கிடைத்த தீர்ப்பும் கிடைக்காத நீதியும்

செப்டம்பர் மாத ஆழம் இதழில் வந்த எனது கட்டுரை

‘எங்க வகுப்பு முதல் மாடில இருந்தது. கூரை போட்ட வகுப்புதான். விபத்து நடக்கறதுக்கு ஒரு வாரம் முன்பு தான் புதுக்கூரை மாத்தினாங்க. பழைய கூரைகளை சமையலறையில் வைச்சிருந்தாங்க. சமையல்காரம்மா ஸ்டவ்வை அணைக்காம வெளில போயிருக்காங்க. பழைய கூரைல பிடிச்ச நெருப்பு வகுப்பறைகளுக்கும் பரவிடிச்சு. வகுப்பறைகளின் கதவுகள் தாழிடப்பட்டிருந்ததால எங்களால தப்பிச்சுப் போகமுடில…..’

கும்பகோணம் தனியார் பள்ளி ஒன்றில் 2004 ஆம் வருடம் ஜூலை 2௦ ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி ஆனால் அதிஷ்டவசமாக தப்பித்த ஒரு பெண் (இப்போது அவளுக்கு பதினெட்டு வயது) பழைய நினைவுகளை சொல்லிக் கொண்டு போகிறாள். சொல்லும்போதே குரலிலும் உடலிலும் பழைய நினைவுகளின் அதிர்வுகள் தெரிகின்றன.

‘நான் அப்படியே ஒரு பெஞ்சுக்குக் கீழே போய் படுத்துகிட்டேன்; கொஞ்சநேரத்துல சுத்திவர நெருப்பு பரவி அந்த சூடு தாங்காம மயக்கமாயிட்டேன். பக்கத்துல கட்டிட வேலை செய்துகிட்டிருந்த ஒருத்தர் வந்து ஜன்னல்களை உடைச்சு என்னை வெளியே இழுத்து போட்டாராம். என்னைபோல நிறைய குழந்தைகளை வெளியே இழுத்துப் போட்டாங்களாம். ஆனா யாருமே உயிரோட இல்ல…. நான் மட்டுமே உயிர் தப்பிச்சவ…..’

விபத்துக்குப் பிறகு மருத்துவ மனையில் ஒரு வருடம் இருந்துவிட்டு வீடு திரும்பிய பின்னும் இவள் முகத்திலும் கைகளிலும் இருக்கும் நெருப்புக் காயங்களின் வடுக்கள் வாழ்நாள் முழுக்க பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுக் கொண்டே இருக்கும்.

இந்த விபத்தில் தப்பித்த இன்னொரு பெண் (இப்போது வயது 20) சொல்லுகிறாள்: ‘நான் எப்படியோ தப்பித்துவிட்டேன்; ஆனால் என் தங்கை இந்த விபத்தில் இறந்துவிட்டாள். என் தந்தையும் இந்நிகழ்ச்சியின் காரணமாகவே மாரடைப்புக்கு பலியாகிவிட்டார். எங்கள் வாழ்வே பெரிய போராட்டமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் 50,000 ரூபாய் கொடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். எங்களுக்குப் பணம் தேவையில்லை. நாங்கள் பணம் கேட்கவில்லை. எங்களுக்கு சரியான நீதி கிடைக்கவில்லை. இதற்காகவா நாங்கள் பத்து நீண்ட வருடங்கள் காத்திருந்தோம்?’

விபத்து எப்படி நேர்ந்தது?

கும்பகோணம் காசிராமன் தெருவில் ஒரே வளாகத்தில் ஸ்ரீ கிருஷ்ணா நிதியுதவி ஆரம்பப்பள்ளி, சரஸ்வதி நர்சரி மற்றும் ஆரம்பப் பள்ளி, ஸ்ரீ கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆகியவை அமைந்திருந்தன. பள்ளிகள் வழக்கம்போலவே 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி காலை 9.15க்கு ஆரம்பித்தன. 10.30 மணி இடைவேளையின் போது ஒரு மாணவி தீயைப் பார்த்துவிட்டு வகுப்பு ஆசிரியையை உஷார் படுத்தியிருக்கிறாள். இந்த செய்தி மற்ற வகுப்புகளுக்கும் பரவுகிறது. முதல் தளத்தில் இருந்த சமையலறையில் கிளம்பிய சிறு பொறி அங்கிருந்த தென்னங்கீற்று ஓலைகளில் போய் விழுந்து, வகுப்பறைகளின் மேல் வேயப்பட்ட கூரைகளின் நடுவே பரவி பள்ளி முழுவதும் வேகவேகமாகப் பரவுகிறது. விபத்தின் போது அங்கு சுமார் 200 குழந்தைகள் இருந்திருக்கிறார்கள். மேல்தளங்களில் இருந்த குழந்தைகள் மாடிப்படிகளில் தடதடவென இறங்க ஆரம்பிக்கிறார்கள். மாடிப்படிகளில் வைக்கப்பட்டிருக்கும் தட்டுமுட்டு சாமான்களால் அவர்களால் வேகமாக இறங்கமுடியவில்லை. சமையலறையின் பக்கத்திலேயே மாடிப்படிகள். கூரைகளும் அவற்றைத் தாங்கும் மூங்கில்கழிகளும் தீக்கிரையாகி, ஓடிவரும் குழந்தைகளின் மேல் விழுகின்றன. வெளியேறும் வழிகள் அதிகம் இல்லாததாலும், கதவுகள் மூடப்பட்டிருந்ததாலும் குழந்தைகளால் தப்பிக்க முடியவில்லை. தீயணைப்புப் படையினர் 11 மணிக்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் இத்தனை பெரிய தீவிபத்தை எதிர்பார்த்து தயாராக வரததால் குழந்தைகளைக் காப்பாற்றும் பணி தாமதப்படுகிறது. ஒரு வழியாக ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தீயை அணைக்க முடிந்தது. ஆனால் அதற்குள் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்திருந்தனர்.

தீர்ப்பு என்ன?

பல வழக்குகள் பள்ளி நிர்வாகத்தினர் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் தொடரப்பட்ட போதும் வழக்கு விசாரணை பல்வேறு நீதிமன்றங்களுக்கு பல வருடங்களுக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்தது. பல வருடத் தாமதத்திற்குப் பிறகு 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி 4000 பக்க குற்றச்சாட்டு, 230 அரசு தரப்பு சாட்சிகள், 488 சாட்சிகள், பாதிக்கப்பட்ட 18 குழந்தைகளுடன் தமிழ்நாடு தஞ்சாவூரில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியது. தலைமையாசிரியர் பிரபாகரன் இன்னும் மூவர் அப்ரூவராக மாறினார்கள். மொத்தம் 17 பேர்கள் குற்றவாளிகளாக விசாரிக்கப்பட்டனர்.

ஸ்ரீகிருஷ்ணா நடுநிலைப்பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிச்சாமி, அவரது மனைவியும் பள்ளித் தொடர்பாளரும் ஆன சரஸ்வதி, தலைமையாசிரியை சாந்தலக்ஷ்மி, பட்டயப் பொறியாளர் ஜெயச்சந்திரன், ஆரம்பக்கல்வி அதிகாரி பாலாஜி, துணை ஆரம்பக்கல்வி அதிகாரி சிவப்பிரகாசம் மற்றும் ஆரம்பக்கல்வி அதிகாரியின் செயலர் தாண்டவன் ஆகியோருக்கும் 10 வருட கடுங்காவல் தண்டனையும் 47 லட்ச ரூபாய் அபராதமும் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

மதிய உணவு ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகியோருக்கு ஐந்து வருட கடுங்காவல் தண்டனையும் 25 லட்சம் ரூபாய் அபராதத் தொகையும் விதித்துள்ளது. இருப்பினும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று ஆசிரியர்கள் உட்பட 11 பேர்களை குற்றவாளிகள் அல்ல என்று விடுவித்துள்ளது. தீர்ப்பின்போது குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் சிலர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி இருந்தனர். விடுவிக்கப்பட்ட 11 பேர்களின் மீதும் மேல் நீதிமன்றத்தில் அரசு முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்தத் தீவிபத்து தமிழ்நாட்டில் இதுவரை நடந்த நான்கு பெரிய, மோசமான  தீ விபத்துக்களில் ஒன்று. முதலாவது தீ விபத்து 1997ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி நடந்த பிருகதீஸ்வரர் கோவில் தீ விபத்து. இதில் 60 பேர்கள் உயிரிழந்தனர். இரண்டாவது தீ விபத்து எரவாடி மனநலம் குன்றியவர்களின் காப்பகத்தில் 2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி நடந்ததது. இதில் 30 மனநலம் குன்றியவர்கள் இறந்தனர். மூன்றாவது தீ விபத்து ஸ்ரீரங்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் 2005 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி நிகழ்ந்தது. இதில் மணமகள் உட்பட 30 பேர்கள் பலியானார்கள்.

எந்தச் சூழ்நிலையில், எந்தக் காரணங்களினால் இந்த விபத்து நிகழ்ந்தது என்று கண்டறிய நீதிபதி கே. சம்பத் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அரசு அமைத்தது. இந்தக் குழு ஆகஸ்ட் 1ஆம் தேதி 2004 ஆண்டு தனது விசாரணையைத் தொடங்கியது. இந்தக் குழுவில் சென்னை லேடி வில்லிங்டன் மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் ராணி கந்தசாமி, கல்பாக்கம் அணுமின் நிலைய தீயணைப்பு அதிகாரி எஸ்.கே. சாக்சேனா, சென்னை மன நல அமைப்பைச் சேர்ந்த கே. விஜயன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பி.ஏ. அண்ணாமலை ஆகியோர் இருந்தனர்.

இந்தக் குழுவிற்கு அளிக்கப்பட்ட காலக்கெடு நான்கு மாதங்கள். ஆனால் நான்கு முறை இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு ஜூன் 30ஆம் தேதி  2005 – இல் தனது முடிவுகளை சமர்ப்பித்தது.

 • மூன்று வருடங்களாக கல்வி அதிகாரிகளால் இந்தப் பள்ளி பரிசோதனை செய்யப்படவில்லை;
 • கூரைகள் வேய்ந்த சமையலறையும், வகுப்பறைகளும் உள்ள இந்தப் பள்ளியில் கட்டிட சட்டதிட்டங்கள் சரிவர கடைபிடிக்கப் படவில்லை. இந்த மாதிரியான கட்டிடங்களில் கட்டாயம் இருக்க வேண்டிய அவசரகால வாயில்கள் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக பள்ளிக் கட்டிடமே குழந்தைகளுக்கு மரணப் பொறியாக அமைந்துவிட்டது.
 • இந்த மாதிரி சூழ்நிலைகளை கையாள ஆசிரியர்கள் சரிவர பயிற்சி பெற்றிருக்கவில்லை.

இந்த விபத்து நிகழ்ந்தபோது குழந்தைகளை காப்பாற்றுவதில் ஆசிரியர்களின் பங்கு என்ன என்பதே இந்த விசாரணையின் முக்கிய கேள்வியாக இருந்தது. குழந்தைகளைக் காப்பாற்றுவதை விட தங்களைக் காப்பாற்றிக் கொள்வதில் அவர்கள் முனைந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. ஏனெனில் ஆசிரியர்களில் பெரும்பாலோர் அதிக பாதிப்பிற்கு உள்ளாகவில்லை; ஆசிரியர்கள் குழந்தைகளை வகுப்பறையிலேயே இருக்குமாறு சொன்னதாக நேரில் பார்த்த சாட்சிகள் சிலர் கூறினர். இன்னொரு கருத்து ஆசிரியர்கள் தங்களால் முடிந்தவரை குழந்தைகளைக் காப்பாற்ற முயற்சி செய்தனர் என்கிறது.

மிகப்பெரிய அளவில் இறப்பு நேர்ந்ததற்கு என்ன காரணம்? பள்ளி நிர்வாகத்தினர்தான் என்று குழு அறிக்கை சமர்ப்பித்தது.

 • மாணவர்-ஆசிரியர் விகிதம் தங்கள் பள்ளியில் மிகச் சரியாக கடைபிடிக்கப் படுகிறது என்று கல்வி அதிகாரிகளிடம் காண்பிக்க பள்ளி நிர்வாகம் மற்ற இரு பள்ளிகளின் மாணவர்களையும் ஸ்ரீகிருஷ்ணா நடுநிலைப் பள்ளிக்கு வரவழைத்தது.
 • கூரை போட்ட வகுப்பறைகள் இருக்கக்கூடாது என்ற விதியை மீறியது இன்னொரு குற்றம்.
 • போதுமான அளவில் வெளியேற்ற வாயில்கள் இல்லாதது மற்றும் தீயணைப்பிற்குத் தேவையான உபகரணங்கள் பள்ளி வளாகத்தில் இல்லாதது.
 • ஆசிரியர்ளுக்கு பேரழிவு மேலாண்மை பற்றிய போதுமான பயிற்சி இல்லாமை.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் செய்த குற்றங்கள்:

 • புலவர் பழனிச்சாமி தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பள்ளிக்கு தவறான முறையில் உரிமம் வாங்கியது;
 • மதிய உணவு ஏற்பாட்டாளர் விஜயலட்சுமி பாதுகாப்பு முறைகளை சரிவர அமல் படுத்தாதது.
 • கும்பகோணம் மாவட்ட தாசில்தார் சட்டதிட்டத்தின்படி கட்டப்படாத பள்ளி கட்டிடத்திற்கு உரிமம் வழங்கியது.
 • பட்டயப் பொறியாளர் ஜயசந்திரன் ஒருமுறை கூட பள்ளிக்கட்டிடத்தைப் பார்வையிடாமலேயே ஸ்திரத்தன்மை உரிமம் வழங்கியது.
 • கூடுதல் துணை கல்வி அதிகாரி மாதவனும், அவரது உயரதிகாரி தாண்டவனும் அரசு அங்கீகாரம் இல்லாமலேயே பள்ளியை 6 வருடங்கள் இயங்கச் செய்தது.
 • அதிகாரம் இல்லாத மாதவனை பள்ளிக்கு உரிமம் வழங்க வைத்ததற்காக சிவபிரகாசமும், கொஞ்சமும் பொறுப்பில்லாமல் மாதவன் கையெழுத்திட்ட காகிதங்களை மேலிடத்திற்கு அனுப்பியதற்கு பாலாஜியும் குற்றவாளிகள் ஆனார்கள்.

ஆனால் இவர்கள் மட்டும்தானா குற்றவாளிகள்? தங்களது கௌரவத்திற்குத் தகுந்த பள்ளியா என்பதை முடிவு செய்ய பள்ளியின் கட்டணத்தைப் பார்க்கிறார்களே தவிர, அங்கிருக்கும் வசதிகளை பார்வையிட யாரும் மெனக்கெடுவதில்லை என்பது கசப்பான உண்மை; வேதனையான விஷயம். குழந்தைகளின் பாதுகாப்பு என்பது இரண்டாம் பட்சம் ஆகிவிட்ட நிலை. இந்நிலை மாறினால்தான் இன்னொரு விபத்து நடக்காமல் தடுக்க முடியும்.

இமேஜ் நன்றி: thisiskumbakonam.com