மஹாளயபட்ச நன்னாள் : ஒரு புதிய சிந்தனை

மஹாளயபட்ச நன்னாள் ஒரு புதிய சிந்தனை

வல்லமை இதழில் 24.9.2014 வெளியான எனது கட்டுரை

புரட்டாசி மாத அமாவாசை மஹாளய அமாவாசை எனபடுகிறது. இந்த நிறைந்த நாளே நவராத்திரியின் ஆரம்ப நாள். அதுமட்டுமில்லாமல் நமது முந்தைய தலைமுறைகளுக்கு நமது நன்றிக்கடனை நாம் செலுத்தும் நாளும் இதுவே.

 

பல மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பூமியில் மனித இனம் இருந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அந்த தலைமுறை மனிதர்கள் எல்லோருமே நமது இன்றைய வாழ்விற்கு ஏதோ தவிர்க்க முடியாத ஒன்றைக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். இன்றைக்கு நாம் பேசும் மொழி, நாம் உடுத்தும் உடை, நாம் வசிக்கும் வீடுகள், நமது நடை என்று எல்லாமே அவர்களிடமிருந்து நாம் கற்றவைதான். நாம் பெற்றவைதான், இல்லையா?

 

இந்தப் பூமியில் விலங்குகள் மட்டுமே இருந்துவந்த காலத்தில் உண்பது, உறங்குவது, இனப்பெருக்கம் இவற்றினூடே தங்களைக் கொல்லவரும் எதிரிகளிடமிருந்து தப்பிப்பது இவையே முக்கியமானவைகளாக இருந்தன. பின் மெதுமெதுவே  விலங்குகள் பரிணாமம் பெறத் தொடங்கின. அகலமாக வளர்ந்தவைகள் எழுந்து நிற்கத் தொடங்கின.  மூளை, வளர்ச்சி பெறத் தொடங்கியவுடன், பல்வேறு திறன்களும் வளரத் தொடங்கின.. ஒரு செல் பிறவியாக இருந்த உயிரினம் பல செல் பிறவியாக, மனிதனாக பரிணாமம் பெற்றது. மனித இனத்தின் மிக முக்கியமான பரிணாமம் தன்னைச்  சுற்றியிருக்கும் பொருள்களை பல்வேறு வகைகளில் அவன்  பயன்படுத்தத் தொடங்கியது தான். இந்த எளிமையான திறன் தான் பிற்காலத்திய தொழில் நுட்பங்களுக்கு அடிகோலியது. தன் கைகளை மட்டுமே நம்பியிருந்தவன் மரக்கிளைகளை ஆயுதமாகக் கொண்டு தன்னை எதிர்த்து வந்த எதிரியுடன் போரிட்டபோது நுட்பவியலின் கதவுகள் திறந்தன. தன்னைச் சுற்றியுள்ள பல பொருட்களையும் கொண்டு தன் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள ஆரம்பித்தான் மனிதன். இதுவே மனித இனத்தின் நீடித்த வாழ்வின் ஆரம்பம் எனலாம்.

 

விலங்குகளைப் போல இருந்த மனிதன் மெதுமெதுவே தன் வாழ்வை செப்பனிட்டுக் கொள்ள ஆரம்பித்தான். இதனால் விலங்குகளைவிட சிறந்த வாழ்வு அவனுக்குக் கிடைத்தது. தனக்கென தங்குமிடம் வேண்டுமென விரும்பியதால் கட்டிடங்கள் வர ஆரம்பித்தன. கட்டடக்கலை இப்போது வானுயர வளர்ந்திருப்பதற்கு என்றோ பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் யாரோ ஒருவரின் மனதில் தோன்றிய ‘தனக்கென ஒரு இடம் வேண்டும்’ என்ற எண்ணம். குளிர், வெயில், மழை இவற்றிலிருந்து உடலை காக்க விரும்பியதால் உடைகள் வடிவமைக்கப்பட்டன. இந்த உலகத்தில் மனிதனாலேயே பலவும் நிகழ்த்தப்பட்டன. இரண்டு கற்கள் உரசும்போது ஏற்பட்ட தீப்பொறியால்  அதுவரை பச்சையாகத் தின்னப்பட்ட உணவு சமைக்கப்பட்ட உணவானது. காலங்கள் செல்லச்செல்ல சமைக்காத உணவை பதப்படுத்தவும், சமைத்த உணவை பாதுகாக்கவும் மனிதன் கற்றான். அதுவே இப்போது நமக்குக் கிடைக்கும் தயார் நிலை உணவிற்கு முன்னோடி.

 

‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்’

 

கண்டுபிடிப்புகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன; அவைகள் ஒவ்வொரு தலைமுறையிலும் நவீனப்படுத்தப்பட்டன; மேம்படுத்தப்பட்டன.  இன்னும் மேம்படுத்தலுக்கு இடமும் அளித்தன. என்னைபோல தையல் கலையை அறியாத தையல்களும் இன்று தைத்த உடைகளை அணிவதற்கு எப்போதோ ஒரு தலைமுறையில் தைத்து உடுத்த வேண்டும் என்ற உந்துதலுடன் பிறந்த ஒரு மனிதனோ மனுஷியோ தானே காரணம். தான் தைத்து உடை உடுத்தியதுடன் தையற்காரர் என்ற ஒரு தலைமுறையையும் உருவாக்கிய தலைமுறைக்கு நாம் எல்லோருமே கடன்பட்டிருக்கிறோமே! தயார் நிலை ஆடைகளை தைக்கும் தொழிற்சாலை நடத்தும் வியாபாரிகளும், அங்கு தைக்கும் பெண்களும், அவற்றை விற்கும் கடைக்காரர்களும் யாரோ ஒரு புண்ணியவானுக்கு / புண்ணியவதிக்கு பட்ட கடனை எப்படி அடைக்கப் போகிறார்கள்!

 

 

சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதால் அல்லவா இன்று போக்குவரத்து நெருக்கடியில் நாம் சிக்கித் தவிப்பது தினசரி நடவடிக்கை ஆகிவிட்டது! எண்களில் ஜீரோவைக் கண்டுபிடித்து எண்ணற்ற கணித மேதைகளை உருவாக்கியிருக்கிறார்கள், நம் முன்னோர்கள். என்னைப் போன்ற கணித வெறுப்பாளர்களையும் உருவாக்கியதும் அவர்களே. மருத்துவ உலகில் எத்தனை எத்தனை அரிய கண்டுபிடிப்புகள்! நமது வாழ்நாளின் அளவு நீண்டிருப்பதற்கு எத்தனையெத்தனை முன்னோர்கள் காரணம்!

 

இன்றைக்கும் பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன; நமக்கும் வருங்கால சந்ததியினருக்கும் இவை நிச்சயம் பயன்படும். ஆனால் இன்று நிலைமை மாறியிருக்கிறது. நம்மிடையே யாருக்கு என்ன நேர்ந்தால் நமக்கென்ன என்று ஒரு அலட்சியம். இருக்கும் வளத்தையெல்லாம் நாமே பயன்படுத்திக் கொண்டுவிடவேண்டும் என்ற ஒரு சுயநலம் பிறந்துள்ளது.

 

‘உலகம் பிறந்தது எனக்காக

ஓடும் நதிகளும் எனக்காக

மலர்கள் மலர்வது எனக்காக

அன்னை மடியை விரித்தாள் எனக்காக’

 

எல்லா இயற்கை வளங்களும் நமக்காகவே இறைவனால் படைக்கப்பட்டன என்பது உண்மை.  ஆனால் நாம் அவற்றைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். நதி நீர் மாசு படிந்துவிட்டது; காற்று அசுத்தமாகிவிட்டது; பல நதிகள் இருந்த இடமே தெரியாமல் வறண்டு போய்விட்டன. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நீர் வேண்டாமா? நமது பேரக்குழந்தைகள், அவர்களது பேரக்குழந்தைகள் நல்ல நீர் குடிக்க வேண்டாமா? நல்ல காற்றை சுவாசிக்க வேண்டாமா? ‘இருக்கும் நல்லவற்றையெல்லாம் நீங்கள் அனுபவித்து விட்டீர்கள். எங்களுக்கு அழுக்கு நீரையும் அசுத்தக் காற்றையும் விட்டுவிட்டுச் செல்லுகிறீர்களே’ என்று நம் இளைய தலைமுறைகள் கேட்கும் முன் விழித்துக் கொள்வோம்.

 

நாம் நமது முந்தைய தலைமுறைகளுக்கு நன்றி சொல்லும் இந்த மஹாளய பட்ச தினத்தில் நம் வருங்கால சந்ததியினரையும் மனதில் கொள்வோம். அவர்களது நலன்களையும் பாதுகாக்க உறுதி பூணுவோம். அவர்களும் நாளை இன்று நாம் செய்வதுபோல நமக்கு நன்றிக் கடன் செலுத்துவார்கள் முழு மனதுடன்.

 

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் – ஆன்மாவை வருடிய அமர சங்கீதம்!

 

வெப்துனியாவில் 20.9.2014 அன்று  வெளியான அஞ்சலி கட்டுரை

 

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் தனது 9ஆவது வயதில் மேடை ஏறியவர். கர்நாடக இசைக் கலைஞர் யாருமே அதுவரை இசைக்க முயலாத ஒரு மேற்கத்திய இசைக் கருவியைச் சின்னஞ்சிறு வயதிலேயே மேதையைப் போல இசைத்தவர்.

மாண்டலின் என்னும் இந்த மேற்கத்திய இசைக் கருவிக்குத் தவில் வாத்தியத்தைப் பக்க வாத்தியமாகக் கொண்டு கர்நாடக இசை கச்சேரி செய்து, ரசிகர்களை அசத்தியவர். 11 வயதில் தமிழக அரசின் ஆஸ்தான வித்துவான் ஆனவர். பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

 

 

இத்தனை சிறப்புகள் இருந்த மாண்டலின் ஸ்ரீநிவாஸிற்கு ஆயுள் இல்லாமல் போனது அவரது ரசிகர்களை மீளாத துக்கத்தில் ஆழ்த்திவிட்டது. மாண்டலின் என்றால் ஸ்ரீநிவாஸ், ஸ்ரீநிவாஸ் என்றால் மாண்டலின் என்று இசைப் பயணம் செய்து வந்த ஸ்ரீனிவாஸின் இவ்வுலகப் பயணம் 2014 செப்டம்பர் 19 அன்றுடன் முடிந்தது.
மேடையில் மாண்டலின் இசைக்கும்போது இவரது முகத்தில் இருக்கும் புன்னகை எவரையும் கவரும். இசையின் இன்பம், அந்தப் புன்னகை மூலம் ரசிகர்களுக்கும் பரவும். சின்னஞ்சிறுவனாக மாண்டலின் இசைக்க ஆரம்பித்த காலத்திலிருந்து இந்தப் புன்னகை அவருடனேயே இருந்தது.”இசை ஒரு, தெய்வீகப் பரிசு. எதை வாசித்தாலும் அது கேட்பவர்களின் ஆன்மாவைத் தொட வேண்டும். அது எப்படி சாத்தியம்? நீங்கள் அனுபவித்து வாசித்தால், கேட்பவர்களும் அவ்வாறே அனுபவிப்பார்கள்” என்று மாண்டலின் ஸ்ரீநிவாஸ் ஒரு முறை கூறினார். அவர் கூறியதற்கு ஏற்ப, அனுபவித்து வாசித்து, கேட்பவர்களின் ஆன்மாவை வருடிய அமர சங்கீதக் கலைஞர், மாண்டலின் ஸ்ரீநிவாஸ்.

சிறுவயதில் தம் தந்தையின் மாண்டலின் மீது ஏற்பட்ட தீராத ஆர்வம், இவர் ஒரு இசை மேதையாக மலர உதவியது. இவரது குரு ருத்ரராஜூ சுப்புராஜு, ஒரு வாய்ப்பாட்டுக் கலைஞர். அவருக்கு மாண்டலின் இசைக்கத் தெரியாது. அவர் வாயால் பாடுவதைக் கேட்டு மாண்டலினில் வாசிப்பார் ஸ்ரீநிவாஸ். கடினமான பிருகாக்களையும் கமகங்களையும் அனாயாசமாக அந்தக் கருவியில் கொண்டுவருவார்.
எல்லோரிடத்திலும் மரியாதையாகவும் பணிவுடனும் நடந்துகொள்ளுவார். ஆரம்ப காலத்தில் மேற்கத்திய இசைக் கருவியான மாண்டலினைக் கர்நாடக இசை வாசிக்கப் பயன்படுத்தியபோது நிறைய எதிர்மறை விமரிசனங்கள் எழுந்தன. அவர் வாசிப்பது கர்நாடக இசையே இல்லை என்று கூட கேலி செய்தனர். தமது அபாரமான வாசிப்பால் அத்தனை வாய்களையும் மூட வைத்தார்.
இசையுலகில் வெற்றிக் கொடி நாட்டிய ஸ்ரீனிவாஸின் சொந்த வாழ்க்கை, அத்தனை சந்தோஷமானதாக அமையவில்லை. இவரது மனைவி ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓர் ஐஏஎஸ் அதிகாரியின் பெண். தன்னை மிகவும் கொடுமைப்படுத்தியதாக கூறி மனைவி யுவஸ்ரீ மீது இவர் போட்ட வழக்கு, இவருக்கு 2012இல் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுத் தந்தது. இவர்களது ஒரே மகன் சாய்கிருஷ்ணா இப்போது அம்மாவுடன் இருக்கிறார். புட்டபர்த்தி சாய்பாபாவின் பக்தரான இவர், 2011இல் சாய்பாபா இறந்தது முதல் மிகுந்த துயரத்திலும் மன அழுத்தத்திலும் இருந்ததாகத் தெரிகிறது.
கர்நாடக சங்கீதம் மட்டுமில்லாமல் இணைவு இசையிலும் (fusion music) ஆர்வம் கொண்டிருந்தார் ஸ்ரீநிவாஸ். இந்தியாவில் ஜாகிர் உசேன், ஷங்கர் மகாதேவன் ஆகியோருடனும், வெளிநாட்டுக் கலைஞர்கள் பலருடனும் சேர்ந்து ஃப்யுஷன் இசையை வாசித்தவர்.
இந்த இளம் கலைஞனுக்கு நமது அஞ்சலிகள்.

ஸ்காட்லாந்து தனி நாடாகுமா?

ஸ்காட்லாந்து தனி நாடாகுமா?

இன்று 18.9.2014 ஸ்காட்லாந்து மக்கள் ஒரு மிகப்பெரிய முடிவை எடுக்கப்போகிறார்கள். இங்கிலாந்திலிருந்து பிரிந்து ஸ்காட்லாந்து தனி சுதந்திர நாடாக இருக்க விழைகிறதா? அல்லது இங்கிலாந்துடன் இணைந்து இருக்கவே விரும்புகிறதா? இதைப்பற்றி வாக்கெடுப்பு இன்று அங்கு நடைபெற இருக்கிறது.

 

இத்தனை வருடங்களாக இல்லாமல் ஏன் இப்போது இந்த விஷயம் தலை தூக்கியிருக்கிறது?

 

1999 ஆம் ஆண்டு சில அதிகாரங்களை ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு ஐயர்லாந்திற்கு மாற்றியது லண்டன் தலைமை. இதற்கு அடுத்த அடியாக ஸ்காட்லாந்து பாராளுகன்றம் 2009 இல் சுதந்திரம் வேண்டுமென்ற கருத்தை முன் வைத்தது. இரண்டு வருடங்களுக்கு முன் இங்கிலாந்தின் பிரதம மநிதிரி திரு டேவிட் காமெரூன் பொதுஜன வாக்கெடுப்பிற்கு சம்மதம் கொடுத்தார். ஏனெனில் அப்போது சுதந்திரம் வேண்டுமென்ற குரல் சற்று பலவீனமாகவே ஒலித்தது.

 

ஸ்காட்லாந்து சுதந்திர நாடானால் இங்கிலாந்து தன்னுடைய நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கையும், தனது ஜனத் தொகையில் எட்டு சதவிகிதத்தையும் இழக்கும். சுதந்திர ஸ்காட்லாந்து ஆதரவாளர்கள் தங்கள் விவகாரங்களில் நேரடி கட்டுப்பாடுகளைப் பெற விரும்புகிறார்கள். மேலும் இவர்கள் இடது சாரிகள். இங்கிலாந்தின் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் கொள்கைகளில் இவர்களுக்கு சம்மதம் இல்லாமல் இருக்கிறது. ஸ்காட்டிஷ் நேஷனல் கட்சி தலைவர் அலெக்ஸ் சால்மோன்ட் ‘சுதந்திர ஸ்காட்லாந்து உலகின் 20 செல்வ செழிப்பு மிக்க நாடுகளில் ஒன்றாக இருக்கும்’ என்கிறார். ‘ ‘இந்த அரிய வாய்ப்பினை கை நழுவ விட வேண்டாம்; நம்மால் முடியாது என்று அவர்கள் சொல்லவேண்டாம். நாம் எல்லோரும் சேர்ந்து செய்வோம். வெள்ளிக்கிழமை காலை ஒரு புதிய, சிறந்த, சுதந்திர நாட்டில் கண் விழிப்போம், வாருங்கள்’ என்று அறைகூவல் விடுக்கிறார்.

 

 

இங்கிலாந்துடன் சேர்ந்த ஸ்காட்லாந்து இருக்க வேண்டும் என்று சொல்பவர்களின் கருத்துக்கள் என்ன?

ஐக்கிய அரசுடன் கூட இருப்பதால் உலகின் நிகழ்வுகளில் ஸ்காட்லாந்தின் குரல் எடுபடும். அதிக வேலைவாய்ப்புகள், அதிகப் பணப் புழக்கம் இவை லாபங்கள். கூடுதலாக இங்கிலாந்தின் பவுண்ட் நாணயம் இவர்களுக்கும் கிடைக்கும். 3 நூற்றாண்டுகளாக இருந்து வந்த பழமை வாய்ந்த உறவு நீடிக்கும்.

 

வாக்கெடுப்பிற்கு முந்தைய நாளான புதன் அன்று நடந்த கருத்துக் கணிப்பில் இங்கிலாந்துடன் சேர்ந்து இருக்க விரும்புபவர்கள் எண்ணிக்கை 52 சதவிகிதமாகவும், சுதந்திரம் வேண்டும் என்பவர்கள் எண்ணிக்கை 48 சதவிகிதமாகவும் இருந்தது. எது வேண்டும் என்று தீர்மானிக்கமுடியாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை 8-14 சதவிகிதம் அதாவது 4.3 மில்லியன் வாக்காளர்கள்.

 

வியாழக்கிழமை அன்று எடுக்கும் வாக்கெடுப்பில் சுதந்திரம் வேண்டும் என்று சொல்பவர்களின் எண்ணிக்கை அதிகமானால் 307 வருட இங்கிலாந்து நாட்டுடன் ஆன பந்தம் விலகும்; அதுமட்டுமில்லாமல் இத்தனை நாட்கள் ஐக்கிய அரசாக இருந்த இங்கிலாந்து  இரண்டாக உடையும். பொருளாதார நெருக்கடியும் ஏற்படக்கூடும்.

 

இங்கிலாந்து நாட்டு அரசியல் தலைவர்கள் ஸ்காட்லாந்து ஐக்கிய அரசில் நீடிக்கும் பட்சத்தில் அதற்கு அதிக தன்னாட்சி அதிகாரங்கள் கொடுப்பதாக கூறுகிறார்கள். ஆனால் சுதந்திர ஸ்காட்லாந்து வேண்டுபவர்கள், லண்டன் உயர் மக்களின் ஆட்சி வேண்டாம் நாங்களே எங்கள் முடிவுகளை எடுத்துக் கொள்வோம் என்கிறார்கள்.

 

இங்கிலாந்து பிரதம மந்திரி காமெரூன் கூறுகிறார்: ‘நாம் ஒரு குடியரசில் இருக்கிறோம். வாக்கெடுப்பு மூலம் தங்கள் கருத்துக்களை கூறும் மக்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும்’. சென்ற இரண்டு வாரங்களில் இவர் இரு முறை ஸ்காட்லாந்து போய் வந்தார். ஆனால் அங்கு அவருக்கு அத்தனை நல்ல பெயர் இல்லை. ஒரு மேல்தட்டு ஆங்கிலேயர் என்றே அவர் கருதப்படுகிறார்.

 

உலகத்தின் நிலை:

ஸ்காட்லாந்து, தொடர்ந்து இங்கிலாந்து நாட்டுடன் சேர்ந்த்திருப்பதையே விரும்பும் என்று உலகின் மற்றைய நாடுகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. வல்லரசுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் இங்கிலாந்து உடையக் கூடாது என்றே பிரார்த்தனை செய்கின்றன. நாடுகள் உடைவதற்கு இங்கிலாந்து ஒரு மோசமான உதாரணமாக இருந்துவிடக்கூடாது என்று இந்நாடுகள் எதிர்பார்க்கின்றன.

 

சில பொதுக்கருத்துகள்:

 • சுதந்திர ஸ்காட்லாந்தின் நாணயம் என்னாவாக இருக்கும்? இங்கிலாந்தின் பவுண்ட் தொடருமா? அல்லது ஐரோப்பாவின் யூரோவை தேர்ந்தெடுக்குமா? பவுண்ட் தொடர்வதுதான் இரு நாடுகளுக்கும் நல்லது. இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய சந்தை ஸ்காட்லாந்து. பவுண்ட் பறிக்கப்பட்டால் இந்த சந்தை குலையும்.
 • மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.8% உயரும். ஸ்காட்லாந்து நிச்சயம் சிறப்பாக முன்னேறும்.
 • 1970 ஆம் ஆண்டிலிருந்து வடக்கு கடலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூலம் 300 பில்லியன் ஸ்டெர்லிங் வரி வருமானம் வந்து கொண்டிருக்கிறது. இனி இந்த தொகை ஸ்காட்லாந்திற்கு கிடைக்கும்.
 • அடுத்த 15 வருடங்களில் ஸ்காட்லாந்தின் முன்னேற்றம் நிச்சயம்.
 • 2012 ஆம் ஆண்டு ஒவ்வொரு ஸ்காட்லாந்து குடிமகனும் 10,700 ஸ்டெர்லிங் இங்கிலாந்து கருவூலத்திற்குக் கொடுக்க வேண்டியிருந்தது. மொத்த இங்கிலாந்திலும் இது 9,000 பவுண்டுகள் தான். தேசியவாதிகள் விமான பயணக் கட்டணத்தையும், நிறுவன வரிகளையும் குறைப்பதாகக் கூறுகிறார்கள்.

 

ஐக்கிய அரசுடன் இருப்பதால் என்ன நன்மை?

 • பவுண்ட் நாணயம் ஸ்காட்லாந்துடன் இருக்கும். வேறு என்ன நாணயம் பயன்படுத்துவது என்ற குழப்பம் இருக்காது.
 • 2008 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் வங்கிகள் மூழ்கும் நிலைக்கு வந்தபோது கைகொடுத்து உதவியது இங்கிலாந்துதான். இங்கிலாந்துடன் கூட சேர்ந்து இருப்பது, எல்லைப் பிரச்னை இல்லாமல் வங்கிகளுக்கு எல்லா மக்களையும் சென்றடைய உதவும்.
 • எண்ணெய்வளம் அளவிற்கு அதிகமாக பேசப்படுகிறது. நாம் நினைக்கும் அளவிற்கு வருமானம் தராது. கடந்த 21 வருடங்களில் 20 வருடங்களாகப் பற்றாக்குறைதான்.
 • ஜனத்தொகையில் வயதானவர்கள் அதிகம் உள்ள நாடு. உயர்ந்த கடன் செலவுகள், சரியும் எண்ணெய் வருமானம் இவற்றைப் பார்க்கும்போது இங்கிலாந்துடன் சேர்ந்திருப்பதே உத்தமம். பிரிவதால் ஒவ்வொரு ஸ்காட்லாந்துக்காரர் தலையிலும் 1,400 ஸ்டெர்லிங் கடன் ஏறும்.
 • அடிப்படை வரி 1000 ஸ்டெர்லிங் உயரும். வாக்கெடுப்பு எப்படி இருந்தாலும் வரியைக் குறைப்பதாக இங்கிலாந்து அரசு கூறியிருக்கிறது.

 

ஸ்காட்லாந்து பிரியுமா பிரியாதா என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நவீன உலகத்திற்கு ஸ்காட்லாந்தின் கொடை என்னவென்று பார்ப்போமா?

 

ஸ்காட்லாந்து பிரிந்து தனிநாடானால் பல கண்டுபிடிப்புகளுக்கு மார்தட்டிக் கொள்ளலாம். கோல்ஃப் – இலிருந்து தொலைக்காட்சி வரை, டாலி ஆட்டுக்குட்டி முதல் கிராண்ட் தெப்ஃட் ஆட்டோ என்ற விடீயோ கேம் வரை பல கண்டுபிடிப்புகள் இங்கு நிகழ்ந்துள்ளன. நவீன உலகின் வாழ்க்கையை மேம்படுத்தும் பல கண்டுபிடிப்புகள் அறுவை சிகிச்சையின் போது கொடுக்கப்படும் மயக்க மருந்து, பெனிசிலின் ஊசி, தொலைபேசி, நவீன கழிப்பறைகள் என்று பட்டியல் நீளுகிறது.

 

 • நகல் இயந்திரம் – ஜேம்ஸ் வாட்டால் ஜெராக்ஸ் இயந்திரத்தின் ஆரம்பகால பதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
 • ஜேம்ஸ் சால்மேர்ஸ் என்ற புத்தக வியாபாரியால் பசையுடன் கூடிய தபால் தலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
 • அலெக்ஸ்சாண்டர் க்யும்மிங் – நவீன ஃப்ளஷ் கழிப்பறையின் காப்புரிமையைப் பெற்றவர்.
 • தொழிற்புரட்சிக்கு வித்திட்ட நீராவி என்ஜின் ஜேம்ஸ் வாட்டால் கண்டுபிடிக்கப்பட்டது.
 • ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் ஜேம்ஸ் யங் சிம்சன் மயக்க மருந்தைக் கண்டுபிடித்தார்.
 • தோலினுள் போடப்படும் ஊசியை அலெக்ஸ்சாண்டர் வுட் என்ற மருத்துவர் கண்டுபிடித்தார்.
 • அலெக்ஸ்சாண்டர் ஃப்ளெமிங் – பெனிசிலின் கண்டுபிடித்தார்.
 • ஜான் லோகி பார்ட் தொலைக்காட்சியை கண்டுபிடித்தார்.
 • தொலைபேசியின் காப்புரிமையை அலெக்ஸ்சாண்டர் பெல் பெற்றுக் கொண்டார்.
 • உலகின் முதல் க்ளோனிங் செய்யப்பட்ட டாலி என்னும் ஆடு எடின்பர்க்கின் ரோஸ்லின் இன்ஸ்டிடியூட் – இல் 1996 ஆண்டு உருவாக்கப்பட்டது.
 • இருசக்கர சைக்கிளுக்கு பெடல் வடிவமைத்தவர் கிர்க்பாட்ரிக் மாக்மில்லன் என்ற இரும்புக் கொல்லர். இது நடந்தது 1830 ஆம் ஆண்டு.
 • கிராண்ட் தெப்ஃட் ஆட்டோ என்ற விடீயோ கேம் எடின்பர்க்கின் ராக்ஸ்டார் நார்த் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.

 

இந்தியாவிலிருக்கும் ஸ்காட்லாந்துக்காரர்களும் இதில் இரு வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள்.

 

 

‘ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற எல்லாத் தகுதிகளையும் கொண்டது. செழிப்பான பொருளாதாரத் திறன், இயற்கை வளங்கள், உள்கட்டமைப்புகள் கல்வி, செழிப்பான கலாச்சாரம், வளர்ந்து வரும் சுற்றுலாத்துறை, ஆரோக்கியத்துறை, ஆரோக்கியமான ஜனத்தொகை, ஆரோக்கியமான சமூக வாழ்வு என்று எல்லாவிதத்திலும் ஸ்காட்லாந்து உலகின் எந்த நாட்டிற்கும் குறைந்தது இல்லை. அதனால் இங்கிலாந்திலிருந்து பிரிவதே சரி’ என்று சிலர் கருத்து சொன்னாலும் வேறு சிலர் வித்தியாசமான கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.

 

‘பவுண்ட் என்ற நாணயத்தின் சக்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது இல்லாமல் ஸ்காட்லாந்தால் தாக்குப் பிடிக்க முடியாது. தனி நாடு என்றால் தனியாக பாஸ்போர்ட், வேண்டும். ஐரோப்பிய ஐக்கியத்திர்லிருந்து பிரிவது ஸ்காட்லாந்து போன்ற சின்ன நாட்டிற்கு மிகவும் கடினம்’ என்று சொல்லுகிறார்கள்.

 

இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும் ஸ்காட்லாந்து தனி சுதந்திர நாடா, அல்லது இங்கிலாந்தின் ஒரு பகுதியா என்று. காத்திருந்து பார்ப்போம்.

 

Published on 18.9.2014 in 4tamilmedia.com

 

 

 

 

2 மணி நேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்குப் பறந்த இதயம்!

பெங்களூரிலிருந்து இதயம் சென்னைக்குப் பறந்தது!

வெப்துனியாவில் 17.9.2014 அன்று வெளியான எனது கட்டுரை

 

‘நிஜவாழ்க்கையில் நடப்பதைத்தான் நாங்கள் எங்கள் படங்களில் சொல்கிறோம்’ என்பார்கள் திரைப்பட இயக்குனர்கள். முதல் முறையாக திரைப்படத்தில் காட்டிய விஷயம் ஒன்று நிஜமாக நிகழ்ந்திருக்கிறது.

 

‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் காட்டியது போல உறுப்பு தானம் மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை ஒன்று பரபரப்பாக நிகழ்ந்து முடிந்திருக்கிறது. உறுப்பு தானமாகப் பெறப்பட்டது பெங்களூரில். அதை இன்னொருவருக்குப் பொருத்தியது சென்னையில். பெங்களூரில் மூளைச்சாவு ஏற்பட்ட ஒரு பெண்மணியின் இதயம் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இன்னொருவருக்குப் பொருத்தப்பட்டிருக்கிறது. இரு மாநிலங்களிலும் உள்ள மருத்துவர்கள், போக்குவரத்து காவல் துறையினர், மிக மிகத் துல்லியமாக திட்டம் தீட்டி, பெங்களூருவிலிருந்து இதயம் ஒன்றை சென்னைக்கு கொண்டு வந்து இதய மாற்று அறுவை சிகிச்சையை செய்திருக்கிறார்கள். செப்டம்பர் 2 ஆம் தேதி விபத்து ஏற்பட்டு,  இதய மாற்று சிகிச்சை 3 ஆம் தேதி நடந்து முடிந்திருக்கிறது.

 

 

‘உடலிலிருந்து வெளியில் எடுத்த இதயத்தை நான்கு மணிநேரம் வரை குளிர்பதன சேமிப்பில் வைக்கமுடியும். ஆனால் நாங்கள் எங்களுக்கு 3 மணிநேர கெடுவை விதித்துக் கொண்டோம். கடைசியில் 2 மணி நேரத்தில் இந்த சாதனையைச் செய்துவிட்டோம்’ என்கிறார் ஃபோர்டிஸ் மலர் மருத்துவ மனையின் ஃபெசிலிட்டி இயக்குனர் திரு ஹரீஷ் மணியன்.

 

இதயத்தைக் கொடுத்தவர் யார்?

 

மூளைச்சாவிற்கு உள்ளானவர் ஒரு 32 வயது இல்லத்தரசி. இரண்டு குழந்தைகளின் தாய். இவரது கணவர் தச்சு வேலை செய்பவர். இந்தப் பெண்மணி இரு சக்கர வாகனத்தின் பின்னால் உட்கார்ந்து செல்லும்போது வாகனத்தின் டயர் வெடித்து வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். விபத்து நடந்த இடம் ஹோசூர். மிகவும் ஆபத்தான நிலையில் பெங்களூரு பிஜிஎஸ் குளோபல் மருத்துவ மனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளித்த போதும் பலனளிக்காமல் மூளைச்சாவிற்கு உள்ளானர். இது நடந்தது செப்டம்பர் 2 ஆம் தேதி செவ்வாய் அன்று. அந்தப் பெண்மணியின் குடும்பத்தாருடன் மருத்துவர்கள் உறுப்பு தானம் பற்றி எடுத்துச் சொன்னார்கள். இவரது இதயம், இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவற்றை தானமாகப் பெற சம்மதம் வாங்கப்பட்டது.

 

பெங்களூரு பிஜிஎஸ் குளோபல் மருத்துவ மனையில் இது போன்ற உறுப்பு தானத்திற்காகக் காத்திருந்தவர்களுக்கு ஒரு சிறுநீரகமும், கல்லீரலும் கொடுக்கப்பட்டன. பெங்களூருவில் இருக்கும் அப்பலோ மருத்துவமனையில்  இன்னொரு நோயாளிக்கு இரண்டாவது சிறுநீரகம் அளிக்கப்பட்டது. ஆனால் பெங்களூருவில் இதயத்திற்காக காத்திருக்கும் நோயாளிகள் யாருக்கும் இந்தப் பெண்மணியின் இதயம் பொருந்தவில்லை. அதேசமயம் சென்னையில் உள்ள நோயாளி ஒருவருக்கு இந்த  இதயம் பொருந்துவது தெரிய வந்தது..

 

இந்த மாதிரியான உறுப்பு தானங்களை பொறுப்பு எடுத்து நடத்தித்தரும் கர்நாடகத்தின் மண்டல ஒருங்கிணைப்புக் குழு இரு மாநில மருத்துவமனைகளுடன் தொடர்பு கொண்டு மேற்கொண்டு ஆக வேண்டியதை செயல்படுத்த ஆரம்பித்தது. மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆகியோர்  சேர்ந்து இதயத்தை எப்படி பாதுகாப்பாக சென்னைக்கு எடுத்துச் செல்வது என்று ஆலோசனையை ஆரம்பித்தனர்.

 

ஆம்புலன்ஸ் வண்டியின் பாதையில்:

முதல் வேலையாக மூளைச்சாவு ஏற்பட்ட பெண்மணியிடமிருந்து எடுக்கப்பட்ட இதயத்தை சென்னைக்குக் கொண்டு போகவேண்டும். பெங்களூரு பிஜிஸ் குளோபல் மருத்துவமனை இருக்கும் இராஜராஜேஸ்வரி நகரிலிருந்து பெங்களூரு கெம்பேகௌட விமான நிலையம் 55 கி.மீ. எவ்வளவு சீக்கிரம் இந்த தூரத்தைக் கடக்க முடியும்? பொதுவாக ஒன்றரை மணி முதல் இரண்டு மணி நேரம் ஆகும். ஆனால் இந்த முறை இந்த தூரத்தை 45 நிமிடத்தில் கடந்தது ஆம்புலன்ஸ் வாகனம். எப்படி?

 

டெபுடி கமிஷனர் போக்குவரத்து (வடக்கு) திரு எஸ். கிரீஷ் கூறுகிறார்.

“வழக்கம்போல காலையில் என் வேலைகளைத் தொடங்கினேன். ஆனால் அது ஒரு வித்தியாசமான நாளாக அமைய போகிறது என்று பிஜிஎஸ் குளோபல் மருத்துவ மனையிலிருந்து வந்த தொலைபேசி செய்தி கூறியது. செய்தி இதுதான்: ‘மருத்துவ மனையிலிருந்து இதயம் ஒன்று மின்னல் வேகத்தில் சென்னையை அடைய வேண்டும். இதற்கு உங்கள் உதவி தேவை.  ஆம்புலன்ஸ் வண்டி மருத்துவ மனையிலிருந்து மதியம் 1.30 மணிக்கு கிளம்ப உள்ளது’

 

‘தடைகள் – இல்லாத அதே சமயம் ஆம்புலன்ஸ் வண்டி அதிவேகமாக செல்லக்கூடிய வழியை, பாதையை தேர்ந்தெடுக்க காலை 8.30 மணிக்கு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் 50 பேர்களுடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்தேன். குறுகலான சாலைகளைத் தவிர்த்தோம். ஒரு டெபுடி கமிஷனர், ஒரு உதவி கமிஷனருடன் இணைந்து ஆம்புலன்ஸ் வண்டியின் ஓட்டத்தை எங்கள் அலுவலகத்திலிருந்தே கவனிக்க ஏற்பாடு செய்தேன். நான் தேர்ந்தெடுத்த பாதையில் மொத்தம் 30 சாலை சந்திப்புகள். ஆன்புலன்ஸ் வண்டி ஒரு இடத்தைக் கடப்பதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பே போக்குவரத்தை தடையில்லாமல் விலக்க சாலை சந்திப்புகளில் சுமார் 15 அதிகாரிகள் நிறுத்தப்பட்டனர்.  ஒவ்வொரு சந்திப்பிலும் 25க்கு மேற்பட்ட அதிகாரிகள் நிறுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் வரும் வழியை கண்காணித்தும் தொடர்ந்து அதன் ஓட்டத்தை குழுவிலிருப்பவர்களுக்கு அறிவித்துக் கொண்டும் இருந்தனர்’.

 

‘மதியம் ஒன்றரை மணிக்கு ஆம்புலன்ஸ் வண்டி மருத்துவ மனையை விட்டு கிளம்பியதும் எங்கள் வயர்லஸ் கருவிகள் உயிர் பெற்றன. ஆம்புலன்ஸ் வண்டிக்கு முன்னும் பின்னும் எங்கள் வண்டிகள் வந்து கொண்டிருந்தன. ஆம்புலன்ஸ் வண்டியில் இதயம் வைக்கப்பட்டிருந்த நீலப்பெட்டியுடன் நான்கு அறுவை சிகிச்சை மருத்துவர்களும் இருந்தனர்.

 

ஆம்புலன்ஸ் வண்டி விமான நிலையத்தை 47 நிமிடத்தில் அடைந்தது. அங்கிருந்த ஏர் இந்தியா விமானத்தில் இதயம் வைக்கப்பட்டிருந்த நீலப் பெட்டி ஏற்றப்பட்டு சென்னையை அடைந்தது. சென்னை விமான நிலையத்திலிருந்து போர்டிஸ் மருத்துவ மனையை 7 நிமிடத்தில் அடைந்திருக்கிறது ஆம்புலன்ஸ் வாகனம். பெங்களூருவில் செய்தது போலவே இங்கும் போக்குவரத்துத் துறையினர் பாராட்டத்தக்க வகையில் இந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறார்கள்.

 

முதல்முறையாக:

இரு மாநிலங்களுக்கு இடையே உறுப்பு தானம் மற்றும் இதய மாற்று சிகிச்சை என்பது இதுவே முதல்முறை. அதுவும் இப்படி பெங்களூருவில் நடப்பதும் இதுவே முதல் முறை. நோயாளிகள் ஒரு மருத்துவ மனையிலிருந்து இன்னொரு மருத்துவ மனைக்கு மாற்றப்படுவது உண்டு. ஆனால் முதல்முறையாக இதயத்தை தாங்கி வரும் ஆம்புலஸ் வாகனம் செல்வதற்கு சிக்னல்கள் – இல்லா பாதையை வடிவமைத்தார்கள், போக்குவரத்துத் துறையினர். ஆம்புலன்ஸ் வரும் நேரத்தில் மட்டுமே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு எதுவும் இருக்கவில்லை.

 

பொதுவான சில விஷயங்கள்

மூளைச்சாவு என்றால் என்ன?

மூளையில் பலமான அடிபட்டோ  அல்லது மூளையின் உள்ளே இரத்தப்போக்கோ ஏற்பட்டு மூளை செயல் இழந்து போகும் நிலையே மூளைச்சாவு. சாலை விபத்தின் போது அல்லது பக்கவாதம் ஏற்பட்டு மூளையின் உள்ளே இரத்தப்போக்கு ஏற்படும் போது இதைப்போல ஏற்படும். பலவிதமான பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னரே மூளைச்சாவு நிர்ணயிக்கப்படும். இந்தக் காலக்கட்டத்தில் ஆதரவுக் கருவிகள் மூலம் உடலின் முக்கியமான உறுப்புகள் இயங்க வைக்கப்படும்.

 

உடலிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட இதயம் எப்படிப் பாதுகாக்கப்படுகிறது?

 

வெளியே எடுக்கப்பட்ட இதயம் வெப்ப நிலையை சமமாக வைக்கும் பெட்டியினுள் உறுப்பு பாதுகாக்கும் திரவத்தில் வைக்கப்படுகிறது. பெட்டியினுள் சுற்றிலும் நிறைய பனிக்கட்டிகள் வைக்கப்பட்டு வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் கீழே இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் இதயத்தை 6 மணிநேரம் பாதுகாக்கலாம். இந்த பெட்டி மிக மிக பத்திரமாகக் கையாளப்படுகிறது.

 

தானம் செய்பவரின் குடும்பத்தை சமாதானம் செய்வது என்பது எப்போதுமே கடினமான விஷயம். அதுவும் மூளைச்சாவு என்பதைப் புரிய வைப்பது மிகமிக சிக்கலானது. அதுவும் இந்த முறை இரண்டு குழந்தைகளின் தாய், வயதில் சிறியவர் என்பதெல்லாவற்றையும் மனதில் கொண்டு அந்தக் குடும்பத்தை உறுப்பு தானத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்க வேண்டிவந்தது.

 

2014 ஆம் வருடம் கர்நாடக மண்டல ஒருங்கிணைப்புக்  குழுவினரால் செய்யப்படும் 23வது உறுப்பு தானம் இது.

 

இந்த நிகழ்வு ஆரம்பித்து நடந்து முடிய மொத்தம் 2 மணி நேரம் 27 நிமிடங்கள் ஆகியிருக்கின்றன. இந்த நேரம்  முழுவதும் தானம் செய்தவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட இதயம் விடாமல் துடித்துக் கொண்டே இருந்திருக்கிறது. தானம் கொடுத்தவர் அமைதியாக உறங்கும் வேளையில் இந்த இதயத்தை பெற்றவருக்கு புதிய வாழ்க்கை கதவு திறந்திருக்கிறது.

 

 

உறுப்பு தானத்திற்காக காத்திருப்பவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆனால் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே அவ்வளவாக இல்லை என்பதே உண்மை. இந்த மாதிரி நிகழ்வுகளை ஊடகங்களின் மூலம் வெளிக் கொண்டுவருவது பொதுமக்களிடையே பரவலான விழிப்புணர்வைக் கொண்டு வரும் என்பது உண்மை.

 

 

 

 

 

 

 

கிடைத்த தீர்ப்பும் கிடைக்காத நீதியும்

செப்டம்பர் மாத ஆழம் இதழில் வந்த எனது கட்டுரை

‘எங்க வகுப்பு முதல் மாடில இருந்தது. கூரை போட்ட வகுப்புதான். விபத்து நடக்கறதுக்கு ஒரு வாரம் முன்பு தான் புதுக்கூரை மாத்தினாங்க. பழைய கூரைகளை சமையலறையில் வைச்சிருந்தாங்க. சமையல்காரம்மா ஸ்டவ்வை அணைக்காம வெளில போயிருக்காங்க. பழைய கூரைல பிடிச்ச நெருப்பு வகுப்பறைகளுக்கும் பரவிடிச்சு. வகுப்பறைகளின் கதவுகள் தாழிடப்பட்டிருந்ததால எங்களால தப்பிச்சுப் போகமுடில…..’

கும்பகோணம் தனியார் பள்ளி ஒன்றில் 2004 ஆம் வருடம் ஜூலை 2௦ ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி ஆனால் அதிஷ்டவசமாக தப்பித்த ஒரு பெண் (இப்போது அவளுக்கு பதினெட்டு வயது) பழைய நினைவுகளை சொல்லிக் கொண்டு போகிறாள். சொல்லும்போதே குரலிலும் உடலிலும் பழைய நினைவுகளின் அதிர்வுகள் தெரிகின்றன.

‘நான் அப்படியே ஒரு பெஞ்சுக்குக் கீழே போய் படுத்துகிட்டேன்; கொஞ்சநேரத்துல சுத்திவர நெருப்பு பரவி அந்த சூடு தாங்காம மயக்கமாயிட்டேன். பக்கத்துல கட்டிட வேலை செய்துகிட்டிருந்த ஒருத்தர் வந்து ஜன்னல்களை உடைச்சு என்னை வெளியே இழுத்து போட்டாராம். என்னைபோல நிறைய குழந்தைகளை வெளியே இழுத்துப் போட்டாங்களாம். ஆனா யாருமே உயிரோட இல்ல…. நான் மட்டுமே உயிர் தப்பிச்சவ…..’

விபத்துக்குப் பிறகு மருத்துவ மனையில் ஒரு வருடம் இருந்துவிட்டு வீடு திரும்பிய பின்னும் இவள் முகத்திலும் கைகளிலும் இருக்கும் நெருப்புக் காயங்களின் வடுக்கள் வாழ்நாள் முழுக்க பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுக் கொண்டே இருக்கும்.

இந்த விபத்தில் தப்பித்த இன்னொரு பெண் (இப்போது வயது 20) சொல்லுகிறாள்: ‘நான் எப்படியோ தப்பித்துவிட்டேன்; ஆனால் என் தங்கை இந்த விபத்தில் இறந்துவிட்டாள். என் தந்தையும் இந்நிகழ்ச்சியின் காரணமாகவே மாரடைப்புக்கு பலியாகிவிட்டார். எங்கள் வாழ்வே பெரிய போராட்டமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் 50,000 ரூபாய் கொடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். எங்களுக்குப் பணம் தேவையில்லை. நாங்கள் பணம் கேட்கவில்லை. எங்களுக்கு சரியான நீதி கிடைக்கவில்லை. இதற்காகவா நாங்கள் பத்து நீண்ட வருடங்கள் காத்திருந்தோம்?’

விபத்து எப்படி நேர்ந்தது?

கும்பகோணம் காசிராமன் தெருவில் ஒரே வளாகத்தில் ஸ்ரீ கிருஷ்ணா நிதியுதவி ஆரம்பப்பள்ளி, சரஸ்வதி நர்சரி மற்றும் ஆரம்பப் பள்ளி, ஸ்ரீ கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆகியவை அமைந்திருந்தன. பள்ளிகள் வழக்கம்போலவே 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி காலை 9.15க்கு ஆரம்பித்தன. 10.30 மணி இடைவேளையின் போது ஒரு மாணவி தீயைப் பார்த்துவிட்டு வகுப்பு ஆசிரியையை உஷார் படுத்தியிருக்கிறாள். இந்த செய்தி மற்ற வகுப்புகளுக்கும் பரவுகிறது. முதல் தளத்தில் இருந்த சமையலறையில் கிளம்பிய சிறு பொறி அங்கிருந்த தென்னங்கீற்று ஓலைகளில் போய் விழுந்து, வகுப்பறைகளின் மேல் வேயப்பட்ட கூரைகளின் நடுவே பரவி பள்ளி முழுவதும் வேகவேகமாகப் பரவுகிறது. விபத்தின் போது அங்கு சுமார் 200 குழந்தைகள் இருந்திருக்கிறார்கள். மேல்தளங்களில் இருந்த குழந்தைகள் மாடிப்படிகளில் தடதடவென இறங்க ஆரம்பிக்கிறார்கள். மாடிப்படிகளில் வைக்கப்பட்டிருக்கும் தட்டுமுட்டு சாமான்களால் அவர்களால் வேகமாக இறங்கமுடியவில்லை. சமையலறையின் பக்கத்திலேயே மாடிப்படிகள். கூரைகளும் அவற்றைத் தாங்கும் மூங்கில்கழிகளும் தீக்கிரையாகி, ஓடிவரும் குழந்தைகளின் மேல் விழுகின்றன. வெளியேறும் வழிகள் அதிகம் இல்லாததாலும், கதவுகள் மூடப்பட்டிருந்ததாலும் குழந்தைகளால் தப்பிக்க முடியவில்லை. தீயணைப்புப் படையினர் 11 மணிக்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் இத்தனை பெரிய தீவிபத்தை எதிர்பார்த்து தயாராக வரததால் குழந்தைகளைக் காப்பாற்றும் பணி தாமதப்படுகிறது. ஒரு வழியாக ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தீயை அணைக்க முடிந்தது. ஆனால் அதற்குள் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்திருந்தனர்.

தீர்ப்பு என்ன?

பல வழக்குகள் பள்ளி நிர்வாகத்தினர் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் தொடரப்பட்ட போதும் வழக்கு விசாரணை பல்வேறு நீதிமன்றங்களுக்கு பல வருடங்களுக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்தது. பல வருடத் தாமதத்திற்குப் பிறகு 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி 4000 பக்க குற்றச்சாட்டு, 230 அரசு தரப்பு சாட்சிகள், 488 சாட்சிகள், பாதிக்கப்பட்ட 18 குழந்தைகளுடன் தமிழ்நாடு தஞ்சாவூரில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியது. தலைமையாசிரியர் பிரபாகரன் இன்னும் மூவர் அப்ரூவராக மாறினார்கள். மொத்தம் 17 பேர்கள் குற்றவாளிகளாக விசாரிக்கப்பட்டனர்.

ஸ்ரீகிருஷ்ணா நடுநிலைப்பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிச்சாமி, அவரது மனைவியும் பள்ளித் தொடர்பாளரும் ஆன சரஸ்வதி, தலைமையாசிரியை சாந்தலக்ஷ்மி, பட்டயப் பொறியாளர் ஜெயச்சந்திரன், ஆரம்பக்கல்வி அதிகாரி பாலாஜி, துணை ஆரம்பக்கல்வி அதிகாரி சிவப்பிரகாசம் மற்றும் ஆரம்பக்கல்வி அதிகாரியின் செயலர் தாண்டவன் ஆகியோருக்கும் 10 வருட கடுங்காவல் தண்டனையும் 47 லட்ச ரூபாய் அபராதமும் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

மதிய உணவு ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகியோருக்கு ஐந்து வருட கடுங்காவல் தண்டனையும் 25 லட்சம் ரூபாய் அபராதத் தொகையும் விதித்துள்ளது. இருப்பினும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று ஆசிரியர்கள் உட்பட 11 பேர்களை குற்றவாளிகள் அல்ல என்று விடுவித்துள்ளது. தீர்ப்பின்போது குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் சிலர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி இருந்தனர். விடுவிக்கப்பட்ட 11 பேர்களின் மீதும் மேல் நீதிமன்றத்தில் அரசு முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்தத் தீவிபத்து தமிழ்நாட்டில் இதுவரை நடந்த நான்கு பெரிய, மோசமான  தீ விபத்துக்களில் ஒன்று. முதலாவது தீ விபத்து 1997ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி நடந்த பிருகதீஸ்வரர் கோவில் தீ விபத்து. இதில் 60 பேர்கள் உயிரிழந்தனர். இரண்டாவது தீ விபத்து எரவாடி மனநலம் குன்றியவர்களின் காப்பகத்தில் 2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி நடந்ததது. இதில் 30 மனநலம் குன்றியவர்கள் இறந்தனர். மூன்றாவது தீ விபத்து ஸ்ரீரங்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் 2005 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி நிகழ்ந்தது. இதில் மணமகள் உட்பட 30 பேர்கள் பலியானார்கள்.

எந்தச் சூழ்நிலையில், எந்தக் காரணங்களினால் இந்த விபத்து நிகழ்ந்தது என்று கண்டறிய நீதிபதி கே. சம்பத் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அரசு அமைத்தது. இந்தக் குழு ஆகஸ்ட் 1ஆம் தேதி 2004 ஆண்டு தனது விசாரணையைத் தொடங்கியது. இந்தக் குழுவில் சென்னை லேடி வில்லிங்டன் மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் ராணி கந்தசாமி, கல்பாக்கம் அணுமின் நிலைய தீயணைப்பு அதிகாரி எஸ்.கே. சாக்சேனா, சென்னை மன நல அமைப்பைச் சேர்ந்த கே. விஜயன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பி.ஏ. அண்ணாமலை ஆகியோர் இருந்தனர்.

இந்தக் குழுவிற்கு அளிக்கப்பட்ட காலக்கெடு நான்கு மாதங்கள். ஆனால் நான்கு முறை இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு ஜூன் 30ஆம் தேதி  2005 – இல் தனது முடிவுகளை சமர்ப்பித்தது.

 • மூன்று வருடங்களாக கல்வி அதிகாரிகளால் இந்தப் பள்ளி பரிசோதனை செய்யப்படவில்லை;
 • கூரைகள் வேய்ந்த சமையலறையும், வகுப்பறைகளும் உள்ள இந்தப் பள்ளியில் கட்டிட சட்டதிட்டங்கள் சரிவர கடைபிடிக்கப் படவில்லை. இந்த மாதிரியான கட்டிடங்களில் கட்டாயம் இருக்க வேண்டிய அவசரகால வாயில்கள் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக பள்ளிக் கட்டிடமே குழந்தைகளுக்கு மரணப் பொறியாக அமைந்துவிட்டது.
 • இந்த மாதிரி சூழ்நிலைகளை கையாள ஆசிரியர்கள் சரிவர பயிற்சி பெற்றிருக்கவில்லை.

இந்த விபத்து நிகழ்ந்தபோது குழந்தைகளை காப்பாற்றுவதில் ஆசிரியர்களின் பங்கு என்ன என்பதே இந்த விசாரணையின் முக்கிய கேள்வியாக இருந்தது. குழந்தைகளைக் காப்பாற்றுவதை விட தங்களைக் காப்பாற்றிக் கொள்வதில் அவர்கள் முனைந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. ஏனெனில் ஆசிரியர்களில் பெரும்பாலோர் அதிக பாதிப்பிற்கு உள்ளாகவில்லை; ஆசிரியர்கள் குழந்தைகளை வகுப்பறையிலேயே இருக்குமாறு சொன்னதாக நேரில் பார்த்த சாட்சிகள் சிலர் கூறினர். இன்னொரு கருத்து ஆசிரியர்கள் தங்களால் முடிந்தவரை குழந்தைகளைக் காப்பாற்ற முயற்சி செய்தனர் என்கிறது.

மிகப்பெரிய அளவில் இறப்பு நேர்ந்ததற்கு என்ன காரணம்? பள்ளி நிர்வாகத்தினர்தான் என்று குழு அறிக்கை சமர்ப்பித்தது.

 • மாணவர்-ஆசிரியர் விகிதம் தங்கள் பள்ளியில் மிகச் சரியாக கடைபிடிக்கப் படுகிறது என்று கல்வி அதிகாரிகளிடம் காண்பிக்க பள்ளி நிர்வாகம் மற்ற இரு பள்ளிகளின் மாணவர்களையும் ஸ்ரீகிருஷ்ணா நடுநிலைப் பள்ளிக்கு வரவழைத்தது.
 • கூரை போட்ட வகுப்பறைகள் இருக்கக்கூடாது என்ற விதியை மீறியது இன்னொரு குற்றம்.
 • போதுமான அளவில் வெளியேற்ற வாயில்கள் இல்லாதது மற்றும் தீயணைப்பிற்குத் தேவையான உபகரணங்கள் பள்ளி வளாகத்தில் இல்லாதது.
 • ஆசிரியர்ளுக்கு பேரழிவு மேலாண்மை பற்றிய போதுமான பயிற்சி இல்லாமை.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் செய்த குற்றங்கள்:

 • புலவர் பழனிச்சாமி தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பள்ளிக்கு தவறான முறையில் உரிமம் வாங்கியது;
 • மதிய உணவு ஏற்பாட்டாளர் விஜயலட்சுமி பாதுகாப்பு முறைகளை சரிவர அமல் படுத்தாதது.
 • கும்பகோணம் மாவட்ட தாசில்தார் சட்டதிட்டத்தின்படி கட்டப்படாத பள்ளி கட்டிடத்திற்கு உரிமம் வழங்கியது.
 • பட்டயப் பொறியாளர் ஜயசந்திரன் ஒருமுறை கூட பள்ளிக்கட்டிடத்தைப் பார்வையிடாமலேயே ஸ்திரத்தன்மை உரிமம் வழங்கியது.
 • கூடுதல் துணை கல்வி அதிகாரி மாதவனும், அவரது உயரதிகாரி தாண்டவனும் அரசு அங்கீகாரம் இல்லாமலேயே பள்ளியை 6 வருடங்கள் இயங்கச் செய்தது.
 • அதிகாரம் இல்லாத மாதவனை பள்ளிக்கு உரிமம் வழங்க வைத்ததற்காக சிவபிரகாசமும், கொஞ்சமும் பொறுப்பில்லாமல் மாதவன் கையெழுத்திட்ட காகிதங்களை மேலிடத்திற்கு அனுப்பியதற்கு பாலாஜியும் குற்றவாளிகள் ஆனார்கள்.

ஆனால் இவர்கள் மட்டும்தானா குற்றவாளிகள்? தங்களது கௌரவத்திற்குத் தகுந்த பள்ளியா என்பதை முடிவு செய்ய பள்ளியின் கட்டணத்தைப் பார்க்கிறார்களே தவிர, அங்கிருக்கும் வசதிகளை பார்வையிட யாரும் மெனக்கெடுவதில்லை என்பது கசப்பான உண்மை; வேதனையான விஷயம். குழந்தைகளின் பாதுகாப்பு என்பது இரண்டாம் பட்சம் ஆகிவிட்ட நிலை. இந்நிலை மாறினால்தான் இன்னொரு விபத்து நடக்காமல் தடுக்க முடியும்.

இமேஜ் நன்றி: thisiskumbakonam.com

60 வருட திரைப்பயணம்:  ஸர் ரிச்சர்ட் அட்டன்பரோ

வெப்துனியா மின்இதழில் வந்த எனது கட்டுரை 

நம்மில் எத்தனை பேர்கள் மகாத்மா காந்தியைப் பார்த்திருப்போம்? ’48 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்காது. இதற்கு முன் பிறந்தவர்களிலும்  எத்தனை பேர்களுக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கும்? அவரைப்பற்றிக் கேள்விப்படும்போதும், புகைப்படங்களில் அவரைப் பார்க்கும்போதும் இந்த மகாத்மா நம்மிடையே இப்போது நடமாடினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நம்மில் பலர் நினைக்காமல் இருந்திருக்கவும் முடியாது. இந்தியர்கள் பலரின் இந்தக் கனவு நனவாகியது 1983 ஆம் ஆண்டு,  ஸர் ரிச்சர்ட் அட்டன்பரோ என்கிற இங்கிலாந்து இயக்குனர் மூலம். வாழ்க்கை வரலாற்றுச் சித்திரங்களை எடுப்பதில் மன்னன் என்று பெயர் பெற்ற இவர் தனது ‘காந்தி’ திரைப்படம் மூலம் நம் கண் முன்னே காந்தியை நடமாடவிட்டார்.

சமீபத்தில் மறைந்த ரிச்சர்ட் அட்டன்பரோவின் வெள்ளித்திரையின் மீதான காதலுக்கு வயது 60. முதல் முதலில் மேடை நடிகராக வெள்ளித்திரைப் பயணத்தைத் தொடங்கிய அட்டன்பரோ இயக்குனராக மாறினார். நடிகராக எந்த அளவிற்கு விரும்பப்பட்டாரோ, அதே அளவு இயக்குனராகவும் எல்லோராலும் விரும்பப்பட்டார். இரண்டு துறைகளிலும் வெற்றிக் கோடி நாட்டினார்.

1923 ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிட்ஜில் பிறந்த அட்டன்பரோ தனது 12 ஆம் வயதில் நடிக்கத் துவங்கிவிட்டார். ராயல் அகாதமி ஆப் டிராமடிக் ஆர்ட் –இல் பயிற்சி பெற்ற இவர் 1941 ஆம் ஆண்டு முதன்முதலில் மேடை ஏறினார். இதற்கு ஒரு வருடத்திற்குப் பிறகு நோயல் கவர்ட் – இன் ‘இன் விச் வி சர்வ்’ (In Which We Serve) என்ற படத்தில்  தன்னை நம்பியவர்களை கைவிட்டுவிட்டு ஓடும்  கப்பல் மாலுமியாக, சிறிய ஆனால் மிகவும் கனமான பாத்திரத்தில் நடித்து பார்வையாளர்களைக் கவர்ந்தார். தொடர்ந்து வந்த திரைப்படங்களில் இதே போன்ற கதாபாத்திரங்களே இவருக்குக் கிடைத்தன. 1947  ஆம் ஆண்டு ‘ப்ரைடன் ராக்’ (Brighton Rock) படத்தில் மனநோய் பீடித்த இளம் தாதாவாக நடித்த திரைப்படம் இவரது வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது.

அடுத்த முப்பது ஆண்டுகளில் பல பிரித்தானிய படங்களில் நடித்தார். ‘50 களில் பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்தார். இவர் தனது மேடை வாழ்க்கையின் துவக்கத்தில் நடித்த அகாதா கிறிஸ்டியின் நாடகம் ‘தி மௌஸ்ட்ராப்’ உலகத்தில் நீண்ட நாட்களுக்கு நடிக்கப்பட்ட நாடகங்களுள் ஒன்று. இவரும் இவர் மனைவியும் இந்த நாடகத்தில் நடித்த ஆரம்ப கால நடிகர்கள். 1952 இல் மேடையேறிய இந்த நாடகம் 2007 வரை நடந்து வந்திருக்கிறது.

1969 இல் வெளிவந்த ‘ஓ! வாட் அ லவ்லி வார்’ (O! What a Lovely War!) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அப்போதிலிருந்து நடிப்பதை குறைத்துக் கொண்டார். 50 களின் இறுதியில் திரைப்படங்களை தயாரிக்கவும் தொடங்கினார். திரைப்படத் துறையைச் சார்ந்த பல அமைப்புகளில் தலைவர் பதவியையும் வகித்தார்.

இரண்டாம் உலகப் போரில் ராயல் விமான படையில் பணியாற்றிய இவர்  ஆங்கில நடிகை ஷீலா சிம் என்பவரை 1945 ஆண்டு மணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள். 2004 ஆம் ஆண்டு மூத்தமகள், பேத்தி ஆகியோரை ஆசிய சுனாமியில் பறிகொடுத்தார். இவரது மகன் மைக்கேல் அட்டன்பரோவும் ஒரு இயக்குனர். அட்டன்பரோவின் தந்தை லீசெஸ்டர் பல்கலைக் கழகத்தின் முதல்வராக இருந்தவர். ரிச்சர்ட் அட்டன்பரோ இந்தப் பல்கலைக்கழகத்தின் புரவலர். 1997 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் பெயரில் அவரை கௌரவிக்கும் வகையில் ‘ஊனமுற்றோர்களுக்கான கலை மையம்’ இந்த பல்கலைக்கழகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

காந்தி திரைப்படம் மட்டுமல்ல, இவரை இந்தியர்களுக்கு அடையாளம் காட்டியது; நாம் மிகவும் ரசித்துப் பார்த்த ‘ஜுராசிக் பார்க்’ படத்திலும் நடித்தவர் இவர். ஜான் ஹம்மண்ட் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்த ‘ஜுராசிக் பார்க்’ படத்தை அவ்வளவு சுலபமாக நம்மால் மறக்க முடியாது. இந்தப் படத்தின் ஆரம்பத்தில் அழிந்த விலங்கினத்தைச் சேர்ந்த டைனோசர்களை மறுபடியும் தாம் உருவாக்கியிருக்கும் விந்தையை மிகவும் பெருமையுடன் சொல்லும்போதும், இறுதியில் தான் உருவாக்கிய ஜுராசிக் பார்க்கை தானே மூடும் நிலை வரும்போது கடைசி முறையாக அந்த இடத்தை திரும்பிப் பார்த்து வேதனைப்படும்போதும் இவரது நடிப்பை நாம் மிகவும் ரசிக்கலாம்.

காந்தி திரைப்படம்:

 இந்தத் திரைப்படம் அட்டன்பரோவின் நீண்ட நாளைய கனவு. ஏற்கனவே காந்தியைப் பற்றிய திரைப்படம் எடுக்க வேண்டும் என்று 1952 இல் கேப்ரியல் பாஸ்கல் என்பவர் அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார். ஆனால் பாஸ்கலின் மறைவினால்  (1954) இத்திட்டம் கைவிடப்பட்டது. 1962 இல் அட்டன்பரோவிற்கு இந்திய வெளிநாட்டுத் தூதரகத்திலிருந்து மோதிலால் கோத்தாரி தொலைபேசினார். காந்தியைப் பற்றி ஒரு திரைப்படம் அட்டன்பரோ எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். லூயிஸ் ஃபிஷர் எழுதிய காந்தியின் வரலாற்றைப் படித்த அட்டன்பரோ அடுத்த 18 ஆண்டுகளை இந்தத் திரைப்படம் தயாரிப்பதில் செலவிட்டார். லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன் மூலம் நேருவையும் இந்திரா காந்தியையும் சந்தித்தார். நேரு, காந்தி படத்திற்கு தனது ஒப்புதலைத் தெரிவித்து அதன் தயாரிப்பிற்கு உதவுவதாகவும் கூறினார். நேருவின் மறைவு (1964) படத்திற்கு மறுபடியும் பின்னடைவை உண்டுபண்ணியது. மனம் தளராத அட்டன்பரோ 1976 இல் திரும்பவும் வார்னர் பிரதர்ஸ் உதவியுடன் படத்தைத் துவக்கினார். இந்தியாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இந்தியாவில் திரைப்படத்தை படமாக்க முடியாத நிலை ஏற்பட்டது. இறுதியாக 1980 இல் படம் எடுப்பதற்கு தேவையான நிதி உதவியும், இந்தியாவில் படமெடுக்கக் கூடிய சூழ்நிலையும் உருவானது. பட ஒளிப்பதிவு 26 நவம்பர் 1980 ஆம் ஆண்டு துவங்கி மே 10, 1981 ஆண்டு முடிவடைந்தது. காந்தியின் இறுதிச்சடங்கில் பங்கு கொள்ள மூன்று லட்சம் உதவி நடிகர்கள் பயன்படுத்தப்பட்டனர். இது ஒரு கின்னஸ் சாதனை. இந்தப் படம் எடுத்த போது அட்டன்பரோவிற்கு 60 வயது.

‘காந்தி’ திரைப்படம் அட்டன்பரோவிற்கு சிறந்த இயக்குனர் என்ற ஆஸ்கார் விருதைப் பெற்றுத் தந்தது. பதினோரு பிரிவுகளில் இந்தப் படம் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது. எட்டு பிரிவுகளில் விருதுகளை வாங்கிக் குவித்தது. இந்தப் படத்திற்காக தனது லண்டன் வீட்டை அடமானம் வைத்தும், தனது கலைப் பொக்கிஷங்களை விற்றும் பணம் சேர்த்தார் அட்டன்பரோ. ஆஸ்கர் விருதுகளை மட்டுமல்லாமல் செலவழித்த பணத்தைப் போல 20 மடங்கு அதிகப்பணத்தையும் அள்ளிக் கொடுத்தது இந்தப் படம்.

இவரது மனைவி மறதி நோயால் பாதிக்கப்பட்டு டென்வில் ஹாலில் உள்ள முதியோர் நலப் பாதுகாப்பு இல்லத்திற்குச் சென்றுவிட்ட நிலையில், சென்ற ஆண்டு தானும் தனது மனைவியும் வாழ்ந்து வந்த லண்டன் வீட்டை 18.4 மில்லியன் டாலருக்கு விற்றுவிட்டு, அட்டன்பரோவும் அங்கு தன் மனைவியுடன் சேர்ந்து கொண்டார்.

இவரது மறைவு குறித்து ஜுராசிக் பார்க் படத்தை இயக்கிய ஸ்பீல்பெர்க் கூறுகிறார்: ‘தான் விரும்பியதையெல்லாம் செய்ய நேரம் ஒத்துக்குவார் அட்டன்பரோ. இந்தத் திரைப்பட உலகிற்கு அவர் விட்டுச் சென்றுள்ள பரிசு காந்தி திரைப்படம். அவரை ரசித்த பல கோடி மக்களின் வரிசையில் நானும் நின்றுகொண்டிருக்கிறேன்’

நமது மனம் கவர்ந்த இந்த இயக்குனருக்கு நாமும் நம் இறுதி அஞ்சலியை செலுத்துவோம்.

மின்தமிழ்மேடையிலும்  இந்த எனது கட்டுரையைப் படிக்கலாம்

இந்திய தேசிய இயக்கத்தின் கொடை

R day

வல்லமை இதழில் வெளியான சுதந்திர தின சிறப்பு கட்டுரை 

நமது சுதந்திரப் போராட்டத்தை பற்றி நாம் எல்லோரும் அறிவோம். இந்தப் போராட்டம் வெறும் சுதந்திரம் கிடைக்க வேண்டும்; அந்நியர்களை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக மட்டும் நடத்தப்பட்ட போராட்டம் இல்லை. சுதந்திரத்திற்காக போராடிய அதேவேளையில் சுதந்திர இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்ற வரைபடமும் இந்தக் காலத்தில் வரையப்பட்டது; இப்போது நாம் காணும் சுதந்திர இந்தியாவின் ஒவ்வொரு செயலும் இந்தப் போராட்டத்தின் போது உருவாகிய இந்திய தேசிய இயக்கத்தினால் வழி நடத்தப்பட்டது. சுதந்திரம் கிடைத்தபின் இந்தியா சந்தித்த சவால்கள் என்னென்ன, தலைவர்களின் முன்னே எழுந்த கேள்விகள் என்னென்ன இவற்றையெல்லாம் இந்திய மக்களும், இந்தியத் தலைவர்களும் எப்படி எதிர்கொண்டனர் என்பதைப் பற்றிய கட்டுரை இது.

 

தில்லி அம்பேத்கர் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு சலில் மிஸ்ரா எழுதிய ‘Legacy of the Struggle’ என்னும் கட்டுரையின் மொழியாக்கம் இது. இந்தக் கட்டுரை டெக்கன் ஹெரால்ட் செய்தித்தாளில் 10.8.2014 அன்று வெளியானது. சுதந்திரப் போராட்டம் பற்றியும், இன்றைய இந்தியாவின் நிலை பற்றியும் புதுவிதக் கோணத்தில் இந்தக்கட்டுரை பேசுகிறது. சமீபத்தில் படித்த கட்டுரைகளில் என்னை மிகவும் கவர்ந்த கட்டுரையை வல்லமை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

——————————————————————————————————————————————-

 

இந்திய தேசிய இயக்கம் மூன்று வகையில் சுதந்திர இந்தியாவுடன் தொடர்பு உடையது. முதலில் நவீன இந்தியா எப்படி அமையவேண்டும் என்ற வரைபடம் இந்த இயக்கத்தின் கருவில் உதித்ததுதான். இரண்டாவதாக இந்திய சமுதாயத்தில் ஒரு ஆழமான, மரபுவழி தடத்தை இந்த இயக்கம் விட்டுச் சென்றது. மூன்றாவதாக இந்த இயக்கத்தின் வழி நடைபெற்ற போராட்டங்களுக்கும், சுதந்திர இந்தியாவின் கையாளப்பட்ட அரசியல் பொருளாதார நெறிகளுக்கும் இடையே வியக்கத்தக்க ஒற்றுமைகள் உண்டு. இவைமட்டுமல்லாமல் இந்த இயக்கத்திற்கு ஒரு உலகப்பின்னணியும் உண்டு. இவை எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கும்போது நமக்கு ஒரு சுவாரஸ்யமான கதை கிடைக்கிறது.

 

19ஆம் நூற்றாண்டின் முடிவில் ஏகாதிபத்தியம் என்பது நன்றாக வேரூன்றி இருந்தது. சில ஐரோப்பிய நாடுகளின் ஆத்திகம் நிலைபெற்றிருந்தது. இந்த நிலை இப்படியே நீடிக்கும்; இதுவே இயற்கையானது என்றும் சில நாடுகள் நம்பத்தொடங்கின. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல சக்தி வாய்ந்த இயக்கங்கள் பிறந்து ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் நிலவி வந்த இந்த ஏகாதிபத்திய முறைக்கு சவால் விடுத்தன. இரண்டாம் உலகப்போருக்குப் பின் 1945 – 1960 ஆண்டுகளின் நடுவே சுமார் 120 நாடுகள் வெளிநாட்டினரின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றன.

 

இப்படி விடுதலை பெற்ற நாடுகளின் முன் சில கேள்விகள் எழுந்தன: விடுதலை மற்றும் நாட்டின் வளம் இவை இரண்டும் இந்த நாடுகளின் குறிக்கோள் ஆக இருந்த நேரத்தில் அடிமைத்தளை நீங்கிய முன்னேற்றம் என்பது சாத்தியமா? சுதந்திரத்துடன் கூடிய வளமை என்பது எப்போது கிடைக்கும்? என்ற கேள்விகள் எழுந்தன. இவற்றை அடைய பல தடைகள் இருந்தன. ஏகாதிபத்தியம் என்பது ஒரு தடையே ஆனாலும் அது ஒன்று மட்டுமே தடையாக இல்லை. தொழில்துறை முன்னேற்றம் என்பது இந்த ஏகாதிபத்தியத்தினால் தள்ளிக் கொண்டே போயிற்று. சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்படத் துவங்கிய பின்னும், அரசியல் குழப்பங்கள், நவீன கருத்துக்களைக் கொண்ட நிறுவனங்கள் இல்லாமை, பொருளாதார உள்கட்டமைப்புகள் இல்லாமை ஆகியவற்றால் இந்த மாற்றங்கள் ஏற்படுவது கடினமாகவும் கைகெட்டாமலும் போயின. உலகப் போருக்கு பின் உலகின் வடக்கு பாகங்கள் சுதந்திரமாகவும், வளமாகவும், தெற்கு பாகங்கள் சுதந்திரம், செல்வச் செழுமை என்ற இரண்டிலும் பின்தங்கியும் இருந்தன. இந்த சுதந்திரம், செல்வச் செழுமை இரண்டுமே ஐரோப்பிய நாடுகளின் சொத்து என்ற எண்ணம் கூட நிலவி வந்தது இந்த காலகட்டத்தில்.

 

சுதந்திர இந்தியா இந்த நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள தீவிரமாக முயன்று வந்தது. இந்தியத் தலைவர்கள் சுதந்திரம் செல்வச் செழுமை இரண்டையுமே தங்கள் குறிக்கோளாகக் கொண்டு நாட்டை முன்னேற்ற விரும்பியதால் இரண்டின் முன்னேற்றமும் மிகவும் மெதுவாகவும், சரிசமமான முன்னேற்றம் இல்லாமலும், அங்கங்கே முன்னேற்றங்கள் என்ற நிலையிலும்  இருந்தன. பிரமாதமான முன்னேற்றம் என்று நாம் மார்தட்டிக்கொள்ள முடியாவிட்டாலும், ஒட்டுமொத்த முன்னேற்றம் என்பது நாம் வெட்கப்பட்டும் வகையில் நிச்சயம் இல்லை.

 

இந்திய மக்களின் ஆயுட்காலம் சுதந்திரத்திற்கு முன் 32 வருடங்கள்.  கற்றவர்களின் சதவிகிதம் 14%. உணவுப் பற்றாக்குறை மிகவும் அதிகம். பட்டினிச் சாவுகள் அதிசயமல்ல. இன்று சூழ்நிலை மிகவும் மாறியிருக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில் இந்தத் துறைகளில் முன்னேற்றம் கண்டு வருகிறோம். இந்த முன்னேற்றங்களை நாடாளுமன்ற ஜனநாயகக் கட்டமைப்பில் பெற்றிருக்கிறோம் என்பது பெருமைக்குரியது.

 

இந்திய சுதந்திரப்போராட்டம் என்பது வெள்ளையர்களை வெளியேற்றுவது என்பதுடன் நிற்கவில்லை; எல்லாவற்றிற்கும் மேலாக நவீன இந்தியாவின் கட்டுமானப் பணிக்கான அஸ்திவாரம்தான் இந்தப் போராட்டம். நவீன இந்தியாவை உருவாக்குவதில் ஒரு பகுதி தான் சுதந்திரப் போராட்டம். சுதந்திர இந்தியாவில் ஏற்படப்போகும் மிக முக்கிய முன்னேற்றங்களுக்கு இந்திய தேசிய இயக்கம் ஒரு ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்திய தேசிய இயக்கத்தின் நிலைபாடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 1947 க்குப் பிறகு நிகழ்ந்த அரசியல் பொருளாதார முன்னேற்றங்களை அறிய முடியாது.  சுதந்திர இந்தியாவின் பிரஜைகளுக்கு இந்திய தேசிய இயக்கம் தனது விலையுயர்ந்த சொத்தாக பல உயர்ந்த எண்ணங்களையும், நடைமுறைகளையும், நம்பிக்கைகளையும், விழைவுகளையும் விட்டுச் சென்றுள்ளது. இவையெல்லாம் நமது அரசியல் சாசனத்தில் நெறிமுறைப்படுத்தப் பட்டுள்ளன. நமது அரசியல் சாசனம் இந்திய தேசிய இயக்கத்தின் தயாரிப்புதான்.

 

நிர்வாக இயந்திரம் என்பது இங்கிலாந்தின் காலனித்துவ அடிப்படையில் அமைந்திருந்தாலும் சுதந்திர இந்தியாவின் சிந்தனைப் போக்கு முழுவதும் இந்திய தேசிய இயக்கத்தாலேயே உருப்பெற்றிருக்கிறது. இந்திய மக்களின் பொதுவான நம்பிக்கைகளையும், அபிலாஷைகளையும் பிரதிபலிக்கும் ஒரு இந்தியா உருவானது இந்த இயக்கத்தின் விளைவுதான். இந்திய தேசத்தின் பிரதிநிதியாக மட்டுமில்லாமல் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்குவதும் இந்த இயக்கத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியாக இருந்தது. ஏனெனில் சில ஆங்கில அறிஞர்களும், இனவரைவியலாளர்களும் (ethnographers) இந்திய தேசியம் என்பதை உருவாக்குவது மிகவும் கடினம் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். இந்தியாவின் பரப்பளவு, மதம், மொழி, கலாச்சாரம் இவைகளால் நிலவும் வேற்றுமைகள் காரணமாக ஒருங்கிணைந்த இந்தியா என்பது தூரத்துப் பச்சை; உண்மையில் இத்தனை பன்முகத்தன்மையுடன் கூடிய தேசத்து மக்கள் தம்மை ஒரு தேசத்தவர் என்று அடையாளம் காட்டிக் கொள்வது நடைமுறை சாத்தியமில்லை என்றனர். ஆனால் தேசிய தலைவர் சுரேந்திரநாத் பானர்ஜி இதை வலுவாக மறுத்தார். ‘இந்திய நாட்டின் மக்கள் இப்போது தங்களுக்கான ஒருங்கிணைந்த தேசத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். அவர்களது வேற்றுமைகள் இந்த ஒருங்கிணைந்த தேசத்தை உருவாக்கும் பணிக்கு இடையூறு விளைவிக்காது’ என்றார். காந்தி சொன்னார்: ‘இந்தியா வேற்றுமைகள் நிறைந்த பெரிய, மிகப்பெரிய நாடு. ஒவ்வொரு மதமும், கலாச்சாரமும், மொழியும் ஒன்றுக்கொன்று இணையாக, ஒன்று அடுத்ததற்கு உதவுவதாக இருக்கும். எதிராக செயல்படாது. இந்தநிலை உருவாக பல வருடங்கள் ஆகலாம். ஒருநாள் இந்நிலை ஏற்படும் என்ற நம்பிக்கையில் நான் இறக்க விரும்புகிறேன்’ என்றார். ஜவஹர்லால் நேரு இதனையே ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று விவரித்தார். இந்த ‘வேற்றுமைகள் எங்களது பலவீனம் அல்ல; எங்கள் பலம்’ என்றார் அவர். வேற்றுமைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த இந்தியாவாக இந்நாடு இருக்கும் என்ற நம்பிக்கையை தெரிவித்தனர் சுதந்திர இந்தியாவின் தலைவர்கள்.

 

தொழில் முன்னேற்றம் என்பது நமது நாட்டை வளமாக்கும் என்றாலும் இந்த மாறுதலுக்காக நாம் கொடுக்கும் விலையும் அதிகம்தான். மக்கள் வேறிடங்களுக்குக் குடிபெயர்தல், இருப்பிடங்கள் தொழிற்சாலைகளாக மாறுவது இவையெல்லாம் ஒரு சமூகத்தைப் பெரிதும் பாதிக்கும். இந்தப் பாதிப்பிலிருந்து மக்களை மீட்பதுவும் இந்த தேசிய உணர்வுதான்.

 

ஜனநாயக அரசியல் என்பதுவும் நமக்கு தேசிய இயக்கம் கொடுத்த கொடைதான். ஜனநாயகமாக்குதல் என்பது மக்கள் பெருமளவில் அரசியலில் பங்கு கொள்வது மற்றும் குடியுரிமைகளை ஊக்குவிப்பது என்ற இரு பிரிவுகளைக் கொண்டது. உலக சரித்திரத்திலேயே மிகப்பெரிய இயக்கம் இந்திய தேசிய இயக்கம் தான் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. முதலில் நடுத்தர வர்க்கத்தினர் பெருமளவில் பங்கு கொண்டாலும், போகப்போக எளிய மக்களும் இந்த இயக்கத்தில் பங்கு கொண்டனர். பெண்கள் அதிக அளவில் பங்கு கொண்ட இயக்கமும் இதுவே. சிறுபான்மையினரும் தங்கள் தேவைகளுக்காக போராடுவது – வேறு யாருடைய தலையீடும் இல்லாமல் – என்பது ஜனநாயக அமைப்பு  இவர்களுக்குக் கொடுத்த நம்பிக்கை என்று சொல்லலாம். முழுமை பெற்றதாக இல்லாமல் போனாலும் இந்தியாவின் ஜனநாயகம் உயிர்ப்புடன் முன்னே சென்றுகொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

 

வாக்குரிமை என்பது படிப்பறிவு அதிகம் இல்லாத இந்தியாவிற்கு நல்லதல்ல என்ற கருத்து வெளியானபோது நமது தலைவர்கள் சொன்ன பதில் இது: படிப்பறிவு அதிகம் இல்லாதபோதும் சுதந்திரம் வேண்டுமென்று ஒன்றாகக் கூடி போராடிய மக்களுக்கு, தங்களுக்கு வேண்டிய தலைவர்களைத் தாமே தேர்ந்தெடுப்பதற்கும், சொந்தமாக அரசியல் முடிவுகளை எடுப்பதற்கும் வேண்டிய முதிர்ச்சியும் இருக்கும்’.

 

இந்திய தேசிய இயக்கம் இந்த உலகிற்கு அளித்த செய்தி இதுதான்: ‘இந்திய நாடு தனது மரபுகளை மீறாமல், நவீனத்துவத்தையும் இயல்பாக ஏற்றுக்கொள்ளும்’.

 

1958 ஆண்டு நமது பிரதமர் நேரு தனது உரையில் கூறினார்: ‘

‘நவீன பொருளாதார முன்னேற்றத்திற்காக நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்குமா? அதற்காக நமது பழமையை மறக்காமல் கடைபிடிக்க முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு என்னிடம் விடை இல்லை. வேறு யாரிடமும் விடை இருப்பதாகவும் தெரியவில்லை.விஞ்ஞான, தொழில்நுட்ப முன்னேற்றங்களை நாம் வீரியத்துடனும், உள்ளார்வத்துடனும் வரவேற்க வேண்டிய அதே நேரத்தில் மனித வாழ்வின் மற்ற முக்கிய தேவைகளை நாம் மறக்கக் கூடாது. இதனால் நாம் இந்தியாவிற்கு மட்டுமல்ல ஏனைய நாடுகளுக்கும் தேவையானவற்றை செய்து தர இயலும். பொறாமையும், வன்முறையும், மன அழுத்தங்களும் நிறைந்த இந்த உலகில் இந்தியாவின் நட்பு நிறைந்த குரல் இந்த அழுத்தங்களைக் குறைக்க நாங்கள் இருக்கிறோம் என்ற செய்தியை ஒலிக்கும்’.

 

எல்லோருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!

 

நன்றி: டெக்கன் ஹெரல்ட் செய்தித்தாள்

 

வந்தது விருது!

versatile-blogger

 

 

மூன்று நான்கு மாதங்களாகவே வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மனம் உடல் இரண்டுமே சோர்ந்திருந்தேன். மாதப்பத்திரிக்கையில் வெளிவரும் எனது கட்டுரைகளைப் போடுவதுடன் சரி. வலைத்தளத்தில் வேறு எதுவும் எழுதவில்லை. மற்றவர்களின் வலைத்தளத்திற்குப் போகவும் இல்லை. சோர்வு, சோர்வு, சோர்வு!

 

அப்போது ஒரு அறிவிப்பு வேர்ட்ப்ரெஸ் தளத்தில். ஆமருவி என்பவர் எனது about பக்கத்தில் கீழ்கண்டவாறு அறிவித்திருந்தார்.

Hi – I have often enjoyed your blog. I have nominated you for the Versatile Blogger Award. Please visit the below site for further steps. Thanks

http://amaruvi.wordpress.com/2014/08/30/versatile-blogger-award/

 

சிறிது நேரம் ஒன்றுமே தோன்றவில்லை. இது நிஜமா என்று இருந்தது. திரு ஆமருவியின் தமிழ் தளத்தை அடிக்கடிப் படிப்பவள் நான். அதிகம் பின்னூட்டங்கள் போட்டதில்லை. அவரிடமிருந்து இப்படி ஒரு விருது நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒரு விருதினைக் கொடுத்து சோர்விலிருந்து என்னை எழுப்பி உட்கார வைத்ததற்கு எனது மனப்பூர்வமான நன்றி அவருக்கு. தேரழுந்தூர் ஆமருவியப்பனே நேரில் வந்தது போல உணர்வு!

 

இந்த விருது பெற்றவர்கள் செய்ய வேண்டியவை கீழே:

 

 • நமக்கு விருது கொடுத்தவருக்கு நன்றி சொல்லி அவரது வலைத்தளத்திற்கு இணைப்பு கொடுக்க வேண்டும். நன்றி ஆமருவி அவர்களே! இதோ உங்கள் தளத்திற்கு இணைப்பு:

Amaruvi’s Aphorisms

 • விருதினை வலைத்தளத்தில் போட்டுக்கொள்ள வேண்டும். போட்டுக்கொண்டு விட்டேன்.
 • என்னைப்பற்றிய 7 விஷயங்களை சொல்ல வேண்டும்.
 • நான் என் பங்கிற்கு குறைந்த பட்சம் 5 வலைப்பதிவாளர்களைத் இந்த விருதிற்கு பரிந்துரைக்க வேண்டும்.

என்னைப்பற்றிய 7 விஷயங்கள்

 • முழு நேர இல்லத்தரசி; பகுதி நேர எழுத்தாளர்.
 • மிகவும் பிடித்த சுவை நகைச்சுவை.
 • என்னை நானே கிண்டல் செய்துகொள்வது மிகவும் பிடித்த விஷயம்.
 • ரொம்பவும் பிடித்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன்.
 • அடிக்கடி படித்து ரசித்த கதைகள் பொன்னியின் செல்வன், திருவரங்கன் உலா.
 • செய்ய விரும்புவது: மொழி பெயர்ப்புகள். நல்ல வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன்.
 • நிறைய எழுத நினைக்கிறேன்!

நான் இந்த விருதிற்குப் பரிந்துரைக்கும் வலைப்பதிவாளர்கள்:

 

திரு கோபு என்கிற வை. கோபாலக்ருஷ்ணன்

எனக்கு முதலில் விருதுகளைக் கொடுத்தவர். என்னுடைய மிகப்பெரிய மரியாதைக்கு உரியவர்.

திரு தமிழ் இளங்கோ தனது அனுபவங்களை சீரிய எழுத்துக்களில் வடிப்பவர்.

திரு ஜோதிஜி தேவியர் இல்லத்தின் பெருமைக்குரிய சொந்தக்காரர்.

திரு பழனி கந்தசாமி சுவாரஸ்யமாகவும், கொஞ்சம் கோவமாகவும் தனது மனஅலைகளை நம்முடன் பகிர்ந்து கொள்பவர்.

சொல்லுகிறேன் என்று நமக்கு எப்போதும் அன்பும் ஆசியும் கூடவே ஆரோக்கிய சமையல் முறைகளையும் எழுதும் திருமதி காமாட்சி மகாலிங்கம்.

சின்னுஆதித்யா என்று பேரனை கொஞ்சுவதுடன் நிறுத்தாமல் அவன் பெயரிலேயே வலைத்தளம் ஆரம்பித்து சுறுசுறுப்பாக 1000 பதிவுகள் கொடுத்து சாதனை புரிந்த திருமதி விஜயா.

 

அரட்டை என்ற பெயரில் நல்ல விஷயங்களை மட்டுமே நகைச்சுவையுடன் பேசும் திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம்.

 

கடைசி பெஞ்ச் என்ற பெயரில் முதல்தர பதிவுகளை எழுதும் திரு பாண்டியன்.

 

இந்த விருதுகள் எதுவுமே தேவைப்படாத ஆனால் எனக்கு மிகவும் பிடித்த இரு வெர்சடைல் வலைப்பதிவர்கள்:

துளசிதளம் – திருமதி துளசி கோபால்

எண்ணங்கள் எழுதும் திருமதி கீதா சாம்பசிவம்

 

இந்த விருதினைப் பெற்றவர்கள் நான் செய்தது போலவே உங்கள் தளத்தில் இந்த விருதினை உங்களுக்குப் பிடித்த பதிவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

திரு ஆமருவிக்கு எனது நன்றிகளை மறுபடியும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். தாமதாமாக இந்த விருது பற்றி வெளியிட்டதற்கு அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுகிறேன்.