அரியலூர் அடுக்கு தோசை!

 

என் கணவருக்கு அரியலூரில் ஒரு சித்தி இருந்தார். ரொம்ப நாட்களாக எங்களை அரியலூர் வரும்படி கூப்பிட்டுக் கொண்டிருந்தார். நாங்களும் பல வருடங்கள் ‘பிகு’ பண்ணிக்கொண்டிருந்துவிட்டு ஒரு வழியாக ஒரு சுபயோக சுபதினத்தில் அரியலூர் போய்ச்சேர்ந்தோம்.

 

சித்தியா எங்களை வரவேற்க ரயில்நிலையம் வந்திருந்தார். என் இடுப்பிலிருந்த குழந்தையை ‘சித்தியா பாரு. அவர்கிட்ட போறியா?’ என்றேன். என் பெண் கொஞ்சம் வெடுக் வெடுக்கென்று பேசுவாள். ‘சித்தியாவா? தாத்தான்னு சொல்லு’ என்றாள். நான் கொஞ்சம் அசடு வழிந்தவாறே ‘ ஸாரி……சித்தியா…..!!!!’ என்றேன். ‘பரவால்ல மா என்னைப் பாத்தா தாத்தா மாதிரிதானே இருக்கு..!’ என்று பெருந்தன்மையுடன் தாத்தாவானார். உண்மையில் அவர் சின்னத் தாத்தாதான். எங்கள் உறவுக்காரர்களில் பலருக்கு இந்த தாத்தா பாட்டி உறவு சட்டென்று பிடித்துவிடாது. ‘நான் இன்னும் பாட்டியாகலை. என்னை பாட்டின்னு கூப்பிடக்கூடாது’ என்று சொல்வார்கள். அதாவது அவர்கள் குழந்தைகளுக்குப் பேரனோ பேத்தியோ பிறந்தபின் தான் எங்கள் குழந்தைகள் அவர்களை தாத்தா பாட்டி என்று கூப்பிடலாம்!.

 

சித்திக்கு மூன்று பெண்கள் இரண்டு பிள்ளைகள். எல்லோருமே ரொம்பவும் சின்னவர்கள். என் மாமியாரின் கடைசி தங்கை இவர். அவரே ரொம்பவும் சின்ன வயசுக்காரர் தான். வாசலிலேயே சித்தியின் குழந்தைகள் நின்று கொண்டிருந்தார்கள். ‘மன்னி, மன்னி; என்று என்னுடன் சகஜமாக ஒட்டிக்கொண்டார்கள். என் திருமணம் ஆன புதிதில் ஒவ்வொரு குழந்தை ஒவ்வொரு உறவில் என்னைக் கூப்பிடும். ‘மன்னி’, ‘சித்தி’, ‘மாமி’ என்று போதாக்குறைக்கு என் மாமியார் என்னை ‘புது மாட்டுப்பொண்ணே!’ என்பார். எனக்கு வியப்பாக இருக்கும். எத்தனை உறவுகள், உறவினர்கள்! திருமணம் ஒரு பெண்ணிற்கு எத்தனை அடையாளங்களைக் கொடுக்கிறது!

 

அரியலூர் வந்து சேர்ந்த போது மாலை நேரம். ‘என்ன சாப்பிடறே, நாராயணா?’ உபசாரம் ஆரம்பித்தது. இவர் காப்பி வேண்டுமென்றார். என் சின்ன மாமியார் காப்பி கலக்க தளிகை உள்ளிற்குப் போனார். நானும் அவருடன் கூடவே உள்ளே போனேன். மாட்டுப்பெண் என்றால் அப்படித்தானே செய்யவேண்டும்.

 

உள்ளே போனால்…….தலை சுற்றியது. ஒரு தட்டில் தோசைகள். ஒன்று இரண்டு அல்ல. ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி அடுக்கி ஒரு ஆள் உயரத்திற்கு தோசைகள்! கொஞ்சம் அதிகம் சொல்லிவிட்டேனோ? இல்லை இன்னும் இரண்டு மூன்று தோசைகள் வைத்தால் உத்திரத்தைத் தொடும்.

‘இது என்ன இவ்வளவு தோசை?’

‘உனக்குத்தான். நீ சாப்பிடமாட்டாயா தோசை?’

எனக்கா? இத்தனையா? நான் கொஞ்சம் அகலம் தான். ஆனால் இத்தனை தோசை சாப்பிட மாட்டேன் என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. தலை வேகமாகச் சுழல ஆரம்பித்தது. காப்பி டம்ப்ளரை எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டேன். என் கணவரிடம் சொன்னேன்:’சீவா சித்தி (அவரது பெயர் சீவரமங்கை – சீவா என்று கூப்பிடுவார்கள்) அடுக்கு தோசை பண்ணியிருக்கார் நாம சாப்பிட’ என்றேன்.

‘அடுக்கு தோசையா?’

‘ஆமா தோசை பண்ணி ஆளுயரத்துக்கு அடுக்கி இருக்கா…!’

என் கணவர் எழுந்து போய் பார்த்துவிட்டு வந்தார். ‘ஏய் சீவா (சித்தியை பேர் சொல்லித்தான் கூப்பிடுவார் – கிட்டத்தட்ட சம வயது என்பதால்) எதுக்கு இத்தனை பண்ணியிருக்க?’

‘நீ, ரஞ்சனி, குழந்தை சாப்பிடத்தான்!’

 

‘நாங்க என்ன பகாசுரனா?’

 

அதற்குள் சித்தியின் குழந்தைகள் சினிமா போகலாம் என்று சொல்லவே நாங்கள் கிளம்பினோம்.

‘தியேட்டர் எங்க இருக்கு?’

‘இதோ பக்கத்துல தான்’

‘தியேட்டரா? இங்க கொட்டாய் தான்’

ஒரு வாண்டு தன் அண்ணா வாண்டுவிடம் ஏதோ கேட்டது. அவனும் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே ‘மன்னி மெட்ராஸ். அதனாலேதான் தியேட்டர் அப்படின்னு சொல்றா’

‘இனிமே டிக்கட் கிடைக்குமா?’ என் கேள்விக்கு ஒரு வாண்டு பதில் சொல்லிற்று. ‘நாம போனாதான் படமே ஆரம்பிக்கும்’. எப்படி?

என் கேள்விக்கு கொட்டகைக்குப் போனவுடன் பதில் கிடைத்தது?

வாசலிலேயே ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

 

(தொடரும்)

 

எனது முதல் தொடர் இது.

35 thoughts on “அரியலூர் அடுக்கு தோசை!

  1. அடுக்கு தோசை…. அட ஆரம்பமே சுவையாக – – தொடருங்கள் நானும் தொடர்கிறேன். இது எனக்கு ஒரு பதிவு எழுதும் ஐடியா தந்திருக்கிறது!

    1. வாங்க வெங்கட்.
      நீங்களும் அரியலூர் அடுக்கு தோசை சாப்பிட்டிருக்கிறீர்களா? உங்கள் அனுபவத்தை படிக்க ஆவலாக இருக்கிறேன். எழுதுங்கள்.
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  2. Very interesting read.. how many of us use the word உள் for room these days? Unless we read them in posts like these, this kind of usage would be lost forever. Very well written.. looking forward to the rest of the series.

    1. வாங்க சக்ரா சம்பத்!
      இந்த நடை பலருக்கும் என்னை அடையாளம் காட்டும் என்றாலும் சில விஷயங்களைப் பகிர விரும்புகிறேன். அதனாலேயே எங்கள் வழக்கு மொழியில் எழுதுகிறேன்.
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  3. அட, சுவாரஸ்யமாய் இருக்கிறது… படத்தில் உள்ள, சிறு சிறு துளைகளுடனான தோசை கவர்கிறது. :)))

    1. வாங்க ஸ்ரீராம்!
      இந்தப் பதிவு எழுத தூண்டியதே உங்களின் நாக்கு நாலு முழம் தொடர் தான்!
      படத்திற்கு கூகிளாருக்குத் தான் நன்றி சொல்லவேண்டும்.
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  4. Dosai looks very beautiful. Mouth watering. Very good interesting experience and the way you write is also nice to read.

    1. வாங்க ஸ்ரீதரன்!
      உங்களது முதல் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி!

  5. தோசை பட்டர் கமென்ட் காணோமேனு பார்த்தேன்.. போட்டிருக்காரு.

    1. வாங்க அப்பாதுரை!
      நல்ல பெயர் கொடுத்திருக்கிறீர்கள், ஸ்ரீராமிற்கு!
      வருகைக்கும், வாய்விட்டு சிரித்ததற்கும் நன்றி!

    1. வாங்க மஹா!
      எல்லோருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வேனா?
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  6. தோசை அழகா,பொத்தல்,பொத்தலா,மெத்தென்று ருசிக்கிறது. . அசத்துங்கள் ரஞ்ஜனி.. அப்புறம் ருசியாக இருக்கிறது. அடுத்து தொடருவோம். அன்புடன்

    1. வாங்கோ காமாக்ஷிமா!
      தோசை படம் கூகிளார் உபயம்! தொடருவதற்கும் கருத்துரைக்கும் நன்றி!

  7. அசத்தலான ஆரம்பம் எங்கள் ஊரில் செட் தோசை என்று கிடைக்கும் அது இப்படித்தான் இருக்கும் அந்த நாளில் என் பாட்டி வெந்தய தோசை செய்வார் அது இப்படித்தான் துளைகளுடன் மிகவும் மெத்தென்று இருக்கும். தொடருங்கள் சுவைத்து மகிழ்கிறோம் அருமையான நடை பாராட்டுக்கள் ரஞ்சனி

    1. வாங்கோ விஜயா!
      தோசை படம் எல்லோருடைய எதிர்பார்ப்பையும் பலமடங்கு ஆக்கிவிட்டது போல! எப்படி எழுதப்போகிறேன்!
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  8. வெந்தய தோசையோ? அதுக்குத் தான் இப்படி ஊத்தப்பம் துளைகளோடு வரும். தொட்டுக்கு நமக்கெல்லாம் காரசாரமாத் தக்காளி, வெங்காயம், அல்லது கொத்துமல்லிச் சட்னி தான் இறங்கும். தேங்காய்ச் சட்னிக்கு நோ!

    1. வாங்கோ கீதா!
      கூகிளாரின் படம் எல்லோரையும் கவர்ந்துவிட்டதே!
      வெந்தய தோசை யுடன் காரசாரமா தக்காளி, வெங்காயம் அல்லது கொத்துமல்லிச் சட்னி – ஆஹா! சூப்பர் ஜோடி ஆயிற்றே!
      வருகைக்கும், நாவில் நீர் ஊறவைக்கும் கருத்துரைக்கும் ஒரு ஜே! மற்றும் நன்றி!

  9. டூரிங் தியேட்டரா? அங்கே தான் நாம் போனப்புறமாப் பார்த்துப் படம் ஆரம்பிப்பாங்க.

    1. உங்கள் கேள்விக்கு அடுத்த பதிவில் பதில் கிடைத்திருக்குமென்று நம்புகிறேன்.
      இரட்டைக் கருத்துரைக்கு நன்றி!

    1. வாங்க பாண்டியன்!
      வருகைக்கும், கருத்துரைக்கும் (முதலில் புரியவில்லை. விக்கி விக்கி என்று படித்துவிட்டேன். பிறகுதான் விழுந்து விழுந்து என்று புரிந்தது) நன்றி!

  10. அரியலூர் அடுக்குத் தோசை
    அழகாக அடுக்கப்படுகிறது
    சுவையான பதிவு
    தொடருங்கள்

      1. அரியலூர் காரன் தான் நானும் … அடுக்குத் தோசையை ரொம்ப ரசித்தேன் .. தொடருங்கள் அம்மா

  11. அன்பு ரஞ்சனி, தோசையைப் பார்த்ததும்மே ஆசையாக இருக்கிறது. கலெக்டரைப் படித்துவிடு இங்கே வந்தேன் படு சுவை.

  12. தோசைப்படம் கவர்கிறது. அரியலூர் அடுத்து தோசையா!!! அதுவும் ஆளுயரத்துக்கு!!! அசத்துங்கள். தாமதமாக தொடர்கிறேன்.

  13. மன்னிக்கவும். அடுக்கு தோசை… அடுத்து தோசையாக மாறிவிட்டது…:)

Leave a comment