எல்லாம் இன்ப மயம்

 

 four hundred

ஜோசியம் பார்ப்பதை அதிகம் விரும்பாதவள் நான். காரணம் என்ன என்பதற்கு இன்னொரு பதிவு போடவேண்டும். அதனால் இப்போது வேண்டாம். ஆனால் இரண்டுமுறை என் கணவருடன் (மிகுந்த நம்பிக்கை அவருக்கு) எங்கள் எதிர்காலம் பற்றி அறிய போயிருந்தபோது (எதற்கு என்பதற்கு இன்னும் இரண்டு பதிவுகள் போடலாம்!) நேர்ந்த அனுபவங்கள் இன்றைக்கும் எனக்கு வியப்பு அளிப்பவை.

 

முதலாம் முறை போயிருந்தபோது என் ஜாதகத்தைப் பார்த்த ஜோசியர், ‘குருபலன் நன்றாகயிருக்கிறது. ஆசிரியராவீர்கள். புத்தகங்கள் எழுதுவீர்கள்’ என்றவுடன், வாய்விட்டு சிரித்தேன். புத்தகங்கள் படிப்பதைத் தவிர எழுதுவதை நினைத்துக்கூடப் பார்க்காத நேரம். ஆனால் ஒன்று மட்டும் சொல்லவேண்டும். அனுராதா ரமணனின் கதைகள் படிக்கும்போது இவரைப் போல எழுத வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். ஜோசியர் சொன்ன இரண்டுமே வெகு விரைவில் நடந்தது. ஆங்கிலம் பேச சொல்லிக்கொடுக்கும் ஆசிரியை ஆனேன். வகுப்புகளுக்கு வேண்டிய புத்தகங்கள் தயார் செய்தேன். மற்றவர்கள் உருவாக்கிய புத்தகங்களை மெருகூட்டும் பணியும் செய்தேன். ஜோசியர் இன்னொன்றும் சொன்னார்: ‘பள்ளிக்கூடம் தொடங்குங்கள். உங்கள் நேரம் நன்றாக இருப்பதால் மிகச் சிறப்பாக நடக்கும்’. அந்தத் தப்பை மட்டும் செய்யவில்லை!

 

அடுத்தபடியாக என் தோழி ஒருவர் சொன்னார் என்று ஒரு பெண்மணியைப் பார்க்கப் போனோம். அப்போது நான் ஆசிரியை ஆகவில்லை. ஆனால் நேர்முகத்தேர்வு முடிந்திருந்தது. அந்தப் பெண்மணி தன்னை Energy Specialist என்று சொல்லிக் கொண்டார். என்னைப் பார்த்தவுடன் கண்களை மூடிக் கொண்டார் (அவ்வளவு மோசமாக இருந்தேனா?) சில நிமிடங்கள் கழித்து சொன்னார்: நீங்கள் ஆசிரியப் பதவியில் மிகப்பெரிய வெற்றியடைவீர்கள்’ என்று. மூடிய கண்களில் என்ன தெரிந்தது என்று கேட்டேன். நாதஸ்வரம் இசை கெட்டிமேளத்துடன்  வந்தது என்றார். இரண்டாம் முறையும் சிரித்து இவரது கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில், இந்தமுறை வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.

 

இந்தப்பெண்மணி சொன்னதும் நடந்துவிடவே கொஞ்சம் ஜோசியத்தில் நம்பிக்கை வந்தது. தொடர்ந்து ஜோசியம் பார்க்காமல் நிறுத்திக் கொண்டேன்.

 

என் பெண்ணின் திருமணம் எனது முதல் கதையாக, மங்கையர் மலர் ஆண்டு இதழில் வந்தது. என் மகனின் திருமணம் எனது முதல் வலைப்பதிவாக மலர்ந்தது. எனது முதல் புத்தகம் வரும் ஆண்டு வெளிவரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்தச் செய்தியையும் கூடிய விரைவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

2 two

எனது வலைபதிவிற்கு இரண்டு வயது நிரம்பியிருக்கிறது. இது எனது 400 வது வலைபதிவு.

 

இந்த இரண்டு சந்தோஷங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி எனக்கு. தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன். படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

 

 

59 thoughts on “எல்லாம் இன்ப மயம்

  1. எப்போதும் நான் உங்களிடம் சொன்னதுதான். உங்களின் எழுத்துலக பிரகாசமான எதிர்காலம் எனக்கு திருப்பூரிலேயே தெரிகின்றது. 2014 ல் தமிழ்நாடு முழுக்கத் தெரியும்.

    1. வாங்க ஜோதிஜி!
      நீங்கள் என்மேல் வைத்திருக்கும் நபிக்கைக்கு என் மனமார்ந்த நன்றி!

  2. பயனுள்ள தங்கள் பதிவுகளின்
    ரசிகன் நான்
    இரண்டாண்டில் 400 பதிவுகள் என்பது
    ஒரு அசுரச் சாதனைதான்
    சாதனைகள் தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    1. வாங்க ரமணி ஸார்!
      நீங்கள் என் பதிவுகளின் ரசிகர் என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம். உங்கள் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி.

  3. வணக்கம் அம்மா, ஜோதிடத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. கிளி ஜோதிடம் எலி ஜோதிடத்தில் அல்ல, நாம் பிறந்த நேரத்தைக் கணக்கில் கொண்டு கணிக்கப்படும் ஜாதகக் கட்டத்தில் மட்டும். அது ஒரு கடல், படிக்கிறேன், படித்துக்கொண்டே இருக்கிறேன். இரண்டு வயதுக்கும் நானூறுக்கும் வாழ்த்துக்கள்… நன்றி..

    1. வாங்க ஸ்கூல் பையன்!
      எனக்கும் ஜோதிடம் என்கிற கலை மேல் மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் தங்களுக்குத் தெரிந்த அரைகுறை அறிவுடன், அதைக் காரணம் காட்டி என்னை அழவைத்தவர்களினால் எனக்கு ஜோசியம் பார்ப்பது என்பதே வேண்டா வெறுப்பாக ஆயிற்று. என்னைப் பொறுத்தவரை நடப்பது எல்லாமே நல்லதிற்குத் தான். எதிர்காலம் என்பது ரகசியமாக இருப்பதுதான் வாழ்க்கையில் சுவாரசியம் என்று நினைக்கிறேன்.
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!

  4. வாழ்த்துக்கள் ரஞ்சனி…உங்கள் எழுத்து சாதனை தொடர
    இறைவன் அருள் புரிவாராக. இனி எல்லாம் உங்களுக்கு இன்ப மயமே…இது என் ஜோசியம்!

    1. வாங்க ராதா!
      உங்கள் ஜோசியம் பலிக்கட்டும். வாழ்த்துக்களுக்கு நன்றி!

  5. அனைத்துக்கும் வாழ்த்துகள். WordPress வலைத்தளம் ஆரம்பித்து இரண்டு ஆண்டகளில் செம கலக்கல்… நானும் ஆரம்பித்து ரெண்டு வருஷம் ஆச்சி….. 400 நல்வாழ்த்துகள் !

  6. பல் துறை வித்தகி அவர்களுக்கு வாழ்த்துக்கள். . இன்னும் பலநூறு பயனுள்ள பதிவுகள் படைக்கவேண்டும்.உங்கள் கையால் ஒரு பரிசு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

    1. வாங்க முரளிதரன்!
      வாழ்த்துக்களுக்கு நன்றி! சீனுவிற்குத் தான் உங்கள் நன்றி போய்சேர வேண்டும்.

  7. இரண்டு வருடத்தில் 400 பதிவுகளா! அசத்துகிறீர்களே! பதிவுகள் அத்தனையு,ம் முத்துக்கள். உங்கள் வலைப்பூவின் இரண்டாம் ஆண்டு நிறைவிற்கு வாழ்த்துக்கள்.
    உங்கள் புத்தகத்தையும் விரைவில் எதிர்பார்க்கிறேன்……
    பாராட்டுக்கள்…….வாழ்த்துக்கள் ரஞ்சனி.

  8. வெருங்கை என்பது மூடத்தனம்
    அதில் விரல்கள் பத்தும் மூலத்தனம்
    என்பதை நினைவில்கொண்டு, ஜாதகத்தை நம்பாமல் ஜாதகத்தில் கூறப்பட்டதை உண்மையாக்கிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள் அம்மா!
    இரண்டாண்டுகளில் 400-ஆ?
    அசத்துங்கள்!
    வணக்கங்கங்களுடன் கூடிய வாழ்த்துக்கள் மீண்டுமொருமுறை.

    1. வாருங்கள் சைதை அஜீஸ்!
      உங்கள் வரவு நல்வரவாகுக.
      வாழ்த்துக்களுக்கு நன்றி!

  9. வாழ்த்துக்கள் ரஞ்சனி ம்மா, 400 ஆவது பதிவுக்கும், 2 ஆண்டு விழாவுக்கும் 🙂

    1. இரண்டு வயதுக்குழந்தைக்கு என் அன்பான பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

      நானூறாவது பதிவு என்பதும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதற்கும் என் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

      நான் சொல்லும் ஜோஸ்யத்தைக் கேட்டுக்கொள்ளுங்கள். விரைவில் இந்த 2014ம் ஆண்டுக்குள் தாங்கள் மேலும் சில சாதனைகள் செய்வீர்கள். புத்தக வெளியீடு நிச்சயமாக நடைபெறும். ஸ்வாமி விவேகாநந்தர் அவர்களின் கம்பீரம் அதில் காணப்படும். 500 அல்லது 600 ஆவது பதிவு வெளியீடுகள் இதே ஆண்டில் தங்களால் சாதிக்கப்படும். ஆயிரத்தை எட்டினாலும் ஆச்சர்யம் இல்லை. அட்வான்ஸ் வாழ்த்துகள்.

      >>>>>

      1. வாங்க கோபு ஸார்!
        உங்கள் ஜோசியத்திற்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி!

    2. வாங்க தேனம்மை!
      உங்கள் வரவு நல்வரவாகுக! வாழ்த்துக்களுக்கு நன்றி!

  10. பலே பலே.. வாழ்த்துக்கள். ரெண்டே வருஷத்துல 400! உழைப்புக்கு பாராட்டுக்கள்.
    புத்தகம் வரட்டும்.
    க்ரெடிட் உங்களுக்கு.. ஜோசியருக்கு இல்லே..:)

    1. வாங்க அப்பாதுரை!
      பாராட்டுக்களுக்கு நன்றி!
      //க்ரெடிட் உங்களுக்கு.. ஜோசியருக்கு இல்லே// ரொம்பவும் ரசித்தேன்!

      1. எனர்ஜி அம்மணியைப் பார்க்கப் போன போது பெரிய சைஸ் பொட்டு மேக்கப் எதுனா போட்டுப் போனீங்களோ? இல்லே தமிழிலக்கியம்னு எதுனா புக் கைல வச்சிருந்தீங்களோ?

  11. இரண்டு ஆண்டுகளில் 400 பதிவுகள் என்பது மலைக்க வைக்கிறது. இரண்டாண்டு நிறைவிற்கும், புத்தகம் வெளிவருவதற்கும் வாழ்த்துக்கள். அது வெளிவரும் நாளை விரைவில் பகிர்ந்துகொள்வீர்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ஜாதகம் வைத்துக்கொன்டு பார்ப்பதா, வேண்டாமா என்பவர்களுக்கு மத்தியில் ஜாதகம் இல்லாதவர்கள் என்ன செய்வது என ஒரு பதிவு போடுங்கள்.

    1. வாங்க சித்ரா!
      வாழ்த்துக்களுக்கு நன்றி.
      நிச்சயம் புத்தகம் பற்றி தகவல் சொல்லுகிறேன்.
      பதிவு போட நல்ல விஷயம் கொடுத்திருக்கிறீர்கள், அதற்கும் நன்றிங்கோ!

  12. மனமார்ந்த வாழ்த்துகள் அம்மா… அனுராதா ரமணன் அவர்களின் எழுத்துநடை எனக்கும் பிடிக்கும்… விரைவில் புத்தக வெளியீட்டின் தகவல்களையும் பகிருங்கள்..

    1. வாங்க ஆதி!
      வாழ்த்துக்களுக்கு நன்றி!
      புத்தகம் பற்றி நிச்சயம் தகவல் சொல்லுகிறேன்.

  13. “நாதஸ்வரம் இசை கெட்டிமேளத்துடன் ”
    கல்யாண மண்டபம் கட்டப்போறீங்க அப்டின்னு சொன்னாலாவது ஒரு லாஜிக் இருந்திருக்கும்.

    உங்களது கிரக சஞ்சாரங்களின் படி நாதஸ்வரம் ஊதினா பள்ளிக்கூடம் திறக்கும் போல

      1. தங்கள் 400 வது பதிவிற்கு மனமார்ந்த பாராட்டுகள்
        மேலும் பல பதிவுகள் பெருகட்டும்.
        புதிய புத்தகற்கள் வரட்டும். இனிய வாழ்த்து.
        இனிய புத்தாண்டு மலரட்டும், அமையட்டும்.
        வேதா. இலங்காதிலகம்.

  14. எனது முதல் புத்தகம் வரும் ஆண்டு வெளிவரும்//

    நாங்களும் ஆவலோடு இருக்கிறோம் அம்மா!! நானூறு விரைவில் ஐநூறு ஆகட்டும்.. வாழ்த்துகள் அம்மா!!

  15. முதல் புத்தகம் வெளியீட்டிற்கும் , நானூறாவது பதிவுக்கும் இனிய வாழ்த்துகள்..
    எல்லாம் இன்பமயமாய் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..!

    1. வாங்க இராஜராஜேஸ்வரி!
      வாழ்த்துக்களுக்கு நன்றி! உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  16. புத்தக வெளியீடு, 400 வது பதிவு இரண்டிற்கும் வாழ்த்துக்கள் ரஞ்சனிமா. தொடர்ந்து நினைத்தது நடக்க வாழ்த்துக்கள்.

  17. உங்களின் 400 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் புத்தகத்தை எதிர்பார்க்கிறேன்…

  18. இரண்டாம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! கூடிய விரைவில் உங்கள் புத்தகம் பற்றிய பதிவை எதிர்ப்பார்க்கிறேன் 🙂

  19. அடுத்த வருடத்தில் மட்டும் நீங்கள் 250 பதிவுகளுக்குக் குறையாமல் இடுவீர்கள் ! – இது ஜோஸ்யம் அல்ல …விருப்பமும் வாழ்த்தும்…! உண்மையானால் நானும் பெரிய ஜோஸ்யன் என்று சொல்லிக்கலாம்…! புத்தாண்டு வாழ்த்துக்கள். அப்படியே என் புத்தாண்டுக் கவிதையையும் ப்டித்து விட்டு கருத்து சொல்லுங்களேன் !

    http://psdprasad-tamil.blogspot.com/2013/12/newyearprayer.html

    1. வாங்க பிரசாத்!
      வாழ்த்துக்களுக்கும் ஜோசியத்திற்கும் நன்றி!
      உங்கள் கவிதையை படித்துப் பார்க்கிறேன்.

  20. “எனது வலைபதிவிற்கு இரண்டு வயது நிரம்பியிருக்கிறது. இது எனது 400 வது வலைபதிவு.” என்பது இலகுவானதல்ல.
    நீங்கள் கடந்து வந்த அத்தனை வெற்றிப் படிகளும் இன்னும் பல நூறு பதிவுகளைப் படைக்கவோ பல ஆண்டுகள் தொடரவோ வழிகாட்டும்.
    தங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

  21. 400 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

    உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.!

  22. உங்கள் அனுபவபூர்வமான ஜோசியம் பற்றிய கட்டுரை சுவையாக இருந்தது.
    வீட்டில் நாள் நட்சத்திரங்கள் அடங்கிய கலண்டரே வைக்காதவன் நான்.
    400 த் தாண்டிய உங்கள் பதிவுப் பயணத்திற்கு வாழ்த்துக்கள்

  23. நான்தான் மிகவும் தாமதம். 400 என்ன? 4 லக்ஷம் பதிவுகள் கூட உன்னிடமிருந்து எதிர்பார்க்கலாம். ஜோஸியங்கள் உங்கள் விஷயத்தில் பலிக்கிரது. புத்தகம் வெளி வந்தவுடன் அவையும் நிறைவேறிவிடும்.
    எல்லா விதத்திலும் பெருமையாக நான் கொண்டாடுவேன் ரஞ்ஜனியை. அன்புடன்

  24. இரண்டு வருஷக் குழந்தைக்கு என் ஆசிகள். அன்புடன்

Leave a comment