`நான் ஒரு பெண்; எனவே, நான் பாதுகாப்பாக இல்லை!’

image-12

 

 

ஜூலை 2014 ஆழம் இதழில் வெளியானா எனது கட்டுரை

ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களிலேயே சற்று  அச்சுறுத்தப்பட்டே வாழப் பழகிக்கொள்கிறாள்’

-இவா வைஸ்மன், தி கார்டியன் இதழ்

மேற்கண்ட வரிகளைப் படிக்கும்போது இந்த உலகத்தில் பெண்ணாகப் பிறப்பதே அபாயகரமானதோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு பெண்ணும் எப்போது என்ன நேருமோ என்ற பயத்திலேயே வாழ்கிறாளா? நிர்பயாவுக்கு நேர்ந்த கொடூரத்தைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் மக்கள் கொதித்து எழுந்தனர். பெண்கள் மீதான வன்முறைகளுக்கு ஒரு கட்டாய, நிரந்தரத் தீர்வு காணவேண்டுமென்று அரசாங்கத்தை வற்புறுத்தினர். ஆனால் நடப்பது என்ன? இன்னும் இன்னும் பல நிர்பயாக்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். சமீபத்திய உதாரணம், உத்தரப் பிரதேசத்தில் இரண்டு இளம் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, கொல்லப்பட்டு, மரத்தில் தொங்கவிடப்பட்ட சம்பவம்.

பாலியல் வன்புணர்ச்சி மட்டுமல்ல; அடி, உதை போன்ற வன்முறைகளும் பல பெண்களின் தினசரி வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது. உடலால் மட்டுமல்ல, மனரீதியிலும் துன்புறுத்தப்படுகிறார்கள். வீதியில் மட்டுமல்ல, இணையத்திலும்கூட ஒரு பெண்ணால் அச்சமின்றி உலாவமுடிவதில்லை. பலவாறான பாலியல் சீண்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் அவள் ஆளாகவேண்டியிருக்கிறது.

‘ஒவ்வொரு பெண்ணும் அந்நியர்களின் அடக்குமுறைக்கு ஆளாகிறாள்; ஒவ்வொரு பெண்ணும் ‘வேசி’, ‘வெட்கங்கெட்ட நாயே’, ‘தூய்மையற்றவளே’ என்று அழைக்கப்படுகிறாள்; பயமுறுத்தப்படுகிறாள்;  ‘உஸ்….உஸ்…’ என்று அழைக்கப்படுகிறாள்; அவளது காதுகளில் கீழ்த்தரமான வார்த்தைகள் கிசுகிசுக்கப்படுகின்றன; தெருவில் நடக்கும்போது, பேருந்துப் பயணத்தின் போது ஒரு ஆணால் வேண்டுமென்றே அழுத்தப்படுகிறாள், இடிக்கப்படுகிறாள். தேவையில்லாமல் தொடப்படுகிறாள்’ என்கிறார் தி கார்டியன் இதழில் பத்தி எழுதும் இவா வைஸ்மன்.

எத்தகைய பெண்கள் பலியாகிறார்கள்?

படிக்காத, வருமானம் இல்லாத, கணவனை அண்டி வாழும் பெண்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்தியாவில் அதிகம் படித்த, நிறைய சம்பாதிக்கும் பெண்களே அதிக வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்ற திடுக்கிடும் தகவலை ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வை மேற்கொண்ட நியூ யார்க் பல்கலைக்கழக மாணவி அபிகைல் வீட்ஸ்மன் கூறுகிறார்: ‘அதிகச் சம்பாத்தியம், அதிக படிப்பு பெண்களுக்கு உதவுவதில்லை. மாறாக கணவனின் வெறுப்பையும் கூடவே அடி உதையையும் பெற்றுத் தருகிறது’. இது குறித்து ஏற்கெனவே இரண்டு கருத்துகள் நிலவுகின்றன.

  • முதலாவது: நிறைய சம்பாதிக்கும் பெண் குறைவான வன்முறையை எதிர்கொள்வாள். ஏனெனில் தான் தவறாக நடந்து கொண்டால் எங்கே தன் மனைவிக்குப் பிடிக்காமல் போய்விடுமோ, அவள் தன்னை விட்டுவிட்டுப் போய்விடுவாளோ, அவள் சொத்துக்கள் தனக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்று ஆண் நினைப்பதால் அவளைப் பகைத்துக் கொள்ள விரும்பமாட்டான்.
  • இன்னொரு கருத்து: தன்னைவிட தன் மனைவி அதிகம் படித்திருப்பது, சம்பாதிப்பது அவள் முன் தன்னை சிறுமைப்படுத்தும்; அவளை தன் பிடியில் வைத்துக் கொள்வது கடினம். அதனால் வன்முறையால் மட்டுமே அவளை அடக்கமுடியும் என்று ஒரு ஆண் நினைக்கிறான்.

அபிகைல் செய்த ஆய்வு இந்த இரண்டாவது கருத்தை உறுதி செய்கிறது.

கணவனைவிட அதிகம் படித்த மனைவி, மற்ற மனைவியரைவிட 1.4 மடங்கு வன்முறையை அனுபவிக்கிறாள். பெண் மட்டுமே சம்பாதிக்கும் குடும்பத்தில் 2.44 மடங்கு வன்முறையை அனுபவிக்கிறாள். உலகளாவிய பெண்கள் முன்னேற்றம் என்று சொல்லும்போது பெண் கல்வி, பெண்ணின் பொருளாதார சுதந்தரம் இவை இரண்டும் முக்கிய இடம் பெறுகின்றன.  ஆனால் இந்தத் தகுதிகளே அவளை வன்முறைக்கு இரையாக்குகிறது என்பதை  இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

திருமணம் செய்துகொள்ள உரிமையில்லை

தங்கள் திருமணத்தைப் பற்றி கருத்து சொல்ல இந்தியாவில் பல பெண்களுக்கு உரிமை இல்லை என்று சமீபத்திய தி ஹிந்து ஆய்வு சொல்கிறது. அந்த ஆய்வின் சாராம்சம் இது:

  • இந்தியாவில் 40% பெண்களுக்கு அவர்களது விவாகத்தைப் பற்றி முன்கூட்டிச் சொல்லப்படுவதில்லை.
  • 18% பெண்கள் தான் கணவரைப் பற்றி முன்பே சற்று அறிந்திருந்தார்கள். இது பல காலமாக மாறாத துன்ப நிலை.
  • 80% பெண்கள், குடும்பத்தாரின் முன் சம்மதமின்றி மருத்துவ உதவியை நாட இயலாது.
  • 60% பெண்கள் தலையையும் மூடிக்கொள்கிறார்கள்.
  • சராசரி வரதட்சணை முப்பதாயிரம் ரூபாய்.
  • குழந்தை (18 வயதுக்குள்) திருமணம்  60 சதவிகிதத்திலிருந்து 48 ஆகக் குறைந்துள்ளது. மகப்பேறுகூட குறைந்து வருகிறது.
  • உறவுகளில் திருமணம் செய்வது ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் தொடர்ந்து நடைபெறுகிறது.
  • சொத்து சுதந்தரம் 10 சதவிகிதம்கூட இல்லை.
  • 80 சதவிகிதப் பெண்களுக்கு சொத்தில் சட்டப்படி பங்கில்லை.
  • 50 சதவிகிதப் பெண்கள் அனுமதி இல்லாமல் வெளியில் சென்றால், அடி வாங்குகிறார்கள்!

உலகெங்கும் இதே நிலை

இந்த வன்முறைகள் இந்தியாவில் மட்டுமல்ல; உலகெங்கிலும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. சூடான் நாட்டில் ஒரு பெண் கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் குழந்தை பெற்றுக்கொள்ளும்படி நிர்பந்திக்கப்பட்டிருக்கிறாள். குழந்தை பிறந்தவுடன் அப்படியே கிடந்து சாகவேண்டும் என்பது தண்டனை. காரணம் அவள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவள். பாகிஸ்தானில் குடும்பத்தாரின் அனுமதியின்றி காதலித்து கருவுற்ற ஒரு பெண்ணை லாகூர் நீதிமன்றம் எதிரில் அடித்தே கொன்றிருக்கிறார்கள். அவளது மரணத்துக்குப் பிறகு தெரிந்த இன்னொரு விஷயம். அவளை மணப்பதற்காக அவள் கணவன் தனது முதல் மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கிறான். சிரியா, தெற்கு சூடான், காங்கோ, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு போன்ற நாடுகளில் கூட்டம் கூட்டமாகப் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்படுகிறார்கள்.

போர்க்கால வன்முறைகள்

‘போராட்டங்கள் நடக்கும் இடத்தில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பது எப்படி? போராட்டங்கள் நாட்டின் வளங்களைக் காக்க அல்லது வறுமையை ஒழிக்க என்று எந்த வகையில் இருந்தாலும் பாலியல் வன்முறைகள் தினசரி நடைமுறையாகிவிட்டது எங்கள் நாட்டில்.  போராட்டங்களே இல்லாமல் செய்வது ஒன்றே இத்தகைய வன்முறைகளைக் கட்டுப்படுத்த ஒரேவழி’  என்கிறார் காங்கோ நாட்டைச் சேர்ந்த தெரசா மெமா மாபென்சி.

இவர் அந்த நாட்டில் புகாவு நகரில் நீதி மற்றும் அமைதி ஆணையத்தில் வேலை செய்கிறார். தினமும் ஒரு போராட்டம் நடக்கும் தனது நாட்டைப் பற்றிக் கூறுகிறார் இவர். ‘பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையிலிருந்து வயதான பெண்கள் வரை வன்புணர்ச்சிக்கு ஆளானவர்களை நான் சந்திக்கிறேன். எனது நாடான காங்கோ குடியரசில் நாங்கள் தினமும் அனுபவித்துவரும் பாலியல் வன்முறைகள் மனிதாபிமானமற்றவை என்பதுடன் எங்களுக்கு நீதியும் மறுக்கப்படுகிறது. எங்களை அவமானப்படுத்தியவர்கள், வன்முறைக்கு ஆளாக்கியவர்கள் எங்களின் முன்னிலையிலேயே சுதந்தரமாக உலா வருகிறார்கள். புரட்சியாளர் என்ற போர்வையில் குற்றம் இழைத்தவர்கள் படைவீரர்களாக நியமனம் பெறுகிறார்கள். தன்னைக் கற்பழித்தவனை ஒரு காவல்துறை அதிகாரியாக, ஒரு பாதுகாவலனாக ஒரு பெண் பார்க்க நேரும் கொடுமையை என்ன சொல்ல?’

அவர் தொடர்கிறார். ‘பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள் வாழ்நாள் முழுவதும் அதன் கொடுமையை அனுபவிக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல; அடுத்த தலைமுறையும் சேர்ந்து அனுபவிக்கிறது. இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் களங்கப்பட்டவர்களாக, புறக்கணிக்கப்பட்டவர்களாக நடத்தப்பட்டு, கல்வியும் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இந்தக் குழந்தைகளை அடையாளம் காண்பது கடினமான காரியம் அல்ல. பல பெண்கள் தங்கள் உறவினர்களின் கண்ணெதிரிலேயே வன்புணர்ச்சி செய்யப்படுகிறார்கள். இவர்களுக்குக் குழந்தை பிறக்கும்போது ‘இவன் வயிற்றில் உருவான அன்று என் மகனை, தந்தையை, பக்கத்து வீட்டுக்காரனை இவன் அப்பா கொன்றான்’ என்ற நினைவு அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு வருவதை தவிர்க்கமுடியாது. இந்தக் களங்கத்தைப் போக்க சர்வதேச உதவி தேவை. வன்புணர்ச்சிமூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு கல்வியும் இன்னபிற உதவிகளும் தேவை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீடித்த மருத்துவ உதவியும், உடல்நலக் கண்காணிப்பும் தேவை’.

கல்லூரி வளாகங்களும் தப்பவில்லை

இந்த வன்முறைக்கு கல்லூரிகள் கூட விலக்கு அல்ல. ஆக்ஸ்ஃபோர்ட், கேம்ப்ரிட்ஜ் போன்ற புகழ் பெற்ற கல்லூரி வளாகங்களிலும் கூட பாலியல் குற்றங்கள் நடந்து வருகின்றன. இக்கொடுமைக்கு எதிரான மாணவர் போராட்டம் ‘வெள்ளை ரிப்பன் போராட்டம்’ என்ற பெயரில் நடந்துவருகிறது. இந்தப் போராட்டத்துக்கான பிரசாரம் அங்கு படிக்கும் பெண்கள் குழுவினரால் நடத்தப்படுகிறது. இதில் பங்குகொள்ளும் மாணவர்கள் பரிட்சை எழுதும்போது தங்கள் மேலங்கியில் வெள்ளை ரிப்பனை அணிந்துகொண்டு வருகின்றனர்.

‘ரிப்பன் அணிவது ஒரு சிறு செயல் தான். ஆனால் அதன் எதிரொலி சக்தி வாய்ந்த செய்தியை உலகுக்குத் தெரிவிக்கும். நாங்கள் அணியும் மேலங்கி ஓர் ஆடம்பரமான குறியீடு.  இறுதியாண்டில் படிப்பவர்கள் முதல் ஆண்டில் முதல் தரவரிசையில் இடம் பெற்றிருந்தால் ‘ஸ்காலர் கவுன்’ அணிவார்கள். இரண்டாம் தரவரிசை அதற்குக் கீழ் இருப்பவர்கள் சாதாரண கோடுகள் போட்ட மேலங்கி அணிவார்கள். மாணவர்கள் தங்களது தகுதிக்கு ஏற்ப சிவப்பு, பிங்க், வெள்ளை கார்னேஷன் மலர்களை அணிவார்கள். எந்தவகை மேலங்கி அணிந்தாலும் இந்த வெள்ளை ரிப்பன் அணிவது பாலியல் வன்முறை என்ற தொற்றுநோய்க்கு எதிரான எங்கள் குரலை, எழுச்சியை, எதிர்ப்பை உலகுக்குச் சொல்லும். இப்படி மேலங்கி அணிவது இந்த பல்கலைக்கழகத்தின் தொன்மையான, விசித்திரமான கடந்த காலத்தையும், அதில் செருகப்பட்டிருக்கும் வெள்ளை ரிப்பன் இப்போது நடக்கும் உண்மையான, ஒப்புக்கொள்ள முடியாத நிகழ்வுகளையும் குறிக்கும்’ என்கிறார் அந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு மாணவி.

அமெரிக்காவில் டார்ட்மத் காலேஜில் வன்முறைக்கு ஆளான ஒரு மாணவியின் அறைகூவல் 50,000 தன்னார்வலர்களை ஒன்றுகூட்டியது. அப்போது வெளியே வந்த விஷயம்: அந்த காலேஜில் மாணவர் தளம் ஒன்றில் ‘வன்முறை கையேடு’ இருக்கிறது. அல்ட்ரா வயலெட் என்ற பெண்ணிய குழு விண்ணப்பம் ஒன்றை காலேஜுக்கு ‘குற்றம் புரிந்தவனை வெளியில் அனுப்பு’  என்ற கோரிக்கையுடன் கல்லூரி நிர்வாகத்துக்கு அனுப்பி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ‘வன்முறையும், பாலின தாக்குதல்களும் அந்த டார்ட்மத் காலேஜில் பலப்பல ஆண்டுகளாக இருக்கிறது. ‘தாங்கொண்ணா நிலைக்கு வந்துவிட்டோம், இணையத்தளத்தில் வந்து எங்கள் உரிமைக்குப் போராடுவோம்’ என்கிறார்கள், இந்தக் கல்லூரி மாணவிகள்.

சமூகத்தின் நிலை என்ன?

இந்த வன்முறைகள் யாரால் நடத்தப்படுகின்றன? இவை எந்தவித ஆதாரமுமில்லாமல் நடுவானத்தில் நடப்பவை அல்ல என்கிறார் இவா. ஆண்களின் நலத்துக்குக் குரல் கொடுப்பவர்கள், பெண்ணியம் என்ற சொல்லை எதிரியாக நினைப்பவர்கள், பெண்களைக் கவரும் திறமையுள்ள ஆண்கள், கொடுமைப்படுத்தப்பட்ட ஆண்கள் இப்படிப் பலவிதமானவர்கள் பெண்கள்மீது வன்முறையை ஏவிவிடுகிறார்கள். இத்தகைய குழுமங்களில் மிகவும் வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் ஒரு குழு, Reddit’s Red Pill. இதில் சுமார் 53,000 அங்கத்தினர்கள் இருக்கின்றனர். இவர்கள் எல்லோருமே பெண் என்பவள் போகப்பொருள், வீட்டில் சமைப்பவள் என்று நினைப்பவர்கள். ‘பெண்கள் அமைப்புகள் வாழ்க்கை வட்டத்தை உடைப்பவை; எங்கள் மனிதத்தன்மையையும் பாதிப்பவை’ என்று சொல்பவர்கள்.

சென்ற மாதம் கலிபோர்னியா, இஸ்லா விஸ்டாவில் நடந்த படுகொலைகள் ஒரு விஷயத்தை உறுதிப்படுத்துகின்றன: பெண் வெறுப்பாளர்கள் கொலை செய்கிறார்கள். இந்தக் கொலைகளை செய்தவர் ஆண்கள் உரிமை போராட்டக்குழுவினருடன் நேரடித் தொடர்பில் இருந்தவர். தனது காணொளிகளை இணையத்தளத்தில் போடும்போது ‘என்னை ஒதுக்கிய வேசியை வெட்டிக் கொலை செய்வேன்’ என்று சூளுரைத்திருக்கிறான் ஒருவன். இந்த நிகழ்ச்சி தொடர்பாக ட்விட்டரில் சில ஆண்கள் ‘துப்பாக்கியைக் குறை சொல்லவேண்டாம். பெண்களைக் குறைசொல்லுங்கள்’, ‘பெண்களே! இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு உங்கள் செயல்களை நிறுத்துங்கள்’ என்று ‘ட்வீட்’ செய்திருக்கிறார்கள். கொலையாளியின் வாக்குமூலமும் வன்முறையும், வெறுப்பும் நிறைந்ததாகவே இருக்கிறது.

‘இதைப்போல இணையத்தில் பெண்களை பரிகசிப்பவர்கள். ரயில்களில் பெண்ணைத் தொட்டுத் தடவுபவர்கள், பெண்களைக் கொல்லுபவர்கள் எல்லோரும் பெண்கள் மீதான வன்முறையை நியாயப்படுத்தும், பெருமைப்படுத்தும் கலாசாரங்களால் உருவானவர்கள். ஆண் என்பவன் உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவன். பெண்கள் அவனுக்குக் கடமைப்பட்டவர்கள். இந்தப் பின்னணியில் வாழும் பெண் இவற்றை தடுத்து நிறுத்தக் கற்கிறாள். வாழ்வின் ஆரம்ப நிலையிலேயே அச்சுறுத்தல்களுடன் வாழப் பழகுகிறாள். இனிமேலும் நம்மால் இந்த மின்னஞ்சல்களை, பயமுறுத்தல்களை, கருத்துக்களை ஒதுக்கித் தள்ளமுடியுமா? இனிமேலாவது இவற்றைப் பார்த்துச் சிரிப்பதை நிறுத்துவோமா?’ என்று கேட்கிறார் இவா.

ஒரு முயற்சி

போராட்டங்கள்/போர்கள் நடக்கும் நாடுகளில் பாலியல் வன்முறைக்கு முடிவு கட்டும் முயற்சியில் முதல்படியாக லண்டனில் சர்வதேச உச்சி மாநாடு கடந்த மாதம் 10&13 தேதிகளில் நடந்து முடிந்தது. இந்த மாநாட்டுக்கு பிரிட்டனின் வெளியுறவுத் துறை செயலர் வில்லியம் ஹாக், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பின் சிறப்புத் தூதர் ஏஞ்சலினா ஜோலி இருவரும் தலைமை தாங்கினர்.

இந்த உச்சி மாநாட்டின் குறிக்கோள்கள்:

  • குற்றம் செய்துவிட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்கிற மனப்பான்மையை வலுவான உள்நாட்டு சட்டங்கள் மூலம் உடைத்துத் தள்ளுவது.
  • உலகம் முழுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகளை நடைமுறைக்கு ஏற்றவகையில் குறைப்பது. பாலியல் கொடுமைகளின் கொடூரத்தை உணர்ந்து அதைத் தவிர்க்குமாறும், மக்களைக் காப்பாற்றுவதை அவர்கள் கடமையாக மேற்கொள்ளுமாறும் போர்வீரர்களுக்கும், அமைதிப்படையினருக்கும் அறைகூவல் விடுப்பது.
  • பாலியல் கொடுமைக்கு ஆளானவர்களுக்குப் போதுமான ஆதரவு கொடுப்பது. இவர்களுக்குக் குரல் கொடுப்பவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது.
  • இந்தக் குற்றங்களைப் பார்க்கும் மக்களின் மனநிலையை மாற்ற முயற்சி செய்வது. போர்க்காலங்களில் இந்த மாதிரியான குற்றங்கள் சகஜம் என்ற மனநிலை மாறவேண்டும். ஆண்களும் பெண்களும் அரசுகளும், மதத் தலைவர்களும் இந்த வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து தங்களால் முடிந்த அளவுக்கு இக்குற்றங்கள் மேலும் வளராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பின் தலைவி (Phumzile Mlambo-Ngcuka) இந்த மாநாட்டில் பாதிக்கப்பட்ட பெண்கள் நஷ்ட ஈடு பெறவேண்டும் என்பதற்கான புதிய சட்டதிட்டங்களை முன்வைத்தார்.

‘போர்கள் பெண்களை பலவிதங்களிலும் பாதிக்கிறது. உடல், உள்ளம், பொருளாதாரம் என்று பல தளங்களில் பெண்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள். போர் முடிந்தவுடன் அவர்களுக்கு எந்தவிதமான இழப்பீடும் கிடைப்பதில்லை. உடலளவிலும், மனதளவிலும் நொறுங்கிப் போகும் இவர்கள், தங்கள் நிலை பற்றிய தகவல் தெரிந்தால் குடும்பத்தாரால் ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்கிற பயத்தால் எந்தவிதமான நஷ்ட ஈட்டையும் பெறத் தயாராகயில்லை. இவர்கள் நிலை பற்றிய மனிதாபிமானமற்ற, பொறுப்பில்லாத அதிகாரிகளாலும், ஏமாற்றும் ஆதரவு மையங்களாலும் நஷ்ட ஈடு இவர்களுக்குக் கிடைப்பதில்லை. கொலையாளிகள் ஆதரவு பெறுகிறார்கள். ஆனால் இவர்களால் வாழ்வைத் தொலைத்தவர்கள் கைவிடப்படுகிறார்கள். குற்றம் இழைத்தவர்கள் சிறைக்குப் போவதால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எந்த லாபமும் இல்லை. இவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். வேலை வாய்ப்புகள் கிடைக்கவேண்டும். பொருளாதாரச் சுதந்தரம் இருந்தால் தங்களுக்கு துரோகமிழைத்த கணவர்களை விட்டுவிட்டு வெளியே வந்து, குழந்தைகளைப் படிக்க வைப்பார்கள். இந்தப் பெண்களுக்கு பொருளாதார உதவியும், மனநல உதவியுடன், சமூகம் சார்ந்த உதவியும் தேவை’ என்கிறார் இவர்.

நம்மால் பாலியல் வன்முறைக்கு முடிவு கட்டமுடிந்தால்; கடந்த காலத்தில் ஏற்பட்ட புண்ணுக்கு மருந்து போட முடிந்தால்; நீதியையும், அமைதியையும்  இணைக்க முடிந்தால் நம்பிக்கையுடன் கூடிய ஒரு எதிர்காலத்தை பெண்கள் அமைத்துக் கொள்ளலாம். நடக்குமா?
 

12 thoughts on “`நான் ஒரு பெண்; எனவே, நான் பாதுகாப்பாக இல்லை!’

  1. வணக்கம்
    அம்மா.
    ஆழம் இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்
    கட்டுரையை படிக்கும் ஒவ்வொரு நெஞ்சங்களுக்கும்… நல்ல தகவலை செவிமடுக்க முடியும் சிறப்பாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  2. உலகளவில் நடைபெறும் பாலியல் வன்முறை குறித்த அலசல்களை மிக நேரிய முறையில் முன்வைத்துள்ளீர்கள். வளர்க்கும்போதே ஆண்பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்கக் கற்றுத்தந்து வளர்ப்பது மிக முக்கியமான ஒன்று. ஆனால் துரதிஷ்டவசமாக பல ஆண்குழந்தைகள் தங்கள் தாய்மாரை அடக்கியொடுக்கும் தந்தைகளையே முன்மாதிரியாக வைத்து வளர்ந்துவிடுகிறார்கள். கட்டுரை வாயிலாய் பல தகவல்களையும் அறியமுடிந்தது. நன்றி மேடம்.

    1. Truly said.
      I wonder , how our sons and many other young gentlemen I have come across, have developed healthy respect for women? For all the rogues who do not care for giving due place for women, there are millions out there who do. It all boils down to early learning , and parents and community , living by example.

      Great post Ranjani. Your writing is amazing.

  3. பெண்ணினத்தை எச்சரிக்கும் பதிவு இது . பெண்களின் பிரதிநிதியாய் நின்று விளாசியிருக்கிறீர்கள் ரஞ்சனி. மிகவும் அருமையான பதிவு அனைவரும் படித்துத் தெரிந்துகொள்ளவேண்டிய மிக அவசியமான பதிவு பாராட்டுக்கள். பத்திரிக்கையைத் திறந்தாலும் டெலிவிஷன் போட்டாலும் கண்ணில் படும் விஷயமே பெண்கள் பாலியல் கொடுமைஎன்றாகிவிட்ட நிலையில் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு

  4. வணக்கம்.
    ஆழம் இதழில் உங்கள் கட்டுரையைப் பார்த்தாலும் இன்றுதான் வாசிக்கிறேன். இதை இரண்டு விதத்தில் அணுக வேண்டும்.

    1. வெளியில் வரும் பிரச்சினைகள்
    2. குடும்ப வன்முறைகள்

    வெளியில் வரும் பிரச்சினைகள்
    ——————————————————–
    மக்கள் தொகை மிகுந்த நம்ப தேசத்தில் தவறு செய்பவர்களை எப்படி நடத்துகிறோம் என்பது முக்கியம். அது பாலியல் குற்றம் என்றாலும் சரி, சாதாரண டிரைவிங் லைசன்ஸ் பெறாமல் வண்டி ஓட்டும் குற்றம் என்றாலும் சரி. அனைவருக்கும் ஒரு unique ID கொடுத்தல் என்பது காலத்தின் கட்டாயம். அதற்காகத்தான் ஆதார் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதன் தவறாக அமல் படுத்தியதன் காரணமாகவும், மக்களின் தவறான புரிதல் காரணமாக எழுந்த சிறுபிள்ளைத்தனமான எதிர்ப்பினாலும் கோடிகள் விழுங்கிய திட்டம் சும்மா கிடக்கிறது.

    ஒருவனின் குற்றங்கள் தொடர்ந்து அவன் கணக்கில் எழுதப்படவேண்டும். அவன் செய்யும் குற்றங்கள் அவன் வாழ்க்கையை பாதிக்கும் வண்ணம் இருக்க வேண்டும். பாலியல் தண்டனைக்குத் தூக்கு தண்டனை என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசிப் புண்ணியம் இல்லை. ‘வேலை’ முடிந்ததும் தூக்கு தண்டனையையில் இருந்து தப்பிக்க தடயத்தை அழிக்கிறான். அதாவது பாதிக்கப்பட்டப் பெண்ணைக் கொன்றே விடுகிறான். இப்போதிருக்கும் குற்றங்கள் அவனைத் தப்பிக்க விடுகின்றன. ஒரு சிறிய எடுத்துக்காட்டு – இந்தக் குற்றம் செய்துள்ளதால் வங்கி கடன் கிடையாது, அவ்வளவு ஏன் சமையல் கேஸ் மானியம் கிடையாது என்பது கூட தண்டணைகள் எவ்வாறு கொடுக்கப்படலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு. பாலியல் தண்டனைகளுக்கு தூக்கு தண்டனைக்கு பதிலாக கசையடி தண்டனைகள் வழங்குவது அவசியம். வாழ்க்கைக்கும் பிருஷ்டத்தில் தழும்பு மறையாத வண்ணம்!

    குடும்ப வன்முறை
    ——————————-
    மேலே சொன்னது உலகலாவிய பிரச்சினை. ஆனால் குடும்ப வன்முறை என்பது நம் சமூகத்தில் அதிகம். இதில் அதிகமாக பெண்களும் குழந்தைகளும், ஓரளவிற்கு ஆண்களும் பாதிக்கவே படுகின்றனர். நாம் ஒரு மாறும் சமூகத்தில் உள்ளோம். பெண்கள் தற்சமயம் பொருள் ஈட்டத் தொடங்கியதன் விளைவாக சில விழுமியங்கள் அறுபடத் தொடங்கி உள்ளன. அதற்கு குற்றங்கள் பதியப்படவேண்டும். ஆனால் தண்டனைகள் வழங்குவதற்குப் பதிலாக ஆலோசனையே முதலில் வழங்கப்படவேண்டும். ஏற்கனவே சொன்னதைப்போன்று, ஒருவன்(ள்) தலையில் அவரவர் செய்த குற்றங்கள் அடுக்கப்படவேண்டும். தவறுகள் எல்லை மீறுகையில் தண்டனைதான் முடிவு.

    எனவே, எல்லாவற்றிற்கும் அடிப்படை management of crimes. அதில் நாம் பழங்கால முறையைப் பின்பற்றுவதால் ஊழல்தான் அதிகரிக்கிறது. குற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்கிற எண்ணமும் பிறக்கிறது.

    நன்றி.

    1. அருமையான தீர்வுகள் சொல்லி இருக்கீங்க. என் வலைத்தளத்திலும் இந்தப் பிரச்சனைகள் பற்றி எழுதி இருக்கேன். அது மெல்லினத்தில் வெளியாகி உள்ளது.

  5. மிகவும் நீளமான பதிவு மட்டுமல்ல, ஆழமான பதிவும் கூட. எல்லா மூலைகளிலும் அலசி இருக்கிறீர்கள்.

  6. an exhaustive analysis about the issue welldone. you had taken enormous pain …in bringing out most vital points about the issue…..

  7. ஸாதாரணமாக பேப்பரைக் கையிலெடுத்தாலே இந்தமாதிரி ஸமாசாரங்கள்தான். எவ்வளவு தீவிரமாக சிந்தித்து எழுதியிருக்கிரீர்கள்..
    இதற்கெல்லாம் ஒரு முடிவு வருமா? பெண்களுக்குதான் எல்லா விதத்திலேயும்
    ப்ரச்சினைகள்.. படித்த படிக்காத உயர் மட்டத்திலேயும் இதுமாதிரி ஏற்படுகிறது.
    யாருக்கு யார் அரணாக இருப்பது? காலத்தால்,சட்டங்களினால் மாற்ற முடியுமா? சிந்திக்கவே முடியாததாக இருக்கிரது. அன்புடன்

  8. இந்தப் பெண்களுக்கு பொருளாதார உதவியும், மனநல உதவியுடன், சமூகம் சார்ந்த உதவியும் தேவை’ //
    உண்மை.

  9. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட முகவரி இதோ.
    http://blogintamil.blogspot.com/2014/09/blog-post_17.html?showComment=1410913974598#c5092225308690744254

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

Leave a comment