‘பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்’ – தீபிகா படுகோன்

நவம்பர் மாத ஆழம் இதழில் ‘ஒரு சமூகத்தை மதிப்பிடுவது எப்படி?’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள எனது கட்டுரை இது.

1deepika Padukone

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையின் மும்பை பதிப்பு பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் காணொளி படத்தை தனது வலைப்பதிவில் இப்படி அறிமுகம் செய்திருந்தது. OMG! Deepika padukone’s cleavage show! வெகுண்டெழுந்தார் தீபிகா. ‘ஆம்! நான் ஒரு பெண். எனக்கு வளைவு நெளிவுகளுடன் கூடிய உடல் இருக்கிறது. இதில் உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா?’ என்று சீற்றத்துடன் ட்வீட் செய்தார். அத்துடன் நிற்காமல், ‘பெண்களை மதிக்கத் தெரியாதவர்கள் பெண் உரிமை பற்றிப் பேச வேண்டாம்’ என்றார் சூடாக. இதற்கெல்லாம் அசைந்து கொடுக்குமா டைம்ஸ் ஆப் இந்தியா? ‘இது ஒரு பாராட்டுரை! நீங்கள் ரொம்பவும் அசத்தலாக இருக்கிறீர்கள் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்’ என்று பதில் சொல்லி முடித்துக் கொண்டது. அதாவது முடித்துக்கொண்டு விட்டோம் என்று நினைத்துக் கொண்டது.

ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையின் இந்த பதில் ட்விட்டர் பயனாளர்கள் எல்லோரையும் கொதித்தெழச் செய்துவிட்டது. அன்று முழுவதும் ‘நான் தீபிகாவிற்கு ஆதரவு’ என்று ட்விட்டர் முழுவதும் பல பல ட்வீட்டுகள். பிரபலங்கள் மட்டுமின்றி தீபிகாவின் விசிறிகளும் அவருக்கு ஆதரவாக ட்வீட் செய்தனர். உதாரணத்துக்குச் சில:

பர்கா தத்: ‘ சில வெளிப்படையான பேச்சுக்கள் மட்டுமே இந்தப் பெண் வெறுப்பாளர்களை சங்கடப்படுத்தும்.

கரன் ஜோகர்: அதிர்ச்சி! இந்த அவமரியாதையை தீபிகா மட்டுமல்ல; எந்த ஒரு பெண்ணாலும் தாங்க முடியாது!

தியா மிர்சா: கேளிக்கை செய்தி ஊடகங்கள் என்றைக்குமே பெண்களை மரியாதையுடன் நடத்தியதில்லை. யாரோ ஒருவர் இதை இப்படியே விடுவதில்லை என்ற முடிவை எடுத்தது மகிழ்ச்சி!

கவிதா கிருஷ்ணன்: நடிகைகளையும் விளையாட்டு வீராங்கனைகளையும் பத்திரிகைகள் இப்படித்தான் நடத்துகின்றன. இவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, இவர்கள் தங்கள் செய்கை குறித்து வெட்கப்படச் செய்ய வேண்டும். சபாஷ் தீபிகா!

வாதங்கள்

இந்தத் தாக்குதலை எதிர்பார்க்காத டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை தன்னிலை விளக்கம் அளித்தது: “அச்சு ஊடகம், தொலைக்காட்சி, வானொலி, இணையதளம் என்று பல்வேறு ஊடகப் பிரிவுகளைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனம் எங்களுடையது. ஒவ்வொரு ஊடகத்தினையும் ஒவ்வொரு வகையில் அணுகுவோம் நாங்கள். இணையதளத்தில் இந்த மாதிரியான உணர்ச்சிகரமான தலைப்புகள் புதிதல்ல. இணையதளத்தில் போட்டிகள் அதிகம்; ஒழுங்கு முறைகள் என்பதை எதிர்பார்க்கமுடியாது…..’

பதிலுக்கு தீபிகா தனது முகநூல் பக்கத்தில் எழுதினார்: ‘நான் ஏற்கும் பாத்திரத்திற்கு ஏற்றவாறு நான் உடல் முழுவதும் போர்த்திக்கொண்டோ அல்லது நிர்வாணமாகவோ வரவேண்டும். ஒரு நடிகையாக எதை ஏற்பது எதை தவிர்ப்பது என்பது என் விருப்பம். அது ஒரு பாத்திரம்; உண்மை அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். நான் ஏற்கும் பாத்திரத்தை பார்ப்பவர்கள் ஏற்கும் வகையில் நடிப்பது எனது தொழில்’.

டைம்ஸ் பத்திரிகை: ‘இந்த வாதத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளுகிறோம். ஆனால் நீங்கள் மேடையில் நடனம் ஆடும்போது, ஒரு பத்திரிகை மேலட்டைப் படத்திற்காக புகைப்படம் எடுக்கும்போது, அல்லது ஒரு படத்தின் விளம்பரத்திற்காக நீங்கள் அணியும் உடைகள் எந்த வகையைச் சார்ந்தது? எந்த மாதிரியான கதாபாத்திரங்களை நீங்கள் ஏற்கிறீர்கள் இந்த சந்தர்ப்பங்களில்? ஏனிந்தப் பாசாங்கு? தீபிகாவிற்கு ஆதரவு என்று சொல்லிக்கொண்டு எத்தனை ஊடகங்கள் இந்த புகைப்படத்தை தங்கள் வெளியீடுகளில் போட்டுக்கொண்டன? இந்த புகைப்படம் இல்லாமல் இந்த விஷயத்தை பேசியிருக்கலாமே? இது என்னவகையான போலித்தனம்? இந்தப் புகைப்படங்கள் எல்லாம் யாரோ ஒருவர் உங்கள் அறைக்குள் யாருக்கும் தெரியாமல் நுழைந்தோ, அல்லது மறைக்கப்பட்ட காமிராக்கள் மூலமோ, அல்லது உங்கள் அனுமதியின்றியோ எடுக்கப்பட்ட படங்கள் அல்ல’.

தீபிகா: ‘ஒரு ஆணின் கட்டழகைப் பார்க்கும்போது எங்களுக்கும் பொறாமை வரும். ஜொள்ளு விடுவோம். ஆனால் நிச்சயம் அவனது அந்தரங்க உறுப்பினை பெரிது படுத்திக் காட்டி அதற்கு கேவலமான ஒரு தலைப்பும் கொடுக்க மாட்டோம்’.

டைம்ஸ் பத்திரிகை: நாங்களும் உங்கள் அந்தரங்க உறுப்புகளைப் பெரிது பண்ணிக் காண்பிக்கவில்லை. தலைப்பு இன்னும் நல்லவிதமாக இருந்திருக்கலாம் என்பதை நாங்களும் ஒப்புக்கொள்ளுகிறோம். எங்களுக்கு ஒரு தணிக்கை குழு வேண்டுமென்று சொல்லுகிறீர்களா? அல்லது உங்கள் புகைப்படங்களில் எவற்றைப் போடலாம் என்று ஒவ்வொருமுறையும் உங்களைக் கேட்க வேண்டுமா? தார்மீக போலீஸ் வேடம் போட நாங்கள் தயாராக இல்லை.

தீபிகா: ‘எனக்கு இந்த விஷயத்தைப் பெரிது படுத்த விருப்பமில்லை; நான் அதிகம் பேசினால் தேவையில்லாமல் அந்தப் பத்திரிக்கைக்கு விளம்பரம் கிடைக்கும். அவர்களும் இந்த விஷயத்தை பெரிது படுத்தி வேறு விதமாக திரித்து தகாத ஒரு தலைப்புடன் எழுதக் கூடும்’

டைம்ஸ் பத்திரிகை: ‘இப்படிச் சொல்லும் நீங்கள் உங்கள் கருத்துக்களை மறுபடி மறுபடி ட்வீட் செய்ததுடன் பலருக்கும் இது பற்றி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். வெளிவரப்போகும் உங்கள் புதிய படத்திற்கான விளம்பரமா இது? நாங்கள் போட்டிருக்கும் வீடியோ கிட்டத்தட்ட ஒரு வருடமாக யூடியூபில் இருக்கிறது. இப்போது ஏன் இந்த மறுப்பு? உங்களுக்கு ஆதரவாக இந்த விஷயத்தை பேசிய மற்ற ஊடகங்கள் இனி இதுமாதிரியான படங்களை போடாமல் இருக்குமா?’

சமூக ஆர்வலர் கவிதா கிருஷ்ணன் தீபிகாவிற்கு ஆதரவாக உடனே ட்வீட் செய்ததுடன் நிற்காமல் பத்திரிக்கையின் இந்தத் தன்னிலை விளக்கத்திற்குப் பிறகு தனது முகநூல் பக்கத்தில் இப்படி எழுதினார்.

தீபிகா பகிர்ந்துகொண்டிருக்கும் புகைப்படங்களைப் பார்த்து, ‘தீபிகா தனது உடலழகை பெருமையுடன் காட்டிக் கொள்ளும்போது, நாம் போட்ட தலைப்பு நியாயமானதே என்று உங்களுக்குத் தோன்றலாம். உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். ஒரு நடிகையாக தன்னை நிலைநிறுத்த அவர் தன் உடலை காட்டிக்கொள்ளுகிறார் என்றே வைத்துக் கொள்ளுவோம். தெருவில் போகும் ஒரு சாதாரண மனிதன் உங்களின் தலைப்பை படித்துவிட்டு அதை தனக்குக் கிடைத்த உரிமமாக எடுத்துக்கொண்டு தீபிகாவின் உடலழகை எட்டிப் பார்த்துவிட்டு அவரது முகத்திற்கு எதிரிலேயே அவரை விமரிசிக்கிறான்; அல்லது அவரை மோசமாக நடத்துகிறான் என்றால் அவர் அப்படிக் ‘காண்பித்ததால்’ அவன் அப்படி செய்வது சரி என்று சொல்வீர்களா?

அவன் சும்மா தீபிகாவின் அழகை ரசித்தான் என்று சொல்வீர்களா? தங்கள் உடலழகைக் காட்டும் பெண்களை விட, அடக்க ஒடுக்கமான பெண்ணை முறைப்பதும் அவளது அங்கங்களைப் பற்றி விமரிசிப்பதும் தான் குற்றம், பாலியல் அத்துமீறலா? இதைத்தான் சொல்லுகிறது உங்கள் பதில். நீங்கள் சொன்னதை திருப்பி பெற்று, மன்னிப்பு கேட்காமல் இப்படி சொல்வது இங்கிருக்கும் எல்லா பாலியல் வன்முறையாளர்களையும் கூப்பிட்டு ‘தங்கள் உடலழகைக் காட்டும் பெண்களைப் பற்றி ‘என்ன ஒரு வளைவு நெளிவுள்ள உடல் உனக்கு!’ என்று சொல்வது தவறில்லை என்று சொல்வது போலிருக்கிறது. எல்லா பாலியல் வன்முறையாளர்களும் ஒரு சேரத் திரண்டு வந்து உங்களுடன் சேர்ந்து பாலியல் பற்றி கொச்சையாகப் பேசுவதும், விமரிசனம் செய்வதும் சரி என்று சொல்லுகிறீர்களா?’

இத சர்ச்சைகளைத் தொடர்ந்து பல செய்திப் பத்திரிக்கைகள் இதெல்லாம் விளம்பரத்திற்காக பிரபலங்களும் பத்திரிக்கைகளும் செய்யும் தந்திரம் என்று எழுதின. ஆனால் ஹிந்து பத்திரிகை தனது வலைத்தளத்தில் டைம்ஸ் பத்திரிக்கையை கண்டித்திருக்கிறது. டைம்ஸ் பத்திரிக்கைக்கு ஹிந்து பத்திரிக்கையின் சார்பில் எழுதப்பட்ட திறந்த கடிதத்திலிருந்து சில பகுதிகள்:

அன்புள்ள டைம்ஸ் ஆப் இந்தியா,

பல சமயங்களில் வாயைத் திறக்காமல் இருப்பது நல்லது. இணையதள உலகமே திரண்டு வந்து உங்களை சாடியபோது – நீங்கள் செய்தது சரி என்று உங்களுக்குத் தோன்றியபோதும் – சற்று உள்ளாய்வு செய்திருக்கலாம். அல்லது வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கலாம்.

உங்கள் தன்னிலை விளக்கத்திலிருந்து சில வரிகள்:
‘பல ஊடகங்களை நடத்தும் நாங்கள் ஒவ்வொரு ஊடகத்தையும் ஒவ்வொரு வகையில் கையாளுகிறோம்……..’ நீங்கள் சொல்வது சரி என்றாலும் ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் பண்பு, நெறிமுறைகள் உண்டல்லவா? அவற்றை மீறலாமா?

‘இணையதளத்தில் இந்த மாதிரியான உணர்ச்சிகரமான தலைப்புகள் புதிதல்ல……’
இந்த வரிகள் உங்கள் செய்கைக்கு நீங்கள் துளிக்கூட வருந்தவில்லை என்பதைக் காட்டுகிறது. ‘நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் இங்கு இப்படித்தான்; நீங்கள் இவற்றை பழக்கிக் கொள்ளவேண்டும்’. என்று சொல்வது போல இது இருக்கிறது.

‘இணையதளத்தில் போட்டிகள் அதிகம்; ஒழுங்கு முறைகள் என்பதை எதிர்பார்க்கமுடியாது…..’ இது உண்மை என்றாலும் நீங்கள் உங்கள் தளத்தில் போடும் விஷயங்களைப் பற்றி நீங்கள் தான் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், இல்லையா?

தீபிகாவின் பல புகைப்படங்களை நீங்கள் தொகுத்து அவரது உடலழகு வெளிப்படுமாறு போட்டிருக்கிறீர்கள். அதற்கு நீங்கள் கொடுத்த தலைப்பு அவர் வேண்டுமென்றே இதுபோல காட்சி அளித்தது போன்ற ஒரு தோற்றத்தை கொடுக்கிறது. இதுதான் தீபிகாவிற்குக் கோபத்தை உண்டாக்கியிருக்கிறது. நீங்கள் செய்ததற்கும், தெருவில் போகும் ஒரு பெண்ணைப்பார்த்து ஒருவன் விசில் அடிப்பதற்கும், பேருந்தில் பிரயாணம் செய்யும் ஒருவன் கூடப் பயணிக்கும் பெண்ணின் துப்பட்டா விலகும்போது எட்டிப் பார்ப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தீபிகா இதை விளம்பரத்திற்காகச் செய்தாரா? தெரியவில்லை. பொதுமக்கள் உங்களைப் பார்த்து இதே கேள்வியைக் கேட்கிறார்களே!

உங்களுக்கு ஒரு தணிக்கைக்குழு தேவையில்லை. ஆனால் ஒருவிஷயத்தை வெளியிடும்போது மற்றவர்களுடன் கலந்தாலோசிப்பதில் தவறில்லை.

இந்த நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடு பெண்கள் இங்கு நடத்தப்படும் முறை. தினமும் ஒரு கற்பழிப்பு செய்தி வந்துகொண்டிருக்கும் நேரத்தில் இப்படி மிக நேர்த்தியாக ஒன்றைச் செய்துவிட்டு அதைப்பற்றிய வருத்தம் கூட இல்லாமல் இருப்பது விஷயத்தை மேலும் மோசமான நிலைக்கு எடுத்துச் செல்லுகிறது. தாங்கள் இதைபோல ஒரு பொருளாக்கப்படுவதை எந்தப் பெண்ணும் தீபிகா உட்பட விரும்புவதில்லை. சமுதாயத்தின் இந்த மனநிலைக்கு எதிராகத்தான் பெண்கள் போராடி வருகிறார்கள்.

தீபிகாவின் உள்ளுணர்வைப் புரிந்துக்கொண்டு மன்னிப்புக் கேட்டிருக்கலாம் அல்லது வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கலாம். இரண்டும் செய்யாமல், விஷயத்தையும் தவறாகப் புரிந்து கொண்டு ஆழமான குழியில் விழுந்துவிட்டீர்கள்!

இப்படிக்கு உங்கள் பதிலால் வெறுப்படைந்த ஒரு பெண்.

தொகுத்துப் பார்க்கும்போது, இரண்டுவிதமான குரல்கள் இங்கே ஒலித்திருப்பதைக் காணமுடிகிறது. ஒன்று, தவறையும் எழைத்துவிட்டு, அதனை இறுதிவரை ஒப்புக்கொள்ளாத அல்லது ஒப்புக்கொள்ள துணிச்சலற்ற ஒரு ஆணாதிக்கக் குரல். இரண்டு, அந்த மனபாவத்தை மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டி கண்டிக்கும் ஆரோக்கியமான குற. ஒரு சமூகத்தில் எந்தக் குரல் அதிகமாகவும், வலிமையாகவும் ஒலிக்கிறது என்பதை வைத்துத்தான் அந்தச் சமூகத்தின் தரத்தை மதிப்பிடமுடியும்.

இறந்தபின் உலகம் நம்மை எப்படி நினைவில் கொள்ள வேண்டும்?

யோசிப்போமா?

தினமணி வலைப்பூ பகுதியில் 29.10.2014 வந்த எனது கட்டுரை

 

 

 

 

அந்தப் பெரிய ஹால் முழுக்க மனிதர்கள். எல்லோரும் சந்தோஷமாகப் பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் கையில் ஒரு தட்டுடன், அந்தத் தட்டு நிறைய தங்களுக்குப் பிடித்த உணவுப் பொருட்களை போட்டுக் கொண்டு சாப்பிட்டவாறே தங்களுக்குத் தெரிந்தவர்களுடன் உரையாடிக்  கொண்டிருந்தனர். சிலர் கையில் தட்டுடன் உட்கார இடம் தேடிக் கொண்டிருந்தனர். சிலர் இன்னும் என்ன என்ன உணவுவகைகள் இருக்கின்றன என்று நோட்டம் விட்டுக்கொண்டே உணவை ருசி பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

காலையில் திருமணம். மாலையில் இந்த வரவேற்பு. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த திருமணம் இதோ இன்று நடந்திருக்கிறது. பெண் வீட்டார் பிள்ளை வீட்டார் இருவருக்கும் மனம் நிறைந்திருந்தது. மேடையில்  மணப்பெண், மணமகன் இருவரும் வருபவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்று, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களை சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். மிகவும் ரம்யமான சூழ்நிலை. மெல்லிய இசை எல்லோரையும் வருடிக் கொண்டு சென்று கொண்டிருந்தது.

 

என் பெண்ணுடன் அலுவலகத்தில் பணிபுரியும் சந்கீதாவிற்குத் திருமணம். கல்யாணப் பிள்ளையும் அதே அலுவலகத்தில் பணிபுரிகிறான். இருவரும் ரொம்பவும் வற்புறுத்திக் கூப்பிட்டதால் வெளியூரில் திருமணம் என்றிருந்தும் நான் வந்திருந்தேன். என் பெண்ணும் அவளது உற்ற தோழி பங்கஜாவும்தான் வருபவர்களை வரவேற்கும் பணியை ஏற்றுக்கொண்டிருந்தனர். என் பெண்ணுடன் வேலை செய்யும் எல்லோரையும் எனக்கும் ஓரளவுக்குத் தெரியும் என்பதால் எல்லோரும் மணமக்களைப் பார்த்துவிட்டு என்னையும் குசலம் விசாரித்துவிட்டு சென்றுகொண்டிருந்தார்கள்.

 

சுற்றிவர யாராவது எனக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று தலையைத் திருப்பி திருப்பிப் பார்த்தேன். அதோ, அங்கு பங்கஜாவின் மாமியார். காலையில் திருமணத்திலும் பார்த்து பேசிக்கொண்டிருந்தேன். அருகில் சென்றேன். ஏனோ முகம் கடுகடுவென்று இருந்தது. கண்களில் கோபம். என்னவாயிற்று? ‘மாமி, சாப்பிடலையா?’ என்று மெதுவான குரலில் விசாரித்தேன். அதற்கென்றே காத்திருந்தவர் போல படபடவென்று பொரிந்தார் அந்த மாமி. ‘நான் சாப்ட்டா என்ன, சாப்பிடலைன்னா என்ன?  சாப்பாடும் வேணாம் ஒண்ணும் வேணாம்….’

 

இந்த திடீர் கோபத்தில் சற்றுத் தடுமாறினாலும் விடாமல் கேட்டேன். ‘என்ன ஆச்சு?’ ‘இன்னும் என்ன ஆகணும்? அதோ பாருங்கோ, பங்கஜா குறுக்கும் நெடுக்கும் போயிண்டிருக்கா. நான் சாப்பிட்டேனா என்று ஒரு வார்த்தை கேட்டாளா? வரவாளோட சிரிச்சு சிரிச்சு பேச்சு! மாமியார் நெனப்பு ஏன் வரப்போறது?’

 

எனக்குப் புரிந்தது. இங்கு வந்தும் தனக்கு மாமியார் மரியாதையை எதிர்பார்க்கும் மாமி. பங்கஜா ரொம்பவும் நல்ல பெண். எந்தக் கல்யாணம் ஆனாலும், விழாவானாலும் மாமியாரை அழைத்துக் கொண்டு தான் வருவாள். மாமியும் ‘ஜம்’மென்று மாட்டுப்பெண் பின்னால் ஸ்கூட்டியில் உட்கார்ந்து வருவார். இதோ வெளியூர் திருமணத்திற்கும் மாமியாரை அழைத்து வந்திருக்கிறாளே! மாமிக்கு இது ஏன் புரியவில்லை? எனக்கு வியப்பாக இருந்தது.

 

‘அவள் வருகிறவர்களை விசாரித்துக் கொண்டிருக்கிறாள். நீங்கள் என்னுடன் வாருங்கள். இருவரும் சாப்பிடலாம்’ என்றேன். மாமி என் வார்த்தைகளுக்கு மசியவில்லை. மாட்டுப்பெண் தன்னை சாப்பிடச் சொல்லவில்லை என்ற கோவத்திலேயே இருந்தார். எப்படி மாமியை சமாதனப்படுத்துவது என்று நானும் யோசித்தவாறே அமர்ந்திருந்தேன். என் நல்ல காலம் பங்கஜாவின் கணவர் அந்தப் பக்கம் வந்தவர், என்னையும், தனது அம்மாவையும் பார்த்துவிட்டு ‘என்னம்மா, மாமியுடன் சாப்பிட்டுவிட்டு வாயேன்’ என்றார். அடுத்த நொடி அவருக்கு அம்மாவின் கோபம் புரிந்தது போலிருக்கிறது. ‘என்ன இங்கேயும் பங்கஜா உன்னை கவனிக்கவில்லை என்று குற்றப்பத்திரிகை படிக்க ஆரம்பித்துவிட்டாயா? எங்க வந்தாலும் நீ இப்படி மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு சண்டை போட்டால் என்னம்மா செய்வது? உன்னை அழைத்துக் கொண்டு வரவேண்டாம் என்று அவளிடம் சொன்னேன். அவள் கேட்கவில்லை. அம்மா தனியா இருப்பார் அழைச்சுண்டு போகலாம் என்று உனக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கிவிட்டாள். நீ இந்த மாதிரி வர இடத்திலெல்லாம் சண்டை போட்டாயானால் பங்கஜாவின் தோழிகள் இனிமே உனக்கு ‘சண்டைக்கார மாமியார்’ என்று தான் பெயர் வைப்பார்கள்.. உன்னோட யாரும் பேசக்கூட மாட்டார்கள். ‘அந்த சண்டைக்கார மாமி’ என்றுதான் உன்னை நினைவு வைத்துக்கொள்ளுவார்கள். எழுந்திரு. சாப்பிட வா…!’ என்று மாமியின் கையை பிடித்து அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

 

‘உன்னை எப்படி இவர்கள் நினைவு வைத்துக்கொள்ளுவார்கள் தெரியமா?’ என்று மாமியின் பிள்ளை கேட்டது எனக்கு திரும்பத்திரும்ப மனதில் ஓடியது. சட்டென்று  நோபல் பரிசு நிறுவிய ஆல்பிரட் நோபல் அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் என்று நான் படித்தது எனக்கு நினைவில் வந்தது. ஒருநாள் அவர் காலை செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். அதில் அவருக்கு ஒரு அதிர்ச்சி தரும் பயங்கரமான செய்தி இருந்தது. அவருடைய பெயர் ‘காலமானார்’ பகுதியில் பிரசுரமாகியிருந்தது. பார்த்தவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். நான் எங்கிருக்கிறேன்? பூமியிலா? மேலுலகத்திலா?

 

சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின் நிதானமாக யோசிக்க ஆரம்பித்தார். செய்தித்தாளுக்கு உண்மையைச் சொல்வதற்கு முன் தம்மைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்,  பத்திரிகைகள் என்ன எழுதியிருக்கின்றன என்று பார்க்க விரும்பினார். காலமானார் பகுதியில் ‘அணுகுண்டு  சக்கரவர்த்தி’ காலமானார்;  ‘மரண வியாபாரி’ மரணத்தைத் தழுவினார்’ என்று போட்டிருந்தது. தன்னுடைய மரணச் செய்தியைக் காட்டிலும் இந்த விவரணைகள் அவரை இன்னும் பயமுறுத்தின. ‘நமது மரணத்திற்குப் பின் நம்மை இப்படித்தான் உலகம் நினைவு வைத்துக் கொள்ளுமா?’ என்று யோசிக்க ஆரம்பித்தார்.

 

தன்னைப் பற்றிய சுயபரிசோதனையில் இறங்கினார். நம்மைப் பற்றி நினைக்கும்போது உலகம் சந்தோஷப்பட வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார். தன் வாழ்க்கையின் குறிக்கோளை மாற்றி அமைத்துக் கொண்டார். அன்று முதல் உலக அமைதிக்காக தன் வாழ்நாளை செலவழிக்க ஆரம்பித்தார். உலக அமைதிக்கான நோபல் பரிசு மிகப்பெரிய அங்கீகாரம் பெற்றது. பொருளாதாரம், விஞ்ஞானம் போன்ற மற்ற துறைகளுக்கும் இந்த நோபல் பரிசுகள் கொடுக்கப்படுகின்றன.

 

நாமும் சற்று யோசிப்போமா?  நாம் இருக்கும்போதும், நாம் மறைந்த பின்னும் நம்மைப் பற்றி இந்த உலகம் எப்படி நினைவில் கொள்ளவேண்டும்?

நண்பர்களை ஏமாற்றியவன்/வள்

தாயை ஏசியவன்/வள்

கூடப்பிறந்தவர்களை நெருங்க விடாதவன்/வள்

முதலில் சொன்ன மாமியைப் போல எங்கு போனாலும் சண்டை போடுபவள்/வன்?

நம் குழந்தைகளுக்கு நாம் விட்டுச் செல்லும் சொத்து என்ன? இந்த மாதிரியான அவப்பெயர் பெற்றவரின் பிள்ளை, பெண் என்ற பெயரா?

யோசிப்போமா?

http://blog.dinamani.com/?p=7354

 

யு. ஆர் அனந்தமூர்த்தி

 

ஆழம் பத்திரிக்கை அக்டோபர் இதழில் எதிர்ப்பு இலக்கியம் என்ற பெயரில் வெளியான எனது கட்டுரை

 

 

சமீபத்தில் மறைந்த யு. ஆர். அனந்தமூர்த்தி பன்முகத் திறமை கொண்டவர். பன்முகக் கலைஞர் மட்டுமல்ல; பன்முக ஆளுமையும் கொண்டவர். சமூக ஆர்வலரும் கூட. இவரை அணுகுவது, ஆராய்வது  கொஞ்சம் கடினம்தான்.

 

சிறுகதை எழுதுவதில் வல்லவரான இவர் எழுதிய சிறுகதைகள் 35, நாவல்கள் 6.  ஐந்து கவிதை தொகுதிகள் வெளியிட்ட மாபெரும் கவிஞர். பத்து கட்டுரைத் தொகுப்புகள் வெளியிட்ட  ஒரு தீவிரமான சமூக இலக்கிய விமர்சகர். ஐந்து  மொழிபெயர்ப்புத் தொகுப்புகள் வெளியிட்ட வெற்றிகரமான மொழி பெயர்ப்பாளர். இவை இவரது ஒரு பக்கமென்றால், இவரது வெளிப்படையான விமரிசனங்கள், பேச்சுக்கள் மூலம் பல சர்ச்சையின் நாயகனாக இருந்தது இவரது இன்னொருபுறம். பல விஷயங்களில் இவர் மேற்கொண்ட கடினமான நிலைப்பாடுகளால் பலவிதமான சர்ச்சைகளிலும் அகப்பட்டுக் கொண்டு தனது நிலையே சரி என்று வாதிடவும் செய்தவர். ‘நவீன கன்னட இலக்கியத்தின் சிற்பி’ என்று கன்னட இலக்கிய உலகிலும், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அறியப்படுபவர். இந்தியாவில் இலக்கியத்திற்காகக் கொடுக்கப்படும் மிக உயர்ந்த விருதான ஞானபீட விருது பெற்றவர். 1998 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருது பெற்றவர். 2013 ஆம் ஆண்டு மேன் புக்கர் விருது இறுதிச் சுற்றுவரை வந்தவர்களில் இவரும் ஒருவர்.

 

இளமைப்பருவம்:  

உடுப்பி ராஜகோபாலாசார்ய அனந்தமூர்த்தி என்னும் யு. ஆர். அனந்தமூர்த்தி 1932 ஆம் வருடம், டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி கர்நாடகாவிலுள்ள தீர்த்தஹள்ளி என்ற அழகிய கிராமத்தில் பிறந்தவர்  ஆரம்பக்கல்வி தீர்த்தஹள்ளியிலுள்ள துர்வாசபுராவில் இருந்த பழமை வாய்ந்த சமஸ்கிருதப் பள்ளியில் தொடங்கியது. மைசூரு பல்கலைகழகத்தில் கலைப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றபின் அந்தப் பல்கலைகழகத்திலேயே சிறிது காலத்திற்கு ஆங்கிலத்துறையில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். மேல்படிப்பிற்காக அங்கிருந்து காமன்வெல்த் ஸ்காலர்ஷிப்பில் இங்கிலாந்து சென்றார். இங்கிலாந்திலுள்ள பிர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் தனது முனைவர் பட்டத்தை – Politics and fiction in the 1930s என்பது இவர் எடுத்துக்கொண்ட விஷயம் – 1966 ஆம் ஆண்டு பெற்றார்.

 

மைசூரு பல்கலைக்கழகத்தில் ஆங்கில ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைகழகத்தில் துணை வேந்தராக (1987-1991) இருந்தார். நேஷனல் புக் ட்ரஸ்ட்-இன் தலைவராக 1992 ஆம் ஆண்டிலும் சாஹித்ய அகாதெமியின் தலைவராக 1993 ஆம் ஆண்டிலும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பல பல்கலைகழகங்களுக்கு வருகை தரும் பேராசிரியராகவும் இருந்தார். இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருமுறை பதவி வகித்தார். கர்நாடக மாநில மத்தியப் பல்கலைகழகத்தின் முதல் வேந்தராக 2012 இல் நியமிக்கப்பட்டார். எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.

 

குடும்பம்: இவரது மனைவி எஸ்தர். ஷரத் என்ற பிள்ளையும், அனுராதா என்கிற மகளும் இவருக்கு இருக்கிறார்கள்.

 

இலக்கிய சேவை:

எண்ணற்ற சிறுகதைகளும், நாவல்களும் எழுதிய இவரது பல கதைகள் திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன. சம்ஸ்காரா(நல்லடக்கம்), பவ (பிறப்பு) பாரதிபுரா, அவஸ்தே(அவலநிலை), கடஷ்ராத்த (சடங்கு) ஆகிய புத்தகங்கள் இவர் எழுதியவற்றில் புகழ் பெற்றவை என்பதுடன் கடுமையான விமரிசனங்களுக்கும் ஆளானவை.

 

 

இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் மக்களின் மனோநிலையைப் படம் பிடிப்பதாக இருக்கும். மனிதர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில், சந்தர்ப்பங்களில், காலகட்டங்களில் எப்படி மாறுபட்டு நடக்கிறார்கள் என்பது இவரது கதைகளின் முக்கியக் கருவாக இருக்கும். தனி மனிதர்களின் செயற்கைத்தனம், வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளை எழுதுவது இவருக்குக் கை வந்த கலை. சமூக அரசியல் பொருளாதார மாற்றங்கள் எப்படி பழமையான ஹிந்து சமூகங்களை பாதிக்கின்றன என்றும் அந்த பாதிப்பினால் அப்பா – மகன், கணவன்-மனைவி, தந்தை-மகள் இவர்களிடையே ஏற்படும் கருத்து மோதல்கள், எத்தனை கருத்து மோதல்கள் இருந்தாலும் இவற்றின் ஊடே மெல்லிய இழை போல ஓடும் அன்பு, பாசம் இவை இவரது கதைகளில் நிறையச் சொல்லப்படுகிறது. அதேபோல பிராமண சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்கள், அதன் பின்விளைவுகளான மாறுதல்கள் முதல் அரசு அதிகாரிகளுக்கு அவர்களது தொழில்துறையில் அரசியல்வாதிகளால் ஏற்படும் நெருக்கடி வரை இவரது படைப்புகளில் அலசப்படும் விஷயங்கள் பலபல வகைப்பட்டவை.

 

சம்ஸ்கார: பிர்மிங்காமில் முனைவர் பட்டத்திற்காக அவர் படித்துக் கொண்டிருந்த போது 1965 ஆம் ஆண்டு எழுதப்பட்ட நாவல் இது. வெளிவந்த  காலத்திலேயே பலமான சர்ச்சைகளைக் கிளப்பிய நாவல் இது.  ‘கர்நாடகத்தில் இருக்கும் மாத்வ பிராம்மணர்களுக்கு எதிராக எழுதப்பட்ட நாவல் இது’ என்றார் சிறுகதை எழுத்தாளரான மாஸ்தி வெங்கடேச ஐய்யங்கார். வி.எஸ். நைபால் ‘ஹிந்துக்களுக்கு எதிரானது இந்தக் கதை’ என்றார். இந்திய மொழிகள் பலவற்றிலும், பல அந்நிய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட கதை இது.

 

ஒரு பிராமண அக்ரஹாரத்தையும் அதில் வசிக்கும் ஒரு பிராமணரின் மரணத்தையும் சுற்றி வரும் கதை. இதில் வரும் பிராணேஷாச்சார்யாவும், நாராயணப்பாவும் அவர்களது குணாதிசயங்கள் மூலம் நம்மை கவர்பவர்கள். பிராமணராகப் பிறந்தும் மாமிசம் சாப்பிட்டும், விலைமகளிர் மனைக்குப் போவதும், இஸ்லாமியரை தன் வீட்டுக்கு அழைத்துவருவதுமாக வாழ்க்கை நடத்தும் நாராயணப்பா குழந்தை இல்லாமல் இறக்கிறார். தான் பிறந்த பிராமணக் குலத்தின் எல்லா விதிகளையும் மீறும் அவர் பிராமணரா என்ற கேள்வியுடன், அவரது கடைசிக் காரியங்களை யார் செய்வது என்ற கேள்வியும் எழுகிறது. இந்த நாவல் பழமைவாதிகளிடையே ஒரு பெரும் புயலை உருவாக்கியது. ஆனால் அனந்தமூர்த்தி இந்த நாவல் மூலம் இந்திய, கன்னட இலக்கியத்தின் திசையை மாற்றிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

1970 ஆம் ஆண்டில் இந்த நாவல் திரைப்படம் ஆக எடுக்கப்பட்டது. பல விருதுகளை வென்றது. முதலில் தடை செய்யப்பட்டாலும் பின்னர் வெளியிடப்பட்டது. கன்னட திரைப்படங்களின் மறுமலர்ச்சி இந்தப் படத்தின் மூலம் வெளியுலகிற்கு அறிவிக்கப்பட்டது.

 

சர்ச்சைகள்:

சர்ச்சைகளுக்கும், அனந்தமூர்த்திக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இவரது கதைகளில் வரும் சம்பவங்கள், கதை மாந்தர்களால் வரும் சர்ச்சைகளைத் தவிர இவர் சிலசமயங்களில் பேசும் பேச்சுக்களினாலும் சர்ச்சைகள் ஏற்படுவது உண்டு.

 

இவரைப்போலவே புகழ் வாய்ந்த இன்னொரு கன்னட எழுத்தாளர் பைரப்பா எழுதிய ‘ஆவரண’ புத்தகத்தைப் பற்றிய இவரது விமரிசனம் மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. கதையைப் பற்றிய விமர்சனத்தை விட ‘பைரப்பாவிற்கு நாவல்கள் எழுதுவது எப்படி என்று தெரியாது’ என்று இவர் சொன்னது பல சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்த சர்ச்சைகளின் காரணமாக இனி இலக்கிய விழாக்களில் பங்கேற்பது இல்லை என்று இவர் சபதமெடுத்தார். மகாபாரதத்தில் பிராமணர்கள் புலால் உண்பதைப் பற்றிய குறிப்பு இருக்கிறது என்கிற இவரது கூற்று பல ஹிந்து மதத் தலைவர்களின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியது.

 

ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜனதா கட்சி இரண்டுமே இவரது கடுமையான விமரிசனத்திற்கு ஆளானவை. சுமார் 50 வருட காலமாக இந்த இரண்டு அமைப்புகளையும் கண்டித்து வந்தவர், 2014 இல் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து மோதி பிரதமராக வருவதை கொஞ்சமும் விரும்பாததால் மோதி பிரதமராக இருக்கும் நாட்டில் தான் வாழ விரும்பவில்லை என்று அறிக்கை விட்டார். இந்த அறிவிப்பு பலத்த சர்ச்சையைக் கிளப்பியதுடன், கொலை மிரட்டல்களும் வரவே, இவருக்கு சிறப்புப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. எதிர்ப்பின் சூட்டைத் தாங்கமுடியாமல் ‘மிகவும் உணர்ச்சி வசப்பட்டு’ அப்படிக் கூறியதாகவும், இந்தியாவை விட்டு வெளியே போகும் முடிவு இல்லை என்றும் விளக்கமளித்துப் பின்வாங்கினார். மோதி பிரதமரானவுடன் மோதி பிரிகேட் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் மோதி ஆதரவாளர்கள் சிலர் இவருக்கு பாகிஸ்தான் போவதற்கு இலவச விமான பயணச்சீட்டு அனுப்பினர். இவரது மறைவுச் செய்தி வெளியானபின் பாஜக கட்சியினர் பலரும், ஹிந்து ஜாகரண வேதிகையை சேர்ந்தவர்களும் பட்டாசு வெடித்து இவரது மறைவைக் கொண்டாடினார்கள்.

 

தனது சுயசரிதத்தை ‘சுரகி’ என்ற பெயரில் எழுதியிருக்கிறார். சுரகி என்பது இவர் பிறந்த மலைநாட்டில் பூக்கும் ஒரு மலர். வாடினால் கூட இதன் மணம் மாறாது. தனது வீட்டின் பெயரையும் சுரகி என்றே வைத்திருந்தார் அனந்தமூர்த்தி.

 

‘சுரகி’ யில் இவர் கூறும் கருத்துக்கள் சில:

‘எந்தக் கேள்வியும் கேட்காமல் நாம் சில நம்பிக்கைகளை ஒப்புக்கொண்டு அதை பிரச்சாரம் செய்யவும் ஆரம்பித்துவிடுகிறோம். ஒரு அமைப்பின் அங்கமாக இருந்துகொண்டே அதற்கு எதிரான புரட்சியிலும் ஈடுபடுவது  இங்கு சாத்தியம்’. இந்தக் கருத்தைக் கொண்டிருந்ததாலோ என்னவோ பிராமண குலத்தில் பிறந்தும் தனது நாவல்களில் பிராமண சமூகத்தையும், அங்கு நிலவும் சில மூட பழக்கவழக்கங்களையும் எதிர்த்து வந்தார். அதனால் பிராமணர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்தார்.

 

தனது மனைவியை சந்தித்தது பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்: ‘என்னிடம் டியூஷன் படிக்க வந்த எஸ்தருக்கு நான் ஒரு வீட்டுப்பாடம் கொடுத்தேன். ‘உனக்குப் பிடித்த அல்லது பிடிக்காத ஒருவரைப் பற்றி எழுது’ என்று. அவள் எனது பாடம் கற்பிக்கும் பாணி பற்றியும், பாடம் சொல்லித் தரும்போது நான் செய்யும் சில செய்கைகள்  பற்றியும் கேலி செய்து எழுதியிருந்தாள். அதைப்படித்தவுடன் எனக்கு அவள் மேல் ஒரு சுவாரஸ்யம் எழுந்தது. அவளது அப்பாவித்தனம் என்னை ஈர்த்தது. அதுவே காதலாக மாறியது. என்னைப்புகழ்ந்து பேசும் ஒரு பெண் எனக்கு தேவையாய் இருக்கவில்லை. எனக்கு ஒரு துணை வேண்டியிருந்தது’.

 

புகழ் பெற்ற எழுத்தாளர் திரு ராமச்சந்திர குஹா, இவரைப் பற்றிக் கூறுகிறார்: ‘சிலர் சொல்லுகிறார்கள் அனந்தமூர்த்தி தனது வீட்டிற்கு சுரகி என்று பெயர் வைத்தது தன்னை அந்த மலருக்கு சமமானவன் என்று காண்பித்துக் கொள்ளத்தான் என்று. எனக்கென்னவோ அவர் அத்தனை அடக்கமில்லாதவர் என்று தோன்றவில்லை. அவரது நாவல்கள் சம்ஸ்கார, பாரதிபுரா இரண்டும் கன்னட இலக்கியத் தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துக் சென்றவை. அவர் கன்னடத்தில் எழுதும் பத்திகளைப் படிக்கவென்றே பல வாசகர்கள் காத்துக்கொண்டிருப்பார்கள். ஒரு முன்னோடி ஆங்கில ஆசிரியராக அவர் பல தலைமுறை எழுத்தாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கியிருக்கிறார். இளம் எழுத்தாளர்களை மிகவும் ஊக்குவிப்பார். தன்னை விட வயதில் இளையவர்களிடம் விவாதம் செய்வது அவருக்குப் பிடித்த விஷயம். அவரது மறைவிற்குப் பின் அவரது எழுத்துக்கள் கர்நாடக மாநிலத்தின் ஒவ்வொரு பகுதிலும் விவாதிக்கப்படும்’.

 

தனது வாசகர்களோடும், பொதுமக்களோடும் மிக நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டிருந்தவர் அனந்தமூர்த்தி. கன்னட இலக்கிய உலகிற்கும், இந்திய இலக்கியத்திற்கும் அனந்தமூர்த்தியின் பங்களிப்பு மிகப்பெரிய கொடை என்பது மறுக்க இயலாத ஒன்று. அவரது மறைவு கன்னட இலக்கிய உலகில் ஈடு செய்ய இயலாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது என்பது நூறு சதவிகிதம் உண்மை.

இனிய தீபாவளி வாழ்த்துகள்!

 

 

 

 

ஒரு ஊரில் ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த ஊருக்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்’எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!’ என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ”இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!”

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ”மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!”

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ”மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?”

”தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!”

”அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?”

 

”தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!”

”பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?”

”அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள் அங்கு விளைகின்றன.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!” என்றான் மன்னன்.

 

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத் தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

 

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைத்தால் அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

 

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

 

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

 

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே!

 

பதிவுலகத் தோழமைகளுக்கும், எனது பதிவுகளை தவறாமல் படிக்கும் நல்ல உள்ளங்களுக்கும்  2014 ஆம் வருட இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

 

 

அரசர் இல்லாத அரியணை

 

நவராத்திரி என்றால் இந்தியாவில் இரண்டு நிகழ்வுகள் நமக்கு நினைவிற்கு வருகின்றன. முதலாவது மைசூரு தசரா. இரண்டாவது மேற்குவங்கத்தில் நடக்கும் காளி பூஜை. வருடங்கள்தோறும் இவை மாறாமல் நடைபெற்று நமது பெருமை மிக்க பழைய பாரம்பரியத்தை உலகிற்குப் பறைசாற்றி வருபவை. மைசூரு தசரா பண்டிகை நாடஹப்ப (கர்நாடக மாநிலத்தின் பண்டிகை) என்று கொண்டாடப்படுகிறது. விஜயதசமி தினம்  மைசூருவின் சாமுண்டேஸ்வரி தேவி மகிஷாசுரனை வெற்றி கொண்ட நாள். மகிஷாசுரன் என்கிற பெயரிலிருந்தே மஹிஷூர் (பிற்காலத்தில் மைசூரு)  வந்திருப்பதாகவும் சொல்லுகிறார்கள். 2010 ஆம் வருடம் இந்த பண்டிகை தனது 400வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.

இந்தப் பண்டிகை விஜயநகரப் பேரரசர்களால் 15ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. பெர்ஷியன் தூதுவர் அப்துர் ரஜாக் இந்த பண்டிகையைப் பற்றி தனது Matla-us-sadain wa Majma-ul-Bahrain (இரண்டு புனித நட்சத்திரக் கூட்டங்களின் எழுச்சியும், இரண்டு கடல்களின் சங்கமமும்) என்ற புத்தகத்தில் மகாநவமி என்ற பெயரில் தசரா கொண்டாட்டங்கள் நடந்தன என்று குறிப்பிடுகிறார். விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மைசூரை ஆண்டுவந்த ஒடையார் வம்ச அரசர் ராஜ ஒடையார் இந்த தசராவை ஸ்ரீரங்கப்பட்டினத்தில் கொண்டாட ஆரம்பித்தார். தசரா கொண்டாட்டங்களில் 3வது கிருஷ்ணராஜ ஒடையார் காலத்தில் சிறப்பு தர்பார் இடம் பெற்றது. இந்த தர்பார் மைசூரு அரண்மனையில் கூடியது. அரச குடும்பத்தினரும், சிறப்பு விருந்தாளிகளும், அதிகாரிகளும், பொதுமக்களும் இந்த தர்பாரில் பங்குபெற்றனர். சென்ற வருடம் (2013) வரை இந்த வழக்கம் தொடர்ந்தது. மஹாநவமி என்று சொல்லப்படும் ஒன்பதாவது தினம் அரச உடைவாள் யானையின் மேல் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இந்த ஊர்வலத்தில் யானைகளுடன் கூட ஒட்டகங்களும், குதிரைகளும் இடம் பெறும்.

இந்தக் கொண்டாட்டம் நடைபெறும் பத்து தினங்களிலும்  மைசூரு அரண்மனை வண்ண வண்ண  விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிப்பது பார்க்க பார்க்க திகட்டாத ஒரு காட்சி. இதற்காக ஒரு லட்சம் விளக்குகள் ஒரு கோடி ரூபாய் செலவில் ஏற்றப்படுகின்றன. பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் அரண்மனையின் முன் நடைபெறும்.

மைசூரு அரண்மனை

விஜயதசமியன்று தசரா ஊர்வலம் (ஜம்போ சவாரி) நடைபெறும். தங்க மண்டபத்தில் சாமுண்டேச்வரி தேவி எழுந்தருளப்பட்டு மைசூரு நகரின் பிரதான வீதிகளில் வலம் வருவாள். இந்த தங்க மண்டபத்தின் எடை 750 கிலோ மட்டுமே! இந்த தங்கமண்டபம் அலங்கரிக்கப்பட்ட யானையின் மேல் ஏற்றப்பட்டு ஊர்வலம் வரும். ஊர்வலம் ஆரம்பிப்பதற்கு முன் அரச குடும்பத்தினரும், சிறப்பு விருந்தாளிகளும் தேவியை ஆராதிப்பார்கள்.

ஜம்போ சவாரி

நடனக் குழுக்கள், இசைக்குழுக்கள், அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டங்கங்கள் எல்லாம் இந்த ஊர்வலத்தின் அழகைக் கூட்டும். இந்த ஊர்வலம் மைசூரு அரண்மனையிலிருந்து துவங்கி பன்னிமண்டபம் (Banni Mantapam) என்று சொல்லப்படும் இடத்தில் முடிவடையும். இந்த இடத்தில் இருக்கும் பன்னி (வன்னி மரங்கள்) மரங்களுக்கு பூஜை நடக்கும். பாண்டவர்கள் தங்களது அஞ்ஞாதவாசத்தின் போது இந்த மரங்களில் தான் தங்களது ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தார்கள் என்பதால் அரசர்கள் இந்த மரத்தை வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. அன்று அரசர்கள் செய்த வழிபாடு இன்றும் மைசூரு தசரா பண்டிகையில் தொடருகிறது.

விளக்கொளி அணிவகுப்பு

தசரா கொண்டாட்டங்களின் இறுதி நிகழ்ச்சியாக விளக்கொளி அணிவகுப்பு பன்னிமண்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் லேசர் காட்சிகள், கரணங்கள் போடுபவர்களின் சாகசங்கள், மோட்டார் சைக்கிள் சாகசங்கள் மற்றும் குதிரையேற்றம் ஆகியவை இடம் பெறும். விளக்கொளி அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது அரசர் குதிரையேற்ற உடையில் குதிரை மீதமர்ந்து வந்து இராணுவ மரியாதையை ஏற்றுக் கொள்வார். இந்த நிகழ்ச்சி துவங்கும் சமயம் இரவுப் பொழுது வந்துவிடுமாதலால் நிறைய விளக்குகள் ஏற்றுவார்கள். அரசர் தனது இராணுவ பலத்தை தனது எதிரிகளுக்குத்  தெரியப்படுத்தவும், மக்களிடையே ‘இத்தனை பலமுடைய நான் உங்கள் ராஜா; உங்களைக் காப்பாற்றும் பொறுப்பு என்னுடையது’ என்ற ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தவுமே இந்த அணிவகுப்பு நடைபெறுகிறது.

இந்த வருடம் மைசூரு தசரா நடைபெறுமா என்பது இன்னும் சந்தேகமாகவே இருந்து வருகிறது. மாநில அரசு நிச்சயம் நடக்கும் என்று சொன்னாலும், மைசூரு அரண்மனையைச் சேர்ந்தவர்கள் நிச்சயம் தசரா பூஜை உண்டு என்று சொன்னாலும் எப்போதும் போல சோபையுடன் இந்த வருடம் நடக்காது என்றே சொல்ல வேண்டும்.

தசராக் கொண்டாட்டங்களில் தர்பார் ஒரு பகுதிதான் என்றாலும் பொதுமக்களுக்கு அரசரை அரியணையில் பார்ப்பது மிகவும் பிடித்த விஷயம். என்னதான் சுதந்திரம் கிடைத்து, குடியரசாக நாடு மாறிவிட்டாலும், இன்னும் அரசர்களுக்கும், அரச குடும்பங்களுக்கும் நம் நாட்டில் மிகப்பெரிய மரியாதை இருக்கத்தான் செய்கிறது.

அரசரின் அரியணை

கடைசி அரசர் ஸ்ரீகண்டதத்த ஒடையார் இயற்கை எய்தி இன்னும் ஒரு வருடம் கூட பூர்த்தி ஆகாத நிலை. அவருக்குப்பின் இதுவரை வாரிசு என்று யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை அரச குடும்பத்தினர். தசராவின் போது அரசர் தர்பாரில் அமர்ந்து காட்சியளிப்பது கண்ணுக்கினிய காட்சி. அரசர் இல்லாத நிலையில் யார் இந்த தர்பாரில், அரசரின் அரியணையில் அமருவார்கள்? மிகப்பெரிய கேள்வி இது. மறைந்த அரசரின் மனைவி அரியணையில் அமர விரும்பவில்லை என்று செய்திகள் வருகின்றன.

‘என்னுடைய எழுபது வயதுவரை எனது வாரிசு பற்றி யோசிப்பதாக இல்லை’ என்றவர் வாரிசு இல்லாமல் 60 வயதில் மரணமடைந்து தலக்காடு சாபத்திற்கு ஆளாகிவிட்டார் என்று எண்ண வைத்துவிட்டார் ஸ்ரீகண்டதத்த ஒடையார்.

அரியணையில் கடைசி அரசர் ஸ்ரீகண்ட தத்த ஒடையார்

அது என்ன தலக்காடு சாபம்?

விஜயநகரத்தின் தளபதி ஸ்ரீரங்கராயனிடமிருந்து ஸ்ரீரங்கப்பட்டினத்தை 1610 ஆம் ஆண்டு அன்றைய மைசூரு மகராஜா ராஜ ஒடையார் கைப்பற்றினார். ஸ்ரீரங்கராயனின் மனைவி அலமேலம்மா ஆதிரங்கனின் ஆலய நகைகளை எடுத்துக் கொண்டு தலைமறைவானபோது, ராஜ ஒடையார் அவரைப் பிடிக்க தனது படை வீரர்களை அனுப்புகிறார். அவர்களிடமிருந்து  தப்ப அலமேலம்மா தலக்காடு நோக்கி ஓடிவருகிறார். அங்கு மாலங்கி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, தப்ப முடியாத அலமேலம்மா, ‘தலகாடு மணல் மூடி போகட்டும்; மாலங்கி நதி மடுவாகட்டும்; ஒடையார் பரம்பரை வாரிசற்றுப் போகட்டும்’ என்று சாபமிட்டு விட்டு நதியில் குதித்து விடுகிறார்.

இப்போதும் தலக்காடு மணல் மூடித்தான் இருக்கிறது. மாலங்கி நதியில் நீர் வரத்து இல்லை. இந்த இரண்டு சாபங்களும் பலித்தது போலவே ஒடையார் பரம்பரையிலும் நேர் வாரிசு என்பது இல்லை. ஸ்ரீகண்டதத்தாவின் அந்திமக் கிரியைகளை அவரது சகோதரி மகன் காந்தராஜ் அர்ஸ் செய்தார். அவரே ஒடையார் பரம்பரையின் அடுத்த வாரிசாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது.

தசரா கொண்டாட்டங்களை நடத்த அரசியார் ப்ரமோதா தேவி சம்மதித்துவிட்டார்; ஆனால் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பங்குபெற மாட்டார்கள்; அரண்மனையில் எந்த கொண்டாட்டமும் நடப்பதையும் அவர் விரும்பவில்லை என்று அண்மைய செய்திகள் கூறுகின்றன. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இதற்கு முன் இந்த தசரா கொண்டாட்டங்களை நேரில் கண்டு அனுபவித்தவர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்தான்!

சுப்ரமண்ய சிவா அக்டோபர் 4

இந்தப் பதிவை எழுதியவர் திரு இன்னம்பூரான் சௌந்தரராஜன். படித்து மனம் நெகிழ்ந்து போனதால் இங்கு மறுபதிவு செய்கிறேன் – அவருடைய அனுமதியின் பேரில். நன்றி இன்னம்பூரான் ஸார்.

இன்று தேசாபிமானி சுப்ரமணிய சிவா அவர்களின் 130வது ஜன்ம தினம்.

‘லொட்!லொட்! ‘லொட்!லொட்!  ‘லொட்!லொட்!

இது என்ன ஊன்றுகோலா? அடிக்கற பெருந்தடியா? அதை விட்றா! அவர் கண்களிலிருந்து தீப்பொறி பறக்கிறதே. பயமா இருக்கு. தொள, தொளன்னு சொக்காய். பஞ்சகச்சம். கோணலா தலைப்பா. உள்ள நுழையறபோதே அதட்டறாரே! அதுவும் சின்ன முதலியாரை விளக்கெண்ணைய் என்கிறார். ‘வழ வழ வெண்டைக்காய் என்கிறார். அதுவா? சுப்ரமண்ய சிவா வந்திருக்கார். வேப்பமரத்தடிக்கு கூட்டிண்டு போ. அவரோட பேச்சுக்கொடுக்காதே. அவா பேசிக்கட்டும். இடம்: சாது அச்சுக்கூடம்.நவசக்தி ஆபீஸ். திரு.வி.க. தான் சின்ன முதலியார். அவ்வப்பொழுது நவசக்தியில் எழுதும் சிவா அவர்கள் சண்டை போட வந்திருக்கிறார். பரதநாட்டிய நர்த்தகி ருக்மணி தேவியை ஜார்ஜ் சிட்னி அருண்டேல் திருமணம் செய்வதை ஆதரித்த திரு.வி.க. அவர்களை நாவினால் சுட வந்திருக்கிறார், இந்த தீப்பொறி.

(தனிச்செய்தி: ஹிந்து, சுதேசமித்திரன் எல்லாம் இந்த விஷயத்தில் திரு.சிவா கட்சி.)

[‘Saunters in Subramania Sivam (Sivam) (1884-1925), the spit-fire patriot clad in a loose shirt, furled dhoti and tilted turban tut-tuting his inseparable staff. The staff and his flowing beard remind one of a domineering Moses. Having shattered the calm in Navasakthi [4] office, he aggravates the situation by loudly hailing for the ‘castor-oil Mudaliyar’, his epithet for ThiruViKa. His other epithets for him are, ‘vendaikkai’ and ‘vazha vazha’, all insinuating that there is no ‘cut and thrust’ to his writings. A contributor to the weekly himself, he had come to tongue lash him for supporting an Indian marrying a foreigner. Rukmini Devi (1904-1986), the classical dancer, was marrying George Sidney Arundale (1878-1945), the Theosophist. Leading lights like the Hindu and Swadesamithran had deplored it.]

ஒழுங்கா இருக்கு! போங்கோ! திரு.வெ.சாமிநாத சர்மா அவர்கள் எழுதியதை ஆங்கிலாக்கம் செய்து, அதை தமிழாக்கம் செய்தது மேலே. எல்லாம் அடியேன் உழவாரப்பணி தான்.

அக்டோபர் 4, 1884 சிறைப்பறவையும், விடுதலை வீரரும், ஆன்மிக எழுத்தாளரும் ஆன சுப்ரமண்ய சிவா அவர்களின் அவதார தினம். அவர் நீதி மன்றத்தில் அளித்த வாக்குமூலங்களில் ஒன்று:

”நான் ஒரு சந்யாசி. முக்தியடையும் வழியைப் பிரச்சாரம் செய்வதே என் வேலை. அதன் தத்துவங்களை எடுத்து விளக்கி அதை அடையும் மார்க்கத்தை போதிப்பதே என் வேலை. சகலவிதமான வெளி பந்தங்களினின்றும் விடுவித்துக் கொள்வதே ஆத்மாவிற்கு முக்தியாகும். இதே போன்று ஒரு தேசத்தில் முக்கியாவது – அந்நிய நாடுகளின் பிடிப்பினின்றும் விடுவித்துக் கொள்வது; பரிபூர்ண சுதந்திரம் அடைவது. அதையே இந்நாட்டு மக்களுக்கு நான் போதிக்கிறேன். அதாவது, சுதந்திர லட்சியம் அதை அடையும் மார்க்கம். புறக்கணிப்பது – சுதந்திரப் பாதையில் குறுக்கே நிற்கும் எதையும் – சாத்வீக முறையில் எதிர்ப்பது, சுதேச கல்வி இவையேயாகும்.”

நான் சம்பந்தப்பட்டவரை இவரை போன்ற சான்றோர்கள் அவதார புருஷர்களே. அப்படித்தான் எழுதுவேன். நாற்பதே வருடங்கள் வாழ்ந்து, ஜூலை 23, 1925ல் மறைந்தார். அதில் 14 வருடங்கள் [1908 -22] ஜெயிலுக்குப் போக வேண்டியது;வரவேண்டியது. குஷ்டரோகம் வேறு சிறைச்சாலை தந்த பரிசு. அது பெருவியாதியாம். ரயிலில் ஏற அனுமதி இல்லை. சிவா அவர்கள் கால்நடையாகவும், கட்டை வண்டியிலும், தமிழ் நாடு முழுதும் சுற்றினார். 2011 ஜூலை மாதம் பேப்பர்க்காரங்க ந்யூஸ்: இரண்டாயிரம் சதுர அடி பரப்பளவு; 48 அடி உயர கோபுரம். 40 லக்ஷம் ரூபாயாம். பெண்ணாகரத்தில் சிவா அவர்களுக்கு மணிமண்டபமாம்! அவருக்கு தெரிஞ்சா என்ன சொல்வாரோ? ஏன்னா நீங்க ம.பொ.சிவஞான கிராமணி என்று கேள்விபட்டிருக்கிறீர்களோ? பெரிய மீசையும், பெரிய ஆசையும் ( நாட்டின் மேல் தான், ஸ்வாமி!) வச்சவருக்கு கின்னஸ் பரிசு என்றால், இவருக்குத் தான் போகும்! அவர் ஒரு புத்தகம் போட்டார், “கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை’ என்று. சிலப்பதிகாரம் பற்றி இந்த ‘சிலம்புச்செல்வர்’் எழுதிய சில நூல்களை, ஒரு மின் தமிழருக்கு பரிசளிக்க வாங்கியபோது, “கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை’ இல் படித்தது

“…சிதம்பரம் பிள்ளையவர்களுடைய அந்திம நாட்கள் வறுமையால் வாடிப்போனதாக நேர்ந்தது தமிழ்நாட்டின் தப்பிதமேயாகும். அடிமைத்தனம் மிகுந்து விலங்கினங்கள் வசிக்கும் காடாந்தகாரமாக இருந்த தமிழ் நாட்டில் கல்லையும் முள்ளையும் களைந்து படாத துன்பங்களைப் பட்டுப் பண்படுத்தி தேசாபிமானம் என்ற விதையை நட்டுப் பயிர்செய்து பாதுகாத்த ஆதி வேளாளனாகிய சிதம்பரம் பிள்ளை துன்பம் நிறைந்த சிறைவாசத்தையும் கழித்து வெளியே வந்தபோது தமிழ்நாடு அவரைத் தக்கபடி வரவேற்று ஆதரிக்கத் தவறிவிட்டது…

சுப்ரமண்ய பாரதியார் சோறின்றி வாடிக்கொண்டே பாடிக்கொண்டு மறைந்தார். சுப்ரமண்ய சிவா ஊரூராகச் சென்று பிச்சைக்காரனைப்போல் பிழைத்து மாண்டார். தமிழ்நாட்டுத் தியாகிகளுள் தலைவரான சிதம்பரம் பிள்ளை வறுமையில் வாடியும் ஓசையில்லாமல் தமது கடைசி நாட்களைக் கஷ்டங்களிலேயே கழித்து ஒழித்தார்”.

அணிந்துரையில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை: (1946 ம் வருட இரண்டாம் பதிப்பு)

“அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவின் அனுமதியுடன் டாக்டர் பட்டாபி சீதாராமய்யா வெளியிட்டுள்ள காங்கிரஸ் வரலாற்றில் செüரிசெüரா சத்தியாக்கிரகம், நாகபுரிக் கொடிப்போர், பர்தோலி வரிகொடா இயக்கம் ஆகிய சிறுசிறு இயக்கங்களைப் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக வரையப்பட்டுள்ளனவே தவிர, சிதம்பரனாரின் சீரிய புரட்சியைப் பற்றி ஒரு வரிகூட, ஏன் ஒரு வார்த்தைகூட இல்லை” என்பதை “சிலம்புச் செல்வர்’ ம.பொ.சி. பதிவு செய்யும்போது அன்றும் எனக்கு விழியில் நீர்கோத்தது; இன்றும் கோத்தது…’

ஆறாம் திணையில் படித்ததில் ஒரு பகுதி:

வ.உ.சி.யையும் பாரதியையும் பற்றித் தமிழகம் அறிந்தளவிற்கு சிவம் கண்டறியப்படவில்லை. சுப்பிரமணிய சிவம் (1884-1925) தமிழக சமூக அரசியல் ஆன்மிகக் கருத்தியல் தளங்களில் இயங்கிய முனைப்பு தீவிர பரிசீலனைக்கும் கவனிப்புக்கும் உரியது. வழக்கு விசாரணையின்போது நீதிபதியின் முன் சிவம் கொடுத்த வாக்குமூலம், அவரது நோக்கு? அவர் யார்? என்பதை நன்கு தெளிவாக்குகிறது.

தமிழ் நேஷன் என்ற கழட்டிவிடப்பட்ட இணைய தளத்தில்:

‘…சுதந்திர போராட்ட வரலாறு இன்னமும் எழுதி முடிக்கப் படாத மகாகாவியமாகும்.

இதில் விடுபட்டுப்போன பெயர்களும் நிகழ்ச்சிகளும் ஏராளம். எத்தனையோ வீரத் தியாகிகளின் பெயர்கள் ஒப்புக்கு இடம் பெற்றுள்ளதே தவிர முழுமையான தகவல்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை…

…சுப்பிரமணிய சிவா என்று அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவம் ராஜம் ஐயர் நாகலட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு 4-10-1884 ஆம் வருடம் மதுரை அருகே உள்ள வத்தலகுண்டு என்ற ஊரில் பிறந்தார்…இவருடைய இளமைப் பருவம் வறுமையில் கழிந்தது. 12-வது வயது வரை இவர் மதுரையில் படித்தார். பின்னர் திருவனந்தபுரம் சென்று அங்கே இலவச உணவு உண்டு படித்தார். பின்னர் கோயம்புத்தூரில் ஒரு வருடம் பிரவேச தேர்வுக்காக படித்தார் இக்காலமே இவரின் தேச பக்தி அரும்பத் தொடங்கிய காலம். இக்காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த போயர் யுத்தத்தில் போயர்களின் வீரச்செயல்களை பாராட்டி ஆங்கிலத்தில் பல கவிதைகள் இயற்றியுள்ளார் (அவற்றில் ஒன்று கூட இப்பொது நமக்கு கிடைக்கவில்லை )… 1899-ல் இவருக்கும் மீனாட்சியம்மைக்கும் திருமணம் நடைபெற்றது. இல்லறத்தில் நுழைந்தாலும் தேச சேவை மறந்தாரில்லை…

…1906-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஆரிய சமாஜத்தை சேர்ந்த தாவுர்க்கான் சந்திரவர்மா சொற்பொழிவாற்றினார். இதனை கேட்ட சுப்பிரமணிய சிவாவின் தேசபக்தி சுடர் அனலாய் எரியத் தொடங்கியது. இதன் நோக்கம் இளைஞர்களின் மனதில் தேசபக்தியை உருவாக்கி சுதந்திர உணர்வை தூண்டுவதே ஆகும். இதனை எதிர்த்த திருவாங்கூர் சமஸ்தானம் சிவாவை திருவாங்கூவுர் சமஸ்தானத்தில் இருந்து உடனே வெளியெற உத்தரவிட்டது. இதன் பின்னர் இவர் ஊர் ஊராகச் சென்று ஆங்கில அரசுக்கெதிராக பிரச்சாரம் செய்து வந்தார்…

சிவா மிகச் சிறந்த சொற்பொழிவாளர்… சிவா 2-11-1912-ல் விடுதலை அடைந்தார். விடுதலைக்குப் பின் சென்னையில் குடியேறினார். சென்னையில் பிரபஞ்ச சமித்திரன் என்ற வாரபத்திரிகையையும், ஞானபானு என்ற மாத பத்திரிகையையும் தொடங்கினார். ஞானபானு-வில் பாராதியாரின் படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டார். பாண்டிச்சேரியில் இருந்த பாரதிக்கு ஞானபானு சுதந்திர போராட்ட ஆயுதமாக திகழ்ந்தது. பாரதி பல புனைப் பெயர்களில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி தேசிய உணர்வு ஊட்டினார். குத்தலும், கெலியும், கிண்டலும் நிறைந்த அன்றைய ஜமீன்தார்களையும், அவர்களை அண்டிப் பிழைத்த புலவர் கூட்டத்தினையும் தோலுரித்து காட்ழய சின்ன சங்கரன் கதை ஞானபானு-வில் வெளிவந்த பாரதியின் படைப்புகளில் குறிப்பிட வேண்டிய ஒன்று. சுப்பிரமணிய சிவாவின் சென்னை வாழ்க்கை மிகுந்த நெருக்கடியில் தான் கழிந்தது. இந்நிலையில் அவருடைய மனைவி. மீனாட்சியம்மை உடல் நிலை மொசமாகி 15-5-1915-ல் சென்னையில் காலமானார். மனைவி இறந்தபின் சிவாவின் சுற்றுப் பயணங்கள் மேலும் அதிகப்பட்டன. ஊர் ஊராக சென்று மக்களுக்கு தேச உணர்வை கூட்டினார். பொது கூட்டமாக நடத்தாமல் மக்கள் எங்கு கூட்டமாக இருக்கிறார்களோ அங்கே பேசினார்.

1919-ல் மீண்டும் இந்திய தேசாந்திரி என்ற பத்திரிகையை தொடங்கினார். ஆரம்பம் முதலே சுப்பிரமணிய சிவா தொழிலாளர்பால் மிகுந்த அன்புடையவர்…தொழிலாளர்களுக்காக பகலிரவு பாராது உழைத்தார்…1920-ஆம் வருடம் கல்கத்தாவில் லாலா லஜபதி ராயின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் சம்பந்தமாக நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு விபின் சந்திர பாலர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக நின்றார்.

சிவாவின் உள்ளத்தில் காந்தியின் தாக்கமும் படியத் தொடங்கியது. தமிழ் நாடு என்ற பத்திரிகையில் திலகர் – காந்தி தர்சனம் என்ற சிறு நாடகத்தையும் சிவா எழுதியுள்ளார்…அவர் கலந்து கொள்ளாத மாநாடுகளோ, பொராட்டங்களோ இல்லை என்றெ சொல்லலாம். அவற்றில் எல்லாம் சிவாவின் எரிமலைப் பிரசங்கங்கள் இடம் பெற்றுள்ளன. சிவா மிகுந்த துணிச்சல் மிக்கவர்.

காந்தீயத்தின்பால் அவர் உள்ளம் சென்றாலும் அவரின் தீவிரவாதக் தன்மை என்றுமே அடங்கியதில்லை. சிவாவின் பிரசங்கங்கள் மக்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியதால் அரசாங்கம்… தருமபுரி அருகே உள்ள பாப்பாராபட்டியில் உள்ள தனது ஆசிரமத்தில் தேசபந்து சித்தரஞ்சன் தாசைக் கொண்டு 23-1-1923-ல் அடிக்கல் நாட்டினார். அந்த ஆலயத்தில் பல தேச பக்தர்களின் சிலைகளை நிறுவ நினைத்திருந்தார். அவற்றுள் வ.உ.சி. சிலைக்கு முதல் நிலை கொடுக்கவும் திட்டமிட்டிருந்தார்…சுப்பிரமணிய சிவாவிற்காக எதையும் செய்யத் துணிந்த வீரவாலிபர்களும், எதையும் தரத் தயாராக இருந்த செல்வந்தர்களும் பாப்பாராட்டியில் இருந்தனர்.இவர்களிடையே வந்து சேர்ந்த மறுநாள் அதாவது 23-7-1925 வியாழக்கிழமை காலை 5 மணிக்கு சுப்பிரமணிய சிவா தனது 41-வது வயதில் தனது இவ்வுலக வார்ழ்வை நீந்தார். சிவா வாழ்ந்த 40 வயதிற்குள் 400 வருட சாதனைகளை செய்து முழத்துள்ளார். தமிழகத்தின் பல நகரங்களில் சிவாஜி நாடகம் மூலமாக தேச பக்தியை பரப்பினார். அவரும் நாடகத்தில் பங்கெற்று நடித்துள்ளார். ராம கிருஷ்ணர் மீதும் விவேகானந்தர் மீதும் ஆழ்ந்த பற்று கொண்ட சிவா அவர்களின் நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புரட்சி செய்த சுப்பிரமணிய சிவா பல கனவுகளுடன் மறைந்து விட்டார்.

எல்லா கனவுகளையும் நீங்கள் நனவாக்காவிடினும், தேசாபிமானத்தையாவது உடும்புப்பிடியாக பிடித்துக்கொள்ளவும். அதை நிரூபிக்கும் வகையில், ஒரு வரி விடாமல், இந்த இழையை படித்து விட்டேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள். நாலு பேருக்காவது சுப்ரமண்ய சிவா அவர்களின் பாமர கீர்த்தி பாடிக்காண்பித்தேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள்.

இன்னம்பூரான்

நிக்கிமோ நிகாடோ

தூர்தர்ஷனில் செய்தி வாசிக்கும் பெண் ஒருவர், சீனப்பிரதமர் Xi Jinping அவர்களின் பெயரை இலெவன் (11) Jinping என்று படித்ததால் வேலைநீக்கம் செய்யப்பட்டார் என்று. படித்தவுடன் வாய்விட்டு சிரித்துவிட்டேன். அவர் என்ன செய்வார் பாவம்? Xi –ஐப் பார்த்தவுடன் அவருக்கு பள்ளியில் படித்த ரோமன் கணித எண் நினைவிற்கு வந்திருக்கிறது செய்தியை தயாரித்த மகானுபாவராவது அந்தப் பெண்ணிற்கு சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும் – சீனப்பிரதமரின் இந்தப் பெயரை எப்படி உச்சரிப்பது என்று.

சீனர்கள் பெயர் வைக்கும் முறை தெரியுமா? ‘குழந்தை பிறந்தவுடன் ஒரு தட்டை (plate) கீழே போடுவார்களாம். அது போடும் சத்தத்தை வைத்து ‘டிங்….டாங்..பங்’ அல்லது ‘தங்….கிங் …சங்’ என்று பெயர் வைப்பார்களாம். இந்தப் பிரதமர் பிறந்தவுடன் அவரது அம்மா கீழே போட்ட தட்டு ஜீ…ய் என்று சுற்ற ஆரம்பித்து ஜிங்….பிங் என்று நின்றுவிட்டதோ என்னவோ?

நமக்கு எப்படி அவர்கள் பெயர் வாயில் நுழையவில்லையோ, அதேபோலத்தான் நம் பெயர்களும் அவர்களுக்கு வாயில் நுழையாது போலிருக்கு. சீனர்கள் மட்டுமில்லை; வெளிநாட்டுக்காரர்கள் எல்லோருக்குமே நம் பெயர்கள் விசித்திரம் தான். இல்லையென்றால் என் மகனுக்கு நான் அருமையாக வைத்த ‘மாதவன்’ என்ற பெயர் அவனது வெளிநாட்டு சகாக்களால் ‘maddy’ ஆகியிருக்குமா? நாராயணன் என்ற பெயர் நட்டு-வாகியிருக்குமா?

இதனாலோ என்னவோ வெளிநாட்டிலிருக்கும்  நம்மவர்கள் அங்கு குழந்தை பிறந்தவுடன் வெளிநாட்டுக்காரர்கள் வாயில் நுழையும் பெயராக தேடுகிறார்கள். எனது மகனின் நண்பனின் முதல் குழந்தையின் பெயர் சியா. இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது என்றவுடன் நான் கேட்டேன்: ‘குழந்தையின் பெயர் ‘மியா(வ்)?’ என்று!

எனது வெளிநாட்டு மாணவர்கள் குறிப்பாக கொரியன்ஸ் இந்தப் பிரச்னையை அழகாக சமாளிப்பார்கள். அவர்கள் நிஜப்பெயரை சொல்லவே மாட்டார்கள். ஜேம்ஸ், ஜான், மேரி என்று நமக்குத் தெரிந்த பெயராகச் சொல்லிவிடுவார்கள். மங்கோலியாவிலிருந்து ஒரு மாணவர். தனது பெயரைச் சொல்லிவிட்டு ‘Teacher! you can call me NUTS!’ என்றவுடன் அடக்க முடியாமல் சிரித்துவிட்டேன். சிறிது நேரம் நான் ஏன் இப்படிச் சிரிக்கிறேன் என்று புரியாமல் விழித்துவிட்டு அவரும் அசடு வழியச் சிரித்தபடியே வகுப்பில் உட்கார்ந்து கொண்டார்.

ஒரு பெயரை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதை நான் முதன்முதலில் தெரிந்து கொண்டது 9 ஆம் வகுப்பில் படித்த போதுதான். பள்ளி அப்போதுதான் கோடைவிடுமுறைக்குப் பின் திறந்திருந்தது. எங்கள் வகுப்பிற்கு புதிதாக ஓர் பெண் வந்திருந்தாள். நாங்களாகப் போய் அவளுடன் பேசவில்லை. வகுப்பு ஆரம்பித்து சிறிது நேரத்தில் எங்கள் வகுப்பு ஆசிரியர் லில்லி கான்ஸ்டன்டைன் ஆசிரியர் வந்தார். அவர் கையில் ஒரு காகிதம். நாற்காலியில் உட்கார்ந்தவர் ‘புது அட்மிஷன் யாரு?’ என்றார். இந்தப் பெண் மெதுவாக எழுந்து நின்றாள். தன் கையிலிருந்த காகிதத்தைப் பார்த்து  ‘பசுபாதம், (வகுப்பு முழுவதும் ‘கெக்கே பிக்கே’ என்று சிரித்தது) இன்னா பேருடி இது? பசுபாதமா? cowfoot? உம்பேரு இன்னா?’ என்றார். பாவம் அவள். கொஞ்சம் திணறியபடியே, ‘எம்பேரு பாசுபதம், டீச்சர்,’ என்றாள். ‘ஏண்டி வேற பேரே கிடைக்கலையா? முருகன், சீனிவாசன் அப்படின்னு?’ ‘டீச்சர், அதெல்லாம் ஆம்பளைங்க பேரு….!’ கடைசி பெஞ்சிலிருந்து ஒரு குரல்! ‘என்ன கஷ்டமோ! ஒக்காரு’ என்றபடியே பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.

அன்றிலிருந்து பாசுபதம் எஸ்எஸ்எல்சி முடிக்கும்வரை லில்லி டீச்சரால் பசுபாதமாகவே கூப்பிடப்பட்டாள். எங்களுக்கெல்லாம் அவளைப் பார்த்தால் பாவமாக இருக்கும். சே! கொஞ்சம் நல்ல பேராக வைத்திருக்கலாம் என்று நினைத்துக் கொள்வோம். ஆனால் அவள் என்னவோ அப்படியெல்லாம் ‘feel’ பண்ணியதாகத் தெரியவில்லை. ‘மகாபாரதத்துல அர்ஜுனன் சிவபெருமானைக் குறித்து தவம் செய்து வாங்கிய அஸ்த்திரம் என்னோட பேரு!’ என்று பெருமிதமாகவே சொல்லிக்கொள்ளுவாள்.

சமீபத்தில் நாங்கள் ஜோக் செய்து சிரித்த பெயர்: குனால் கெம்மு. ‘கெம்மு என்றால் கன்னட மொழியில் ‘இருமல், இருமு’ என்று அர்த்தம்! அவர்கள் குடும்பத்தில் எல்லோரும் கெம்முவார்கள் போலிருக்கு என்று சொல்லி சிரித்துக்கொண்டிருந்தோம்.

சரி, தலைப்புல என்னவோ சொல்லிட்டு இப்ப என்னவோ பேசிகிட்டு இருக்கீங்களே என்கிறீர்களா? இதோ ஒரு ஜோக்:

ஜப்பானியர்களும், தமிழர்களுமாகச் சேர்ந்து ஒரு கட்டிடம் கட்டுகிறார்கள். பாதிவரை நன்றாக நிமிர்ந்து நின்ற கட்டிடம் பாதி கட்டியபின் ஒரு பக்கமாக சாய ஆரம்பித்தது பைசா கோபுரம் போல. ஜப்பானிய பொறியாளர் சொன்னார்: ‘இப்படி ஒரு பக்கமாக சாய்கிறதே! எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடும் போல இருக்கு. சீக்கிரமா இதற்கு ஒரு பெயர் வைத்துவிடலாம். பாதி ஜப்பான் பெயராகவும், பாதி தமிழ் பெயராகவும் இருக்க வேண்டும்’ என்று. நம்மாளு சொன்னார் பட்டென்று: ‘நிக்கி(கு)மோ நிகாடோ(தோ)!’