அன்புள்ள அம்மா…..,

எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலின் தமிழாக்கம்.

 

அன்புள்ள அம்மா,

எல்லா இளம் பெண்களையும் போலவே எனக்கும் திருமணம் என்பது மிகவும் இனிப்பான ஒன்றாக இருந்தது. திருமணத்திற்கு பின் என் இளவரச பேரழகனுடன் முடிவில்லாத இன்பத்தில் திளைத்திருப்பேன் என்று நினைத்திருந்தேன்.

 

ஆனால்…..திருமணத்திற்குப் பின் தான் தெரிந்தது, திருமணத்திற்குப் பின்னான வாழ்க்கை நான் நினைத்தபடி ரோஜாப்பூக்கள் தூவப்பட்ட அழகான பாதை அல்ல என்று. திருமணம் என்பது நம் மனதுக்குப் பிடித்தவனுடன் மட்டும் சந்தோஷமாக இருந்து சுகிப்பது இல்லை. அதற்கும் மேலாக பொறுப்புகள், கடமைகள், தியாகங்கள், விட்டுக் கொடுத்தல், அனுசரித்துப் போதல் இவற்றையும் சேர்த்தே திருமணம் என்பது என்று இப்போது புரிகிறது.

 

காலையில் நான் நிதானமாக எழுந்திருக்க முடியாது. எல்லோரும் எழுவதற்கு முன்பே எழுந்து மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்ற தயாராக இருக்க வேண்டும். நைட்டியுடன் நாள் முழுவதும் வீட்டில் சுதந்திரமாக அலைந்து கொண்டிருக்க முடியாது. நான் எப்போதுமே பார்க்க ‘பளிச்’ சென்று இருக்க வேண்டும். எப்போதுமே சுறுசுறுப்பாக வீடு முழுவதும் வளைய வந்து கொண்டிருக்க வேண்டும். நினைத்த மாத்திரத்தில் வெளியே போக முடியாது. குடும்பத்தவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். நினைத்த போது படுத்துக் கொள்ள முடியாது. என்னை யாரும் இளவரசியாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஆனால் இங்கிருக்கும் ஒவ்வொருவரையும் புரிந்துகொண்டு அவர்களுக்குத் தகுந்தாற்போல் நான் அனுசரித்துக் கொண்டு நடக்க வேண்டும்.

 

அப்போதுதான் அம்மா எனக்குத் தோன்றும்: ‘ஏன்தான் கல்யாணம் செய்து கொண்டோமோ?’ என்று. உன்னுடன் நான் எத்தனை சந்தோஷமாக இருந்தேன். சில சமயங்களில் நம் வீட்டிற்கு திரும்பி வந்துவிடலாமா என்று தோன்றும். உன் மடியில் படுத்துக் கொண்டு நீ என்னைக் கொஞ்சுவதை அனுபவிக்க வேண்டும். நீ எனக்குப் பிடித்த உணவுகளை சமைப்பாய். நான் ஒவ்வொரு நாளும் என் தோழிகளுடன் ஊர் சுற்றிவிட்டு வரும்போது சுடச்சுட சாப்பாட்டை வைத்துக் கொண்டு காத்திருப்பாய். உன் மடியில் படுத்துக் கொண்டு எனக்கு துன்பங்களே இல்லை என்பது போல உறங்க வேண்டும் என்று பல சமயங்களில் தோன்றும்.

 

இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கும்போது தான், அம்மா எனக்கு ஒரு விஷயம் உறைத்தது. நீயும் இப்படித்தானே திருமணம் செய்துகொண்டு உன் இளம் வயது நினைவுகளை துறந்திருப்பாய்? இன்றைக்கு நான் நம் வீட்டைப் பற்றிய இனிமையான நினைவுகளில் மூழ்க முடிகிறது என்றால் அது என் வயதில் நீ செய்த தியாகம் அல்லவா? எத்தனை கடமைகள், பொறுப்புகள், அனுசரித்தல் உன்னிடம்! இன்றைக்கு நான் இத்தனை மகிழ்ச்சியுடன் இருக்க உன் நல்லதனங்கள் அல்லவா காரணம்?

 

இதையெல்லாம் நீ எதற்கு செய்தாய் என்று யோசித்துப் பார்க்கிறேன். உன்னைப் பார்த்து, உன்னைப் போலவே நானும் இப்போது வாழ வந்திருக்கும் என் குடும்பத்திற்கு நல்லவைகளை வழங்க வேண்டும் என்பதற்குத் தானே?

 

உன்னிடமிருந்து நான் கற்ற நல்லவைகளை எனது குடும்பத்திற்குக் கொடுத்து நாளை இவற்றையே என் சீதனமாக என் இளைய தலைமுறைக்குக் கொடுப்பேன் அம்மா.

 

எங்களுக்காக நீ செய்த தியாகம், குடும்பத்தில் சந்தோஷத்தை நிலை நாட்ட நீ எடுத்த முயற்சிகள் எல்லாவற்றிற்கும் நன்றி அம்மா.

 

இதோ நானும் உன் பாதையில் நடக்க தயாராகிவிட்டேன்.

அன்புடன்,

உன் அருமை மகள்.

30 thoughts on “அன்புள்ள அம்மா…..,

  1. கொஞ்ச நாட்கள் முன்னர் சுற்றிக் கொண்டிருந்தது. உங்களுக்குத் தாமதமாக வந்திருக்கு போல! 🙂

  2. தொடர, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் வேகமாகக் கருத்திடுகிறேனாம், வேகத்தைக் குறைக்கச் சொல்லி வேர்ட் ப்ரஸ் அறிவுரை! 😛

    1. வாங்க கீதா!
      என்ன இப்படி ஒரு சூப்பர் ஃபாஸ்ட் கருத்துரை?

      யாராவது காப்பி அடித்துவிட்டேன் என்று சொல்லிவிடப்போகிறார்களே என்று அதைப் போட்டேன். உங்களுக்கும் வந்ததா?

      வேர்ட்ப்ரஸ் அப்படியெல்லாம் கூடச் சொல்லுகிறதா? ஆச்சர்யம்!

      1. ஆமாம், இதுக்கு முன்னேயும் ஒரு தரம் சொன்னது. அதைக் காப்பி,பேஸ்ட் பண்ண நினைச்சேன், முடியலை! 🙂

    1. வாங்க ஸ்ரீராம்!
      வருகைக்கும், படித்து மனம் நெகிழ்ந்ததற்கும் நன்றி!

  3. கல்யாண மாலைப் போட்ட பின் தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. பொறுப்புகளும், சுகமான சுமைகள் தான் என்று சொல்லாமல் சொல்லி விட்டீர்கள் ரஞ்சனி.

    1. வாங்க ராஜி!
      கல்யாணம் என்றால் சும்மாவா? எனக்கு மிகவும் பிடித்திருந்தது இந்தக் கடிதம். அதுதான் மொழி பெயர்த்துப் போட்டேன்.
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  4. //எங்களுக்காக நீ செய்த தியாகம், குடும்பத்தில் சந்தோஷத்தை நிலை நாட்ட நீ எடுத்த முயற்சிகள் எல்லாவற்றிற்கும் நன்றி அம்மா.//

    இவையெல்லாம் தியாகங்கள் கிடையாது. இயற்கையாக நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள். அரித்தால் சொரிந்துகொள்வதுபோல், அனிச்சையான செயல்கள். பக்கத்துவீட்டுக் குழந்தைகளுக்கு செய்திருந்தால் வேண்டுமானால், இன்றைய காலத்துக்கு அது தியாகமாக இருக்கலாம்.

    1. வாங்க பக்கிரிசாமி!
      சில குடும்பங்களில் பெண்கள் செய்யும் தியாகங்கள் வெளியில் வருவதே இல்லை. திருமணம் செய்துகொண்டு விட்டோம் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் தங்கள் சுயத்தை இழக்கிறார்கள். தங்களது பல திறமைகளை வெளியில் காண்பிப்பதே இல்லை. பல குடும்பங்கள் உடையாமல் இருப்பதற்கு அந்தக் குடும்பங்களின் பெண்களே காரணம்.
      ஆண்களால் இவற்றைப் புரிந்து கொள்வது சற்றுக் கடினம் தான்.
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

    1. வாங்க தனபாலன்!
      தானாகப் புரிந்துகொள்வதுதான் அழகு, இல்லையா?
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  5. பொருப்பென்பது அவ்வளவு சுலபமில்லை. முள்,கல் எல்லாம் தடுக்கி நல்ல வழியை அடைவதற்குள் அம்மாவை ஆயிரம் முறை நினைக்க வேண்டிவரும். அம்மா என்பது சும்மா இல்லை. அன்புடன்

    1. வாங்க காமாக்ஷிமா!
      ரொம்ப சரியாகச் சொன்னீர்கள்!
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  6. திருமதி காமாட்சி அம்மா சொன்னதுபோல் அம்மா என்றால் சும்மா இல்லை நினைக்கும்போதும் சொல்லும்போதும் இனிக்கும் உறவு வார்த்தை அது அம்மா ஆன பிறகுதான் தெரியும் அந்தப் பொறுப்பும் சுமைகளும் கஷ்டங்களும் மிகவும் அருமையாக பகிர்வு ரஞ்சனி பாராட்டுக்கள்

    1. வாங்க விஜயா!
      அம்மாவைப் பற்றி அருமையாகச் சொன்னீர்கள்.
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  7. எங்களுக்காக நீ செய்த தியாகம், குடும்பத்தில் சந்தோஷத்தை நிலை நாட்ட நீ எடுத்த முயற்சிகள் எல்லாவற்றிற்கும் நன்றி அம்மா.

    இதோ நானும் உன் பாதையில் நடக்க தயாராகிவிட்டேன்.

    அருமை

    1. வாங்க இராஜராஜேஸ்வரி!

      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  8. wow… அருமையான கடிதம்!! இது எனக்கும் ஏதோ ஒரு சங்கதி சொல்கிறது !!!

    1. வா சமீரா!
      எல்லா மகள்களுக்கும் இந்தக் கடிதத்தில் ஒரு சங்கதி உண்டு!
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  9. Yes Akka. You are right. Before getting married, i used to wander in house with shorts, no cooking or house cleaning, after coming from work, i will relax in front of tv. Now everything changed – i have to got up early in the morning, trying to earn more and more …no relaxation in front of tv…..all because ….i married to a princess….ha ha ha…..but i am not bored of this life….i am not worried…this life,..my life……even though i lost my personal desires and wishes…….i am not blubbering in front of others?????

    1. வாங்க ebby!
      நீங்கள் ஒரு ஆணா? ஏனெனில் married to a princess என்று சொல்லியிருக்கிறீர்கள். ஒரு ஆணும் தனது சுதந்திரத்தை திருமணத்திற்குப் பின் இழக்கிறான் என்று சொல்ல வருகிறீர்களா?
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  10. வணக்கம்!

    பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

    புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
    சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! – நித்தமும்
    தேனுாறும் வண்ணம் செயலுறட்டும்! செந்தமிழில்
    நானுாறும் வண்ணம் நடந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    1. வணக்கம், ஐயா!
      உங்களது புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மனார்ந்த நன்றி!

  11. பெண்களின் தியாகம் புரிகிறது! இப்பொழுது கொஞ்சம் நிலைமை பரவாயில்லை என்றே தோன்றுகிறது! உருக்கமான கடிதம்! பகிர்வுக்கு நன்றி!

Leave a comment