரும் பலவித வலிகளில் துடித்துக்கொண்டு அவசர சிகிச்சையில் காத்திருக்கும்போது, அந்தக்குழந்தைப் பையன் படுத்தியதுதான். அவனுக்கு ஒரு அஞ்சாறு வயசு அக்கா. பாவம் அந்தப்பொண்ணு. இவன் தூக்கி எறியும் சாமான்களையும் பொம்மைகளையும் திரும்பக்கொண்டு வந்து வச்சுக்கிட்டே இருந்தாள். இங்கெல்லாம் எல்லா இடங்களிலும் சில்ரன்ஸ் ப்ளே ஏரியான்னு நிறைய பொம்மைகளையும் புத்தகங்களையும் போட்டு வச்சுருப்பாங்க . அதையெல்லாம் வாரி வாரிக் கடாசுனதுதான் பேஜார்.

        அந்தத் தாய் கொஞ்சம் கவனிச்சு இருக்கலாம். அதையெல்லாம் அனுபவிச்சுக்கிட்டு இடத்தைவிட்டு நகராமல் இருந்தாங்க. அக்காதான் ஓடியோடி சேவை செஞ்சுக்கிட்டு இருந்தாள். அக்கா என்னும் அற்புதஜீவன்:-)

    1. வாங்க சுரேஷ் பாபு!
      வருகைக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  3. த்ரிஷாவான அந்த தெரேசா, அவர்கள் வீட்டில் போய் அந்த சிறுமிகளிடம் வாங்கிக் கொள்ளப் போகும் கிண்டலை கற்பனை செய்து பார்த்தேன். சிரித்து விட்டேன். Flash இல்லாமல் போனில் பேசுவது போல, அந்த சிறுமிகளின் கள்ளம் கபடமற்ற சிரிப்புகளை படம் எடுத்து இருக்கலாம்.

    தங்களது வலைத்தளம் நுழையும் வெற்றிகரமான நான்காவது ஆண்டினுக்கும், தங்களது மகிழ்ச்சியான 500 ஆவது பதிவினுக்கும் எனது வாழ்த்துக்கள்.

    1. வாங்க இளங்கோ ஸார்!
      என்னவோ அவர்களை ரசித்தேனே தவிர புகைப்படம் எடுக்கத் தோணவில்லை.
      வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  4. ஹஹஹாஹஹஹ்ஹ்! த்ரிஷா செம!!…நல்ல நகைச்சுவைப் பதிவு சகோதரி! குமுதா அம்மா…அஹஹஹஹஹ்ஹ

    இதே போன்று கோமளா என்பது பலசமயங்களில் கோமளம் என்றாகி பின்னர் கோமணம் ஆன கதையும் உண்டு! ஹஹஹ்

    மிகவும் ரசித்தோம். 500 வது பதிவிற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்! தாங்கள் மேன்மேலும் எழுதி எங்களை எல்லாம் மகிழ்விக்க வாழ்த்துக்கள்!

    1. வாங்க துளசிதரன்!

      வருகைக்கும், ரசிப்பிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  5. தெரேசா த்ரிஷா ஆனது ஜாலிதான்!

    மதுரையில் ஹோமியோபதி மருத்துவர் (அவர் அலோபதி சர்ஜனும் கூட) கிளினிக் செல்லும்போது இதேபோல அங்கே வேலை செய்யும் பெண் பெயர்களை உச்சரிப்பது வேடிக்கையாக இருக்கும். ஸ்டைல் என்று நினைத்து பெயர்களைக் கொலை செய்வார். மதுரை டி என் சேஷகோபாலன் கூட அங்கு வந்து அமைதியாக உட்கார்ந்திருப்பார்.

    உங்கள் பதிவுகளில் இவ்வளவு லேபில் வார்த்தைகளைப் போடமுடிகிறதே… எங்களுக்கு சில வார்த்தைகள் போட்டதுமே எச்சரிக்கை விடுக்கிறது!

    500 வது பதிவுக்கு வாழ்த்துகள்.

    1. வாங்க ஸ்ரீராம்!
      வேர்ட்ப்ரஸ் இல் லேபில் நிறையப் போடலாம். நான் போட்டிருப்பது ரொம்பவும் கொஞ்சம். வாங்கோ, வாங்கோ! வேர்ட்ப்ரஸ் -க்கு மாறிடுங்கோ!
      என்னை எல்லோரும் ப்ளாக்ஸ்பாட்டுக்கு மாறச் சொல்லுகிறார்கள். நான்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  6. கும்மா, அல்லது குமும்மா… ஹா ஹாஹா…

    நான்காவது வருடத்தில் அடியெடுத்து வைப்பதற்கும் ஐநூறாவது பதிவுக்கும் வாழ்த்துக்கள் அம்மா….

    1. வாங்க ஸ்கூல் பையன்!
      த்ரிஷா உங்களை இங்கு வரவழைத்துவிட்டாரா?
      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  7. வணக்கம்
    அம்மா

    தகவலை பார்த்தவுடன் மனதில் புத்துணர்வு பூத்தது…நான்கவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை இட்டு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த 3 வருடத்தில் யாவருக்கும் பயன் பெறும் விதத்தில் தங்களின் ஒவ்வொரு படைப்பும் மிக நேர்த்தியாக அமைந்துள்ளது…
    வயது கடந்தாலும் படிப்பதற்கும் எழுதுவதற்கும் வயது ஒரு தட அல்ல என்பதை நான் உணர்வேன். தங்களின் கை வண்ணத்தில் எழுதிய புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆசைதான் இருந்தாலும் கிடைக்க வில்லை….
    500 பதிவுகள் போதாது வரும் காலங்களில் 5000 பதிவாக மலர வேண்டும் அம்மா.. தங்களின் ஒவ்வொரு படைப்புக்களையும் இரசித்துபடிக்கும்… நான் ஒரு வாசகன்..நான்..

    இரவும் பகலும் வாழ்வில் போராட
    இரக்கம் உள்ள மனதில்
    இறைவன் குடிகொள்ள
    ஏற்றம் காண்பாய் எழுத்துலகில்
    ஏழ்மை வாழ்வில் விடியல் பிறக்க
    என்றும் படைப்பாய் நற்கருத்தை
    நாமும் படித்து மகிழ்ந்திடுவோம்

    வாழ்த்துக்கள்…அம்மா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    1. வாங்க ரூபன்!
      உங்களை நேரில் பார்க்கும்போது நானே என் புத்தகங்களை உங்களுக்குத் தருகிறேன். அழகான கவிதையுடன் வாழ்த்திய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி!

    1. வாங்க தனபாலன்!
      வருகைக்கும், ரசித்ததற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  8. மூன்று ஆண்டுகள்…ஐநூறு பதிவுகள்…அப்பா நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது மேடம். மகிழ்ச்சி மகிழ்ச்சி… அந்த குமுதா காமெடியையும் நீங்களே சொல்லி விடுங்களேன்.

    1. வாங்க ஆறுமுகம்!
      இன்னும் நிறைய எழுதியிருக்கிறேன். வேறு தளங்களில் அவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை. கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறேன்.
      நிச்சயம் அடுத்த பதிவில் குமுதா காமெடியை சொல்லிவிடுகிறேன்.
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  9. நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைத்தமைக்கும், சிறப்பான ஐநூறு பதிவுகளை எழுதியதற்கும் முதலில் ஒரு பூங்கொத்து….. மேலும் பல பதிவுகள் எழுத வாழ்த்துகள்…..

    பெயர்க் குழப்பம் ரசிக்க வைத்தது!

  10. ரஞ்சனி அம்மா முதலில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் 🙂 தெரசா த்ரிஷா ஆன கதை சூப்பர் காமெடி! குமுதாவை குமுதம் ஆக்கிடாங்களா ??

    1. வாங்க மஹா!
      வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
      அடுத்த பதிவில் சொல்லிவிடுகிறேன். அதுவரை பொறுத்தருளுக!

  11. நான்காம் வயதில் அடி எடுத்து வைத்திருக்கும் உங்கள் தளத்திற்கு வாழ்த்துக்கள்
    500 வது பதிவுக்கு பாராட்டுக்கள். அந்த குமுதா அம்மா வை அந்த நர்ஸ் எப்படி கூப்பிட்டாள் சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை எனக்கு உடனே எழுதுங்கள் நகைச்சுவை நடை வெகு பிரமாதம் ரஞ்சனி

    1. வாங்க விஜயா!
      அடுத்த பதிவில் (முடிந்தால் இன்றைக்கே) சொல்லிவிடுகிறேன்.
      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  12. ஓடியே போய்விட்டதா மூன்று வருஷம். இனி பிடிக்கமுடியாத ஓட்டமாக ஓடவேண்டியதுதான் . எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா? அளவிடமுடியாது. வாழ்த்துகள். அட ஐனூராவது பதிவா? பெரும் வெற்றிதான். உங்கள் நகைச்சுவை
    திரும்பத்திரும்ப நினைத்து மனதில் சிரிப்பை ஏற்படுத்துகிறது. அழுதாம்மா என்று குமுதம்மாவை மாற்றி விட்டார்களா? எவ்வளவோ நிகழ்ச்சிகள் பார்த்தாலும்
    ரஸிக்கும்படியான மஸாலாவைக் கலந்து சுவைபடக் கொடுத்திருப்பது அழகு.
    நடை,விஷயம், எல்லாமே ரஞ்ஜனிஸ்டைல். ரஸித்தேன். சிரித்தேன். பாராட்டினேன்.அன்புடன்

    1. வாங்கோ காமாக்ஷிமா!
      என் எழுத்து ஸ்டைலை மிஞ்சுகிறது உங்கள் கருத்துரை ஸ்டைல்!
      உங்கள் சந்தோஷத்தை உங்கள் வார்த்தைகள் அப்படியே பிரதிபலிக்கின்றன.
      சந்தோஷமான கருத்துரைக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி!

  13. 500-ஆவது பதிவுக்கு என் வாழ்த்துகள்.இந்த பதிவும் வழக்கம்போல நல்ல
    நகைச்சுவையாக படிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தொடருங்கள். பாராட்டுகள்.

  14. ஐநூறாவது பதிவிற்கும் வலைத்தளத்தின் நான்காம் ஆண்டு துவக்கத்திற்கும் என் அன்பு வாழ்த்துக்கள்!!

  15. ஐநூறாவது பதிவிற்கு நான்காம் ஆண்டிற்கும் இனிய வாழ்த்துக்கள். நல்ல நகைச்சுவைப் பதிவு.

  16. மூன்று வருடத்தில் 500 பதிவு!அசத்தல். வாழ்த்துக்கள்
    நர்சுகளுக்கே தெரசா நினைவுக்கு வரவில்லை

    1. வாங்க முரளி!
      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி! உண்மைதான் நர்சுகளுக்கே தெரசா நினைவுக்கு வரவில்லை!

    1. வாங்க வல்லி!
      வருகைக்கும், உங்கள் ஆசிகளுக்கும் மனமார்ந்த நன்றி.

  17. ஐநூறாவது பதிவுக்கும் நான்காம் ஆண்டு தொடங்கியதுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகள். எனக்கு இது பத்தாம் ஆண்டு தொடங்கியுள்ளது. 🙂

    1. வாங்க கீதா!
      பத்தாண்டுகள்! அவ்வளவு நாட்கள் நான் எழுதுவேனா தெரியவில்லை. உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி!

  18. நம்ம ரங்க்ஸ் இஷ்டத்துக்கு எல்லோர் பெயரையும் மாத்துவார். அதுக்கு தெரேசா த்ரிஷா ஆனது எவ்வளவோ பரவாயில்லை. 🙂

    1. எங்க வீட்டுலேயும் அப்படித்தான். அவருக்கும் சேர்த்து நான் எல்லோர் பெயரையும் நினைவில் வைத்திருக்க வேண்டும்! அதனால் என் ஞாபக சக்தி ஷார்ப்!

Leave a comment